இணைய இதழ்இணைய இதழ் 85சிறுகதைகள்

அம்மு – ஆமினா முகம்மத்

சிறுகதை | வாசகசாலை

வளை இந்த நிலையில் இன்று, இங்கு சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. 

“தற்கொல இஸ்லாத்துல ஹராம்னு மட்டும் இல்லைன்னா என்னைக்கோ செத்துப் போயிருப்பேன் க்கா” 

கடைசியாய் இப்படித்தான் என்னை அதிர்வுகளுக்குள் நிறுத்திவிட்டு விடைபெற்றாள். அவள் சொல்லிச் சென்று பத்து வருடங்களுக்கும் மேலாகி இருக்கும். அதன் பின்னர் அவளை நான் சந்திக்கவே இல்லை. 

ஆனால் இன்று…? 

இங்கே..?

 இந்த நிலையில்…?

மரண அறிவிப்பை பள்ளிவாசல் ஒலிபெருக்கி சொன்னபோது மழை பெய்த அதிகாலை என்பதாலோ என்னவோ தெள்ளத் தெளிவாகவே கேட்டது. என்றாலும் யாரோ ஒரு பெண்மணி என மட்டும் காதுக்கும் அறிவுக்கும்  எட்டியதே அன்றி மிகச் சரியாக  யாரென அடையாளம் காண முடியவில்லை.  

15 வருடத்திற்குள்ளாக உருவாக்கப்பட்ட முஹல்லா இது.  நான் வந்திருந்தபோது  அங்கொன்றும் இங்கொன்றுமாக என் வீட்டோடு சேர்த்து மொத்தமே ஐந்து வீடு மட்டும்.  இப்போது அப்படியா?  புது ஊராக உருவெடுத்த பின்னர் யார் யார் குடியிருக்கிறார்கள் என்ற தகவல்களை மூளையில் சேமிக்க முடிவதில்லை. 

நகரின் செலவினம் என்னை மிரட்டியபோது 500 சதுர அடி வீட்டை நல்ல விலையில் விற்றுப் புதிதாய் உருவாகிக் கொண்டிருந்த இந்தப் பகுதியில் 1500 சதுர அடி இடம் வாங்கி கீழ்த்தளமும் மேல்தளமும் கட்டிவிட்டேன். என் புத்திசாலிதனத்தை நானே மெச்சிக் கொண்டிருந்தேன். 

“சிட்டிக்குள்ள விட்டுட்டு காட்டுல வீடு கட்டிப் போறாளே” எனத்  திட்டிடாத சனம் இல்லை. “ஒண்டிக் குடித்தனம் போல ஒரு சந்துக்குள்ள மூச்சு முட்டக் கெடந்ததுக்கு இங்கின காத்தோட்டமா செடிகொடி வீட்டச் சுத்தி வளத்து நிம்மதியா இருக்கேன்” என  எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டிருந்த காலம் மாறி,  இப்போது இந்த ஒதுக்குப்புறமுமானது நகரின் மையமாக வெகுவேகமாக வளர்ந்துகொண்டு வருகிறது.  திட்டிய சனமெல்லாம் இப்போது  இந்தப் பகுதியில் தனக்கு இடம் பார்க்கச் சொல்லி  வாரத்தில் இருமுறையேனும் போனில் அழைத்துக் கேட்டுவிடுகிறார்கள். 

முன்பு இந்தப் பகுதி கருவேலங்காடாய் இருந்தது.  ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் இருந்ததால்  யாருக்கும் குடியேறி வர  ஆர்வம் ஏற்படவில்லை.  இத்தனை வேகமாய் இப்பகுதி வளர்ந்ததற்குக் காரணம்  இதோ ஒலிபெருக்கியில்  இன்னார் மரணித்துவிட்டார் என சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளிவாசல்தான்.  14 வயதாகிறது. பள்ளிவாசல் கட்டுமானம் நடக்கத் தொடங்கியதுமே மனைகளெல்லாம் விற்று முடிந்திருந்தன.   

முஹல்லாவின் மூத்த குடித்தனவாசிகள் என்ற உயரந்தஸ்தில்  இங்கு நடக்கும் எல்லா சுகதுக்கங்களிலும் கலந்துகொள்வது என்  கணவரின் தினசரி கௌரவக் கடமை.  கூச்ச சுபாவத்தால் என்னையும் இழுத்துச் சென்றுவிடுவார். அதனால் முஹல்லாவில் பலருக்கு நான் பரிட்சயம்.  ஆனால் நானோ..?  பேசும் நிலை வந்தால் மட்டுமே முகம் பார்ப்பதைத் தவிர்த்து  பார்வைத் தொடர்பைத் துண்டிக்கும் சுபாவம் என்னுடையது என்பதாலும் அவ்வளவு எளிதாய் சட்டெனப் பழகிவிடும் குணமற்றவள் நான் என்பதாலும்  அநேகரை எனக்குப் பரிட்சயம் இல்லை. 

அதனாலும், தொழிலும் கல்வியும் நிமித்தம் அதிக முஸ்லிம்கள் வாடகைக்குக் குடியேற  புதிது புதிதாய்  வருவதும் போவதுமாக இருப்பதால்  அறிவிப்பில் வந்த தகவலை உள்வாங்குவதில் கொஞ்சம் சிக்கலைச் சந்தித்தேன். பள்ளிவாசலில் இருந்து கணவர் வந்தால் தகவலோடு வருவார்தான். அவர் ஊரில் இல்லாத நேரம்  முஹல்லாவில் நடக்கும் எந்த விஷயமும் காதுக்கு வருவதில்லை.  பள்ளிவாசலுடன் தொடர்பில் இருக்கும் ஆண்களால்தான் சமூகப் பார்வையும், சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதும்  வீட்டுப் பெண்களுக்குச் செவிவழிச் செய்தியாகக் கடத்தப்படுகிறது.  

