ஜூலை 4 சார்ல்ஸ் நதிக்கரையோரம் வழக்கமாக நிகழும் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஜூலை 1 ஆம் தேதிதான் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்திருந்தேன். கடுமையான jetlag இல் இருந்தேன். இருந்தாலும் பாஸ்டன் பாப்ஸ் நிகழ்வுக்கு சென்றுவிட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தேன். 1885-லிருந்து தொடர்ச்சியாக 137 வருடங்கள் பாஸ்டன் பாப்ஸ் நிகழ்த்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பாஸ்டன் சிம்பனி ஆர்கெஸ்ட்ரா இந்நிகழ்வுகளை ஒருங்கமைத்தது. பிறகு க்ளாசிக் இசையும் பாப்புலர் இசையும் சேர்க்கப்பட்டு வழங்கிவருகிறது. அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய இலவச இசை நிகழ்வென்று இதனை சொல்லலாம்.
ஒவ்வொரு வருடமும் மிகப்பிரபலமான இசைக் கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்வார்கள். மாலை 8 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள், 10 மணியளவில் வாணவேடிக்கைகளுடன் நிறைவடையும். ஆனால் காலை 8 மணியிலிருந்து மக்கள் வரிசையில் காத்திருக்க ஆரம்பிப்பார்கள். ஜூலை மாதம் அமெரிக்காவில் கொடுமையான வெயில் காலம். சுட்டெரிக்கும் வெயில் அமெரிக்கர்களின் வெளிர்மேனியை பொசுங்க வைத்துவிடும். ஆனாலும் சன் க்ரீம் பூசிக்கொண்டு காத்திருப்பார்கள். மதியம் 2 மணியளவில் நிகழ்வுகள் நடைபெறும் அரங்கமும் அதைச்சுற்றியுள்ள மைதானமும் திறக்கப்படும். பெரும் ஆரவாரத்துடன் மக்கள் துண்டை விரித்து இடம் பிடிப்பார்கள். ஒரு இருபது வருடத்துக்கு முன்னர் நம்மூரில் தியேட்டர்களில் டிக்கெட் வாங்கி அடித்துபிடித்துக் கொண்டு அரங்கத்துக்குள் நுழைவதை கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இப்போதெல்லாம் அவ்வாறு நடக்கிறதா? மதியம் இரண்டு மணிக்கு உச்சிவெயிலில் இடம் பிடித்து வெய்யிலிலே காத்திருப்பார்கள். இதெல்லாம் முன்பே கேள்விப்பட்டதால் நான்கு வருடங்களாக பாஸ்டன் பாப்ஸ் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதுடன் நிறுத்திக் கொண்டேன். இந்தமுறை நண்பர்கள் கூட்டமாக சென்றதால் ஒப்புக்கொண்டேன். நாங்கள் 4 மணிக்கெல்லாம் சார்ல்ஸ் நதிக்கரையோரம் வந்துவிட்டோம். வெயில் பொறுக்காத நண்பர்கள் சன் க்ரீமை உடலெங்கும் பூசிக் கொண்டு நின்றார்கள். நமக்கு சன் க்ரீமெல்லாம் என்றுமே தேவைப்பட்டதில்லை. இருந்தாலும் வெயில் பொறுக்க முடியமால் வதைத்தது.
இந்தமுறை சிறப்பு விருந்தினர்களாக ஷகா கான் (Chaka Kahn), ஹீதர் ஹெட்லி (Heather Headley), மற்றும் ஹவியர் கொலோன் (Javier Colon) கலந்துக் கொண்டார்கள். ஷகா கான் அனைவரும் அறிந்த பிரபல பாடகி. இப்போது இவருக்கு 69 வயது. 1970களின் பிற்பகுதியிலிருந்து 1980கள் வரை இசையுலகத்தை கட்டியாண்டவர் எனச் சொல்லலாம். பத்து முறை கிராமி விருதை வென்றுள்ளார். இன்றளவும் அதே உற்சாகமும் துள்ளளுமாக இருக்கிறார். அவர் குரலில் ஒரு தனித்துவமான சக்தி ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தது. ஒட்டுமொத்த ஜனத்திரளும் ஷகா கான் வந்தவுடன் எழுந்து நடனமாடத் தொடங்கிவிட்டார்கள் . ஆனால் ஷகா கான் என்னை அவ்வளவாக வசீகரிக்கவில்லை. ஹீதர் ஹெட்லியும், ஹவியரும் (ஸ்பனிய மொழியில் J ஒலிக்கு பதிலாக H ஒலி வர வேண்டும், எனவே ‘ஜவியர்’ அல்ல ‘ஹவியர்’) என்னை பெரிதும் கவர்ந்தார்கள். குறிப்பாக ஹவியர் பாடிய ‘ஹலேலூயா’ மிகுந்தப் பரவசத்தைக் கொடுத்தது. பின்வரும் இணைப்பில் பாஸ்டனில் ஹவியர் கொலோன் பாடிய காணொலி உள்ளது: https://www.youtube.com/watch?v=dGgPa92JM2E
பத்து மணி நெருங்கியது. உக்ரைன் மக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக உக்ரைனிய தேசிய கீதம் வாசிக்கப்பட்டது. அடுத்து நடந்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியம். 1812 Overture என்று அனைவராலும் அறியப்பட்ட The Year 1812, Solemn Overture, Opera 49 வாசிக்கப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த இசைக் கோர்வையை இயற்றியது ரஷ்ய இசை உலகின் மேதை ட்சைக்காவ்ஸ்கி (Pyotr Ilyich Tchaikovsky).
