ஆயிரம் துளிகள் – சீசர் ஐரா
மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

ஆங்கிலத்தில்: கிரிஸ் ஆண்ட்ரூஸ்
தமிழில்: பாலகுமார் விஜயராமன்
ஒரு நாள், மோனாலிசா ஓவியம் லூவ்ர் அருங்காட்சியகத்திலிருந்து மாயமானது. அது பொதுமக்களின் கோபத்தையும், தேசிய அளவில் சர்ச்சையையும், ஊடகங்களில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது முதல் முறையல்ல: ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1911-ல், வின்சென்சோ பெருகியா என்ற இளம் இத்தாலிய வந்தேறி அந்த அரிய படைப்பைத் திருடினான். அவன் அருங்காட்சியக கட்டிடத்தில் வர்ணம் பூசும் தொழிலாளியாக வேலை செய்து வந்ததால், அங்கு சுதந்திரமாக நுழைய முடிந்தது. அவன் தனது பணியின் போது அணியும் மேலங்கியினுள் ஓவியத்தை மறைத்து வைத்து வெளியேறினான். இரண்டு ஆண்டுகள் தனது வீட்டின் மோட்டு மச்சு அறையில் அதை மறைத்து வைத்திருந்தான். 1913-ல் அதை ஃப்ளோரன்ஸ் நகருக்கு எடுத்துச் சென்று, உஃபிசி காட்சியகத்திற்கு விற்க முயன்றான். அவன் இந்தத் திருட்டை, தேசிய கலைச்செல்வத்தை மீட்டெடுக்கும் தேசபக்தி செயலாக நியாயப்படுத்தினான். ஆனால், காவல்துறையினர் அவனுக்காகக் காத்திருந்தனர். மோனாலிசா ஓவியம் மீண்டும் லூவருக்குத் திரும்பியது. இதற்கிடையில் லியோனார்டோ பெருகியா என்ற பெயரில் பிரபலமடைந்திருந்த அந்தத் திருடன் சில ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தான் (அவன் 1947-ல் இறந்தான்).
***

இம்முறை நிலைமை இன்னும் மோசம். ஏனெனில் உண்மையில் இப்போது காணாமல் போயிருப்பது ஓவியமேதான்: அதாவது அந்த அதிசய கலைப்படைப்பை உருவாக்கிய மெல்லிய எண்ணெய் வர்ண அடுக்கு மறைந்து போயிருந்தது. ஓவியத்தின் அடிப்பலகையும் சட்டமும் அப்படியே இருந்தன, ஆனால், அதில் எப்போதுமே வர்ணம் பூசப்படாதது போல பலகை வெறுமையாக இருந்தது. அதை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினர்: ஓவியம் சுரண்டப்பட்டதற்கோ, அமிலம் அல்லது வேறு இரசாயனப் பொருளால் சிதைக்கப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை; அடிப்பலகை அப்படியே இருக்க வர்ணம் மட்டும் ஆவியாகிவிட்டது. ஓவியத்தை பார்வையாளர்களிடமிருந்து பிரித்த திண்மையான கண்ணாடிப் பெட்டியில் ஒரு மில்லிமீட்டர் விட்டமுள்ள சிறிய, முற்றிலும் வட்டவடிவ துளைகள் மட்டுமே தாக்காற்றலின் ஒரே அடையாளமாக இருந்தன. அந்தச் சிறு துளைகளில் ஆய்வு செய்ய எதுவுமில்லை என்றாலும் அவையும் சோதிக்கப்பட்டன. எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. அதோடு, அத்தகைய சிறு துளைகளை உருவாக்க எந்த வகையான கருவி பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இது வெளிக்கிரக உயிரினங்கள் பற்றிய பத்திரிகை ஊகங்களுக்கு வழிவகுத்தது: ஒருவேளை ஏதோ ஒரு ஜெல்லி போன்ற உயிரினம், துளையிடும் குறு இழைகளுடன் கூடிய உறிஞ்சியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது போன்ற கற்பனைகள் பறந்தன. பொதுமக்கள் எவ்வளவு எளிதில் ஏமாந்து விடுகிறார்கள்! அவர்கள் எவ்வளவு அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்! உண்மையான விளக்கம் மிகவும் எளிமையானது: வர்ண அடுக்கு உயிருள்ள துளிகளாக உருமாறியது. அந்தத் துளிகள் உலகம் முழுவதும் பயணிக்கக் கிளம்பின. ஐந்து நூற்றாண்டுகள் ஒரு தலைசிறந்த படைப்பில் இருந்ததால், அவை மிகுந்த ஆற்றலால் நிரம்பியிருந்தன, எனவே எவ்வளவு திண்மையான கண்ணாடித் தகடாலும் அவற்றைத் தடுக்க முடியவில்லை. சுவர்களோ, மலைகளோ, கடல்களோ, தூரங்களோ கூட அவற்றைத் தடுக்க முடியவில்லை. வண்ணத் துளிகள் அவற்றுக்கு விருப்பமான எந்த இடத்திற்கும் செல்ல முடிந்தது; அவை மீயாற்றல்களால் நிரப்பப்பட்டிருந்தன. ஒரு வேளை புலனாய்வாளர்கள் கண்ணாடியில் உள்ள சிறு துளைகளை எண்ணியிருந்தால், அவை எத்தனை என்பதைக் கண்டறிந்திருப்பார்கள்: ஆயிரம். ஆனால், அந்த எளிய பணியை மேற்கொள்ள யாருக்கும் பொறுமை இல்லை; அவர்கள் அனைவரும் நம்ப முடியாத மற்றும் முரண்பட்ட கோட்பாடுகளை உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருந்தனர்.
***
சாகசங்கள், செயல்பாடுகள், மற்றும் அனுபவங்களுக்கான ஆவலுடன் துளிகள் ஐந்து கண்டங்களிலும் சிதறிச் சென்றன,. துவக்கத்தில் சிறிது காலம், அவை பகலொளியின் விளிம்புகளில் தங்கியிருந்து, ஒரே திசையில் பல முறை பூமியைச் சுற்றி வந்தன. அவை விசிறி போல விரிந்து, பல்வேறு வேகங்களில் நகர்ந்தன. சில துளிகள் விடியலின் நுண்ணிய சாம்பல் நிறங்களிலும், மற்றவை மாலையின் வாஞ்சையான இளஞ்சிவப்பு நிறங்களிலும் பயணித்தன. பல துளிகள் பெருநகரங்களின் பரபரப்பான காலைப் பொழுதுகளிலோ அல்லது கிராமப்புறங்களின் மந்தமான மதிய ஓய்வு நேரங்களிலோ, வசந்தகால புல்வெளிகளிலோ அல்லது இலையுதிர்கால காடுகளிலோ, துருவப் பனிக்கட்டிகளிலோ, எரியும் பாலைவனங்களிலோ, தோட்டத்தில் சிறு தேனீயின் மீது சவாரி செய்தோ பயணித்தன.
பின்னர், தற்செயலாக ஒரு துளி இரவின் ஆழங்களைக் கண்டுபிடித்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு துளி, பின் இன்னொரு துளி என ஒவ்வொன்றாகச் சென்றன. பிறகு, அவற்றின் பயணங்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் எல்லையே இல்லாமல் ஆனது. தொடர்ந்து நகரும் உந்துதல் மெல்ல மறைந்த பிறகு, அவை தாம் விரும்பிய இடங்களில் தங்கி, தங்களது அளவற்ற படைப்பாற்றலை வெளிப்படுத்தத் துவங்கின.
***
ஒரு துளி ஜப்பானில் சென்று தங்கி, வாசனை மெழுகுவர்த்திகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியது. அவன் தயாரித்தவை “நுட்ப மெழுகுவர்த்திகள்” என அழைக்கப்பட்டன, அந்த மெழுகுவர்த்திகள் நிலவின் மணம் வீசின. கடுமையான காப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்டு, இரவின் ஆதரவால் அவை பிரபலமடைந்து பெரும் வெற்றி பெற்றன. பெரிய நடன அரங்குகள், கோவில்கள், மலைகள், காடுகள், பல்வேறு படைத்துறைகளின் முழு ஆட்சிப் பகுதிகளிலும் அந்த மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன. அவை ஆறு, பன்னிரண்டு, இருபத்தி நான்கு, மற்றும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பெட்டிகளாக விற்கப்பட்டன (அனைவரும் ஆயிரம் அடங்கிய பெட்டிகளையே வாங்கினர்). அவற்றின் சிறிய இளஞ்சிவப்பு சுடர்கள் பெருகி, நிழலற்ற அரை வெளிச்சத்தை உருவாக்கின. அவ்வெளிச்சத்தில் அருகிலும் தொலைவிலும், முன்னும் பின்னும் என்ற வேறுபட்ட இருள் மறைந்தது. மிக நீண்ட குளிர்கால இரவுகளால் கூட அவ்வொளி தந்த மறைவெளிப்பாட்டு நெருக்கத்தை தாங்க முடியவில்லை. கிரோஸஸைப் போல பணக்காரனான துளி சான், இரண்டு நடன மங்கைகளை மனைவிகளாகக் கொண்டிருந்தான். அவ்விரு பெண்களும் வாட்கட்டுகளை சுமந்து கொண்டு, கணவனை மகிழ்விக்க நடன யுத்தங்களை நிகழ்த்தினர். ஆனால், உந்துகணையியல் ஆய்வில் மூழ்கியிருந்த துளி சான், அவர்களை மெல்ல மெல்ல புறக்கணித்து, இறுதியில் முற்றிலும் மறந்தே விட்டான். பார்ப்பவர் குழம்பிப் போகும் வண்ணம் ஒத்த உருவமும் செயல்களும் கொண்ட அவ்விரு பெண்களுக்கும் இடையே, இவ்விஷயத்தில் முற்றிலும் மாறுபட்ட எதிர்வினைகள் தோன்றின. ஒருத்தி துளி சான் தன்னை கவனித்த காலத்தை விட அதிகமாக அவனை நேசித்து அவனுக்கு உண்மையாக இருந்தாள். இன்னொருத்தி வீட்டில் கிடைக்காத அன்பை வேறிடங்களில் தேடினாள். ஒருத்தி “என்றென்றைக்குமானவளாக” இருந்தாள். இன்னொருத்தி “இருக்கும் வரை செல்லட்டும்” என்ற மனநிலையில் இருந்தாள். அவள் “இதுவரை இருந்தது போதும்” என்ற நிலையை அடைந்த பிறகு, ஒரு புகைப்படக்காரரை நாடத் துவங்கினாள். திரு. போட்டோ சான் எப்போதும் தனது புகைப்பட வணிகம் சார்ந்து கொரியாவுக்குச் சென்றுகொண்டிருந்தார். அவர் அவ்வாறு வெளியே சென்றிருந்த ஒரு மழை நாளில், துளி சான் மற்றும் அவனது இரு மனைவியர் என்று குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்றனர். அவர்கள் பெரிய கோடுகளிட்ட குடை, பல பெட்டிகள் நிறைய நுட்ப மெழுகுவர்த்திகள், இறால் கூடை ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்தார்கள். அவர்கள் தேநீர் அருந்தி, உணவுண்டு, ஊதா வானத்தைப் பின்னணியாகக் கொண்ட மரங்களின் புறவுருக்களை ரசித்தனர். பின்னர் அவர்கள் சதுரங்கப் பலகை அளவிலான, மடிக்கக்கூடிய அட்டையால் ஆன வரிப்பந்தாட்டத் திடல் (டென்னிஸ் கோர்ட்) அமைப்பில் இருந்த வினோதமான விளையாட்டுப் பொருளைக் கண்டு மகிழ்ந்தனர். அதில் வெள்ளை உடையணிந்த நான்கு தவளைகள் நாணல் மட்டைகளுடன் கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடின. தவளைகள் உண்மையானவை, ஆனால், அவை உயிருடனோ உயிரற்றோ இல்லை. மாறாக மின்முனைகளால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவ்விளையாட்டு கொஞ்சம் சிரமத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதோடு துளிக்கோ அவனது மனைவிகளுக்கோ வரிப்பந்தாட்ட விதிகள் தெரியாததால், போட்டி அவர்களுக்கு ஓரளவு குழப்பமாகவே இருந்தது. அப்போது, அதிக மின்னழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு தவளை, துளி சானின் தோளில் தாவி, தன் தலையை அவனது காதில் வைத்து ஒரு வார்த்தையைச் சொன்ன போது, நிகழ்வுகள் சோகமான திருப்பம் எடுத்தன. அவ்வார்த்தை: “விபச்சாரியின் கணவனே”. இரண்டு மனைவிகள் கொண்டிருப்பதன் தீமை என்னவென்றால், அவர்களில் ஒருத்தி துரோகம் செய்தால் அது யார் என்று சரியாகக் கண்டுபிடிக்கப் பொறுமை வேண்டும். ஆனால், துளி சானுக்குத் தான் கொண்டிருந்த வெறியின் காரணமாக சிந்திக்க நேரமில்லை. ஆதலால் அவன் தன் இரு மனைவிகளையும் கொல்ல முடிவு செய்தான். அருகில் இருந்தவளின் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றான். துரதிர்ஷ்டவசமாக, அவள் அவனுக்கு உண்மையாக இருந்த மனைவி. துரோகியான இன்னொருத்தி உடனே தப்பித்து, தவளைகளின் சிறிய வரிப்பந்தில் ஏறி, அப்பந்து தன்னைக் கொரியாவுக்கு இட்டுச் செல்லும் என நம்பி தப்பினாள் (உண்மையில் அப்பந்து ஓசாகாவுக்குச் சென்றது). பழிவாங்கும் செயலில் இருந்த விபச்சாரியின் கணவன் இறந்த உடலைப் பார்த்தபடி நின்றான். அவனது அற்புத பயணத் துளி நிலை, வழக்கமான குற்றவாளி எதிர்கொள்ளும் விளைவுகளிலிருந்து அவனை விலக்கியது. அல்லது அவன் அவ்வாறு நம்பினான். ஆனால், உண்மையில் பிரபஞ்சத்தில் எந்த உயிரினமும் துரதிர்ஷ்டத்திலிருந்து தப்ப முடியாது. மென்மையான இசையமைந்த ஒலி, உல்லாசப் பயணத்தின் மீது இரண்டாவது குடையைப் போல மெதுவாக விரிந்தது. மெழுகுவர்த்திகள், உண்மையில் ஒரு இசையமைப்பாளரின் மணத்தை வாசனையாகக் கொண்டிருந்தன.
