இணைய இதழ்இணைய இதழ் 100கட்டுரைகள்

ஐன்ஸ்டீன் எழுதாத கவிதைகள் – விக்னேஷ் ஹரிஹரன்

கட்டுரை | வாசகசாலை

மனிதன் மண்ணில் தோன்றிய நாள் முதலே விண்ணை அறிந்துவிட முயன்று கொண்டிருக்கிறான். அதற்கான முயற்சியிலேயே அவன் மதங்களையும், தத்துவங்களையும், அறிவியலையும் படைத்திருக்க வேண்டும். அவனுக்கு விண்ணின் அருவமும் நிலையின்மையும் பெரும் கிளர்ச்சியையே அளித்திருக்க வேண்டும். அவன் மண்ணின் பருண்மைகளுக்கு மேல் அருவமாக விரிந்து கிடக்கும் விண்ணிலிருந்தே அவனுக்கான ஆன்மீக அறிதல்கள் நிகழக்கூடும் என்று நம்பியிருப்பான். அதனாலேயே அவன் மண்ணில் புரிந்துகொள்ள முடியாத இறைவன், ஊழ், வினை, மரணம் போன்ற அத்தனை பெருவிந்தைகளுக்கும் விண்ணையே விடையாக்கினான்.

இத்தகைய விண்ணின் அருவம் பற்றிய மனிதனின் ஆதி வினாக்களுக்கு நவீன அறிவியல் அளித்த விடைகளுள் பிரதானமானது நியூட்டனின் ஈத்தர் கோட்பாடு. விண்ணென்பது கண்ணுக்குத் தெரியாத ஈத்தர் எனும் திரவத்தால் நிறைந்திருப்பதாகவும் அந்த ஈத்தர் பரப்பிலேயே பூமியும் கோள்களும் ஒளியும் மிதந்து கொண்டிருப்பதாகவும் நியூட்டன் வகுத்தார். இந்த சிந்தனையை மனிதன் விண்ணிலிருந்து மண்ணுக்கான விடைகளை தேடுவதை விட்டு மண்ணைக் கொண்டு விண்ணை அளக்க முற்பட்டதன் தொடக்க கால வெளிப்பாடாகக் கருதமுடியும். அது உருவிலியான பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை தன் அறிதலைக்கொண்டு வகுத்துவிட முற்பட்ட மனிதனின் சிந்தனை. இந்த சிந்தனை இருபதாம் நூற்றாண்டுவரை செல்வாக்குடனே இருந்தது.

இருபதாம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் தன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் மூலம் குவாண்டம் இயற்பியலுக்கான அடித்தளத்தை நிறுவினார். அக்கோட்பாட்டின் வழியே அவர் விண்ணென்பது மண்ணால் வகுக்கப்பட முடியாதது என்பதையும், பிரபஞ்சத்தின் விதிகள் முற்றிலுமாக மண்ணுக்கு உட்பட்டவை அல்ல என்பதையும் நிறுவினார். இந்த அறிதலை நவீன அறிவியல் அடைந்த மகத்தான கவிதைத் தருணங்களுள் ஒன்றாகவே கருதலாம். இதற்கு நிகரான அறிதலே அபியின் கவிதைகளுள் நிகழ்வதாக நான் கருதுகிறேன்.

நவீன தமிழ்க் கவிதைகளில் அபிக்கு முன் அருவமான கருக்களைக் கொண்டு செயல்பட்ட பிரமிள் போன்ற முன்னோடிகளும் விண்ணின் விதிகளை மண்ணால் புரிந்துகொள்ளவே முற்பட்டார்கள். அவர்கள் அருவமான பிரபஞ்சத்தின் ஆற்றல்களை மண்ணில் நிகழும் காட்சிகளைக் கொண்டே வெளிப்படுத்தினார்கள். அவ்வகையில் விசும்பின் ஆற்றலை பசும்புல்லில் காணும் மரபையே அவர்கள் கொண்டிருந்தார்கள் எனலாம். ஆனால், அபியின் கவிதைகள் விண்ணின் ஆற்றலை மண்ணைக் கொண்டு அறிய முற்படுபவை அல்ல. அவர் விண்ணின் ஆற்றல்களை விண்ணின் விதிகளாலேயே அணுக முயற்சிக்கிறார். காலம், வெளி, இருப்பு, இன்மை போன்ற அருவ ஆற்றல்களின் எல்லையற்ற பிரம்மாண்டத்தை அவரது கவிதைகள் அவற்றின் அருவத்தன்மையிலேயே வெளிப்படுத்துகின்றன. அவ்வாற்றல்கள் மண்ணில் செயல்பட்டாலும் அவை மண்ணின் விதிகளுக்கு அப்பாற்பட்டவையாகவே உள்ளன என்பதை அவரது கவிதைகள் உணர்த்துகின்றன.

