இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 5

தொடர் | வாசகசாலை

நாயக பிம்பமற்ற நாயகன்

ரு கதாப்பாத்திரத்தை கதையின் நாயகன் என்று நம்ப வைக்க என்னவெல்லாம் செய்யப்படுகிறது? மற்ற அனைவரையும்விட அந்தக் குறிப்பிட்ட பாத்திரம் உடல் வலிமையிலும் மன வலிமையிலும் உயர்ந்ததாக இருக்கும். யாரும் எளிதில் செய்ய இயலாத செயல்களை அசாத்தியமாக செய்து முடிக்கும். மற்ற அனைவரும் வியந்து ஓதுவார்கள். கட்டிளம் அழகிகள் விரும்புவார்கள். அதில் சிறந்த ஒருத்தியை தேர்ந்தெடுத்து காதல் புரிந்து அதனால் வரும் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளுதல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சமீபத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையில் ‘கொலம்போ’ (Columbo) பார்த்தேன். மிகவும் சுவாரசியமானத் தொடர். 1968ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர். கொலம்போ லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையில் பணிப்புரியும் கொலைகளை துப்பறியும் காவலதிகாரி. கொலம்போ பார்ப்பதற்கு முன்பு எனக்குப் பிடித்த துப்பறியும் கதாப்பாத்திரம் என்றால் வழக்கம் போல ஷெர்லாக் ஹோம்ஸை சொல்லுவேன் ஆனால் இனிமேல் என் விருப்பத்துக்குரிய துப்பறியும் நிபுணர் கொலம்போ தான். அதற்கு மிக முக்கியமானக் காரணம் கொலம்போவிடம் துளியும் நாயக பிம்பமே இல்லை என்பதுதான். இதை மிக நுட்பமாகப் பார்க்க வேண்டும், கொலம்போ தனக்கு வராத கேளிக்கையை வழிந்து திணித்து நடிக்கவில்லை. அதேசமயம் லாஸ் ஏஞ்சலஸ் போலீஸுக்கு உரிய கண்ணியத்துடன் நடந்துக் கொள்வார். ஆனால் ஒவ்வொரு கொலையை அவர் கண்டுபிடிக்கும் போதும் ஆச்சரியமாக இருக்கும்.

கொலம்போ 1970களில் வந்த தொலைக்காட்சித் தொடர் என்பதை முன்பே சொல்லிவிட்டேன். அதனால் தொழில்நுட்ப ரீதியாக படத்தை பார்க்க முயன்றால் ‘என்னயா இது பேசிக்கிட்டே இருக்கானுங்க!’ என்றுதான் தோன்றும். ஆனால் மிக அழுத்தமான திரைக்கதைகளால் இத்தொடர் கட்டப்பட்டிருக்கும். துப்பறியும் கதைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது! ஹிட்ஸ்காக் படங்களின் பெரும் ரசிகன் நான். இப்போது வரும் படங்களில் மர்மங்களின் முடிச்சை படத்தின் இறுதியில் அவிழ்ப்பதற்காக படாதபாடுபடுகிறார்கள். அதற்காக திரைக்கதையில் இருக்கும் ஒரு சின்ன பொறியை கடைசியில் தான் வெளிப்படுத்துவார்கள். இப்போது வரும் படங்களின் முக்கியமான நோக்கம் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைப்பதாக மட்டுமே இருக்கிறது. தவறொன்றும் இல்லை. ரசிகர்கள் மெய்யாகவே இதையெல்லாம் ரசிக்கிறார்கள் தான். ஆனால் கொலம்போவை மற்ற துப்பறியும் படங்களிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால் பார்வையாளர்களுக்கு கதையின் வீரியத்தை முதலில் சொல்லிவிடுவார்கள். உதாரணத்துக்கு இப்போது வரும் படங்களில் படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கும். கொலையாளியின் நிழலை மட்டும் காட்டுவார்கள். இப்போது நாயகன் அவன் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும். யார் கொலையாளி என்று பார்வையாளர்களுக்கும் தெரியாது. ஆனால் கொலம்போவின் படத்தின் தொடக்கத்தில் நடக்கும் கொலையின் அத்தனை தகவல்களும் பார்வையாளர்கள் முன்பு வைக்கப்பட்டுவிடும். இப்போது துப்பறியத் துவங்கும் கொலம்போவுக்கு யார் குற்றவாளி என்று தெரியாது. கொலம்போ வெற்றி பெற வேண்டும் என்று பார்வையாளர்கள் கொலம்போவைப் போலவே சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம்.