ஒவ்வொரு கலைஞர்களும் காலத்தின் சாட்சியாக நிற்கிறார்கள். அந்தந்த காலத்தின் கலாசாரங்களை கலைகளின் வழியாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில் ட்சைக்காவ்ஸ்கியின் இசையை தனிமையில் கேட்டால் ரஷ்யாவின் குளிரை நம்மால் உணர முடியும். தூரமாக எங்காவது காரில் செல்லும் போது பாஸ்டன் க்ளாசிக்கல் பண்பலை கேட்டுக்கொண்டே செல்வேன். அப்போது ட்சைக்காவ்ஸ்கியின் இசை ஒலிபரப்பப்பட்டால் ஏதோ ஒரு பனிப்பாலையில் வண்டி சென்றுக்கொண்டிருப்பதாக மனம் நினைக்க ஆரம்பித்துவிடும். நீங்கள் ஒருமுறையேனும் பனிப்பொழிவின் அழகை ரசிக்க ஆசைப்பட்டால் ட்சைக்காவ்ஸ்கியின் ஏதேனும் ஒரு சிம்ஃபனியை ஒலிக்கவிட்டு அமைதியாக அமர்ந்திருங்கள். வேண்டுமானால் சர்க்கரையும் பாலும் கலக்காத ஒரு தேனீர் அருந்திக்கொண்டே இசைக்கு செவிகொடுங்கள். தெய்வீக அனுபவமாக இருக்கும்.
பாஸ்டன் பாப்ஸ் நிகழ்வில் ஷகா கான் மற்றும் பலர் ஏற்படுத்திய ஆரவரங்களை அமைதியுறச் செய்தது ட்சைக்காவ்ஸ்கியின் 1812 Overture. பீட்டர் இலியச் ட்சைக்காவ்ஸ்கி பிறந்தது 1840ஆம் வருடம். அவருக்கும் 1812ஆம் வருடத்துக்கும் என்ன சம்பந்தம்? ட்சைக்காவ்ஸ்கி மட்டுமல்ல ஒட்டுமொத்த ரஷ்யர்களுக்கும் 1812 மிக முக்கியமான வருடம். 1812ஆம் வருடம் ஃப்ரன்ச் படை ரஷ்யாவை முற்றுகையிட்டு மாஸ்கோவை நோக்கி முன்னேறியது. மாவீரன் என்று அழைக்கப்பட்ட நெப்போலியன் ரஷ்யாவை பிடிப்பதில் பெரும் முனைப்போடிருந்தார். மாஸ்கோவுக்கு எழுபத்தைந்து மைல் தொலைவிலிருந்த போரடீனோ (Borodino) வரை வந்துவிட்டார்கள் நெப்போலியனின் படைவீரர்கள். இதை முன்வைத்து ஜார்ஜ் ஜோனஸ் வரைந்த Battle of Borodino மிக முக்கியமான ஓவியம். மீண்டுமாக அந்த யுத்தத்தில் நெப்போலியனின் கை ஓங்கியது. மாஸ்கோவை நோக்கி படைகள் நகர்ந்தன. ரஷ்யாவின் குளிர் ஒவ்வொரு வீரர்களையும் நிலைகுலையச் செய்திருந்தது. ஆனால் இன்னும் எழுபத்தைந்து மைலில் வெற்றி கண்ணுக்குத் தெரிந்ததால் உறுதியுடன் முன்னேறினார்கள். இதற்கிடையில் ரஷ்யர்கள் மாஸ்கோவை காலி செய்துவிட்டு வேறிடத்திற்கு சென்றிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் மாஸ்கோ நகரை முற்றுமாக தீக்கிரையாக்கி இருந்தார்கள். மாஸ்கோ வந்த நெப்போலியனுக்கும் அவரது வீரர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு மேலும் முன்னேறிச் செல்ல வழுவிழந்திருந்த வீரர்கள் பின்வாங்க துவங்கினார்கள். கடைசியில் ரஷ்ய நெப்போலியனின் ஆதிகத்துக்கு வராமல் ‘மீடகப்பட்டது’. இந்த வெற்றியை கொண்டாட முதலாம் அலெக்ஸாண்டர் பேராலயம் ஒன்றை எழுப்ப முனைந்தார். 1880ல் இந்தப் பேராலயம் கட்டுமானப் பணிகள் முற்று பெற தொடங்கின. அதன் சமயம் இந்த வரலாற்றை பறைசாற்றக்கூடிய இசையமைக்க ட்சைக்காவ்ஸ்கி பணிக்கப்பட்டார். 