அபியின் கவிதைகளில் வெளிப்படும் அருவமான கவிமொழியும் புலன்களால் உணரப்படும் காட்சிகளுக்கு அப்பால் விரியும் படிமங்களும் அவரது கவிதைகளின் இலக்காக அமைந்த பிரபஞ்ச தரிசனத்தை நோக்கியே எழுகின்றன. இந்த அளவிலேயே நான் அபியின் கவிதைகளையும் அவற்றின் வழியே அவர் அடைய முற்படும் பிரபஞ்ச தரிசனத்தையும் புரிந்துகொள்கிறேன். இத்தகைய புரிதல்களையும் அவை சார்ந்து என்னுள் ஏற்பட்ட திறப்புகளையும் அடித்தளமாகக் கொண்டே நான் அபியின் கவிதைகளை தொகுத்துக் கொள்கிறேன்.

அபியின் கவிதைகளை பற்றிய எந்த உரையாடலிலும் தவறாமல் வந்துவிடக்கூடிய சொற்கள் படிமமும் அருவமும். அந்த வகையில் இந்த கட்டுரையிலும் அவை தவிர்க்க முடியாதவையே. அபியின் கவிதைகள் காட்சிப் படிமங்களால் ஆனவை அல்ல. அவை பெரும்பாலும் உணர்வுகளாலும், தத்துவங்களாலும், கருத்தியல் படிமங்களாலும் ஆனவை. அதன் காரணமாகவே அபியின் கவிதைகளை முதல் முறை வாசிக்கக்கூடிய ஒரு சராசரி நவீன தமிழக் கவிதை வாசகனுக்கு அவை பெரும் சவாலாக அமைகின்றன. நவீன தமிழ்க்கவிதையின் காட்சிச் சித்தரிப்புகளுக்கும் படிம உருவாக்கங்களுக்கும் பழகிவிட்ட ஒரு வாசகன் அபியின் கவிதைகளை சந்திக்கையில் அடையக்கூடிய அதிர்ச்சி அசாத்தியமானது. முதன் முதலில் அபியின் கவிதை உலகில் எனக்கு அறிமுகமானது அவருடைய “நிசப்தமும் மௌனமும்” என்ற கவிதைதான்

விடிவு
நினைவுகளையும்
நிறமழித்தது

நெடுங்காலம்கடுகாகிக்
காணாமல் போயிற்று

சுருதியின்
பரந்து விரிந்து விரவி
இல்லாதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்கலாக

