சென்னையில் முதன்முதலாக உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியில் தங்கினேன். இத்தனை வருடங்களில் சென்னையை இவ்வளவு ரசித்ததில்லை.
அராத்து அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். அவரைப் பற்றி எனக்கிருந்த அத்தனை பிம்பங்களையும் தகர்த்தெறிந்துவிட்டார். சாரு நிவேதிதா அதிகம் உச்சரித்ததாலே பலருக்கு அராத்தை பிடிக்காமல் போயிருக்கலாம். நானும் அதிகம் அவர் எழுத்துகளைப் படித்ததில்லை. ஆனால் தொடக்கத்திலிருந்து அவரது sensibility எனக்குப் பிடிக்கும். வெகுநாள்களுக்குப் பிறகு அவரது ‘பொண்டாட்டி’ நாவலைப் படித்தேன். சந்தேகமேயின்றி அதை க்ளாசிக் என்று சொல்லலாம். எளிய நடை ஆனால் காத்திரமான மையக்கரு. அதன்பிறகு அவரது இரண்டொரு கதையை வாசித்திருக்கிறேன். அத்தனையும் உலகத்தரம். ஒவ்வொருக் கதையிலும் ஒரு புதுமையிருக்கும். இன்றைய இளைஞர்களின் வாழ்வை அப்பட்டமாக எழுதும் ஒரே எழுத்தாளர் அராத்து தான் என்பேன். என்னுடைய ‘யூதாஸ்’ நாவல் போட்டிக்கு அனுப்பப்பட்ட போது நடுவராக இருந்த அராத்து என் நாவலுக்கு முதலிடம் கொடுத்து யாருக்கும் இரண்டாம் இடம் தராமல் நாவலின் முக்கியத்துவத்தைக் குறித்து பல இடங்களில் சிலாகித்துப் பேசினார்.
முதல்முறை பாண்டிச்சேரியில் சாருவுடன் சந்தித்தேன். பெரிதாக ஒன்றும் உரையாடிக் கொள்ளவில்லை. ஆனால் சென்னையில் அவருடன் தங்கியிருந்த நாள்கள் மறக்க முடியாதவை. உண்மையை சொல்லப் போனால், ஏதோ கி.மு. காலத்து கிரேக்க ஞானியிடம் உரையாடிக் கொண்டிந்தது போல இருந்தது . அவ்வளவு சுவாரசியமான உரையாடல்கள் இந்திய நண்பர்களுடன் சாத்தியமில்லை என்றே தோன்றியது.
உரையாடலில் நம்மவர்களுக்கு அனுபவம் இல்லையென்றே தோன்றுகிறது. உரையாடலில் ஒரு திறந்த மனம் இருக்க வேண்டும்.
நான் கவனித்த வரை யாரும் உரையாடலுக்கான இடத்தை யாருக்கும் தருவதில்லை. குறிப்பாக பெண்கள் இந்த விஷயத்தில் மோசம். தன்னிடம் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பதில் தான் குறியாய் இருக்கிறார்கள். அந்தப் பேச்சிலும் சுவாரசியம் உப்புக்குக் கூட இருப்பதில்லை. மது அருந்திவிட்டு பேசுபவர்களிடம் கூட ஏதாவது சுவாரசியம் இருக்கும். பெண்களின் பேச்சில் ஒரு நான்கு விஷயங்கள் தான் இருக்கிறது. அதையே அரைத்து அரைத்து திருப்பித் திருப்பிப் பேசி கொன்றுவிடுவார்கள்.
எனக்கு சத்தமே ஒத்துக்கொள்வதில்லை. சத்தமாக இசைக் கேட்கப் பிடிக்கும். ஆனால், இந்தியச் சாலைகளில் இருக்கும் வாகனங்களின் நெறிசல் சந்தைக் கடை வீதி இதிலிருக்கும் சப்தங்கள் எனக்கு மயக்கத்தைக் கொடுக்கும். ஜன நெறிசல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தச் சூழலில் இரண்டு பெண்களுடன் நான்கு மணி நேரத்துக்கு மேலாக பயணம் செய்ய நேர்ந்தது. நரகம் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். யாரிடமும் எதையும் பேச இயலவில்லை. இந்த நிலையில் தான் பாண்டிச்சேரியிலும் சென்னையிலும் நண்பர்களுடன் உரையாடுவதை விரும்புகிறேன்.
