இணைய இதழ்இணைய இதழ் 76சிறுகதைகள்

சம்பத் பெரியப்பா – கார்த்திக் பிரகாசம்

சிறுகதை | வாசகசாலை

ரு வார்த்தைமனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுமா.? கோபத்திலோ, ஆதங்கத்திலோ போகிற போக்கில் எச்சிலை போலத் துப்பிவிட்டுச் செல்லும் வார்த்தைகளுக்கு ஓர் வாழ்வையே அபகரிக்கும் சக்தி இருக்கிறதா.?

வெகு நாட்களுக்குப் பிறகு சம்பத் பெரியப்பாவை வீட்டு வாசலில் காணும் போது மனதிற்குள் இப்படித்தான் தோன்றியது

ஐந்தடிக்கும் குறைவான உயரம். பதுங்கு குழியிலிருந்து எட்டிப் பார்ப்பது போன்ற ஆந்தை விழிகள். நித்தம் அசைபோட்டவாறிருக்கும் வெற்றிலை பாக்கு வாயில் சாயம் போன உதடுகள். பொத்தான்கள் தொலைந்து கந்தலான சட்டை. தோளில் ஒரு வெள்ளை நிறத் துண்டு. துண்டின் நிறம் வெள்ளைதான் என இன்னும் சில நாட்களுக்கு நம்பலாம். அண்டர்வேர் தெரிய வேட்டியைத் தூக்கிக் கட்டியிருந்தார். பெண்கள் ஓட்டும் பார் இல்லாத கவர்மெண்ட் சைக்கிள். அக்காவினுடையதாக இருக்க வேண்டும். இந்த வருடத்தோடு கல்லூரி படிப்பை முடிக்கிறாள். உடைந்த சீட் மேலும் உடைந்து விடாமல் இருக்கச் சிகப்புத் துண்டால் இறுக்கிக் கட்டியிருந்தது. சைக்கிள் சுவரில் சாய்ந்து நின்றது. ஸ்டாண்டு இல்லை.

அவருக்கு எங்களின் வீடு தெரிந்திருக்கிறது என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. நினைவு தெரிந்து ஒரு நாளேனும் வீட்டிற்கு வந்ததில்லை. எங்களின் வீடு என்றில்லை. பொதுவாகவே எந்த உறவுக்காரர்களின் வீட்டிற்குமே அதிகம் செல்பவரில்லை. மனித உறவுகளிடமிருந்து தள்ளி இருந்தே பழக்கப்பட்டவர். இத்தனைக்கும் உடன் பிறந்தவர்கள் மொத்தம்ஏழு பேர்.‌ அப்பாவிற்கு நேர் மூத்தவர். அவரே வலிந்து உண்டாக்கிக் கொண்ட வளையம் என அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். மனிதர்களிடம் தொடர்ந்து உரையாடுவதில் அவருக்கு ஒருவித அசூயை இருந்தது. எவருடனும் அளவளாவி, நெருங்கிய நட்பு பாராட்டி குடும்பத்தில் ஒருவரும் கண்டதில்லை. சிவந்த வாயில் வெற்றிலை பாக்கு ஊறிக்கொண்டே எந்நேரமும் கடுகடுவென இருக்கும் முகம், மற்றவர்களையும் எளிதில் அவரிடம் அண்டவிடாது. தொழில் ரீதியான சில குறுகிய நட்பு வட்டங்கள் மட்டுமே. தொழிலில் கில்லாடி. ‘சொல் சுத்தம்னா சம்பத்துதான்எனப் பஜாரில் பேசிக் கொள்வார்கள் என அப்பா அடிக்கடி சொல்லுவார்.