***
சாமந்திப் பூக்களின் நாடான ஜப்பானிலிருந்து வெகு தொலைவில், ஓக்லஹோமாவில், ஒரு துளி கற்பூரத் தைலப் பூச்சு (டர்பன்டைன்) உடன் நேருக்கு நேர் போரிட்டது. டர்பன்டைன் தத்துவ அறிஞர் காண்ட்டைப் போல தோற்றமளித்த மெலிந்த, சிறிய பொன்னிற ஆள், அவன் நாகரீகமாக ஆனால் ஆடம்பரமற்ற உடையணிந்திருந்தான். அவனது தோற்றத்தில் தெரிந்த ஒரே ஆடம்பரமான விஷயம் அவனது முன்புறம் உயர்ந்திருந்த முடிதான். ஜெல் உதவியின்றி (அதை அவன் வெறுத்தான்), வெறும் கைவினைத் திறமையால் அரை அங்குலம் உயரம் வரை எழும்பியிருந்தது. இது அற்பமான சாதனை போல் தோன்றலாம், ஆனால், டர்பன்டைன் ஒரு அங்குல உயரமுள்ளவன் என்பதை – அல்லது முடியுடன் ஒன்றரை அங்குலம் உயரம் உள்ளவன் என்று அறியாதவர்களுக்கு மட்டுமே அப்படித் தோன்றும். புல்வெளிக் காற்றால் சுழற்றப்பட்ட தூசுச் சுழல்களுக்கிடையே, ஜோ பீட்டர் துளி கத்தினான்: “அவனோ நானோ!” இருவரில் ஒருவர் இறக்க வேண்டும். எண்ணெய் வண்ணப் பாணியிலான அவனது ஆன்மாவின் ஆழத்தில், காட்டுமிராண்டித்தனமான உலகில் ஒரு அற்புதமான உயிருள்ள அணிகலனாக இருக்கும் டர்பன்டைன் போன்ற அழகிய படைப்பை அழிப்பது வேதனை தந்தது. ஆனால், வேறு வழியில்லை. உலகம் பெரியதுதான். அதில் வாழ அனைவருக்கும் இடமுண்டு – அலையும் துளியான அவனுக்கு இது தெரியும் – ஆனால், சில சூழ்நிலைகளில் ஒத்துப்போகாமை தீவிரமடையும் போது என்ன செய்வது? அதோடு இது அவ்வளவு கொடுந்துயரமும் அல்ல. சிலரின் மரணம் மற்றவர்கள் வாழ வழிவகுக்கிறது. அதே வேளையில் சிலரின் வாழ்க்கை – ஒருவர் வாழும் எளிய, சாதாரண வாழ்க்கை – வழக்கமான, சலிப்பூட்டும், அர்த்தமற்ற வாழ்க்கை – படிப்படியாக சில துடிப்புமிக்க கதை மாந்தர்களின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. ஒருவேளை இந்த கழிவிரக்கம் துளியின் அலைச்சலுக்கு ஒரு பொருளைக் கொடுத்திருக்கலாம். டர்பன்டைன், அது நாள் வரை தன் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த தனது நளினத்தை நம்பி, ஒரு சிறிய கற்றாழைத் துப்பாக்கியுடன் தன் எதிரியை நோக்கிப் பாய்ந்து, ரவைகளை காலி செய்தான். ஜோ பீட் துளியின் மூக்கு ஒரு ரப்பர் பந்தைப் போல முற்றிலும் உருண்டையாக இருந்தது., அம்மூக்கு ஒன்பது குண்டுகளையும் உள்வாங்கியது. எதிர்த்தாக்குதல் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத டர்பன்டைன் ஆயுதங்களற்ற தனிமையால் சூழப்பட்டான். அவ்வப்போது அவனோடு பொதுக்கூடுகை நடத்தும் பால்யகால நண்பர்கள் வந்தபோது கூட அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் மீண்டும் ஒருபோதும் தென்படவே இல்லை. ஜோ பீட் துளி கற்றாழை இளஞ்சிவப்பைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையைத் தொடர்ந்து திறம்பட நடத்தி வந்தான். அதனை அவன் ஜெலட்டின் கரைசலில் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்தான், அங்கு அது புகைப்பட உருவாக்கத்திற்கான காரணியாகப் பயன்படுத்தப்பட்டது. அவன் மணம் முடித்திருந்தான், செல்வந்தனாக, நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான். ஆனால், அவ்வப்போது டர்பன்டைனின் ஆவி ஒரு மெல்லிய துயர் இசையாக அவனைத் தொந்தரவு செய்தபடி இருந்தது. அனைத்து இசையும் துயர் வடிவானவையே என்றும், இத்தகைய குற்றவுணர்வு இயற்கையானதே என்று அவன் தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டான். ஆனால், கபடமற்ற சில தருணங்களில், டர்பன்டைனைக் கொன்றதன் மூலம் ஒருகாலத்தில் தன்னிடமிருந்த நளினத்தையும் தான் கொன்றுவிட்தை உணர்ந்தான். உண்மையில் நளினம் என்பது ஆற்றலின் ஒரு வடிவம்.
***
மழை பெய்கையில், யூபோரியா என்ற துளி வேகம் பெற்றது; அவள் ஒரு அறிவார்ந்த துளியாக மாறினாள். மற்ற அனைத்துத் துளிகளும் விழும்போது, அவள் உயர்ந்தாள். புவியீர்ப்பு அவளைச் சிந்தனையுடன் கவனித்தான், “இவள் எப்படி எனக்குப் பயன்படுபாள்? இவள் மூலம் நான் என்ன பலனைப் பெற முடியும்?” என்று யோசித்தான். யூபோரியா மேகங்களின் வழியே பறந்து, “நான் இறுதி அபிஷேகத்தின் துளி!” என்று கத்தினாள். நீரும் எண்ணெயும் ஒருபோதும் கலக்காது. அவற்றின் எல்லா திருமணங்களும் விவாகரத்திலேயே முடியும்.
மாபெரும் துறவியான போப்பாண்டவர் மீது மழை பெய்தபோது, புவியீர்ப்பு மனமிரங்கி ஏணியை இறக்கி, தனது மந்தபுத்தி தங்கை அதிமெய்யியலை பூமிக்கு இறங்க அனுமதித்தான்.
ஒரு துளி, மழையுடன் பயணம் செய்து, வாடிகனுக்குள் – புனிதத் தொட்டிகள், கெண்டிகளைத் தாண்டி – ஊடுருவிச் சென்று மழைக்கால விழாக்களின் நாட்காட்டியில் நுழைய முயன்றான். அவன் போப்பாண்டவருடன் ஒரு காதல் விவகாரத்தில் ஈடுபட்டான். ஆனால், ஈர்ப்புமிக்க அந்தக் காதல் நீடிக்கவில்லை. வரவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கான முன்தயாரிப்புகளைச் செய்யும் பொருட்டு, போப்பாண்டவர் அவனை துருக்கியின் முதன்மைப் பாதிரியாராக நியமிக்க முன்வந்தார். அனடோலிய மேட்டு நிலங்களுக்கு போப்பாண்டவர் விஜயம் செய்வது இதுவே முதல் முறையாக இருக்கும். பயண ஏற்பாடுகள் கவனமாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், உண்மைக் காரணம், அந்தப் பயணமே துளியிடமிருந்து விடுபடுவதற்காக போப்பாண்டவர் செய்த சாக்குபோக்கு மட்டுமே. அந்த அளவு அவனுடனான குதப்புணர்ச்சியில் மனிதர் நொந்து போயிருந்தார்.
துளி அங்காராவை அடைந்ததும், ஒரு பள்ளியைத் திறந்தான். கற்பித்தல் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிக்க பென்சில் தொழிற்சாலை அமைக்க கூட்டுறவு சங்கத்தை அவன் ஒப்புக்கொள்ள வைத்தான். நற்கருணை சங்கத்துடனான தனது கடிதத் தொடர்பில் அவன் ஆட்சிக்கவிழ்ப்பின் சாத்தியம் குறித்து குறிப்பிட்டான். புவியீர்ப்பு போப்பாண்டவருடனான தனது அடையாள ஒப்பந்தத்தின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் நாளான ஜூன் பதிமூன்றாம் தேதி அது நடைபெறுவதாக இருந்தது. . ஒவ்வொரு ஆண்டும் அவன் ஒரு விருந்து விழாவை நடத்தி மழைத்துளிகளை அழைத்தான். அனைத்து மழைத்துளிகளையும் அழைக்கப் போதுமான கண்ணாடிகள் இல்லையாதலால், ஒவ்வொரு மழை பொழிவிலிருந்தும் ஒரு பிரதிநிதியை மட்டும் அழைத்தான். ஒவ்வொரு ஜூன் பன்னிரண்டாம் தேதியும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெற்றன. ரோசா எட்முன்டா கொன்சாலஸ் என்ற இளம்பெண்ணின் கண்ணீரில் வாக்குகள் அளிக்கப்பட்டன.
துளியை துருக்கியின் முதன்மைப் பாதிரியாராக நியமிக்க போப்பாண்டவர் எடுத்த முடிவு சிறிதளவும் சந்தேகமின்றி குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்தத் துளி ஒரு முழு ஆண்டு போப்பாண்டவரின் பெருங்குடலில் வாழ்ந்ததாக ஒரு வதந்தி பரவியது. புதிய முதன்மைப் பாதிரியாரின் வடிவமும் அளவும் அந்தக் கதையை நம்பத்தகுந்ததாக்கியது. நிகழ்வுகள் தீவிரமடையத் துவங்கிய போது, போப்பாண்டவரின் வருகைக்காகக் காத்திராமல் துளி தனக்குத் தானே புனிதர் பட்டம் சூட்டிக் கொள்ள முடிவு செய்ததான். அவனது பரலோக ஆரோகணத்திற்கு முந்தைய நிமிடங்களில், பென்சில்கள் எவ்வாறு விற்கப்பட வேண்டும் என்பதை விளக்கும் ஒரு குறிப்பை அவன் எழுதினான்: ஏழைக் குழந்தைகளுக்கு ஆறு அடங்கிய பெட்டிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பன்னிரண்டு அடங்கிய பெட்டிகள், பணக்காரர்களுக்கு இருபத்தி நான்கு அடங்கிய பெட்டிகள். மற்றும், அரசுத் தலைவர்களின் குழந்தைகளுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆயிரம் அடங்கிய பெட்டிகள். ஒரு கட்டத்தில், ஆறு அடங்கிய பெட்டிகளில் இருந்த பென்சில்கள் எரியும் நுட்ப மெழுகுவர்த்திகளாக மாறின, அது குழந்தைகளுக்கு அச்சத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தியது. மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தை ரோசா எட்முன்டா கொன்சாலஸ். அவளது தாய் முடி திருத்தும் பணி செய்யும் சாதாரணப் பெண்மணி. அவள் சிறிய பெட்டிகளில் ஒன்றை வாங்கப் பெரும் தியாகம் செய்திருந்தாள்.
