இணைய இதழ் 95சிறுகதைகள்

பெருமழைக் குறி – க.மூர்த்தி

சிறுகதை | வாசகசாலை

பொழுது ஏறிக்கொண்டே இருந்தது. எருமைக் கன்னுக்குட்டியை பாப்பாங்கரையில் மூன்றாவது ஈத்துக்காக காளைக்கு சேர்த்துவிட்டு வந்திருந்தாள் பவளம். கன்னுக்குட்டி மூக்கனாங் கயிற்றைக் கோர்த்து வேப்பமரத்தின் தாழ்வான கிளையில் கட்டியிருந்தாள். கன்னுக்குட்டியால் காலாத்தியாகக் கூட படுக்க முடியாது. கால்கனை மாற்றியபடி நின்றுகொண்டே இருந்தது. கன்னுக்குட்டிக்கு ஈத்து வயிற்றில் நின்றுகொள்ள வேண்டும் என்ற ஏற்பாடுதான் இது.

அடிவயிற்றினைக் குலுக்கி கன்னுக்குட்டி பசியில் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது. அவிழ்த்துவிட்டால் இருட்டுக் கட்டும் வரை அருகம்புல்லைக் கறண்டுவதாக வயிறு தொடக்கென இருந்தது. ஒற்றையாக இருக்கும் கன்னுக்குட்டியை மேய்ச்சலுக்கு காலாத்தியாக கையில் பற்றிக்கொண்டாள் பவளம். அவளைப் போலவே நடுமத்திமமான பருவத்தில் இருக்கும் கன்னுக்குட்டி மூன்று பல் பட்டிருந்தாலும் இதுவரை ஈத்து எடுக்கவில்லை.

மேய்ச்சல் காட்டில் மாட்டோடு மாடாக சேர்ந்து மேயும் கன்னுக்குட்டியை காளை முடுக்கிக்கொண்டுதான் இருந்தது. ஈத்து நிறைந்தபாடுதான் இல்லை. பவளத்தின் வீட்டு வாசற்படியில் நின்று ஆடும் கருவேப்பிலை மரத்திற்கும் அவளது கன்னுக்குட்டிக்கும் மிகையான பொருத்தப்பாடு இருந்தது. அது பவளத்திற்கே கூடத் தெரியும்தான். உச்சி வெயில் ஏறுவதற்கு முன்னதாக வண்ணாந் தோப்பு ஊமச்சி மதகிற்கு கன்னுக்குட்டியோடு காலாத்தியாக வந்திருந்தாள். கழுத்தை ஆட்டிக்கொண்டு கன்னுக்குட்டி வெக்கு வெக்கு என நடந்து வந்தது. காட்டின் பொலி. கன்னுக்குட்டி பசியோடுதான் இருந்தது. காளைக்கு சேர்த்துவிட்டிருந்ததில், எதையும் கறம்புவதற்கு பிடிக்கவில்லை.

பவளம் வாய் துடிப்புக்காரி. அண்டைய வீட்டில் இருக்கும் அத்தனை பேரிடமும் சண்டையும் சச்சரவுமாகிவிட்டிருந்தாள். கூரைத்தண்ணி, கோழி, நாய், சாணம் என சண்டைக்கு அவளுக்கு காரணம் கிடைத்துவிடும். சுளுக்கு கடித்து வைப்பதைப்போலதான். ஒரு சொல் வந்தால் போதும். வெடுக்கென முகத்தினை காட்டிவிடுவாள். ”நொச்சிக் குச்சின்னாலும் வச்சிதாங் வெட்டனும்” என்றாலும் குச்சியின் வாசம் அவளது பக்கத்தில் கூட அண்டாது. ”வெட்டு ஒன்னுனா துண்டு மூனுதாங்” அவளுடைய கணக்கு. காளைக்கு சேர்ந்துவிட்டிருந்த தனது கன்னுக்குட்டியோடு காட்டிற்கு வந்த அவளுக்கு மனப்பாரமாக இருந்தது. காடும் கையிலிருக்கும் ஒற்றை கன்னுக்குட்டியும் அவளது பாடுகளை எப்பொழுதும் புரிந்துகொள்ளும்தான். அவளுக்கு மன சஞ்சலம் உண்டாகும் பொழுதெல்லாம் அவள் காட்டிற்குதான் வருவாள். கதிர்களில் செங்குத்தாக உட்கார்ந்து கெக்களித்துக்கொண்டே கொத்தித் தின்னும் தவிட்டுக்குருவிகள் கூட அவளிடம் எதையோ கொடுத்துவிட்டுப் போய்விடும். அதனை எடுத்துக்கொண்டு வருபவளுக்கு பூதத்தினைப் போல சாயத்தினை பூசிக்கொண்டு வரும் பொழுதோடு மல்லுக்கட்டுவதற்கு போதுமானதாக இருந்தது.

