நம்பிக்கையின் ஒளிக்கீற்று
பொதுவாக இந்தியர்கள் நட்புணர்வற்றவர்கள் என்பது என் கருத்து. காரணம் என்னுடைய அமெரிக்கப் பயணத்தின் முதல் விமானம் டெல்லியிலிருந்து நியூ யார்க் வரை பதினைந்து மணி நேரம். இந்தப் பதினைந்து மணி நேரப் பயணத்தில் உடனிருந்த முக்கால்வாசி இந்தியர்கள் யாரும் யாருடனும் பேசவேயில்லை. பதினைந்து மணி நேரம் மௌனவிரதமிருந்து தான் அமெரிக்காவில் நுழைந்தேன். ஒன்று பேசாமல் இம்சிப்பார்கள் அல்லது பேசிக் கழுத்தறுப்பார்கள். இன்னொரு விமானப் பயணத்தில் நான் விமானத்தில் மது அருந்துவதைக் கவனித்த ஒரு பாட்டி அருகில் அமர்ந்து “குடிக்காதே, பொறுப்பாக இருக்க வேண்டும், சீக்கிரம் திருமணம் செய்துகொள்!” என்று அறிவுரை வழங்கிக்கொண்டு வந்தார்கள். விமானம் என்பதால் வேறெங்கும் தப்பித்தும் செல்ல முடியவில்லை.
புலம்பெயர்ந்த தமிழ்ர்கள் தங்களுடன் கலாசாரம் என்ற பெயரில் வேண்டாதவைகளைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இதை மையமாகக் கொண்டு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கனடாவில் வாழும் தமிழர்கள் கலாசாரம் என்கிற பெயரில் நடத்தும் சம்பவங்களை பகடி செய்து எழுதியிருப்பார். பாஸ்டன் வந்த புதிதில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை தேடிப்பார்த்ததில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து பட்டிமன்றம் நடத்துவது தான் மிகப்பெரும் கலாசார நிகழ்வாக நடந்தேறியது. அதைத் தாண்டி நடக்கும் இலக்கிய செயல்பாடுகளில் கலந்துக்கொள்ள முனைந்த போது எல்லாம் நகைச்சுவை நிகழ்வுகளாகவே இருந்தன. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இலக்கியம் பேசலாம் என்றால் எனக்கு வெறும் ஏழு நிமிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டது. இதனால் அயலக தமிழ் சங்கங்கள் மீது எனக்கு ஒவ்வாமையே இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அதை மாற்றியமைக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி அரங்கேறியது.
மிச்சிகன் தமிழ்ச் சங்கச் செயல்பாடுகளை கொரோனா காலத்தில் கவனித்து வந்தேன். தீவிர இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்து செயல்படுத்தி வந்தார்கள். தமிழகத்திலிருந்து மிக முக்கியமான எழுத்தாளுமைகளை அழைத்து அவர்களுடன் உரையாடுவது போன்ற நிகழ்வுகள் என்னைக் கவர்ந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் அவர்கள் எழுத்துப்பட்டறை பாசறையில் என்னுடைய ‘ரெனி’ சிறுகதை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆச்சரியமாக இருந்தது. என்னுடையக் கதைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதைப் பார்க்கிறேன். க்ளப் ஹவுஸில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பத்து நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள். எண்ணிக்கை பெரிய விஷயமல்ல, ஆனால் இந்தப் பத்து நண்பர்களும் மிகக் காத்திரமான வாசகர்கள். நிகழ்ச்சி என்னை அறிமுகப்படுத்துவதிலிருந்து ஆரம்பமானது. நெருங்கிய நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மட்டுமே என்னைப் பற்றி அதிகமாகத் தெரியும். பொதுவெளியில் என்னைவிட என் எழுத்துகள் அதிகம் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். இதில் என்னை எப்படி அறிமுகம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தேன். என்னை அறிமுகம் செய்தவர் நான் எதிர்ப்பார்த்தது போலவே என் எழுத்துகளைக் கொண்டு அறிமுகம் கொடுத்தார். ஆச்சரியத்தின் உச்சத்துக்குச் சென்று வந்தேன்.
