இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 20

தொடர் | வாசகசாலை

னிப்பு எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. திருச்சியில் B G நாயுடு என்றொரு ஸ்வீட் கடை இருக்கிறது. அதில் செய்யும் நெய் மைசூர்பாகு எனக்குப் பிடிக்கும். அதே போல பால்பேடா பூஸ்ட்பேடா போன்ற ஐட்டங்கள் சாப்பிடுவேன். எல்லாம் ஒன்று அல்லது இரண்டு தான் அதற்கு மேல் திகட்டிவிடுகிறது. இந்த ஸ்வீட் சாப்பிடும் போது அருகில் கொஞ்சம் மிளகு காராசேவு இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் ஸ்றாங்கான காஃபி இருந்தால் நலம் இல்லையென்றால் மிதமான சூட்டில் சுடுதண்ணீர். இவ்வளவு வக்கனையாக சாப்பிட வேண்டும் என்பதால் பல நேரங்களில் யாரும் ஸ்வீட் கொடுத்தால் சாப்பிடுவதில்லை. வீட்டில் செய்யப்படும் கேசரியும் அசோகாவும் பிடிக்கும். வட இந்திய ரஸமலாய் பிடிக்கும். மற்றபடி திருநெல்வேலி அல்வா பிடிக்கும். இனிப்பு பிடிக்காது என்று சொல்லிவிட்டு எவ்வளவு ஐட்டங்கள் பிடிக்கும் என சொல்லிவிட்டேன் பாருங்கள். இனிப்பு சாப்பிடுவதற்கான மனநிலை அமைய வேண்டும். கும்பகோணத்தில் அப்போதிருந்த சில சின்ன ஹோட்டல்களில் SKC சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். SKC என்றால் Sweet Karam (காரம்) Coffee. இப்போது அந்தக் கடைகளின் தடத்தைக் கூட காணவில்லை. லால்குடியிலும் ஒரு கடை இருந்தது. ஐயர் ஒருவர் நடத்திவந்தார். இப்போது அதையும் காணவில்லை. ஸ்வீட் காரம் காஃபி சாப்பிட்ட அந்த மாலை திவ்யமாக இருக்கும்.

அமெரிக்கர்களின் இனிப்பு வகைகள் எனக்கு பிடிப்பதில்லை. அமெரிக்க இனிப்பென்று எதுவும் இல்லை. விதவிதமான மிட்டாய்களை சாப்பிடுவதுதான் அமெரிக்க இனிப்பு வழக்கம். எங்கு சென்றாலும் ஒரு பாத்திரத்தில் மிட்டாய்கள் குவித்து வைத்திருப்பார்கள். முடி வெட்டிக் கொள்ளும் கடையில், இன்ஸூரன்ஸ் ஆஃபிஸ், காவல் நிலையம், ப்யூனரல் ஹோம், வங்கிகள், அஞ்சல் நிலையம், கல்லூரிகள், நூலகங்கள் எங்கு சென்றாலும் மிட்டாய்கள். வயது வித்யாசம் பார்க்காமல் எல்லோரும் மிட்டாய் சாப்பிடுவார்கள். எனக்கு என்றுமே மிட்டாய்கள் உவப்பானதாக இருந்ததில்லை. எனவே எனக்கு மிட்டாய்கள் வழங்கப்படும் போதெல்லாம் வேண்டாம் என்று சொன்னால் ஏதோ வேற்றுகிரகவாசியை போல பார்க்க ஆரம்பிப்பார்கள். என்னுடைய தோழி ரூபா லெபனானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவள். சாக்லெட் என்றால் கொள்ளைப்பிரியம். வீடு முழுவதும் ஹெர்ஸி சாக்லெட் நிறைந்திருக்கும். ஒருமுறை நான் நியூ ஹேம்ஸையர் செல்கிறேன் என்று சொன்னேன். நியூ ஹேம்ஸையர் நம்மூர் பாண்டிச்சேரி போல. சேவைவரி கிடையாது என்பதால் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும். உடனே ரூபா தனக்கு லிண்ட் கடைக்கு சென்று வரும்படி சொன்னாள். லிண்ட் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. நான் நியூ ஹேம்ஸையர் செல்வது துணிகள் மற்றும் மது வாங்கத் தான். லிண்ட் என்றால் துணிக்கடை என்று நினைத்தேன். பிறகு தான் அது சாக்லெட் கடையென்று புரிய வைத்தாள் ரூபா. லிண்ட் சாக்லெட் ஸ்விஸர்லாந்து கம்பெனி. நம் பா.ராகவன் அவர்களுக்கு பிரியமான சாக்லெட் கம்பெனி என்பது பின்னரே தெரிய வந்தது. லிண்ட் கடையில் கடல் உப்பு சேர்க்கப்பட்ட சக்லெட், ஆரஞ்சு சுவையுடைய சாக்லெட், எழுபது முதல் நூறு சதவீதம் கோகோ சேர்க்கப்பட்ட சாக்லெட்கள் என்று விதவிதமாக சாக்லெட்கள் இருந்தது. அதிலும் எனக்குப் பிடித்தது நூறு சதவீதம் கோகோ சேர்த்த சாக்லெட் மற்றும் மிளகாய் சுவை கொண்ட சாக்லெட். நூறு சதவீதம் கோகோ சேர்க்கப்பட்ட சாக்லெட் கசப்பாக இருக்கும். காஃபியுடன் ஒரு கடி கடித்துக் கொண்டால் நன்றாக இருக்கும். மிளகாய் சுவை சாக்லெட்டில் இனிப்பு சாக்லெட் பாதிக்கு மேல் கரைந்ததும் சுருசுருவென நாக்கில் மிளகாய் வினை புரியத் தொடங்கும்.

