
“இரவு ஒன்பது மணிக்கு உன்னை சந்திப்பேன்.”
இதுதான் இது மட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.யார் அனுப்பியது என்று பெயரும் இல்லை, வேறெந்த குறிப்பும் இல்லை. அலுவலக முகவரிக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வீணா என்று என் பெயர் தெளிவாக எழுதி இருந்தது. நண்பர்களில் யாரோதான் விளையாடுகிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.
இந்த அலுவலகத்தில் நானும் முரளியும் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. முரளி என் பால்ய நண்பன். நாங்கள் சென்ற மாதம் தான் எங்கள் கல்லூரி படிப்பை முடித்திருந்தோம். இன்னும் மூன்று மாதத்தில் நான் எனக்குக் கிடைத்திருக்கும் பொறியாளர் பணியில் சேர்வதற்கு சென்னைக்கும் அவன் மேற்படிப்பிற்காக கனடாவுக்கும் செல்ல இருக்கிறோம்.
இளம் பிராயத்திலிருந்தே எனக்கும் முரளிக்கும் இருந்த சின்னச் சின்ன ஆசைகளுள் ஒன்று, டிடெக்ட்டிவ் ஆக வேண்டும் என்பது.
அப்போது எங்களுக்கு பத்து வயதிருக்கும். கருப்பு நிற உடையணிந்து பெரிய தொப்பியும் கூலர்ஸும் மாட்டிக்கொண்டு, “உங்கள் வீட்டில் ஏதேனும் பொருள் தொலைந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் நாங்கள் கண்டுபிடித்துத் தருகிறோம்” என்று சார்ட் பேப்பரை ஸ்பீக்கர் போல சுற்றிப் பிடித்து அறிவித்துக்கொண்டே தெருவெல்லாம் சுற்றி வந்திருக்கிறோம்.
அப்படி ஒரு நாளில் எங்கள் நண்பன் பிரபு எங்களிடம் வந்து, “எங்க ஆச்சி போட்டோ ஒன்னு ரொம்ப நாளா தேடிட்டு இருக்கோம். அடுத்த வாரம் அவங்களுக்கு திதி வருது அதுக்குள்ள போட்டோவ கண்டுபிடிச்சு குடுக்குறீங்களா?” என்றான்.
ஜேம்ஸ்பாண்ட் பிஜிஎம்மை மனதில் தெறிக்கவிட்டபடி உடனே நாங்கள் பிரபுவின் வீட்டிற்குள் நுழைந்தோம். பிரபு மொத்தம் எட்டு ஆல்பங்களை எடுத்து எங்கள் முன் வைத்தான். ஒரு ஆர்வக் கோளாறில் தேடித் தருவதாக அறிவித்தது தவறோ என்பது போல நானும் முரளியும் பார்த்துக் கொண்டோம். கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஆல்பம் ஆல்பமாகத் திறந்து ஒவ்வொரு போட்டோவின் பின்பக்கமும் ஏதேனும் சொருகப்பட்டிருக்கிறதா என்று சோதித்தவாறே இருந்த நாங்கள் ஐந்தாவது ஆல்பத்தின் ஆறாவது பக்கத்தில் ஆச்சியின் புகைப்படம் ஒரு புகைப்பத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்ததை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டோம்.
“அம்மா ஆச்சி கெடச்சுட்டாங்கம்மா…” என்று பிரபு கத்தியதில் அவன் அம்மா வேக வேகமாக வந்து அந்தப் புகைப்படத்தை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். ஏதோ நாங்கள் தொலைந்து போன அவர் அம்மாவையே கண்டுபிடித்துத் தந்தது போல அவர் முகத்தில் அவ்வளவு நெகிழ்ச்சி. நொடியில் அவர் கண்களில் நீர் சுரந்தது. அந்தக் கண்களில் அவ்வளவு நன்றி இருந்தது. எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பரபரத்தார். அதன் பின் எப்போது எங்களைப் பார்த்தாலும் அந்த மகிழ்ச்சி முகம் காட்டிப் புன்னகைப்பார்.