ஊமச்சி மதகிலிருந்து பூஞ்சோலைக் காடுவரை ஒரே மட்டமாக பெருத்துக் கிடக்கும் சோளக்காடுகளில் சாரைப்பாம்புகள் ஊறல் அதிகமாக இருக்கும் என தலைப்புக் காட்டுக்காரன் சொல்லிக்கொண்டே இருப்பான். அவை வரப்புகள் இல்லாத காடுகள். எல்லைக்கு குத்துக்கல் மட்டும்தான் பதிக்கப்பட்டிருக்கும். முன்னத்திக் காட்டுக்காரன் இடும் வெள்ளாமையினைத்தான் கடைசிக் காட்டுக்காரன் போடமுடியும். மாற்றுப் பயிர் போடமுடியாது. நடுக்காட்டில் நல்ல பாம்புகளுடன் சேர்ந்து பின்னல் போட்டுக்கொண்டு வெள்ளாமைக் காடுகளில் கிடக்கும் சாரைகள் ஆட்களை துரத்திக்கொண்டு வரும். ஏகத்திற்கும் இருக்கும் ஒத்தப் பயிர் வெள்ளாமை களைவெட்டுக்கும் அறுப்புக்கும் ஒரு நேரமாக நேர்ந்து போகும். பயிருக்குள் புகுந்துகொண்டு போகவேண்டிய அவசியம் ஏற்படாது. முன்னதாக இருக்கும் காட்டில் பருத்தியும் தலைப்புக் காட்டில் சோளமும் இருந்தால் களைவெட்டு, கதிரொடிப்பு, பஞ்சு எடுத்தல் என காட்டுக்குள் புகுந்து போகும் வேலை வந்துகொண்டே இருக்கும். ஏகத்திற்கும் ஒற்றைப் பயிராகவே இருப்பதில் ஊடாக போகவேண்டியதில்லை. பவளத்தின் காடும் ஊமச்சி மதகிற்கு அணைப்பாகத்தான் இருந்தது.

