கட்டுரைகள்
Trending

ஆன்மாவின் இசை – யுவன்

பாலகுருநாதன். மு

‘Music is nothing about to differentiate the place needs sound or silence’

இயக்குனர் ராம் ஒருமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘யுவன் ஒரு இசையமைப்பாளன் மட்டும் கிடையாது. அவனுக்குத் திரைக்கதையை உணரும் திறன் அதிகம்’ என்று. ‘ஒரு இயக்குனர் தன் கதையைச் சொல்லும்பொழுது விளையாட்டாய் கேட்பது போலத்தோன்றும். ஆனால் நாம் சொல்லும் திரைக்கதையின் நுணுக்கங்கள் அறிந்து அதற்கான பின்னணி இசையை யுவன் கொடுக்கும் பொழுது வரும் பிரமிப்பு அதை உறுதி செய்யும். அதன் அடர்த்தியில் நிறைந்திருப்பான் யுவன்’ என்பார்!

அந்த அடர்த்தி உயிரை இழுக்கும் ஆன்மாவாகவும், உறைய வைக்கும் மௌனமாகவும் இருந்தாலும் அதை இசையால் நிரப்ப வேண்டும்.

அதுதான் யுவன்!

தமிழ் இசையின் அடையாளமாகிப் போனவரின் மகனாகப் பிறந்து அவர் திறமையில் 10 சதவீதம் செய்யவில்லை என்றாலும் அது எவ்வளவு பெரிய இழுக்கு? ஆனால் யுவன் செய்தது மாயவித்தை. எனக்குத் தெரிந்து அந்த மாயவித்தை இளையராஜாவுக்கும், அவருக்குப் பின் நாடெங்கும் கோலோச்சிய ஏ.ஆர்.ரகுமானுக்குமே கூட ஆட்கொள்ள முடியாத ஒரு வித்தை.

ஆர்மோனியப்பெட்டியில் கை வைத்தால் போதும். பாடலாகக் கொட்டும் என்று இருந்த இளையராஜாவின் Tune Composing Knowledge என்பதை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்துவரவே முடியாது என்றிருந்த பொழுது அதை லாவகமாக தன் Technically Sounds Knowledge மூலம் தன்வசப்படுத்தியவர் ஏ.ஆர்.ரகுமான். அதுவரை அத்தனைப் புத்துணர்ச்சியான இசையை எவரும் தமிழில் கேட்டதே இல்லை. ஆனாலும் ஏ.ஆர்.ரகுமானால் இளையராஜாவின் உன்மத்தம் கொண்ட ஒரு பித்தநிலையின் இசையைப் பிடிக்க முடிந்ததா என்பது கேள்விக்குறி. என்னளவில் இல்லை என்றே சொல்வேன். எப்படி இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளவுக்கு (குறைந்தது ரகுமான் வரும் வரையில்) Technical knowledge லாவகமாகக் கைவராமல் போனதோ அப்படி.

ஏ.ஆர்.ரகுமானுக்குப் பிறகு இசையால் ஒருவர் இந்தத் தமிழ் சினிமாவை வசப்படுத்த வேண்டும் என்பது ரகுமானுக்கு இளையராஜா set செய்து வைத்த goal ஐ விட இரண்டு மடங்கு. ஆனால் யுவன் செய்தது மாயவித்தை. இது இரண்டையும் சரிவர ஒரு நேர்க்கோட்டில் பிடித்து நின்றார். நல்ல டியூன் கொண்ட பாடல்கள் என்றளவில் நின்றுவிடாமல், அதை இந்த காலத்திற்கு ஏற்றாற்போல காதுகளுக்குக் கொண்டுவந்து சேர்த்துச் சொக்கி நிற்கவைத்தது.

அதோடு நில்லாமல் பல பரிச்சார்த்தமான முயற்சிகளையும் செய்து காட்டினார். தன் இசை புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்கான மெனக்கெடல்கள் யுவனிடம் நிறையவே இருந்தது. அதனால்தான் அவரால் தமிழுக்கு Rap, Hiphop, Remix போன்ற கலாச்சாரங்களைக் கொண்டு வர முடிந்தது. சிறப்பான தரமான பல சம்பவங்களைச் செய்ய முடிந்தது.

அப்படி யுவன் செய்த சம்பவங்கள் ஏராளம். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி, மன்மதன், வல்லவன், ராம், அறிந்தும் அறியாமலும், நந்தா, புதுப்பேட்டை இப்படி ஆரம்பித்து பருத்திவீரன், கற்றது தமிழ், தீபாவளி, சண்டக்கோழி என தன் இசைக்கென தனியென ஒரு பாணியையும், ரசிகப் பட்டாளத்தையும் அமைத்தார் யுவன். வெறும் டெக்னிக்கலாக மட்டும் இந்தப் படத்தின் பாடல்கள் நிலைக்காமல் அதில் உன்மத்தம் கலந்த ஒரு அடர்த்தி இருப்பதை எந்த இசை ரசனை உள்ளவர்களும் ஒத்துக்கொள்ளக் கூடிய உண்மை!

யுவனின் பாடல்களை Slow Poison என்பேன் நான். கேட்கக்கேட்க உள்ளே இறங்கும். யுவன் அதை வேண்டுமென்றே செய்வதைப் பின்னாளில் உணர்ந்திருக்கிறேன். ஒரு பேட்டியில் யுவன் சொல்கிறார். ‘இயக்குனர் வசந்த்திடம் வேலை பார்க்கும்பொழுது அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு மிகப்பெரிய பாடம். ‘Dont be sweet at all the times’ என்பார் அவர். என் பாடல்களில் நான் கடைபிடிப்பதும் அதுதான்’ என்றார்.