ஏன் இனிப்புப் புராணம் ஆரம்பித்தது என்றால் கோவாவில் பிறந்து ஜெர்மனியில் படித்துவரும் ஒரு இளம்பெண்ணை பாஸ்டனில் சந்தித்தேன். மிக விரைவில் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டோம் (உனக்கு தோழர்களே கிடையாதா? என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். இருக்கிறார்கள் ஆனால் தோழிகள் அளவுக்கு சுவாரசியமானவர்கள் இல்லை). ஜெர்மனியில் படித்ததால் என்னவோ பயங்கர கர்வமாகவே இருப்பாள். கோவாவில் பிறந்து வளர்ந்தாலும் கலாசார ரீதியாக அவள் ஐரோப்பிய தேசத்தவள். நான் தமிழனாக இருந்தாலும் கலாசார ரீதியாக அமெரிக்கத் தன்மை கொண்டவன். அதுவும் பாஸ்டன் நகரத்தவன். பாஸ்டோனியர்களின் நகரப் பற்றை குறித்து சொல்லியிருக்கிறேன் அல்லவா? சார்ல்ஸ் நதியும் மிஸ்டிக் நதியும் ஒன்று சேர்ந்து அட்லாண்டிக் மகாசமுத்திரத்தை உருவாக்குவதாக நம்புபவர்கள். அப்படிப்பட்ட என்னிடம் வந்து பாஸ்டனைப் பற்றி குறை சொன்னால் எப்படியிருக்கும்? ஜெர்மனியில் இப்படியல்ல ஜெர்மனியில் அப்படியல்ல இதேதான் பேச்சு. ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி சம்மந்தமாக பாஸ்டன் வந்திருப்பதால் பாஸ்டன் குறித்த சரியான புரிதல் இல்லை. ஆகவே நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் வாக்குவாதம் பலமாக இருக்கும். ஒருநாள் பாஸ்டனிலிருந்து ஜெர்மனிக்கு எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது என்று கேட்டாள். நான் முதல்முறை வீழ்த்தப்பட்டதாக உணர்ந்தேன். காரணம் பாஸ்டன் கொண்டாட்டமான நகரம். வரலாற்று சிறப்புள்ள நகரம் ஆனால் இங்கிருந்து எதையும் நீங்கள் எடுத்துச் சென்று கொண்டாட முடியாது. நான் சொல்வது தின்பண்டங்களை. பாஸ்டனில் மீன் உணவு படு சுவையாக இருக்கும். அதை வெளியில் எடுத்துச் செல்ல முடியாது. மற்ற ஐரோப்பிய நாடுகள் அப்படியல்ல. இத்தாலி சென்றால் நல்ல ஒயின் வாங்கி வரலாம். ஸ்விஸ் சாக்லெட்கள், ஜெர்மன் பேக்கரி உணவுகள் இப்படி பட்டியலிட முடியும். ஆக தோழிக்கு பாஸ்டன் பற்றி குறையாக பேச வாய்பளித்துவிட்டதால் அன்றைய வாதத்தில் தோற்றுப் போய்விட்டேன். அதுபோக ஜெர்மனியில் வசித்ததால் கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் அவள் பயணித்திருக்கிறாள். எனவே நம்முடைய வாதங்கள் அங்கே செல்லுபடியாகவில்லை.