தெற்குப் பக்கமாக இருந்த புளியந் தோப்பில் அறுத்துப் போடப்பட்ட புளியமரங்கள் பெரியம்மாவின் சுருக்குப் பையில் கிடக்கும் புகையிலையினைப் போல துண்டுகளாக கிடந்தன. கொடாப்பில் அடைந்துகொள்ளும் கோழிகள் கும்பலாய் சேர்ந்து அனத்துவதைப் போல மேய்ச்சல் சத்தம். அவற்றையெல்லாம் கன்னுக்குட்டி என்றும் நின்று கேட்டுக்கொண்டதில்லை. அதற்கு அதன் வயிற்றுப்பாடு. கன்னுக்குட்டியோடு இருக்கும் பவளத்திற்கு கொடாப்பிலிருந்து திறந்துவிடப்பட்ட கோழிகள் தங்களின் கூரை உச்சியின் மீது நின்று எக்காளம் போட்டு மோட்டுவளையினைப் பறித்துக் கொண்டிருப்பதைப் போல சஞ்சலம் மனதில் புகுந்துகொண்டன. ”ஊருல இருக்குறவ வளக்குற கோழியெல்லாங் ஏ வூட்டுல பூந்துகிட்டு சின்னப் படுத்தி வக்கிறதப் பாரு!” என்று பொலியினைக் கறண்டும் கன்னுக்குட்டியினைப் பார்த்துச் சொன்னாள். கன்னுக்குட்டி அதற்கு கூட தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. அவளது பேச்சுக்கு வடக்கால வீடு, தெற்கால வீடு என எதுவும் தெரியாது. அவளுக்கு வாயில் வருவதுதான் வார்த்தை. இன்னது வருகிறது என்று கூட அவளுக்குத் தெரியாது. தயவு தாட்சணையில்லாமல் விட்டுக் கட்டிக்கொண்டே இருப்பாள். பொழுதினையும் மனப் பொசுங்கலையும் போக்கிக் கொள்வதற்கு அவளுக்கு கிடைத்திருக்கும் ஒரே வாட்டம் அதுதான். பழுத கயிற்றைக்கொண்டு அளவு பிடித்து அளந்தால் அவளது வாயிக்கு ஒரு மலையின் உயரம் இருக்கும். அடிவாரத்தின் அகலம். ஊமச்சிமதகு காட்டிற்கு கன்னுக்குட்டியோடு வரும் அவள் காடுகளோடு பேசிக்கொண்டே இருப்பாள். அவள் திருமணம் ஆகாத முதிர்கன்னி. அவளது முதிர்கன்னித் தன்மைக்கு பின்னால் ஒரு கதையிருந்தது. அந்தக் கதையின் ஒரு திறப்புவாயில்தான் அவள் உதிர்க்கும் வார்த்தைகள். பிறந்ததிலிருந்து பல பிள்ளைகளை சமைத்துக் கொடுத்திருக்கும் நிலத்தினைப் பார்த்தால் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பாள். அவளுக்கு நிலம், பிள்ளைக் குட்டியோடு இருப்பதினைப் போன்று தெரியும்.

நடு மத்திமமான வயதையும் கடந்துவிட்ட பவளத்திற்கு ஆணுடம்பின் வாசம் இதுவரை தெரியாது. அந்திக்கு கோழிகள் கொடாப்பில் அடைந்துவிட்டால் அவளது வாயும் அடங்கிப் போகும். கொடாப்பில் குருகுருத்துக் கிடக்கும் கோழிக்கும் அவளுக்கும் ஒத்த சாயல்தான். அவளிடம் அத்தனை அமைதியிருக்கும். கன்னுக்குட்டியோடு காட்டில் இருக்கும் அவள் வீட்டில் இருப்பதைப்போலவே தன்னை பாவித்துக்கொண்டாள். அந்தியும் வடக்குத் தெற்குமான வீடுகளுடனான பேச்சும் வார்த்தைகளும் அவளோடு சேர்ந்து கொண்டு, அவளின் மனதை விட்டு எங்கோ பயணப்பட்டுவிடுகிறது. ”எட்டியே யம்மா! ரவ கொழம்பு குடுடி!‘ என்று கையில் கிடைக்கும் ஏணத்தினை எடுத்துக்கொண்டு போவாள் பவளம். அவளுக்கு அப்படியும் ஒரு குணம். அயர்ந்து கிடக்கும் பாம்பு கூட தனது விசப் பையினை மறந்துவிட்டு மண்ணோடு மண்ணாக கிடப்பதைப் போலதான். இந்த மண்ணில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு கணமாவது தீம்பின்றி இருப்பதற்கு அவகாசம் கிடைக்கத்தான் செய்கிறது.

