ஷூஜி டெரயாமா கவிதைகள் – தமிழில்; க.மோகனரங்கன்

1
இறந்துபோன
என் தந்தையின் காலணி
அளவை அறிந்த ஒருவர்
என்னைப் பார்க்க
ஒருநாள் வந்தார்
விபரீதக் கனவில்.
2
என்னுள்
இருண்ட வீடு ஒன்றுள்ளது
நான் விளக்கைத் துடைக்கும்போது
ஒரு பையன்
வளைந்த முழங்கால்களுடன்
அங்கே தூங்குகிறான்.
3
விற்கப்பட்டுவிட்ட
நெல் வயலுக்கு
குளிர்கால இரவில்
தனியாக வந்தவன்
என் அம்மாவின்
கருஞ்சிவப்பு வண்ணச் சீப்பை
குழி தோண்டிப் புதைக்கிறேன்.
4
குமுறும் அலைகளின் ஒசை
நெருக்கமாக ஒலிக்கும்
பரண் மீது கிடந்தவாறே
கவிதையை
எனது அதிகாரமாக
உருவாக்குகிறேன்.
5
பழத்தோட்டத்தின் உள்ளே
நாளை இருக்கிறது
நான் அதை
என் நெஞ்சை அழுத்தும்
மர வேலிக்கு எதிராக
பிடித்து இழுக்கிறேன்.
6
என் தந்தையினுடைய
சொத்தின் ஒரு பகுதியாக
எண்ணத்தக்க
இந்தக் குளிர்கால
சூரிய அஸ்தமனம்
ஒவ்வொரு முகடுகளிலிருந்தும்
தெரிகிறது.
7
தொங்கவிடப்பட்டதொரு
மேலங்கியின் முன்னால்
கடந்து செல்ல நேர்கையில்
திடீரென நான்
குளிர்ச்சியை உணர்கிறேன்
யாருடைய தீய ஆவி?
8
ஒரு எறும்பு
டேலியா மலரிலிருந்து
சாம்பல் கிண்ணத்தை
நோக்கி நகரும்போது
நான் உருவாக்கிக் கொண்டிருந்தேன்
ஓர் அழகான பொய்யை.
9
சுரங்கப்பாதையின்
அழுக்குச் சுவரில்
எழுதப்பட்டிருந்த
அச்சொல்
பழைய காயம் ஒன்றைப் போல் மறந்தும் போயிருந்தது.
விடுதலை.
10
என் வீட்டுச் சுண்டெலிக்கு
பத்து மீட்டர் சுற்றளவுக்கு
சுதந்திரம் உள்ளது
இணக்கமற்ற அதன் கண்களோடு
இயைந்து நான் வாழ்கிறேன்.
11
கேரட் விதைகளை
சுமந்து செல்லும்
இந்தக் காற்று
அநாதை ஒருவனோடு
அந்திச் சூரியனின் மறைவையும்
என்னையும் சேர்த்துப்
பிணைக்கிறது.
12
துர்நாற்றம் வீசும்
எனது இரத்த உறவினை
துண்டிக்கவேண்டும்
வெய்யில் படும்
ஒரிடத்தில்
தலைகீழாக
வைக்கப்பட்டிருகிறது
பனிக் கோடாரி.
13
என் சுவரில்
நான் ஒட்டி வைக்கிறேன்
குளிர்காலப் பட்டாம்பூச்சி
ஒன்றின் சடலத்தை –
ஒரு கைவிடப்பட்ட குழந்தையின்
குடும்ப இலச்சினையாக
அது இருக்கட்டும்.
14
கண்ணீர்த் துளிகள்
மனிதர்களால்
தோற்றுவிக்க முடிந்த
மிகச் சிறிய கடல்கள்.
Shūji Terayama (1935- 1983)

ஜப்பானிய இலக்கியத்தின் புதிய அலையைச் சேர்ந்தவர். தன் படைப்புகளில் பல்வேறு பரிசோதனைகளைப் பரிசீலனை செய்து பார்த்தவர். கவிஞர், நாடக ஆசிரியர், புனைவு எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் என்பதோடு சிறந்த புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்தவர் ஆவார். அவரது படைப்பு முயற்சிகள் வானொலி நாடகம், தொலைக்காட்சித் தொடர், தலைமறைவு நாடகம், எதிர் கலாச்சாரக் கட்டுரைகள், ஜப்பானிய புதிய அலை சினிமா எனப் பல தளங்களிலும் விரிந்து கிடப்பன. மேலே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அவரது கவிதைகள் ஜப்பானியக் குறுங்கவிதை வடிவமமான, ’டாங்கா’ வகையினைச் சேர்ந்தவை.