
கணக்கும், பிணக்கும்..!
‘எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு’ அப்டின்னு ஸ்கூல்ல, பாடத்துல படிச்சிருக்கீங்கதானே… அந்த எதிர்வினைங்கறது பூமராங் மாதிரி எப்ப, எத்தனை நாள் கழிச்சுத் திரும்ப வந்து தாக்கும்ங்கறத மட்டும் கணிச்சுச் சொல்றது கஷ்டம். அப்டி என்ன ஆச்சுன்னு கேட்டீங்கன்னா…. ரெண்டு சம்பவங்களைச் சொன்னா ஈஸியாப் புரிஞ்சிடும் உங்களுக்கு…
சம்பவம் 1 :
சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரம். அது சுமாராக 1989-ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு அரியர்சும் வைக்காம (காலரைத் தூக்கி விட்டுக்கறேன்..) பொருளாதாரப் பட்டப் படிப்பு படிச்சு முடிச்சிருந்த நான் கஜினி முகம்மது மாதிரி விடாமல் எல்லாக் கம்பெனிகள் மேலயும் அப்ளிகேஷன் அம்புகள தொடுத்திட்டிருந்த காலம். வேலையில்லாத் திண்டாட்டம்ங்கற ஒண்ணு ரிப்பன் கட்டாம தலைவிரிச்சு டான்ஸாடிட்ருந்த காலம்.
அந்த காலச்சதுரத்துல ஒரு நாள் தெற்குமாசி வீதியில இருக்கற ஒரு கம்பெனிலருந்து இண்டர்வியூவுக்கு வரச் சொல்லி லெட்டர் வந்துச்சு. சின்னக் கம்பெனிதான்றது தெரிஞ்சாலும் போய்த்தான் பாப்பமே, கொஞ்ச நாளைக்கு சில்றை செலவுக்காச்சும் வண்டி ஓடும்னு கணக்குப் போட்டு, என் டூவீலரை (சைக்கிள்தான், ஹி… ஹி..) ஸ்டார்ட் பண்ணிப் பறந்தேன். மேற்படி அட்ரஸை சைக்கிளை ஸ்டாண்டிட்டு, கம்பெனியை நிமிர்ந்து பார்த்தவன் லைட்டா ஜெர்க் ஆனேன்.
அது ஏதோ ஹோல்சேல்ல வாங்கி, சில்றைல விக்கற ஏஜென்சி போலருக்கு. ‘பா’ன்னு விரிஞ்ச பெரிய ஹால், அங்க கன்னாபின்னான்னு மோட்டார் சாமான்கள், ஹால் மூலையில காட்போர்டு வெச்சுத் தடுத்த ரெண்டு அறைகள். கிட்ட போய்ப் பார்த்தேன். ஒண்ணு மொதலாளி ரூம் போல… மூடியிருந்துச்சு. இன்னொண்ணுல ஓமக்குச்சி நரசிம்மன் சாயல்ல ஒரு முதியவர் மோட்டுவளைல சுத்தற ஃபேனை ரசிச்சுப் பாத்துட்ருந்தார். ஒருவேளை அதுலயே அவரோ ப்ளாஷ்பேக்குக்குப் போய் அதுலயே மூழ்கிட்டாரோ என்னவோ… அவர் பக்கத்துல ஒரு டேபிள், சேர். அதுல அவரைவிட வயசானதா ஒரு ஹால்டா டைப்ரைட்டர் கவர் போட்டு மூடியிருந்துச்சு.
“ஸாஆஆர்…”-ன்னு கொஞ்சம் சத்தமாவே குரல் கொடுத்தேன். பகீர்னு தூக்கிவாரிப் போட்டு, சீட்லயே ஒரு துள்ளுத் துள்ளித் திரும்பி என்னைப் பாத்து ‘ழே’ன்னு முழிச்சாரு ஓல்டுமேன். ஒருவேளை தூங்கிட்ருந்திருப்பாரோ மேல பாத்து..? “என்ன வேணும்..?” கடுகடு குரல்ல கேட்டார். இண்டர்வ்யூ லெட்டரை எடுத்து நீட்டினேன்.