விடிந்தால் போதும். ”கூரைய பறிக்குது பாரு! வேதியில் போனதுவ! கோழிய வளக்குற சக்காளத்திவோ அவ அவ வூட்டுலதான வளத்துக்குனுங்! ஊராங் கூரைய வந்து பறிக்குது பாரு!” என நிதமும் வசவிப் பாட்டு விட்டுக் கட்டிக்கொண்டே அவள் பிரயோகிக்கும் ஊத்தை வார்த்தைகள் தெருப்புழக்கத்திற்கு புதிய சொல்லை பங்களிப்பு செய்துகொண்டே இருக்கும். அவற்றை பவளம் எங்குதான் பிடித்துக்கொண்டு வருவாள் என்று யாராலும் யூகிக்க கூட முடியாது. அவை அனைத்தையும் பதமாகச் சேர்த்து முறம், விதைப்புட்டி என சாணத்தினை கரைத்து வழித்து மொழுகுவதைப் போல பயன்பாட்டில் கைதேர்ந்தவள் பவளம். கொஞ்சமாக காது கொடுத்தால் போதும். தெக்கித்திக் காற்று அவள் தெளித்துவிட்ட வார்த்தைகளை பொறுக்கி வரிசையாக கோர்த்து காதுக்குள் ஊதாந்தட்டையினை வைத்து ஊதுவதைப் போலவே இருக்கும். அண்டையில் இருக்கும் மதினிகள் யாராவது மறு பேச்சு கொடுத்துவிட்டால், பவளம் பிலி பிலிவென சண்டை பிடித்துக் கொள்வாள். ராச்சோற்றுக்கு பின்னதாக விரிக்கப்பட்ட சாக்கில் கால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு அவர்களோடு காட்டு மேட்டுக் கதைகளை கலந்துகொண்டதினை நினைத்துப் பார்க்கமாட்டாள். பொலியில் கன்னுக்குட்டி மேய்ந்துகொண்டிருந்தது.

வீட்டில் ஒத்தையாக கிடப்பவள்தான். பவளம் பண்ணையமாக இருந்தவள்தான் என்று சொல்லுவதற்கு பட்டியும் ஒற்றையாக இருக்கும் எருமை கன்னுக்குட்டி மட்டும்தான் இருந்தது. சாணப்பசையில் துவண்டு கிடந்த தரையின் ஈரம் காய்ந்து திருவையில் பத்து கலைத்துப் போடப்பட்டதினைப் போல கிடந்த பட்டியை நினைத்துப் பார்த்தாள். கன்னுக்குட்டியோடு காட்டில் இருக்கும் அவளுக்கு சம்பவங்கள் இரண்டு பாம்புகள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு ஆடுவதைப்போல இருந்தது. பண்ணையமும் வெள்ளாமையுமாக இருக்கும் வீட்டினை ஆடுகளும் மாடுகளும் கட்டப்பட்டிருக்கும் பட்டியினை வைத்தே பதம் பார்த்துவிடலாம். பட்டியில் அடிக்கும் கும்மி நெடி கூட மேய்ச்சலின் செழுமையினைச் சொல்லிவிடும்.

பவளத்தின் வீட்டிற்கு முன்னால் அசைந்துகொண்டிருக்கும் கருவேப்பிலை மரமும் முருங்கை மரமும் காற்றுக்கு உதிர்க்கும் பூக்களை பன்றிகள் கூட முகர்ந்து பார்த்துவிட முடியாது. ”சாண்டய நக்கி வூட்டுதுவ! வந்து மேயிற எடத்தப் பாரு!” என்று கூரையில் சொருகி வைத்திருக்கும் தடியினை எடுத்து விசிறி விடுவாள். வக்கனையாய் வாங்கிக்கொண்ட தெரு நாய்கள் அவளைப் பார்த்ததும் இடுப்பினை சாய்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்து விடும்.