சிறிது காலத்திற்குப் பிறகு, நெறிதவறிய ஜப்பானியரான போட்டோ சான் சமரச நிலை புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டார். இளஞ்சிவப்பில் உருவாக்கப்பட்ட கோள வடிவ கனசதுர புகைப்படங்களான அவை போப்பாண்டவர் துளியை முத்தமிடுவதைக் காட்டின.
பொறுப்பற்றதும் மனிதத்தன்மையற்றதுமான அந்தத் துளி, மிக அழகான வண்ணங்களின் ஆயிரம் துளிகளால் ஆனது. அது எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. “இது கலையின் முடிவு!” என்று நிரந்தர எச்சரிக்கையாளர்கள் அறிவித்தனர். எதிர்காலத்தில் செய்யக்கூடிய ஒரே விஷயம், வீட்டின் மோட்டு மச்சு அறையில் அடைந்து கொண்டு, நுட்ப மெழுகுவர்த்தியின் ஒளியில் பத்திரிகைகளிலிருந்து புகைப்படங்களை வெட்டி படத்தொகுப்புகள் செய்வது மட்டுமே என்று அவர்கள் விமர்சித்தனர். அந்தத் துண்டுகள் ஒருபோதும் மீண்டும் ஒன்றிணையாது. மோனாலிசா மீண்டும் ஒருபோதும் இருக்காது, ஏனெனில் துளிகள் ஒருமுறை சுதந்திரத்தின் சுவையை உணர்ந்த பிறகு, அவை ஒருபோதும் லூவருக்குத் திரும்ப மாட்டா. ஏதோ ஒரு மிகவும் அரிதான சந்தர்ப்பத்தால் அவை திரும்பி வந்தாலும், ஒவ்வொரு துளியும் சரியான துளையின் வழியாகத் திரும்பிச் செல்லும் சாத்தியம் என்ன?
***
போகோடா நகரத்தில், ஒரு கருப்பு நாய் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தது. அது கருப்பு வனிலா நெற்றுக்களால் ஆன ஒரு பெரிய மிருகம் போல் தோற்றமளித்தது. குப்பைகளில் உணவு தேடிய அது வெயிலில் உறங்கியது, மழைக்கு வாசல்படிகளில் தஞ்சம் புகுந்தது. அதன் உடல் பருமன் அச்சுறுத்தலாக இருந்ததால் யாரும் அதன் அருகில் வரவில்லை, ஆனால், அது சாதுவாகவே இருந்தது. ஒவ்வொரு தெருநாயும் ஒரு எஜமானைத் தேடிக்கொண்டிருக்கும். இந்தக் கருப்பு நாய் தனது எஜமானை அந்தக் குளிர்ந்த, மழை பெய்யும் தலைநகருக்கு வந்திருந்த ஒரு துளியில் கண்டது. அவை நண்பர்களாயின. அவை ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்தன; யாரும் கட்டளையிடவில்லை. அது எஜமானும் இல்லாத, அடிமையில்லாத ஓர் எஜமான்-அடிமை உறவு போன்று அமைந்தது. நட்பு என்பதைத் தாண்டி, ஒரு திருமண உறவைப் போன்று இருந்தது. அவர்கள் ஒரு சிறிய கார் வாங்கினர். வெள்ளிக்கிழமை மாலை இறுதியில் அவர்கள் மணமுள்ள மெழுகுவர்த்தி ஏரியில் உள்ள தங்கள் குடிலுக்குப் புறப்படுவார்கள். அவர்களின் சாமானியப் பழக்கங்கள் கலையின் முடிவை வார இறுதி அளவுக்குக் கொண்டு வந்தன.
***
ஒரு துளி வெப்பமண்டல நிலத்தின் செழிப்பான தாவரங்களுக்கு மத்தியில் சென்றடைந்தது. அங்கே பனித்துளிகளால் மூடப்பட்ட மரகத இலைகள், செம்பருத்தி, சோம்பு மற்றும் கீரை ஆகியவை இருந்தன. துளி பில்லியட்ஸ் விளையாடப் பயன்படுத்திய பனிக்கோளங்களுக்கு பனிக்கட்டி இதயமும், சூரிய முடியும் இருந்தன. துளிக்குள் பரிணாமம் உருவாகத் தொடங்கியது: அவளுக்கு இரண்டு ஜோடி ரப்பர் உணர்கொம்புகள் வளர்ந்தன. மேல் உணர்கொம்புகள் நீளமாகவும், கீழ் உணர்கொம்புகள் குட்டையாகவும் இருந்தன. அவை அனைத்தும் சுருங்கக்கூடியவை. அவள் இலைகளின் மேல் நகர்ந்து, பசும் உயிரணுவை உண்டு, ஒளியின் வேகத்தில் அதை ஜீரணித்து, நிறுத்தற்குறி போன்ற கருப்புப் புள்ளியை வெளியேற்றினாள். அவள் சாம்பல் நிறமாகி, பிறகு கிட்டத்தட்ட ஒளிபுகவல்லவளாக மாறினாள். அவள் நீள்வடிவம் பெற்று ஒரு முனையில் தலை போன்ற அமைப்பும் (உணர்கொம்புகளுடன்), மறுமுனையில் கூர்மையான வால் போன்ற பகுதியும், நடுவில் ஒரு திமில் போன்ற அமைப்பும் கொண்டவளாக மாறினாள். இயக்கத்திற்காக வளர்சிதை மாற்றம் அடையாத அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் திமிலில் இருந்து கடினமான, மஞ்சள் நிற அடுக்காக வெளியேற்றப்பட்டன. இது உள்ளீடற்ற சுருள் வடிவத்தை உருவாக்கியது. அவள் அதனைத் தன் தங்குமிடமாகப் பயன்படுத்தத் தொடங்கி, உறங்குவதற்காக அதனுள் பதுங்கிக் கொண்டாள்.
குழந்தைகள் சிலர் அவளைத் தற்செயலாகக் கண்டுபிடித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அவளை ஒரு நெகிழிக் குடுவையில் வைத்து வளர்ப்பு பிராணியாக வளர்த்தனர். அவள் சுவாசிப்பதற்காக மூடியில் ஊசி கொண்டு துளைகளிட்டனர். அவளுக்கு ‘நத்தை’ என்று பெயரிட்டனர். அவ்வப்போது, “நத்தை என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டபடி அவளைப் பார்க்கச் செல்வார்கள். மறைப்புகளற்ற ஒரு நெகிழிக் குடுவைக்குள் அடைபட்ட அவளது குறைந்தபட்ச வாழ்க்கைமுறையை உருவாக்கும் அவளது மன நிலைகள், ஆசைகள், கனவுகள் மற்றும் சாகசங்களை அவர்கள் யூகித்தனர் அல்லது கற்பனை செய்தனர். அவளுக்கு ஈரமான புல் இலைகள், செலரி மற்றும் பொலன்டா ஆகியவற்றை உணவாகக் கொடுத்தனர்.
பின்னர் ஒரு நாள், அவர்கள் சென்று பார்த்தபோது அவளைப் காணவில்லை. அவள் மீண்டும் மோனாலிசா ஓவியத்தின் எண்ணெய் வண்ணத் துளியாக மாறி, தனது பாரம்பரிய முறையைப் பின்பற்றி பிளாஸ்டிக் குடுவை மூடியின் துளை ஒன்றின் வழியாக தப்பித்துவிட்டாள். அது இந்த உலகில் வாழ்க்கை ஒரே வகையானது அல்ல, பல வடிவங்கள் கொண்டது, ஒவ்வொன்றும் அதன் சொந்த தர்க்கத்தின்படி செயல்படுகிறது, பரிணாம வளர்ச்சி கூட அதனை ஒன்றுபடுத்த போதுமானதாக இல்லை என்பதற்கான ஆதாரமாக ஆனது.
நகரத்தில் வசிக்கும் மற்ற குழந்தைகள், ஆறாவது மாடியில் இருந்த தங்களது அடுக்ககக் குடியிருப்பின் வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களது இருக்கைக் கூடத்தில் (பால்கனியில்) பறந்து கொண்டிருந்த ஓர் அலையும் துளியைப் பார்த்தனர். அது வெளியேற வழி தெரியாமல் திணறியது. அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது அவர்களது பெற்றோர் பொருத்தியிருந்த கம்பி வலை பாதுகாப்பினால் இருக்கைக் கூடம் அடைக்கப்பட்டிருந்தது.
“அப்பா! அப்பா! மீசையுள்ள சிறிய பறவை!”
சிற்றிலை படர்ச்செடிகள் மற்றும் ஜெரேனியச் செடிகள் கொண்ட தொட்டிகள் நிறைந்த அந்த சிறிய இடத்தில், துளி பயந்தது போல சுற்றிப் பறந்தது. முன்னும் பின்னும், எட்டு வடிவில், வளைய சுழற்சிகள் மற்றும் சுருள் திசைகளில் பறந்து, தப்பிக்க முடியாமல் திணறியது. கண்ணாடிக்கு மறுபுறம் இருந்த அடுக்ககக் குடியிருப்பின் குழந்தைகளும் கிளர்ச்சியடைந்திருந்தனர். அது தெய்வீகப் பூச்சியாதலால் அது தங்களோடு தங்கியிருக்காது என்பதை அவர்கள் உணர்ந்தனர். குழந்தைகளுக்கே உரிய அலைவுறும் மனம் கொண்ட தருணங்களில் வாழ்ந்தபோதிலும், பறத்தலின் சாஸ்வதம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் அந்தத் துளியை வளர்ப்பு பிராணியாக வைத்திருக்க விரும்பினர். அவர்கள் அதற்காக கதவுகள் மற்றும் ஜன்னல்களுடன் கூடிய சிறிய காகித வீடு, பனிவீடு, மற்றும் அது சவாரி செய்ய சிறிய மிதிவண்டியையும் உருவாக்கியிருப்பார்கள்.
ஆனால், திடீரென்று அது மறைந்துவிட்டது.
“அது தப்பித்துவிட்டது! அப்பா! அம்மா! அது தப்பித்துவிட்டது! அது உருண்டையாகவும், மிகவும் அழகாக இருந்தது!”
அவர்கள் சொன்னதை நிச்சயமாக யாரும் நம்பவில்லை.
***
இதற்கிடையில் நார்வேயில், ஒரு துளி பனிப்பறவையைத் தேடி பனி மூடிய வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். உறுதியில்லாத ஒரு கட்டுக்கதையைத் துரத்தியபடி, அவள் தீராத நீண்ட நாளுக்குள் புகுந்தாள். ஒருபோதும் நீங்காத இளஞ்சிவப்பு விடியல்கள் படிகம் போன்ற ஏரியில் பிரதிபலித்தன. அந்த ஏரியின் அடியில் நீர்மூழ்கி உடையில் ஒரு நுண்ணிய மெழுகுவர்த்தி தன்னைத் தீர்த்துக் கொள்ளாமல் எரிந்து கொண்டே இருந்தது. குதிரைத் தலைகளைக் கொண்ட சோம்பேறி கழுகுகள் முடிவில்லாத குளிர்ச்சியான பரப்பின் மேல் பறந்துகொண்டிருந்தன. பனிக்கட்டியை நொறுக்கியபடி அகலமான தடங்களை விட்டுச் சென்ற ஒரு ஷெர்மன் பீரங்கி வண்டியில் துளி பயணித்தாள். உள்ளூர் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கவசம் பூண்ட துளியின் முன்நகர்வைக் கண்டு நார்வே முழுவதும் பயத்தில் நடுங்கியது. அவள் எவ்வளவு தூரம் செல்வாள்? எப்போதும் மறுக்கப்படாத உள்ளூர் கதைகளின்படி, பனிப் பறவை பாடினால், ஏரியின் அடியில் உள்ள மெழுகுவர்த்தி அணைந்துவிடும், அந்தச் சுடருடன் கலைஞர்களின் ஊக்கமும் அணைந்துவிடும். அதற்குப் பதிலாக அவர்கள் நித்திய மனச்சோர்வின் வாசனையைப் பெறுவார்கள்.