எதிர்வீட்டு மும்தாஜ் அக்காவிற்கு போன் செய்து இறந்தவர்  யாரென விசாரித்தேன். “இங்கினதான் குடியிருந்ததாச் சொல்றாங்க.  எத்தனை குடித்தனம் வந்துடுச்சு… யாரன்னு நெனவு வச்சுக்க?” அவளுக்குத் தெரியாததையே 10 நிமிடங்கள் செலவழித்த பின்னர்தான் சொல்கிறாள்.  பெண்கள் தோல்வியை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்பவர்களாகப் படைக்கப்படவில்லை!


“யார்ன்னு சொன்னா ஒனக்கு வெளங்கும்னு தெரியலையே. மதுர போற வழியில  பரளை ஊர்க்காரங்க. சொந்த வீட்டுக் கட்டுமான வேலை நடக்குறதப் பாக்குறதுக்காக நம்ம தெருல முன்ன குடியிருந்தாங்க. அப்பறமா பள்ளிவாசல் பின்கேட்டுப் பக்கம் கட்டுன வீட்டுக்கு குடிபோனாங்க. பள்ளிவாசலுக்கு அந்தப் பக்கமே மெயின் ரோடு போட்டுட்டதுனால இங்கின போக்குவரத்து இல்ல. விடு! நேர்ல போய் பாத்துக்குவோமே” என்றார் பர்வீன் அக்கா. 

நானும் தோல்வியை தொண்டையில் தேக்கி வைத்துக்கொண்டேன். ஆட்கள் அதிகம் பேர் வருவதற்குள் மூவரும் இறப்பு வீட்டிற்குப் போய்விட்டு வரலாம் என நேரத்தை முடிவு செய்துகொண்டோம். பொதுவாக காலை 6 மணி முதல் 8.30 க்குள்ளாகவோ இரவென்றால் 8 மணிக்கு மேலாகவோ பார்த்துவிட்டால் கூட்டத்தில் இடிபடவோ இடமின்றி நின்று கொண்டிருக்கும் சூழலோ நிலவாது.

அங்கு சென்ற பின்தான் அறிவிப்பில் வந்த தகவல் மண்டைக்கு உரைத்தது.  ஜனாசாவாய் கிடக்கும் பெண்மணியை எனக்குத் தெரியும்.  

பத்து வருடம் முன்பிருக்கும். 

அம்மு! எவ்வளவு கலகலப்பான பெண்? இந்த முஹல்லாவிற்கு நான் வந்த ஓரிரு வருடங்களில் திருமணமாகி அப்போதுதான் வந்திருந்தாள். வாடகைக்குதான் குடியிருந்தாள். “பள்ளிவாசல் கட்டிட்டிருக்காங்ள? அங்கே எங்க வீடு கட்டுமானம் நடக்குதுக்கா.  அதுவரைக்கும் இந்த வீடுதான்” என்ற அவளது நம்பிக்கையின் மொழியில் இன்னுமே குரல்வளை விரிவடைந்திடாத மழலையின் சொற்கள் நடனமிட்டு வெளிவந்தன.

அவள் புதிதாய் குடிவந்தவள் என்பதைத் தவிர்த்து ஏதும் அறிமுகமற்ற ஒருநாளில்  தொடங்கிய உறவில் பல வருடங்களுக்கு என்னை ஆக்கிரமத்திருந்தாள். 

இரவு உறங்கப் போகும்போது என் கணவருக்குத் திடீரென உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. உடல் ஏதோ செய்யப்போவதாக உணர்ந்தார். நான் வாசலில் வந்து  யாரையாவது உதவிக்குக் கூப்பிடலாமா என வந்து பார்த்தது வீண் வேலை. மொத்தமே ஐந்து வீடுகள்  கலக்கம் கலக்கமாக இருக்கும் இடத்தில் யாரை ஓடிப் போய் நான் கூப்பிட? யார் வீட்டுக் கதவைத் தட்ட?  பதற்றத்தில் கணவரை விடவும் எனக்குதான் உடம்பு அதிகம் வியர்த்துக் கொட்டியது.

தூர வீட்டிலிருந்து அம்மு என்னைக் கவனித்துவிட்டாள்.   என்  கைப்பிடித்துக் கொண்டாள். என் பதற்றத்தைப் புரிந்தவள் கேட்டாள், “அண்ணனோட ஸ்கூட்டி தரீங்களா? நா மெயினுக்குப் போயி ஆட்டோ கூட்டியாறேன்?” முதன்முறை அவளை மிக நெருக்கத்தில் பார்க்கிறேன்.  அதனால் என்ன?  இப்போது வீட்டையே எழுதிக் கேட்டால் கூட கொடுத்துவிட்டிருப்பேன். 

அந்த கும்மிருட்டைக் கிழித்துக்கொண்டு போனவள் சற்று நேரத்தில் ஆட்டோவுடன்தான் வந்தாள்.  நானும் ஆட்டோ ஓட்டுநரும் சேர்ந்து கணவரைக் கைத்தாங்கலாக ஆட்டோவுக்குள் ஏறச் செய்தோம். நான் ஆட்டோவுக்குள் ஏறிய வரையிலும் என் மதியே என்னிடம்  இல்லை.  அம்முதான்  எனக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதை  நினைவூட்டி  அவர்களில் ஒருத்தியை என் ஆட்டோவில் ஏற்றினாள்.  ஆட்டோ தெருமுனையில் வளையும்போது என் வீட்டைப் பார்த்தேன். அம்மு பூட்டிக் கொண்டிருந்தாள். அதை நான் மறந்துவிட்டேன். அவள் சொன்ன ஹாஸ்பிட்டலுக்குத்தான் ஆட்டோ விரைந்தது. நாங்கள் இறங்குவதற்குள் அவள் அதே ஸ்கூட்டியில்  என் இன்னொரு மகளுடன் வந்திருந்தாள்.  என் இன்னொரு குழந்தை என்னுடன் வரவில்லை என்பதும் கூட நினைவற்றிருந்தேன்.

