இணைய இதழ்இணைய இதழ் 100மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

வெறும் பத்து ரூபாய்

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

வங்கத்தில்: போலை சந்த் முகோபாத்யாய்

ஆங்கிலம் வழி தமிழில்: அருந்தமிழ் யாழினி

“பரவாயில்ல! பரவாயில்ல! இருக்கட்டும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல உங்க கையில எப்ப இருக்கோ அப்ப குடுங்க போதும். இப்போ அதுக்கு என்ன அவசரம் சொல்லுங்க?” சங்கடத்தோடு கூறினார் பிந்துபாபு.

“இல்ல, அது எனக்கு உண்மையாவே கவலையா இருக்கு. உங்கள மூனு முறை திருப்பி அனுப்பிட்டேன். நான் இன்னைக்கு உண்மையாவே காச திருப்பி தந்திருப்பேன். ஆனா பாருங்க, போஸ் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தான். பனாரஸ்ல அவன் பையன் உடம்பு சரியில்லாம இருக்கானாம் காசு வேணும்னு தந்தி வந்திருந்துச்சி.” என்று மிகவும் சங்கடத்தோடு கூறினார் நிகில்பாபு .

“அவருக்கு காசு குடுத்தது சரிதான்! நல்ல வேலதான் செய்திருக்கிங்க. அவர் உங்களுக்கு திருப்பித் தரும்போது எனக்கு குடுங்க. நான் போயி பிபின் எதாச்சும் கடன் குடுக்குறானானு பார்க்குறேன்.”

“எனக்கும் இன்னைக்கு காசு தேவைப்படுது” என்று சொல்லிக்கொண்டே எழுந்து கிளம்பத் தயாரானார் பிந்துபாபு. அவர் கிளம்பிப் போனதும் நிகில்பாபுவின் முகம் குழப்பமாகவும் இறுக்கமாகவும் மாறியது. ‘சரியான தொல்ல பிடிச்சவன் இந்த சின்ன காசுக்குப் போய் இப்படி தூங்காம அலஞ்சிட்டு இருக்கான்’ என நினைத்தார்.

வெளியே பிதுபாபுவின் மனநிலையும் மாறியது. “இவன் பெரிய தலைவலியா இருப்பான் போல” என சன்னமான குரலில் முனுமுனுத்தார்.

நாட்களும் வாரங்களுமாய் கழிந்தது. பிந்துபாபு திரும்பவும் நிகில்பாபுவின் கடைக்கு வந்தார். சரியாக ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு, “நான் நாளைக்கு கொடுத்து விடுகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தால் பிந்துபாபு பத்து ரூபாயை நிகில்பாபுக்கு கடனாக கொடுத்திருந்தார். ஆனால், இந்த விதியினுடைய வேடிக்கையைப் பாருங்களேன்.. நிக்கில்நாத் மித்ரா போன்ற மதிக்கத்தக்க தலைமை எழுத்தர், போயும் போயும் பிந்து சந்திரன் போஸ் போன்ற ஒரு சோம்பேறிடம் கடன் பட்டிருக்கிறார் அதுவும் வெறும் பத்து ரூபாய்! ‘ஓ விதியே! நான் உன் முன்பு தலை வணங்குகிறேன்! புத்திசாலியான நள மகராஜாவே உன் கைகளில் அவமானப்பட்டார் என்றால் நான் ஒரு சாதாரண எழுத்தர் நானெல்லாம் எம்மாத்திரம்!’ நிகில் பாபு இப்படி சொல்லி சமாதானப்படுத்திக் கொள்வார். நிகில் பாபு சிறுவயதிலிருந்து மகாபாரதக் கதைகளை கேட்பார் என்ற பேச்சும் அங்கு போய்க் கொண்டிருந்தது.

அன்று பிந்து சரணின் வருகை வெகு நாட்களாக அவரை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த நிகில் பாபுவின் கவலையைத் தீர்த்ததுபோல இருந்தது.