தவிர்க்க முடியாமல், போர் வெடித்தது. கவச வாகனங்கள் ஆயிரமாகப் பெருகின. அறுகோண கண்ணாடி வடிவில் இருந்த ஒவ்வொரு வாகனமும், பனிக்கட்டியின் ஒளி ஊடுருவலின் மீது முன்னேறின. அது முற்றிலும் மாயத் தோற்றங்களாலும், அதீத கற்பனைகளினாலும் உருவான போராக இருந்தது. பனியும் பெருகியபடியே இருந்தது. பருத்த, வெள்ளை இளவரசியும் துருவ மன்னனின் மகளுமான ஒருத்தியை மணக்க ஏற்பட்ட போட்டியினால் வட ஐரோப்பிய (ஸ்காண்டிநேவிய) சக்திகளிடையே பகைமை உருவானது. அவளது பரம்பரை மிகவும் புகழ்பெற்றது. ஆனால், பனி இளவரசிகள் அதிகரிக்கத் தொடங்கியபோது, அந்த பனி நிறைந்த வெற்றிடங்களில் ஏற்பட்ட மாறுபட்ட எண்ணங்களால் குழப்பங்கள் நிலவின. செதுக்கப்பட்ட சொட்டுக் குழாயில் அடைக்கப்பட்டிருந்த ஜெனரல் பான்சர் கிக் துளி யுத்தத்திற்குத் தலைமை தாங்கினார். நம்ப முடியாத காட்சிகளாக போர் நிகழ்ந்தது. இலட்சக்கணக்கான வீரர்கள் மிதிவண்டிகளில் துருவப் பனிப்பாறையைப் பிளந்தபடி சென்றனர். கழுகுகள் பார்வைக்கு அருகாமையில் தென்பட்டன. பின்னணியில் வெள்ளி நிற பனிப்பறவை அதன் அணுக்களின் மாடக்குழியில் எப்போது போல அமர்ந்திருந்தது. இவையனைத்தும் ஒரு துளியின் காரணமாக!
பின்னர், சொட்டுக் குழாயின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் அதை பனிமூட்டத்தால் நிரப்ப அனுமதித்தது. நார்வே பிரதமரின் உத்தரவின் பேரில், விசைக் குழாயின் மூலம் பனிமூட்டம் வெளியேற்றப்பட்டபோது, துளி உள்ளே இல்லாதது தெரியவந்தது. அது ஏரியின் அடியில், மெழுகுவர்த்தியின் சுடர் நுனிக்கு மேலே தொங்கிக்கொண்டு மீண்டும் தோன்றியது. வெப்பம் அதை மென்மையாக்கி உருமாற்றியது, அதன் வண்ணங்களை பிரகாசமாக்கி, பழைய மலர்களின் வித்தியாசமான வாசனையை வெளியிட வைத்தது.
***
சீனாவின் அகன்ற புல்வெளிகளில், ஒரு துளி செய்தி நிறுவனத்தை நிறுவியது. நல்லது கெட்டது என்ற இரட்டை தத்துவத்தின் (யின்-யாங்) மாறாத சுழற்சிகளைக் கொண்ட கிராம வாழ்க்கை, செய்தி ஒளிபரப்புகளின் இரைச்சலால் குழப்பமடைந்தது. ”துளி இன்று” நிறுவனம் ஒரு கூடைப்பந்து அணியை வாங்கியது. (அந்த அணிக்கும், மங்கோலியாவின் வெளிப்புறக் காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட ஆடம்பர அரங்கத்திற்கும் சேர்த்த) துவக்க விழாப் போட்டி, என்.பி.ஏ நட்சத்திர வீரர்கள் தேர்வு அணிக்கு எதிரானதாக நடந்தது. வட அமெரிக்கர்கள் மஞ்சள் பேரரசின் பெரும் விளையாட்டுச் சந்தையை வென்றெடுக்க ஆர்வமாக இருந்தனர், அவர்களின் இந்த வருகை அரசுத் துறையால் மேலாண்மை செய்யப்பட்டது. போப்பாண்டவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக உறுதியளித்தார். அணி சீனாவின் மிக உயரமான, வலிமைமிக்க மனிதர்களால் உருவாக்கப்பட்டது. பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட திரு. துளி, பயிற்சி நிகழ்வுகளில் புதுமையான முறையைக் கையாண்டார். உண்மையில் அது அவ்வளவு புதியதல்ல, ஏனெனில் அம்முறை பண்டைய ரோமானியர்களால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது, ஹவாய் கடல் உலாவி வீரர்களால் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது சாதாரண பந்திற்குப் பதிலாக மிகவும் கனமான வெண்கலக் கோளத்தைக் கொண்டு பயிற்சி செய்வதை உள்ளடக்கியது. அத்தகைய பயிற்சிகளுக்குப் பிறகு உண்மையான போட்டிக்கு வரும்போது, வீரர்கள் பந்தை மிக எளிதாகக் கையாளக்கூடிய வலிமையான நகர்வுகளை வளர்த்துக் கொள்வார்கள். முதல் நாள் அவர்கள் இருபது கிலோ வெண்கலப் பந்தைப் பயன்படுத்தினர், இரண்டாவது நாள் இருபத்தைந்து கிலோவாகவும், மூன்றாவது நாள் முப்பது கிலோவாகவும் பந்தின் எடை உயர்ந்தது. வலிமைமிக்க சீன வீரர்கள் கனமான குண்டின் எடையால் கொக்கி போல வளைந்தனர். துளி அடுத்த நிலைக்குச் சென்றார்: அவர் வீரர்களை ஆறு மைல் நீளமும் இரண்டு மைல் அகலமும் கொண்ட மைதானத்தில் பயிற்சி செய்ய வைத்தார். அதன் பரிமாணங்கள் வெண்கலப் பந்தின் எடைக்கு விகிதாசாரமாக இருந்தன. துளி விகிதங்களைக் கணக்கிடுவதில் மிகவும் திறமையானவர், அவருக்கு வரை கட்டத் தாள் பயன்படுத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. அவர் அதே திறமையை செய்திகளுக்கும் பயன்படுத்தினார், அவற்றின் விகிதாசாரங்களை கணக்கிட்டபடி செய்திகளின் அளவைப் பெரிதாக்கினார். அதுவே அவரது நிறுவனத்தின் வெற்றிக்கான காரணம்; அவர் “சீன செய்திகள்” நுட்பத்தை முன்னோடியாக உருவாக்கி, அதனை உலகெங்கிலும் பிரபலப்படுத்தினார்.
இந்த கடுமையான பயிற்சி தடகள வீரர்களிடமிருந்து நிறைய வியர்வைத் துளிகளை உருவாக்கியது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கனமான பந்தை சுற்றிலும் வீசி, தொடர்ந்து ஒரு வளையத்திலிருந்து மற்றொரு வளையத்திற்கு ஓடுவது மனிதத்தன்மையற்றதாக இருந்தது. செலவைப் பொருட்படுத்தாமல், துளி ஒரு ஆலோசகரை நியமித்திருந்தார். அவன்: புவியீர்ப்பு. அவன் போப்பாண்டவருடன் திருமணம் செய்து கொள்வதற்காக சீனாவுக்கு வந்திருந்தான். அது நூற்றாண்டின் செய்தியாக இருந்தது. செய்தித்தாள் தலைப்புகள் உலகளாவிய மன்மதனான புவியீர்ப்பு, திருத்தந்தையுடனான தனது முதல் இரவு காதலுக்குப் பிறகு அவரிடமிருந்து விடைபெறுகையில் “பால்டிக் கடலில் சந்திப்போம்!” என்று கூறியதாக மேற்கோள் காட்டியிருந்தன: வடக்குக் கடல், சிவப்பு பளிங்குக் கல் சுவரால் சூழப்படவிருந்தது, அது கட்டுமானத்தில் இருந்தது; அதன் ஒரு பக்கம் பெருஞ்சுவருடன் இணைந்து, இடிமுழக்கம் போன்ற ஒலியுடன் முடிவடையும்.
போட்டிக்கு முந்தைய இரவு, துளி அணி வீரர்களில் மிக வலிமையான ஐவரைப் படுக்கையிலிருந்து எழுப்பினார். நிலவொளியில் கடைசி பயிற்சி நிகழ்வுக்காக இரகசியமாக அவர்களை அழைத்துச் சென்றார். பார வண்டியில் ஏறிய அவர்கள் மங்கோலியாவின் வெளிப்புற எல்லைகளுக்குச் சென்றனர். வெளிறிய பாலைவனத்தில் நின்ற அவர்கள் சுற்றிலும் பார்த்தனர். தொலைதூரத்தில் ஒரு வளையம் நூற்றி இருபது அடி உயரத்தில் எழுந்து நின்றது. அதற்கு எதிரே, மறுபுற தொலைதூரத்தில் மற்றொரு வளையம் இருந்தது, அதன் கம்பத்தின் பாதி பூமியின் வளைவால் மறைக்கப்பட்டிருந்தது. அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு மிதி இயக்கி (மோட்டார் சைக்கிள்) இரைச்சலுடன் நின்றது. அவர்கள் ஓட்டுநரை உற்றுப் பார்த்தனர், வண்டியில் இருந்து இறங்கிய புவியீர்ப்பு தனது தலைக்கவசத்தை அகற்றினான். அவனைத் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்த சீன வீரர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். ஊடக பிரபலங்கள் என்றால் அப்படித்தான் ஆகிவிடுகிறது. உண்மையிலேயே அவர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்வதே கடினமாகி விடுகிறது! திரு. துளி மோட்டார் சைக்கிளை நோக்கி மிதந்து சென்றார், இருவரும் சேர்ந்து இருக்கைக்குப் பின்னால் இருந்த பெரிய பெட்டியை பிடித்திருந்த கயிறுகளை அவிழ்த்தனர். பெட்டியின் மூடியில் வாடிகனின் சின்னம் செதுக்கப்பட்டிருந்தது. பெட்டிக்குள் தங்கத்தால் ஆன நீர்நாயின் தலை இருந்தது, அது ஐம்பது கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதுதான் கடைசி பயிற்சி நிகழ்வுக்குப் பயன்படுத்தப்படவிருந்தது, வீரர்களின் வலிமையை எல்லைக்குத் தள்ளி, பதிலுக்கு அந்தத் தலையின் புகழ்பெற்ற சக்திகளைப் பெறுவதற்காக அந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“நீண்ட பாஸ்கள்,” என்று துளி உத்தரவிட்டார். வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினர். நீர்நாய் தலையின் நசுக்கும் எடை அவர்களை இரட்டிப்பாக வளைத்தது. அதைப் பிடிக்கும்போது, அவர்கள் பின்னோக்கித் தள்ளாடினர்; அவர்களின் நரம்புகள் வீங்கி, வலியால் முகம் சுளித்தனர். துளியோ ‘அதிக வேகம், அதிக துல்லியம் வேண்டும்’ என்று குரல் கரகரக்கக் கத்தினார். அவருக்கு அருகில் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த புவியீர்ப்பிடம், “உயரத்தின் சில துளிகள் மூர்க்கத்தனத்திற்கு ஈடாகாது,” என்றார். வீரர்களிடமிருந்து விழும் வியர்வை மங்கோலியா முழுவதும் எதிரொலித்தது.
தொடர் இயக்கம் மற்றும் கையாளுதல் காரணமாக, நீர்நாயின் தலை சூடாகியது. தங்கம் மின்னத் தொடங்கியது; நீர்நாயின் மூளையில் இருந்த கொழுப்பு உருகி, வீரர்களின் விரல்களுக்கிடையே வழிந்தது. அது பெரிய குண்டை வழுக்கலாக்கி, வீரர்கள் பிடிப்பதற்கும் எறிவதற்கும் மேலும் கடினமாக்கியது.
இறுதியில், வீரர்களின் குழு கூம்பு போன்ற வடிவத்தில் உயர்ந்தது. கூம்பின் உச்சியில் நீர்நாயின் தலை இருந்தது. கொழுப்பை வெளியேற்றிய அது, நிலவை விட பிரகாசமாக மின்னியது. அதன் கீழே ஐந்து கூடைப்பந்து வீரர்கள் யூத வழிபாட்டின் புனிதப் பெட்டிகளைப் போல நீட்டிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கீழிருந்து மேலெழும்பி கருமையான, நட்சத்திரமற்ற வானத்தில் பறந்தனர். புவியீர்ப்பும் அவர்களின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்ட்டான். மோட்டார் சைக்கிள் புவியீர்ப்புயைப் பின்தொடர்ந்தது. துளி அவர்கள் உயரே பறந்து சிறுத்துப்போவதைப் பார்த்தார், பறந்த அனைவரும் இறுதியாக மறைந்து போயினர். துளிக்கு அப்போது தோன்றிய ஒரே எண்ணம், திருமணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதுதான்.
பின்னர் அவர் தனது அதிகப்படியான மற்றும் பொருத்தமற்ற பயிற்சி முறைகளுக்காக விமர்சிக்கப்பட்டார். ஒரு கணம் அவரே கூட தான் அதிகம் சென்றுவிட்டோமா என்று சந்தேகம் கொண்டார்.