1882ல் நடைபெறவிருந்த பேராலய தொடக்கவிழாவில் அவ்விசையை அரங்கேற்ற எண்ணியிருந்தார்கள். கீழை திருச்சபை திருவழிபாட்டில் உள்ள ஒரு எளிய வேண்டுதல் கீதமாக தொடங்கும் 1812 Overture, அடுத்த கட்டத்தில் ஃப்ரன்ச் தேசிய கீதமான La Marseillaise ஆக வளர்கிறது. அடுத்ததாக போரடீனோ போரை நினைவுப்படுத்த ஐந்து முறை பீரங்கிகள் முழங்குகிறது. ட்சைக்காவ்ஸ்கி ராணுவ வீரர்களின் உதவியுடன் பீரங்கிகளை முழங்கச் செய்ய எண்ணி அதை இசைக் குறிப்பில் சேர்த்திருந்தார். அதன் பிறகு ஃப்ரன்ச் படை பின்வாங்கியதைக் குறிக்கும் இசை. மீண்டும் பதினோரு முறை பீரங்கிகள் முழங்குகிறது. கூடவே ஆலயத்தின் மணிகளும் ஒலிக்கிறது. இது ரஷ்யாவின் வெற்றியைக் குறிக்கிறது. மீண்டுமாக பிராத்தனை கீதத்துடன் இசை முடிவுக்கு வருகிறது. ஆனால் ட்சைக்காவ்ஸ்கி நினைத்திருந்தபடி முதல் 1812 Overture அரங்கேற்றம் நிகழவில்லை. அச்சமயம் இரண்டாம் அலெக்ஸாண்டர் படுகொலை செய்யப்பட்டார். எனவே எளிய முறையில் அரங்கேறியது. 1891ல் நியூயார்க்கில் நடைபெற்ற வேறொரு நிகழ்வில் ட்சைக்காவ்ஸ்கி நினைத்தது போல 1812 Overture பீரங்கிகளுடன் நிகழ்த்திக் காட்டினார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 4, அமெரிக்க சுதந்திர தினத்தில் பல்வேறு இடங்களில் 1812 Overture நிகழ்த்தப்பட்டு வருகிறது. V for Vendetta உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படம். அதில் 1812 Overture இசைக்கப்படும் போது கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். ஜூலை 4 பாஸ்டன் பாப்ஸ் நிகழ்ச்சியில் நானும் மெய்சிலிர்த்து நின்றிருந்தேன். முதல் ஐந்து பீரங்கி முழக்கத்தில் அடிவயிற்றில் ‘குமீர் குமீர்’ என்ற அதிர்ச்சியை உணர முடிந்தது. அதுவே வெற்றியின் அடையாளமாக மாறும் போது மீதி பதினோரு முழக்கமும் உற்சாகமாக இருந்தது. என் வாழ்வில் மறக்கவே முடியாத மாலையாக அது மாறிப்போனது.
நாடுகளிடையே பகைமை பாராட்டிக் கொள்வதை யாரும் எப்போதும் ஆதரித்ததில்லை. ஆனால் தேசியப் பார்வையில் அணுகும் போது இதை தவிர்க்கவே முடியாது. இந்தியா – பாக்கிஸ்தான் எப்படி இருவேறு துருவங்களோ அதைப் போல் தான் அமெரிக்காவும் ரஷ்யாவும். விண்வெளிக்கு யார் முதலில் செல்வது என்று தொடங்கி எல்லா விஷயத்திலும் இரு நாடுகளும் எலியும் பூனையுமாக இருக்கின்றன. ஆனாலும் ஓர் உன்னதமான இசையை மற்றொரு துருவத்தில் இருப்பவர் இயற்றியிருந்தாலும் அதைப் போற்றிக் கொண்டாடும் தன்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தான் இங்கேயே ஓர் அகதியாகவும் வாழ்ந்துவிட மனம் துடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு நடந்தத் துயரத்தையும் அதன்பிறகான வெற்றியையும் இசையால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுக்குமானதாக மாற்றிவிட்டார், ட்சைக்காவ்ஸ்கி. பின்வரும் இணைப்பில் இருக்கும் 1812 Overtureஐ மறக்காமல் கேளுங்கள்: https://www.youtube.com/watch?v=QUpuAvQQrC0
கேட்பவர் அனைவரையும் உறைய வைக்கும் இந்த 1812 Overture குறித்து ட்சைக்காவ்ஸ்கியிடம் கேட்ட போது தனக்கு அவ்வளவாக அது பிடிக்கவில்லை என்றும் ஒரே இரைச்சலாக இருக்கிறது என்றும் கூறினாராம். மேதைகளின் உலகை புரிந்துக் கொள்வது மிகவும் கடினம் தான்.
(தொடரும்…)