கட்டுரைகள்

அந்த நேர்மைதான் மகேந்திரன் !

பரிசல் கிருஷ்ணா

வழக்கமாக ஒருவர் இறந்ததும் அவர் புகழாஞ்சலிக் கட்டுரைகள் இணையத்தில் கொட்டும். அது குறித்து கிண்டல் செய்வதற்காகச் சொல்லவில்லை. அது இயல்பான ஒன்று. தினமும் யாரோ ஒருவரைப் பற்றி எழுதிக்கொண்டா இருக்க முடியும்? மகேந்திரன் இறந்ததும் அப்படியான பல கட்டுரைகள் வந்தன. அவற்றைப் படித்தால் உங்களுக்கு ஒன்று புரியும். அவற்றில் பெரும்பாலும் அவரது படைப்பு நேர்த்தியைப் பற்றி மட்டுமே பேசும். பெர்சனலாக மகேந்திரன் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் என்று விதந்தோதும் கட்டுரைகள் குறைவே. படைப்பையொட்டியே மகேந்திரன் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். மகேந்திரன் எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் படைப்பை முன்னிறுத்திக் கொள்பவர். அதுதான் அவரின் சிறப்பு. எனக்கு அவரிடம் கவர்ந்த விஷயமும் அதுதான். ஆக, இப்படிப் பாராட்டுவதன் மூலம், படைப்பைத் தாண்டிய அவரது இந்த குணாதிசயத்தைப் பாராட்டி இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்!

20 வயதுவரை – அதாவது என் 20 வயது – எனக்கு மகேந்திரனைக் குறித்து பெரிய அபிப்ராயமோ, அறிமுகமோ இல்லை. “ஸ்டைலெல்லாம் தாண்டி ரஜினி நடிச்ச படம் ‘முள்ளும் மலரும்’டா” என்று நண்பர்களுடனான உரையாடல்களில் பலர் சொல்வதுண்டு. அந்தப் படத்தின் இயக்குநர் என்ற அளவிலேயே அவரை அறிந்து வைத்திருந்தேன். 1999ல் ஆனந்தவிகடனில் ‘சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு ’அன்புடன் மகேந்திரன்’ என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்தேன். அதைப் படித்து ‘யார்றா இந்த ஆளு! சினிமா உங்களை அழைக்கிறது என்று ஜிகினாப் பூச்சுகளெல்லாம் பூசாமல் உண்மையை உடைத்து எழுதிருக்காரே’ அவர்மீது பன்மடங்கு மதிப்பு உயர்ந்தது. அந்தக் கட்டுரை பற்றி நண்பர்களிடம் வியந்து வியந்து பேசினேன். நிச்சயம் பெரிய பெரிய கனவுகளுடன் கோடம்பாக்கம் கிளம்பிய பலரையும் ‘போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கய்யா’ என்று யு டர்ன் அடிக்க வைத்த கட்டுரை அது!

‘அப்ப மகேந்திரன், ஆசைப்பட்டு வேலை செய்யவில்லையா?’ என்றால்.. இல்லை. எந்த ஒரு தருணத்திலும் டைரக்டர் கனவு அவருக்கு இருந்ததில்லை. வெற்றிகள் பெற்றபோதும் ‘இனி இதுதான் என் பாதை’ என்று அவர் முடிவுசெய்யவில்லை. இதை அவரே பல இடங்களில் எழுதியிருக்கிறார்; பேசியிருக்கிறார்.

‘சின்ன வயசுல இருந்தே சினிமா என் மூச்சு. கலைத்தாய்க்கு சேவை செய்யவே நான் திரைத்துறைக்குள் நுழைந்தேன்’ என்பவர்களுக்கிடையில், மகேந்திரன் சினிமா பிடிக்காமல் திரைத்துறைக்குள் வந்தவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் மேடைப்பேச்சில் எம்.ஜி.ஆர் இவரது பேச்சில் ஈர்க்கப்பட்டு பாராட்டியிருக்கிறார். மேடையிலேயே ஒரு காகிதத்தை வாங்கி ‘சிறந்த விமர்சகராகத் தகுந்தவர்’ என்று எழுதிக்கொடுத்திருக்கிறார். அதன் பிறகு வழக்கறிஞர் படிப்பிற்காக சென்னை வந்தார். படிக்கப் பணம் அனுப்பிக் கொண்டிருந்த உறவினர் ஒருவர், தொடர்ந்து பணம் அனுப்ப இயலாத தன் சூழலைச் சொல்லிக் கடிதம் எழுதவே படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு காரைக்குடிக்கே திரும்ப நினைக்கிறார். அப்போது அவரது ஊர்க்காரர் ஒருவரைச் சந்திக்கிறார். ‘ ‘இன முழக்கம்’ங்கற ஒரு பத்திரிகையில் சினிமா விமர்சனம் செய்கிற வேலை இருக்கிறது செய்கிறாயா?’ என்று கேட்கிறார். இவரும் சேர்கிறார்.