***

புஷ்பா அத்தை. அப்பாவிற்கு மூத்தவள். பெரியப்பாவிற்கு இளையவள். பவானி ஆற்றங்கரையின் ஈரத்தில் பசியாறியவாறிருக்கும் குமாரபாளையம் அவள் வாக்கப்பட்ட ஊர்.‌ மாமா லாரி டிரைவர். இரண்டு மகள். ஒரு மகன். இளையமகளுக்கும், மகனுக்கும் கிட்டத்தட்ட பதிமூன்று வருட வித்தியாசம். ‘பொம்பள புள்ள வயசுக்கு வந்த வீட்ல அம்மாக்காரி புள்ளப் பெக்கறாளாம் புள்ள.. கொஞ்சக்கூடவும் கூச்சநாச்சம் இல்லாம வெக்கம் கெட்டவ. ஆம்பளதான் கூப்புடுறான்னா படுக்கறதுக்கு முன்னாடி பொம்பளை இவளுக்கு எங்க போச்சு புத்தி?’ என்று சொல்லி, அத்தை உண்டானநாளிலிருந்து அவளுடன்பேசுவதை, உறவு கொண்டாடுவதை அடியோடு நிறுத்திவிட்டார்அப்பா. பெரும்பாலான உறவினர்களும் பழக்க வழக்கத்தைப் பட்டும் படாமல் நிறுத்திக் கொண்டனர். வீட்டு விஷேசங்களுக்கு அழைப்பதைத் தவிர்த்தனர். ஆனால், பெரியப்பாவிற்கு அத்தையின் மீது அதீத பிரியம். “அவளுக்குத் திராணி இருக்கு. ஒடம்புல வலுவிருக்கு பெத்துக்குறா. இவனுங்களுக்கு என்ன வந்துச்சாம். ஏதோ இவனுங்க வயித்துல பத்து மாசம் சொமந்து, பெத்தெடுத்து பீ மூத்திரம் கழுவுற மாதிரி அலுத்துக்குறானுங்கஎன அத்தைக்கு ஆதரவாய் நின்றார். பெரியம்மாவின் வசைகளையும் மீறி, ஊரார்களின்பேச்சைத் துச்சமாக்கவே மருமகப் பிள்ளைக்குத் தாய் வீட்டு சீர்செய்து அமர்க்களப்படுத்தினார்.

***

வேட்டியின் ஒருபக்க நுனியை உள் டிராயர் முழுவதும் தெரியுமாறு மார்வரை தூக்கி அக்குளில் பிடித்துக் கொண்டு , வாயிலிருந்து ஒழுகும் செந்நிற வெற்றிலை கரைசலைத் துடைக்காமல்,

பத்து ரூவா குடு, டீ சாப்ட

ஒனக்கு இதே வேலையா போச்சு.‌ அன்னிக்கு ஒருமுறை கேட்ட.. தந்தேன். பெறவு என்னடானா பாக்கிறப்பலாம் பத்து குடு , அம்பது குடுன்னு கைய நீட்ற குடுத்து வச்சவனாட்டாம். இதெல்லாம் நல்லா இல்ல சம்பத்துகடும் கோபத்தை மறைத்துக் கொண்டு பொறுமையாகச் சொன்னார் கோபால் மாமா

டேய்.. குட்றா. என் தம்பிகிட்ட வாங்கித் தரேன்எனப் பேசிக் கொண்டே கண்இமைக்கும் நொடியில் கோபால் மாமாவின் மேல்பாக்கெட்டில் கையை விட்டிருக்கிறார்

சட்டென்று கூட்டத்தில் வேட்டியை உருவியதைப் போல் தடுமாறிய கோபால் மாமா, பெரியப்பாவின் கன்னத்திலேயேபளார்என அறைந்தார். சற்றும் எதிர்பாராத தாக்குதலில் கதிகலங்கிப் போன பெரியப்பா தலை குனிந்து நின்றிருக்கிறார். வியாபாரம் முடித்து பஜாரிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் கண்ட அப்பா, “ஏன்டா மானத்த வாங்குற.. தாயோளிஎனப் பெரியப்பாவிடம் கையோங்க அருகிலிருந்தவர்கள் தடுத்து விலக்கியிருக்கின்றனர்.

சம்பத்து.. மொதல்ல நீ கெளம்புஎனக் குரல்கள் எழ, எவ்வித சலனமுமின்றி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு மௌனமாகச் சென்றிருக்கிறார்.

ஆத்திரத்தில் கண்கள் சிவந்து கரங்கள் நடுங்க வீட்டிற்கு வந்த அப்பா, “இவனுக்கா இப்படியொரு நெலம. பிச்சைக்காரனாட்டாம் வரவன் போறவன்டலாம் கை ஏந்திட்டு திரியிறானே. பஜார்ல இவன் பேரக் கேட்டாலே மரியாதையா ஒதுங்கி போனவன்லாம் இன்னிக்கு துடுக்கா பாக்கறானுங்க. எளக்காரமா பேசுறானுங்க. மானம் மரியாத போய் இப்படி பைத்தியக்காரனா அலையறதுக்கு பேசாம செத்து தொலச்சிட்டான்னாக் கூட எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும். என்ன இருந்தாலும் கூடப் பொறந்தவன நடுரோட்டுல நாலு பேரு முன்னால அடிக்க கையோங்கிட்டேனேஎனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். நன்றாக நினைவுள்ளது. அன்று அம்மா எவ்வளவு கெஞ்சியும் அப்பா சாப்பிடவே இல்லை