கைத்தாங்கலாக நானும் ஆட்டோ ஓட்டுநரும் என் கணவரை அழைத்து வருவதற்குள் பாதி உறங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை கத்தி எழுப்பிவிட்டு  அவசர சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தினாள்.  இவ்வளவு கூப்பாடிட்டு மருத்துவத்தைத் தொடரச் செய்ய என்னால் முடியுமா எனத் தெரியவில்லை. அம்முவிற்குத் தெரிந்திருந்தது.

அவளுக்குப் பழக்கப்பட்ட மருத்துவமனை. நர்ஸ்களோடு சேர்ந்து அவளும் அந்த அவசர சிகிச்சை அறையில் இருந்தாள். அப்போதுதான் அவள் பெயர் அம்மு என எனக்குத் தெரியும்.  ஆனால் அது செல்லப் பெயராக இருக்க உண்மைப் பெயர் கேட்கும் நிலையில் நான் இருக்கவில்லை.

“கவலப்படாதீங்க. ஆபத்தக் கடந்துட்டோம். இதுக்கு மேல ஒன்னும் ஆகாது” 

என் கையை மீண்டும் பிடித்துக் கொண்டாள்.  அவள் உச்சரிப்பை மீண்டும் கவனித்தேன். ‘கடந்துட்டோமா?’, அப்படியெனில்  ஆபத்தைக் கடந்தவர்களில்  அவளுமா இருக்கிறாள்?  இப்படித்தான் வார்த்தைகளின் வழியே என் துக்கத்தில் அவளும் தன்னை இணைத்திருந்தாள். தங்குதடையற்ற ஒரே அலைவரிசையின்  மூச்சுக் காற்றை,  வெளியே விடுவதற்கான ஒத்திகைக்காக,  ‘முதல் பெருமூச்சு’ அந்த நொடியில்தான் என்னிலிருந்து வெளியேறியது. ஆசுவாசத்தின் வடிவம்!

“நா இங்கேதான், நர்ஸ்ஸாதான் இருந்தேன். எனக்குத் தெரியும். நா சொல்றத நம்புங்க. அழாதீங்க” யாரென்றே தெரியாத என்னைத் தேற்றிக்கொண்டேயிருந்தாள். யாரென்றே தெரியாத அந்தத் தேற்றுதல்தான் எதிர்கால பயத்திலிருந்து என்னை விடுவித்துக் கொண்டிருந்தது.

உள்ளிருந்து வந்த டாக்டர் நேராக அவளிடம்தான் பேசினார்.

“அமுதவள்ளி! ஏதும் பிரச்சனை இல்ல. ஈசிஜி நார்மல்தான். செரிமானப் பிரச்சனையா தெரிது” என்றார்.

அவளுக்குப் பரிட்சயமான மருத்துவர். அதனால்  நேராக அவளிடம்தான் எல்லாத் தகவல்களையும் சொன்னார். என்னிடம் வந்திருந்தாலும் அவர் சொன்னவையெல்லாம் எனக்குப் புரிந்திருக்குமா என்ன?  எனக்குப் பதிலாக அவள்தான் முடிவெடுத்தாள், 

“நைட் தங்கிப் பாத்துட்டு காலைல டிஸ்சார்ஜ் ஆகிக்கிறோம். ரொம்பத் தொலைவுல இருக்கோம். நைட்ல அவரசம்னா திரும்ப வரக் கஷ்டம்” 

நான் கேட்டுக் கொண்டிருந்த மழலை மாறாத மொழியின் சொந்தக்காரி திடீரென 50 வயதுப் பெண்மணியின் அனுபவத்தை உதிர்த்துக் கொண்டிருந்தாள். அவள் பேச்சுக்கும் உடல்மொழிக்கும் சம்மந்தமேயிருக்கவில்லை.

மனதும் மூளையும் இயங்காத நேரத்திலோ சுயமாய் முடிவெடுக்கத் தெரியாத அசாதரணச் சூழலிலோ நமக்காக யாரேனும் நம் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது?!

“பசங்கள நான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் தூங்க வச்சுடுறேன். சொந்தக்காரங்க யாராச்சும் இருந்தா காலைல கூட வரச் சொல்லுங்க. நான் மாத்திவிட்டுட்டு என் வீட்டுக்குப் போய்க்கிறேன்”

அவளை அம்மு என்பதா அமுதவள்ளி என்பதா..? அணிந்திருந்த கருப்பு புர்கா என்னைச் சந்தேகம் கொள்ளச் செய்தது.    தயக்கம் உடைத்துக் கேட்கும் இடமாக என் நிலை இருக்கவில்லை. 


“தேங்க்ஸ் அமுதவள்ளி”

“அக்கா…  இங்குள்ளவங்க என் பழைய பேர்லையே கூப்டுறாங்க. நீங்க அமீரான்னே கூப்டுங்க. இல்லைன்னா அம்மு கூட ஓக்கே..”

ஓரளவுக்கு விடையை நெருங்கிவிட்டேன்.  முழுதாய்த் தெளியும் வரை விடையினைப் பெறும் இடமாக என் சூழல் அப்போது இல்லை. காலம் சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் பிறிதொரு நாளில் பார்த்துக்கொள்ளலாம்.  என் மகள்கள் இருவருடனும் அவளை வழியனிப்பி வைத்தேன்.

