
இழப்பின் ஔி
அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
புறநானூறு : 112
பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல்
துறை : கையறுநிலை
எறி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. [தள்ளு-throw away, அடி, கொள்ளையிடு, அழி, சீறு, காற்று வீசு- blow as the wind.] இங்கு அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில் வென்ற நாட்டை நெருப்பிட்டும், கொள்ளையிட்டும் அழிக்கும் வழக்கம் இருந்தது]
இது மிகவும் புகழ் பெற்ற அனைவரும் அறிந்த புறநானூற்றுப் பாடல். இழப்பின் வலியை,போரின் விளைவை மிக எளிமையாகவும், எளிமைக்கு உரிய ஆழ அகலத்துடனும் துயரத்தை சொல்லிச்செல்லும் பாடல். வாழ்வின் இரு துருவங்களை இணைக்கும் பாடல். போருக்கு முன் அனைத்தும் இருந்தன, போருக்குப்பின் எதுவும் இல்லை என்பதே பாடலின் பொருள். ஆனால், அனைத்திற்கும் நித்தியமான சாட்சியாய் விண்ணில் நின்றிருக்கும் ஔி என்ன? என்பதே பாடலை கவித்துவத்தின் உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது. பொருளிற்கும் பொருளின்மைக்கும் மேல் நின்று ஔிரும் ஒன்று. மானுடம் இத்தனை போர்களை கடந்து வந்து நின்றிருக்கும் பாதையில், இனி வரப்போகும் போர்களில் [மூளையால் செய்யப்படும் போர்கள்] இழந்து மீளக்கூடிய ஒரு ஔியை சொல்லும் பாடல் இது. மானுடத்தின் பாதையில் அந்த ஔியே செல்ல வேண்டிய பாதையைக் காட்டுகிறது. போர் மனித அகத்திற்குள்ளும் நடப்பது தானே?
என்னுடைய அம்மாச்சி தாத்தாவின் வீடும், நிலமும் பச்சைமலையின் குன்றுகளில் ஒன்றான மண்குன்றின் [மம்மலை] அடிவாரத்தில் உள்ளது. வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்தால் குன்றின் பாதத்தை அடைந்து விடலாம். தனியான வீடு. அங்கங்கே வயல்களில் வீடுகள் இருக்கும். நான் கல்லூரி முடித்த ஆண்டில் அம்மாச்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு எழுபத்தைந்து வயது. அம்மாச்சி நிலத்தில் கிடந்து பாடுபட்ட விவசாயி என்பதால் வலுவான உடல். கதிர்வீச்சு சிகிச்சை முடிந்து திரும்பியவர் வயலில் இருக்க விரும்பினார். அங்கு இருந்தால் மனதிற்கு பதட்டமில்லாமல் இருக்கும் என்றார். அம்மாவிற்கும், பெரியம்மாவிற்கும், பிள்ளைகளுக்கான கல்வி, திருமணம் சார்ந்த பொறுப்புகள் தலைமேல் நின்றன. நான் அம்மாச்சியுடன் இரண்டு மாதங்கள் வயலில் இருந்தேன். இரு அம்மாக்களும் வந்து வந்து சென்று கொண்டிருந்தார்கள்.
சிறுவயதிலிருந்தே நான் உற்சாகமான, குறும்பான பிள்ளை இல்லை. ஆனால், பேரப்பிள்ளைகளின் அந்த உற்சாகம், குறும்புகளுக்குத்தான் தாத்தா பாட்டிகள் அடிமைகளாகிறார்கள். அந்தப்பண்புகள் குறைவான பிள்ளைகள் சற்று விலகியே இருப்பார்கள். காலம் சிலபேருக்கு வாய்ப்புகளை தாமதமாக வழங்குகிறது. கல்லூரி வயதில்தான் விளையாட்டுத் தனத்திற்குள் நுழைந்தேன். இந்த காலகட்டத்தில்தான் நான் அம்மாச்சிக்கு மிக நெருக்கமானவள் ஆனேன். சிகிச்சை முடிந்து முதல் இருபது நாட்கள் சரியாக உணவுண்ண முடியாமல் கதிர்வீச்சின் பக்கவிளைவுகளால் நாவின் சுவை இழந்து மிகவும் சிரமப்பட்டார். உமிழ்நீர் சுரக்காமல் போகக்கூடும் என்றும், நாவின் சுவை அரும்புகளை மலரவைக்கும் மாத்திரைகள் இருக்கின்றன என்றும் அப்போதுதான் எனக்குத் தெரியும்.
