இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 16

தொடர் | வாசகசாலை

ர் சுற்றுவது எனக்குப் பிடிக்கும். பெரிய நகரங்களில் நமது சுயம் தொலைந்துவிடுகிறது. அதுவே பெரிய விடுதலை. புத்தகம், இசைக்கு பிறகு எனக்கு சுற்றுலா மிகவும் பிடிக்கும். பாஸ்டன் வந்த சமயம் கிடைக்கும் விடுமுறைகளில் எங்காவது ஊர் சுற்ற சென்றுவிடுவேன். ஜீப் வந்த பிறகு இன்னும் வசதியாகிவிட்டது. நியூ இங்கிலாந்து மாகாணங்களில் இன்னும் கனடிக்கெட் தவிர அத்தனை மாகாணங்களையும் சுற்றியாகிவிட்டது. ஓர் அந்நிய நிலத்தின் இடங்கள் அனைத்தையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுற்றி வந்த எனக்கு, சொந்த மண்ணில் சுற்றுலா செல்வது கடினமாக இருந்தது.

நமது சுற்றுலாத்துறை செல்ல வேண்டியத் தொலைவு அதிகமாக இருக்கிறது. நாம் அமெரிக்காவிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனச் சொல்லவில்லை, நம் அண்டை மாநிலங்களில் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஒட்டு மொத்தமாக இந்திய சுற்றுலாத்துறை மீது எனக்கு ஒவ்வாமையே இருந்து வருகிறது என்றாலும் தமிழ்நாட்டின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இந்த முறை இந்தியா வந்திருந்த போது குடும்பத்துடன் கும்பக்கரை, சுருளி மற்றும் தேக்கடிக்கு சுற்றுலா சென்றிருந்தோம். கும்பக்கரை அருவி திறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக சென்றுவிட்டோம். நானும் என் சகோதரனும் அங்கிருந்த வன அலுவலர்களில் உடல் மொழியை கவனித்துக் கொண்டிருந்தோம். அவர்களுக்கென அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதை மறுக்கவில்லை. ஆனால் அது நடையின் ஒவ்வொரு அடியிலுமா வெளிப்பட வேண்டும்?. அங்கிருந்த பயணிகளை தங்களின் ஆளுகைக்கு கீழிருக்கும் அடிமைகளைப் போல நடத்தினார்கள். இயல்பு வாழ்விலிருந்து சற்றே அசுவாசப்படுத்திக் கொள்ளத்தான் பயணம் போகிறோம் என்றால், இவ்வதிகாரிகளின் நடைமுறையால் இன்னும் கொஞ்சம் இரத்த அழுத்தம் வந்துவிடுகிறது. என்னுடைய கேமராவை  எடுத்துச் செல்லக் கூடாது என்று தடுத்தார்கள். ஆனால் அங்கு எங்குமே அதற்கான அறிவிப்புப் பலகைகள் இல்லை. ஐம்பது ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கினதும் அனுமதித்தார்கள். சுற்றுலா நமக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும். ஆனால் அதற்கான கனிவு நம்மவர்களிடம் இருக்க வேண்டியது அவசியம். அப்படியே தேக்கடி சென்றோம். அங்கேயுள்ள வன அதிகாரிகள் மக்களிடம் பேசுவதை என் சகோதரனிடம் சுட்டிக் காட்டினேன். அவ்வளவு கனிவுடன் நடந்து கொண்டார்கள். இதைத் தான் முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

புளியஞ்சோலை என்னும் இடத்தில் பயணிகளை கைதிகளைப் போலவே நடத்தினார்கள். பின்வருவது, எனக்கும் அதிகாரி ஒருவருக்கும் நடந்த உரையாடல்:

“தம்பி, இருபது இருபது”

“ஏற்கனவே வாங்கிட்டேன் சார்”

“இல்ல தம்பி, அது பார்க்கிங். இதுக்கு மேல உள்ள போக இருபது ரூபாய்”

இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் பெற்றவுடன்.

“பைல என்ன இருக்கு?”

“மாத்து துணி, குடிக்க தண்ணி”

“தண்ணியா? எங்க வெளிய எடுங்க”

பாட்டிலை வாங்கி முகர்ந்துப் பார்க்கிறார்.

“வேற சரக்கு பாட்டில் எதுவும் இருக்கா?”

“இல்ல சார்”

“எங்க பைய காட்டுங்க?”

பையை சோதனையிடுகிறார்கள்.

“கேமராவுக்கு டிக்கெட் போடனுமே…”

“சார், அதுப்பத்தி எங்கேயும் அறிவிப்பு போடலையே…”

“இல்ல தம்பி, எல்லாரும் உங்கள மாதிரி நல்லவங்க இல்ல. குளிக்குற பொண்ணுங்கள போட்டோ எடுத்து நெட்ல போடுறாங்க. ஒரு ஐம்பது ரூபா கொடுத்துட்டு கேமிரா எடுத்துட்டு போங்க.”

“சார் ஒரு சந்தேகம். அப்போ ஐம்பது ரூபா கொடுத்துட்டு கேமிரா எடுத்துட்டு போய் எதவேணாலும் போட்டோ எடுத்தக்கலாமா?”