சுருதி தோய்ந்து
வானும் நிறமற்று
ஆழ்ந்தது மெத்தென

பூமியில்
ஒலிகளின் உட்பரிவு
பால்பிடித்திருந்தது
வெண்பச்சையாய்

என்ற கவிதையை முதலில் வாசிக்கையில் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் வெளித்தள்ளப்பட்டேன். அதன் படிமங்களையும் வடிவத்தையும் என்னால் தொகுத்துக் கொள்ளவே முடியவில்லை. அன்று வரையில் தமிழ்க் கவிதைகளின் காட்சிப் படிமங்களுக்குப் பழக்கப்பட்ட எனக்கு அபியின் கவிதையில் வெளிப்படும் அருவமான படிமங்களும் அவற்றின் மொழியும் பெரும் சவால்களாகவே இருந்தன. அவை ஒவ்வொரு வரியிலும் வேறொன்றாக மாறிக்கொண்டே இருப்பதாக உணர்ந்தேன். ஆனால், அந்தக் கவிதையில் ஏதோ ஒன்று இயங்கிக் கொண்டிருப்பதை மட்டும் உணரமுடிந்தது. நவீன தமிழ்க் கவிதையின் பொதுவான பண்பாக நான் கற்பனை செய்திருந்த படிமங்களின் பிரயோகம் சார்ந்த ஒழுங்கு முறைகள் அந்த கவிதையில் இல்லாதது என்னை அதிர்ச்சியுறச் செய்தது. கவிதையின் படிமம் என்பது ஒரு கற்சிற்பம் போன்ற திட்டவட்டமான வரையறைகளுக்கு உட்பட்டு இல்லாவிட்டாலும், வாசகனுக்கு வடிவம் புலப்படக்கூடிய அளவில் ஒரு உருகும் பனிச் சிற்பம் போலேனும் மெல்ல உருகி உருமாறும் அளவிலேயே இருக்க முடியும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், மேகக்கூட்டம் போல் ஒன்றோடொன்று முயங்கி உருமாறும் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியாத அபியின் கவிதை வெளி எனக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய சவாலாகவே அமைந்தது. அபியின் படிமங்கள் காட்சிகளின் எல்லைகளால் கட்டுண்டவை அல்ல. அவை பார்வையின் எல்லைகளுக்கும், புலன்களின் வரையறைகளுக்கும் அப்பால், உள்ளுணர்வால் சென்றடையப்பட வேண்டியவை என்ற புரிதலை நான் அடைந்தபோதே அவரது கவிதைகள் என்னுள் திறக்கத் தொடங்கின. அவை நம்முள் திறக்கும் தருணங்கள் அபாரமானவை. அவற்றை உணரும் வாசகன் தன் மொழியின் மற்றொரு சாத்தியத்தை கண்டடைந்துவிட்ட மகிழ்ச்சியையும் தன் சிந்தனையின் மற்றொரு ஆழத்தை தொட்டுவிட்ட மகிழ்ச்சியையும் ஒருசேர அடையக்கூடும்.

நவீன கவிதைகளின் காட்சிப்படிமங்கள் நம்முள் நிகழ்த்தும் திறப்பென்பது ஒரு வகையில் புறக்காரணிகளின் உதவியால் நிகழ்வது. நாம் கவிதையில் அடையும் காட்சிகளை நமது புறவுலகத்தில் காணும்பொழுதோ அல்லது நாம் புறவுலகில் கண்ட காட்சிகளை கவிதையின் பார்வையில் நம்முள்ளிருந்து மீட்டு எடுத்து அதற்கான புதிய பொருளை அடையும்பொழுதோதான் காட்சிப்படிமங்கள் நம்முள் நிலைபெறுகின்றன. ஆனால், அபியின் கவிதைகளும் படிமங்களும் நம்முள் திறப்பதென்பது ஒரு முழுமையான அகச்செயல்பாடாகவே உள்ளது. அபியின் படிமங்கள் நாம் புறவுலகில் காணக்கூடியவைகளால் ஆனவை அல்ல. காட்சிகளுக்கு அப்பால் சென்று அவற்றின் ஆதார சூக்ஷமங்களை அடைவதென்பது ஒரு வித ஆன்மீகச் செயல்பாடு. அத்தகைய செயல்பாட்டிற்கான தேடலும் முதிர்ச்சியும் அற்ற எந்த வாசகனும் அபியின் கவிதைகளிலிருந்து எளிதில் அந்நியப்பட்டுவிடக்கூடும்.

அபியின் கவிதைகள் இத்தகைய அனுபவத்தை நிகழ்த்த ஆன்மீகம், இயற்பியல், தத்துவம், உணர்வுகள் சார்ந்த பல்வேறு படிமங்களை பயன்படுத்துகின்றன. இயற்பியல் தத்துவங்களைக் கொண்டு பிரமிளின் E=mc2 போன்ற முன்னோடிக் கவிதைகள் முயற்சிக்கப்பட்டிருந்தாலும், அவை இயற்பியல் கோட்பாடுகளை காட்சிகளாக மாற்றவே முற்பட்டன. ஆனால், அபியின் கவிதைகள் இயற்பியல் கோட்பாடுகளை அவற்றின் உருவமற்ற கருத்தியல் படிமங்களாகவே பயன்படுத்துகின்றன.

உன்
சூழல் அணுக்களோ
உருக்காட்டுமுன்
உருமாறும்
ஓயாமாறிகள்

போன்ற வரிகள் இயற்பியல் கோட்பாடுகளைக் கொண்டு காட்சிகளின் எல்லைக் கோடுகளுக்கு அப்பால் கவிதையை முன்னேற்றவே முயல்கின்றன.