யாரென்றே தெரியாத அந்நியப் பெண்ணொருத்தியிடம் என் இரண்டு பிள்ளைகளையும் வீட்டையும் ஒப்படைத்துவிட்டதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.  

சாதி, சனம் விட்டுக் காட்டுப் பகுதியொன்றில் குடியேறிய வறட்டு தைரியத்தின் மீது அப்போதுதான் எனக்கு என் மேல் எரிச்சல் வந்தது. அண்டை வீட்டாரிடம் ஏன் இணக்கத்தை மார்க்கம் அதிகம் வலியுறுத்தியிருந்தது என்பதையும் இது போன்ற அசாதரண சூழல்களில்தான் புரியும். ஊரிலிருந்து வருவதற்கு தம்பிக்கும் அம்மாவிற்கும் 2 மணி நேரம் தேவைப்பட்டது. அண்டை வீட்டு அம்முவிற்கு 2 நிமிடமே போதுமானதாய் இருந்தது. 

நானும் என் தம்பியும் அம்மாவுமாகச் சேர்ந்து  என் கணவரை  வீட்டுக்கு அழைத்து வரும்போது அவள்தான் டீ முதற்கொண்டு போட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றாள். 

“அக்கா என் நம்பரை ‘அமீரா’ன்னு போட்டு உங்க போன் டைரில எழுதி வச்சிருக்கேன். தேவைன்னா கூப்டுங்க. நான் வீட்ல சும்மாதான் இருப்பேன்” 

பட்டன் போன் ஒன்றைக் காண்பித்தாள்.

‘எவ்வளவு தைரியமான, பொறுப்பான பெண். அமுதவள்ளி, அமீராவாகக்  கிடைக்க குடும்பம் குடுத்து வைத்திருக்க வேண்டும்’ – இப்படித்தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அதன் பின்  அம்மு சொன்ன ஒவ்வொரு கதையும் எனக்குள்ளேயே உடலில் முற்களைப் பாய்ச்சிய ரணத்தைத் தந்து கொண்டிருந்தன.

அம்மு கணவன் இராமநாதபுரத்தின் பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்கிறான். குறைந்த வருமானம். அதனால் வாரத்திற்கொருமுறைதான் வருகிறான்.  மாமியார் இந்த  ஏரியாவில் வசிப்பதால் இங்கேயே குறைந்த வாடகையில்  வீடு எடுத்துக் குடியிருக்கிறாள்.  வீடு எனக் கூடச் சொல்ல முடியாது. மொட்டைமாடியில்  அறையும் கிச்சனும்  இல்லாத வீடு.  ஒரு ஹால், ஒரு பாத்ரூம், டாய்லட். அவ்வளவுதான். அதுவும் இரண்டாம் மாடியில்.   

மானாமதுரைக்கும் பரமக்குடிக்கும் இடைப்பட்ட ஊரின் கிராமம் இருவருக்கும்.  இரு சமய மக்களும்  நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே அதில் ஆட்டம் காண வைக்க  இத்தகைய சம்பவங்கள் போதுமானதாய் இருக்கிறது.   காதலித்து இருவரும் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள். அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் ஊரில் இருக்கப் பிடிக்காமல் அம்முவின்  மாமியார் குடும்பம் இந்த முஹல்லாவிற்கு வந்துவிட்டது. என்றோ வாங்கிப் போட்ட இடத்தை வாடகை வீட்டில் தங்கியபடியே கட்டிக் கொண்டிருந்தார்கள்.  அம்முவின் இரத்த வழி உறவுகள் அனைவரும் அவளை ஒதுக்கிவிட்டார்கள்.  அவள் கல்விச் சான்றிதழ் அனைத்தும் தீக்கு இரையாகின.

சில மாதங்கள் வெவ்வேறு ஊர்களில் கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டு எப்படியோ  வாழ்க்கையைச் சமாளிக்க இருவரும் கற்றுக்கொண்டனர்.  ஒரு வருடம் கழித்துப் போகும்போது அம்மு வீட்டில் அதே கொதிப்பில்தான் இருந்திருக்கிறார்கள்.   பெண்பிள்ளையை தலைமூழ்குவது எளிமையானது.    ஆண்பிள்ளைகளை அப்படியே முற்றாக ஒதுக்க பெற்றோரால் முடிவதில்லை. பாசத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் அது. அம்முவையும் அவள் கணவனையும் நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டார்கள்.  


நான் அம்முவிடம் ஒருமுறை கேட்டேன், “தனிக்குடித்தனமாதான் இருக்கணும்னு சொல்லிட்டாங்களே, பின்ன  நீ ஒன் புருசன் இருக்குற ஊர்லையே குடிபோகலாம்ல?”

அப்பாவியாய் அவள் சொன்னாள், “தூரமாவே இருந்தா நெருக்கமில்லாம போய்டும்லக்கா… இங்கே இருந்தா பெத்தவங்களும் மகனும் பாத்துக்கிட்டிருக்க தோதா இருக்கும்.  எனக்குதான் என் சொந்தம் இல்லாமப் போச்சு. அவருக்காது  இருக்கட்டும்”


அவளையும் மீறி அவள் கருத்தோடு அவ்வபோது முரண்பட்டுக்கொள்வாள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டால் பத்துமணிக்குள் கணவரும் மதிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றுவிடுவார். எவ்வளவு நேரம்தான் டீவி பார்ப்பது? நான் அம்முவின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். அவள் என் தனிமைபோக்கி.  என் தனிமையை விரட்ட அவளிடம் நிறைய சொந்தக் கதைகள் இருந்தன. என்னிடம் தீர்வை எதிர்நோக்கியிருக்காத முறையீடல்களும் இருந்தன. அவளுக்கு நானொரு வடிகால்.

