
நினைவு மரம்
அப்பாவின் நினைவால்
வைக்கப்பட்ட
முற்றத்து மரத்திடம்
அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்
இலேசாக சிரித்தும்
கொள்வாள்
எப்போதாவது அதனைப் பார்த்துக்
கண்ணீர் சொரிவாள்
இன்று காலை
வாசலில் நின்றவாறு
கொஞ்சம் கொப்பொடித்துக்
கொள்ளட்டுமா
என்றான் எதிர்வீட்டுக்காரன்
நல்லவேளை
அம்மா வீட்டில் இல்லை.
*
பிரியமிகு பூனை
நடக்கும் தருணத்தில்
சத்தம் எதுவும் எழுப்பாமல்
மெல்ல நடக்கின்றன
பூனைகளெல்லாம்
மியாவ்…என்னும்
ஒற்றைச்சொல்
பாலுக்கானது மட்டுமல்ல
அதன் பிரியத்துக்கானதும்தான்
காலைச் சுற்றுவதில்
சாம்பல் நிறப் பூனைக்கும்
கருப்பு நிறப் பூனைக்கும்
வேறுபாடு எதுவும் இல்லை
பூனையை நினைவூட்டியபடியே
உலவிக் கொண்டிருக்கின்றது
மதில் மேல் பூனை
என்னும் சொல்
இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது
என்றுரைப்பவர்கள் மீதுதான்
கோபம் கோபமாக
வருகின்றது எனக்கு.
- peerthariq@gmail.com