***

மகன் பிறந்து ஆறு வருடங்களுக்குப் பின் மூத்த மகளுக்குக் கல்யாணம் செய்து பார்க்க ஆசைப்பட்டது அத்தை

வாழ்வின் நீரோட்டத்திலிருந்து தன்னை கழித்துவிடப்போகும் பெரும் சுழலின் ஆபத்து அறியாமல் தாமாக முன்வந்து வரன் தேடும்பொறுப்பை ஏற்றார் பெரியப்பா. சம்பத் என்னும் சாதாரண மனிதனின் அழிதலுக்கான ஆரம்பப் புள்ளி இங்கிருந்துதான் தொடங்கியது. தன்னை இழக்க வைக்கும் சூனியம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. மேலும் எந்தவொரு முடிவுக்குமே ஆதர்சமான தொடக்கம் உண்டு

அடுத்த நாளே வரன் தேடுவதில் மும்முரமாக இறங்கினார். தொழிலைக் குறைத்துக் கொண்டு, தங்கையின் மகளுக்காக முழுக்கவனமாய் வரன் தேடி ஊர் ஊராக அலைந்தார். ‘தான் பெத்த மகளுக்குக் கூட அப்படி அலஅலன்னு அலையலையே இந்த மனுஷன்‘ – இன்றுவரை பெரியம்மா புலம்பி கண்ணீர் சிந்தும்.

ஓமலூர். தாத்தா பாட்டியின் பூர்வீகம். பெரியப்பா, அத்தை அப்பா பிறந்து வளர்ந்ததெல்லாம் ஓமலூரில்தான். பின்கட்டில் கிணற்றுடன் பெரிய வீடு. பஸ் ஸ்டாண்டிலிருந்து குறுக்கு வழியில் சென்றால் பத்து நிமிடத்திற்குள் போய்விடலாம். இப்பொழுதும் சேலத்தில் ஒருசிலர் என்னைஓமலூரான்என்று கூப்பிடும் வழக்கமுண்டு. தாத்தா, பாட்டி உயிரோடு இருக்கும் வரை உயிர்ப்போடு இருந்த வீடு, அவர்களின் இறப்பிற்குப் பிறகு, காலாவதியான நினைவுச் சுவடுகளோடு வெறும் சொத்தாக உருமாறி பலரின் கைமாறிவிட்டது

மனிதனின் ஒரு பகுதி காலாவதியான நினைவுக் கழிவுகளால் நிரம்பியிருக்கிறது. அதனைக் காலம் தவறி உயிர்ப்பிக்கும் போது மனிதன் அவமானத்தின் ராஜ்ஜியத்தில் கொடூரமாக வீழ்த்தப்பட்டு சிறுகச் சிறுக உயிரை விடுகின்றான். மனதின் ஆழத்தில் சலனமில்லாமல் புதைந்திருந்தஅணுக்கமான ஏதோவொன்று சமயம் பார்த்து வெகுண்டெழுந்ததை போல ஒருநாள் காலை பத்து மணிக்கெல்லாம் ஓமலூர் சென்று, நேராகப் பூர்வீக வீட்டின் வாசல் திண்ணையில் போய் அமர்ந்திருக்கிறார்.

அப்போவ்..‌ உள்ளக்க இருக்கியா? போனவாரம் ஏத்திவிட்ட திப்பி லோடுக்கு பெருந்துறை தனபால் கமிஷன் கொடுத்தானா இல்லயா. இதுக்குத் தான் லோடு ஏத்தும் போதே வாங்கிறணுன்றது. ஐநூறு ரூபா காசுக்கு எத்தன தடவ போன் அடிக்கிறது. ஷ்ஷ்ஷ்பா.. சுடு வெயில்ல நனஞ்சி போய் வந்திருக்கேன். இந்தம்மா எங்கபோச்சு? மோர் இருந்தா கொண்டாமாகடகடவெனபேசிவிட்டு தூணில் சாய்ந்தவர் நன்றாக உறங்கிவிட்டார்