பவளத்திற்கு சிக்கல் கோலம் போடத் தெரியாது. சிக்கல் கோலம் போடும் மதினிகளுக்கு தெருவில் ஒரு புடிச்சை மரியாதை அதிகமாகவே இருந்தது. வாசலில் ஒற்றை நட்சத்திரத்தினை மட்டுமே வெங்கிச்சம் மாவில் இலுப்பி வைப்பாள். நல்ல நாள் பெரிய நாளுக்கு வாசலை கூட்டிப் பெருக்கி அண்டைவீட்டு கொலவானைத் தேடிக்கொண்டு ஒடுவாள் பவளம். ”ஏக் குட்டி! ஒரு கோலத்த போடுடி யம்மா!” என்பாள். அப்பொழுது மட்டும் பவளத்தின் முகம் பவளமாகவே தெரியும். சக மனிதனை நேசிக்கத் தொடங்கும் கணத்தில் ஒரு உயிரினம் தன்னை எப்பொழுதும் அழகாக மாற்றிக்கொண்டு விடுகிறது. தன்னியல்பாகவே அமைந்துவிடும் இந்த ரசமாற்றம் அவளுக்கே கூட தெரிவதில்லை. பவளம் அப்பொழுது அவ்வளவு நிறைந்த குணம் கொண்டவளாகி விட்டிருக்கிறாள். விசம் கலந்த கைப்பிடிச் சோற்றைக் கூட யாரும் அவளிடமிருந்து பகிர்ந்து கொள்ள முடியும். கெடுதல் நேருவதில்லை. பெறத்தியாருக்கு கூட துயரம் நேரும் கணத்தில் ‘அய்யோ சாமி’ என்று மாரில் அடித்துக்கொண்டு ஆதங்கப்படும் மனம் அது. ஆனாலும் வாசலில் நிற்கும் கருவேப்பிலை மரத்தின் உச்சியில் பழுத்துக் கிடக்கும் பழங்களை தட்டிப் பறிப்பதற்கு சுற்றிச் சுற்றிவரும் பிள்ளைகளை துரத்தியடிப்பாள் பவளம். காய்ந்த மிளகு கொட்டைகளை நுனியில் குத்தி வைத்ததினைப் போல இருக்கும் கருவேப்பிலைப் பழங்கள் உதிர்ந்து கிடந்தாலும் அவற்றினை குழந்தைகளுக்கு விட்டுத் தரமாட்டாள். கருவேப்பிலை மரத்தின் வேர்களுக்கு அணைப்பாக இருக்கும் மண்ணைப் பறித்துவிட்டு அதன் ஈரத்தில் உச்சி வெயிலுக்கு படுத்துக் கிடக்கும் இரவல் கொடாப்பு கோழிகளைப் பார்த்தால் அவளுக்கு பொங்கிகொண்டு வரும். தனக்கு முன்னால் ஆயாசமாக இருக்கும் எதைப் பார்த்தாலும் அவளின் மனதிற்கு ஆதங்கம் உச்சியில் நின்று பெரியாட்டம் போட்டுவிடுகிறது.

பவளத்தோடு சமைந்துகிடக்கும் பொழுதை அவளிடம் இருக்கும் வார்த்தைகள்தான் முட்டித் தள்ளி கடத்திக்கொண்டு போனது. வீட்டின் முக்கூட்டியில் கிடக்கும் மரத்தொட்டியில் கோணமூஞ்சிக்கு கழனித் தண்ணீர் ஊற்றும்போது கூட அவள் பேசிக்கொண்டேதான் இருப்பாள். ”ஏ மெதுவாக் குடிச்சா என்னா? என்னா அவுதி?” சொல்லிப் பார்ப்பாள். தண்ணீரை அள்ளித் தின்னும் கோணமூஞ்சிகளுக்கு பவளம், கடைந்து வைக்கப்பட்ட புளிச்சைக்கீரைச் சட்டிதான். ‘ஊங் ஆங்’ என்பதாகக்கூட தலையினைத் தூக்கிக் கூட பார்ப்பதில்லை கோழிகளுடனும் கோணமூஞ்சிகளுடனும் அவள் பேசும் வார்த்தைகள் அவளின் மனதிற்கு நெருக்கத்தினைக் கொடுத்தன. தெம்பிற்காக தன்னிடம் யாரோ கை கோர்த்துக்கொண்டு நிற்பதைப்போலவே இருக்கும். பவளம் வார்த்தைகளோடு இந்த நிலத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாள். வார்த்தைகள்தான் அவளுக்கு நிலத்தின் மீதாக இருக்கும் நம்பிக்கையின் பிடிப்பு.