ஆனால், அவருக்கு அது உயர்ந்த வேறுபாட்டைப் பேணுவதற்கான கௌரவப் பிரச்சினையாக இருந்தது. யதார்த்தத்தின் விளையாட்டு தன் இயல்பிலேயே எல்லாவற்றையும் சமன்படுத்தியது. சிதறிய துளிகள் ஆர்வத்துடன் தங்களை ஒப்புக் கொடுத்த கண்டுபிடிப்புகள் கூட யதார்த்தத்தில் பின்னோக்கிய விளைவைக் கொண்டிருந்தன. துளியின் ஒவ்வொரு அவதாரத்திலும், ஒரு துளி மையுடனும், நம்பகத்தன்மை மீதான தீவிர கவனத்துடனும் கண்டுபிடிப்பு என்னும் விஷயம் தன்னைத் தானே எழுதிக்கொண்டிருந்தது எனலாம். ஒவ்வொரு துளியும் தனது மேற்பரப்பு இழுவிசையின் நுண்ணிய சமநிலை காரணமாக தன்னிறைவு அடைந்தது. சூழல் என்று எதுவும் இல்லை, பிரகாசிக்கும் ஒளிப்பிறக்கம் மட்டுமே.
***
துளிக்கு கதவுகள், ஜன்னல்கள் என்ற திறப்புகள் எதுவுமில்லை. வரலாற்றில் எண்ணற்ற உற்பத்தி முனைகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட துளி, சமமாக கன்னித்தன்மையும் யோனித்தன்மையும் கொண்டிருந்தது, அரை மயக்க நிலை அறுவை சிகிச்சையின் அற்புதத்தால், பாலின மாற்றம் பெற்று ஆரியோல் என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டது. துவக்கத்தில் டாக்டர் ஆரியோல் என்று சிறப்புக் கொண்டிருந்தாள் அந்தத் துளி. ஒரு இடைநீக்கம் காரணமாக, ஆரியோல் குழப்ப நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தாள்.
அந்த இடைநீக்கம் ஒரு உன்னத காதல் கதையை உருவாக்கியது: இரவு அங்கி அணிந்திருந்த ஆரியோல், தனது சிறிய அரண்மனையின் மாடியில், பூச்சிகள் மற்றும் நீரூற்றுகளின் ஒலிகளால் உயிர்ப்புடன் இருந்த இருண்ட தோட்டத்தை நோக்கிய நிலையில், தனது கற்பனையில் மூழ்கி, சிலந்திப்பூச்சி போல் நெய்துகொண்டிருந்தாள். அரண்மனை தீப்பற்றி எரிந்தது, ஆனால், தீயும் கூட இடைநிறுத்தப்பட்டிருந்தது. துளி மற்றொரு பரிமாணத்தில் இருந்தாள். இது யதார்த்தத்தின் உத்திகளால் நம்பகமாக்கப்பட்ட மற்றொரு அலட்சியக் காட்சி. இப்படியெல்லாம் அவளுக்கு மட்டுமே நடந்திருக்க முடியும்.
திடீரென கதையின் மூன்றாம் நிலையில், முகமூடி அணிந்த மூன்று உருவங்கள் கூரைகள் மற்றும் வடிகால் குழாய்களிலிருந்து ஒரே நேரத்தில் மாடி இருக்கைக் கூடத்தில் இறங்கினர். கற்பனைக் கனவில் மூழ்கியிருந்த ஆரியோல், துடுக்குற்று எழுந்து சுழன்றாள். அவள் தன்னைத் தாக்க வந்தவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க பல்வேறு யுத்திகளை முயற்சித்தாள். அவளது அந்த இயக்கம் அவள் பாதரசத்தில் மிதப்பது போலிருந்தது. அவளது இந்தப் போராட்டத்தில் அவளது இரவு அங்கி கிழிந்தது, அவளது கூந்தல் கலைந்தது. குழுவாகச் செயல்பட்ட மூவரும் அவளை அச்சுறுத்தி, உந்தித்தள்ளி ஒரு பெட்டிக்குள் பூட்டினர். அது கடகடக்கும் ஒலியுடன் மூடிக்கொண்டது. அரண்மனை தீப்பிடித்து எரிவதைக் காண வந்த கூட்டம், இந்தச் செயலைப் பார்க்கவில்லை. கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறுவதைப் போல, தங்கள் ஏணிகளை நீட்டித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களும் இக்காட்சியை முற்றிலும் கவனிக்கவில்லை. கடத்தல்காரர்கள் இந்தக் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவளைத் தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றனர். அகழிக்கு மறுபுறம் அவர்களுக்காக ஒரு மகிழுந்து காத்துக் கொண்டிருந்தது. அவர்கள் குன்றுகளின் வழியே நீண்ட நேரம் பயணித்தனர், நிலவு வரும் பொழுதுக்குள் அவர்கள் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டின் வளாகத்துக்குள் வந்தனர். பின்வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்த அவர்கள், கைதியான அவளை ஒரு நிலவறைக்குள் பூட்டி அடைத்தனர்.
அதன்பிறகே அவர்கள் தங்கள் முகமூடிகளைக் கழற்றிவிட்டு, ஆசுவாசமடைந்தனர். பீச்சுக்குழாய், நெளிவுக்குழாய் மற்றும் குழாய்வாய் ஆகிய அவர்கள் மூவரும் கொடூரமான குற்றவாளிகள். பல ஆண்டுகளாக ஒரு துளியைக் கடத்தத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். பருமனுடனும், கரகரப்புக் குரலுடனும், நிறமி பூசப்பட்ட அமைப்புடனும் இருந்த அவர்கள், குடித்துக் கும்மாளமிட்டு மேஜை மீது நின்று கூச்சலிட்டபடி நடனமாடினார்கள். பணயத் தொகையைக் கேட்பதற்காக அவர்கள் புவியீர்ப்பை தொலைபேசியில் அழைத்தார்கள்.
டிரிங்… டிரிங்… டிரிங்…
சிறிய மணியோசை குன்றுகளெங்கும் எதிரொலித்தது. முகடுகளுக்கு இடையே ஒலித்துத் திரும்பிய அந்த ஒலி ஒருவித ஒத்திசைவை உண்டாக்கியது.
***
இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை ”துளி செய்தி நிறுவனம்” வெளியிட்டது. புகைப்படம் மற்றும் அச்சுத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கையடக்க அருங்காட்சியகங்கள் சாத்தியமாயின. இங்கு, ”படத்தை” முழுமைப்படுத்த, கதையின் முந்தைய பகுதிக்கு ஒரு பின்னோக்கிய பார்வை தேவைப்படுகிறது.
மோனாலிசா என்பது கலைப்படைப்பை (புகைப்படம், அச்சு அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் மூலம்) இயந்திர மறு உருவாக்கம் செய்வதன் சின்னமாக இருக்கிறது. இந்த அற்புதமான ஓவியத்தின் தகுதிகளை மறுக்க முடியாது. ஆனால், இது இன்று வகிக்கும் மேலாதிக்க நிலைக்கு இதனை உந்தித் தள்ளிய சில வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்வது முக்கியம். லியோனார்டோவின் மற்ற பெண் உருவப்படங்களும் இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருக்க முடியும். செசிலியா கல்லெரியானியின் உருவப்படமான “கஸ்தூரி மான் உடனான பெண்” ஓவியத்தை இதுவரை வரையப்பட்டதில் மிக அழகான, மிகச் சிறந்த படம் என்று பல விமர்சகர்கள் புகழ்ந்துள்ளனர். ஜினேவ்ரா டி பென்சியின் உருவப்படமான ”தீவிரமான, வட்டமான முகம் கொண்ட குழந்தைத்தனமான பெண்” ஓவியமும் தலைசிறந்ததே. இவை இரண்டுமே கற்பனையைத் தூண்டும் மர்மத்தன்மையில் எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல.
அப்படியெனில், மோனாலிசாவின் ஒப்பற்ற பிரபலத்துக்கு என்ன காரணம்? பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுமையிலும் சுற்றுலா வளர்ச்சியடையத் தொடங்கியபோதும், மேற்கத்திய கலையின் இலக்கணத்தை நிறுவும் புத்தகங்கள் எழுதப்பட்டபோதும், மோனாலிசா லூவரில் அனைவரும் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதே வேளையில், செசிலியாவும் ஜினேவ்ராவும் கிராக்கோ மற்றும் லிச்டென்ஸ்டீனில் உள்ள அறியப்படாத சேகரிப்புகளில் மங்கிக் கிடந்தன.
1911இல் மோனாலிசா ஓவியம் திருடப்பட்ட செய்தி, செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் இடம்பெற்றது. அந்த காலகட்டத்தில் தான், புகைப்படம் மற்றும் அச்சுத் தொழில்நுட்பங்கள் மூலமாக கலைப்படைப்புகளை பெருமளவில் மறுஉருவாக்கம் செய்யும் வழிவகைகள் உருவாகியிருந்தன. இந்த செய்தி இயல்பாகவே பரவலான விளைவுகளை ஏற்படுத்தியது. பல்வேறு வடிவங்களில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட மோனாலிசா, அழிக்க முடியாத சின்னமாக மாறியது.
ஆனால் இதற்கு இன்னொரு புதிய நாகரிக முன்னேற்றமும் துணை புரிந்தது: உலகளாவிய செய்திக் கதையின் உருவாக்கம். பத்திரிகையியல் தனது தொழில்துறை முதிர்ச்சியை அடைந்த சமயத்தில், சில மாதங்களுக்குள் இரண்டு நிகழ்வுகள் நடந்தன. இவை அந்த முதிர்ச்சியை நியாயப்படுத்தி, அதை நிறைவடையச் செய்தன: ஒன்று மோனாலிசா திருடப்பட்டது மற்றொன்று டைட்டானிக் கப்பலின் மூழ்கல். இந்த இரு நிகழ்வுகளும் ஒரு கட்டுக்கதையை உருவாக்கின. அவை தங்களின் வகைமையில் முதல் செய்திகள் என்பதால், பரந்துபட்ட கவனத்தையும் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தின. செய்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது வழமையான முறைகளைத் துறந்து மாற்றத்திற்கு நிர்பந்திக்கப்பட்டன. மோனாலிசாவின் தப்பியோடிய துளிகளில் ஒன்று செய்தி நிறுவனத்தை நிறுவியது அதுவும் மனித குலத்தின் பெரும் நரம்பியல் புதிராக விளங்கும் சீன நாட்டில் என்பது ஒரு கவித்துவ நீதி.
”துளி இன்று” எனும் அந்த நிறுவனம் மனிதர்களுக்காகச் சிந்திக்கத் தொடங்கியிருந்த கொழுப்பு பூசிய தங்கத்தாலான நீர்நாயின் தலை எனும் புதிய திருக்குருதிக்கலத்திற்கான தேடலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தது. இன்னொரு சிறப்புச் செய்தியும் இருந்தது: போப்பாண்டவரை திருமண பீடத்தில் விட்டுச் சென்ற பின், மணப்பெண் உடையில், கையில் மலக்குடல் மாத்திரையோடு பாலைவனங்களில் அலைந்து திருந்து கொண்டிருந்த புவியீர்ப்பின் உணர்ச்சிகர நாடகமே அது. புவியீர்ப்பை யாராலும் பின் தொடரமுடியவில்லை. ஆனால், அவனது இயக்கங்களை புவியியல் மடக்கைகளைக் கொண்டு கணக்கிட முடிந்தது. அவன் ஒரு வழுவழுப்பான களிம்பைத் தடயமாக விட்டுச் சென்றபடி இருந்தான். ஆய்வக பரிசோதனைகள் அந்தக் களிம்பு நியூடோனியா எனும் ஓர் உயிர்ப்பொருளால் ஆனது என்பதையும் அதன் உயிரணுக்கள் பாலியல் இச்சையால் விரிவடையக்கூடியவை என்பதையும் வெளிப்படுத்தின. அதன் விரிவாக்கம் முடிவற்றதாக இருந்தது. உயிரணு சவ்வின் நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமை ஆகியவற்றைக் கண்டுபிடித்ததன் மூலம் ஜவுளித் தொழிற்சாலையில் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதன் பின், அப்பொருள் வலிமையாகவும், உயரமாகவும் வளர்ந்த கூடைப்பந்து வீரர்களுக்கான சட்டைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.