வீட்டுக்காரர்கள் கவனித்து எழுப்ப, “என் வீட்ல நீங்கலாம் என்ன பண்றீங்க. யார் நீங்க. முதல்ல எல்லாரும் வெளிய போங்க..” விளையாட்டு பொம்மையைத் தொலைத்துவிட்டு, அதே போன்ற வேறொன்றைப் பார்க்கும் போதெல்லாம் தனதென நினைத்து பரிதாபமாக வெம்பிடும் சிறு குழந்தையாட்டம் கத்தியிருக்கிறார். கூடியிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் முழிக்க, விறுவிறுவென வீட்டினுள் சென்றவர், கையில் கிடைத்தையெல்லாம் எடுத்து வந்து தெருவில் வீசியெறிந்தார்.

யோவ். உனக்கென்ன பைத்தியமா?” 

யாரு பைத்தியம்.. நீதான்டா பைத்தியம்கேட்டவரின் சட்டையைப் பிடித்து, வெற்றிலை கரைசலின் எச்சிலை முகத்திலேயே காறி உமிழ்ந்திருக்கிறார். அதுவரையில் கொஞ்சமேனும் பொறுமையாய் பேசியிருந்தவர்கள், தெருவில் தள்ளி அடித்து உதைக்க, உதடுகள் கிழிந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. அடிகளும், உதைகளும் மேகம் அவிழ்த்துவிட்ட அடைமழையைப் போல் தொடர்ச்சியாய் விழ, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இதற்காகவே காத்திருந்தது போல் அமைதியாக அனைத்தையும் வாங்கியிருக்கிறார்.

ஏவிடும் வலிக்கு எதிர்வினை புரியாமலிருப்பவனை எவ்வளவு காலம்தான் துன்புறுத்த முடியும். அடிகள் விழுவது நின்றவுடன் அவராகவே சிரமத்துடன் எழுந்து நின்று, தாங்கி தாங்கி நடந்து போய் திண்ணையில் அமர்ந்தார். பெரும்புயலில் சேதமடைந்த வாழைத் தோப்பை போல் உருக்குலைந்திருந்தது அவருடைய தோற்றம். விஷயமறிந்த ஊர்க்காரர்கள் வந்து பெரியப்பாவின் பாவமான நிலையைப் பார்த்து பேச்சுக்குக்கூட ஆறுதல் சொல்ல முடியாமல், பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கின்றனர்

அன்று நடந்த தகராறில், முகத்திலும், உடலிலும் இரத்த சிராய்ப்புகளோடு கிழிந்த வேட்டி சட்டையுடன் வீடு வந்து சேர்ந்தவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியம்மா, அதன்பின் அடிக்கடி வெளியே செல்லாமல் பார்த்துக் கொண்டது.

***

பெரியப்பாவின் தீவிர தேடலுக்குப் பின்னர் மணியனூரில் ஒரு வரன் கிடைத்தது. முறுக்கு விற்கும் சரசாவின்சின்ன மகன். அப்பா இறந்து நான்கு வருடமாகிவிட்டது. மனைவி, பிள்ளைகளோடு பெரிய மகன் கோயம்புத்தூரில் வசிக்கிறான். மாப்பிள்ளை பையனுக்கு ரேஷன் கடையில் வேலை. பிக்கல் பிடுங்கல் இல்லாத நல்ல குடும்பம். எல்லாருக்கும் ஏக திருப்தி. பெரியப்பாவை மெச்சிக் கொண்டது அத்தை. ‘எங்க அண்ணன் மட்டும் இல்லனா…’ மேற்கொண்டு வார்த்தை வராமல் பெருமிதத்தில் கண்ணீர் சிந்தியது. பந்தி முதல் பந்தக்கால் வரை சின்னச் சின்ன வேலையையும் பெரியப்பாவே முன்னின்று செய்தார். அவரின் மேற்பார்வையிலேயே இரு குடும்பங்களின் சடங்கு சம்பிரதாயங்களும் அரங்கேறின. ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் மூத்தவன் என்ற முறையில் வரவேற்பு முதல் வழியனுப்புவது வரை பம்பரமாகச் சுழன்றார். பெற்ற மகளின் கல்யாணத்தைப் போல முன்னின்று செய்த பெரியப்பாவின் பொறுப்பினால் அனைவரும் மகிழும் வண்ணம், மிகச் சிறப்பாக நிகழ்ந்தது கல்யாணம். புகுந்த வீட்டுக்குப் பிரிந்து செல்லும் முன் மகள் எந்த அளவுக்கு அழுதாளோ , அதைவிடத் தீர்க்கமாகப் பெரியப்பாவைக் கட்டி அழுதாள் அத்தை. கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் பெரியப்பாவும் அழுது தீர்த்தார். “பாசத்துல கிழக்குச் சீமையிலே அண்ணன் தங்கச்சி கணக்கா இருக்கீங்களேஎனக் கிண்டல் செய்தவாறே இரண்டு பேரையும் ஒன்றாக நிற்க வைத்து அம்மாவும், பெரியம்மாவும் திருஷ்டி கழித்தனர்.

