சிறுகதைகள்
Trending

அஹல்யா – ஹரிஷ் குணசேகரன்

சிறுகதை | வாசகசாலை

நாளை அவளைச் சந்திக்கப் போகும் தருணத்தை நினைத்து படபடப்பு தொற்றிக் கொண்டதால் படுக்கையை விட்டெழுந்து கெட்டிலில் காஃபி போட்டு கோப்பையை எடுத்தான். அதில் அவர்கள் எட்டு வருடங்களாகப் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் லோகோ இருந்தது. காஃபி வாசத்தை முகர்ந்து அதன் கசப்பை, வெதுவெதுப்பை அனுபவித்தபடி கடைசியாக அவளைச் சந்தித்த பொழுதை நினைத்தான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவனை விட்டுத் தனியாக சென்னை கிளைக்கு பிராஜெக்ட் வாங்கிக்கொண்டு போனதும் தன்னுள் ஏற்பட்ட உடைவை, ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் கடந்தான்.

கோப்பையை நெற்றியில் ஒற்றியபடி, கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது ஒரே ஊர் என்பதால் பேருந்தில் அருகருகே அமர்ந்து பயணித்ததை நினைத்து உதட்டில் புன்னகை சிந்தினான். படித்த, வளர்ந்த சூழலில் அது மிகப்பெரிய விஷயம் ஆயிற்றே! அவளிடம் பேசி சகஜமாகப் பழகி பக்கத்தில் உட்கார நான்கைந்து பயணங்கள் தேவைப்பட்டன. வளாகத்துள் பெண்களோடு பேசினால் ஐடி கார்டை பறித்து செல்லும் காலெஜ் செக்யூரிட்டிகள் வெளிப் பேருந்துகளில் கூடவே வர முடியாதே!

நட்பு என்கிற எல்லைக்குள் தன்னை நிறுத்த, அப்போது தான் ஒடிசலாக இருந்ததே காரணமென்று கருதினான். கவிந்த ஆசையை, காதலை சூசகமாக பலமுறை குறுஞ்செய்திகளில் சொல்லியும் அவள் பட்டும்படாமல் நடந்துகொண்டதை காதல் கனியும் வாய்ப்பாக அசட்டுத்தனமாக நம்பினான். மூன்றாம் வருட கணிப்பொறியியல் படிப்பின்போது இன்னொருவனுடனான காதலை அவள் பகிர்ந்தபோது தனியே அழுது விம்மி, சோகப் பாட்டு கேட்டு பிறகு விடுதி மெஸ்ஸில் இரண்டு முறை சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சமாதானமானான். என்றாலும் அடுத்த தினம் அவளை கருப்பு வெள்ளை சுடிதாரில் பளீரென்று லட்சணமாகப் பார்த்தபோது ஏக்கமும் வருத்தமும் கொண்டான். அவளுடைய அழகுக்கு முன்னால் தான் சாதாரணம் என்றும், புருவங்களை உதடுகளால் உரசி நெற்றியில் முத்தமிட தனக்குத் தகுதியில்லையென்றும் நினைத்துக் குமைந்தான். அவள் தன்னை இணையாக நினைக்காமல் போனதை நினைத்து விரக்தி அடைந்தான்.

ஆஃபிஸ் மெயிலைத் திறந்து சிறிது நேரம் அலுவல் ரீதியாக நேரத்தை செலவிட்டு பிறகு கேம்பஸ் பிளேஸ்மெண்டில் அவளும் தானும் ஒன்றாக நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் அடியெடுத்து வைத்த நிகழ்வை அசைபோட்டான். தந்தை பெயரையும் சேர்த்து ‘அஹல்யா ரவிக்குமார்’ என்று அவள் கம்பெனி படிவங்களில் பூர்த்தி செய்ததை கவிதையென்றே கொண்டு உள்ளில் மீண்டும் மீண்டும் உச்சரித்தான். கார்ப்பரேட் வாழ்க்கை, வேலை, ஜாவா கற்றல் குறித்து ஒரு மாத காலம் பயிற்சி சென்றது. இருவரும் ரெட்டை கணக்காக ஒன்றாக சுற்றி பிராஜெக்ட் செய்து தேர்ச்சி பெற்றார்கள். அருகே அவளை ரசிக்க, அழகை ஆராதிக்க, சில சமயம் உரசலின் கதகதப்பை அனுபவிக்க முடிந்ததை நினைத்து திருப்தியடைந்தான். அவளினின்று கசிந்த வாசனை பிரத்யேகமானது, வேறெங்கும் நுகர முடியாதது என்று கருதினான்.