இந்த உணர்வு எங்களுக்கு மிகவும் பிடித்தது. தொலைந்து போன ஒன்று, இனிமேல் கிடைக்குமோ இல்லையோ என்று நினைத்த ஒன்று கைகளில் மீண்டும் கிட்டிய தருணம் எவ்வளவு ஆனந்தத்தை மீட்டி தருகிறது…
அதற்குக் காரணமாக இருப்பதில் எவ்வளவு பெருமை இருக்கிறது, மகிழ்ச்சியை அளிக்கிறது என உணர்ந்தோம்.
தொலைந்து போன நபர்களும் உலகின் ஏதோ ஒரு மூலையில் கிடைத்த இடத்தில் எங்கோ தங்கள் வாழ்க்கையை நகர்த்தியபடி இருக்கிறார்கள். அவர்களையும் கண்டுபிடிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றான் முரளி.
இதைக் கூறும்போது அவன் முகம் சொல்லொண்ணா துயரைத் தாங்கியிருந்தது.
“தொலைஞ்சு போனது எதுனாலும் கண்டுபிடிச்சுருவீங்களா” என்றபடியே திப்பு அங்கே வந்தான்.
திப்பு எங்கள் தெருவில் தான் வசிக்கிறான். எங்களை விட இரண்டு வயது பெரியவன்.
ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் திப்புவுடன் தொடர்ச்சியாக பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான். அப்படியொரு அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.
பொதுவாக காந்தி சமாதியில் அஞ்சலி செய்யும் தலைவர்களைப் போல சலனமே இல்லாத முகத்துடன் தான் திப்பு திரிவான். அங்கே பிரபுவின் அக்கா ப்ரீத்தி இருந்ததால் மனதில், ’ஆலுமா டோலுமா’ இசைப்பது போல முக பாவம் வைத்துக்கொண்டு சீன் போட்டுக்கொண்டிருந்தான்.
எங்கள் டிடெக்ட்டிவ் மூளைக்குத் தீனி போட அதன் பிறகு பெரிதாக ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை என்றாலும் அந்தக் கனவு மட்டும் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தது. பெற்றோரின் விருப்பப்படி படித்து முடித்தோம். எங்களின் கனவு கிட்டத்தட்ட நிராசை ஆகும் வேளையில்தான் எங்கள் நண்பனின் சித்தப்பா ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சி நடத்திக்கொண்டிருப்பது அறிந்து மூன்று மாதத்திற்கு மட்டும் அவரிடம் அப்ரண்டிசாக சேர்ந்துகொண்டோம்.
சித்தப்பா கல கல வென்று தமாஷாக பேசக் கூடியவர். பைப்பிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல பேச்சு சும்மா மள மளவென கொட்டும். நாங்கள் சேர்ந்த முதல் நாள் சித்தப்பாவைப் பார்க்க அவர் நண்பர் வந்திருந்தார். அவர் பெயர் ராஜேந்திரன். தன்னுடைய அப்பாவின் ஞாபகமாக வைத்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் தொலைந்து போய்விட்டதாகவும் அதை எப்படியாவது கண்டுபிடித்துத் தரும்படியும் சித்தப்பாவிடம் கேட்டுக்கொண்டார்.
” தங்கமுலாம் பூசப்பட்ட செயினுக்கு ஆசைப்பட்டுதான் யாரோ எடுத்திருக்க வேண்டும். அது விலை மதிப்பில்லாதது என்று எடுத்தவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்பாவின் ஆயுளின் கடைசி வரை ஒட்டிக்கொண்டு இருந்த ஒரு அற்புதப் பொருள். முப்பது வருட காலம் அப்பாவுடன் பயணித்த ஒன்று. அப்பாவின் காலம் அதன் சுழற்சியில்தானே இயங்கி இருக்கிறது… அத்தனை ஆண்டுகளும் அவரின் நாடித் துடிப்பும் அந்தக் கடிகாரத்தின் துடிப்பும் சேர்ந்தே இயக்கியிருக்கும் அல்லவா? அது அவரின் காலப் பெட்டகம். அதை நான் அணிந்திருக்கும்போது அப்பாவே கையைப் பிடித்திருப்பது போல தோன்றும்.” என்று அவர் கூறும்போது அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவருடைய அப்பாவின் நினைவாக அவரிடம் இருப்பது அது மட்டும்தான். “எப்படியும் அதைத் தேடிக் கொடுத்துவிடுங்கள்” என்று சித்தப்பாவிடம் உரிமையுடன் கூறினார்.
