உன் உள்ளங்கையில்
முகம் புதைத்து
நான் உறங்கியதில்
என் பின்னங்காலில்
விரல் பதித்து
நீ அழுத்தியதில்
விடுபட்டது
தேகத்தில் தேங்கியிருந்த
வேதனை உஷ்ணம்
அதன் தடயங்களே
தோலின் மீது சிவப்பு!
***
அவன் எல்லாவற்றையும்
அழகற்றதாக மாற்றினான்
உலக அழகுகளனைத்தையும்
குவளைக்குள் ஊற்றி
குடித்தே விட்டான்
நீ குடித்த திரவத்தை
எனக்கு முத்தமிட்டு
சிறுதுளி ஊட்டிவிடு.
***
அன்று
குவளை நிறைய
தண்ணீர் இருந்தது
குடிக்கவும் தோன்றவில்லை
தாகமும் தீரவில்லை
அப்படியொரு தவிப்பு
இன்று
குவளை
காய்ந்து கிடக்கிறது
குடிக்கவும் வழியில்லை
தாகமும் தீரவில்லை
இப்படியொரு தவிப்பு
காதலின் வறுமை!
காதலின் வெறுமை!
***