வாழ்க்கையில் முதன்முதலாக சம்பளக் கணக்கு என்ற ஒன்று வந்ததையும், அதில் ஊதியம் விழுந்ததையும் பார்த்துப் பூரித்து இருவரும் மாறி மாறி ட்ரீட் வைத்துக் கொண்டார்கள். பிராண்ட் ஃபேக்டரிக்கு ஒன்றாக ஷாப்பிங் போய் மொத்த வீட்டுக்கும் வாங்கிக் குவித்தார்கள்.  முதல் காதல் முறிந்து, அவள் வேறொருவனை மீண்டும் காதலிப்பதை அறிந்து கொண்டான். பொறாமையும் வருத்தமும் அண்டியபோதும் அவன் ஒரு சலனமும் காட்டியதில்லை. அவனுக்கு ஏமாற்றம் பழகி விட்டிருந்தது காரணமாக இருக்கலாம். ரியல் டைம் பிராஜெக்ட் கிடைக்காமல் பெஞ்சில் இருந்தபோது இருவருக்குமான நெருக்கம் இன்னும் ஆழப்பட்டது. தயக்கமின்றி எதையும் பகிர்ந்து கொள்ளும் வெளியில் சஞ்சரித்தார்கள்.

வளாக பூங்காவின் புல்தரையில் அமர்ந்து தினமும் கப்பூசினோ குடித்தது, கேட்க ஆளில்லாததால் காலையில் வெறுமனே ஆக்செஸ் வைத்து டெய்ல்கேட் பண்ணி திரையரங்கில் தமிழ்ப் படங்கள் பார்த்தது, மாலையில் அறைக்கு கூட்டிச்சென்று சீட்டு விளையாடியது, இரவில்  அலுவலக வளாகம் திரும்பி ஆக்செஸ் வைத்துவிட்டு கூட்டமாக கேரம் ஆடியது, கேண்டீனிலேயே சாப்பிட்டு அவள் தங்கும் விடுதி வரை கூட்டிச் சென்று விட்டது எல்லாம் ஞாபக அறையைத் திறந்துகொண்டு கண்முன் கொட்டின.

பழைய புகைப்படங்களை ஹார்ட் டிஸ்கில் தேடியெடுத்துப் பார்த்தபோது, “அஹல்யா.. அஹல்யா..” முணுமுணுத்து பெருமூச்சு விட்டான். கல்லூரிக் காலத்தில் அரும்பென உடலும் முகமும் பிரகாசித்தபோது அவன் உள்ளத்தில் நிறைந்தாள். கூட்டாக பிராஜெக்ட் கிடைத்து ஆஃபிஸ் டெஸ்கில் உட்கார்ந்தபோது, பூசினாற் போன்ற தேகமும் முகமும் கொண்டு ஈர்த்தாள். வார இறுதி நாட்களில் ஃபோரம் மாலில் அறை நண்பர்களுடன் அவன் உலவிட, சில முறை ஜோடியாக காட்சி தருவாள். காதலனை உரசிக்கொண்டு, ’ஹாய்’ சொல்லிக் கடந்து போவாள். வேற்று ஆள் போல விலகி நடந்துகொள்வது அவனை இன்னும் துன்பப்படுத்தியது.

