
(அக்டோபர் 2, ”காந்தி 150” முன்னிட்டு திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)
இந்திய பணிச்சூழலில் நாம் ஐம்பத்தி எட்டு அல்லது அறுபது வயதை ஓய்வுக்கான வயதாக வரையறை செய்திருக்கிறோம். ஒய்வு வயதிற்குப் பின்பான காலகட்டங்களில் பெரிதாக இயங்குவதில்லை. உடல்நல காரணிகள் என்பதைக் காட்டிலும் மனநிலை சார்ந்து நமக்கு சில தடைகள் உள்ளன. தனிப்பட்ட பொருள் சார் வாழ்விற்கு அப்பால் பயனுள்ள பொது வாழ்வில் தொடர்ந்து இயங்க வயது தடையாகவே இருக்க முடியாது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் காந்தி.
பொது வாழ்வில் இருப்போருக்கு உடல் நலம் மிகுந்த முக்கியம். காந்தி இதில் அதிக கவனம் செலுத்தினார். நீண்ட நடை செல்லும் வழக்கம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தது. வாழ்நாள் முழுவதும் உணவு பழக்கங்கள் மீது பல்வேறு சோதனைகளை நிகழ்த்தினார். இளம் வயதில் லண்டனுக்கு படிக்கச் செல்லும்போது காந்தி மருத்துவமே கற்க விரும்பினார். ஆனால், அவர் பேரிஸ்டர் பட்டம் பெறுவதே சமஸ்தான பதவி பெறுவதற்கு உதவும் என அறிவுறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் வசித்த காலத்தில் மீண்டும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க வேண்டும் என காந்தி விரும்பினார் என்று ராமச்சந்திர குகா குறிப்பிடுகிறார்.
மில்லி கிரகாம் போலக் அவருடைய நூலில் காந்தி பெரும் அரசியல் ஆளுமையாக ஆகியிருக்காவிட்டால் சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த ஹீலர்களில் ஒருவராக ஆகியிருப்பார் என்கிறார். காந்தி நோய்களைப் பற்றி அஞ்சியதே இல்லை. தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட ‘கறுப்பு பிளேக்’ பற்றிய அத்தியாயத்தில் அவரும் அவருடைய சகாக்கள் சிலரும் பிளேக் நோயாளிகளை கவனித்ததைப் பற்றி சத்திய சோதனையில் எழுதியுள்ளார். மொத்தம் 23 நோயாளிகளைத் தனிமைப்படுத்தி உரிய கவனம் அளித்து சிகிச்சை கொடுத்தனர். பிராந்திக்கு ப்ளேக் தடுக்கும் ஆற்றல் இருந்ததாக அன்று நம்பப்பட்டது. நோயாளிகளுக்கும் அவர்களை கவனிப்பவர்களுக்கும் பிராந்தி தான் சிகிச்சைக்காகவும், நோய் தடுப்புக்காகவும் வழங்கப்பட்டது. காந்தி மற்றும் அவருடைய சகாக்களுக்கு உதவ ஒரு தாதியையும் முனிசிபல் நிர்வாகம் அனுப்பியது. காந்திக்கு இந்த பிராந்தி சிகிச்சையில் உடன்பாடில்லை. ஆகவே, அவர் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர் நம்பிய மண் சிகிச்சை, நீர் சிகிச்சை ஆகிய இயற்கை வைத்திய முறைகளைக் கொண்டு சிகிச்சை அளித்தார். காந்தி சிகிச்சை அளித்த மூவரில் இருவரைத் தவிர அனைவரும் இறந்துவிடுகிறார்கள். நோய் தடுப்புக்காக பிராந்தி அருந்திய தாதியும் கூட சில நாட்களில் இறந்துவிட்டார். காந்தியும் அவருடைய சகாக்களும் நோயால் பாதிக்கப்படவில்லை. தன் வாழ்வில் பல தொற்று நோய் பீடிக்கப்பட்டவர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தும் பெரிதாக உடல் நலிவடையவில்லை. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் காந்தி இயற்கை வைத்தியத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்திருக்கிறார்.
இந்தியாவிற்குத் திரும்பும் முன் காந்தி லண்டனில் இருக்கும்போது கொஞ்சகாலம் நுரையீரல் தொற்றால் (pleurisy) பாதிக்கப்பட்டு இந்தியா வந்தடையும் வழியில் குணமடைந்தார். நவீன மருத்துவம் மற்றும் மருத்துவர்களின் மீது அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் தேவையான சமயங்களில் அவர் நவீன மருத்துவத்தின் உதவியை நாடத் தவறியதில்லை. காந்திக்கு 1919 ஆம் ஆண்டு பம்பாயில் மூல நோய்க்கு அறுவை சிகிச்சை நிகழ்ந்தது. பின்னர், 1924 ஆம் ஆண்டு கர்னல் மேடாக் குடல்வால் அழற்சிக்காக அறுவை சிகிச்சை செய்தார். 1925 மற்றும் 1936 ஆம் ஆண்டு என இருமுறை மலேரியாவால் பீடிக்கப்பட்டு குணமடைந்தார். 1927 ஆம் ஆண்டு தொடங்கி அவ்வப்போது உயர் ரத்த அழுத்தம் அவரை பாதித்தது. அமைதியற்ற இரவுகளை அவர் அவ்வப்போது உயர் ரத்த அழுத்தத்தால் எதிர்கொள்ள நேரிட்டது. 1928 ஆம் ஆண்டு நூல் நூற்றுக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். இரண்டு முறை கடுமையான வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். தண்டி யாத்திரையின்போது அவருக்கு மூட்டு வலி உண்டு.
