
கடக்க வேண்டும் என
முடிவான பின்
தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை
நிலங்களில் தூரமென்றால்
நடந்திடலாம்
நீரினில் தூரமென்றால்
நீந்திடலாம்
காற்றிடைத் தூரமென்றால்
பறந்திடலாம்
மனங்களில் தூரமென்றால்
பேசிடலாம்
ஏனோ எல்லாத் தொலைவுகளையும்
கடப்பதற்கு வழி கண்ட பிறகும்
மனங்களுக்கான தூரம் மட்டும்
மாற்றமின்றி நிற்கின்றது !
***
ஏதேனும் ஒரு பாடல்
நினைவுகளின் ஆழத்திலிருந்த ஒரு முகத்தை
மனத்திரையில் கொண்டு வரும்
ஏதேனும் ஒரு பாடல்
தனிமையின் பாதையில் நிற்கும் உனை விரல் பிடித்து கூட்டிச் செல்லும்
ஏதேனும் ஒரு பாடல்
பேருந்தின் நெரிசலிலும் தனை மறந்து தாளமிட வைக்கும்
ஏதேனும் ஒரு பாடல் போதையேற்றும்
ஏதேனும் ஒரு பாடல்
மேதையாக்கும்
ஏதேனும் ஒரு பாடல் தன்னில் உன்னை கரைக்க வைத்து
உன்னையும் பாடகராக்கும்
சிலவேளையில் கவிஞராகவும்..!
********