
உயிர் நழுவுகிறதை
நீங்கள் கண்டிருக்கிறீர்களா
இதோ
தூக்குமேடையில்
உயிரை நேசித்தவன்
புன்னகையோடு
கிடத்தப்பட்டிருக்கிறான்
மற்றெந்த நாளையும் போலல்ல இந்நாள்
கணக்குத் தீர்க்க முடியாத
கண்களில்
அப்படி ஒரு கனல்
கிழிக்கப்படாத நாட்காட்டி
வன்மத்தோடு படபடக்கிறது
சோளப்பொத்தி விரிந்து
ஒலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா
அப்போது காற்றுக்கும் வியர்த்தது
வலியின் ரகசியங்கள் உறங்குவதில்லை தெரியுமா
மின்மினியின் முகம்
ஒருபோதும் ஒளிர்வதில்லை
இருள் பூத்திருக்கும் வனம்
அதனால்தானா முதிர்ந்திருக்கிறது
நான் பார்வையாளனாகவே
இருந்து விடுகிறேன்
ஆனாலும் பாருங்கள்
மனம் முதிர்ந்த
ஒரு வெளிச்சம் என்மேலும்
விழத்தான் செய்கிறது
கேடயங்களை பத்திரப்படுத்துவதில்லை
அதற்காக
ஆயுதங்களையும்
பயன்படுத்துவதுமில்லை
எழுத்தின் கையில்
ஒரேயொரு பூவை திணித்து விடுகிறேன்
மறுமுறை சந்திக்கையில்
வேர் கொள்ளட்டும் அப்பூஞ்செடி.