“இந்த வாட்ச் மட்டும் கிடைச்சா அவருக்கு எவளோ சந்தோசமா இருக்கும்? ”
இந்த கேசில் இணைந்து பணியாற்றி எப்படியாவது அந்த வாட்சை அவருக்கு கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று முரளி மிகவும் ஆசைப்பட்டான். முரளியின் இந்த ஆசையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன்.
அந்த நபர் சென்றவுடன், “நானும் முரளியும் இந்த கேசில் இணைந்து கொள்கிறோம்” என்றதற்கு சித்தப்பா மிகவும் சீரியசானார்.
“ஏதாவது உதவி தேவைப்பட்டால் அழைக்கிறேன் . அதற்கும் சில கடுமையான சோதனைகள் இருக்கும் . அந்த டெஸ்டில் எல்லாம் பாஸ் செய்தால் மட்டுமே இது போன்ற கேஸ்களில் நீங்கள் பணியாற்ற முடியும்.” என்று கூறினார்.
விடாப்பிடியாக இந்த வாட்ச் கண்டுபிடித்து தரும் கேசில் பணியாற்ற முரளி எவ்வளவோ முறை கேட்டும் சித்தப்பா மறுத்துவிட்டார்.
”முதலில் இந்த மாட்ரிமோனியல் செக்கிற்கு செல்லுங்கள்” என்று எங்களிடம் ஒரு காகிதத்தை நீட்டினார்.
எங்களுக்கு சப்பென்றிருந்தது.
சித்தப்பா தந்த தாளை வாங்கிக்கொண்டு வெளிய வந்தோம்.
“அதுல என்ன போட்ருக்கு முரளி?”
“தண்ணீல எவ்வளவு ஈரம் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்னு போட்ருக்கு. “
” காமெடி சுமார்தான். நாளைக்கு சிரிக்கிறேன். இப்போ டைம் ஆச்சு…பசிக்குது. சாப்பிடப் போலாம் வா.”என்று நாங்கள் பேசிக்கொண்டே அலுவலகத்தின் எதிரே இருந்த சாலையைக் கடக்கையில் எங்களை பார்த்தவாறே ஒருவன் எங்களை பைக்கில் கடந்து சென்றான்.
எங்களைப் பார்த்தபடி கடந்தவன் எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சாலையில் இடது புறம் இருந்த திருப்பத்தில் திரும்பி மறைந்தான்.
“யாருடா அது? நம்மளதான் பார்த்தானா.?”
“சரியாத் தெரியல. ஹெல்மெட் கூலர்ஸ் எல்லாம் போட்ருந்தனால தெரியல.”
அதன் பிறகு அதை பற்றி நாங்கள் பேசவில்லை. ஏதோ ஒரு வேலை தினமும் இருந்தது. நேற்று தான் முரளி ஒரு திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றிருக்கிறான் . இன்று எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறது.
ஒருவேளை இதை முரளியே அனுப்பி என்னிடம் விளையாடுகிறானோ? என்று தோன்றிய நொடி,
அவனுக்கு டயல் செய்தேன்.
அழைப்பு முழுதாகச் சென்று கட் ஆனது.
“அவன் என்ன தாலி கட்டவா போயிருக்கான்? பந்தியில தான் இந்நேரம் உக்கார்ந்திருப்பான்.” திரும்பவும் அவனை அழைக்க விழைகையில் அவனிடமிருந்து அழைப்பு வந்தது. நான் எனக்கு வந்த கடிதத்தைப் பற்றிக் கூறவும் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“வீணா, எனக்கென்னமோ இதை விளையாட்டா எடுத்துக்க வேணாம்னு தோனுது. சித்தப்பாகிட்ட ஒடனே இதை சொல்லு. நீ இப்போ ஒடனே வீட்டுக்குக் கிளம்பு.” முரளி பதற்றமானான்.
”டேய் ஏன் இவளோ சீரியசாகுற? யாரோ நம்ம பிரண்ட்ஸ்தான் விளையாடுறாங்க. சித்தப்பா இன்னைக்கு ஆபிஸ் வரல. வீட்டுக்குப் போயிட்டு நானே போன் பண்றேன். நத்திங் டு ஒரி “.