இத்தகைய அபியின் படிமங்களின் குணங்களையும் எல்லைகளையும் அக்கவிதைகளே தெளிவாக வரையறுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டால் அவை வாசகனுள் வளர வழியற்று தட்டையான படிமங்களாகவே நின்றுவிடவும் கூடும். மேலும் தத்துவப் படிமங்களையும் கருத்தியல் படிமங்களையும் அவ்வாறு அறுதியிட்டு வகுத்துவிடவும் இயலாது. இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ளவே அபியின் படிமங்கள் தொடர் இயக்கத்தைக் கையாளுகின்றன. அபியின் தத்துவப் படிமங்களும், கருத்தியல் படிமங்களும் கவிதையின் கருவாக அமைந்த அருவப் பிரபஞ்சத்தின் உயிர்ப்பையும் தொடர் இயக்கத்தையுமே வெளிப்படுத்துகின்றன. அவை நவீன காட்சிப் படிமங்களைப் போல் பிரபஞ்சச் செயல்பாட்டின் ஒரு நொடியை கவிதையின் தருணத்தில் உறைய வைக்க முற்படுவதில்லை. மாறாக அவை தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தின் தொடர் இயக்கத்தையே பிரதிபலிக்கின்றன.

வடிவங்கள் இன்றித்
தொடர்புகள் ஏது
வேய்ந்த தொடர்புகள் நாலாபுறமும்
விலகிட
வெளிச்சம் வியாபிக்க

இதோ


காலம்
கண்ணில்படும்

பரிமாணமற்ற காலத்தில்
நீந்தித் திளைக்கும்
பரிமாணம் விலகிய
பொருள்கள்

என்ற வரிகள் அவ்வியக்கத்தை வாசகனுக்குக் காட்டுவதன் மூலமே பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றன. இதனாலேயே அப்படிமங்கள் வாசகனிடம் உயிர்ப்புடனும் எல்லையற்ற சாத்தியங்களுடனும் வெளிப்படுகின்றன. அவை ஒவ்வொரு வாசகனிடமும் வெவ்வேறாக வெளிப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு வாசிப்பிலும் வாசகனுக்குள்ளும் வெவ்வேறாக வெளிப்படுகின்றன. ஒரு பேரியக்கத்தின் ஒற்றைப் புள்ளியைக் காண்பது போலன்றி ஒரு தொடர் இயக்கத்தின் வெவ்வேறு புள்ளிகளை ஒவ்வொரு வாசிப்பிலும் காண்பது போன்ற உணர்வையே அவை அளிக்கின்றன. அதனாலேயே அபியின் படிமங்கள் அந்த கவிதை தொடங்குவதற்கு முன்னும், கவிதை முடிவுற்ற பிறகும் செயல்பட்டுக் கொண்டே இருப்பது போன்ற உணர்வை வாசகனுக்கு அளிக்கின்றன. அதன் வழியே அவை வாசகனுக்குள் முடிவின்றி வளரவும் செய்கின்றன.

அவ்வகையில் அபியின் கவிதைகள் அவற்றின் முடிவில் ஒரு விதமான ஓசைகளற்ற சொற்களற்ற இசையாகவே உணரப்படக்கூடியவை. என்னளவில் ஒரு நீண்ட சொனாட்டா முடிந்த பின்னும் அதன் கடைசி நோட் மனதிற்குள் சில வினாடிகள் நீட்டிக்கப்படுவதைப் போன்ற உணர்வையே அவரது கவிதைகளின் முடிவில் அடைந்திருக்கிறேன். அவை இறுதி வரியில் முடிந்துவிட்ட பிறகும் வாசகனின் மனதில் அடுத்த வரியாக நீட்டிக்கப்படக்கூடியவை.

அபியின் கவிதைகளில் வெளிப்படும் தத்துவப் படிமங்களையும் கருத்தியல் படிமங்களையும் போலன்றி அவற்றுள் இயங்கும் காட்சிப்படிமங்கள் முழுமையான படிமங்களாக நிலைபெறுவதில்லை. ஒரு காட்சி கவிதையில் படிமமாக நிலைபெறத் தேவையான குணங்கள் சார்ந்த முழுமையும் இயக்கமும் அபியின் காட்சிப் படிமங்களுக்கு அமைவதில்லை. கவிதையின் காட்சிப் படிமங்கள் கருவின் பிரம்மாண்டத்தை காட்சியில் நிறுவ முற்படுபவை. அத்தகைய முழுமையான காட்சிப் படிமங்கள் அபியின் கவிதைகளில் இல்லை. மாறாக அபியின் காட்சிப் படிமங்கள் முழுமை அடையாதிருப்பதன் மூலமே அக்கவிதைகளில் அவற்றின் பங்கை ஆற்றுகின்றன. அபியின் காட்சிப்படிமங்கள் கவிதையின் கருவாக அமைந்த அருவமான பிரம்மாண்டத்தை காட்சிகளில் பிரதிபலிக்க முற்படுவதில்லை. அவை காட்சிகளின் போதாமையையே பிரதிபலிக்கின்றன. அருவத்தின் எல்லைகளற்ற ஆற்றலை பிரதிபலிக்க முடியாத காட்சிகளின் போதாமையே அபியின் காட்சிப் படிமங்களில் தொடர்ந்து வெளிப்படுகிறது.