பாண்டிச்சேரியில் ஓர் இரவு முழுவதும் அயனிஸ் ஸேனாக்கிஸ் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். உரையாடலின் தொடக்கத்தின் ஸேனாக்கிஸின் இசையை ஒலிக்கச் செய்தார்கள். கடும் போதையிலிருந்த நண்பர் ஒருவர் அதை இசையே அல்ல என்று நிராகரித்தார். கஞ்சா அடித்துவிட்டு வாசிப்பது போன்றிருக்கிறது என்றார்.
ஸேனாக்கிஸின் இசையை சம்பிரதாய இசையாக எடுத்துக் கொள்ள முடியாது. சம்பிரதாய இசையின் மாற்றாக தம் இசையை அவர் முன்வைக்கிறார். தி.ஜானகிராமன் ‘மோகமுள்ளில்’ எழுதுவதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கடகடவென வண்டிகள் செல்லும் ஓசையிலும் மற்ற இயற்கை இசையிலும் லயித்துப் போவதைப் போல கணிதச் சமன்பாடுகளின் உதவியுடன் இசையை இயற்றுகிறார். இரைச்சல் என்று நாம் கருதும் அத்தனை விஷயங்களில் இருக்கும் லயத்தை உருவாக்கி இசைக் கோர்வையாக்குகிறார்.
அயானிஸ் ஸேனாக்கிஸ் நம் தமிழ் உலகத்துக்குப் புதியவர் அல்ல. சாரு நிவேதிதாவின் ‘கலகம்-இசை-காதல்’ நூலில் அயானிஸைக் குறித்த விரிவானக் கட்டுரையை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால் அயானிஸின் இசையை அணுகுவதுப் பற்றி அதன் பிறகு யாரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. பாண்டிச்சேரி சந்திப்பில் நண்பர் ஒருவர் சொன்னது போல கஞ்சா அடித்துவிட்டு யாரோ இசைக் கருவிகளை வாசிப்பதுப் போல தான் இருக்கும்.
அயானிஸ் ஸேனாக்கிஸ் அடிப்படையில் ஒரு கட்டிடக் கலை வல்லுனர். இயற்பியலும் கணிதமும் அறிந்தவர். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவற்றுக்கும் லயத்துடன் இயங்கும் தன்மையிருக்கும். உதாரணமாக நடையை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொருவரின் நடையும் வெவ்வேறானது. அந்த வேற்றுமையின் அடிப்படை என்னவென்று பார்த்தால் ஒவ்வொரு நடையிலும் இருக்கும்.
‘ஹார்மனி ’ எனப்படும் லயம். காற்று மூங்கில் புதரினுள் புகுந்து வரும் போது ஒரு லயம் பெறுகிறது. காற்றில் தென்னங்கீற்று சலசலப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதே போல கடல் அலைகள்; ஆர்ப்பரிக்கும் மக்கள் திரள் இவையாவற்றிலும் இருக்கும் லயத்தை யாரும் எதையும் செய்யவே முடியாது. ஸேனாக்கிஸின் இசை சம்பிரதாய இசையிலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு கடந்துச் செல்வதேயாகும்.
ஸேனாக்கிஸின் இசையைப் புரிந்துக் கொள்ள கொஞ்சம் அவருடைய வாழ்வை தெரிந்துக் கொள்ள வேண்டும். கூகிளில் சென்று Iannis Xenakis என்று அடித்தால் அவரைப் பற்றிய தரவுகள் வந்துக் குவியும். அதையெல்லாம் இங்கே சொல்லப் போவதில்லை. மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் போராட்ட மிக்க வாழ்வு. கிரேக்க இடப்பெயர்வு; கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு; சிறைச் சாலை; போர்; போரில் காயமடைந்து கிட்டதட்ட இறந்துவிட்டதாக நினைத்தார்கள். முகத்தில் பெரும் காயத்துடன் உயிர்த்தப்பினார். முகக் காயத்தால் கண் ஒன்றின் பார்வை பறி போய்விட்டது. இவையாவும் தான் ஸேனாக்கிஸின் இசையாக மாறியது.