***

ரேஷன் கடையில வேலைன்னு சொன்னதெல்லாம் சுத்தப் பொய். அவன் வேல வெட்டிக்கே போறதில்ல. அம்மாக்காரியும் மகனுமா சேந்து திட்டம் போட்டு நம்மள நல்லா ஏமாத்திருங்காங்க. மொத ராத்திரியோட சரி. அதுக்கப்புறம் ஒருநாள் கூட ஒன்னா படுக்கவே இல்ல. தினமும் குடிச்சிட்டு நடுராத்திரிக்குத்தான் வரான். வாய்ல எந்நேரமும் பாக்கா போட்டு மென்னுக்கிட்டே இருக்கான் சனியன். பக்கத்துல போகவே முடியல. ஒரே நாத்தம். இதுவரைக்கும் ஒரு பூவோ பொடவையோ வாங்கித் தரல. வெளிய எங்கயும் கூட்டிட்டு போனதில்ல. இவ்வளவு ஏன் ஆசையா ஒரு முத்தம் கூட தந்ததில்ல. இந்த லட்சணத்துல அம்மாக்காரி இல்லாத குறையெல்லாம் சொல்லி தெனமும் என்கிட்ட சண்ட வளத்துட்டு இருக்கா. உப்பு பத்தல; கொழம்புல காரம் கம்மி; வீட்ட சுத்தமா பெருக்க தெரில ஒரே மசுரா இருக்குன்னு எதற்கெடுத்தாலும் என்கிட்ட ஆட்டிகிட்டு வந்தர்றா. வயித்துல புள்ள உண்டாவுல, புள்ள உண்டாவுலனா எப்படி ஆவும். கூட படுக்கவே மாட்டிக்குறான். பெத்த புள்ளய நீயெல்லாம் ஒரு ஆம்பளையானு கேக்க வக்கு மயிறு இல்ல

கட்டியவனுக்கும் மாமியாக்காரிக்கும் சாபம் விட்டபடி, ஏகப்பட்ட புகார்களுடன் எட்டு மாதங்களில் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். முதலில் மகளைச் சமாதானப்படுத்திப் புகுந்த வீட்டிற்கு அனுப்பவே முயன்றது அத்தை. ஆனால், மகள் சொன்னதெல்லாம் கேட்டுவிட்டு அதிர்ச்சி அடைந்த அவள் ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கே சென்றாள்

வா போகலாம்” 

எங்க?”

உன் மாமியார் வீட்டுக்குப் போய் நாக்க புடுங்கிற மாதிரி கேக்றேன்

அந்த மயித்துக்கு நீயே சோத்துல வெசத்த வெச்சிக் குடுத்துரு. ஒரேயடியா போய் சேந்தறன். செத்தாலும் சாவனே தவிர இனிமே அந்த வீட்டு வாசப்படில கால் வைக்கமாட்டேன்” – ஒப்பாரி வைத்தாள்.

ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தன்னை மறந்தவளாக, முடியை அள்ளிக் கொண்டையிட்டு மகளைக் கூட்டிக்கொண்டு அண்ணன் வீட்டிற்குக் கிளம்பினாள்

என் பொண்ண பாளுங் கெணத்துல தள்ளிட்டானே. உம்மேல பாசம் வச்சத தவிர நான் என்னடா பாவம் பண்ணேன். இப்படி என் குலக்கொடி செதஞ்சி போய் நிக்கிதே. நீ நல்லா இருப்பியா. நாசமத்து போக. உனக்கும் ஒரு பொண்ணு இருக்கே அதோட வாழ்க்கை ஒண்ணும் இல்லமா நாசமாப் போய்டும். வயிறெஞ்சி சொல்றேன். நீயலாம் நாசமா போய்டுவடாஆற்றாமையின் உச்சக்கட்ட வேதனையைப் பெரியப்பாவின் மீது சொற்களால் ஏவினாள். என்ன நடக்கிறது.. ஏது நடக்கிறது எனச் சுதாரிப்பதற்குள் கோவத்தில் வந்த சாபங்களை மண்ணாய் அள்ளி பெரியப்பாவின் மீது விட்டெறிந்துவிட்டுக் கிளம்பினாள். அழுது கொண்டு அத்தையின் பின்னாலேயே அக்காவும் சென்றாள்