எப்போதும் நீ கேட்பது
நாதமல்ல
நாதத்தில் படியும் உன்
நிழல்

நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர்

புலன்களில்
பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்

என்ற வரிகளே அபியின் கவிதைகளில் வெளிப்படும் காட்சிப் படிமங்களுக்கான சிறந்த உதாரணம் என்று நினைக்கிறேன். இத்தகைய போதாமையைப் பிரதிபலிக்கும் காட்சிப்படிமங்கள் குடத்து நீரில் வானின் பிரதிபலிப்பை பார்ப்பது போன்ற உணர்வை வாசகனுக்குள் ஏற்படுத்துகின்றன. தான் காணும் காட்சி குறைபட்டது என்ற புரிதலையும் அதே நேரத்தில் தன் தலைக்கு மேலே அந்த பிரம்மாண்டம் முழுமையாக விரிந்து கிடக்கிறது என்ற பிரஞையையும் அவை ஒருசேர அளிக்கின்றன. இதன் வழியே அபியின் கவிதைகள் வாசகனை காட்சியின் எல்லைகளுக்கு அப்பால் விரியும் தத்துவார்த்தமான நிலைகளின் முழுமையை நோக்கி இட்டுச் செல்கின்றன.

அபியின் கவிதைகளை எளிதில் அணுகுவதில் இருக்கும் மற்றொரு சிக்கல் அவற்றில் வெளிப்படும் அருவம். அபியின் கவிதைகளில் வெளிப்படும் அருவமென்பது வெறும் கவிதையின் கரு சார்ந்தது அல்ல. அவரது கவிதைகள் அருவமான கருக்களை அருவமான கவிமொழியால் கையாள்பவை. கவிதையின் கரு சார்ந்தும் அதை கையாளத் தேவையான கவிமொழி சார்ந்தும் முழுமையான பிரக்ஞையுடன் எழுதப்பட்டவை. அவரது கவிதைகளின் கருக்களாக அமைந்த காலம், இடம், இருப்பு, இன்மை சார்ந்த பிரக்ஞை அக்கவிதைகளில் முழுக்க அருவமான மொழியாலேயே கையாளப்படுகின்றன. இத்தகைய கருக்களைக் கொண்டு பல முன்னோடிக் கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும் அவை அந்த கருக்களை காட்சிப் படிமங்களாலும் அது சார்ந்த கவிமொழியாலுமே கையாண்டிருக்கின்றன. அபியின் கவிதைகள் அவற்றின் கருக்களை காட்சிகளாக்க முற்படுவதில்லை. அபியின் படிமங்கள் அவரது கருக்களின் அருவத்தை அவற்றின் தன்மையிலேயே சந்திக்க முற்படுபவை. அதன் வழியே ஒரு பிரபஞ்ச தரிசனத்தை எட்டுபவை. அந்த பிரபஞ்ச ஆற்றலின் முன் தன் விளையாட்டு பொம்மைகளோடு நிற்கும் மனிதனின் கையறு நிலையை கவிதைகளாக்குபவை.

ஆனால், அபியின் கவிதைகளில் வெளிப்படும் கையறு நிலை என்பது மனிதனுக்கு காலத்தோடு ஏற்படும் அன்றாடப் பிணக்குகள் அல்ல. அவ்வாறு நின்றிருந்தால் அவை சராசரிக் கவிதைகளாகவே கட்டுண்டிருக்கக்கூடும். அபியின் கவிதைகளில் வெளிப்படும் மனிதனின் கையறு நிலை என்பது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தின் முன் ஒரு பூ மலரும் தருணத்தில், ஒரு கவிதை உருவாகும் தருணத்தில், ஒரு கவிஞன் அடையும் கையறு நிலை. பிரபஞ்சத்தின் பேராற்றல்களோடு மோதி ஒரு விதை முளைத்தெழும் மகத்தான தருணத்தில் மனிதன் அடையக்கூடிய கையறு நிலை. காலத்தை வெல்ல யத்தனித்து அதன் முன் மனிதன் ஆற்றலற்று நிற்கும் தருணங்களையே அபியின் கவிதைகள் கையாளுகின்றன. அந்த தருணங்களே அபியின் கவிதைகளில் வெளிப்படும் அருவத்தை மகத்தான பிரபஞ்ச தரிசனங்களாக்குகின்றன.     