அவள் சொல்லும் ஒவ்வொரு குடும்ப விஷயங்களும் எனக்குப் புதியவை.  நாத்தனாரின் திருமணம் இன்னும் 3 மாதத்தில்  வந்துவிடுமாம்.  அண்ணன் என்ற முறையில்  அம்முவின் கணவன் எப்பாடுபட்டேனும்  திருமணச் செலவுக்கு பணம் வைத்து கொடுக்க வேண்டுமாம்.  அவள் ஒரு வருட உழைப்பில் வாங்கிய ஸ்கூட்டரை விற்றுதான்  பங்கைக் கொடுத்திருக்கிறார்கள்.

“உன் பைக்ன்னா? அம்மா வீட்ல இருந்து கொண்டு வந்ததா?

“இல்லக்கா,  பரமக்குடில ஒரு வருசம் நான் நர்ஸ்ஸா வேல பாத்தேன்னு சொல்லியிருக்கேன்ல? அப்ப வாங்கினது”

“நீ ஏன் அப்பறம் வேலைக்குப் போகல அம்மு?”

“பொதுவாவே நர்ஸ்களுக்கு ஒரு மாசம் பகல் டியூட்டின்னா ஒரு மாசம் நைட் டியூட்டி பாத்தாகணும். என் மாமியார் கூடப் பேச ஆரம்பிச்சதுல இருந்து நைட் டியூட்டி போறதுன்னா வீட்டுக்குச் சரி வராதுன்னு சொல்லிட்டாங்க. இவரும் அம்மா சொல்லைக் கேட்டுட்டு போக வேண்டாம்னுட்டார்”

நான் பதில் சொல்ல முடியாமல் நின்றேன்.

“இதுக்கே அரண்டுட்டீங்களே?  அந்தக் கல்யாணத்துக்கு என்னய வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

“ஏன்?” 

“சம்மந்த வீட்டுக்குத் தெரிஞ்சா ஒரு மாதிரி நினைப்பாங்களாம். அதுனால நான் வேண்டாமாம்”

“அப்ப உன் புருசன்? அவர் கல்யாணத்துல நிப்பாரா?”

“என் பொன்டாட்டிக்கு மரியாதயும் அழைப்பும் இல்லாத விசேசத்துல நான் கலந்துக்க மாட்டேன்னு அவர் சொல்லணும்னுதான் அல்லாட்ட ரொம்ப வேண்டுனேன். ஆனா…..”

நாவு தழதழத்திருந்தும் புன்னகைத்து மீத சொற்களை விழுங்கிக்கொண்டாள்.  வலுகட்டாயமாய் விழுங்கிய சொற்கள் தொண்டையையும் நெஞ்சையும் பதம் பார்த்தனவோ என்னவோ புன்னகைத்திருந்தும் அவள் கண்கள் மெல்லமாய்க் கசிந்திருந்தன. 

“ஏன் அம்மு! என்னைக்காச்சும் உன் புருசன் மேல கோபம் வந்து ஏன்டா முஸ்லிம் ஆனோம்னு நெனச்சுருக்கீயா?” – நான் கேட்டேன்.

“என் பதில வச்சு என்னைய ஈமான் இல்லாதவன்னு எடை போட மாட்டீயதான?” – என்னிடம் உறுதிமொழி கேட்டாள். 

முகம் வாடியிருந்த ஒருநாளில் அவளிடம் கேட்டேன், கர்ப்பமான விஷயத்தைச் சொன்னாள். மகிழ்ந்து போய் வேகவேகமாய் சீனி எடுத்து அவளுக்கு இட்டேன். வாடிய முகம் வாடியபடிதான் இருந்தது. அவள் சொன்னாள், “அவரோட அத்தா அம்மாகிட்ட போய் சொல்லுன்னு சொன்னாரு. நானும் மாமி வீட்டுக்குப் போனேன். நாட்டுக்கு ரொம்ப முக்கியம்ன்னு மாமா சொன்னார். நீ புள்ள பெக்கலைன்னு யாரு அழுததுன்னு மாமி கேட்டாக”.

“அதுகளை விடு… உனக்கு நா பிரசவத்துக்கு நிப்பேன். கவலப்படாத” – நான் சொன்ன பின்னேதான் கர்ப்பவதிக்கான பளபளப்பு அவள் கன்னத்தில் கூடியிருந்தது. 

அம்முவின் மாமியாரும் திட்டமிட்டபடி  பிரசவ நேரத்தில்  இங்கே அல்லாமல் சொந்த ஊருக்குச் சென்று தங்கிவிட்டார்கள்.  இல்லை, தப்பித்துவிட்டார்கள்.

அம்முவின் கணவன்  காலில் விழுந்து அழைத்திருக்கிறான்.  “எவளுக்கு எவ புள்ளப்பேறு பாக்குறது?” எனத் திட்டியிருக்கிறாள் அம்முவின் மாமியார்.  நான்கைந்து தலைமுறைக்கு முன்னர் அம்முவின் மாமியாரும் அவள் முகஞ்சுழிக்கும், ‘எவளோ’வாகதான் இருந்திருக்கக் கூடும்.  

இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தேன், என் அக்கா, தங்கை, தம்பி மனையின் பிரசவங்களில் உடன் இருந்திருக்கிறேன். என்றாலும் என்ன? இன்னும் எத்தனை நூறு பிரசவங்களில் உடனிருந்தாலும்  சூல்காரியைக் கையாள்வது பதற்றத்துக்குரிய விஷயம்தானே?  அத்தனைப் பதற்றங்களையும் வெளிக்காட்டாமல் அவள் உடன் இருந்து,  அவள் பிள்ளையை அவள் கையில் கொடுத்தேன். முதன்முறையாக என்னை, “அம்மா” என்றாள்.  என் ஐந்து  வயது மகள்  இருபது வருடம் கழித்து பிள்ளைப் பெற்றால் நான் அடையும் உணர்வை அம்மு  இந்தத் தருணத்திலேயே எனக்குக் காண்பித்துக் கொடுத்தாள்.

