
நிலம் வாழி! யுகம் வாழி!
கனவெனும் சொல்
வரலாற்றின் ஸ்தனங்களில் படிந்த வெம்பிணி
வானோக்கும் குப்பி விளக்கொளியில்
மோதுண்டு புகையும் இருள்
ஆதியின் சபித்தலுக்கும்
அந்தத்தின் திடுக்கிடலுக்குமிடையே
அதிகமாய் சிதைந்த கடவுள்
ஒவ்வொரு கணத்திலும்
ஒவ்வொரு மூச்சிலும்
எரியும் சூரியன்
பாழ்வெளியில்
வீழ்ந்து உயரும்
வண்ணத்துப் பூச்சி
கைவிடப்பட்ட பிணச்சீழாய்
மூச்சிரைக்க கதறும்
பனையிழந்த
கடல் நிலம்.
•
ஆனாலுமென்ன…
கூடு சிதைந்த பின்னர்
வெளியில்
அந்தரித்த
சிறகின் கண்ணீரில்
பூமிக்காய்
கருத்தரிக்கும்
என் பறவை.
•
பிரார்த்தனையும்
மழையைப் போலவே
ஒவ்வொரு இழையிலும் அதிர்வது
வானளவு துயர்
தாழ்வாரத்தில் வீழ்வது
கண்ணீரின் சிரம்
இருண்டு மின்னுவதும்
இடியாய் வீழ்வதும்
தெய்வத்தின் சூளையில்
தகிக்கும்
என் வார்த்தை.