வீட்டின் வாசலில் போடப்பட்டிருக்கும் தனது நட்சத்திரக் கோலத்தில் நடந்துபோகும் மாடு, சாணத்தினையோ மூத்திரத்தினையோ இட்டுச் சென்றுவிட்டால் போதும். அந்திவரை அன்றைக்கான கச்சேரியை கட்டி வைப்பாள். ”ஊரு மாட்டுக்குங், நாயிக்குங், பூனைக்குங் ஏன் வூடுன்னா அம்புட்டு எளக்காரமா பூடுச்சி! ஏத்தம் போட்டு ஏறுதுவோ!” என்று பேசத் தொடங்கிவிடுவாள். காலையில் தொடங்கும் பேச்சும் பொறணியும் பழையது சோறு வாயில் இருக்கும்போது கூட ஓயாது. ஒரு வாய் விழுங்குவதும், ஒரு பேச்சு வந்து வெளியே விழுவதுமாகவே இருக்கும். மதினிகள் ஆடு, மாடு, கோழி என கண்ணில் தென்படும் எல்லாவற்றோடும் சண்டையும் சச்சரவாகிவிட்டிருந்த பவளம், தெருவில் கொட்டிக் கிடந்த வரகு உமியைப் பார்த்தாள். கைப்பிடி அளவில் பேசுவதும் பின்னர் அதில் காலாட நடந்துகொடுப்பதும் அவளது மனதிற்கு சுகமாக இருந்தது.

தனது ஊமச்சிமதகு காட்டினைப்போல திருமணம் ஆகாமல் இருக்கும் பவளத்திற்குள் ஆயிரம் குழந்தைகள் இருந்தன. அவர்களுக்குள் நிதமும் அவள் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். தனக்குள் இரவெல்லாம் முண்டி முலைப்பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பற்றி அவள் தெருவில் இருக்கும் யாரிடமும் சொன்னதில்லை. வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருக்கும் கருவேப்பிலை மரத்திற்கு அவள் நிதமும் சாணம் கரைத்து வாசல் தெளிக்கும் வாளி நிறைய தண்ணீர் ஊற்றிவிடுவாள். பவளம் தனக்குள் முளைவிட காத்திருக்கும் விதைக்கு தண்ணீர் விடுவதைப்போலவே நினைத்துக் கொள்வாள். கருவேப்பிலை மரங்களுக்கு குழந்தைகள் அள்ளிப் பருகும் மார்பகங்களாக தண்ணீர் வாளி தெரிந்தது. பால் சுரந்திருக்கும் மார்பகத்தினைப் போல இருக்கும் தண்ணீரால் நிரப்பியிருக்கும் வாளி வேர்களை நோக்கி சாய்ந்தவுடன் மொட்டிக் கொண்டிருக்கும் இலைகள் கைகளை விரித்து அசைந்தாடுவதைப் போலவே இருக்கும். ”அது அம்மா தூக்கு! அம்மா தூக்கு!‘ என்று குழந்தைகள் அடங்கட்டி வைப்பதைப்போலதான். திருமணம் ஆகாமலும் குழந்தைகள் இல்லாமலும் இருப்பதால்தான் பவளம் தனது வீட்டிற்கு முன்னதாக கருவேப்பிலை மரம் ஒன்றை வைத்திருந்தாள். பிள்ளைகளுக்கு சவரட்டணை செய்வதைப்போல அதற்கு தினமும் தண்ணீரை பாவித்துக் கொண்டிருப்பதை யாரும் புரிந்துவிட்டிருக்கவில்லை. அதனால்தான் அதன் இலைகளையும் பழங்களையும் யாரையும் தொடுவதற்கு அவள் அனுமதிப்பதில்லை. குளித்து முடித்தவுடன் வயிறு நிரம்ப முலைப்பால் குடித்த தனது குழந்தை அயர்ந்து தூங்குவதை அவர்கள் தீண்டுவதாக நினைத்துக்கொள்வாள்.