ஸேனாக்கிஸ், “என்னுடைய தனிமை மற்றும் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள எனக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது – என் பழைய வாழ்வும் புதுப்புதுச் சூழ்நிலைகளும், இந்த உலகத்தின் மீதான என் பழைய பார்வைகளும் புதுப்புது அனுபவங்களும் எப்போதும் முரணாகவே இருந்து வந்தன. நான் யார் என அறிந்துக் கொள்வதில் பெருமுனைப்போடு இருந்தேன். அதில் எனக்கு வசதியாக இருந்தது பாரம்பரிய கிரேக்க நாட்டுப்புற இசையே…” என்கிறார்.
அமெரிக்கத் தெருவோரங்களில் பக்கெட்டுகள் மற்ற பாத்திரங்களை வைத்துக்கொண்டு ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லோரும் அயானிஸ் ஸேனாக்கிஸ் ஆகிவிடுவதில்லை. புதுமையாக எதையேனும் முயற்சிப்பவர்களை நாம் அப்படியே பிரதியெடுத்துவிடுகிறோம். உதாரணமாக பிக்காசோவின் ஓவியங்களை சொல்லலாம். க்யூபிஸம் என்ற வகைமையை பிக்காசோ கொண்டு வருகிறார். நிறையப்பேருக்கு புரியவில்லை என்றார்கள். பலர் அதன் நுணுக்கங்களை ஆராய்ந்தார்கள்! பாராட்டினார்கள்! கொண்டாடினார்கள்!. ஆனால் அதன்பிறகு சில பல கிறுக்கல்களை தீட்டிவிட்டு பிக்காசோவின் பாணி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
கலை என்பது தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கலைஞர்கள் அதற்குத் தான் பணியாற்றுகிறார்கள். அதற்கு ஒவ்வொரு கலைஞர்களும் அந்தக் கலையின் அடிப்படைகளில் வேர்விட்டிருக்க வேண்டும். பிக்காசோவின் தொடக்க கால ஓவியங்கள் ரினைசான் ஓவியங்களின் தொடர்ச்சிப் போல இருக்கும். அதேபோல அயானிஸ் ஸேனாக்கிஸின் தொடக்க கால இசை ஐரோப்பிய கலாசாரத்துக்குள் கிரேக்க பாரம்பரிய இசையை கொண்டு சேர்ப்பதாகவேயிருந்தது. அதன்பிறகு இயற்பியல் மற்றும் பொறியியல் நுணுக்கங்களை தன் இசையில் சேர்க்க ஆரம்பித்து Metastaseis மற்றும் Polytope போன்ற அற்புதங்களை படைத்தளித்தார். அயானிஸின் இசைக் கோர்வைகள் பிற்காலத்தில் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டு பலரும் வியக்கும் கட்டிடங்கள் ஆகின.
அயானிஸ் ஸேனாக்கிஸின் இசை எந்த வகையில் தனித்துவமாகிறது? எனக்கும் கணிதத்துக்குமான உறவு எப்போதுமே சுமூகமாக இருந்ததில்லை. ஆனால் கணிதம் அறிந்தவர்களுக்கு ஸேனாக்கிஸின் இசை வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கலாம். அதாவது கேட்க மட்டுமே முடிந்த இசையை கணித சமன்பாடுகளாக புரிந்துக்கொள்ள முடிகிற சாத்தியத்தை திறந்துவைக்கிறார். Metastaseis நிகழ்த்தப்படும் போது அது ஒலி மற்றும் ஒளி கலந்த நிகழ்வாக படைத்தளித்தார். கேட்க மட்டும் முடிந்த இசையினை ஒளி சேர்ப்பதன் வழியாகப் பார்க்கவும் முடிகிறது. அதற்கும் மேலாக ஸேனாக்கிஸ் அனுபவித்த போர்க்கால துயரங்களின் வெளிப்பாடாகவே நான் அவ்விசையை உணர்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக “வாழ்விலும் கலையிலும் சுதந்திரம் மிக முக்கியமானது” என்கிறார் ஸேனாக்கிஸ், எனவே சூன்யத்தின் ஊற்றுகளிலிருந்து பெருக்கெடுக்கும் இசையை மடைமாற்றி நம்மிடம் தருகிறார்.
நீங்களும் கேட்டுப்பாருங்கள் ஏதோ ஓர் அமானுஷ்யம் புலப்படும்.
(தொடரும்…)