கொலம்போவுக்கு நாயகனுக்கான தோற்றமும் இருக்காது. பரட்டைத் தலை, மாறுகண்கள், கசங்கிய கோட் எப்போதும் குழப்பத்தில் இருக்கும் முகம், வாயில் புகைந்துக் கொண்டிருக்கும் பச்சை நிற சிகார். இதுதான் கொலம்போ. இந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பீட்டர் ஃபாக் (Peter Falk). இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் கொலையாளிகள். இந்தத் தொடரில் நடக்கும் கொலைகள் அனைத்தும் உயர்ரகக் கொலைகள். பணக்காரர்கள். அறிவாளிகள். சமூதாயத்தில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர்கள். இதில் என்னைக் கவர்ந்த நடிகர்கள் ஜாக் கஸிடி (Jack Cassidy) மற்றும் ராபர்ட் கல்ப் (Robert Culp). ஜாக் கஸிடியின் நடிப்பை என்னவென்று சொல்வது! நடிப்பில் தெரியும் மிடுக்கு அற்புதம். அவர் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும். பிரமாதமான நடிகர். ராபர்ட் கல்ப் தான் ஏற்று நடிக்கும் பாத்திரமாகவே மாறிவிடுவார். இவர்கள் இருவருடன் பீட்டர் ஃபாக் செய்யும் சேஷ்டைகள் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

கொலம்போ அசாத்திய திறமைசாலி என்பதை போகப் போகத்தான் கண்டுபிடிப்போம். அப்போதும் துளியும் ஈகோ இல்லாமல் பார்த்துக் கொள்வார். கொலையாளிகளிடம் நடக்கும் விசாரணைகளில் தன்னை எதுவும் தெரியாத முட்டாளாகவே காட்டிக் கொள்வார். ஒருக்கட்டத்தில் பதற்றமடையும் கொலையாளி அவனாகவே வந்து சிக்கிக் கொள்ளும்படியாகிவிடும். நல்ல கதைகள் பிடிப்பவர்களுக்கு கொலம்போ கண்டிப்பாகப் பிடிக்கும். Blueprint for Murder என்ற அத்தியாயத்தில் தொழில்முறை விவகாரத்தில் ஒரு எஞ்சினியர் தனவந்தர் ஒருவரைக் கொன்றுவிடுகிறார். கொலம்போ துப்பறிய ஆரம்பிக்கிறார். சடலத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எஞ்சினியர் மீது சந்தேகம் வருகிறது. ஒருவேளை சடலத்தை கட்டிடங்களின் அஸ்திவாரத்துடன் புதைத்திருந்தால்? கொலையாளி கொலம்போவை தன் கட்டிடங்களின் அஸ்திவாரங்களை தோண்டிப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறான். கொலம்போவும் முயன்றுப் பார்க்கிறார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. கொலம்போ மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். இப்போது எஞ்சினியர் இரவோடு இரவாக மறைத்து வைத்திருந்த பிணத்தை தேடிப்பார்த்த இடத்தில் புதைக்கப் போகும் போது சிக்கிக் கொள்கிறார். இதைப் பார்த்த போது ‘த்ருஷ்யம்’ படத்தின் நினைவு வந்தது. த்ருஷ்யம் அட்டகாசமானப் படம். கொலம்போ த்ருஷ்யம் அளவுக்கு சுவாரசியமானதில்லை என்றாலும் அதற்கு நெருங்கிய கதைகளுக்காகப் பார்க்கலாம்.

1970களில் அமெரிக்க வாழ்க்கை வேறொன்றாக இருந்திருக்கிறது. இன்றும் சுதந்திரத்தை பெரிதும் மதிக்கும் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் மிக அதிகம். எழுபதுகளில் குடும்ப அமைப்புகள் கச்சிதமாக இருந்திருக்கின்றன. மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கண்டிப்பாக நேரம் செலவிட வேண்டும். பின் குடும்பமாக அமர்ந்து இரவுணவு. உணவுக்குப் பின் குழந்தைகளுடன் தொலைக்காட்சி. அந்த நேரத்தில் கிட்டதட்ட எல்லா சேனல்களிலும் குடும்பமாக அமர்ந்துப் பார்க்கும் நிகழ்ச்சிகள் மட்டும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. பின் குழந்தைகள் உறங்கியதும் இரவு 10 மற்றும் 11 மணிக்கு செய்திகள். செய்திகள் பெரும்பாலும் விளையாட்டுச் சார்ந்ததும் அடுத்த நாளுக்கான பருவ நிலைகள் பற்றியதாகவும் இருக்குமாம். அதன்பிறகு எல்லோரும் உறங்கச் சென்றுவிடுவார்கள். பதினோரு மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்காக மர்மக்கதைகளை தொலைக்காட்சி தொடர்களாக எடுத்திருக்கிறார்கள். அப்படி NBCயில் வெளியான the NBC Mystery moviesஇல் வெளியானது தான் கொலம்போ.

இப்போது கொலம்போ Amazon Prime Videoவில் பார்க்கக் கிடைக்கிறது. கொலம்போ உண்மையாகவே ஆர்பட்டமில்லாத நாயகன்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button