தொடர் பயணங்கள் செய்து கொண்டிருக்கிறேன். பயணங்களில் நான் சந்திக்கும் மனிதர்களும் இடங்களும் என் கதைகளாகின்றன. சமீபத்தில் இரண்டு முறை ட்ரூரோவிலிருக்கும் மணற்குன்றுகளுக்குச் சென்று வந்தேன். சிறு வயதிலிருந்தே மணலின் மீது அதீத காதல் கொண்டவன் நான். புதிதாக வீடு கட்டுபவர்கள் மணலை கட்டிடத்துக்கு அருகில் கொட்டி வைத்திருப்பார்கள் அல்லவா? அதுதான் எங்கள் விளையாடுமிடம். ஆனால் வீட்டு உரிமையாளர்கள் விரட்டிவிடுவார்கள். அரியலூரில் வசித்த போது புகைவண்டி நிலையத்துக்கு அருகில் பெரும் பரப்பில் மணல் கொட்டி வைத்திருந்தார்கள். நானும் நண்பர்களும் அங்கேதான் விளையாடுவோம். அந்த இடத்துக்கு வெகு அருகில் ஓர் இடுகாடு இருந்தது. சமயங்களில் விளையாடும் போது தூரத்தில் பிணம் எரிந்துக் கொண்டிருக்கும். அல்லது மணலை தோண்டும் போது மனிதன் உட்பட பல்வேறு ஜீவராசிகளின் எலும்புகள் கிடைக்கும். எதற்கும் பயந்ததில்லை.
ட்ரூரோவுக்கும் ப்ராவின்ஸ் டவுனுக்கும் இடையில் பல மைல்களுக்கு விரவிக் கிடக்கிறது இந்த மணற்குன்றுகள். சுமார் இரண்டு மைல் தூரம் மணலில் கால் பதிய ஏற்றத்திலும் இறக்கத்திலும் நடந்து வந்தால் அற்புதமான கடற்கரை . குளிப்பதற்கு அனுமதியுண்டு, ஆனால் நம் உயிருக்கு நாம் தான் பொறுப்பு. மேஸசூசட்ஸின் தென்கிழக்கு முனையான இந்தப் பகுதி கேப் காட் என்று அழைக்கப்படுகிறது. நம் குமரிமுனை அல்லது தனுஷ்கோடி போல. கோடையின் பிற்பகுதியிலும் இலையுதிர்கால முற்பகுதியிலும் சுறா மீன்கள் இந்தப் பகுதியில் அதிகம் வந்து போகும். கோடைக்காலத்தில் லைஃப் கார்ட்ஸ் உதவிக்கு இருப்பார்கள் ஆனால் அப்போதும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. எனவே நீர் விளையாட்டுகளை தவிர்த்து அமைதியில் வெகுநேரம் நின்றிருந்தேன். மணற்குன்றுகள் வழி நடக்கும் போது பேரமைதியாக இருந்தது. சமயங்களில் பெரும் ஊளையுடன் காற்று வீசியது. குன்றுகளை தாண்டினால் கடலின் பேரிரைச்சல். உடன் வந்த நண்பரிடம் உலகத்தின் முதல் மொழி இதுதான் என்றேன். கூர்ந்து கவனித்துவிட்டு தனக்கு புரியவில்லை என்றார். புரியவில்லை என்பதற்காக புறகணித்துவிட முடியுமா?
எப்படி ட்ரூரோவை கண்டுபிடித்தேன் தெரியுமா?
Men In Black சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். இதுவரை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கேயில்லை. அதில் ஏஜெண்ட் கே (Tommy Lee Jones) தன் மனைவியை கணினித்திரையில் பார்த்துக்கொண்டிருப்பார். அப்படி அவர் தேடும் போது மேஸசூசட்ஸ் மாகாணத்தின் தீபகற்பத்தில் எங்கோ அவள் இருக்கிறாள் என்பதாக காட்டுவார்கள். அடுத்த பாகத்தில் தன் வேலையை விட்டுவிட்டு ஏஜெண்ட் கே ஓர் அஞ்சலகத்தில் பணிபுரிவதாக காட்சிகள் வரும். அதில் ட்ரூரோ – மேஸசூசட்ஸ் என்ற பெயர் வந்தது. பொதுவாக ஹாலிவுட் படங்களில் கதையம்சத்துக்காக நகரத்தின் பெயர்களை புனையப்பட்டதாக இருக்கும். உதாரணமாக நாம் அனைவருக்கும் பிடித்த பேட்மேனில் வரும் கோதம் சிட்டி ஒரு புனையப்பட்ட நகரம். கோதம் சிட்டி இலனாயில் இருக்கும் சிக்காகோதான். அதே மாதிரி ஜாஸ் படத்தில் வந்த அமிட்டி ஐலண்ட் மேஸசூசட்சில் இருக்கும் மார்த்தா’ஸ் வினியர்ட் என்னும் தீவே. மேலும் பல காட்சிகள் கேப் காடில் படமாக்கப்பட்டவை. ட்ரூரோ என்ற பெயரை இதுவரை கேள்விப்படாததால் அது புனையப்பட்ட நகரமாக இருக்கும் என்றே நம்பினேன். ஆனால் என் இடத்திலிருந்து இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கூகுள் சொன்னது. உடனே கிளம்பிவிட்டேன். அப்படியாக நான் தெரிந்துக் கொண்ட இடம் தான் அந்தப் மணற்பாலை.