காந்தி தன் அறுபது வயதிற்கு மேல் ஒன்பது முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். பூனா ஒப்பந்தத்தின் பொருட்டு இருந்த உண்ணாவிரதத்தின் போதும், இந்து இஸ்லாமியர் ஒற்றுமைக்காக அவரிருந்த இறுதி உண்ணாவிரதத்தின் போதும் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார் என்றே சொல்ல வேண்டும். இறுதி உண்ணாவிரதத்தின்போது அவருடைய சிறுநீரகம் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது என மருத்துவர்கள் அறிவித்தார்கள். ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ போராட்ட காலத்தில் ஆகாகான் மாளிகையில் சிறைப்பட்டிருந்தபோது உடல்நலம் மிகவும் நலிவடைந்ததால்தான் விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு. காந்திக்கு உடல் உபாதைகள் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. போராட்ட களத்தில் உயிர் பிரிவதை அவர் பெரும் பேறு என்றே கருதி வந்தார். இவ்வகையான இயற்கையான உடல் உபாதைகளைத் தவிர தென்னாப்பிரிக்காவில் மூன்று முறை நேரடி வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீட்கப்பட்டார்.
காந்தியின் ஆன்மீகப் புரிதல் சேவையை அறிவுறுத்தியது. கீதையின் செயல்வழி யோகத்தையே தன் பாதையாகத் தேர்ந்தவர். வாழ்நாள் முழுவதும் காந்தி இயங்கியபடியே இருந்தார். அறுபது வயதிற்குப் பின்னரே தண்டி யாத்திரை சென்றார். உப்பு சத்தியாகிரகம் உலகின் கவனத்தைப் பெற்றது. வட்ட மேஜை மாநாட்டிற்காக லண்டன் சென்றதும் அறுபது வயதிற்குப் பின்னரே. நாடு முழுவதும் ஹரிஜன் யாத்திரை சென்றதும் அப்போதுதான். ஒய்வு ஒழிச்சல் இன்றி நிதி திரட்டினார். ஒவ்வொரு ஊரிலும் உரையாற்றினார். காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்து மரணம் வரை வாழ்ந்த காலம் மொத்தம் 33 ஆண்டுகள். அவர் இந்தியா திரும்பியபோது அவருக்கு நாற்பத்தி ஐந்து வயது. இந்த ஆண்டுகளில் ஆறு ஆண்டுகளை சிறைகளிலும் 14 ஆண்டுகளை பயணங்களிலும் கழித்திருக்கிறார் என தரம்பால் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் சுமார் இரண்டாயிரம் இடங்களுக்கு சென்றிருக்கிறார்.
அறுபது வயதிற்கு பிறகே காந்தியின் முக்கிய சமூகச் செயல்பாடுகள் பலவும் நிகழ்ந்தன. ‘ஆக்கப்பூர்வ நிர்மாண செயல்திட்டம்’, ‘ஆதாரக் கல்வி’, ‘காதி மற்றும் கைத்தொழில் சங்கம்’, ‘ஹரிஜன் யாத்திரை’ என பலவும் முப்பதுகளின் மத்தியில் தொடங்கி 1940 வரையிலான காலகட்டத்தில் காந்தி உருவாக்கியவை. பிரிவினை காலகட்டத்தில் ஜின்னாவின் நேரடி செயல்பாடு, அறைக்கூவல் பெரும் கலவரத்தை வங்காளத்தில் ஏற்படுத்தியபோது கொல்கத்தாவிற்கு விரைந்து, அங்கிருந்து நவகாளி யாத்திரை சென்றார். வன்முறை பூமியில் நேரடியாகச் சென்று கிராமம் கிராமமாக நடந்தார். எந்த பாதுகாப்பும் இல்லை. ஒரு சிறிய தொண்டர் அணி மட்டுமே உடன் வந்தது. காந்தியை அவமதிக்க பாதைகளில் மலம் வீசப்பட்டிருந்தது. மகிழ்ச்சியுடன் அதைத் தானே சுத்தம் செய்து முன்னகர்ந்தார். மவுண்ட்பேட்டன் ‘ஒருநபர் எல்லைக்காவல் படை’ என காந்தியை குறிப்பிட்டார். வங்காளத்தில் கலவரத்தைக் கட்டுக்குள் கொணர்ந்தார்.