***
ஸ்பார்க்கி எனும் வேடிக்கைத் துளி நகைச்சுவை கலைஞனானது. அவன் பழைய நகைச்சுவைகளைக் கோர்த்து, பாடனில் உள்ள சூதாட்டக் கூடத்துக்கு அருகிலுள்ள ஒரு பாரில் தினமும் இரவு தனது நிகழ்ச்சியை நடத்தினான். சப்ரானோ இணையின் இசை நிகழ்வுக்கும், உணர்வுமிக்க எஃகு ரோபோ நிகழ்வுக்கும் இடையில் அவனுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அவனை “உலகின் மிகவும் வேடிக்கையான துளி” என்று அறிமுகப்படுத்தினார். அவனது நகைச்சுவைகள் மோசமாகவே இருந்தன. ஆனால், அவனது சிறிய உடல் அளவுக்குப் பொருத்தமில்லாத கனத்த குரலில் அவன் பேசும் போது அவனது நகைச்சுவைகள் நன்றாக எடுபட்டன. விரல் நுனியால் எளிதில் நசுக்கி விடக்கூடிய ஒரு துளியாக இருந்தும், அவன் தன்னை டான் ஜுவான் போன்ற கட்டழகனாக நினைத்துக் கொண்டு, சோவியத் ஊழலின் மடியிலிருந்து தங்கள் கணவர்கள் கறந்த ரூபிள்களை செலவழிக்க வந்திருந்த நோமன்கிலேச்சரின் பருத்த பெண்மணிகளைப் பார்த்து மோகமுற்றது சிறந்த கேளிக்கையை உண்டாக்கியது. அவன் பேசத் துவங்கும் முன்பே, அவனது தோற்றமே சில சலுகைகளை அவனுக்குத் தந்தது: உயர்ந்த தொப்பி, இறுக்கமான இரவு உடை, ஒற்றைக் கண்ணாடி, கைத்தடி ஆகிய அனைத்தும் கை கால்கள் ஏதுமற்ற அவனது உருண்டை வடிவத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்களில் பலர் நினைவுப்பொருளாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவனது பிரதியை வாங்க விரும்பினர்.
சூதாட்டக் கூடத்தில் நிகழ்வுகளுக்கான காலம் மூன்று மாதங்கள் நீடித்தது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஸ்பார்க்கி காட்டின் நடுவில் சிறு மரக்குடிலில், வேலையாட்களோ அண்டை வீட்டார்களோ இல்லாத தனிமை வாழ்வை மேற்கொண்டான். அநேக நகைச்சுவை கலைஞர்களைப் போலவே அவனும் துயரார்ந்தவனாகவும் ஆளண்டாதவனாகவும் வாழ்ந்தான். நகைச்சுவைகளைத் தொடர்ந்து கூறுவது அவனது ரசனையை வளமிழக்கச் செய்து அவனை வெறுப்பாகவும், வெறுமையாகவும் உணரச் செய்தது. அவன் தன்னை ‘கசப்பின் துளி’ ஸ்பார்க்கி என அழைத்துக் கொள்ள விரும்பினான். அவன் ஒரே நகைச்சுவைத் துணுக்குகளை ஒவ்வொரு வருடமும் கூறினான். அவனது நகைச்சுவைகள் நைந்து, கிழிந்து தொங்கிக் கந்தலாகி விழுந்தாலும், அவை எவ்வளவு காலம் சிரிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க விரும்பியவனைப் போல் மீண்டும் மீண்டும் அவன் அவற்றையே கூறினான். இரவில் அவை அவனது படுக்கையின் விதானத்திலிருந்து, அவன் கண் முன்னே வந்து அவனை பயமுறுத்த முயன்றன. அதனால் எந்தப் பயனும் இல்லை என்று உணர்ந்ததும் அவை, பெருமூச்சு விட்டபடி, பாழ்பட்ட இடங்களுக்கு ஓடி மறைந்தன.
கானகங்களின் குரல், இனிமையானது.
***
பௌத்த நாடுகளின் செம்மார்ந்த அழகிய மாலைப் பொழுது. ஆண்களும் பெண்களும் நீர் நிறைந்த தங்களது வெள்ளி குவளைகளைச் சுமந்தபடி எளிமையான தங்கள் சுற்றுப்புறத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களது நித்திய ஏழ்மை நிலைக்கக்கூடிய புதிய செயல்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. வழமையான அன்றாடமே அவர்களுக்கு நிரந்தரமாக வாய்த்திருந்தது. ஆனாலும்… ஆனால்… அவர்கள் அனைவரும் திடீரென வானத்தை நோக்கினர். வானத்தில் ஒரு துளி தெரிந்தது. அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தது. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, சிவந்த மஞ்சள், மஞ்சள், துர்க்க நீலம் ஆகிய நிறங்களை அடக்கிய அந்தத் துளி, சற்று ஒளிர்வுடனும், மிருதுவும் இறுக்கமும் கலந்ததாகவும், குழிவுடனும் இருந்தது. அது தனக்குள் நிறைந்திருந்தாலும், வெறுமையான சிறிய துளியாகக் காற்றில் மிதந்தது. இரவு கவியும் முன் நிலத்தில் இறங்க, அது மெதுவாகக் கீழே நோக்கி வந்தது. வறிய பௌத்தர்கள் அதனைப் பிடிக்க முயன்றனர். அதன் திரவ வடிவில் அது பொதுமைக்கும் தனிமைக்குமான தாழ்ப்பாளாகச் செயல்பட்டது. ஏழை ஆசிய மக்களின் வறுமையான வாழ்க்கை பொதுப் பிரச்சினையாக, புள்ளிவிவரங்களால் அளக்க வேண்டிய சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது; தனியுரிமைகள் மற்றும் இரகசியங்கள் செல்வந்தர்களின் வாழ்க்கைக்கு மட்டுமே உரியதாக இருந்தன. பாடுபட்டு சேர்த்த சேமிப்புகளைக் கொண்டு வாங்கப்பட்ட, தஙகளது தனிப்பட்ட அல்லது குடும்பப் பொக்கிஷம் என்று போற்றப்பட்ட அந்த வெள்ளிக் குவளைகள் பொதுமை-தனிமைக்கான இணைப்புகளை முன்னுரைத்தன. துளி அவற்றை பழைமையானதாக்கியது. இறுதியில் துளியை நெருங்க எவருக்கும் துணிவில்லை. துளியைச் சுற்றி ஒரு ரம்யமான பூங்கா உருவாகியது. துளியின் புனிதத் தன்மை காரணமாக, அழியும் நிலையில் இருந்த குறுநரிகளின் சரணாலயமாகவும் அந்தப் பூங்கா மாறியது.
ஆனால், காடு பௌத்த நாட்டுக்குள் படிப்படியாக ஊடுருவத் துவங்கியது. காடு வளர்ந்ததால் பெருகிய பாம்புகள் கிராமங்களுக்குள் நுழைந்து, ஆடுகளின் பாலையும் குழந்தைகளின் இரத்தத்தையும் குடித்தன. அவை துறவிகளின் வெற்றுக் கால்களைச் சுற்றி அவர்களை இடறி விழச் செய்தன. பாம்புகளின் இந்த சேட்டைகளுக்கு ஒரு வரலாற்று தீர்வும் கிடைத்தது. கிராமவாசிகள் தங்கள் குவளைகளைத் தூக்கிக் கொண்டு வராத போது அவர்கள் தங்கள் இரு கைகளையும் சுதந்திரமாகப் பயன்படுத்தி, இடறும் பாம்புகளை சமாளிக்க முடிந்தது.
பூங்காவின் மையத்தில் வீற்றிருந்த துளி “தெய்வீக பிரொஸ்பெரோ பிரில்லியன்டீன்” என்று அழைக்கப்பட்டது. அவர் அசைவதோ, பேசுவதோ, சைகை செய்வதோ இல்லை. ஆனால், அனைத்து சிந்தனைகளும் அவருள் ஒருமுகப்படுத்தப்பட்டன. மானுடவியலாளர்கள் துளியின் சமூக விளைவுகளையும் அவரது உள்ளடக்க சேர்மானங்களையும் ஆய்வு செய்தனர். அவர் கூழ்மத்தால் உருவானவரா? பெருமூளைச் சிரைப் பொருட்களால் ஆனவரா? பருப்பு சக்கரை இனிப்புப் பண்டத்தால் ஆனவரா? என்று அவர்களால் பகுத்தறிய முடியவில்லை. வாசனையை வைத்து அவர், நிலவின் துகளாக இருப்பாரோ என்று சந்தேகம் கொண்டனர். எந்த நேரடி முடிவுகளுக்கும் வர முடியாததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டனர். ஏழை கிராமவாசிகள் தங்கள் குடும்பத்துக்கென பிரத்யேகமான ஒரு நிறத்தையும் வடிவத்தையும் தேர்ந்து, நரிகளுக்கு பட்டுத் தொப்பியைப் படைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர். தாங்கள் பசியோடு இருந்தாலும், நரிகளுக்கு மிகச் சிறந்த பட்டுத் தொப்பிகளைப் படைக்க அவர்கள் தயங்கியதே இல்லை. அதோடு வெள்ளி குவளை வாங்க வேண்டிய தேவை இல்லாததால் அந்தப் பணத்தையும் இதற்கே செலவளித்தார்கள். மானுடவியலாளர்கள் குழப்பமடைந்தனர். அவர்கள் கிராமவாசிகளின் ஏழ்மைக்கான இரகசியத்தை தொலைநிலையிலிருந்து, தொலைநிலை கட்டுப்பாட்டின் மூலம் தோராயமாகத் தொடுவதாக உணர்ந்தனர்.
***

ஒரு துளி பனி சூழ்ந்த நாட்டில் குடியேறியது. அது மூன்று மாடி கொண்ட பிரெஞ்சு பாணியிலான வீட்டில் வாழ்ந்தது. ஒரு குன்றின் உச்சியில் ஏற்ற இறக்கத்தோடு கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டிடம் அது. மூன்றாவது மாடியில் இருந்த தனது படிப்பறைக்குச் சென்று, மேசையில் தொலைநோக்கு ஆழி கொண்ட கேமராவை அமைத்தது. உயர்தர குளியலாடை அணிந்திருந்த துளி, மூன்று குழாய்களைப் புகைத்தவாறே கீழே அலையடிப்பதை கவனித்தபடி, உலகெங்கிலும் உள்ள தனது நிறுவனங்களின் முதலீடுகளை நிர்வகித்தது. உலகின் பெரும் தலைநகரங்களில் உள்ள அதன் பல ஊழியர்களில் யாருக்குமே இத்தகைய செயல்பாட்டின் பின்னணியில் இருப்பது ஒரு துளி என்று தெரிந்ததில்லை. அவர் விசித்திரமானவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அதோடு அவர் மனித வெறுப்பாளர், ஒரு வேளை சிறிது கிறுக்கராகக் கூட இருக்கலாம் என்று சந்தேகித்தனர். அவர் கணினிகள் மூலம் குறிவிலக்கம் (டிகோட்) செய்யப்பட்ட படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்தொடர்பு முறையைப் பின்பற்றினார். அது பெரிதும் பயனற்றதாக இருந்தது. ஒரு வார்த்தையை மொழிபெயர்க்க பத்தாயிரக்கணக்கான படங்கள் தேவைப்பட்டன (அப்படியிருந்தும் அடிக்கடி குழப்பம் ஏற்பட்டது). அவர் பயன்படுத்தும் செய்திகள் ரகசியமானவை எனவே இந்த முறையை பாதுகாப்புக் காரணங்களுக்காக நியாயப்படுத்த முடியும். ஆனால், அதெல்லாம் சாக்குப்போக்கு மட்டுமே; அதன் உண்மையான நோக்கம், இத்தகைய பெரும் நிதியாளரான அவர் மறுமலர்ச்சி கால ஓவியத்தின் ஒரு துளி என்ற நம்பமுடியாத உண்மையை மறைக்கத்தான்.
***
எல்லா துளிகளும் இத்தகைய விசித்திரமான வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை, அல்லது இத்தகைய நினைவுகூரத்தக்க சாகசங்களிலும் கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடவில்லை. உண்மையில், பெரும்பான்மையினருடன் ஐயம் கொண்ட இணக்கம், வீடு மற்றும் வேலையின் சிறு மகிழ்ச்சிகள், போதுமான அளவு திருப்திகரமான வாழ்க்கை என பெரும்பாலான துளிகள் வழக்கமான வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டன. அவற்றுக்கும் மற்றவர்களைப் போல நிறைய கனவுகளும் இருந்தன; அவற்றின் கருத்துக்கள் பொது நீரோட்டத்தில் இருந்து வந்தவை. வாக்களிக்க வேண்டிய நேரம் வந்தபோது (ஏனெனில் மக்களாட்சி உலகெங்கும் பரவிக்கொண்டிருந்தது), நாம் அனைவரும் செய்வதைப் போலவே, வாழ்க்கையின் அசல் நோக்கம் குறித்து அவையும் சிந்தித்தன.