அன்றாடம் வீட்டில் உண்டாகும் சிறுசிறு பிரச்சினைகளுக்கெல்லாம் தெருவுக்கே கேட்கும்படி கோபத்தில் விஸ்வரூபமெடுத்து ஆடும் பெரியப்பா மௌனமாய் நிற்பதை அக்கம்பக்கம் கூடிநின்று ஆச்சர்யமாய் பார்த்தனர். பொங்கிய கண்ணீர் சிந்திடாமல் கண்களிலேயே தேங்கி நிற்க வீட்டிற்குள் வந்தவர் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியே உருவாய்பனிபோல உறைந்திருந்தார். துளிஅசைவும் இல்லை. ஒருவேளை ஆத்திரத்தில் திரும்பக் கத்தி சண்டையிட்டிருந்தாலோ, இவ்வளவு தரக்குறைவாய் உடன் பிறந்தவளே பேசி மானத்தை வாங்கிவிட்டாளே என ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியிருந்தாலோ சுயத்தை இழந்திருக்கமாட்டார் என அவ்வப்போது தோன்றும். அத்தை அவரை மதித்து எதுவும் சொல்லவில்லை. அத்தனை முறை வீட்டிற்குள் அழைத்தும் உள்ளே வராமல் ஊரையேக் கூட்டிக் கத்தி கூப்பாடு போட்டுச் சென்றதோடு சரி. திரும்ப ஒரு போன்கூட இல்லை. அவரும் எந்த விளக்கமோ மற்றவர்களுக்கு எதையும் புரிய வைக்கவோ முயலவில்லை. போட்டது போட்ட வாக்கில் இருக்க, விளக்குகூட இல்லாமல் வீடே இருளில் மூழ்கி, மயான அமைதியில் உறைந்து கிடந்தது. பெரியப்பாவின் உடலில் தூசியாய் உயிர் ஒட்டியிருந்தது. ஒரே நாளில் மொத்தமாய் சூழ்ந்த மரண வீட்டின் சூனியத்தைக் காணச் சகிக்காமல் பொழுது மடிந்தது.

வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார். அவருக்காய் தோன்றினால் சாப்பிடுவார். தண்ணீர் குடிப்பார்.‌ இல்லாவிட்டால் எதுவும் இல்லை. தொடக்கத்தில் அடுப்படியில் எந்நேரமும் சாப்பிட ஏதோவொன்று இருக்கும்படி பார்த்துக் கொண்டது பெரியம்மா. ஆனால், நாளாக நாளாக எவ்வித மாற்றமுமின்றி அறைக்குள்ளேயே முடங்கிப் போன பெரியப்பாவைப் போலவே குடும்பப் பொருளாதாரமும் முடங்கியது.‌ மூன்று ஜீவன்களின் பசி, திக்குத் தெரியாமல் உலாத்தத் தொடங்கியது. உடன்பிறந்த அண்ணன்களின் உதவியுடன் வீட்டைநிர்வாகம் பண்ணத் தொடங்கியது பெரியம்மா.

ஒத்து வராதென அத்தையின் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டாள் அக்கா. அத்தையால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பெண் கொடுத்த வீட்டிலும் தட்டிவிட்டுத் தவிர்த்தார்கள். எவ்வளவு நாள் வீட்டிலேயே இருப்பதென, தறி ஓட்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள் அக்கா. அதுவாக ஓர் இயல்பை நோக்கி நகர்ந்தன யாவும்.

