
நிறுத்தற் குறிகள், தொடர் வாக்கியங்களற்ற
அடர்வனத்தினுள்
விட்டுவிட்டு ஒலிக்கும்
சில்வண்டுகள்,
பெருந்தருப்பட்டையை
மிக வேகமாய் மோதும்
நீள் அலகுப்பறவையின் உடற் வெதுவெதுப்பு,
வெறுங்காலின் அடியில்
நழுவும் சில மணி நேர
முன் மழைச் சகதிக் கூழ்மத்தினையெல்லாம்
இவ்வுடலெனும் வஸ்து
நுகர தடை செய்து
நீண்ட வருடங்களாயிற்று.
நவீன நரர்களாகிய நாம்
ஒருபோதும் முன்வரையறுக்கப்பட்ட
விதிமுறைகளின்படி
ஒழுக இயலாமல் தனித்தனி
தன் முனைப்பு பிடித்தாட்டுவதாகலின் படி
செயற்கையாக
இயற்கையை
குளிரூட்டப்பட்ட வினோத அறையின்
கணினியில் பசிய நிறங்கள்
ஏற்றப்பட்ட படங்களை கூர்ந்து நோக்கியவாறும், ஓவியங்களாய்
தீட்டியபடியும் வெகு சுலபமாய்
ஒரு காட்டின் கதவை
அடைத்து விடுகிறோம்.
மகா அரசியாய்
கொஞ்சமே கொஞ்சம் போல்
தன் கஜானாவின் பெட்டிகளில்
படிந்திருக்கும் பொன்குழம்புச் சிதறல்களைச் சுரண்டி
நம் மேல் அப்படியே எறிகிறாள்..,
முழுதாக காட்சிப்படுத்த வனராணி
திறப்பதே இல்லை தன் பொக்கிஷத்தை
எப்போதும்.
சந்தா எல்லாம் கிடையாது மேடம். நண்பராக தொடரலாம்.