
நிர்வாணம்
1
இவர்களை இப்படியே விட்டுவிடுவதென
தீர்மானித்திருக்கிறேன்
இந்த வாழ்க்கையில் எனக்கான
வேர்களை நான் தேடியதே இல்லை
தொலைந்த பருவங்கள்
சிறகடிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகளாக
நிசப்தம் மெல்ல முணுமுணுக்கிறது
மெளத்தைக் கலைத்து
என் உடலெங்கும்
காலத்தின் ரேகைகள்
பதிந்திருக்கின்றன
ஒரு பறவையின் சுதந்திரம்
அதன் சிறகிலா இருக்கிறது?
நீர்ப்பூ எப்போதும்
நீர் மட்டத்துக்கு மேலே
வந்துவிடுகிறது
நாளை என்பது கூட
நேற்றைய தொடர்ச்சிதானே?
தற்செயலானதுதான் எல்லாம்
அந்த ஆறுதல் வார்த்தையே
இப்போது எனக்குத் தேவையாய்
இருக்கிறது
அதோ பாருங்கள்
சிறிய ஒரு பனித்துளி
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே
தாங்குவதை
அந்தி வானம்
போர்க்களத்திலிருந்து திரும்பும்
குதிரைகளின் குளம்படிச் சத்தம்
எனது பிரார்த்தனை விண்ணப்பத்தில்
என்ன எழுதி இருக்கிறது என்று
யூகிக்க முடியாதவர்தான்
இங்கு கடவுளாக இருக்கிறார்!
*
2
எனது கைகள்
ஆகாயத்தைப் பார்த்தபடி
ஏந்தி நிற்கின்றன
உன் ப்ரியங்களுக்காய்
வாழ்வென்பது உன்னிலிருந்து
தொடங்கி உன்னிலேயே முடிகிறது
சிலசமயம் எனக்குள்
கேள்வி எழுகிறது நான்
எந்த நூற்றாண்டில் இருக்கிறேன் என்று
வெறுப்புகளும், கசப்புகளும்
நிரம்பி இருக்கின்றன
காதல் மதுவில்
மரணத்தாகம்தான்
விட்டில் பூச்சிகளுக்கு
சுடரை முத்தமிடும்போது
இன்று தபால்காரர் கூட
எனக்கு கடவுளின் செய்தியைக்
கொண்டு வருபவராக இருக்கலாம்
மின்மினியும் நட்சத்திரங்களும்
ஒன்றுபோலவே தெரிகின்றன
இந்தக் கருத்த வானில்
இந்த முதல் மழையின்
முதல் துளிதான்
என்னைப் பரிசுத்தமாக்கியது
மரணம் புதிர்தான்
விடை கண்டுபிடித்தவர்களுக்கு
என்ன பரிசளித்திருப்பான்
இறைவன்
மெல்ல மெல்ல
பஞ்ச பூதங்கள் எனதுடலைத்
தின்று பசியாறுகின்றன
விடைபெறும்போதாவது
என் மீது இரக்கம் கொள்ளட்டும்
இவ்வுலகம்!
*
3
கடவுளைப் பார்த்து
இன்றோடு பத்தாண்டுகள்
கடந்தாயிற்று
காலமும், இடமும் மனிதர்களுக்கானது
அதை மறந்துவிட்டேன்
வாழ்க்கையை நான்
தீவிரத்தன்மையோடு அணுகியிருக்கக் கூடாது
மூடிய கைகள் மூடிய கைகளாகவே
இருந்திருந்தால் திறந்த பின்
ஏமாற்றம் இருந்திருக்காது
ஒரு மலரை மலராக
பார்க்க நான் எப்போது
கற்றுக் கொள்ளப் போகிறேன்
கடவுளை எனக்கு பிடிக்காததற்குக்
காரணம் கணிதச் சமன்பாடுகள்தான்
நீங்கள் இசையில்
மூழ்கியிருக்கும்போது
உணர்ந்ததில்லையோ பெளதிக உடல்
சாராத ஏதோவொன்றை
கடவுளும் மனிதனும்
சந்தித்துக் கொள்ளும் இடத்தில் தான்
நான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்
எனது அந்தரங்கத்தின் மீது
மழை பொழியட்டும்
என்னால் கசப்புகளை மென்று
விழுங்க இயலாது
பூமியில் நான் பிரவேசிக்கும்போது
எப்படி இருந்ததோ என் மனம்
அப்படியேதான் இருக்கிறது
விடைபெறும் போதும்!
- mathi2134@gmail.com