“வா பிந்து பாபு, நான் தப்பிச்சேன். நான் உன்ன தினமும் நினைச்சுட்டு இருந்தேன். பக்கத்துல ஒரு தியேட்டர்ல கணபதி நாடகம் போடுறாங்க. நீ வர்றியா? கூட ஒரு நல்ல துணை இல்லாம அத ஜாலியா பாக்க முடியாது. வாயேன் போலாம்.” என்றார் நிகில்பாபு.

கேட்டதுதான் தாமதம் பிந்துசரணின் மொத்த முகமும் நிலாவை விழுங்கியது போல பிரகாசமாய் மாறியது. “கண்டிப்பா வரேன் எத்தனை மணிக்கு? எட்டுக்கு.. சாயங்காலம் எட்டு மணிக்கு.  சரி நான் வரேன்” என்று கிளம்ப எத்தனித்தார் பிந்து பாபு.

 அப்போது “அப்பா, அம்மா வீட்ல சர்க்கரை காலி ஆயிடுச்சுன்னு சொன்னாங்க”. என்று சொல்லியவாறு நிகில் பாபுவின் ஆறு வயது மகள் மிண்ட்டு அங்கு வந்தாள். பிந்து பாபு மிண்ட்டுவிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார். அவரின் மகளிடம் கூட இந்த அளவுக்கு அவர் பேசியதில்லை. “அடடா, உங்களோட இந்த ப்ராக் ரொம்ப அழகா இருக்கே! அந்த ரிப்பன் கூட அழகா இருக்கு”. அதற்கு அடுத்த பத்து நிமிடம் இந்த மாதிரியான உரையாடலால் நீண்டது.

பிந்துசரணின் முக்கிய நோக்கம் அந்தப் பத்து ரூபாயை திரும்பப் பெறுவது. நிகில் பாபுவே நிறைய நேரங்களில் பேச்சை மாற்றினாலும் பிந்துபாபு நிறைய இடங்களில் அழுத்தமாக அந்த பேச்சைக் கொண்டு வர நினைத்து தோற்றுப் போவார். பிந்துசரண் நாகரிகமாக இருந்துவிட்டார்.

நிகில்நாத் பாபுவிற்கும் நேர்மையான எண்ணம் இருந்தது போல. அதனால் அதைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. மாறாக பேச்சு இப்படி நீண்டது.

அந்த ஆண்டு ஃபெட்டாபூர் சிக்ரியில் கடும் குளிர் நிலவியது. அங்குள்ள ஏழை மக்கள் இதனால் கடும் பாதிப்படைந்தனர். நிகில் நாத் பாபு இந்தப் பிரச்சனை குறித்த தன்னுடைய ஆதங்கத்தை பேசிக் கொண்டே இருந்தார்.

கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது. “நான் வேலைக்கு தயாராக வேண்டும்”. நிகில் நாத்பாபு கூறினார் .

பிந்து சந்திரன் பாபுவிற்கு இதற்கு மேல் பொறுத்து இருக்க முடியவில்லை. ஒரு வேகத்தில், “போஸ் கிட்ட இருந்து பணத்தை திருப்பி வாங்கிட்டீங்களா?” என்று கேட்டார்.

நிகில் நாத் ஏதோ வானம் தரையில் விழுந்தது போல, “ஐயோ, மறந்துட்டேன். உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் என் கிட்ட இருக்கு” என்று சொல்லித் தடுமாறியவாறு அவரது கையை சட்டை பையில் விட்டு துழாவினார்.

“ஐயோ, என்னுடைய சாவி எங்க போச்சு?” என்று சொல்லியவாறு அவரது சட்டைப் பையை ஆராய்ந்தார். மேசைக்கு அடியில், அலமாரியின் மேல் என் எல்லா இடத்திலும் தேடினார். என்ன விசித்திரம் சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை. பிந்து சரணும் தன் பங்குக்கு தேடினார் முடிவில், “சரி விடுங்க, இருக்கட்டும். என்ன அவசரம்?” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

பிந்துசரண் அன்று சாயங்காலம் குறித்த நேரத்திற்கு வந்தார். நிகில்நாத்தை தேடிய போது அவர் முக்கியமான ஒரு வேலைக்காக வெளியே சென்று இருப்பதாகவும், எப்போது திரும்பி வருவார் என்பது தெரியாது என்பதைத் தெரிந்து கொண்டார்.