அடுத்த நாள் ஆஃபிஸ் வந்ததும், “சாரிடா.. சாரிடா.. அவன் கொஞ்சம் பொஸஸிவ். நீ யாரு, என்னன்னு நோண்டி நோண்டிக் கேப்பான்” என்பாள்.

அவளிடமிருந்து விலகியிருக்க அவன் நினைத்தால், “என்ன ரொம்ப பிகு பண்ற..? அப்ப அவ்ளோதானா நமக்குள்ள?” என்று கிள்ளி வைப்பாள்.

“இப்பவே நீ இப்டி பண்ற.. கல்யாணம் ஆச்சுன்னா, நீ என்னை மறந்துடுவ.”, அவன் குரல் உடைந்தது.

“ச்சீ.. இல்லைடா”, முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்வாள்.

இருந்தாலும் விலகியிருப்பதே சரியென்று இரண்டுமுறை அவளைத் தவிர்த்து தனியே வார இறுதிக்கான சென்னை பயணத்தை மேற்கொண்டான். மூன்றாவது முறை ஆம்னி பேருந்தில் ஏறியபோது ஓட்டுநருக்கு பின் சீட்டில் உட்கார்ந்திருந்த அஹல்யா கையசைப்பதை எதேச்சையாகப் பார்த்தான். சங்கடமும் வருத்தமும் பெருகியதால் அவளை ஏறிட்டு கண்கள் சந்திப்பதைத் தவிர்த்தான். வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு மறுபடியும் பெங்களூர் கிளம்பியபோது அஹல்யாவின் அம்மா அலைபேசினார்.

“உங்களுக்குள்ள ஏதாச்சும் சண்டையா கண்ணா?”

“இல்லை ஆண்ட்டி.. அப்படி ஒண்ணும் இல்லையே”

“…”

“ஏன் என்னாச்சி?”

“அவ உம்முன்னே இருக்கா.. என்னன்னு கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்றா!”

“எதுவும் இருக்காது.. நான் என்னன்னு கேக்றேன் ஆண்ட்டி”

“நீயும் அங்க இருக்றதாலதான், நாங்க இங்க நிம்மதியா இருக்கோம்.. பாத்துக்கோப்பா…”

தன் வாழ்வில் அஹல்யா இல்லாமல் போவதை நினைக்கையில் வருத்தம் தொண்டையை அடைத்தது. ஜன நெரிசலான ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்றபடி அவளைத் தொடர்பு கொண்டு அவளுக்காகக் காத்திருப்பதாக சொன்னான். அவள் வந்ததும் கட்டியணைத்து, “உன்னை மிஸ் பண்ணேன் டூட்..” என்று சொல்லத் திட்டமிட்டு இருந்தான். ஆனால் தப்படி தொலைவில் கௌதமை, அதுதான் அவள் காதலனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். சம்பந்தமே இல்லாதது போல இவன் நடந்துகொள்வதால் கோபப்பட்டு சீட்டை மாற்றிக் கொண்டு பயணம் முழுக்க பார்க்காமல், பேசாமல் வந்தாள்.

அடுத்த நாள் ஆஃபிஸ் டெஸ்குக்கு வந்தபோது, “நீ, என்னை லவ் பண்றியா?” கேட்டாள். அவன் சற்றும் எதிர்பார்க்காததால் என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறினான்.

“கம் ஆன்.. சொல்லு”

பேச்சு குழறியதை சமாளித்து, “ஏ.. ஏன் கேக்ற?” என்றான்.

“சும்மா தான்.. நீ நடந்துக்றதைப் பாத்தா அப்படிதான் தோணுது”

“ஆமாம்.. ஏன் நான் எல்லாம் லவ் பண்ணக் கூடாதா?” ஒரேடியாகப் போட்டு உடைத்தான்.

“நீ வேணா பண்ணிக்கோ.. என்னால முடியாது, நான் கௌதமைதான்..” அவள் நிறைவு செய்வதற்குள் பல்லை காட்டினான்.

