
அன்றுதான் அப் பள்ளியில் புதிய ஆசிரியையாக மஞ்சுளா உள்ளே நுழைந்தாள். அழகிய ஆரஞ்சு வண்ணப் பருத்திப் புடவையும். அவள் கழுத்தில் அணிந்திருந்த ஆரஞ்சு மணிமாலையும் அவள் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டியது
தலமை ஆசிரியை ரத்னா அவளை மற்ற ஆசிரியைகளுக்கு அறிமுகப்படுத்தினார். ‘’சரி! யார் யார் . எந்த வகுப்பு என்ற லிஸ்ட் தயாரா? என உதவித் தலைமை ஆசிரியை புவனாவை வினவினார்.. ‘’இதோ! என அவரிடம் அதைக் காட்டினாள் புவனா.
ஷீலா! எல்.கே,ஜி மீரா யு.கே.ஜி., ராதா முதல் வகுப்பு , என்று படித்தபடி சரளா உனக்கு இரண்டாம் வகுப்பு என்றதும் ‘’ஐயோ! எனக்கு அந்த வகுப்பு வேண்டாம் என்று அலறினாள். உடனே தலைமை ஆசிரியை சரி! மேரி! நீ எடுத்துக் கொள் என்றார். உடனே மேரி’’ வேண்டாம் மிஸ். போன வருடம் நான் அந்த வகுப்பின் ஆசிரியை. அதனால் எனக்கு இந்த வருடம் வேறு வகுப்பு கொடுங்கள்’’ என்று தன் மறுப்பை நாசுக்காகத் தெரிவித்தார். இதனால் எரிச்சலான தலைமை ஆசிரியை சரி.சரி. மஞ்சு அதன் ஆசிரியை என்று கூறி அவளது பதிலையும் எதிர்பார்க்காதவராய் மற்றவர்களின் பெயரைப் படித்து முடித்தார்.
பின் அவரவர்கள் தங்கள் வகுப்பிற்குச் செல்ல ஆயத்தமாயினர். எல்லோரும், மஞ்சுளாவை ‘’ஐயோபாவம்! நன்றாக மாட்டிக் கொண்டாள்’’ என்பதுபோல் பார்த்தனர். அதனை மஞ்சுஅளாவும் உணர்ந்தாள். ஆனால் காரணம் புரியவில்லை. அப்போது மூன்றாம் வகுப்பு ஆசிரியை கஸ்தூரி அவளருகில் வந்து ‘’மிஸ்! அந்த வகுப்பில் முத்துன்னு ஒரு பையன் .அவன் மகா முரடன் பார்த்து நடந்து கொள்ளுங்கள்’’ என்று எச்சரித்துவிட்டு நகர்ந்தாள்.
மஞ்சுவிற்கு அப்போதுதான் அவர்கள் தன்னைப் பார்த்த பார்வையின் பொருள் புரிந்தது. ஒரு புன்முறுவலை இதழ்களில் படரவிட்டவளாய் வகுப்பில் நுழைந்தாள். அதுவரை காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்த மாணவர்கள் கப்சிப் என்று அமைதி காத்தனர். மஞ்சுளா சிரித்தபடி அவர்களை அணுகினாள். தன் பெயரை முதலில் அவர்களுக்குத் தெரிவித்தாள். பின் ஒவ்வொருவரின் பெயரையும் கவனமாகக் கேட்டுக் கொண்டே வந்தாள். முத்து என்ற பெயரைக் கேட்டதும் அவனைக் கூர்ந்து பாரத்தாள். வாட்டசாட்டமாக இருந்தான். இவன் தான் முரடன் முத்துவா என்று அவனைத் தன் கண்களால் அளந்தாள். சிரிக்கவே மறந்து போன் ஒரு முகம் அம்முகத்தில் ஓ ர் இறுக்கம். கண்கள் வெறுப்பினை வெளிப்படுத்தின. பார்த்தவுடனேயே அவன் அன்பிற்கு ஏங்கும் ஒரு குழந்தை என்பதைப் புரிந்து கொண்டா.ள்.முதல் இரண்டு நாட்கள் அவனைக் கவனிக்காதது போல் நடந்து கொண்டாள். குழந்தைகளுக்குப்
பள்ளி நேரம் போக இலவசமாகப் பாடத்துடன் பலப் பல நீதிக்கதைகளைச் சொல்லி அவர்களை நெறிப்படுத்தினாள். ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாள். இப்படி முத்துவையும் அவள் மெல்ல மெல்ல நெருங்கினாள். ஆனால் அதற்கு அதிக நாட்கள் ஆனது.
அவள் அழைத்த போதெல்லாம் காதிலேயே வாங்காதது போல் செல்லுவான். ஆனால் மஞ்சுளா அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை. தன் முயற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தாள். பிறந்த நாள் என்று வந்த குழந்தைகளுக்கு மரக் கன்றைப் பரிசளித்து அதனைப் பள்ளியில் அவர்கள் பெயரைச் சூட்டவைத்து அவர்கள் கையால் தினமும் தண்ணீர் விடச் செய்தாள். முத்துவின் பிறந்த நாளும் வந்தது. அவன் பெயரில் ஒருமரக் கன்றை நடவைத்தாள். அப்போது அவன் கண்களில் ஓர் ஈரக் கசிவைக் கண்டாள்.
ஒருநாள் முத்துவை அழைத்து, ,முத்து! உன் கண்களை மூடு! என்று அவன் கையில் ஒரு கிளிக் கூண்டைத் தந்தாள். அதில் சின்னஞ்சிறிய அழகான கிளி அமர்ந்திருந்தது. அது முத்து என்று அழைத்ததும் முத்து வியந்து ஆசிரியையைப் பார்த்தான். நான் தான் உன் பெயரை அதற்குப் பழக்கப் படுத்தியிருக்கிறேன். இனி அது உன் தனிமைக்கு மருந்து என்று சிரித்தபடி கூறி அவன் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தாள். அவன் வெட்கத்தில் நெளிந்தவனாய் நன்றி கூறிக் கிளியுடன் சென்றான்.
