இணைய இதழ்இணைய இதழ் 100மொழிபெயர்ப்பு கவிதைகள்மொழிபெயர்ப்புகள்

சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்; தமிழில் – கார்த்திகைப்பாண்டியன்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் | வாசகசாலை

தீக்குச்சிகள்

நல்ல இருட்டு – வீதியில்

நான் கீழிறங்கும்போது

ஆனால் பிறகு அவன் தோன்றுகிறான்

தீக்குச்சிகளோடு விளையாடுபவன்

என் கனவுகளில்

ஒருபோதும் நான் பார்த்ததில்லை

அவன் முகத்தை அவன் கண்களை

ஏன் நான் எப்பொழுதும்

இத்தனை மந்தமாக இருக்கும்படி நேர்கிறது

மேலும் தீக்குச்சிகள் ஏற்கனவே

அவனது விரல்நுனிகளுக்கு இறங்கி விட்டன

அது ஒரு வீடெனில்

நொடிநேரப் பார்வைக்கான அவகாசம் மட்டும்

ஒரு பெண்ணெனில் –

ஒற்றை முத்தம் மட்டும்

நிழல்கள் குறுகும் முன்பாக

நான் இரவுணவை அருந்திக் கொண்டிருக்கலாம்

ஒரு பனிப்பந்தினை உருட்டியபடி

என் பல்லை பிடுங்கிக் கொண்டிருக்கலாம்

ரோமில் இருக்கும் போப்பின் மூலம்

அல்லது நிர்வாணமாக ஓடிக் கொண்டிருக்கலாம்

ஒரு யுத்தகளத்தின் நடுவில்

தீக்குச்சிகளோடு இருப்பவனுக்குத்

தெரியும் என்றாலும் சொல்ல மாட்டான்

உறக்கமற்றவர்களின் கூடுகை

கடவுளர்க்கெல்லாம் தாய், அனைவருக்கும் அழைப்புண்டு:

விண்மீன்களை உற்றுநோக்கும் பெரூவிய மேய்ப்பர்கள்,

நியூயார்க்கின் சாலையோர நடைபாதைகளில் கிடக்கும் முதிய மனிதர்கள்.

உறங்கும் குழந்தையினருகே பெய்திடும் மழையைச் செவிமடுக்கும்

திறந்த கண்களையுடைய பொம்மையே, நீயும் கூட.

அனைத்து திசைகளிலும் ஆடிகளையுடைய பெரிய விடுதியின் நடன அரங்கம்.

இருளுக்குள் நீங்கள் படுத்திருக்கையில் அதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

நன்கு அலங்கரிக்கப்பட்ட அதன் மேற்கூரைகளில் தேவதைகள்,

நிர்வாண நீர்நங்கைகள் இருக்குமிடம்தான் சொர்க்கமாக இருக்கக்கூடும்.

அங்கே ஒரு மேடை இருக்கிறது, ஒரு புனித மேசையும்,

பிரகாசமான மின்விளக்குகளுடன் கூடிய வரவேற்பறை.

தன்னுடைய ஆணிகளின் படுக்கையிலிருந்து

யாரேனும் இனிமேல் இந்தக் கூட்டத்தினிடையே உரையாற்றக்கூடும்.

உறக்கமின்மையென்பது மெய்ஞானநிலையைப் போல.

அங்கேயே இருங்கள்.   

உறக்கமின்மையின் விடுதி

எனது சிறிய வளையை நான் நேசித்தேன்,

அதன் சாளரம் ஒரு செங்கற்சுவரைப் பார்த்தபடி இருந்தது.

அடுத்த அறையில் ஒரு பியானோ.

ஒரு மாதத்தின் சில மாலை வேளைகளில்

ஊனமுற்ற கிழவனொருவன் வாசிக்க வருவான்

“எனது நீல ஆகாயம்.”

என்றபோதும், பெரும்பாலும், அமைதியாகத்தானிருக்கும்.

வலையால் தனது இரையைப் பிடிக்கும்

கனத்த மேலங்கியணிந்த சிலந்திகளைக் கொண்ட ஒவ்வொரு அறையிலும்

வெண்சுருட்டுப் புகையும் கனவுப்படலங்களும்.

அவ்வளவு இருட்டு,

முகம் மழிக்கும் கண்ணாடியில் எனது முகத்தை என்னால் பார்க்க முடிவதில்லை.