அம்மு வீட்டிற்கு போன் போட்டுத் தகவல் சொன்னபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் நாராசமாய் இருந்தன.  தன் அம்மா, அத்தா வராததற்கு  ஏதேதோ காரணம் சொல்லி காப்பாற்றிக் கொண்டிருந்தான்  அம்முவின் கணவன். அதுவும் அதே வகை நாராசம்தான்.  ஜவுளிக்கடைக்கு 3 நாள் லீவு எடுத்துக்கொண்டு அருகில் இருந்து கணவன் பார்த்துக்கொண்டான். வேறு வழியில்லை. 

குழந்தையின் காதில் பாங்கு சொன்னார் என் கணவர். ஜம்ஜம் நீரை குழந்தையின் வாயில் தடவினேன்.   மூன்று நாளும் அவளுக்குச் சமைத்து அனுப்பினேன்.   மருத்துவமனையில் இருந்து வந்தபோது ஆராத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பினேன்.     நாற்பதாம் நாள்  ஆகிவிட்டபோது அவள் வீட்டை முழுக் கழுவிச் சுத்தம் செய்து, குழந்தைக்கு குளிக்க ஊற்றி, அவளையும் தயார்படுத்தி, அவளைத் தொழச் செய்து, பால்ச்சோறு ஆக்கி…

இத்தனையும் நான் ஏன் அவளுக்குச் செய்ய வேண்டும்? என் கணவனின் உயிரைக் காப்பாற்றி விட்டதற்காகவா? 

“காதலிச்சதுனால மதம் மாறினதென்னவோ உண்மைதான் க்கா, ஆனா  என் புருசனே என்னை விரட்டினாலும் கடைசிவர முஸ்லிமாதான் இருப்பேன்” என்ற அவளின் உறுதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் எனக்கிருந்ததாக நம்பினேன்.   அவள் கணவன் வழி முஸ்லிம் உறவினர்கள் செய்யும் தவறால் ஒட்டுமொத்தமாய்  முஸ்லிம்களின் மீது தவறான அபிப்ராயம் அவளுக்கு வந்துவிடக் கூடாதென நான் மெனக்கெட்டேன். 

’விழலுக்கு இறைத்த நீர்’,  ’ஓடும் நீரில் எழுதியவை’, ’கடலில் விழும் மழைத் தண்ணீர்’ என இன்னும் பிரோஜனமற்றவைக்கு எத்தனையெத்தனை எடுத்துக்காட்டுகளைக் கொட்டினாலும்  அமானிதம் குறித்து  விசாரிக்கப்படும் நாளில் அநீதியிழைக்கப்பட்டவளின் பக்கம் நான் நின்றதற்கான திருப்தி கிடைக்கும் என நம்பினேன்.  யார் யாரோ செய்த தவறை நான் ஏன் என் மூலம் சரிகட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு என் மனம் சொல்லும் பதில்கள் அவை. 

அம்முவிற்கு  என்னிடம் சொல்லக் கதைகள் பல இருப்பதைப் போலவே  கேள்விகளும் முறையீடுகளும் அதிகம் இருந்தன.

“அக்கா…  அண்ணே பள்ளிவாசல்ல நிர்வாகிதானே?  லேடீஸ்க்கு தனியா மதர்சா நடத்த சொல்லச் சொல்லுங்களேன்”

“லேடீஸ் பெரும்பாலும் அப்படியெல்லாம் க்ளாஸ்க்கு வரமாட்டாங்க அம்மு. ஏற்கனவே சின்ன வயசுலையே ஓத வச்சுருப்பாங்கள… ஓதத் தெரியலைன்னாலும் கூட கூச்சப்பட்டுக்கிட்டு வரமாட்டாங்க”

“எனக்கு ஓதக் கத்துக்கணும் க்கா? நீங்க சொல்லித் தரீங்களா?”

“என்ன திடீர்ன்னு?”  என்றெல்லாம் அவளிடம் கேட்க எனக்கு அவசியமில்லை. பதில் எனக்குத் தெரியும்.    


ஓய்வு விடுப்பு முடித்து திரும்பவும் எங்கள் முஹல்லாக்கு வந்த மாமியாருக்கு பக்கத்துத் தெருவில் குடியிருக்கும் மருமகளையும் பேத்தியையும் பார்க்கத் தோதில்லை. இவளே  மகளை அழைத்துச் சென்று காண்பித்திருக்கிறாள். “புள்ள பெத்த வீட்டு வாசம் ஒத்துக்காது எனக்கு. எதுக்கு வந்த?” என்றிருக்கிறார் மாமியார்.   யாரோ பெற்ற பிள்ளை போல் கையில் நூறு ரூபாய்த் தாளை வைத்திருக்கிறார்.  இத்தனையும் சொல்லிவிட்டு என்னிடம் அம்மு சொன்னாள்,  “புள்ளைய மார்க்க, ஒழுக்கமா வளத்துடுவீயா”ன்னு என் மாமி கேட்டாக.  “ஒனக்கே ஒன்னுந் தெரியாது, நீ எங்கின நாலு மார்க்கத்த சொல்லிக் கொடுத்து வளப்ப”ன்னாங்க.  சீக்கிரம் ஓதக் கத்துக்கிடணும் க்கா”