பிந்துசரண் அன்றைய கணபதி நாடகத்தை தனியாகப் பார்த்தார். அன்று உத்தாராவின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடலையும் மனதையும் இணைப்பதாய் இருந்ததை மறுக்கமுடியாது. உத்தாராவின் வலிகளைப் பார்த்து அவர் சிந்திய கண்ணீரே அதற்கு சாட்சி. அடுத்த நாள் காலை அவர் மனதில் இருந்த வலி அவரது தொண்டையில் தஞ்சம் அடைந்திருந்தது. அவரின் தொண்டையின் இரு பக்கமும் வீங்கி விழுங்குவது சிரமமாக இருந்தது. தொட்டுப் பார்த்தால் லேசான ஜுரம் இருந்தது. போகப் போக ஜுரம் அதிகமாகி படுத்த படுக்கையாகி விட்டார் பிந்துசரண். அவர் யோசித்துப் பார்க்கையில் அந்த பத்து ரூபாய் மட்டும் மூலகாரணமாக இல்லாமல் இருந்திருந்தால் பிந்துசரண் நிகில்நாத்தை பார்க்கவோ, அந்த நாடகத்திற்கு சென்றிருக்கவோ மாட்டார். “அந்த அயோக்கியன் பணத்துலயும் சரி, உடம்பையும் சரி கொன்னுடுவான் போல இருக்கு” என்று பல்லைக்கடித்துக்கொண்டு கூறினார். பிந்துசரண் ஒரு வாரம் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாய் இருந்தது. அது போதாமல் ஏழு ரூபாய் 87 பைசா அவரின் சிகிச்சைக்காக செலவிட வேண்டி இருந்தது.

மேற்கூறிய நிகழ்வுகளுக்கு பிறகு ஒரு மாதம் ஓடியது. பூமி ஓன்றும் அவர்களுக்காக அல்லவே.. அதனால் அதன் விருப்பம் போல அதன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றியது. இரவும் பகலும் இயற்கையாகவே மாறி மாறி வந்தது.

அது மாதத்தின் ஆறாவது நாள். கீழ் அறையில் உட்கார்ந்து கொண்டு நிகில்நாத் மனதில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். நாளைக்கு அவரின் சம்பள நாள். 55 ரூபாய் 47 பைசா வரும். வீட்டு வாடகை 15 ரூபாய், மளிகை கடைக்காரருக்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. மீதம் இருப்பது இருபது ரூபாய் 47 பைசா. 47 பைசாவை கணக்கில் சேர்க்காவிட்டால் 20 ரூபாய். அந்த காசில்தான் அந்த மாதத்திற்கான மளிகை செலவு, பிள்ளைகளின் பள்ளி கட்டணம், பால், மண்ணெண்ணெய், துணி என எல்லாம் பார்க்க வேண்டும். இப்படியிருக்க பிந்துச் ந்திரனுக்கு 10 ரூபாய் குடுப்பது முடியாத காரியம்.

ஆனால், அவரின் மனைவியிடன் கொஞ்சம் பணம் இருக்கிறது. வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சம் பிடித்து சேமித்து வைத்த பணம். ஆனால், எவ்வளவு இருக்கிறது என்று சரியாக நிகிலுக்குத் தெரியாது. இந்த ஒரு சிறு தொகைக்காக அவர் மனைவி ஷோபாவிடம் இருக்கும் பணத்தைப் பறிக்க அவருக்கு மனம் வரவில்லை. அவரால் எப்படி கேட்க முடியும்?