காலை ஐந்து மணிக்கு மேல்மாடியில் நடமாடும் வெற்றுக்கால்களின் சப்தம்.

“நாடோடி” குறிசொல்லி,

வீதிமுனையில் இருக்கிறது அவனுடைய கடையின் முன்பகுதி,

இரவுநேரப் புணர்ச்சிக்குப் பிறகு சிறுநீர் கழிக்கச் செல்கிறான்.

அவ்வப்போது, ஒரு குழந்தை விசும்பும் சத்தமும்.

வெகு அருகில் கேட்பதாக நான் எண்ணினேன்

ஒரு கணம், நானும் விசும்பிக் கொண்டிருந்தேன்.

புலி

சான் பிரான்சிஸ்கோவில், அந்தக் குளிர்காலத்தில்,

உறங்கும் புத்தர்களால் நிரம்பிய

இருண்ட சிறிய கடையொன்று இருந்தது.

நான் உள்நுழைந்த மதியவேளையில்,

என்னை வரவேற்க யாரும் வரவில்லை.

முனிவர்களின் நடுவே நான் நின்றிருந்தேன்

ஏதோ அவர்களுடைய எண்ணங்களைப் படித்தறிய முயல்பவனைப் போல.

ஒன்று பெரிதாக இருந்தது, கல்லால் செய்யப்பட்டதாகவும்.

சில ஒரு குழந்தையின் தலையளவில் இருந்தன

உலர்ந்த குருதியின் நிறத்தில் தீற்றல்களைக் கொண்டிருந்தன.

எலிகளைக் காட்டிலும் பெரிதாயிராத சிலவும் கூட இருந்தன,

மேலும் அவை கூர்ந்து கவனிப்பதாகத் தோற்றமளித்தன.

“மார்ச்சின் காற்றுகள், இருண்ட காற்றுகள்,

ஓலமிடும் காற்றுகள்,” மாண்ட கவிஞன் எழுதினான்.

சூரிய அஸ்தமனத்தின்போது அவனுடைய வீதி காலியாக இருந்தது

கத்திரிக்கோல்களைப் போல் என் முன்னே திறந்த

எனது நீண்ட நிழலைத் தவிர்த்து.

அங்கே அவனுடைய வீடும் இருந்தது

சீனனைப் போல் தோற்றமளித்த

ரஷிய ராணுவ வீரனின் கதையை அங்கு தான்

நான் கூறினேன்.

காயமுற்றவனாக என் தந்தையின் படுக்கையில் அவன் கிடந்தான்,

நான் அவனுக்கு நீரையும் தீக்குச்சிகளையும் கொண்டு வந்தேன்.

அதற்காக அவன் ஒரு சிறிய புலியை என்னிடம் தந்தான்

தந்தத்தால் செய்யப்பட்டது. அதனுடைய வாய் கோபத்தில் திறந்திருந்தது,

ஆனால் உடலின் வரிகள் எதுவும் அதனிடம் மிச்சமிருக்கவில்லை.

ஓரிரவில் நான் அதற்கு வர்ணமிழைத்தேன்

அதன் கண்களைக் கறுப்பாகவும், அதன் உதட்டினைச் சிவப்பாகவும்.

என் அம்மா எனக்காக விளக்கை ஏந்திக் கொண்டாள்,

இந்த மிருகம் எங்களுக்கு கொண்டு வரக்கூடிய

அதிர்ஷ்டத்தின் தன்மை குறித்து வருந்தியபடி.

நாங்கள் இருட்டுக்குள் தனியாயிருக்கையில்

என் கையிலிருந்த புலி மெலிதாக உறுமியது,

ஆனால் கவிஞனின் கதவில் என்னுடைய காதை வைத்தபோது

அந்த மதியவேளையில், நான் எதையும் கேட்கவில்லை.

“மார்ச்சின் காற்றுகள், இருண்ட காற்றுகள், ஓலமிடும் காற்றுகள்,” ஒருகாலத்தில் அவன் எழுதினான்.

செல்வி நாஸ்ட்ரடாம்ஸ்

ஒரு காலத்தில் நானொரு தீர்க்கதரிசியை நேசித்தேன், நீளமான கால்களையுடையவள். ஏதோவொரு மேன்மையான நோக்கத்தின் சவ ஊர்வலத்தைப் பின்தொடரும், கனவில் தொலைந்த புதிதாய்-மணமானவர்களைப் போல, நியூயார்க்கின் வீதிகளில் நாங்கள் அலைந்தோம்.