அம்மு மாமனாரையோ, கணவரையோ ஒருமுறை கூட பள்ளிவாசலில்  தான்   பார்த்ததில்லை என என் கணவர் சொன்னது, நினைவில் வந்தபோது  சிரித்தேன். அம்முவும் சொல்லியிருந்தாள், “இப்ப கட்டிக் கொடுத்த என் நாத்தனா பெருநாள் தொழுகைய மட்டும்தான் தொழுது பாத்திருக்கேன்”

இருவரும் சிரித்துக்கொண்டோம். அவள்  கதை பேச வரும்போதெல்லாம்  அரபி எழுத்துகள் கற்றுக்கொண்டாள்.  என்னுடன் சேர்ந்து தொழுதாள்.  பெருநாளில் என்ன செய்ய வேண்டும்,  கல்யாண வீடுகள் எப்படி இருக்கும், எந்தந்த நாளில் நோன்பு வைக்க வேண்டும், இஸ்லாமியர்களின் பிரத்யேக சமையல்கள், உறவுமுறைகள், உறவுமுறைக்குள் திருமணங்கள் ஒவ்வொன்றின் மீதும் துருவித் துருவி விசாரித்து  ஆர்வமாய்க் கேட்டுக்கொள்வாள்.  அவளுடன்  இப்படியாக என்னையும்  புத்துணர்வோடு வைத்துக்கொண்டேன்.

அவள் என் வீட்டிற்கு அடிக்கடி வருவதும், நாங்கள் இருவரும்  ஒன்றாகவே வெளியிடங்களுக்குப் போவதும் முஹல்லாவாசிகளுக்கெல்லாம்  தெரியும்.  தங்கையா எனக் கேட்பார்கள். அம்மு தடுமாறுவாள். “ஆமாம், என் தங்கச்சி” என்று உறுதியான வார்த்தையில் சொல்வேன். அம்மு முகத்தில் அவ்வளவு பேராந்தம்  பெருக்கெடுத்து ஓடும். 

அது அம்முவின் மாமியாருக்கும் எட்டியிருந்தது. ஒருமுறை என் வீட்டிற்கு அழையாமலேயே வந்திருந்தார்.  முதலில் அவரை  எனக்குத்  தெரியவில்லை. தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.  கிராமவாசிகளுக்கே உரித்தான உழைக்கும் வர்க்கத்தின்  அடையாளங்களோடு இருந்தன அவரது உடல், நிறம், மொழி.  கட்டுச்சட்டான உடம்பு. முகத்திலும் கழுத்திலும் கையிலும் எங்கேயும் சதை தளர்வாய் இருக்கவில்லை.  பேரன் பேத்தி எடுத்த வயதுடையவர் எனச் சொன்னால் சட்டென நம்பிவிட வாய்ப்பே இல்லை.  மிக முக்கியமாய் அம்முவிற்கும்  இந்தப் பெண்மணிக்குமே  உருவத்திலும் நிறத்திலும் வித்தியாசமில்லை. 

நன்கு பேசிக்கொண்டிருந்தவர் கொஞ்சமாய் வாழைப்பழத்தில் ஊசி செலுத்தத் தொடங்கினார்.  அம்மு  வெள்ளிக்கிழமையானால் கோவிலுக்குச் செல்வதாகவும், அவள் வீட்டில்  சாமிப் படங்களை வைத்து மறைமுகமாக பூஜை செய்துகொண்டிருப்பதையும் சொன்னார்.   இதுநாள் வரையில் மகனது வீட்டைக் கூடப் பார்த்திருக்காத பெண்மணி, அதே வீட்டை இண்டு இடுக்கு வரை அலசி எடுத்த என்னிடம்  இப்படிச் சொன்னபோது  அவர் நோக்கம் புரிந்தது. அதன் பின்னும்  அம்முவை எங்கும் அழைத்துச் சென்றதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில நேரம் அம்முவின் கணவனே அம்மா பேச்சைக் கேட்டு என் வீட்டிற்குப் போகத் தடை கூட விதித்திருந்தான். 


அம்முவின் நாத்தனார் திருமணம் வரை மட்டும் தனிக்குடித்தனம் இருந்துகொள்ளச் சொல்லிதான் முதலில் நிபந்தனையிட்டிருக்கிறார்கள். அம்முவின் கணவனும் அதற்காகக் காத்திருந்தான்.  ஆனாலும் அழைத்துக்கொள்ளவில்லை.  வீடு கட்டிய பின் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறார்கள்.  வீடும் குடிபோய், அம்முவின் கொழுந்தனுக்கும் திருமணம் ஆகிவிட்டிருந்தது. அப்போதும் அம்முவிற்கு புது வீட்டில் இடமில்லை.

“எவ்வளவு குனிஞ்சு போனாலும் கொட்டிட்டேதான் இருக்காங்களே தவிர்த்து சோர்ந்துட மாட்டுறாங்கக்கா.  நா என் புருசனோடையே இருந்துக்குறேன்” – கடைசியாய் வீடு காலி செய்யப் போகும்போது சொல்லியிருந்தாள்.

இவ்வளவு நாளாய்  மாமியார் வீட்டுக்குப் போக வர அம்முவிற்கு அனுமதி இருந்துகொண்டிருந்தது.  கொழுந்தனுக்குத் திருமணம் ஆகி  இன்னொரு மருமகள் வந்த பின்னே சமைக்க, கூட்டிப் பெருக்க ஆள் தேவை பூர்த்தியானதால்  அம்மு அதற்கடுத்து அவசியமற்றவள் ஆகிவிட்டாள்.  வேலைக்காரியாக மட்டுமே இத்தனை காலம் தன்னை உபயோகப்படுத்திக் கொண்டார்களா என நினைக்க நினைக்க அவளுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. அதனால்தான்  எல்லாவற்றையும் துறக்கத் துணிந்தாள். 