நோயின் தீவிரமும், சிகிச்சையின் தீவிரமும் குறைந்த பின் கிழக்கே பச்சை மலைக்குன்றை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்திருப்பார்.சிறுவயதிலிருந்து எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் கூட அன்று குன்றின் பக்கவாட்டில் நிலவு உதிப்பதைக் கண்டது நினைவில் பதிந்துவிட்டது. களத்தில் அம்மாச்சி நாற்காலியில் அமர்ந்திருக்க, நான் கட்டிலில் கிழக்கு திசையை பார்த்தபடி படுத்திருந்தேன். வயல்களுக்கு அடுத்திருந்த தென்னைமரங்களின் பின்னாலிருந்த குன்றிலிருந்து நிலவு கொஞ்சம் தேய்ந்து பார்வைக்கு முழுநிலவாக எழுந்து வந்தது. தேய்பிறையின் நான்காம் நாளாக இருக்கக்கூடும். என் கால்புறத்தில் அமர்ந்திருந்த அம்மாச்சி என் கால்களைத் தடவியபடி, [ தாத்தா பாட்டிகளுக்கு பேரப்பிள்ளைகளின் தலை, கால்,கைகள் என்று அனைத்தும் ஒன்றுதான்] சிலோனின் ரத்னபுரி மாவட்டத்து நெறில்லா [Niriella Estate] தேயிலைத் தோட்டத்தில் தாங்கள் வாழ்ந்த வாழ்வை என்னிடம் சொல்லத் தொடங்கினார். அவர் இலங்கையை சிலோன் என்றும், கெண்டி என்றும்தான் சொல்வார்.
போருக்கு முந்தைய சலசலப்பான காலகட்டத்தில் அங்கிருந்து இந்தியாவிற்குத் திரும்பிவிடலாம் என்று அம்மாச்சி முடிவெடுத்தார். தாத்தா மூன்று தலைமுறைகளாக அங்கிருந்தவர். அம்மாச்சிதான் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர். பத்தாண்டுகளாக குழந்தையின்மையில் உழன்று, கண்டி கதிர்காமத்து முருகனிடம் வேண்டி கரும்புத் தொட்டில் கட்டி பெற்ற இரு பெண்குழந்தைகளின் பொருட்டு, தாத்தா தன்நிலத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டார்.
தாத்தாவின் மூன்று தலைமுறை முன்னோர்களும் அங்கே புதைக்கப்பட்டிருந்தனர். ஒரு மழைநாளில் அந்த மண்ணை கைப்பிடி உருண்டையாக உருட்டி தகரக் குப்பிக்குள் எடுத்துக்கொண்டு கிளம்பிய அந்த நாளைப் பற்றி, அம்மாச்சி ஏதோ கனவில் இருப்பவர் போல சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு மண்ணின் பிரிவை அத்தனை ஆழமாக முதலில் சொன்னவர் அவரே. அவருமே தாத்தாவின் சொற்களைத்தான் எனக்கு கடத்தினார். “அய்யாவும் அம்மாவும்தான் எல்லா சாமிகளும். மனசுக்கு பிடிமானமும் அவுங்கதான். அவுங்களுக்கு பிறவு அவங்கள புதச்ச மண்ணுதான் நமக்கு தாயும் தகப்பனுமா இருக்கு. அதை இப்படி தவிப்போட பிரிஞ்சு போறாப்ல சாமி எனக்கு எழுதி போட்ருச்சே,” என்று சொன்ன தாத்தாவிடம், “தாயும் தகப்பனுமா நான் இருக்கேன்னு சொல்லி உங்க தாத்தன தேத்தி இங்க கூட்டிட்டு வந்தேன்,” என்றார்.