“வெள்ளி நாணயங்களை விற்பனை செய்யும் கடையின் பின்புறமுள்ள பறவைக்கூண்டுகளிலும் காலியான மீன்காட்சியகங்களிலும் உலகின் ரகசியத்தைப் பார்வையிடுவதைப் போலுள்ளது,” முத்தங்களின் நடுவே அவள் என்னிடம் சொன்னாள்.

அதன் பிறகு ஓர் பின்னிரவில், எச்சரிக்கை மணிகள் ஒலிக்க கண்களை மூடியபடி:

“மேலங்கிகள் அவர்களுடைய இரவுநேர உடைகளின் மேல் வீசப்பட்டிருக்க, துன்பியல் நாடங்களின் காதலர்கள் தற்போது பரவசத்தில் திளைத்து அங்கே நின்றிருக்கிறார்கள், ஓர் நிர்வாணக் குழந்தை, உயரமான சாளரத்தின் வழியே, தீப்பற்றியெரியும் பெண்ணொருத்தியால் வெளியே வீசியெறியப்படும் இடத்தில்.”

போர்

ஒரு பெண்மணியின் நடுங்கும் விரல்

மாண்டவர்களின் பட்டியலில் கீழிறங்கிச் செல்கிறது

முதல் பனியின் மாலை வேளையில்.

வீடு சில்லிட்டிருக்க பட்டியல் நீளமாக இருக்கிறது.

நம் அனைவரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

முழுக்க படங்களால் நிரம்பிய புத்தகம்

அப்பா அஞ்சல் வழியில் மத சாஸ்திரங்களைப் பயின்றார்

மேலும் இது தேர்வு நேரம்.

அம்மா தைத்துக் கொண்டிருந்தாள். முழுக்க படங்களால் நிரம்பிய ஒரு புத்தகத்தோடு

நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். இரவு வீழ்ந்தது.

இறந்துபோன அரசர்கள் மற்றும் மகாராணிகளின் முகங்களைத் தீண்டி

என்னுடைய கரங்கள் சில்லிடத் தொடங்கின.

ஒரு கறுப்புநிற மழையங்கி இருந்தது

      மேல்மாடியின் படுக்கையறையில்

மேற்கூரையிலிருந்து ஊசலாடியபடி,

ஆனால் அங்கே அது என்ன செய்து கொண்டிருந்தது?

அம்மாவின் நீளமான ஊசிகள் குறுக்குவாக்கில் துரிதமாய்ச் சென்று மீண்டன.

அவை கறுப்பு நிறத்தில் இருந்தன

அந்தத் தருணத்தின் என் தலையின் உட்பக்கத்தைப் போலவே.

நான் புரட்டிய பக்கங்கள் இறக்கைகளைப் போல் படபடத்தன.

“ஆன்மா ஓர் பறவை,” அவர் ஒருமுறை சொன்னார்.

முழுக்க படங்களால் நிரம்பிய என் புத்தகத்தில்

ஒரு சண்டை மூண்டது: ஈட்டிகளும் வாட்களும்

குளிர்கால வனத்தையொட்டிய ஒன்றை உருவாக்கின என் இதயம் துளைக்கப்பட்டிருக்க உதிரம் அதன் கிளைகளில் வழிந்தோடியது

ஆசனம்

இந்த ஆசனம் ஒருகாலத்தில் யூக்லிடின் மாணவனாக இருந்தது.

அவருடைய விதிகளின் புத்தகம் அதன் இருக்கையின் மேல் கிடந்தது.

பள்ளிக்கூடத்தின் சாளரங்கள் திறந்திருந்தன,

ஆகவே காற்று பக்கங்களைப் புரட்டியது

அற்புதமான நிரூபணங்களை முணுமுணுத்தபடி.

பொன்னிறக் கூரைகளின் மேல் சூரியன் அஸ்தமித்தது,

எங்கும் நிழல்கள் நீண்டன,

ஆனால் யூக்லிட் அது குறித்து அமைதியாக இருந்தார்.

என் அதிர்ஷ்டத்தின் கதை

புகழ்பெற்ற கைரேகை நிபுணரொருவர் இருந்தார்

நான் சிறுவனாயிருந்தபோது என்னுடைய வீதியில் வாழ்ந்து வந்தார்.

நாங்கள் அவரை கவுண்ட் டிராகுலா என்றழைப்போம்.

