
சிந்திய தேநீர்த்துளி
ஒரு கோப்பைத் தேநீரும்
மிகச் சில நண்பர்களும்
இதமான காலையின்
இனிமைகூட்ட முடியும்
சிந்தப்படும் தேநீர்த்துளிகளில்
சொல்லப்படாத கதைகளின்
மிச்சத்தை ஈக்கள்
மொய்த்துக் கொண்டிருக்கிறது
சுடச்சுட ஒரு சாக்லெட்
டொனெட் வாங்கி இரண்டாக வெட்டி
சுவையில் திளைக்கிறேன்
ருசியில் பாதியேது?
மலையேறும் நதிகள் குறித்து
வியந்தோகி அவன் பேசியபோது
மூன்றாம் தேநீரை பருகி
முடித்திருந்தேன்
எதிர் முகம் பார்க்காமல்
மனதுக்குள் அதிரவைக்கும்
பாலுவின் புன்னகையால்தான்
முன் எப்போதுமில்லாத
புதுச் சுவையுடன் தேநீர்
திகட்டத் தொடங்கியது
•
கடைசி வரி
ஒரு கவிதையின் கடைசி வரியில்
சிறிது மழை பொழிந்தது
ஒரு கவிதையின் முதல் வரியில்
சிறு தெய்வமொன்று
அமைதியான கருவிழியுடன்
மெளனமாகச் சிரித்தது
மேலும் அக்கவிதையின்
ஒவ்வொரு வரியிலும்
ஆயிரம் மெழுகுவர்த்திகள்
சுடர்ந்தது
உண்மையைச் சொல்
நீதானே
அந்தக் கவிதை?