அபியின் கவிதைகள் இன்மையின் முழுமையை உணரச் செய்பவை. அத்தனை உருவங்களின் பின்னணியிலும் இயங்கும் அருவத்தைச் சுட்டுபவை. உருவங்கள் அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்டவையே என்றும், அருவம் எல்லைகளும் வரையறைகளும் அற்ற ஒற்றைப் பெரும் இருப்பு மட்டுமே என்றும் உணர்த்துபவை. அவரது கவிதைகளுள் ஒன்றான “கோடு” கவிதையின்


எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்
ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இது என்றோ அது என்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்

கோடுவரைவதெனின்
வரைந்து கொள்

என்ற வரிகள் அத்தகைய முழுமையான பிரபஞ்ச தரிசனமாகவே வெளிப்படுகின்றன. ஸ்தூலத்தின் எல்லைகளால் வரையறுக்க முடியாத சூக்ஷமத்தின் முழுமையே அபியின் கவிதைகளில் வெளிப்படுபவை. இதனாலேயே அவருடைய அத்தனை கவிதைகளும் ஒரே கவிதைதான் என்ற எண்ணத்தையும் வாசகன் அடையக்கூடும். இன்மையிலிருந்து இருப்பு பிறக்கும் விந்தையையும், இருப்பு கரைந்து இன்மைக்கே திரும்பும் இயல்பையுமே அபி கவிதைகளாக்குகிறார். அதுவே பிரபஞ்சத்தின் லீலை.

 நவீன தமிழ் கவிதைகளின் வெளியில் அபியின் கவிதைகள் முன்வைக்கும் பிரபஞ்ச தரிசனத்தின் தனித்துவமென்பது அவற்றின் தன்னுணர்வே. அபியின் கவிதைகள் மனித அறிதலின் எல்லைகளுக்குள் பிரபஞ்சத்தை சுருக்கி புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முயலாமல் பிரபஞ்சத்தை ஆத்மார்த்தமாக உணர முற்படுகின்றன. தர்க்கத்தின் எல்லைகளையும் காட்சிகளின் வரையறைகளையும் உடைக்கவும் மாற்றவும் அவை தயங்காதபோதிலும் அவை அவற்றுக்கான எல்லைகளை உணர்ந்தே இருக்கின்றன. முழுவதுமாக மொழியில் அடக்கிவிட முடியாத பிரபஞ்சத்தின் பேராற்றலையும், எத்தனை சொற்களால் சொல்லப்பட்ட பிறகும் அவற்றுக்கு அப்பால் பரமென எஞ்சி நிற்கும் பிரபஞ்சத்தின் இருப்பையும் அபியின் கவிதைகள் உணர்த்துகின்றன. அந்த தன்னுணர்வின் காரணமாகவே அவை வாசகனை கவிதையின் வரிகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பேராற்றலின் தளங்களை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அனைத்தையும் முற்றிலுமாக சொல்லி முடித்துவிட்ட நிறைவில் அமைந்துவிடாமல் அவை சொல்லுக்கு அப்பால் உள்ள மெய்மையை நோக்கியே எழ முற்படுகின்றன.

அவற்றின் கருப்பொருளான பிரபஞ்சத்தின் பேராற்றல்களின் முன் தருக்கிச் செருக்காமல் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தின் முன் பணிந்து அவற்றைக் கண்டு நெகிழும் கவிஞனின் குரலே அபியின் கவிதைகளுள் வெளிப்படுகின்றன. ‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ எனும் பக்குவத்துடனேயே அபியின் கவிதைகள் அருவத்தை அணுகுகின்றன. அதன் காரணமாகவே அபியின் கவிதைகள் என்னுள் அருவமான பிரபஞ்சத்தின் ஆற்றல்களைக் காட்டும் மகத்தான அறிதல்களுள் ஒன்றாக நிலை பெறுகின்றன. நவீன தமிழ் கவிதை வெளியில் நான் கண்டடைந்த ஆசிரியர்களுள் ஒருவராகவே அபியைக் கருதுகிறேன்.

vigneshari2205@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button