எல்லா துளிகளும் மோனாலிசாவாக இருந்தன, அதே வேளை எதுவும் மோனாலிசாவாக இருக்கவில்லை. லூவரின் ஊழி தேவதை இனி லூவரிலோ அல்லது வேறெங்குமோ இருக்கப்போவதில்லை. லட்சக்கணக்கான நினைவுச் சவ்வுகள் அவளது பிரதிபலிப்பை மனித இனத்திற்காக மாயைகள் ஏதுமின்றிப் பாதுகாத்தன. ஆனால், அவளது பிம்பங்கள் இல்லாமல் இருக்கப்போவதில்லை. நெருப்பில்லாத புகையைப் போல, கனியில்லாத மலரைப் போல முன் நிகழ்ந்தவற்றின் நினைவு ஒவ்வொரு உயிரின் இதயத்திலிருந்தும் துளிர்த்தது. உலகில் எந்த இரண்டு மனிதர்களும் ஆறு பொதுவான அம்சங்களுக்கும் மேல் பிரிக்கப்படவில்லை (இந்த கணக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது). உயிருடன் இருப்பவர்களும் இறந்தவர்களும் இணைப்புகளாக செயல்பட முடியும். ஆனால் சமூக சீரற்ற விதி எப்போதும் இந்த சங்கிலியின் இணைப்பைக் குறுக்குகிறது. பொதுவாக, அங்கீகாரம் நோக்கிய மீளவியலா உந்துதல் இருக்கிறது. உண்மையில் மக்களியியல் பெருக்கம் என்பது உட்குவிவுகளே. ஆனால், எதிர்-ஆதாம் எனும் ஒரு மனிதன் வந்து தன்னுள் நுழைந்து, தனக்குள் இருக்கும் இருவரும் அச்சுப் பிரதிகளே, இருவரும் ஒரு விதையின் இரு பகுதிகள் போல, இரு நீர்த்துளி போல அல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இருவரும் ஒற்றைத் துளியே என்று உணரும் காலம் வரும்.
***
ஒரு துளி பிரதிநித்துவ நாடான அர்ஜென்டினாவில் குடியேறியது. அவன் அர்ஜென்டைன் பாணியிலான நேலிடோ என்ற பெயரை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேட ஆரம்பித்தான். மற்றவர்களாக இருந்தால் சில மணிநேரங்களில் முடியும் செயல் அது. ஆனால், கூச்ச சுபாவமுள்ளவனாக, அவலட்சணமானவனாக, உரையாடல்களை வளர்த்தெடுக்கும் திறமையற்றவனாக அவன் இருந்தான். பல ஆண்டுகள் முயன்றும் அவனுக்கு வெற்றி எதுவும் கிட்டவில்லை. அவன் சாபத்தால் பீடிக்கப்பட்டவனாக, தீயூழால் அவதிப்படுபவனாகத் தோன்றினான். நல்லூழ், நல்லது, கெட்டது என்பதெல்லாம் பழங்காலத்தின் விஷயங்கள் என்று பாவனை செய்யும் திறமை பெற்றவனாக அவன் இல்லாமல் இல்லை. விருந்து, விழா என எந்த அழைப்பு வந்தாலும் அந்த வாய்ப்பை அவன் தவற விடுவதில்லை. அவன் நடனமாடினான், யோகா பயிற்றுவித்தான், ஓவிய வகுப்புகள் எடுத்தான், ஊர்வலங்கள், பேரணிகளில் பங்கேற்றான். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு நாயைப் போல அவன் எல்லாவிடங்களிலும் அலைமோதிக் கொண்டிருந்தான். வாய்ப்புகள் கண நேர மின்னல் போலத் தோன்றுபவை. அவை வரும் போது உடனே பற்றிக் கொள்ள வேண்டும் என அவன் அறிந்திருந்தான். எனவே அவன் தனது கவனக்குவிப்பைக் கூர்மையாக்கினான், தன்னிச்சை இயல்புகளை செம்மைப்படுத்தினான், வசீகரத்தை வளர்த்தெடுத்தான். அதற்காக அவன் பொறுப்பானவனாக இல்லை என்று அர்த்தமில்லை. மாறாக, அவன் தனது ஆன்ம துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என எல்லாப் பிரயத்தனங்களையும் செய்தான். அவனது தனிமையின் புனிதக் கலம் உடைபடாமல் கடந்துபோன ஒவ்வொரு நாளின் முடிவிலும், தோல்வியின் கசப்பு அந்தச் சிறிய துளியின் ஆன்மாவை சுருங்கச் செய்வதை உணர முடிந்தது.
ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதைப் பற்றியும் அவன் சிந்தித்தான். எப்படியும் ஒரு துணை என்பது துணைதான், அன்பு என்பது அன்புதான், அதோடு ஒரு துளியில் அப்பாகுபாடு அவ்வளவு தெளிவாகத் தெரியாமல் போகலாம். ஆனால், விரைவிலேயே அந்த யோசனையை ஒதுக்கிவைத்தான். அறநெறி அல்லது அழகியல் தயக்கங்கள் காரணமல்ல, மாறாக அது இன்னும் கடினமாக இருக்கும் என்பதால் மட்டுமே. அவன் எதையும் அசாதாரணமாகச் செய்ய விரும்பவில்லை; மற்றவர்களைப் போல, முத்தமிட, கட்டிபிடிக்க, குளிர்கால இரவுகளில் அணைத்துக்கொள்ள அவன் ஒரு மனைவியை எதிர்பார்த்தான். அது ஒரு இயல்பான விஷயம்தானே! காலத்தின் வாகனத்தை இயக்கும் நித்தியத்தின் இயந்திரமும், ஒவ்வொரு உயிரினத்தின் மூல உந்துதலும் அதுவே.
ஒருவேளை அதுதான் பிரச்சினையாக இருக்க வேண்டும்: தன்னை அழித்து முன்னிறுத்திக் காட்டும் தூண்டுவிசை அவனிடம் இல்லை. இதை தனது பலவீனமான தருணங்களில் அவனே உணர்ந்தும் இருந்தான். என்ன இருந்தாலும், ஒரு பெண்னின் பார்வையில் எண்ணெய்த் துளிக்கும் இளைஞனுக்கும் வேறுபாடு இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த மனவுளைச்சல் அவனைப் பாடாய்ப்படுத்தியது. அதன் விளைவு, அவனது தேடலில் மட்டுமல்ல வேலையிலும் சுணக்கத்தைக் கொடுத்தது. பின், தேடலையும், வேலையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே தவறு என்று அவன் புரிந்துகொண்டான். உறவுகளில் எண்பது சதவீதம் பணியிடத்தில் தொடங்குகின்றன என்று அவன் ஒரு பத்திரிகையில் படித்திருந்தான். அவன் அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான். அங்கு ஒரு உறவைத் தொடங்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவன் அங்கே ஒரு சிறிய அச்சகப் பிரிவில் தனியாக வேலை செய்தான், அங்கே பெண் தொழிலாளர்கள் யாரும் இல்லை. (அட்டைப் பெட்டிகளில் “அர்ஜெண்டினாவில் தயாரானது” என்ற வார்த்தைகளை அச்சிடும் சுருள் முத்திரையின் மீது அவனது சிறிய உருண்டை உடலை வைத்து வண்ணங்களை உருட்டுவதற்காக அவனைப் பணியில் அமர்த்தியிருந்தனர்.) எனவே, ஒரே வாய்ப்பு அவனது மற்றொரு வேலையில்தான் இருந்தது. பெட்டிக்கடையில் இனிப்புகள் மற்றும் சிகரெட்டுகள் விற்கும் பகுதி நேர வேலையையும் அவன் செய்து வந்தான். (தொழிற்சாலை வேலை நேரத்திற்குப் பிறகு மாலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை அந்த வேலையைச் செய்தான்). அங்கே வாய்ப்புகள் கிடைக்கச் சாத்தியமிருந்தது. அதே போல், சில வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால், அவை சரியான வகையில் அமையவில்லை. வாடிக்கையாளர்கள் பெட்டிக்கடையை இரு பக்கங்களில் இருந்தும் அணுகுகிறார்கள். அவர்கள் கடைசி நிமிடத்தில்தான் விற்பனையாளரைப் பார்க்கிறார்கள், திடீரென்று அவனுக்குத் தன்னைச் சரிசெய்துகொள்ளக் கூட நேரம் கிடைப்பதில்லை. அவர்கள் சாக்லேட் பார் அல்லது சிகரெட் பாக்கெட் போன்ற மிகவும் வழக்கமான ஏதாவது ஒரு பொருளை வாங்க வந்திருப்பார்கள், எனவே அவர்கள் தங்கள் சக மனிதர்களுடன் கொண்டிருக்கும் அன்றாட உரையாடலுக்கு அப்பாற்பட்ட எதையும் அங்கே எதிர்பார்க்க மாட்டார்கள். பழக்கமான மனித உருவத்திற்குப் பதிலாக ஒரு மில்லிமீட்டர் விட்டமுள்ள ஒரு வண்ணத் துளியைச் சந்திக்கும் போது, அவர்கள் மகிழ்ச்சியற்ற வகையில் ஆச்சரியமடைகின்றனர். அத்தகைய சமயத்தில் எந்த வகையான பழக்கத்தை ஏற்படுத்துவதோ பராமரிப்பதோ அவனுக்குக் கடினமாக இருந்தது. அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தாங்கள் வாங்க வேண்டிய பொருளை தானியங்கியில் எடுப்பதைப் போல, வாங்கிச் செல்கின்றனர்.
இறுதியில், நோயே அதற்கான மருந்தையும் கொண்டிருக்கிறது என நேலிடோ நம்பத் தொடங்கினான். ஒரு நியாயமான எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அவன் ஒரு மனிதன் இல்லையென்பதால், அவன் ஒரு துளி என்பதால், அதுவும் உலகின் மிகவும் பிரபலமான கலைப்படைப்பிலிருந்து வந்த துளி என்பதால், மனிதச் சட்டங்கள் எதுவும் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று உணர்ந்தான். எனவே தான் எதுவும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தான். ஓவியத்தில் இருக்கையில் ஒரு வண்ணத் துளி ஆற்றலற்றதாக இருக்கலாம், அதைச் சுற்றியுள்ள மற்ற பொருட்கள், ஓவியனின் நோக்கம், விளைவு மற்றும் இன்னும் ஆயிரக்கணக்கான பிற விஷயங்களை அது சார்ந்திருக்கலாம். ஆனால், அந்தத் துளி விடுதலையாகி, சுதந்திரத்தின் வேறுபட்ட சுவையைக் கண்டறிய உலகிற்குள் நுழைந்தவுடன், அனைத்தும் மாறுவிடுகிறது.
இருப்பினும், இயல்பில் எதுவும் மாறுவதில்லை. என்ன விந்தை! ஒருவேளை யதார்த்தத்தின் வாசலைக் தொட்டவுடன் பல்கூட்டான உயிரினத்திலிருந்து ஒற்றை அணு வரை எல்லா வகையான உயிரினங்களுக்கும் ஒரே பிரபஞ்ச விதிகள் பொருந்தும் என்பது உண்மைதான். ஓர் அற்புதமான துளியின் யதார்த்தமும் ஒரு மனிதனின் யதார்த்தமும் ஒன்றே!
***
ஒரு எளிய அர்ஜென்டைன் சிகரெட் விற்பனையாளரின் அனுபவத்திலிருந்து உருவான இந்த உள்ளுணர்வு, பிரபஞ்ச அளவிலும் உறுதிப்படுத்தப்பட்டது. பூமியின் எல்லையைக் கடந்து கிரகத்தை விட்டு வெளியேறிய துளிகளும் இருந்தன. பழக்கத்தின் காரணமாக அவை அதுவரை மனிதர்களின் உலகையே சுற்றிச் சுற்றி வந்திருக்கின்றன என்பதையும், பிரபஞ்சத்தின் அளவிட முடியாத பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லை என்பதையும் அவை உணர்ந்தன. ஒரு துளி புறப்பட்டதும் மற்றவையும் பின்தொடர்ந்தன. அவற்றிற்கு அப்பயணம் அவ்வளவு கடினமாக இல்லை. சுவாசிக்கத் தேவையில்லை, கதிர்வீச்சு அல்லது அமுதியத்தில் உள்ள பாதகமான நிலைமைகளால் பாதிக்கப்படவில்லை, அதிகபட்சம் அவை சூரியன்களுக்கு அருகில் சற்று மென்மையாகவும், வெப்பநிலை சுழியத்திற்குக் கீழே குறைந்தபோது கடினமாகவும் மாறின. தூரங்கள் அவற்றிற்குப் பிரச்சினையாக இல்லை. அவை சிதறியபோது ஏற்பட்ட காலப் பிரிவினை காரணமாக, ஒரு நொடியில் மூன்று லட்சம் ஒளியாண்டுகளை அவற்றால் கடக்க முடிந்தது. எனவே விண்மீன் திரள்கள் தங்களைக் கடந்து துளிகள் செல்வதை வேடிக்கை பார்த்தன. வெற்றிடத்தில் மாலை நேரங்களின் சிவப்பு வானங்களின் கீழ், துளிகள் பருப்பொருட்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. அணுக்கள் மற்றும் துகள்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றன.