பின்னர் ‘ரெனி’ சிறுகதை உணர்வுப்பூர்வமாக வாசிக்கப்பட்டது. எனக்கு அது புது அனுபவமாக இருந்தது. உயிர்மை தளத்தில் வெளிவந்த என்னுடைய முக்கியமான கட்டுரை ஒன்றில் ‘மோபி டிக்’ மாரத்தான் பற்றி எழுதியிருந்தேன். வருடந்தோறும் நியூ பெட்ஃபர்ட் திமிங்கல வேட்டை அருங்காட்சியகத்தில் ‘மோபி டிக்’ நாவல் தொடர் நிகழ்வாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இதுதான் கலாசாரக் கொண்டாட்டம் என்று எழுதியிருந்தேன். அது நம் தமிழகத்திலும் நடைபெற வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்தேன். அதன் முன்னெடுப்பாக தமிழ் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்கப்படுவது மனதிற்கு நிறைவைத் தருகிறது. மிச்சிகன் தமிழ்ச் சங்கம் மிச்சிகன் பகுதிகளில் இருக்கும் நூலகங்களில் தமிழ் நூல்கள் கிடைக்க ஆவணச் செய்திருக்கிறார்களாம். தொடர்ந்து தமிழ் நூல்கள் வாசிக்கப்படாமல் போனால் நூலகத்திலிருந்து நூல்களை அகற்றிவிடுவார்கள். எனவே அனைவரையும் வாசிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். அயலகத் தமிழர்களின் வாழ்வு பெரும்பாலும் தமிழகத்தில் இருப்பதுப் போலத்தான் இருக்கிறது. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் அப்படியொரு வாழ்க்கையை வாழ ஏன் ஓர் அந்நிய நிலத்துக்கு வர வேண்டும்? மிச்சிகன் தமிழ்ச் சங்க செயல்பாடுகள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளை தருவதாக இருக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது நான் நியூ ஹாம்ப்ஷயரில் இருப்பேன். அயல் நிலத்தில் தமிழ்ர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது நியூ ஹாம்ப்ஷயர் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்டின் பிரபலமான வரிகள் தான் நினைவுக்கு வருகிறது:
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
**************
‘அந்நிய நிலக் குறிப்புகள்’ எழுத ஆரம்பித்த போது ஓவியங்களைக் குறித்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஓவியங்கள் மட்டும் இருக்கும்படி வேண்டாம் என்று தீர்மானித்துக்கொண்டதால் வெகு சுதந்திரமாக இயங்க முடிகிறது. இருந்தாலும் ஓவியங்களின் மீதான ஈர்ப்பும் பிரமிப்பும் தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இங்கே கரவாஜியோ குறித்து எழுதுவதற்காக தொடர்ந்து அவர் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறெதைக் கொண்டு அவைகளை வருணிக்க முடியும்? அதுமட்டுமல்லாமல் கரவாஜியோவின் வாழ்க்கையும் சுவாரசியமாக இருந்தது. அடுத்த மாதம் கரவாஜியோவின் ஓவியங்கள் குறித்து எழுதுகிறேன். கலைஞர்களின் வாழ்க்கை சுவாரசியமானது. கையில் கிடைக்கும் களிமண்ணைப் பிசைந்து பல வடிவங்களைக் கொண்டு வருவது போல கலைஞர்கள் தங்கள் வாழ்வைப் பிசைந்து உன்னதங்களைக் கொண்டு வருகிறார்கள். அதில் சிறு தவறுகள் நேர்ந்தால் உன்னதங்களைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. உன்னதங்கள் எப்போதும் உன்னதங்களாகவே ஜீவித்திருக்கின்றன. ஏன் இவற்றை சொல்கிறேன் என்றால், உலகப் புகழ் பெற்ற கரவாஜியோ ஒரு கொலைகாரன்.
(தொடரும்…)