கிளம்பும்போது சொன்னாள், “தற்கொல இஸ்லாத்துல ஹராம்னு மட்டும் இல்லைன்னா என்னைக்கோ செத்து போயிருப்பேன் க்கா”  

எதை அவள் சொல்லிவிடக் கூடாது என இத்தனை காலம் நான் பயந்தேனோ அதையே சொல்லிவிட்டாள். அதுவும் கிளம்பும் நேரம்! எப்படி அவளைத் தேற்றுவேன்?

பொருட்களை ஏற்றிய வண்டியிலேயே அவளும் ஓரமாய் அமர்ந்துகொண்டாள். அவள் கையைப் பிடித்துச் சொன்னேன், “அம்மு! நீ வேற ஆளா இருந்தங்குறதுக்காக  இப்ப வரை உன்ன ஏத்துக்காம இருக்காங்கன்னு மட்டும் நினைச்சுடாத.  ஒடச்சு சொல்லணும்னா உன் பழைய மதமெல்லாம் அவங்களுக்குப் பொருட்டே இல்ல.  நாலு காசு பணத்த சேர்த்து வச்சுக்கிட்டா இதுகளாம் நாய் மாதிரி ஒன் பின்னாடி வரும்க!”    – கண் கசிய உதடு புன்னகைக்கத்து, “ஆமீன்” என்றாள்.

சில காலம் அவள் நினைவு வரும்போதெல்லாம் அவள் உயிருடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் பிரார்த்தனையாக இருந்தது.   வீடு தேடி மாமியாரிடம் சென்றேன்.  நிஜமாகவே  போன் நம்பர் இல்லையா, என்னிடம் கொடுக்க விருப்பமில்லையா எனத் தெரியவில்லை. அம்மு என் தொடர்பில் இருந்து துண்டாடப்பட்டு அகன்றாள். காலவோட்டம் பலரை நம் வட்டத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும். அம்மு என் நினைவில் இருந்து ஒதுங்கி காணாமற் போனதும்  அவ்விதமே.

அவளைத்தான் இத்தனை காலம் கழித்து  இன்று அவள் மாமியார் வீட்டில் சந்திக்கின்றேன்.

“ஜனாசாவ குளிப்பாட்ட ஆள் ஏற்பாடு பண்ணனுமாமா?  உரிமைப்பட்டவங்க வீட்ல யாருக்காச்சும் தெரியுமா? நீங்க குளிப்பாட்டிடுறீங்களா?”  – பள்ளிவாசலில் இருந்து வந்த நிர்வாகி  நடு ஹாலில்  இருந்துகொண்டு சத்தமாகவே கேட்டார்.

எங்கள் பார்வை வீட்டு ஆட்களை நோக்கியிருந்தது. அம்முவின் நாத்தனாரும், கொழுந்தன் மனைவியும்  கைபிசைந்தபடி நின்றிருந்தார்கள். அவர்களுக்கு ஏதும் சொல்லத் தெரியவில்லை.

“அமீரா மச்சி?” – அவளை நோக்கி நாத்தனாள்  புருவத்தை உயர்த்தியபடி கேள்வியாகக் கேட்டாள்.

“ஆள் தேவையில்லங்க ண்ணே… நானே நல்லமுறைல  குளிப்பாட்டி கபனிட்டுத் தந்துடுறேன்”

சொல்லிவிட்டவள் கையால் மூடிய பக்கத்தை மீண்டும் திறந்து ஓதத் துவங்கினாள்.   அவளைப் போலவே குர்ஆனை ஓதிய எட்டு வயதுச் சிறுமிக்கும் அம்முவின் சாயல். குட்டி அம்மு! நன்றாய் வளர்த்திருக்கிறாள். 

காலம் உருண்டோடியபோது அவள் பொருளாதாரமும் மாறியிருந்தது.  அது அவள் ஆடைகளில், நகைகளில், பொலிவில் அப்பட்டமாக தெரிந்தது. அவள் நிலை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.  இத்தனை காலம் அவளை விரட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தேவையென்றபோது உறவுமுறையிட்டு அழைக்கிறார்கள்.  வீட்டின் குடும்பத் தலைவி அந்தஸ்து அந்த நொடியில் இருந்து அவளுக்கு கைமாறியிருக்கும். எல்லாவற்றுக்கும் தடையாக இருந்த மாமியாருக்கு அவள்தான் இறுதி நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தாள்.  எப்படிப்பட்ட பழிவாங்கல் நிகழ்வை காலம்  எளிதாக அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்குத் தந்துவிடுகிறது?

காலையில்தான்  வண்ணதாசனின் கவிதையொன்றை வாசித்திருந்தேன். இறந்த மாமியார் சடலத்தின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு சரளமாய், ராகமாய்  குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த அம்முவைப் பார்த்துக்கும்போது அக்கவிதையின் இறுதிவரிகள் மனதில் இழையோடின.

“பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல் இருக்கிறது சிலரின் நிம்மதியை!”

அம்முவை அப்படிதான் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

****** 

mohdamina23@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மிகச் சரளமாகவும் நுணுக்கமாகவும் சமுதாயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை எடுத்துக் காட்டுவதைப் போல எழுதுகிறீர்கள். மா’ஷா அல்லாஹ்.

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னறிவின் பார்வைக்குள் இருக்கும் ஏராள அமீராக்களைப் பற்றி ஏன் எழுதாமல் போனேன் என்று யோசிக்க வைத்த எழுத்து.

    நிறைவாகவும் நிறையவும் மேலும் எழுதுங்கள். இறை நாடட்டும். வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button