
ஜனத் திரள் படித்துறையில் தளும்பிக் கொண்டிருந்தது.
அம்மா கூவினாள். “மாயா, கூட்டம் நிறைய இருக்கு. அம்மா கையை கெட்டியா பிடிச்சுக்கோ.”
மாயாவுக்கு அம்மாவின் கையை உதறவேண்டும். மீனைப் போல் நதியைக் கிழித்து நீந்த வேண்டும். அம்மா இவள் மனசைப் படித்தவள் போல் சிரித்தாள். “இப்ப வேண்டாம். கூட்டம் நிறைய இருக்கு. நாளைக்கு.. என்ன சரிதானே?”
இவர்களுக்கும் இடம் கிடைத்தது. அம்மா உற்சாகமாய் இவள் கையில் மஞ்சள் கயிறு கட்டினாள். அம்மா செய்யும் ஆடிப்பெருக்கு அரிசியின் ருசி அலாதி. தேங்காய், வெல்லம் கலவை மிக நேர்த்தி. திடும்மென கூட்டம் மிரண்டது. யாரோ கத்தினார்கள். ”ஐயோ என் பிள்ளை.”
நீரின் மட்டத்தில் ஒரு தலை தெரிந்த்து. மாயா அம்மாவின் கையை உதறினாள். படிகளில் தாவி ஓடி நீரில் குதித்தாள். கைகளில் அந்தக் குழந்தையின் கூந்தல் சிக்கியது. நீரின் வலிவை எதிர்த்து நீந்தினாள். ”மாயா” அம்மா அலறினாள். தடக்கென தூக்கம் கலைந்தது. உடல் வியர்த்திருந்தது. பக்கத்தில் அம்மா அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தாள். இனி தூக்கம் வராது. இந்தக் கனவு அடிக்கடி வந்து கொண்டேயிருக்கிறது. மொபைலில் மணி பார்த்தாள். 5.00. எழுந்து கொண்டாள்.
***
இவளைப் பார்த்ததும் வாசு ஆச்சர்யப்பட்டான்.
“என்ன இவ்வளவு சீக்கிரம்?”
”வழக்கம் போல் மகாநதி கனவு.”
சிரித்தான்.
”சரி சொல்.”
”இன்னைக்கு கலெக்டரப் பாக்கணும்.”
“ஞாபகமிருக்கு.”
“ஒரு அம்பது பேர் சேர்ந்து ஊர்வலமாய்ப் போய் பாக்கமுடியுமா?”
“என்ன திடும்னு இப்படி சொல்றே? அதுக்கு பர்மிஷன் வாங்கணும்.”
”வாங்க முடியாதா?”
“கேட்டுப் பாக்கலாம். ஆனா..”
“என்ன ஆனா..ஆவன்னா..?”
“கலெக்டர் நட்புரீதியில்தான் நம்மைச் சந்திக்க சம்மதம் சொல்லிருக்கார்.”
“தெரியும். ராபர்ட் ஒண்ணும் சொல்ல மாட்டார்.”
“கலெக்டர் உன் நண்பராயிருக்கலாம். அதுக்காக அவரைச் சங்கடப் படுத்தணுமா? எல்லாத்தையும் நீ உணர்வுபூர்வமாகவேப் பார்க்கிறாய் மாயா.”
“அய்யா சாமி.. ஆரம்பிச்சிடாதே உன் சங்கை. சரி நீ, நான், கயல், ஜமால். ஓகேவா?”
வாசு தலையசைத்தான்.
***
கலெக்டர் சிரித்தார்.
“ஸாரி மாயா. நல்லூர்ல ஒரு பிரச்னை. அங்க போய்ட்டு வர்றேன். அதான் லேட்.”
அமர்ந்தார்கள்.
“என்ன ஆச்சு?”
“ஜாதி மாறி காதல் திருமணம். திருமணம் முடிந்த பத்தாவது நிமிஷம் பையனை வெட்டிக் கொன்னுட்டாங்க.”
“கடவுளே.. இதெல்லாம் எப்ப மாறப்போகுது?”
”சரி சொல்லுங்க. என்ன விஷயம்?”
“நாளைலேர்ந்து எங்க உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறோம்.”
“நல்லா யோசிச்சு செய்ங்க.. சாகும்வரை உண்ணாவிரதம்கிறது சாதாரண விஷயமில்லே. அது மட்டுமில்லே. அது இங்க சாத்யமும் கிடையாது.”
“நம்ம தேசத்திற்கு இது ஒன்றும் புதுசில்லை. எங்க உண்ணா விரதத்தை காந்தி படித்துறையில் நட்த்தப்போறோம்.”
“உன்னோடது ஒரு காந்தியக் கனவென்று சொல்லலாம். இன்றைய சூழலில் இதற்கு இடமில்லை.”
“ரொம்பக் குரூரமாய் பேசற ராபர்ட்.”
“இல்லை. பிராக்டிகலாய் பேசறேன்.”
“எது பிராக்டிகல். நம்மோட மகாநதி ஒரு காலத்தில இரு கரையையும் தொட்டுக் கொண்டு தளும்ப, தளும்ப ஒடியது. நீயும் பாத்திருக்கே தானே?”
கலெக்டர் அமைதியாய் இருந்தார்.