“ஒகே . நீ எப்பொவேணும்னாலும் எனக்கு கால் பண்ணு .”
“ஓகே டா ”
” இதை விளையாட்டா நினைக்காத. ”
“முரளி,கடவுள் உனக்கொரு மிளகாயைக் கொடுப்பார். அதை நீ சமையலுக்குப் பயன்படுத்தி சுவை கூட்டுகிறாயா இல்லை, எதிரியின் கண்களில் பிழிகிறாயா இல்லை, உன் முகத்தில் தேய்த்துக் கொள்கிறாயா என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு டிடெக்ட்டிவ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்டா. ”
“ஒன்பது மணிக்கு வர்றவன்கிட்ட இப்படியே பேசு. அவன் அங்கனயே சூசைட் பண்ணிக்குவான்.” என்று கட் செய்த்துவிட்டான்.
பத்து நிமிடத்தில் திரும்பவும் அழைத்தான் .
இந்தக் கடிதத்தை கூட நான் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. இந்த முரளியை சமாளிப்பதுதான் இப்போது பெரிய சவாலாக இருந்தது.
முரளி சின்ன ஒன்றுக்கும் நிறைய பதறுவான். அவன் சுபாவமே அப்படிதான். அவனிடம் இதைக் கூறி அவனைத் தேவை இல்லாமல் சங்கடப்படுத்தியது போல தோன்றியது.
முரளியின் காதலியின் பெயர் அனிச்சா. உண்மையில் அவள் குணமென்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவன்தான் முகர்ந்தாலே வாடி விடும் மெல்லிய அனிச்சம் பூவைப் போன்றவன். வாடியது எதைக் கண்டாலும் அவனும் வாடி விடுவான்.
முரளியும் நானும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படிக்கிறோம். வகுப்பில் எனது பக்கத்து மேசைக்காரன்.
எங்களின் பள்ளிக்காலத்தில் ஒருநாள் பிரபு தன்னுடைய அழகான பென்சிலை எங்கோ வைத்துவிட்டு வகுப்பு முழுவதும் துழாவிக் கொண்டிருந்தான். அது அழகான அழிப்பான் ஒன்றைப் பின்பக்கத்திலும் அதற்கு மேல் சேவல் பொம்மையும் கொண்டிருக்கும் அழகான பென்சில். அது தொலையவும் அவன் வகுப்பையே அல்லோல கல்லோலப் படுத்திக் கொண்டிருந்தான். முரளியை மட்டும் மூன்று முறை எழுப்பி அவன் மேசைக்கு அடியில் தேடினான்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த முரளி கூறினான்,
“நான் என் அப்பாவையே தொலைத்துவிட்டு சும்மாதான் உக்காந்திருக்கேன்…” என்று.
இதைக் கேட்டதும் வகுப்பே அமைதியில் ஆழ்ந்துவிட்டது. முரளி விருட்டென்று வகுப்பை விட்டு வெளியேறினான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வகுப்பில் எந்த சத்தமும் இல்லை.
மற்றொரு நாளில் நாங்கள் எங்கள் ஆசைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
“என்னுடைய ஆசை என்னவென்றால் நான் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், ஊர் உலகமெல்லாம் சுற்றி வர வேண்டும். கடல் மார்கமாக சுற்ற வேண்டும். ஆம் கடல், யாராலும் கட்டியாள முடியா கடல். முடிவில்லா கடல். முட்டி மோதி ஆர்ப்பரிக்கும் அலைகள் தாங்கிய கடல்.” என்று கடலைப் பற்றிய தீராக் கனவுகளையம், அதன் மேல் மேற்கொள்ளும் பயணங்கள் தரும் சுவாரஸ்யங்களையும் நான் பேசி முடித்ததும்,
முரளியின் முறை வந்தது. அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
முரளி நிதானமாக “நான் ஒரு அகதி முகாமிற்குச் செல்ல வேண்டும். ஒரு நாளாவது அகதி வாழ்க்கை வாழ வேண்டும்” என்றான்.