கோபே ஏப் (Kobo Abe) எழுதிய Woman in the Dunes மணற்பாலையில் வசிக்கும் ஓர் இனக்குழுவைப் பற்றிய நாவல். இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு ‘மணற்குன்று பெண்’ எதிர் வெளியீடாக வந்தது. பூச்சிகளை ஆராயும் ஆராய்ச்சியாளன் ஒருவன் மணற்பாலையில் தொலைந்து கடைசியில் மணலுக்கு அடியில் வசிக்கும் இந்த மக்களிடம் அகப்படுகிறான். இவன் வசித்த வீட்டில் வேறொரு பெண் இருக்கிறாள். நாள் முழுவதும் தண்ணீரைப் போல மணல் அந்த வீட்டில் கசிந்துக் கொண்டேயிருக்கிறது. அதை அவள் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டேயிருப்பாள். இந்த நாவலை மையமாக வைத்து ஒரு திரைப்படமும் வந்தது. என் நினைவு சரியாக இருந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நாவலை தமிழுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ரொம்ப நாளுக்கு முன்னாள் இந்த நாவலின் தமிழ் மொழிப்பெயர்பை வாசித்திருக்கிறேன். அதே போல திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். ட்ரூரோவின் மணற்குன்றுகள் மணற்குன்றுப் பெண் நாவலையும் திரைப்படத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.
மார்த்தா’ஸ் வினியர்ட் குறித்து நீங்கள் சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ளோரிடாவின் கவர்னர் ரொணால்ட் டிஸாண்டிஸ் முறையற்ற ஆவணங்களோடு அமெரிக்காவில் குடியேறிய சில தென்னமெரிக்கர்களை சிறிய விமானத்தில் ஏற்றி நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்கு அனுப்பி வைத்தார். இதைப்பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவை பூகோள ரீதியாக மூன்றாகப் பிரிக்கலாம்: கிழக்கு கடற்கரை மாகாணங்கள் (மேஸசூசட்ஸ் எல்லாம் கிழக்கு கடற்கரையில் அடங்கும்) மேற்கு கடற்கரை மாகாணங்கள் (வாஷிங்டன் மாகாணம் அதாவது சியாட்டல் போன்ற நகரங்கள்) மற்றும் மத்திய மாகாணங்கள் (இரண்டு கடற்கரைக்கும் நடுவில் அமைந்துள்ள பகுதி). இதில் மத்திய மாகாணங்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியை ஆதரிக்கும். இரண்டு கடற்கரைகளும் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும். ஜனநாயகவாதிகள் வேற்று நாட்டினவர் அமெரிக்கா வந்து குடியேறுவதை ஆதரிப்பவர்கள். ஆக முறையான ஆவணமில்லாமல் தென்னமெரிக்காவிலிருந்து சிலர் பிழைப்புக்காக வடஅமெரிக்காவுக்குள் வந்து பிறகு பிழைக்க வழியில்லாமல் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். குடியரசுவாதிகளின் பெரும் குற்றச்சாட்டு இதுதான். எனவேதான் மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற அரசியல் செயல்பாடுகளை ட்ரம்ப் முன்னெடுத்தார். இப்போது கவர்னர் டிஸாண்டிஸ் குடியரசுவாதி. எனவே தங்கள் மாகாணத்தில் இம்மாதிரியான முறையற்ற ஆவணமில்லாத மக்களை வைத்துக்கொள்ள முடியாதென்று ஜனநாயகவாதிகள் ஆளும் மாகாணங்களுக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டார். மேஸசூசட்ஸ் ஜனநாயகவாதிகள் ஆளும் இடம். ஆனால் இந்த மக்கள் அனுப்பப்பட்டதோ மார்த்தா’ஸ் வினியர்ட். இது ஒரு தீவு. ஏன் இங்கு அனுப்பினார் என்றால் அமெரிக்காவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் மார்த்தா’ஸ் வினியர்ட் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதி.
பலருக்கு மார்த்தா’ஸ் வினியர்ட் சென்று இரண்டு நாளாவது தங்கி வர வேண்டும் என்பது நிறைவேறாதக் கனவு. அப்படிப்பட்ட இடத்துக்கு ஆவணங்கள் ஏதுமில்லாத வெளினாட்டினரை கொண்டிரக்கினால் என்ன ஆகும்? எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர்கள் வந்து இறங்கியதால் மார்த்தா’ஸ் வினியர்ட் பரப்பரப்பானது. ஊரின் அத்தனை செல்வந்தர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ‘பல்லு வலியும் வயித்து வலியும் வந்தவனுக்குத் தான் தெரியும்’ என்பது தான் கவர்னர் டிஸாண்டிஸின் மறைமுகமான செய்தி. இப்படி இவர் செய்ததற்காக பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவரின் இந்தச் செய்கையை ஆராய்வதை விட்டு நம் அரசியல்வாதிகளுடன் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். மதம் மொழி சாதி என்ற குறுகிய மனப்பாங்குடன் இல்லாமல் புதிமையாக ஒரு பிரச்சனையை உருவாக்கி அதை அரசியலாக்குவதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
(தொடரும்…)