ஒரே டெவலப்மெண்ட் செண்டரின் தளத்தில், வேறு வேறு குழுவில் இடம்பெற்றதும் இருவரும் கற்பதில், தனியாக செயல்பட்டு கோடிங் அடிப்பதில் மும்முரமானார்கள். இவன் டெஸ்கில் இருந்து எக்கி அவள் இருப்பிடத்தை நோட்டமிடுவான். அவளின் அழகை சற்று தொலைவில் இருந்து ரசிக்க முடிவதே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது.

ஆஃபிஸ் மெசெஞ்சரில் “இன்னிக்கு செமய்யா ட்ரெஸ் பண்ணிருக்க.. பாத்துட்டே இருக்கலாம் போலருக்கு”, என்று அனுப்பிவிட்டு அவள் வெட்கப்படுவதை ரசிப்பான்.

வருடாந்திர சம்பளத்தில் முன்பே பிடித்த, அதுதான் செயல்திறனோடு தொடர்புடைய தொகையில் கம்பெனி கடித்தது போக கைக்கு சொற்பமாக வர, முகத்தைத் தொங்கவிட்டு திரிந்தனர்.

“டே.. இங்க இருந்தா உருப்பட முடியாது. வேற பக்கம் பிராஜெக்ட் பாத்துட்டு போய்டலாம்” என்றாள்.

“எங்க போனாலும் இதே மாதிரிதான் பிடிப்பாங்க.. நமக்காச்சும் பிராஜெக்ட் இருக்கு. நெறையப் பேரு, பெஞ்சை தேய்ச்சிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எதுவும் கெடைக்காது.” என்றான்.

கேஃபெடிரியாவில் சம வயது பசங்களின் பார்வை அவள்மீது குவிவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அறிமுகப்படுத்தி வைக்குமாறு கேட்டவர்கள் மீது கடுகடுப்பான, எரிச்சல் பார்வை எறிந்தான்.

அந்த வாரத்தில் காவிரி பிரச்சினை வெடித்து ஓசூர், எலட்ரானிக் சிட்டியில் பதற்றம் தொற்றிக்கொள்ள கன்னட அமைப்புகள் தமிழகப் பேருந்துகளையும் ஓட்டுநர்களையும் தாக்கினர். இருவரும் பயத்தில் பதற்றத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி சென்னை விரைந்தனர். அந்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு நடுக்கமெடுக்கும். இரண்டு தினங்களில் நிலைமை சீராகி விட்டதால் ஆஃபிஸ் வரும்படி கம்பெனி சார்பாக மின்னஞ்சல் வர, கலக்கமும் விரக்தியும் மேலிட்டு கிளம்பினார்கள். ஒரு நொடி கூட விலகாமல் கைகளைப் பற்றியபடி அவள் வந்ததை உள்ளூற ரசித்து கன்னட அமைப்புகளுக்கு நன்றி சொன்னான். அந்த ஸ்பரிசத்தை, கதகதப்பை அனுபவித்து தன் ஞாபக அறைகளில் தேக்கி வைத்தான்.

*******

நிறுவனத்தில் இ-காமர்ஸ் துறையில் எட்டு வருடங்களையோ அதற்கு கூடுதலாகவோ பூர்த்தி செய்தவர்களின் புகைப்படத்தையும் பங்களிப்பையும் பிரசுரித்து கொச்சியில் மீட்டிங்கை ஏற்பாடு செய்தார்கள். வேறு நிறுவனத்திற்கு மாறி மாறிச் சென்றிருந்தால் மாதம் ஒரு லட்சத்தை அசால்டாக தொட்டிருக்கும் அவன் சம்பளம். அவன் அதை விரும்பினவன் இல்லை.  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வேறு நிறுவனத்தின் ஆஃபர் லெட்டரைக் காட்டி இந்த நிறுவனத்திலேயே சம்பளத்தை ஓரளவுக்கு கணிசமாக வாங்கினான்.

திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் அவன் ஏறியமர்ந்ததும் இதற்கு முன்பு இருவரும் கொச்சி கிளையில் பணிபுரிந்த ஞாபகங்கள் விரிந்தன.

கேஃபெடிரியாவில் இருந்து அலுவலக டவர் வரைக்கும் வேயப்பட்ட கேரள பாணி கூரையின் அடியே குடைக்குள் ஒன்றியபடி அஹல்யாவோடு நடந்துபோனது; தேங்காய் எண்ணெய்யில் சமைத்த மீல்ஸ் பிடிக்காமல் மசாலா அப்பியும் அப்பாமலும் சுண்டியிழுத்த மலபார் பிரியாணியை தினமும் சாப்பிட்டது; சிகப்பு தீப்பெட்டி போன்ற பேருந்துகளில் கூட்ட நெரிசலில் வியர்வை வழிய பயணித்தது; சொல்லி வைத்த மாதிரி பொழியும் இடவப்பாதி மழையில் நனைந்து குதூகலித்தது; நான்காவது மாடியில் காஃபி மக்கை உள்ளங்கையில் பதித்தபடி வெயில் மழையை ஊடுருவி முத்தமிடுவதை ரசித்தது; புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டு சிலாகித்தது; ஒவ்வொரு மாலையும் பழ பஜ்ஜியோடு சாயா பருகியது; விடுமுறைக்கு சென்று திரும்பும்போதெல்லாம் காலை ஐந்தரை அல்லது ஆறுக்கு எர்ணாகுளம் வடக்கிலிருந்து காக்கநாட் வரை இருவரும் ப்ரீபெய்ட் தானியில் பயணித்தது; இரவு ஏழு ஏழரை மணிக்கெல்லாம் ஆளரவம் அடங்கியதும் அரிதான ஏஸி பஸ்ஸுக்கு காத்திருந்தது என்று எல்லாமும் நினைக்க சுகமாக இருந்தது.

போராடி பெங்களூரிலிருந்து கொச்சி இன்ஃபோ பார்க்கிற்கு மாற்றலாகி வந்து வேலையை நேர்த்தியாகக் கற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததை திரும்பிப் பார்த்தான். வரிசைப்படி ஞாபக அடுக்கில், கௌதமுடனான அவளது காதல் முறிந்ததும் தனிமையில் அவன் தோளில் சாய்ந்து அழுததை நினைத்தான். அவளைத் தொட்டு சமாதானப்படுத்த கூச்சப்பட்டு காலி காஃபி கோப்பையை வெறித்தான். ”நல்லா அழு.. இப்பவாச்சும் என் அருமை தெரியுதான்னு பாப்போம்”, இப்படி இருந்தது அவன் மனப்போக்கு. அடுத்த மாதத்திலேயே அவன் தன் காதலை சொன்னதும், அவள் அதை மறுத்து நண்பர்களாகவே இருக்கலாம் என்றாள். காலப் போக்கில் மனது மாறினால் பார்க்கலாம் என்றிருந்தாள்.

நிகழ்காலத்தில் பாலக்காட்டில் இருந்து ரயில் புறப்பட்டதும், கடந்த ஒரு மாதமாக அஹல்யாவோடு வாட்ஸாப்பில் நடந்த சம்பாஷணைகளை மீண்டும் வாசித்து வெட்கப்பட்டான். அவள் அனுப்பிய புகைப்படங்களை வெறித்துப் பார்த்து தேக வனப்பில், முக லட்சணத்தில் மயங்கி காதலில் உருகினான். மணவாழ்வு கசந்து விவாகரத்தான அவனும், தொடர்ந்து உறவு முறிவுகளால் துவண்டு போன அவளும் தங்களுக்குள் இழையோடிய எதையோ உணர்ந்து அடிக்கடி அலைபேசி ஆறுதல் சொல்லிக் கொண்டனர். திருச்சூர் வந்ததும், அன்றைய இரவை அவளோடு செலவிட ஆசை கொண்டான். இருவரும் நீண்டதொரு முத்தத்தில் திளைத்திருப்பது போல கற்பனை செய்து இதழ்விரித்து சிரித்தான். எர்ணாகுளம் டவுன் நிலையம் வந்ததும் ரயிலை விட்டிறங்கி சோம்பல் முறித்து தானி முன்பதிவு செய்வதற்கான கியூவில் நின்றான்.