மனதை ஏதோ செய்யக் கூடியதாக இருந்தது அவன் பதில்.
“ஏன்?” என நாங்கள் கேட்டதற்கு,
“என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது ஒரு அகதி முகாமில் என்று ஒரு உறவினர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இப்போதும் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்று நானும் அம்மாவும் மட்டுமே நம்புகிறோம். அவருடன் இனி வாழ வாய்ப்பிருக்கிறதா எனத் தெரியவில்லை, அதனால் அவர் வாழ்ந்த அந்த அகதி வாழ்க்கையை நான் ஒரு நாளாவது வாழ்ந்து விட வேண்டுமென நினைக்கிறேன்” என்றான்.
அவன் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவன். ஐந்தாவது வரை அங்கேதான் படித்தான். அவன் தேசத்தின் மேல் அவனுக்கு அவ்வளவு நேசம் இருந்தது… அவன் படித்த பாடசாலைகள், விளையாடிய அரசமரநிழல், நீந்திக்குளித்த குளம், நண்பர்கள், உறவுகள் பற்றிய நினைவுகள் அவனிடம் எப்போதும் உண்டு.
சில ஞாபகங்கள் நினைவடுக்குகளிலிருந்து கழுவப்படாமல் அப்படியே தேங்கி விடுகின்றன. இழந்த சொந்தங்களின் நினைவுகள் அவனை அரித்துத் தின்று கொண்டு இருந்தன.
முரளி கூறுவான், “கடவுள் இந்த உயிரினங்களைப் படைத்தார்… இவை எத்தனையோ கோடி ஆண்டுகள் இதே இடத்தில் உயிர் வாழ்ந்தன. ஆனால், இனிமேலும் அவை அங்கு உயிர் வாழும் பொறுப்பு கடவுள் கையில் இல்லை; எங்களிடம்தான் இருக்கிறது என்று வெறும் அறுபதோ எழுபதோ ஆண்டுகள் மட்டுமே வாழப்போகும் ஒரு மனித கும்பல் வந்து கூறுவது எத்தனை கொடூரம்” என்பான்.
அவன் அனுபவங்களைக் கேட்பதைத் தவிர அவனுக்குச் சொல்ல என்னிடம் பொருத்தமான வார்த்தைகள் இருக்கவில்லை.
கலியோப் என்ற வகை தேன் சிட்டு தன் எடையை காட்டிலும் நான்கு மடங்கு அளவு உணவு உண்டு செரிக்குமாம் . அதுபோலத்தான் முரளியும் அவன் வயதைக் காட்டிலும் அதிகமான துயரத்தைத் தாங்கிகொண்டிருந்தான்.
ஆனால் அவனுக்குத் திரும்ப இலங்கை செல்ல விருப்பமே இல்லை.
“சொந்த மண்ணிற்கு ஒரு பரதேசியைப் போல சென்று நான் ஒரு நாதியற்றவன் என்று உணர விருப்பமில்லை” என்பான்.
ஒருநாள் என்னிடம் வந்து, ” என்னை பார்க்க உனக்கு பரிதாபமாகத் தோன்றுகிறதா?” என்றான்.
“இல்லையே ” என்றேன்.
அன்றுதான் அவன் தன் பல் வரிசை காட்டிச் சிரித்தான். அதன் பிறகுதான் நட்புடன் பேச ஆரம்பித்தான். என் உற்ற நண்பனானான்.
இப்போது அவனைப் பற்றிய நினைவுகளை செல்பேசி அழைப்பின் மூலம் அவனே கலைத்தான்.
அழைப்பை ஏற்றதும்,
“வீட்டுக்கு வந்துட்டியா ?என்ன பண்ற?”
“பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து போய்ட்டிருக்கேன்”
“எனக்கொரு எஸ் எம் எஸ் வந்துருக்கு…” சீரியஸாக இருந்தது அவன் குரல்.
“என்னது?” பதட்டம் எனக்கும் தொற்றிக் கொண்டது.
“சிகப்பு என்றதும் உன் நினைவுக்கு வருவது என்ன? அப்படினு போட்ருக்கு .”
“இரு நான் எனக்கு வந்திருக்கானு பாக்குறேன். ”
அந்த எஸ் எம் எஸ் எனக்கும் வந்திருந்தது.