அடுத்து வந்த இரவுகளில் உணவிற்குப் பிறகு களத்தில் அமர்ந்து நிலவை, விண்மீன்களை, வானத்தை, மேகத்தைப் பார்த்தபடி அவருடைய சிலோன் பற்றிய நினைவுகளை சொல்லத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் நான் எழுத்தாளர் நீல பத்மநாபனின் பெரிய நாவலான ‘தேரோடும் வீதி’ வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் வாசிப்பில் நிதானமாக நீண்டு செல்லும் அந்த நாவலும், அம்மாச்சியின் கதைகளும், அந்த குன்றடிவாரத்து சூழலும், அம்மாச்சியின் நோய் எனக்குள் ஏற்படுத்தியிருந்த பயத்தை, பதற்றத்தை, நிலையின்மையை சமப்படுத்தின என்று நினைக்கிறேன். அவர் அருகில் இருந்து என்னையும் நான் குணப்படுத்திக்கொண்டேன் என்றே தோன்றுகிறது.
இந்த பிரபஞ்சத்தின் நிலையின்மையின் முன்னால் செய்ய முடிவது ஒன்றே ஒன்றுதான். நம் ஆதி மூதாதை கண்டு கொண்ட வழிதான். சேர்ந்திருந்து, பகிர்ந்து, ஒருவருக்கொருவர் அன்பாயிருத்தலை விட வேறொன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உடனிருத்தல் என்பதை சூட்சுமமானது, தூலமானது என்று இரண்டாகக்கொள்ளலாம். அதற்குப் பிறகும் அம்மாச்சிக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகளை இயற்கை கொடையாகத் தந்தது. 2018 இறுதியில்தான் மீண்டும் புற்றுநோய் தலைகாட்டியது. வலியில்லாத இறப்பிற்காக அம்மாச்சியும்,மருத்துவர்களும், நாங்களும், இயற்கையுடன் போராடி வெற்றிபெற்றோம். அவர் மரணத்திற்குப் பிறகு, வீட்டை வயல் பார்ப்பவரின் குடும்பத்திற்காக காலி செய்தோம். நெருங்கிய உறவின் இறப்பு வீட்டைப் பிரிவது ஒருவகையானது. எங்களுக்கு அவர் இருந்த தடயங்களை எல்லாம் அழித்து வெளியேறும்படி ஆனது. அப்போதுதான் அந்த மண்உருண்டையை தாத்தா அம்மாச்சி துணிகளுக்கு அடியில் இருந்து எடுத்தேன்.
மனித மனம் எத்தனை வியப்பானது. தாத்தா இறந்து பத்தாண்டுகளுக்கு மேல் தாத்தாவின் ஒரு வேட்டி துண்டை அம்மாச்சி தன் சேலைகளுடன் வைத்திருந்தார். அந்த மண்உருண்டையை எடுத்து டெம்போவில் ஏற்றும் பொருட்களுடன் வைத்தேன். பெரியம்மா கறாராக, “கிணத்துல போட்டுட்டு வா,” என்றார்.
அன்று இரவில் களத்தில் அமர்ந்து நிலவில் நனைந்தபடி தாத்தாவை நினைத்துக் கொண்டேன். முப்பதாவது நாள் சாமி கும்பிட்டு அம்மாச்சி தாத்தாவை வழியனுப்பிய பின் [நம் நம்பிக்கை இது; இறந்தவர்களை முப்பதாவது நாள் இறைவனுடன் இணைத்துவிடும் சடங்கு செய்வது] திரும்ப நான் நாகநல்லூருக்கு இன்னும் செல்லவில்லை. எங்கள் ஊரிலிருந்து அப்படி ஒன்றும் தூரமில்லை. பதினைந்து கிலோமீட்டர்தான். ஆனாலும் எனக்கு இன்னும் மிகத்தொலைவில் இருக்கிறது.