*******

கொச்சி ஐடி பார்க்கில் நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸில் பையை வீசி, அகண்ட மெத்தையில் விழுந்து குட்டி தூக்கம் போட்டு, கண்ணாடி முன்பு ஆஜராகி பார்த்து பார்த்து கிளம்பினான். எல்லாருக்கும் முன்பாக கான்ஃப்ரென்ஸ் ஹாலில் நடுவரிசையில் நாற்காலியை நிரப்பி, அவளுக்காக காத்திருந்தான்.

அரை மணி நேரத்தில் சுற்றிலும் தலைகள் தென்பட்டு மீட்டிங் தொடங்கியதும் பிஸினஸ் ஹெட் ஆற்றிய உரையில் கவனம் செலுத்தினான். உலகம் முழுக்க கைபேசி பயன்பாடு அதிகரித்து வருவதால் அதைச் சுற்றி இ-காமர்ஸ் துறை நகர்ந்திருக்கிறது என்றார். கிளைண்டுகளுக்கு குறைந்த விலையில் செயலிகளை செய்து, அதே நேரத்தில் நிறுவனமும் பொருள் ஈட்டி வளர்ச்சிப் பாதையில் செல்வதாக சொன்னார். அவள் பார்க்க அப்படியே இருப்பாளா அல்லது இன்னும் தேகம் பொலிந்து காணப்படுவாளா? இருப்புக் கொள்ளாமல் தவித்தான்.

அடுத்ததாக சீனியர் டெலிவரி மேனேஜர் பேச மேடைக்குச் சென்றபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென திரும்பினான். அது அஹல்யா அல்ல என்றுணர்ந்ததும் ஏமாற்றம் அடைந்தான். பருத்த உருவம் கொண்ட பெண் காலியாக இருந்த முன் சீட்டுகளில் ஒன்றை நிறைத்தாள். அவள் முகம் குண்டும் குழியுமாக இருந்தது கண்டு பாவப்பட்டான். மொபைல் எடுத்து அஹல்யாவுக்கு வாட்ஸாப் செயலியில் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“எங்க இருக்க.. வரலையா நீ?”

“இங்கதான் இருக்கேன்.. ஃப்ரண்ட் ரோ.. நீ?”

பருத்த பெண்ணை உற்றுப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அது அஹல்யாவேதான். நொடியில் அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. உடல் சுகவீனத்திற்காகவும் மனச்சோர்வுக்காவும் நிறைய மாத்திரைகள் எடுத்துக் கொண்டு நலமடைந்ததாக ஒருமுறை பேச்சினூடாக சொல்லி இருந்தாள். மறுபடியும் தனக்கு ஏமாற்றமே விளைந்ததாக எண்ணி குமைந்தான். வீற்றிருந்த அனுபவஸ்தர்களுள் ஒருவரை பேச அழைத்ததும் திடுமென்று அவள் மேடையேறுகையில், ‘தகதகன்னு பளபளன்னு செலை மாதிரி இருந்தாளே.. இப்ப என்னாச்சு?’ அங்கலாய்த்தான். துருத்திக் கொண்டு வெளிப்பட்ட சதை வயிற்றைப் பார்த்து இரண்டு வருடத்திற்கு முந்தைய அஹல்யாவை நினைத்தான். எதை அணிந்தாலும் தளர்வாகவே இருக்கும்; மார்பும் கூட பக்கவாட்டில் சில சமயம் தெரியும். சடுதியில் அறையை விட்டு அகன்றிட எத்தனித்து எழுந்தான். தான் நடந்துகொள்ளும் விதத்தை நினைத்ததும் அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. விருட்டென முதல் வரிசை சென்றமர்ந்து, அஹல்யா பேசி முடித்து இறங்கி வர காத்திருந்தான்.