இப்படி ஒருநாள் பேசிக் கொண்டிருந்துவிட்டு பாஸ்டன் நார்த் எண்ட் வழியாக வந்துக் கொண்டிருந்தோம். பாஸ்டன் நார்த் எண்ட் இத்தாலியர்கள் குடியேறியப் பகுதி. எனக்கு விருப்பமான ஹேனோவர் தெரு அமைந்திருப்பதும் இங்கேதான். ஹேனோவர் தெரு முழுவதும் இத்தாலிய உணவகங்கள் நிறைந்திருக்கும். நல்ல பாஸ்தா உணவுடன் இரண்டு க்ளாஸ் சிவப்பு ஒயின் அருந்த ஏற்ற இடம் பாஸ்டனின் நார்த் எண்ட். நான் எப்போது நார்த் எண்ட் சென்றாலும் விரதமிருந்து நல்ல பசியுடன் செல்வேன். அதேபோல ஒரே கடையில் சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது. பீஸ்ஸாவிலிருந்து என் உணவு ஆரம்பிக்கும். நார்த் எண்டில் உலகப் புகழ் பெற்ற ரெஜினா பீஸ்ஸா இருக்கிறது. இந்தக் கடையில் அமர்ந்து உணவு உண்பதற்காக மணிக்கணக்கில் குளிரில் மக்கள் காத்துக் கிடப்பார்கள். மிகச் சிறிய உணவகம். ஆனால் பாஸ்டன் வரும் எல்லா முக்கியமான ஆளுமைகளும் இங்கு வந்துவிடுவார்கள். அதிஷ்டம் இருந்தால் நமக்கு அடுத்த மேஜையில் லியனார்டோ டிக்காப்ரியோ அமர்ந்து பீஸ்ஸா சாப்பிட்டுக் கொண்டிருப்பார். நான் தோழியுடன் சென்ற அன்று எல்லா உணவகங்களும் நிரம்பி வழிந்தன. ஆனால் ஆச்சரியமாக பத்து நிமிடத்தில் ரெஜினா உணவகத்தில் அமர்ந்து சாப்பிட எங்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. ரெஜினா பீஸ்ஸாவின் தரம் ஈடு இணையற்றது. பீஸ்ஸாவின் க்ரஸ்ட், மேல் பூசப்படும் தக்காளி சாஸ், சீஸ் எல்லாவற்றையும் அங்கேயே தயாரிக்கிறார்கள். பீஸ்ஸாவுக்கு பிறகு ப்ரகோலியும் சிக்கனும் சேர்த்த பெனே பாஸ்தா சாப்பிட பிடிக்கும். பாஸ்தாவில் மட்டும் பலவிதமான பாஸ்தா இருக்கிறது. பெனே என்பது நீளமாக வெட்டப்பட்ட குழல் போல இருக்கும் பாஸ்தா. அது இல்லாமல் லிங்வீனி, ஏஞ்சல் ஹேர், ஸ்பிரிகதி இப்படி பலவகை பாஸ்தா இருக்கிறது. அதுஅது அதற்கான சேர்மங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். என் தோழி ஐரோப்பா முழுவதும் சுற்றி வந்தாலும் இப்படி ஆய்ந்து அறிந்து எதையும் செய்ததில்லை. போகும் இடத்தில் சில போட்டோக்கள். அதை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டால் போதும் என்று வாழும் இக்காலத்தவள். ஆனால் கொண்டாட்டம் என்பது தேடலில் தானே இருக்கிறது!

இப்படி வயிறு முட்ட சாப்பிட்டப் பின் டிஸர்ட் சாப்பிட நகர்ந்தோம். டிஸர்ட் என்றால் எனக்கு எப்போதும் விக்டோரியா கஃபே தான். எனக்கு இந்தக் கடை எவ்வளவு பிடிக்கும் என்றால், என் சிறுகதை தொகுப்பான காஃபி சூனியக்காரியின் முகப்புப் படம் இந்தக் கடையில் இருக்கும் விண்டேஜ் காஃபி விளம்பர போஸ்டரில் இருந்து எடுத்தது தான். பாஸ்டன் சென்றால் நான் இந்தக் கடைக்கு வரமால் செல்லமாட்டேன். இங்கு கிடைக்கும் டெரிமசூவுக்கு இணையாக பிரம்பஞ்சத்தில் ஏதும் இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்கும். இதைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். அன்றும் நாங்கள் டெரிமசூ சாப்பிட்டோம். ஆச்சரியமாக தோழிக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக பாஸ்டனை முன்னிட்டு நாங்கள் உணவு விஷயத்தில் ஒத்தக் கருத்துக்கு வர முடிந்தது.