“தம்பி, போங்க போங்க… வரும் போது கேமிராவ செக் பண்ணித்தான் அனுப்புவோம்.”

மன மகிழ்வுக்கான ஓர் இடத்தில் நுழைவதற்கு முன்னால் இவ்வளவு பிரச்சனை என்றால் எப்படி அங்கே நிம்மதியாக இருக்க முடியும்? திரும்பி அவ்விடத்துக்குச் செல்லத் தோன்றுமா?. இவ்வளவு பாதுகாப்புகள் சுற்றுலாத்தலத்தை குறைந்த பட்சம் சுத்தமாக வைத்துக்கொள்ளவாது பயன்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாட்டிலை வாங்கி முகர்ந்து பார்த்தெல்லாம் சோதனையிட்டார்கள் அல்லவா? ஆனால் புளியஞ்சோலை ஆற்று உள்ளே கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணாடி பாட்டில்கள் தான். எங்களுக்கு அருகில் குளித்தவர் ஒய்யாரமாக குடித்துக் கொண்டிருந்தார். கெடுபிடி என்கிற முகமூடியில் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பது புரியவில்லை.

அடுத்ததாக ஓட்டுனர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். ஏற்கனவே இந்தியச் சாலைகளில் உள்ள திமிர்த்தனங்களைப் பற்றி எழுதிவிட்டதால் அதற்குள் செல்ல வேண்டாம். எங்களது ஆஸ்தான ஓட்டுனரை சந்தித்த அன்றே இவர் சரியான ஓட்டுனர் இல்லை என்பதைச் சொல்லிவிட்டேன். ஆனால் நாமே ஒரு விருந்தினரைப் போல் நம் வீட்டுக்கு வருகிறோம் என்பதால் அதிகமாக குறை கூறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை காரில் செல்லும் போதும் உயிரை துச்சமென மதித்துதான் பயணிப்பேன். காலை பத்து மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வது என்றால் பயண நேரத்தை கணித்து எட்டு மணிக்கு வரச் சொன்னால் எட்டே முக்கால் மணிக்கு வருவார் ஓட்டுனர். ஆனால் பத்து மணிக்கு நான் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்த்துவிடுவார். இதில் இருக்கும் பிரச்சனைப் புரிகிறதா? தான் நினைத்த நேரத்தில் வேலைக்கு வந்து வாகனத்தை வேகமாக ஓட்டி நான் நினைத்த நேரத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். யாரும் யாரையும் குறை சொல்ல முடியாதல்லவா?. ஆனால் வேகமாக செல்லும் அந்த நேரம் நமக்கு மரண பயத்தையல்லவா காட்டுகிறார்?.

ஒருநாள் நம் ஓட்டுனருடன் உதகைக்குச் சென்றிருந்தேன். இந்தமுறை அவர் அதிகம் பேசவில்லை. இரவு பத்து மணிக்கு உதகை சென்றுவிட்டோம். எனது அறைக்கு அருகில் ஓட்டுனருக்கும் அறை ஏற்பாடாகியிருந்தது. நள்ளிரவு இரண்டு மணிக்கு என் கதவைத் தட்டி வயிற்று வலி தாங்க முடியவில்லை என்றார் ஓட்டுனர். அம்மா செவிலியர் என்பதால் கையில் கிடைத்த வலிநிவாரணிகளைக் கொடுத்து படுக்கச் சொல்லிவிட்டார். மீண்டுமாக நள்ளிரவு மூன்று மணிக்கு வயிற்று வலி பொறுக்க முடியாமல் கீழே புரண்டு அழுகிறார். நான் 108 அழைத்து அரசு மருத்துவமனைக்கு கூட்டி வந்தால் மருத்துவர் சிறுநீரகத்தில் கல் இருப்பதை உறுதிப்படுத்தினார். மீண்டும் எங்கள் அறைக்கு வர ஆட்டோவோ மற்ற வாகனங்களோ இல்லை. மருத்துவமனையில் இருப்பவர்கள் வெளியில் இந்த நேரத்தில் நடந்து சென்றால் சிறுத்தைப் புலி வரும் என்றார்கள். துணிந்து நான் சில கிலோமீட்டர்கள் நடந்து ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்தேன். என் ஓட்டுனருக்காக பரிதாபப்படுகிறேன். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் இளைப்பாற நினைத்த என் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா? ஓட்டுனர்களின் உடல்நிலை மிகவும் முக்கியமானது. அவர்களின் கால்களில் எத்தனை பேரின் உயிர்கள் இருக்கிறது!. இப்படியாக நம்மூரில் சுற்றுலா என்று பேச்சை எடுத்தாலே பயமாக இருக்கிறது.

