நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு
வழக்கத்திலிருந்து மாறுபட்டு
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக
இந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்
திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன்
நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்
நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும்
சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத் தீவுக் கூட்டம் ஒன்றிலிருந்து
திங்கட்கிழமையை நள்ளிரவு மின்னஞ்சலில் பெற்று
தரவிரக்கத்தில் கிடைத்த சமையல் குறிப்புப்படி
அப்போதே சமைத்தேன்
சுடச் சுட உண்பதற்கு நன்றாகவே இருந்தது
நிலாப் பாலின் மணம் மற்றும் ஆக்டோபஸ் சுவையுடன்
ஆறினால் சகிக்க முடியாது
இன்னொரு முக்கிய எச்சரிக்கை
நாளைகளை உண்பதில் துரிதம் தேவை
தாமதித்தால் அது உங்களைத் தின்றுவிடும்.
*
நிலாச் சீம்பால் சமையல் குறிப்பு
அடர்த்தியும் கொழுப்புத்தன்மையும் மிக்கது நிலாப் பால்
எதிர்பாராத வகையில் கருப்பு நிறமானதும் கூட
இதமான குளிர்ச்சியும் கடல் வாடையும்
காண்டாமிருகக் கறிச் சுவையும் கொண்ட அதைப்
பச்சையாகவே குடிப்பது
உடல் ஆரோக்கியம், இளமை, ஆயுள் நீட்டிப்பு ஆகிய
கற்பகப் பலன்களைத் தரக்கூடியது
ஆனால் மனநலத்துக்கு ஊறு
கவிதை எழுதித் தொலைப்பீர்கள்
(அனுபவத்தில் கண்டது)
கொதிக்க விடாமல் வெதுமைப்படுத்தி
பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையுடன்
ஏலம் குறுமிளகு கலந்து அருந்தலாம்
இருளர் மலந்தேனுடன் எனில் உத்தமம்
தேனீர் குழம்பி ஊட்டச் சத்து பானங்களுடன் சேர்த்தல் தகாது
எஞ்சிய நிலாப்பால் புளித்துத் திரிந்தால்
பால்கோவா செய்யும் யோசனை வேண்டாம்
நாய்க்குப் போட்டால் கூட மசை பிடித்துவிடும்
(பாட்டிமைச் சித்தரின் ரசவாதச் சுவடிகளில் கண்டது)
மஞ்சள் நிறமான உதய பௌர்ணமியின் சீம்பால்
அடர் கருப்பு அல்லது ஆழ் நீலமானது
குளிர்மை கூடியதும் கூட
மிதமான போதையும் அதில் இருக்கும்
நிலாச் சீம்பாலைப் பச்சையாகக் குடிப்பது பேராபத்து
ஆண்களெனில் சித்தப்பிரமை மாயக் காட்சிகள் மெய்ஞானம்
தனிமொழி உரையாடல், நாய்களைப் பார்த்து ஊளையிடுதல்
போன்ற விளைவுகள் ஏற்படும்
பெண்களெனில் வெள்ளைப்படுதல், தள்ளிப்போதல் உண்டாகும்
சுக்குமி ளகுதி ப்பிலியுடன்
ஏலம் கிராம்பு பனங்கற்கண்டு சேர்த்து சுண்டக் காய்ச்சினால்
மற்ற சீம்பால்கள் போலவே இதுவும் தயிர் மாதிரிக் கெட்டித்து
உண்ணத் தக்கதாகிவிடும்
கற்பக கொக்கோகப் பலன்கள் மிக்கது
பொறுக்கும் சூட்டில் தனித்தோ தம்பதியர் இணைந்தோ சாப்பிடலாம்
காதல், காமம், ஆண்மை, பெண்மை, நேர நீடிப்பு பெருகும்
ஆணவக் கொலை முயற்சி, கள்ளக் காதல், பாவப்போர், HIV
ஆகியவற்றில் கூட சாகமாட்டீர்கள்.
*
உருளைக்கிழங்குப் பாடல்
மலையகப் பழங்குடிகளிடம் உருளைக்கிழங்குப் பாடல் உள்ளது
மலைகளிடம்
மடியில் வளமான மண்ணும் தலையில் சூல் மேகங்களும்
விளைநிலங்களில் மலையகப் பெண்கள்
அப்பாடல்களைப் பாடுகின்றனர்
விதைப்புக் காலத்தில் நல்விளைச்சல் வேண்டியும்
அறுவடைக் காலத்தில் நிறைமகசூலுக்கு நன்றி தெரிவித்தும்
மலைகளின் அதிதேவதை அதை ஏற்றுக்கொண்டு
இனிமையாகப் புன்னகைக்கிறாள்
ஆனாலும் உருளைக்கிழங்கில் உள்ள வாயுத்தொல்லையை
நீக்க மறுக்கிறாள்.