காந்தி ஒரு பத்திரிகையாளரும் கூட. அவர் இங்கிலாந்திற்கு கல்வி கற்க சென்றது முதல் அவருடைய எழுத்துப்பணி தொடங்கியது. சைவ உணவுக் கழகத்திற்காக சிலவற்றை அப்போது எழுதி இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் செய்தி இதழ்களுக்கு கடிதங்கள் எழுதினார். இந்தியன் ஒபினியன் இதழில் தலையங்கம் எழுதி வந்தார். ரஸ்கின், தால்ஸ்தாய் எழுத்துக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தியாவிற்கு வந்த பின்னர் ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’, ‘யங் இந்தியா’ என அவருடைய எழுத்துப்பணி தொடர்ந்தது. காந்தியின் எழுத்துக்கள் கடிதங்கள் இதுவரை நூறு தொகுப்புக்கள் கொண்ட நூல்வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்புக்களுக்கு அப்பால் கடிதங்களும் எழுத்துக்களும் இன்றுவரை கண்டடையப்பட்டு வருகின்றன. இத்தொகுதிகள் ஒவ்வொன்றும் சுமார் ஐநூறு பக்கங்கள் நீள்பவை. காந்தி அறுபது வயதிற்கு மேல் எழுதியவை மட்டும் ஐம்பத்தி ஏழு தொகுப்புக்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னர் எழுதியதைக் காட்டிலும் மிக அதிகம்.
காந்தியின் மருத்துவ அறிக்கை தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. வெகு அரிதாகவே அவர் முழு ஓய்வு எடுத்துக் கொண்டார். காந்தி இந்தக் காலகட்டங்களில் மக்களைத் தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருநாளும் தன்னைக் காண வரும் மனிதர்களுக்கு நேரம் ஒதுக்கி பேட்டி அளித்தார். இறுதிவரை நாள்தோறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் சிற்றுரை நிகழ்த்தினார். பொதுக்கூட்டங்களில் பேசினார். இந்த சமயத்தில் காந்தி உச்சக்கட்ட அக நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தது. பகத் சிங் மற்றும் கூட்டாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, வட்டமேஜை மாநாட்டின் ஏமாற்றம், பூனா ஒப்பந்தம் சார்ந்த அக நெருக்கடி, காங்கிரசில் இருந்து விலக நேர்ந்தது, சுபாஷ்- பட்டாபி சீத்தாராமையா மோதல், ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ போராட்ட காலங்களில் நிகழ்ந்த வன்முறை போராட்டங்கள், பிரிவினையும் இந்து இஸ்லாமிய மத மோதல்களும் உயிர்களைப் பலி வாங்கின, பிரம்மச்சரிய சோதனைகள் ஏற்படுத்திய நெருக்கடி, கஸ்தூரிபா மற்றும் மகாதேவ் தேசாயின் மரணம், ஹரிலால் காந்தியின் கலகம், காங்கிரசின் உள்நிகழ்ந்த மோதல்கள் என பலவற்றை சொல்லலாம். இவை அனைத்தையும் தாண்டி இயங்கினார்.
அவருடைய வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் எதிர்கொண்ட மதக்கலவரம் வரையில் தான் நூற்றி இருபது ஆண்டுகள் வாழ விரும்புவதாகவே சொன்னார். ஆனால், அந்த மதக்கலவரம் அவரை வெகுவாக பாதித்தது. இத்தகைய இக்கட்டுகளை காந்தி எதிர்கொண்டு எழுவதற்கு அவருடைய நகைச்சுவை உணர்வு மிக முக்கிய பலமாக இருந்தது. காந்தி 1928 ஆம் ஆண்டில் ஒரு முறை எழுதுகிறார் “எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமலிருந்திருந்தால் நான் எப்பொழுதோ தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன்.” தன்னை எளியவனாக கருதி சுய எள்ளல் வழியாக சூழலின் அழுத்தங்களில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டார்.
காந்தியின் ஆற்றல் ஆன்மாவை ஊற்றாகக் கொண்டது. அவர் வணங்கும் சத்தியத்தின் வடிவான கடவுளிடம் இருந்து அவர் பெற்றது. இந்த ஆற்றல் ஊற்று ஒருபோதும் வற்றாதது. இந்த ஆற்றலே அத்தனை சிக்கல்களையும் கடந்து காந்தியைத் தொடர்ந்து இயங்க வைத்தது. அச்சமின்மை, மனிதர்களின் மீதான நன்னம்பிக்கை, சுய அறிதல், எதிர்பார்ப்பற்ற அன்பு மற்றும் சக மனிதர்களின் மீதான கரிசனம், விளைவுக்கும் வழிமுறைக்கும் இடையிலான உறவு குறித்த விழிப்புணர்வு ஆகியவை காந்தியின் ஆற்றலின் ஊற்றுக்கண் என சொல்லலாம். மனிதன் தனது ஆற்றலை தனக்குள்ளிருந்து கொணரும்போது அவன் புறச்சூழலால் ஒருபோதும் சலனமடைவதில்லை.