ஜூன் பாதியில் ஒரு வாரம் கோவா சென்றிருந்தேன். கோவாவைப் பற்றிய கட்டுக்கதைகளில் மிகவும் முக்கியமானது, யூனியன் பிரதேசம் என்பதால் எல்லா பொருட்களும் விலை மலிவாக இருக்கிறது என்பதுதான். ஆனால் மதுவைத் தவிர மற்ற அனைத்துக்கும் கோவா வாசிகள் வைப்பது தான் விலை. கோவா விமான நிலையத்திலிருந்து கலிங்கூட் வரை காரில் செல்ல இரண்டாயிரம் ரூபாய். ஆனால் கொஞ்சம் கோவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்திருந்தால் உள்ளூர் வாடகை கார் மொபைல் செயலிகள் இருக்கிறது. இவைகளை திட்டமிட்டு வாடகை கார் ஓட்டுனர்கள் இருட்டடிப்புச் செய்கிறார்கள். இவ்வகை செயலிகளை பயன்படுத்தினால் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து செல்ல வேண்டியத் தொலைவை வெறும் எழுநூறு ரூபாயில் செல்லலாம். சுற்றுலாவை பெரும் வருவாயாகக் கொண்ட மாநிலங்களில் அரசு  இப்படி கொள்ளையடிக்கவிடுவது சரியானதாக இல்லை. அதேபோல எல்லா கடற்கரைகளிலும் விபச்சாரம் சல்லிசாக நடக்கிறது. விபச்சாரம் சரியா தவறா என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம் ஆனால் மோசடிப் பேர்வழிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. பாதுகாப்பில்லாத எந்த சுற்றுலாத்தலமும் வெகுநாளுக்கு நிலைத்திருக்க முடியாது.

பாக்கெட் கனமானவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தெரிந்தவர்கள் என்றால் கோவா உண்மையாகவே ஒரு சொர்க பூமியே. வடக்கு கோவா கொண்டாட்டத்துக்கான இடமென்றால் தெற்கு கோவா தேடலுக்கான இடம். அவ்வளவு அமைதி. ஒவ்வொரு இடத்திலும் பசுமை பூத்துக் கிடக்கிறது. செர்பியாவிலிருந்து வந்திருந்த ஒரு பெண்ணுடன் கடற்கரையில் உரையாடிக் கொண்டிருந்தேன். பாடகி ஜோனிட்டா காந்தியைவிட அழகாக இருந்தாள். இம்மாதிரியான பேரழகிகளுடன் தடையின்றி பேச எனக்கு பேருதவியாய் இருப்பது தமிழ் இலக்கிய உலகம். அதற்கு நான் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். பெண்களோடு மட்டுமல்ல, இந்த உலகில் யாருடனும் எந்தத் தேசத்தவருடனும் வெகு இயல்பாக என்னுடன் பேசிக் கொண்டிருக்க முடியும். தமிழ் இலக்கியங்கள் அதற்கான சாளரங்களை எப்போதும் திறந்து வைத்திருக்கிறது. மிலோராட் பாவிச் குறித்து நானும் அவளும் பேச ஆரம்பித்தோம். பிறகு அப்படியே ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேச்சு நீண்டது. பின் கோவாவில் சென்று வந்த இடங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு கோலா கடற்கரையின் அழகை அவள் கூறிக்கொண்டிருந்தாள். அவள் சொன்னதிலிருந்த சாகச தொனி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தநாள் தாமதிக்காமல் கோலா கடற்கரைக்குச் சென்றுவிட்டோம். கோலா கடற்கரைக்கு சென்று வந்ததே நல்ல அனுபவமாக இருந்தது. மண் சாலையில் முந்திரிக் காடுகளுக்கு இடையில் ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்தோம். திடீரென எங்கிருந்தோ பெரிய பாம்பொன்று கடந்துச் சென்றது. சகதியில் சிக்கி ஸ்கூட்டர் நகர மறுத்தது. எல்லாவற்றையும் தாண்டிச் சென்றால் பெரிய முகட்டிலிருந்து கடல் பார்க்கலாம்.

இரண்டு மாத விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் அமெரிக்கா வந்துவிட்டேன். இங்கே கோடை காலம் என்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு குதுகலமாக இருக்கலாம். ஜூலை மாதம் 4ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தின நிகழ்வாக பாஸ்டன் சார்ல்ஸ் நதிக்கரையோரம் நடந்த மிகப் பெரிய இசை நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வின் முடிவில் உக்ரைன் மக்களை நினைவுகூறும் வகையில் உக்ரைனிய தேசிய கீதம் வாசிக்கப்பட்டது. அனைவரும் நெகிழ்ந்துப் போனார்கள். ஆனால் எனக்குப் பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது அதற்குப் பிறகு வாசிக்கப்பட்ட இசைத் தொகுப்பு. ஒவ்வொரு ஜூலை 4 கொண்டாட்டமும் இந்தக் குறிப்பிட்ட இசைத் தொகுப்பு இல்லாமல் முடியாது என்பது கூடுதல் ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வெவ்வேறு துருவங்கள் ஒன்றாக சந்தித்துக் கொண்டது போல இருந்தது. மானிட சமூகத்தை ஒன்றிணைக்கத் துடிக்கும் அந்த இசையை குறித்தும் அதை இயற்றியவர் குறித்தும் அடுத்த மாதம் விரிவாக எழுதுகிறேன்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button