”கன்னிக் கழியாத கம்மணாட்டி! தொட்டாத் தொலங்காது! வச்சா வௌங்காது! தூரப்போடி நாயே!” என்று சொல்லுவதைப் போல மதினிகள் தன்னைப் பார்ப்பதாக நினைத்துக் கொள்வாள். சமயத்தில் நடுமத்திமமான வயதினைக் கடந்த தனது வயிற்றில் குழந்தையில்லை என்பதை நங்கைகள் நாக்கு மேலாக பல்லைப்போட்டு பேசுவது அவளது காதில் வந்து விழுந்ததும்தான் அவள் தெருக்குழந்தைகளை தனது வாசற்படிக்கு விடுவதில்லை. துலங்காத தனது பார்வை குழந்தைகளின் மீது பட்டுவிடவேண்டாம் என்பதற்காகத்தான் அவர்களை பவளம் துரத்தியடித்தாள். அப்பொழுது மனதை கல்லாக்கி கொண்டிருந்தவள், பின்னர் வேர்களுக்கு தண்ணீர் பாவித்து அழுததை வேர்கள் மண்ணில் புதைத்து வைத்துக்கொண்டது தனிக் கதை. கருவேப்பிலை பழங்களைப் பொறுக்குவதற்கு வரும் பிள்ளைகளுக்கு பவளத்தினைப் பற்றித் தெரிவதில்லை.

பொலியில் கறண்டிக்கொண்டிருக்கும் கன்னுக்குட்டியின் மூச்சுக் காற்றில் முத்துச் சோளப்பயிர் அசங்கிகொடுத்தது. கன்னுக்குட்டியின் வளைந்த மட்டக்கொம்புகளுக்கு இடையில் அமர்ந்துகொண்டிருந்த கருங்குருவி அதன் கழுத்தை அசைத்து புல்லை கோதிக்கொண்டிருக்கும் கன்னுக்குட்டியின் காதுமடல்களை கொத்துவதும் பின்னர் தலையினைத் தூக்கி அண்ணாந்து வானத்தைப் பார்ப்பதுவுமாக இருந்தது. வானம் கறுத்துக்கொண்டு வந்தது. கிழக்கத்தி மழை பெருமழைக் குறியினைப் போலத் தெரிந்தது, காற்று குளிரத் தொடங்கியதும் கன்னுக்குட்டி வாலை ஆட்டிக்கொண்டு பவளத்தினைப் பார்த்து உடலை அணத்தி அடித்தொண்டையில் செருமிக் காட்டியது.

முன்னத்தியாக இருக்கும் அவளது பங்கு நிலத்தில் இந்த பட்டத்தில் எந்த வெள்ளாமையும் போடவில்லை. மூன்றுசால் ஓட்டி உழுது வைக்கப்பட்டிருந்த காட்டு மண். கிழக்கத்தி மழை மண்ணில் விழுந்ததும் விதை மண்ணை கீறிக்கொண்டு முளைத்துவரும் பக்குவத்தில் இருந்தது. கறுத்துக்கொண்டு தலைக்கு மேலாக நிற்கும் அடர் வானத்தினை அநாந்திரக் காட்டில் ஆணோடு கூடிவிட்டிருக்காத ஒரு யுவதி ஒரு இளந்தாரியான ஆணை எதிர்கொள்வதைப்போலதான் மண் தனது பெருமடியினை மழைக்காக அகண்டு விரித்து வைத்திருந்தது. மண்ணின் மீது விழும் மழைத் தூறல்கள் எழுதும் எழுத்துகள் ஆணும் பெண்ணுமாக படுக்கையில் கூடிக்கொண்டிருப்பதைப்போலத்தான். எத்தனை மெல்லிய தழுவல்கள் அவை. பசித்திருக்கும் காட்டு விலங்கு தனது இரையினை துரத்தி அதன் கழுத்தினைக் கவ்வும் வேகம் அது. வேட்டையில் அல்லோலப்படும் காடு. மென்மையான தண்ணீரைக்கொண்டு மண்ணை மேலெழும்பாமல் தட்டையாக தனக்குக் கீழாக படுக்க வைத்துக்கொள்ளும் லாவகம். ரோமம் மண்டிக் கிடக்கும் கனத்த கைகளின் அணைப்பிற்குள் சிக்குண்டு கிடக்கும் ஒரு கானகத்தியின் உடல் அது. வெக்கையிலும் பெருங்கோபத்திலும் வெடித்துக் கிடக்கும் நிலம், மழையினைப் பார்த்ததும் ஒரு சிறுதுளி மறுப்பு வார்த்தைகளின்றும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து விடுகிறது. அநாந்திரக் காட்டில் நிகழும் இதனை வானம் தனது ஒளி கீற்றுகளால் பார்த்துக்கொண்டிருந்தாலும், மலைக்கு கால்கள் இருந்தால், அதனோடு சேர்ந்து கொஞ்சம் நகர்தேனும் காட்டுக்குள் சென்றுவரும்.