பார்த்துவிட்டு தலையாட்டிக் கொண்டார். “நீதானா அது..? அப்டி உக்காரு” என்று சேரைக் கை காட்டினார்.
‘இண்டர்வ்யூன்னா நிறையப் பேர் வந்திருப்பாங்களே… நாம ஒர்த்தன்தானே இருக்கோம். ஸம்திங் ராங்’ன்னு எனக்குள்ள ஏதோ குருவி கத்திட்ருந்துச்சு. அவர் காட்ன சேர்ல உக்காந்தேன்.
“வாட்ஸ் யுவர் நேம்..? என்ன படிச்சிருக்கே..?”
‘அதெல்லாம் அப்ளிகேஷன்ல பாக்காமயாடா கூமுட்டை எனக்கு லெட்டர் அனுப்பின..?’ என்று வாய்வரை வந்த வார்த்தைகளை ‘எவ்ளோ பெரிய மாத்ர..?’ன்னு முழுங்கற தேவயானி மாதிரி கஷ்டப்பட்டு முழுங்கிட்டு, பொறுமையா அவர் கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.
“கணக்குப் போட வருமா..?”ன்னார்.
‘கணக்குப் பண்ணவே துப்பில்லாத பய நான். எங்கிட்டு கணக்கு போட்றப் போறேன்..?’ங்கற மைண்ட் வாய்ஸ மறுபடி முழுங்கிட்டு, ‘தெரியும்’ன்னு தலைய ஆட்டினேன்.
“ரைட், நான் சொல்றதைக் கேட்டுக்க. நாம மனோகர் அன் கோலருந்து 60 ஆயிரம் ரூபாய்க்கு குட்ஸ் வாங்கறோம். அதுல 30 பர்சண்ட்டை ராம் அன் கோவுக்கு விக்கறோம். மிச்ச 10 பர்சண்ட்டை ……. ……. ……. ஆச்சா..? இப்ப மனோகர் அன் கோல நம்ம கம்பெனிக்கு பாலன்ஸ் எவ்வளவு இருக்கும்..?”ன்னு கட்டபொம்மன் வசனம் மாதிரி நான்ஸ்டாப்பா பேசி, பத்து ட்ரான்ஸாக்ஷனை ஒப்பிச்சிருந்ததை நிறுத்தினார்.
அவர் ஒண்ணொண்ணா விவரிக்கறப்பவே லைட்டா தலை சுத்த ஆரம்பிச்சிருந்துச்சு எனக்கு. மேல தலையத் தூக்கி அவர் பாத்த மாதிரி ஃபேன் சுத்தறதை பாத்துட்டே தலைய ஆட்டிட்ருந்தேன். இப்ப அவர் கேள்வியை முடிச்சதும், அவரை நிமிர்ந்து பார்த்து, அவர் டேபிள்லருந்த கால்குலேட்டரை எடுக்கப் போனேன். டக்குன்னு அதைக் கைல எடுத்து முதுகுக்குப் பின்னாடி மறைச்சுக்கிட்டார். “நோ… நோ… மிஷின் யூஸ் பண்ணக் கூடாது. இந்தா, பேப்பர், பேனா. அந்த டேபிள்ல வெச்சு கணக்குப் போட்டுச் சொல்லு..”ன்னார்.
‘ரட்சகன்’ படத்துல நாகார்ஜுனாவுக்கு கோபப்பட்டா கை நரம்புகள் வழியா ரத்தம் தெறிச்சு தலைக்கு வருமே… அப்டி எனக்கும் வந்ததுல, யோசிக்காம பட்னு வாய்ல வார்த்தைகள் வந்துடுச்சு.
“சார், நான் அப்ளை பண்ணது டைப்பிஸ்ட் வேலைக்கு. அதுக்கு எதுக்கு கணக்கு தெரியணும்..? இது பர்ஸ்ட் கொஸ்டின். செகண்ட், மிஷினை யூஸ் பண்ணக் கூடாதுன்னா அப்பறம் என்ன எழவுக்கு அதை வாங்கி வெச்சிருக்கீங்க..”