வீடு,நிலம் சார்ந்து, சொந்தபந்தங்களில் பிறப்பு இறப்பு விசேசங்கள் சார்ந்து அனைவரும் நாகநல்லூருக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அந்த மனப்பக்குவம் இன்னும் வரவில்லை. அனைத்து பக்குவங்களும் இந்த வயதிலேயே வந்துவிட்டால் வாழ்க்கை என்னாவது? இடையில் ஒன்றை மறந்துவிட்டேன். முதல் கதிர்வீச்சு சிகிச்சைக்குப்பின் அம்மாச்சியுடன் இரு மாதங்கள் இருந்துவிட்டு ஊருக்குத் திரும்பிய அன்று அம்மாச்சி எனக்கு ஒரு பித்தளை விளக்கை ஆசியாகக் கொடுத்தார். உள்ளங்கை போன்ற தட்டு விளக்கு. எந்த வேலைப்பாடுகளும் அற்றது. சிலோனில் இருந்து தமிழகம் திரும்பும் போது தேயிலை தோட்டத்து கங்காணி கொடுத்த விளக்கு அது. தோணியில் இருந்து இறங்கி ராமேஸ்வரத்தின் மண்டபத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்த போது அந்தியில் ஏற்றி வைத்த விளக்கு என்று சொன்னார். அது இன்றுவரை முன்னோர்களின் படங்கள் முன் சுடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணங்கள் தேவையில்லை. மனதிற்கு தோன்றும் போது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் பிடித்த செய்திகளை படங்களைப் பகிர்வது, காலையில் பக்கத்து வீட்டுகாரர்களிடம் வாசல்படியில் நின்றவறே ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி புன்னகைப்பதற்கெல்லாம் காரணம் தேவையா என்ன? அது போலதான் இதுவும். நம் நேசத்திற்கு உரியவர்களை எந்த வழியிலாவது மனதிற்கு பக்கத்தில் வைத்துக்கொள்வது.
‘அற்றை திங்கள் அவ்வெண்ணிவில்’ என்று தொடங்கும் இந்தப்பாடல் கையறுநிலை பாடல் என்றாலும் கூட அதனுள் ஒரு ஔி உள்ளதை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் உணர்கிறேன். அதை இழப்பின் ஔி என்று சொல்வேன். பெரும் இழப்பிற்கு பின் தோன்றும் ஔி ஒன்று இருக்கவே செய்கிறது என்று நம்புகிறேன். அதற்கு பின்னும் வாழ்க்கை நீளத்தானே செய்கிறது. அங்கவையும் ,சங்கவையும் செய்யுள் இயற்றும் அளவிற்கு கற்ற மகளிர். இழப்புகள் அவர்களை புடம் போட்டிருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். இந்தப்பாடலில் வரும் போர் என்பது போராக மட்டுமல்லாது காலமாகவும், நோயாகவும், எஞ்சும் நம் நினைவாகவும், காலனாகவும் மயங்கி மாறுகிறது. எரிந்த காட்டிலிருந்து புதுத்தளிர் முளைப்பது மாறாத நியதி.
அன்று அந்த வெண்ணிலவு நாளில்
எங்கள் தந்தையும் எங்கள் குன்றும்
எங்களுக்கு இருந்தது,
இன்று இந்த வெண்ணிலவு நாளில்
வென்று அழிக்கும் முரசை உடைய
வேந்தர்களால் குன்றும், தந்தையும்
இல்லாதவர்களானோம்.
(தொடரும்…)