 

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. உண்மையில் யோசித்தால் அது உண்மைதான். உதாரணத்திற்கு ‘இறகைப்போலே’ பாடலை எடுத்துக்கொள்வோம். அதில் ‘கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும். வேறொன்றும் தேவையில்லை. நீமட்டும் போதும் போதும்’ என்பது Peak points. அந்த hit frames கேட்டவுடன் அது நம்மைத் துள்ளிக்கொண்டு ஆட வைத்துவிடும். ஆனால் அதை அவர் பாடல் முழுவதும் கொடுக்க மாட்டார். பாடல் முழுவதும் peak points ஆக இல்லாமல் அது ஒன்றிரண்டு இடங்களில் கொடுக்கும்பொழுது அந்த பாடல் ரிப்பீட் மோடில் கேட்கும் ஒரு பாடலாக மாறிவிடுகிறது.

பின்னணி இசை என்பது ஒரு சவால். மொத்தப் படத்தின் உயிர்நாடியையும் பின்னணி இசையே ஏந்தி நிற்கும். பெரும்பாலும் பாடலின் டியூனை வைத்துக்கொண்டே மொத்த படத்தின் பின்னணி இசையை முடித்துவிடுவதுதான் பல இசையமைப்பாளர்களின் வழக்கம். ஏனென்றால் புதிதாக அதற்காக யோசிக்க நேரம் வேண்டும். அந்த புதிதாக யோசிக்கும் டியூன்களையோ, இசைக் கோர்ப்பையோ வேறு படத்திற்கு உபயோகித்துக்கொண்டால் அது தனியே ஒரு 5 பாடலாகிவிடும் என்ற சொல்லப்படாத கணக்கும் உண்டு.

தமிழ் சினிமாவிலேயே பெரும்பாலும் பாடல்களை மட்டுமே உபயோகிக்காமல் பின்னணி இசைக்கென்று தனி இசைக் கோர்வைகளை உருவாக்குதில் இளையாராஜாவிற்குப் பிறகு யுவன் மட்டும்தான். அதனால்தான் இன்னமும் பின்னணி இசையில் இளையராஜாவிற்கு அடுத்து யுவன் ராஜாவாக நிற்கிறார்.

 

முன் சொன்ன கணக்குப்படி பார்த்தால் இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றால் 2000 படங்களுக்கு இசையமைத்து விட்டதாகப் பொருள். யுவன் நூறு சொச்சம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றால் முன்னூறு சொச்சம் படங்களுக்கு இசையமைத்திருக்கார். ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 5 பாடல்கள். யுவன் வதவதவென நிறைய படங்கள் செய்வதை பலர் கிண்டலடிப்பதுண்டு. எங்கு நிறைய ஊற்று இருக்கிறதோ அங்குதான் நீர் சுரந்துகொண்டே இருக்கும். ஊற்றில்லாதவன் தான் அணையில் நீரைத் தேக்கிவைப்பான்.

கிட்டத்தட்ட வருடத்திற்கு 10 படங்கள் இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர். 2011 வருடத்தின் இறுதியில் யுவனின் அம்மா ஜீவா இளையராஜா இறக்கிறார். 2012 வாக்கில் அவர் இசையமைத்த பெரும்பாலான படங்கள் வெற்றியைத் தழுவாமல் போகிறது. யுவன் திரையிசை வாழ்க்கையின் சறுக்கல் அங்கு ஆரம்பிக்கிறது. திருமண வாழ்க்கையின் அதிருப்தி, நா.முத்துக்குமாரின் மறைவு என யுவன் சோகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க அதிலிருந்து யுவன் மீளாமல் இல்லை. ஆங்காங்கே தங்க மீன்கள் என தன் இருப்பைக் காட்டிக்கொண்டே தான் இருந்தார். ஆனால் அது அவருக்கான ட்ரெண்ட்டாக இல்லை!

நண்பன் கொலைவெறியைக் காட்டிச் சொல்வான். அவ்வளவுதான் யுவன் காலி என்று. நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வது இதுதான். Trend is Temporary. Class is Permanent. Yuvan is class என்று.

யுவன் அல்டிமேட் ட்ரெண்டில் இருந்த அந்த 2000 முதல் 2010 காலகட்டத்தில் கூட யுவன் தன் இசையில் க்ளாஸ் என்பதை விட்டுக் கொடுத்ததில்லை. ஏனெனில் யுவனின் பாணி உயிரோட்டமானதாகவே இருந்தது. அந்த உயிரோட்டமான இசைதான் யுவன் என்ற கலைஞனை என்றுமே தாங்கிப் பிடிப்பதாகவே இருந்திருக்கிறது. கொலைவெறி பேசும் நண்பனுக்கு பதிலடியாக இதோ இப்பொழுது ‘ரவுடி பேபி’ என தென்னிந்தியாவிலேயே அதிகம் கேட்கப்பட்ட பாடலாக ட்ரெண்டில் நின்று இப்பவும் அடிக்கிறார் யுவன். கொலைவெறி இதில் மூன்றில் ஒருபங்குதான். அதெல்லாம் யுவன் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள செய்யும் கள்ளத்தனம் தான்.

உண்மையில் யுவன் தரமணி, தங்க மீன்கள், பேரன்பு, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், நெஞ்சம் மறப்பதில்லை என நம் ஆன்மாவை அசைக்கும் இசையாகவே என்றும் இருந்துகொண்டிருக்கிறார். அதில் கலப்படமில்லை. தான் ட்ரெண்ட்டில் இருக்கிறோம் எனக் காட்டிக்கொள்ளும் கள்ளத்தனம் இல்லை. பெருங்காதலும், பேரன்பும் கொண்ட ஆன்மாவை இசையாக யுவன் நமக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கட்டும்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன்!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button