ஒருமுறை என்னுடைய உள்ளங்கையை அவர் உற்றுப் பார்த்தார்

அவருடைய வாய் பிளந்து கொண்டது.

ஒரு மாதிரி கண்மூடித்தனமான கிறுக்கல், எனக் கருத்துரைத்தார்.

அன்பும் விதியும் மூர்க்கமாக மோதிக் கொண்டன.

உடலும் ஆன்மாவும் ஒன்றையொன்று புறக்கணித்தன.

என்னுடைய மரணம் ஏற்கனவே அறிவிக்கப்ப்பட்டிருந்தது.

என் அம்மாவின் ரத்தத்தை-உறையச்செய்யும் அலறலைக் கேட்க முடிந்தது.

உன்னுடையதைப் போன்ற ஒரு கையை நான் ஒருபோதும் பார்த்ததில்லை,

முடிவாகச் சொல்லியபிறகு என்னை வெறித்துப் பார்த்தார்,

மூட்டைப்பூச்சியின் கண்களோடு, ஆக இறுதியாக என்னுடைய கையை விடுவித்து,

எனது நண்பர்கள் கமுக்கமாகச் சிரித்தபோது,

என்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னுடைய தலையைச் சொறிவதுதான்.

ஜூலையின் அதிகாலை

வீதிகள் குளிர்ந்திருந்தன

இரவின் வெம்மைக்குப் பிறகு.

செல்வந்தர்கள், அவர்களுடைய கதவுகள் திறந்திருந்தன,

கெட்டுப்போன பியர்களின் வாசனையைக் கொண்டிருந்தார்கள்.

யாரோ தரையைத் துடைத்தார்கள்

சரிசமமான வீச்சுகளால்.

அவன் கன்பூசியஸைப் போல வெளுத்திருந்தான்.

மார்த்தா வாஷிங்டன், தேன்கூட்டின் வடிவில் அவளுடைய கேசம்,

ஒரு திரைப்பட அரங்கின்

கண்ணாடியறைக்குள் கொட்டாவி விட்டாள்.

நேற்று நான் யுலிஸிஸ்

கிரேக்க அப்பம் செய்வதைக் கண்டேன்.

ஜோன் ஆப் ஆர்க் சலவையகத்தில்

ஒரு இருக்கையின் மீது நின்றிருந்தாள்

அவளுடைய வாயில் குண்டூசிகளோடு.

புனித பிரான்சிஸ் வீட்டு விலங்குகள் விற்பனையகத்தில்

பிரான்ஹாக்களை விற்றுக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் சிர்கேயின் மகள்கள்

விசையுந்தில் பறந்து சென்றார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன்

வெள்ளைக் காலுறைகளோடும் சட்டையில் ரத்தத்தோடும்

வீதிகளில் அலைந்து கொண்டிருந்தார்.

பிறகு இப்போதிந்த கடற்காற்று,

எதிர்பார்த்திராத இந்தக் குளுமை.

உங்கள் தொகுதியிலுள்ள சிறிய, நோய்வாய்ப்பட்ட மரம்

பல வருடங்களாக அப்படியொன்றும் வளரவில்லை.

மகிழ்ச்சியில் அது நடுங்குகிறது

மீதமிருக்கும் சில இலைகளோடு,

ஏதோ இமானுவேல் ஸ்வீடன்போர்க்

எட்டாவது நிழற்சாலையில்

தற்போது ஆன்மாக்களிடம் எதையோ முணுமுணுக்கிறார் என்பதைப் போல.

*******

கவிஞர் குறிப்பு:


செர்பியாவில் பிறந்த கவிஞரான சார்ல்ஸ் சிமிக் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். 1990-ஆம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசினை வென்றவர். இதுவரைக்கும் பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிமிக்கின் கவிதைகள் அனேகமும் மினிமலிச பாணியில் இருண்மை நிரம்பிய காட்சித்தொகுப்புகளால் நிரம்பியவை. மிகவும் இறுக்கமாகக் கட்டப்பட்ட சீன புதிர்ப்பெட்டிகள் என விமர்சகர்கள் சிமிக்கின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். கவிதைகளில் தன்னைப் பாதித்தவர்கள் என எமிலி டிக்கின்ஸனையும் பாப்லோ நெரூதாவையும் குறிப்பிடுகிறார் சிமிக். 2011-ல் கவிதைகளில் வாழ்நாள் சாதனையாளாருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஃபிராஸ்ட் மெடல் சிமிக்குக்கு வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button