ஒரு ரேசில் பந்தயம் கட்டுவதற்காகதான் பிந்து சந்திரனிடம் இருந்து அந்தப் பணத்தை அவர் கடன் வாங்கி இருந்தார். அதில் அவர் தோற்றும் போனார். அவரால் இந்த ரகசியத்தை அவர் மனைவியிடம் வெளிப்படையாக கூறவும் முடியாது. எப்படியாவது அந்த பணத்தை திருப்பி தந்து விடலாம் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், ஒவ்வொரு மாதமும் அவர் மனக்கணக்கு போடும்போது இது முடியாத காரியம் என்று அவருக்கு புரிந்து இருந்தது. பிந்துபாபுவிடம் நீண்ட காலம் பொய் சொல்லி மழுப்புவது கடினமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டுதானே? அடுத்து என்ன செய்வது என்று நிகில் நாத் யோசித்துக் கொண்டிருக்கும் போதே “ஆமா, நிகில்நாத்த பார்க்கதான் போயிட்டு இருக்கேன் “ என்று வெளியே பிந்துசரணிண் குரல் கேட்டது.

நிகில்நாத் வேகமாக எழுந்து ஓடிப்போய் அந்த அறையில் உள்ள ஒரு ரகசிய அறையினுள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.

நிகில் பாபு!

உள்ளிருந்து மிண்ட்டு வந்தாள். “அப்பா இவ்வளவு நேரம் இங்கதான் உட்கார்ந்துட்டு இருந்தாரு வெளியே போய் இருப்பார்னு நினைக்கிறேன்”.

“அப்படியா சரி மா. திரும்பி வந்தா நான் வந்துட்டு போனேன்னு சொல்லு”.

“சரி!” என்றாள் மிண்ட்டு.

பிந்துபாபு கிளம்பினார். அவர் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே நிகில் பாபு பெரும் சத்தத்தோடு அவர் மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தார். அய்யோ! கடவுளே! அந்த அறையின் மூலையில் குளவி கூடு இருந்தது. குளவி கடித்த வலியில் என்ன செய்வது எனத் தெரியாமல் அலைந்து கொண்டிருந்தார். தண்ணீரால் முகத்தையும் கண்களையும் அடித்து கழுவினார். கொஞ்ச நேரத்திலேயே அவருடைய இடது கண் வீங்கியது. அவரது வீங்கிய வலது கண்ணம் மிண்ட்டுவிற்கு சிரிப்பை வரவழைத்தது. நிகில் நாத் மேலே சென்று படுத்துக் கொண்டார்.

அந்த நேரத்தில் இரண்டு பேர் பிந்துபாவை கைத்தாங்கலாக அங்கு அழைத்து வந்தார்கள். நிகில் பாபுவிடமிருந்து எப்படி பணத்தை வாங்கலாம் என்று யோசித்தப்படியே வீதியில் சென்று கொண்டிருக்கும் போது தவறுதலாக வாழைப்பழத் தோல் மீது காலை வைத்து வழுக்கி விழுந்து தலையையும் கைகளையும் உடைத்துக் கொண்டார் பிந்து பாபு. அவரது வீடு தொலைவாக இருக்கவே வலியோடு இரண்டு பேரின் உதவியோடு நிகில் பாபுவின் இருப்பிடத்தை வந்தடைந்தார் பிந்துபாபு.

நிகில் நாத் மேல் அறையில் படுக்கையில் படுத்து கொண்டிருந்தார். கூப்பிட்ட மாத்திரத்தில் கீழே வந்து பிந்து சரண் திரும்பி வந்திருப்பதைப் பார்த்தார்.

ஒருவரை ஒருவர் பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்

“என்னை காப்பாற்று!”.

அன்றிலிருந்து மூன்று மாதங்கள் கடந்தன.

நிகில்நாத் அந்தப் பணத்தை திரும்ப தரவே இல்லை. பிந்துசாரணோ விடாமல் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு நகர்ந்து கொண்டே இருந்தார்.

*******

ஆசிரியர் குறிப்பு:

பனாபுல் என்னும் புனைப்பெயர் கொண்ட போலை சந்த் முகோபாத்யாய் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வங்காள படைப்பாளிகளில் ஒருவர். நிறைய நாவல்கள், கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். ஸ்தபார்

(அசையாத) மற்றும் ஜங்கம் (அசையும்) இவரது புகழ்பெற்ற நாவல்கள். இவருடைய பல படைப்புகள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன.

aruntamilyazhiniaravindan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button