ஆண்டு விழா நிகழ்வு 2017

#வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் -2017
1.சிறந்த அறிமுக எழுத்தாளர்
இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் சிறந்த அறிமுக எழுத்தாளர் பிரிவில் தனது “ஒளிர் நிழல்” நாவல் மற்றும் “நாயகிகள் நாயகர்கள்” சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் பொதுவாக நாவல் வடிவம் என்பது பல்வேறு சோதனை முறைகளுக்கு ஆட்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. நீண்ட செறிவான வாசிப்பிற்குப் பின் புதிதாக எழுத வரும் ஒருவர் அத்தகைய முயற்சிகளை செய்து பார்ப்பது உண்மையில் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒன்று.அவ்வகையில் சுரேஷ் தனது முதல் நாவலில் கதை சொல்லும் முறையில், மொழிப் பயன்பாட்டில் நம்மைக் கவர்கிறார்.
தொடர்பற்று தனித்து தெரிவது போல காணப்படும் அத்தியாயங்களை, கண்ணுக்குத் தெரியாத சூட்சுமக் கயிறால் கட்டி ஒரு பொதிக்குள் நிறுத்தும் இடத்தில் நாம் கண்டடையும் வெளிச்சம் ஒரு நல்ல படைப்பாளியை நம்முன் அடையாளம் காட்டுகிறது.அதே போன்று குடும்பம், உறவுகள் பற்றிய சுரேஷின் கணிப்புகள், தேற்றங்கள் அனைத்தும் இந்த அநித்ய வாழ்வின் மாறா பேருண்மைகளை அவர் தன் படைப்பில் கையாளும் விதம் கவனிக்கத் தக்க ஒன்றாகிறது.
அதபோலவே அவரது சிறுகதைத் தொகுப்பும். தொகுப்பை வாசித்து முடிக்கும் பொழுது சுரேஷ் இக்கதைகளின் வாயிலாக எதனைக் கண்டடைய முயல்கிறார் என்பதும், அவரது மனம் எதனை நோக்கிய பயணத்தில் தன்னை முன்னிறுத்தி இயங்குகிறது என்பதும் சுவாரசியமான கேள்விகள்..!
புனைவின் இருவேறு வடிவங்களில் எளிதாக இயங்க எத்தனிப்பவராக, அதற்கான பிரயாசையும், ஆர்வமும் கேள்விகளும் உள்ளவராக சுரேஷை நாம் உற்று நோக்கலாம்.
இப்படியான ஒரு இளம் எழுத்தாளரை அடையாளப்படுத்துவதில் வாசகசாலை மிகவும் பெருமை கொள்கிறது
எழுத்தாளர் சுரேஷ் அவர்களுக்கும், இரு நூல்களையும் வெளியிட்ட ‘கிழக்கு’ பதிப்பகத்திற்கும் Badri Seshadri, வாசகசாலையின் அன்பும் வாழ்த்துகளும். நன்றி. மகிழ்ச்சி..!
2.கவிதைத் தொகுப்பு
தமிழ் இலக்கிய விருதுகள் -2017
இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் கவிதைத் தொகுப்பு பிரிவில் கவிஞர் மு.ஆனந்தனின் “யுகத்தின் புளிப்பு நாவுகள்” தொகுப்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக கவிதைகளின் போக்கு என்பது காலத்திற்கேற்ப புதிய பரிமாணங்களையும் புதிய வெளிகளையும், கவிஞர்களின் அறிவு, தத்துவப் பிண்ணனி, அரசியல் கண்ணோட்டம், கற்பனை வெளி மற்றும் கவித்துவ மனநிலைக்கேற்ப மாறிக்கொண்டே செல்வதாக அமைந்திருக்கிறது.
சமகாலத்தின் ஒரு கவிஞனுக்கான இடத்தை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு, சமூகம், மனிதம், சுற்றுச்சூழல் மீதான அக்கறை, நகரமயமாதல், உறவுச்சிக்கல் குழந்தைப்பருவம் கைவிட்டு போன பாரம்பரியம், உலகமயமாதலால் மாறிக்கொண்டே இருக்கும் கலாச்சாரம் மற்றும் தனிமனித ஏக்கம் என அனைத்து தளங்களிலும் நின்று ஆனந்தனின் இக்கவிதைகள் பேசுகின்றன.
இத்தொகுப்பின் கவிதைகள் படிப்பவர்களிடம் அனைத்து விதமான உணர்வெழுச்சிகளையும் மிகக் குறுகிய நேரத்தில் கடத்தும் தன்மை கொண்டவை. கற்பனையின் சாத்தியங்கள் எல்லாவற்றிலும் நல்ல கருத்தாழமிக்க கவிதைகளை கண்டுவிட முடியுமா என்றால் முடியும் என்பதன் சாட்சிகளாக மு.ஆனந்தனின் கவிதைகள் காணப்படுகின்றன.