அந்த செய்தியின் வழியே இரு கண்கள் என்னை காண்பது போல இருந்தது.
அதுவரை மனதில் இருந்த அமைதி வெளியேறி இப்போது அச்சம் குடிகொண்டு விட்டது. என் இதயத்துடிப்பு எனக்கே கேட்கிறது.
நான் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். நான் தனியாக நடந்து கொண்டிருந்தேன். நடந்து கொண்டே இருக்கையில், ‘தனியாக‘ என்ற நினைப்பு எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.
நிழல் போல் தனிமை என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
பயம் வரும்போது எல்லாம் கூடவே எனக்கு பக்தியும் வரும். பாட்டி கற்றுத் தந்த ஸ்லோகங்களை எல்லாம் முனுமுனுத்தபடி நடந்தேன்.
கிழக்கே என்னை யாரும் கவனிக்கிறார்களா?, மேற்கே என்னை யாராவது தொடர்கிறார்களா?, தெற்கே எனக்காக யாரும் காத்திருக்கிறார்களா?, வடக்கே என்னை நோக்கி யாரும் வருகிறார்களா? கண்களும் மனமும் எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தது…”
தெருவில் படுத்திருந்த நாய் ஒன்று என்னை நிமிர்ந்து பார்த்தது. இந்தத் தெருவில் இப்படி ஒரு நாய் இருக்கிறதா? அன்றுதான் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப தலை தாழ்த்திப் படுத்துக்கொண்டது. அது என்னை ஏற்கனவே பார்த்திருக்கும் போல.
அடுத்து என்ன செய்யலாம் என்று நாங்கள் விவாதித்தபடி இருந்தோம்.
வீடு வந்ததும், “எனக்கு சற்று நேரம் அவகாசம் குடு, நானே திரும்ப அழைக்கிறேன்” என்று கூறி விட்டு சேரில் கண்களை மூடி அமர்ந்தேன். இந்த டிடெக்ட்டிவ் ஆசை, இந்த வேலை இதெல்லாம் தேவைதானா? எனது எண்ணம் பின்னோக்கி நகர்ந்தது.
சிறு வயதில் நாங்கள் அதிகம் விளையாடிய கொலம்பஸ் கேம் நினைவுக்கு வந்தது .அதில் விளையாடும் அனைவருக்கும் பத்து நிமிட அவகாசம் தரப்படும். அதற்குள் ஏதாவது ஒரு புது பொருளையோ அல்லது புது தகவலோ ஏதோ ஒன்று, ஆனால் அனைவருக்கும் அது புதிதாக இருக்க வேண்டும் . அதை வந்து பிரபுவிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விளையாட்டுக்கு எப்போதும் பிரபுதான் ஜட்ஜ். அன்றைய விளையாட்டின் கொலம்பஸ் யார் என்று அவனே தீமானிப்பான். எங்களுடன் இணைந்து அவன் விளையாட பிரியப்பட்டாலும் அவனை ஜட்ஜாகவே இருக்க வைப்பது திப்பு.
இந்த விளையாட்டில் மூளை பர பரவென்று இயங்கும், எல்லைகளைத் தாண்டி ஓடுவோம்.
ஆனால் இதில் எப்போதும் திப்புதான் ஜெயிப்பான். நாங்கள் திக்கெட்டும் சென்று அலைந்து திரிந்து ஏதாவது கொண்டு வருவோம் அவன் அமர்ந்த இடத்தில் இருந்தபடி எளிதாக ஜெயிப்பான். அவன் ஜெயிப்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் அவன் எங்களை எல்லாம் இளக்காரமாக பார்ப்பான். அவனை எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் நாங்கள் இருந்தோம்.
அன்றைய விளையாட்டில் திப்பு அசால்டாக அவன் வீட்டில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்து வந்தான் . அதுவரை நாங்கள் ஒரு ஒயின் பாட்டிலைப் பார்த்ததே கிடையாது.
நாங்கள் கண்கள் விரிய பார்த்தோம்.