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எம்.ஜி.ஆரைப் பேட்டி எடுக்க பல நிருபர்களுடன் ஒருவராக மகேந்திரனும் போகிறார். பேட்டியின்போது எம்.ஜி.ஆர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘நீங்க இருக்க வேண்டிய இடம் இது அல்ல’ என்று தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு திரைக்கதை எழுதச் சொல்கிறார். இவரும் மூன்றே மாதங்களில் எழுதிக்கொடுத்துவிட்டு திரும்ப ஊருக்குப் போய் மாத சம்பளம் வருகிற மாதிரி ஒரு வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

இவர் குடும்பச் சூழலை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர், இவரை கதை எழுதித் தரச்சொல்கிறார். எம்.ஜி.ஆருடன் இவர் இருந்ததால், இவரது கதையை தயாரிப்பாளர்கள் முன்வந்து வாங்கிக்கொள்கின்றனர். ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக இவர் கதையாக்கத்தில் வந்த படங்கள் எல்லாமே ஹிட்டடிக்கின்றன.

இந்த எல்லா காலகட்டங்களிலும் மகேந்திரனுக்கு ஊருக்குத் திரும்பச்செல்லும் ஆசைதான் இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறை ஊருக்குப் போறேன் என்று பொட்டியைக் கட்டும்போதெல்லாம் ஒவ்வொரு வாய்ப்புகள். குடும்பத்தின் பொறுப்பு இவர் கையில் என்பதால், வரும் வாய்ப்பை ஏன் தவற விடுவானேன் என்று இவரும் ஒப்புக்கொள்கிறார். அப்படி வலிந்து ஒப்புக்கொண்டு செய்த வேலைகள் எல்லாமே இவருக்குப் பெற்றுத் தந்தது வெற்றியை!

துக்ளக் பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நடிகர் செந்தாமரைக்காக ஒரு நாடகம் எழுதித் தருகிறார். அந்த நாடகமும் ஹிட். அதன் பெயர் – ‘இரண்டில் ஒன்று’. அந்த நாடகத்தைப் பார்த்த சிவாஜி, செந்தாமரைக்குப் பதில் அவரே நடிக்க விழைகிறார். சிவாஜி நடிக்க, இரண்டில் ஒன்று நாடகம் ‘தங்கப் பதக்கம்’ ஆக மாறுகிறது. திரைப்பட ரேஞ்சுக்கு போஸ்டர்கள்; நாடகம் இன்னும் பெரிய ஹிட். பிறகு படமாக்கப்படுகிறது… படமும் ஹிட். இதைப் பற்றிக் குறிப்பிடும்போது கூட, ‘இப்படி எல்லாம் ஹிட்டானதால், திரைத்துறையிலேயே இருக்க வேண்டி வந்தது. அதனால் நான் நினைத்தபடி மாச சம்பளம்; நிம்மதியான வாழ்க்கை என்ற என் கனவு பறிபோனது’ என்றுதான் சொல்கிறார்.

பிடிக்காமல் செய்தாலும் அவருக்கு வெற்றி கைவசமானது எப்படி? பிடித்ததோ, பிடிக்கவில்லை ஒன்றை ஒப்புக்கொண்டால் அதற்கு தன் 100% உழைப்பைக் கொடுத்தார் மகேந்திரன். அதுதான் காரணம். மகேந்திரனிடமிருந்து நான் கற்றுக்கொண்டது இதைத்தான்.

ரஜினி எனும் நண்பரிடம் ஒரு நடிகன் இருக்கிறார் என்று கண்டுகொண்டு தயாரிப்பாளர் மறுத்தபோதும் பிடிவாதமாக ரஜினியை முள்ளும் மலரும் படத்தில் நடிக்கவைத்தார். இன்னொன்றும் உண்டு; இன்றைக்கெல்லாம் ஸ்டைல் என்றால் ரஜினி என்கிறோமே, அந்த ஸ்டைல் என்ற வார்த்தையை ரஜினிக்குக் கொடுத்ததும் மகேந்திரன்தான். மகேந்திரன் கதை – வசனம் எழுதிய ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில் ரஜினி வில்லன். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ரஜினி என்று வைத்து, அவர் எதிரியிடம் ஒன்றைச் செய்துவிட்டு ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று ரஜினி சொல்வது போல எழுதியிருந்தார் மகேந்திரன். நடிகனாக தனக்கொரு நல்ல வேடமும், பஞ்ச் டயலாக்குக்கெல்லாம் அப்பனான ‘ரெண்டு கையும் ரெண்டு காலும்போனாகூட காளிங்கறவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் அவன்’ டயலாக்கையும், ஸ்டைல் என்ற பதத்தையும் கொடுத்த மகேந்திரனை தனக்குப் பிடித்த இயக்குநராக, தன் குரு பாலசந்தரிடமே ரஜினி சொன்னதில் ஆச்சரியமேதும் இல்லை.