இண்டர்வ்யூவுக்கு வந்தவன், பணிவா பவ்யமா பேசிட்ருந்தவன் திடீர்ன்னு இப்டியொரு அன்னியன் அவதாரமா மாறுவேன்னு அவர் எதிர்பாக்கலை போல. ஒரு செகண்ட் பிரமிச்சுப் போய், ‘ழே’ன்னு முழிச்சார். ‘அடப்படுபாவி பாதகா’ங்கற மாதிரி முறைச்சார். அப்பறம் கத்த ஆரம்பிச்சார்.
“யூ இடியட். எதுத்துப் பேசறியா..? நான் ஆபீஸ்ல இல்லன்னா கணக்கு வழக்கு பாக்கத் தெரிய வேண்டாம்.? (போச்சுடா, கணக்கே ப்ராப்ளம், இதுல வழக்கு வேறயா..?) இப்டிப் பேசற உனக்கு எப்டிடா வேலை தர முடியும்..?” இன்னும் நான் ஸ்டாப்பா என்னென்னமோ சொல்லி அவர் கத்திகிட்ருக்க, அவர் எதிர்ல இருந்த என்னோட சர்டிபிகேட் ஃபைல தூக்கிட்டு என் வண்டியை ஸ்டார்ட் பண்ணிப் பறந்தேன். நாலஞ்சு கடை தாண்டற வரைக்கும் அவர் கத்தறது காதுல விழுந்துட்டே இருந்துச்சு.
சம்பவம் 2 :
சாக்கடை வளர்த்துக் கூவம் ஓடவைத்த சென்னை மாநகரம் இது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள். என் வெளிநாட்டு நண்பர் வாட்ஸப்ல ஒரு டஜனுக்கும் மேல புத்தகங்கள் லிஸ்ட் அனுப்பி, ‘வாங்கி வைங்க. நெக்ஸ்ட் மன்த் வர்றப்ப உங்களப் பாத்து வாங்கிக்கறேன்’ன்னார். அதுலருந்த புத்தகங்களை பதிப்பக வாரியா பிரிச்சுக்கிட்டு, ஒண்ணொண்ணா போய் வாங்க ஆரம்பிச்சேன்.
அப்டிப் போன ஒரு பதிப்பகம் தியாகராய நகர்ல இருந்துச்சு. நுழைஞ்சதுமே அங்க முன்னாடி சேர் போட்டு உக்காந்திருந்த ஒரு பெரியவர், “வாங்க… என்ன வேணும்..?”ன்னார்.
சம்பவம்-1 நடந்து இத்தனை வருஷமாகியும் கண்ட்ரோலுக்குப் பழகாத என் நாக்கு, “நாலு இட்லி, கெட்டிச் சட்னி” என்று சொல்ல வந்ததைக் கஷ்டப்பட்டுத் தடுத்து, என் கைலருந்து லிஸ்ட்டை நீட்டினேன். “இந்த புக்ஸ்லாம் வேணும்…”
பார்த்தார். “இப்டி உக்காருங்க.” என்று அவருக்கு எதிர் சீட்டைக் கை காட்டிவிட்டு, அங்கிருந்த ஒரு இளைஞியிடம் லிஸ்ட்டைத் தந்து புத்தகங்களை எடுத்துவரச் சொன்னார். அவள் சென்று எடுத்துவந்து டேபிள் மீது அடுக்கினார். “ஸார், கேஷ் பேமெண்ட்தானே..?” என்று கேட்டபடி பில் போட ஆரம்பித்தார். மொத்தம் 735 ரூபாய் ஆகியிருந்தது.
“சார், டிஸ்கவுண்ட் எதுவும் கிடையாதா..?” பில்லைக் க்ளோஸ் பண்ணப் போனவரைத் தடுத்தேன் கேள்வியால்.
“டிஸ்கவுண்ட் எதுவும் தர்ற வழக்கமில்லை தம்பி..”