நாளடைவில் அவனிடத்தில் நல்ல மாற்றங்கள் தெரியத் தொடங்கின. அவன் எப்போதும் சாப்பிடும்போது கீழே கொட்டி, அனைத்தையும் வீணாக்குவதைக் கவனித்த மஞ்சுளா அவனை அழைத்து உணவை வீணாக்கக் கூடாது. வேண்டும் அளவு உண்ண வேண்டும். என்று கூறி அன்றுத் தன் உணவை அவனுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்.
முரட்டுக் குதிரையை அவள் மெல்ல மெல்ல அன்பு எனும் கடிவாளத்தால் அடக்கி அவனை மாற்றத் தொடங்கினாள். தாய் இல்லா அக் குழந்தைத் தாயின் அன்பிற்கு ஏங்குவதைப் புரிந்த அவளது அன்பான அணுகுமுறை நல்ல பலனளித்தது.
அவன் அணிந்திருந்த முகமூடியைத் தூக்கித் தூர எறிய அவளுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன. இப்போது முத்துதான் அவ் வகுப்பின் தலைவன். மஞ்சுளா எது சொன்னாலும் உடனே அதைச் செய்து முடித்து அவளிடம் பாராட்டினை வாங்கிக் கொண்டு முகம் மலரச் சிரிப்பான்.
அட! இத்தனை நாள் இவன் இந்த அழகை எல்லாம் எங்கே ஒளித்து வைத்திருந்தான்! என்று பார்த்தவர்கள் வியந்தனர். தலைமை ஆசிரியை மனமார மஞ்சுளாவைப் பாராட்டினார். ஏனைய ஆசிரியைகளும் அவளை வாழ்த்தினர்.
கடினமான பாறையாக இருந்த அவன் இதயம் இப்போது
மெழுகாகக் கசியத் தொடங்கியது. மஞ்சுளாவையே ஒரு நாய்க்குட்டி போலச் சுற்றி சுற்றி வரத் தொடங்கினான். இனி அவன் முத்தான முத்து என்று பாராட்டையும் பெற்றுவிட்டான்..
அன்பினால் எவரையும் எளிதில் கட்டிப்போடலாம் என்பதை மஞ்சுளா ஆசிரியை நடத்திக் காட்டிவிட்டாள் அதற்குக் காரணமாய் இருந்த அவள் அம்மாவை அவள் நினைத்துக் கொண்டாள். அவள் சொன்ன கதைதானே அவளுக்கு இவ் வழியைக் காட்டியது..
அன்பிற்குக் கடவுளும் கட்டுப்படுவான் என்பதைக் கண்ணபெருமான் நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறாரே!
அது என்ன கதை! அதை நாம் பார்ப்போமா!
பாரதப் போரை தடுப்பதற்கான முயற்சியில், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்துக்குப் புறப்படும் முன்பாக, பாண்டவர்களுள் ஒருவனான சகாதேவனைச் சந்தித்து,
“சகாதேவா.. உனக்குத்தான் ஜோதிட சாஸ்திரம் நன்கு தெரியுமே.. இந்த பாரதப் போரைத் தடுத்து, அமைதி நிலவிட வழியேதும் உள்ளதா என்பதைக் கொஞ்சம் பார்த்துச் சொல்..!” என்று கேட்க, அதற்கு சகாதேவன் சிரித்துக்கொண்டே, “போர் வராமல் தடுக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது கண்ணா.. உன்னை எங்கும் நகரவிடாமல் இங்கேயே கட்டிப் போடுவதுதான் அந்த வழி…” என்று பதிலளிக்கிறான்..
“எங்கே உன்னால் முடிந்தால் என்னைக் கட்டிப் போடு பார்க்கலாம்..!” என்று சகாதேவனைச் சீண்டினாராம் கண்ணன்.. கண்ணனைக் கட்ட கயிற்றை எடுத்த சகாதேவனை ஏமாற்றப் பல்லாயிரக்கணக்கான கண்ணனாக வடிவெடுத்து அந்த மண்டப அறை முழுவதும் நிரம்பி நின்றிருக்கிறான் கண்ணன்… இதுவே வேறு யாராவதாக இருந்தால் பார்த்த காட்சியில் பிரமித்துப் போயிருப்பார்கள்.. என்ன செய்வது என்று குழம்பித் தவித்திருப்பார்கள்.
ஆனால் சகாதேவனோ, சிறிதும் கலங்காமல், தியானத்தில் அமர்ந்து, `ஸ்ரீகிருஷ்ண மந்திரத்தை’ உச்சரிக்க, கண்ணனது மாய உருவங்கள் ஒவ்வொன்றாக மறைந்து, ஒற்றைக் கண்ணனாகி, சகாதேவனின் அன்பில் கட்டுண்டு நின்றானாம் அந்த தாமோதரன்..
உண்மையான அன்பினால் எதையும் சாதிக்கலாம் என்பதை மஞ்சுளா இக் கதையின் மூலம் அறிந்திருப்பாளோ?
இதோ! அடுத்த ஆண்டும் பிறந்தது. மஞ்சுளா இப்போது நான்காம் வகுப்பு ஆசிரியை. அங்கு முத்துவிற்கு ஓர் அண்ணன் இருக்கிறானாம். அவனை அன்பால் கட்டிப் போடப் புறப்பட்டாள் மஞ்சுளா.