பிரபஞ்சத்தில் எந்தத் துளியும் சலிப்படையவில்லை. வெற்றுப் பாதாளங்களில் உக்கிரமான பந்தயங்கள் நடப்பது போல இருந்தது: ஒளிரும், இயந்திர ரீதியாக சிக்கலான பந்தயக் கார்கள் முடிவில்லாத சுற்றுப்பாதைகளில் ஓடிக்கொண்டிருந்தன. நிழல்கள் இல்லாத உருவங்களின் ஒளி தெரிந்தது. வெறுமையில் வரையப்பட்ட ஒளியாலான திரைகளின் பின்னால் இருள் திறந்தது. திரைகளிலுள்ள இருள் புள்ளியிலிருந்து, புதிய பிரபஞ்சங்கள் திறந்து, நிறைந்த பிரபஞ்சமாக மாறின. விண்வெளித் தூசுகள் (நெபுலாக்கள்) தடைகளாக நிற்க, இரைச்சலிடும் வளைவுகள், பேரண்ட தரைக்கீழ் இடங்களில் முகப்பு விளக்குகளின் ஒளிக்கற்றைகள் பாய்ந்தன.
இணைக் கோடுகளின் கற்பனைக்கு எட்டாத குறுக்கீடுகள் ஒன்றில் இரண்டு துளிகள் சந்தித்தன. ஒரு தொலைதூர கிரகத்தில், வாயு கோளத்தில், அடர்வு உற்சவத்தின் நடுவில், ஒரு துளி பாறை அணுக்களின் தரையில் தனது நிழலை வீசியது. துளியின் முழுமையான கோள வடிவம் காரணமாக, சூரியன்கள் மற்றும் நிலவுகள் எங்கிருந்தாலும் அதன் நிழல் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது. மற்றொரு துளி எதிர்த் திசையிலிருந்து ஏவுகணையில் நெருங்கிக் கொண்டிருந்தது. அவை நுண்ணொலிப்பெருக்கிகள் (மைக்ரோஃபோன்கள்) மூலம் தொடர்பு கொண்டன. விண்கலத்தின் நிழல் உருமாற்றியைப் போல விரிந்து சுருங்கியது. ஹீலிய வளையங்களுடன் வானம் கருமையாகவே இருந்தது,
இரு துளிகளும் அந்த இடத்தை ஆராயும் பொருட்டு வெளியேறின. விண்வெளி உடைகளால் மூடப்பட்ட இரண்டு துளிகளும் கரும்பா கிரகத்தின் பதினான்காயிரம் அடர்த்தியான வளிமண்டலங்களில் மிதந்தன. தொடுவானத்தில், பொய்க்கால்களில் நின்றபடி, முத்து மாலைகளை அணிந்து, மஞ்சள் நிற கைப்பையுடன் பரப்பார்வை (பெர்ஸ்பெக்டிவ்) தோன்றினாள். அவளது வெள்ளை முடி கூற்றிலிகளின் மேகத்தில் சுழன்றபடி இருந்தது. அவள் அலட்சியமாகத் தோன்றினாள். எல்லோரது கண்களும் எப்போதும் தன் மீதே இருக்கும் என்பதை அறிந்தவளாதலால் அவள் யாரையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. பரவசங்கொண்ட துளிகளும் விதிவிலக்கல்ல. ஓவியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து அவை அந்த அழகான தேவதையைக் காண முடியாமல் தவித்தன. கண்களுக்குப் புலப்படாத அவளது இறக்கைகளின் கீழ் மீண்டும் தஞ்சமடைய அவை விரும்பின. ஆனால், அவள் அவற்றைப் பார்க்கவில்லை. அவளது கண்கள் அறியவொண்ணாததை நோக்கி நிலைகுத்தியிருந்தன. இந்த கைவிடப்படல், துளிகள் இவ்வளவு தூரம் வர அனுமதித்த சுதந்திரத்திற்காக அவர்கள் செலுத்த வேண்டிய விலையா? அவர்களை அறியாமலே அவர்கள் மூவரும் ஒரு முற்றிலும் சமச்சீரான உருவத்தை உருவாக்கியிருந்தனர்.
***
பின்னர் ஏதோ நிகழ்ந்தது. இடியைப் போன்ற ஒரு சத்தத்துடன், அமுதியத்தின் கருமை குழிவு கிழிந்து, நெகிழியாலான கையில்லாத செந்நிற மேலாடையும், கூர்மையான காலணியும் அணிந்த புவியீர்ப்பு தோன்றினான். அவன் தங்கள் மீது விழுந்து தங்களை நசுக்கிவிடுவான் என்று துளிகள் பயந்தன. ஆனால், புவியீர்ப்பு அவற்றின் தலைகளுக்கு மேலாகக் கடந்து, அடிவானத்தின் கீழ்நோக்கிய வளைந்த கோட்டில் தரையிறங்கினான். அதே கோட்டில் இருந்த பரப்பார்வை, அதன் வழியே சறுக்கி புவியீர்ப்பின் கரங்களில் விழுந்தாள். விரிந்த கரங்களுடனும், எழுச்சியுடனும் காத்திருந்தான் புவியீர்ப்பு. ஒரு இதயம் ஈட்டியினுள் ஊடுருவிச் செல்வது போல அவள் அவனுடன் பொருந்தினாள். அவர்கள் இணைந்து கொண்டபோது, முத்தமிடும் ஒலி கேட்டது, பிரகாசமான ஒளிக்கதிர்கள் விண்மீன் குழுக்கள் வந்து அமரும்படியாக எல்லாத் திசைகளிலும் பாய்ந்தன. என்ன நடந்தது? வெறுமனே இரண்டு துளிகளின் சந்திப்பு, எப்போதும் தொலைவில் இருந்த பரப்பார்வையை அவள் விரும்பிய அருகாமைக்குக் கொண்டுவந்தது. எண்ணற்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருந்த புவியீர்ப்பு அதனைத் தவறவிடவில்லை. நன்றியின் அடையாளமாக, பரப்பார்வையை அணைத்திருந்ததை விடாமல், அவன் திரும்பி துளிகளை நோக்கி அர்த்தத்துடன் கண்சிமிட்டினான். இரண்டு துளி விண்வெளி வீரர்களும், தாங்கள் அறியாத ஏதோ ஓரிடத்தில் தங்கள் இருப்பு இத்தகைய அசாதாரண விளைவை ஏற்படுத்தியதைக் கண்டு வியப்படைந்தனர். லூவரில் உள்ள ஓவியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, அவை எந்த விளைவையும் ஏற்படுத்தாததற்குப் பழகிவிட்டிருந்தன. தொடர்ந்து கொண்டிருந்த தழுவல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. முன்பு மிகவும் தீவிரமாகவும் உருண்டையாகவும் இருந்த புவியீர்ப்பு, மெலிந்து விநோதமாக மாறியது. பரப்பார்வை வழக்கமான தனது மூப்புத் தோற்றத்தை உதறித் தள்ளி, திண்மையான, தொடக்கூடிய வடிவத்தைப் பெற்றாள். அவர்களின் திருமணம் உடனடியாக விழாவாகக் கொண்டாடப்பட்டது. யாருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பத் தேவையில்லை (அவை பெருவெடிப்பிலிருந்தே இந்த சந்திப்புக்காக முயன்று கொண்டிருந்தன).
இரண்டு துளிகளும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன, “நல்ல நிகழ்வல்லவா?” என்று அவை சொல்வது போலத் தோன்றியது. இப்போது போப்பாண்டவர் என்றென்றும் துறவியாகவே இருப்பார் என்ற உறுதியான எண்ணம் இருவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றியது. வாடிகனில், திருமண பீடத்தில் கைவிடப்பட்டு, வெள்ளை உடை தரித்து, மலக்குடல் மாத்திரையை ஏந்தியபடி, சுருக்கம் விழுந்த முதிய கன்னத்தில் ஒரு கண்ணீர்த்துளி உருளும் நிலையில் போப்பாண்டவரை அவை கற்பனை செய்து பார்த்தன. உச்சகட்டமானதும், யதார்த்தமானதுமான கற்பனை அது.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஜோடி ஒரு காரில் புறப்பட்டது. வானவெளியில் தகர டப்பாக்களை இழுத்துக்கொண்டு கார் சென்றது. இது ஒரு போர்க்குணம் மிக்க தேனிலவுப் பயணமாக இருக்கப் போகிறது, ஏனெனில் அவர்கள் நித்திய கன்னியான பரிணாமத்தின் மீதான இறுதித் தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர். இம்முறை (பிரித்தாளும் முறையால்) ஆற்றலின் சமநிலை குலைந்துவிட்டதால், அவள் தோற்கடிக்கப்படுவாள்.
ஆனால், யதார்த்தத்தின் அற்புத எல்லைகளில் உலாவிக் கொண்டிருந்த துளிகள்… உண்மைக்குள் இருந்து மனச்சோர்வுக்கு ஆளாயின.
************

ஆசிரியர் குறிப்பு:
சீசர் ஐரா அர்ஜென்டினாவின் மிகவும் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவர். அவர் 1949ஆம் ஆண்டு பிறந்தார். அவரது எழுத்துக்கள் புதுமையான பாணியில் அமைந்திருப்பவை. ஐரா நூற்றுக்கும் மேற்பட்ட சிறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது படைப்புகள் கற்பனைக் கதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கியவை. ஐரா தனது எழுத்துக்களில் பல்வேறு இலக்கிய வகைகளை கலந்து பயன்படுத்தியுள்ளார். அவர் தனது கதைகளை திருத்தாமல், தொடர்ந்து முன்னோக்கி எழுதும் பாணியை பின்பற்றுகிறார். இது அவரது படைப்புகளுக்கு ஒரு தனித்துவமான அழகை அளிக்கிறது. அவர் பல மொழிகளிலிருந்து புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். புனைகதைகள் மற்றும் தனது வாழ்வாதாரத்திற்காக செய்யும் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அப்பாற்பட்டு ஐரா இலக்கிய விமர்சனமும் எழுதுகிறார். ஐரா தனது நண்பரான கவிஞர் மற்றும் நாவலாசிரியர் ஒஸ்வால்டோ லாம்போர்கினியின் (1940-1985) முழு படைப்புகளின் இலக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். ஐரா தனது நவீன எழுத்து நடையால் அர்ஜென்டீன இலக்கிய உலகில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார். அவரது படைப்புகள் உலகளவில் பாராட்டப்பட்டுள்ளன. “ஆயிரம் துளிகள்” என்பது சீசர் ஐராவின் மிகவும் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்று. இந்தக் கதை முதன்முதலில் 2003ஆம் ஆண்டில் ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் பிரபலமானது. இக்கதை மாய யதார்த்தவாதம், முன்னோக்கு புனைவு மற்றும் சோதனை இலக்கியம் வகைமைகளை உள்ளடக்கியதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். பல்வேறு வகைமைகளின் கலவை இக்கதையை தனித்துவமானதாகவும், வாசகர்களுக்கு சவாலானதாகவும் ஆக்குகிறது.
******
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
பாலகுமார் விஜயராமன் (1980): சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
இதுவரை 6 அச்சு நூல்களையும், 5 மின்னூல்களையும் எழுதியுள்ளார். காலச்சுவடு வெளியீடாக வந்த இவரது நாவல் “சேவல்களம்” பண்டைய காலம் தொட்டு தமிழர் புறவாழ்வில் முக்கியப் பங்காற்றும் சேவல் சண்டை குறித்த நுட்பங்களைப் பேசுகிறது. மின்னூல்களாக வெளியிடப்பட்ட சிவப்புப் பணம், ஹோமர் நாவல்கள் டிஜிட்டல் வாசகர்கள் மத்தியில் பரவலாக கவனத்தையும், விமர்சனங்களையும் பெற்றன. பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த இவரது “கடவுளின் பறவைகள்” மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான வாசகசாலை விருது 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. எதிர் வெளியீடு மூலம் “அஞ்சல் நிலையம்” நாவல் மற்றும் பாதரசம் பதிப்பகம் மூலம் “ஹௌல் மற்றும் சில கவிதைகள்” உள்ளிட்ட குறிப்பித்தக்க மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்து வருகிறார். சமகால மத்திய வர்க்கத்தின் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், குழந்தை வளர்ப்பு தொடர்பான சிறுகதைத் தொகுப்பான “நஞ்சுக்கொடி” சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட புதிய நூலாகும்.
தொடர்புக்கு:
மின்னஞ்சல்: balavinmail@gmail.com
அலைபேசி: 9486102490