நடுச்சாமங்களில் சத்தமாகக் கத்தி அலறினார். அதிலிருந்து விடியும்வரை யாரிடமோ மும்முரமாக உரையாடுவதைப் போல் தனியாகப் பேசத் தொடங்கி விடுவார். “திப்பி மாவு ஒரு லோடு வேணும்நம்பர் ஒன் பர்ஸ்ட் கிளாஸ் குவாலிட்டி அஸ்கா சாக்கு பத்துக் கட்டு இருக்கு. பெருந்துறை சக்தி கேக்றான்‌. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. உடன் ரொக்கத்துக்கு ஒரு ரூபா கம்மியா தரேன்தனபால்ணா புண்ணாக்கு மூட்டைக்கு ஒரு பார்ட்டி இருக்கு நமக்கு கமிஷன் எவ்வளவு சொல்லுங்க. நான் என்னணா கேக்க போறேன் மூட்டைக்கு நாலணா குடுத்துருங்க போதும்உன் சவுரிய மயித்துக்கலாம் வேல நடக்காது. தொழிலுனு வந்துட்டா நேரம் வரவரைக்கும் பொறுமையா இருக்கனும். ராமாபுரம் பெரியசாமியுடைய தங்கச்சி பையன். நல்ல குடும்பம்..தங்கமான பையன் ஆயுசுக்கு உக்காந்து தின்னலும் தீர்ந்து அழியாத சொத்து. ஜாதகம் குடுங்க, நல்லது நெனைச்சி செய்வோம்.. நல்லதே நடக்கும்.‌ நம்ம கையில வேறென்ன இருக்கு. என்ன நான் சொல்றது சரி தானபெரியப்பாவின் சுமையை இறக்கி வைத்துவிட்டு, அவரையே எரிபொருளாக்கி காலச்சக்கரம் இயந்திர கதியில் சுழன்றது

***

சலனமேயில்லாமல் வீட்டிற்குள் வந்த பெரியப்பாவைப் பார்த்ததும் ஒரு நிமிடம் வெடவெடுத்து போனாள் அம்மா, ‘என்ன இந்த மனுசன் திடுதிப்புனு வந்து நிக்கிறாரு‘. கடும் குளிரில் நடுங்குவதைப் போலிருந்தது அவளது குரல். மாமானார் ஸ்தானத்தில் இருக்கும் மூத்தவரென்ற மரியாதையும், அப்பா இல்லாத நேரத்தில் ஏடாகூடமாக ஏதாவது கத்தி கூச்சலிட்டுவிடுவாரோ என்ற அச்சமும், அவளது ஒவ்வொரு அசைவிலும் தொத்தி நின்றது.

உக்காருங்க..”

அவன் இல்லையா?” அப்பாவைக் கேட்டார்.

வியாபாரத்துக்கு போயிருக்காரு மதியம் ஆய்டும்

சரி சரிமாவு இருக்கா..?”

இருக்குங்க..”

பசிக்குது..ரெண்டு தோச ஊத்து.‌ முட்ட இருக்கா..?”

தக்காளி சாம்பாரும், தேங்காய் சட்னியும் அரைத்து தோசை வார்த்துக் கொடுத்தாள். வருடங்கள் பல ஆனது போல் உண்டார். பாதிக்கு மேல் தோசை தட்டிலிருக்கும் போதே அவசர கதியில் சடாரென கை கழுவியவர், சட்னியின் துணுக்குகள் விரல்களின் ஓரத்தில் ஒட்டியிருந்ததை வேட்டியில் துடைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் அவர் பாட்டுக்குக் கீழே இறங்கினார். அம்மாவும் நானும் ஒன்றும் புரியாமல் முழித்தோம். வழியனுப்புவதற்காக பின்னாலேயே இறங்கினேன்.

வெயில் நன்றாக உச்சியில் ஏறியிருந்தது.

கூர் மழுங்கிய பழைய போர் வாள் போன்ற தழுதழுக்கும் குரலில்தம்பி‌! பத்து ருவா குடேன்என் வெகு சாதாரணமாகக் கேட்டார். ஆனால், என்னால் அவரின் கண்களை நேருக்கு நேராகச் சந்திக்க முடியவில்லை

பர்சிலிருந்து நூறு ரூபாய்த் தாளொன்றை எடுத்துத் தந்தேன்.

பணத்தை வாங்கியதும் மேல் பாக்கெட்டில் செருகிக்கொண்டு இடது பக்க வேட்டியின் நுனியை அக்குளில் தாங்கி பிடித்தவாறே, “உன் அப்பன்ட்ட சொல்லிடாதசைக்கிளை உருட்டிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் தாங்கித் தாங்கி நடந்தார்.

வெற்றுச் சொற்கள் தின்று செரித்த ஒரு மனிதனின் வாழ்க்கை, நிழலாடியபடி பின் சென்றது.

*******

karthiksona91@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button