“ஏன் சார்… புக்ஃபேருக்கு கொண்டு போனா பத்து பர்ஸண்ட் தர்றீங்க. புத்தகக் கடைகளுக்கு சப்ளை பண்ணினா 30லருந்து 40 பர்ஸண்ட் வரை அவங்களுக்குத் தர்றீங்க. வேகாத வெயில்ல, நாயா அலைஞ்சு உங்க பதிப்பகத்தைத் தேடிவர்ற ஒருத்தனுக்கு ஏதாவது தரலாமில்ல..?”
இந்தக் கேள்வியை எதிர்பாராமல் ஒருவினாடி ‘ழே’யென்று விழித்தார். ‘சரி, இவன் விஷயம் தெரிந்த ஆசாமி’ என்று முடிவு கட்டியிருப்பார் போலிருக்கிறது. “சரி தம்பி, பத்து பர்ஸண்ட் டிஸ்கவுண்ட் தர்றேன்” என்றார். “தாங்க்யூ ஸார்..” என்றுவிட்டு, இரண்டு ஐநூறு ரூபாய்களை எடுத்து நீட்டினேன்.
வாங்கி மேஜை மேல் வைத்துவிட்டு, மேல் டிராயரைத் திறந்தார். மூடினார். அடுத்த ட்ராயரைத் திறந்தார். மூடினார். இப்போது கீழ் டிராயரைத் திறந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஸார், சேஞ்ச் இல்லையா..? நான் வேணும்னா என்கிட்ட இருக்கான்னு தேடிப் பாக்கறேன் ஸார்…” என்றேன்.
“கொஞ்சம் பொறுங்க தம்பி…” என்று கையமர்த்திவிட்டு, அடுத்திருந்த மேஜையின் டிராவைத் திறக்க ஆரம்பித்தார். அதன் இரண்டாவது டிராவில் கைவிட்டு அந்தப் பொருளைக் கையிலெடுத்தார். அது ஒரு கால்குலேட்டர். என்னைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையைச் சிந்திவிட்டு, அதில் 735-க்கு பத்து பர்ஸண்ட் எவ்வளவு என்று பார்த்துவிட்டு, பில்லில் அதை எழுதி, கழித்து நிகரத் தொகையைப் போட்டார். பின் டிராவிலிருந்து மிச்சப் பணத்தை எடுக்கவாரம்பித்தார்.
இப்போது நான் ‘அடப்படுபாவி பாதகா’ என்கிறாற் போல் அவரை முறைத்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பத்து பர்ஸண்ட் என்பது மனக்கணக்காகப் போடுகிற விஷயம், அதுக்குக் கூட கால்குலேட்டரைத் தேடுறாரே… இவர் இவ்ளவு பெரிய தத்தியா..? இல்லை, டெக்னாலஜி இத்தனை சோம்பேறியாக்கிடுச்சா எல்லாரையும்..? அடப்படுபாவி மனுஷா… என்று மனதுக்குள் திட்டிய அதேநேரம், சம்பவம்-1 எட்டிப் பார்த்தது மனதில்.
‘அந்த மதுரைக் கிழவர் என்னையும் இதுபோலத் திட்டியிருப்பாரோ… சேச்சே… நாம எம்மாம் பெரிய கணக்குக்குல்ல கேட்டோம் அதை. இப்டி சிம்பிளா ஸ்கூல் பையன் போடற கணக்குக்கா கேட்டோம்..? நாம செஞ்சதுல தப்பில்ல..’ என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தபடியே புத்தகங்களை அள்ளிக் கொண்டு என் டூவீலரில் (சைக்கிள் இல்லீங்க இப்போ, அதுக்கு அடுத்த கட்டம் டிவிஎஸ் சூப்பர் எக்ஸெல்) வீட்டை நோக்கிப் பறந்தேன்.
சரக்கு இன்னும் உண்டு…
அருமை சார். ரொம்ப நன்றாக இருந்தது. உங்கள் எழுத்து நடையும், அதில் இருந்த வார்த்தைகளும், அழகாக கோர்க்கப்பட்ட சம்பவமும் வெகு சுவராஸ்யமான அனுபவத்தைக் கொடுத்தது.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்???