வானம் தனது மடியினைத் திறந்து, வாசல் தெளிப்பதைப் போல தண்ணீரை நிலத்தில் சாரியது. எருமை வரப்பில் தலையினைத் தூக்காமல் கறண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள் பவளம். பட்டிக்குத் திரும்பும் சமயத்தினை கன்னுக்குட்டி நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டுவிடுகிறது. புல்லுக்கு மண்டியிட்டுக் கொடுத்திருந்தது. பவளம் சத்தம் போட்டுப் பார்த்தாள். கன்னுக்குட்டி உடலை அசைத்துக் கூட கொடுப்பதாக இல்லை. அதன் மீது அமர்ந்திருந்த ஒற்றை கருங்குருவியும் எங்கோ பறந்துவிட்டிருந்தது. சோவென அடர்ந்து வந்தது மழை. வரப்புத் தாங்கல், கொட்டகை என எதுவும் இல்லை.. அநாந்திரக் காடு அது. தலையில் தனது சேலைத் தலைப்பினை போட்டுக்கொண்டு தெற்குப் பக்கமாக ஓடினாள். கிணற்றுத் தூர் குவிக்கப்பட்டிருந்தது. கொஞ்சமேனும் சாரலுக்கு அண்டையாக இருக்கும்தான். மழை எப்பொழுதும் மண்ணில் ஆச்சரியத்தினை நிகழ்த்திவிடுகிறது. கிணற்றுத்தூரின் சுவரில் சாய்ந்து கொண்டிருந்தவன்தான் பவளத்தில் மனதில் வெக்கையிலும் பெருமழையாக பெய்து கொண்டிருந்தவன். தன் உடம்போடு ஒரு வாழைத்தண்டின் பதத்தில் ஒட்டியிருக்கும் முதிர்கன்னியம் அவனுக்கானதுதான் என்பதை முன்னிலும் அவள் அதிகமாக உணரத் தொடங்கிய தருணம் அது. மழை இன்னும் அதிகமாய் பெய்யத் துவங்கியது. அவர்கள் பேசிக்கொள்வதாக இல்லை. பவளம் நிலமாகி விட்டிருந்தாள். அவன் நிலத்தினை தழுவியோடும் தண்ணீராகி விட்டிருந்தான். நிலத்தில் குதித்து ஓடும் அந்த தண்ணீருக்குதான் எத்தனை ஆனந்தம். பவளத்தின் இடது தேமல் பூத்த மார்பில் பச்சைக் குத்தப்பட்டிருந்த அவனது பெயரை இன்றுதான் பெருமழை நேருக்கு நேராய் நனைத்துக்கொண்டிருந்தது.

ஒரு மழை பவளத்தின் வாழ்க்கையில் அத்தனை மாற்றத்தினை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன்? அவளுக்கும் கூடதான். காளைக்கு சேர்க்கப்பட்டிருந்த எருமை கன்னுக்குட்டி சூல்கொண்டு நிற்பதற்கு கிழக்கத்திப் பாரலாக சாரிக்கொண்டிருதுக்கும் இந்த பெருமழை போதும்தான். ஊமச்சி மதகின் அநாந்திரக் காட்டிலும் கூட கருவேப்பிலை மரங்களில் இருக்கும் பழங்கள் மழைச்சாரலில் நிலத்தில் உதிரத் தொடங்கின. அவை ஒவ்வொன்றும் குழந்தைகளாய் இனிக்கும் சீனிப் பழங்கள்.

professorgm73@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button