பெரிய பெரிய வசனங்கள் எழுதுவதில் நாட்டமில்லாதவர் மகேந்திரன். ‘கண்ண மூடிட்டு தியேட்டர் வெளில நின்னாக்கூட என்ன நடக்குதுனு சொல்ல முடியுது. சினிமா விஷுவல் மீடியம். எதுக்கு இவ்ளோ எழுதறாங்க?’ என்பார். ஆனாலும் தானே அப்படி எழுதிக்கொடுக்கிறோமே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அதனால்தான் முள்ளும் மலரும் படம் இயக்கும் வாய்ப்பு வந்த போது மிகக் குறைந்த அளவே வசனங்கள் இடம்பெறச் செய்தார். படத்தின் ‘ரஷ்’ பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் ‘என் தலைல மண்ணள்ளிப் போட்டுட்டியே… உன் எழுத்துக்காகத்தான் உன்னை இயக்கச் சொன்னேன். இதுல வசனமே இல்லையே’ என்று திட்டி, பிறகு படம் ஹிட்டானதும் மன்னிப்புக் கேட்டது வரலாறு.

மேடை நாடகங்கள் குறைந்து போனதிலும், எழுத்தாளர்களை திரைத்துறையினர் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதிலும் மகேந்திரனுக்கு பெரும் வருத்தம் இருந்தது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நண்டு என்று எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களிலிருந்துதான் திரைப்படங்களை உருவாக்கினார் மகேந்திரன். “இவ்ளோ பெரிய லிட்ரேச்சர் இங்க இருக்கு. யாரும் பயன்படுத்த மாட்டீங்கறாங்க. படிக்கவே மாட்டீங்கறாங்க. கொரியன் ஃப்லிம்ல இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்தேன்னு சொல்றாங்க. காஷ்மீர்ல உட்காந்துட்டு ஐஸ்கட்டி கிடைக்கலனு சொல்ற மாதிரி இருக்கு இவங்க பண்றது!” என்று வருத்தப்படுகிறார்.

இரண்டு விஷயங்களைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்:

சமீபத்தில் பாம்புச் சட்டை என்ற படத்தில் ஒரு காட்சி வரும். உணவை வீணாக்கும் மகளுக்கு நடிகர் சார்லி ‘இந்தப் பருக்கை எத்தனை இடங்களைத் தாண்டி வந்திருக்கு தெரியுமா?’ என்று அறிவுறுத்துவது போல. படத்தில் மகேந்திரனுக்கு கிரெடிட் கொடுத்தார்களா என அறியேன். அந்த விஷயம், நான் மேலே சொன்ன 1999 ஆனந்தவிகடன் கட்டுரையில் மகேந்திரன் தன் மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டதாய் சொல்லியிருந்த விஷயம்.

இன்னொன்று: எம்.ஜி.ஆர் முன் நாடோடி மன்னன் படத்தின் 100வது நாள் விழாவில் பேசி, அவர் பாராட்டைப் பெற்றார் என்றேனல்லவா? படத்தைப் பாராட்டியா? இல்லை! ‘எங்காச்சும் காதலிக்கறவங்க இப்படி டூயட் பாடினா சுத்தி இருக்கறவங்க சும்மா விடுவாங்களா? ஆனா இவரை ஒண்ணுமே கேட்க மாட்டீங்கறாங்க!’ என்று ஆரம்பித்து அந்தப் படத்தை விமர்சித்துத்தான் பேசியிருக்கிறார். முழுக்க முழுக்க தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அம்சங்களை விமர்சித்துத்தான் பேசியிருக்கிறார். மூன்று பேர் பேசவேண்டும். ஆளுக்கு 3 நிமிடம். கல்லூரியில் – அதுவும் எம்.ஜி.ஆர் வரும் கூட்டத்தில் – அவரைத் தவிர யாரையும் பேசவிடுமா கூட்டம்? முதல் இரண்டு பேரையும் பேசவே விடாமல் கூச்சலிட்டே மேடையை விட்டு இறக்கிவிட்டது கூட்டம். மூன்றாவது பேசப்போன மகேந்திரன் பேசியது 45 நிமிடங்கள். அதுவும் 100 நாள் ஓடிய எம்.ஜி.ஆரின் படத்தை விமர்சித்து, எம்.ஜி.ஆர் முன்னிலையில்!

அந்த நேர்மைதான் மகேந்திரன்!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button