அப்படியான ஒரு கவிஞரின் படைப்பினை விருதுக்குத் தேர்வு செய்வதில் வாசகசாலை பெருமை கொள்கிறது
கவிஞர்மு. ஆனந்தன் அவர்களுக்கும், வெளியிட்ட ‘அகநி’ பதிப்பகத்திற்கும் வாசகசாலையின் அன்பும் வாழ்த்துகளும். நன்றி. மகிழ்ச்சி..!
- சிறுகதைத் தொகுப்பு
இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் சிறுகதைத் தொகுப்பு பிரிவில் கவிஞர் நரனின் “கேசம்” தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கவிஞராக பிரபலமான சமயத்திலேயே அதே அளவு தீவிரத்துடன் புனைகதைகளையும் எழுதத் துவங்கியவர் நரன். அவரின் இத்தொகுதியில் உள்ள பதினோரு கதைகளும் வெவ்வேறு நிலப்பரப்புகளை, வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மனிதர்களை, அவர்களது தனித்த அக உலகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
தற்கால தமிழ்ச் சிறுகதைகளில் பல்வேறு பேசுபொருள்கள் எடுத்தாளப்பட்டு வருகிறது.ஆனாலும் அதிகமாக ஆராயப்படாத நரனின் கதைக்களங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துபவை.அநேகமாக தொகுப்பின் வெற்றி ரகசியமும் இதுவே எனக் கருதுகிறோம்.
புத்தக உள்ளடக்கத்தை பாராட்ட வேண்டிய அதே நேரத்தில், புத்தக உருவாக்கத்திற்கும் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூலின் கட்டமைப்பிலும், வடிவமைப்பிலும் தெரியும் அர்ப்பணிப்பும் நேர்த்தியும் அழகும் வாசிக்கும்போதே மகிழ்ச்சியளிக்கிறது. பக்கங்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் முத்தாய்ப்பாக குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விஷயம்..!
அந்த வகையில் பார்த்தால் நரனின் ‘கேசம்’ அர்த்தமும் அழகும் பொதிந்த ஒரு இலக்கியப் படைப்பு எனலாம்.இதனை சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுப்பதில் வாசகசாலை பெருமை கொள்கிறது
எழுத்தாளர் Naran அவர்களுக்கும், வெளியிட்ட ‘சால்ட்’ பதிப்பகத்திற்கும் வாசகசாலையின் அன்பும் வாழ்த்துகளும். நன்றி. மகிழ்ச்சி..!
- நாவல்
இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் ‘நாவல்’ பிரிவில் எழுத்தாளர் கரன் கார்க்கியின் ‘ஒற்றைப் பல்’ நாவல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கோயில் தாஸ் என்னும் மனநிலை பிறழ்ந்த வயோதிகனின் அந்திம காலத்தை, மறைந்த அவனது மனைவி சாரதா லீனா மேரியின் நினைவுகளூடாக முன் பின்னாகச் சொல்லிச் செல்லும் படைப்பு இது.
அவனது வாழ்க்கை நினைவுகளின் மிச்சமாக, கடந்த வலிகளின் எச்சமாக அவனிடம் மிஞ்சி இருக்கும் ஒற்றைப் பல் நாவல் முழுக்க நம்மையும் நிரடிக் கொண்டே இருக்கிறது.
அதனோடு கூடவே நாம் சென்னையின் சில சாலைகளில் அன்றாடம் கடந்து செல்லும் நடைபாதைவாசிகளின் வாழ்க்கையும், அவர்களது பிரச்னைகளும் நாவலின் மற்றுமொரு பிரதானப் பகுதியாக மலர்கிறது.
அவர்களது வாழ்க்கை, அரசியல், சினிமா உள்ளிட்டவைகளைப் பற்றிய அவர்களது புரிதல்கள் என ஒவ்வொன்றும் மிகவும் நெருக்கமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றது.
முக்கியமாக கோயில்தாசுக்கும், சாரதாவுக்கும் இடையிலான உரையாடல்கள் மூலமாக கடவுள் என்னும் விஷயத்தினை அணுக வேண்டிய பார்வைகள் நம்முன் விவாதத்துக்கு உட்படுத்தப்படுகின்றன.
இறுதியாக ஒரு நல்ல இலக்கியப் படைப்பு என்பது ஏதோ ஒரு வகையில் சக மனிதர்கள் மீதும், வாழ்க்கை மீதும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்; நமது அடிப்படை மனித இயல்புகளை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
அந்த வகையில் பார்த்தால் ‘ஒற்றைப் பல்’ நல்லதொரு மனிதம் பேசும் இலக்கியப் படைப்பு எனலாம்.இதனை சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுப்பதில் வாசகசாலை பெருமை கொள்கிறது
எழுத்தாளர் Karan Karki அவர்களுக்கும், பதிப்பாளர் Vediyappan M Munusamyஅவர்களுக்கும் வாசகசாலையின் அன்பும் வாழ்த்துகளும். நன்றி. மகிழ்ச்சி..!
[g-gallery gid=”1394″]