“இது ஒயின். புளிக்க வைத்த பழச்சாறு. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சுமேரிய மொழி பேசும் பெண்ணொருத்தி புளிக்க வைத்த பழச்சாறை அருந்துவது நாகரீகமென ஒரு ஆணை அறிவுறுத்தியிருக்கிறாள். புளிக்க வைத்து பின் சாப்பிடுவது நாகரீக வளர்ச்சியில் ஒரு மைல் கல். இதை ஒரு பெண் கூறுவதாலேயே அதன் உண்மைத் தன்மை அதிகரிக்கிறது.” என்றான்.
முரளி ஒரு புது வகைக் கிழங்கை எடுத்து வந்தான். “ஸ்வாஹிலி எனும் பண்டைய ஆப்பிரிக்க மொழியில் பசிக்கிறது என்று கூறுவதில்லை மாறாக பசி கேட்கிறது என்று தான் சொல்வார்களாம். பசி உணவை கேட்க தானே செய்கிறது . எவ்வளவு சிறப்பான சொல்! பசிக்குதான் உலகிலேயே கைகள் மிக அதிகம். அதைக் கொண்டு அது வயிற்றைப் பிசைந்து நம்மை உணவை யாசிக்க வைக்கிறது ” என்றான்.
“பழச்சாறை விட பசி தீர்ப்பதே பெரிது” என்று நாங்கள் எவ்வளவு முறையிட்டும் திப்புதான் அன்றைய கொலம்பஸ் என்று பிரபு அறிவித்தான். ஒருமுறை வெறும் பாரீன் சாக்லட்டுகள் கொண்டு வந்ததற்காக எல்லாம் திப்புவை கொலம்பஸாக அறிவித்திருந்தான் பிரபு. இந்த பிரபுவை எப்படியாவது சரி செய்துவிட்டால்தான் நம்மால் இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும். நானும் முரளியும் தீவிரமாக யோசித்தோம்.
பிரபுவை அழைத்தோம்.
“பிரபு…உனக்கு கொலம்பஸ் கேம்ல சேர்ந்து விளையாடனுமா?”
“ஆமா ..நானும் எவ்ளோ நாளா கேட்கிறேன்.”
“சரி, நீ எங்களோட விளையாடனும்னா உனக்கு ஒரு டெஸ்ட்.”
“என்னது “
“இந்த டெஸ்ட்ல நீ பாஸ் பண்ணுனாதான் நீ இந்த கேம்ல விளையாட முடியும் “
“சரி சொல்லு “
“உன்னோட அக்கா ப்ரீத்திக்கு ஒருத்தன் லைன் போட்டுட்டு இருக்கான். “
“என்னாஆஆது …யாய் எவன் அவன்?”
“அததான் நீ கண்டுபிடிக்கணும். நீ கரெக்ட்டா கண்டுபிடிச்சா நீ கேம்ல இருக்க. போ போய் அத கண்டுபிடிச்சுட்டு வா.”
சட்டென்று கண் விழித்தேன்.
“இந்த டெஸ்ட்ல பாஸ் பண்ணுனா நீ கேம்ல இருக்க.” இந்த வரிகள் திரும்ப ஒலித்தது…
மறுநாள் காலை முரளி எனக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு வந்திருந்தான்.
“”முரளி, நான் கண்டுபிடிச்சுட்டேன்.“
“எப்படி கண்டுபிடிச்ச?யாரு?” புருவம் சுருக்கி ஆர்வம் தொனித்த குரலில் கேட்டான்.
“என்கூட வா யாருன்னு காட்றேன்.”
எனக்கு வந்த கடிதத்தை எடுத்து அதன் பின்புறம் திருப்பி. “பகல் முழுக்க உங்கள் அலுவலகத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். எதற்கு இரவு ஒன்பது மணிக்கு சந்திக்க வேண்டும்?”என்று எழுதி நேராக சித்தப்பா அறைக்குச் சென்று அவரிடம் நீட்டினேன்.
அதைப் படித்து கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டு பலமாக சிரித்து,
“வெல்டன்” என்று கூறி கை குலுக்கியவர்,
” ராஜேந்திரன் வீட்டுக்குப் போலாமா ? எட்றா வேண்டிய…” என்று புறப்பட்டார்.
ஒரு தந்தையின் கடிகாரத்தைத் தேடி எங்கள் பயணம் இனிதே தொடங்கியது.
** ** **