விக்டோரியா கஃபேவுக்கு அருகில் தான் மைக்’ஸ் பேஸ்ட்ரி இருக்கிறது. இங்கு கிடைக்கும் கனோலிக்கு இணை இதே தெருவில் இருக்கும் மார்டன் பேஸ்ட்ரியில் மட்டுமே கிடைக்கும். நம்மூர் யூடியூபர்கள் ஊர் ஊராக சென்று பிரபலமான உணவகங்களில் உண்டு கருத்து சொல்வது போல, உலகளவிலிருந்து யூடியூபர்கள் மைக்’ஸ் பேஸ்ட்ரிக்கும் மார்டன் பேஸ்ட்ரிக்கும் வந்து எந்தக் கடையின் கனோலி சுவையாக இருந்ததென்று கருத்து சொல்வார்கள். எந்தக் கடை எனக்கு பிடித்திருந்தது என்று சொல்வதற்கு முன்பாக கனோலி என்றால் என்ன என்று பார்த்துவிடலாம். கனோலி ஒரு பிரபலமான இத்தாலிய இனிப்பு வகை. பொறித்தெடுக்கப்பட்ட குழல் போன்ற மைதா ஓட்டில் இனிப்பூட்டப்பட்ட ரிக்கோட்டா சீஸ் நிறைத்து தருவார்கள். ரிக்கோட்டா சீஸ் மென்மையாகவும் வெளிப்புற ஓடு மொறுமொறுப்பாகவும் இருக்கும். இனிப்பூட்டப்பட்ட ரிக்கோட்டா சீஸில் சாக்லெட் சிப்ஸ், பாதம், பிஸ்தா போன்ற பொருள்கள் சேர்த்தால் இன்னும் சுவையை கூட்டும். என்னுடைய பிறந்த நாளுக்கு எனக்கு மார்டன் பேஸ்ட்ரியிலிருந்து ஐந்து கனோலி வாங்கிக் கொள்ள பரிசு கூப்பனை ஒருவர் பரிசளித்தார். ஒன்று வாங்கி சாப்பிட்டதும் அசந்து போய்விட்டேன். தேவர்கள் அமிர்தம் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? பூலோகத்தில் அமிர்தம் சேர்க்கப்பட்ட ஒரே இனிப்பு கனோலியாக தான் இருக்க முடியும் என்று தோன்றியது. அதுவே மிதமான சூட்டில் சாப்பிட்டால் மதுரமாக இருக்கும். ஆனால் என்னால் ஒன்றுக்கு மேல் சாப்பிட முடியாது. திகட்டிவிடும். தோழியுடன் சென்ற அன்று மைக்’ஸ் மற்றும் மார்டன் இரண்டு கடைகளிலிருந்தும் கனோலி வாங்கிக் கொடுத்தேன். இந்த மாதிரியான கனோலிகளை இத்தாலியிலும் சாப்பிட்டதில்லை என்று சான்றுதல் அளித்தாள். சில முறை மைக்’ஸ் பேஸ்ட்ரிக்கும் மார்டன் பேஸ்ட்ரிக்கும் சென்று வந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்: இரண்டுமே ஒப்பற்ற கனோலிகளை வழங்குகின்றன. மைக்’ஸ் பேஸ்ட்ரியின் கனோலியின் அளவு கொஞ்சம் அதிகம். விலையும் சற்று குறைவு. மற்றபடி இரண்டு கடைகளும் ஒன்றுக்கொன்று சலித்ததில்லை.

எல்லாம் சொல்லிவிட்டு தோழியின் பெயரை சொல்லாமல் இருந்தால் சரியாக இருக்குமா? வெலிட்டா மிராண்டா. மீண்டும் ஜெர்மனி சென்றுவிட்டாள். ஊருக்கு போகும் முன் எனக்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் குடிக்கப்படும் ஜெர்மன் ஒயின் வாங்கிக் கொடுத்தாள். மற்ற ஒயின்களை போல அல்லாமல் இதை கொஞ்சம் சூடுபடுத்தி குடிக்க வேண்டும். குளிருக்கு இதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனிக்கு வர சொல்லி அழைப்பும்விடுத்திருக்கிறாள். பாஸ்டனில் இப்படியெல்லாம் இருகாது என்று ஜெர்மனிக்கு சென்று வெலிட்டாவிடம் சொல்ல வேண்டும் என்பது தான் என் இப்போதைய திட்டமாக இருக்கிறது.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button