தற்போதைய உருவத்தை மறைத்து அவள் ஏன் பழைய புகைப்படங்களை அனுப்ப வேண்டும்? தனது தற்போதைய தோற்றத்தை வெறுப்பவளாக அவள் இருந்தால்? மீண்டும் மீண்டும் காதல் வயப்பட்டு, அந்த உறவில் அதிகப்படியான அன்பை செலுத்தி, அது புறக்கணிப்புக்கு உள்ளாகும்போது ஏற்படும் சோர்வையும் வலியையும் சொல்லி அழுதாள் ஒருமுறை. அஹல்யா மீது அவனுக்கு கழிவிரக்கம் பிறந்தது.

புன்னகையோடு அவனை நெருங்கி, “ஹாய் டா.. இப்ப தான் பாத்தியா?” என்றாள்.

“ம்.. உக்காரு”, அவளுக்கு வழி விட்டான்.

அஹல்யாவைக் கண்டதும் ஏனோ, சமீபத்தில் பிரிந்த மனைவியின் ஞாபகம் அவனுக்கு வந்தது. திருமணமான தொடக்கத்தில் இருந்த ஈர்ப்பும் அன்பும் நாளடைவில் காணாது, இல்லாது போயிருந்தது.

மீட்டிங் முடிந்ததும் பேசிக் கொண்டே கேஃபெடிரியா போய், ஆண்ட்ராய்ட் டிவியில் சிங்கம் மானை விடாப்பிடியாக துரத்தி வேட்டையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன பேசுவதென்று தெரியாமல் குழம்பினான். பழைய அஹல்யாவாக இருந்தால் இந்நேரம் சிரித்துப் பேசி வழிந்திருப்பான்.

“இன்னும் என்னை லவ் பண்றியா?”, வெட்கம் கலந்த குறுநகையோடு கேட்டாள்.

“தெரிலம்மா.. நான் இன்னும் அவளை மறக்கலை” பொய் சொன்னான்.

“அப்ப டேட் போகலாம்னு கேட்ட?”

பக்கவாட்டில் தெரிந்த பெருத்த தொடையின் வடிவத்தைப் பார்த்தபடி, “ஒரு வேகத்துல கூப்டுட்டேன்.. சாரி..” என்று சமாளித்தான்.

“கூல் கூல்.. நாம ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம். நீயும் நெறைய வாட்டி கேட்டுப் பாத்துட்ட. ஆனா, எவ்ளோ ட்ரை பண்ணாலும் என்னால உன்னை பாய் ஃப்ரெண்டா நெனைக்க முடியலை”

“ரொம்ப தான்.. போடி..”, என்று நினைத்தாலும் மெலிதான புன்சிரிப்பை உதிர்த்தான். உள்ளில் நிம்மதி சுரந்தாலும், அந்த நிராகரிப்பிற்காக அவன் வருந்தினான். ஆஃபிஸ் கேபின் நோக்கி நடந்தபோது, ‘அஹல்யா அஹல்யாவாவே தான் இருக்றா.. என்னை ஃப்ரெண்ட் ஸோன்லயே தான் வெச்சிருக்கா.. ப்ச்..’, என நினைத்து உதட்டை விரக்தியாக விரித்தான்.

பூங்காவில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து குதூகலமாக அவள், “டேய்.. ஞாபகம் இருக்கா? நாம இங்க தான் உக்காந்து கேபுச்சினோ குடிப்போம்..” என்றதும் தலையசைத்தான்.

** ** **

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button