“இன்று எப்படி இருக்கிறது? தொழிற்சாலையின் கழிவுகளைக் கொட்டும் சாக்கடையாய் மாறி தேங்கி நிற்கிறது. குடிநீர் பாழ்பட்டு விட்டது. நிலத்தடிநீர் விஷமாய்டுச்சு. விவசாயமும் போச்சு. எத்தனை குழந்தைகள், முதியவர்கள் நீரின் பாதிப்பால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது ராபர்ட்?”
“உன் கோபம் நியாயமானது. தொழிற்சாலை அதிபர் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளை. அதுமட்டுமில்லாம, ஆலையை ஆய்வு செய்ய வந்த கமிட்டியையும் விலை பேசிவிட்டார்கள். அவர்களுக்கு ஆதரவாக ரிப்போர்ட் கொடுக்கப் போறாங்க.”
“எப்படி?”
”காசு, பணம், துட்டு, மணி.. மணி.”
“தொழிலாளிங்க…?”
“அங்க வேலை செய்யற தொழிலாளிகளையும் உங்களுக்கு எதிராகத் திரட்டியிருக்காங்க. நீங்க சாகும்வரை உண்ணா விரதமிருந்தால் அரசாங்கம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. மணிப்பூர்ல ஷர்மிளாவுக்கு நடப்பது போல் உங்களை அரெஸ்ட் செய்து வலுக்கட்டாயமாக உணவு ஏற்றும்.”
மாயா மெளனமாயிருந்தாள்.
“ஸாரி மாயா.”
எழுந்தாள்.
***
உள்ளங்கை அகலத்திற்கு சிகப்பு ரோஜா பூத்திருந்தது. பனியில் அதன் இதழ்கள் நனைந்திருந்தன. மாயா தலையைக் குலுக்கிக் கொண்டாள். அவள் உதடுகள் முணுமுணுத்தன.
“மாயா” – அம்மா குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.
“அய்…ரோஜா சூப்பராப் பூத்திருக்கே!” சொல்லிக் கொண்டே கைநீட்டி பறித்தாள்.
மாயா பதறினாள். “எவ்ளோ அழகாயிருந்தது. சடக்குன்னு பறிச்சிட்டியே?”
“தலையைக் காட்டு.”
அவள் தலையில் செருகினாள்.
***
ராபர்ட் வியர்வை துடைத்தான். மணி பார்த்தான். ஏழரை. லேப்டாப் திறந்தான். முதல் மெயில் மாயாவிடமிருந்து.
டியர் ராபர்ட்,
என் போராட்டத்தின் வடிவத்தை மாற்றியிருக்கிறேன். இதைக் கோழைத்தனம் என்று முடிவு பண்ணிவிடாதே. இது நான் தைரியமாக எடுத்த முடிவு. நம் மகாநதியின் மரணத்தின் முன் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எங்கள் போராட்டத்தை காந்தியக் கனவென்று நீ கேலி செய்யலாம். மக்கள் திரண்டால் எதுவும் சாத்தியம் என்று நமக்குக் கற்றுக் கொடுத்ததே அவர்தானே. காந்தி படித்துறையில் இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன். நீர் நிலைகள் கொல்லப்படும் இடத்திலெல்லாம் இதனை மற்றவர்கள் தொடர்வார்கள். பத்திரிக்கைகளுக்கும் இதனைத் தெரியப்படுத்தியிருக்கிறேன். அரசாங்கம் இதையும் மறைக்கப் பார்க்கலாம். தோழா.. நீ அதனை எதிர்த்து நின்று வெளிப்படுத்து. தேசம் அறியட்டும். வெற்றி நமதே.
அன்புடன் மாயா.
மெயில் வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது.
”கடவுளே.”
லேப்டாப் நழுவ எழுந்து ஓடினான்.
***
காந்திபடித்துறை. ஆளரவமின்றி இருந்தது. கட்டைச் சுவரில் ஏறி நின்றாள். அம்மா அடிக்கடி சொல்வாள். ‘இது நீ குழந்தையாயிருந்த போது கட்டிய தொட்டில் கயிறு. அப்பா ஞாபகமாய் இதப் பத்திரப் படுத்தியிருக்கிறார்.’ அந்தக் கயிறின் ஒருமுனை அவள் இடுப்பைச் சுற்றியிருந்தது. மறுமுனையை எடுத்து கால்கள் இரண்டையும் இறுக்கினாள். சுற்றி முன்பக்கமாகக் கொண்டுவந்து கைகளுக்குள் செருகிக் கொண்டாள். நதி கலங்கலாய் தேங்கி நின்றுகொண்டிருந்தது. கண்கள் நிரம்பி வழிய உயரத்திலிருந்து நதியில் சரிந்தாள்.
நீருள் மூழ்கி நிலத்தைத் தொடும் போது கால்கள் அனிச்சையாய் உதறின. கயிறு இறுக்க அமில நீர் அவள் மூக்கிலும், வாயிலும் புகுந்தது. அவள் உடம்பு உதறி மேலெழும்பி நீர்பரப்பிற்கு வந்து மீண்டும் நிலம் நோக்கி விரைந்தது.
மாயாவின் கூந்தலிலிருந்து விடுபட்ட சிகப்பு ரோஜா நீரின் மேல் மட்டத்தில் ஒரு சிகப்புக் கனவு போல் மிதக்க ஆரம்பித்தது.
**********