ஆண்டு விழா நிகழ்வு 2016

- சிறந்த கட்டுரைத் தொகுப்ப-2016
இவ்வாண்டின் சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கான #வாசகசாலை விருதிற்காக திரு.தஞ்சாவூர் கவிராயர் அவர்களின் ‘தெருவென்று எதனைச் சொல்வீர்’ தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
மனித மனங்களில் பழைய நினைவுகளுக்கு எப்போதும் ஓர் தனி இடம் உண்டு.ஆங்கிலத்தில் இதனை ‘Nostalgic’ என்பார்கள்.நமது ஞாபகங்களின் அடுக்குகளில் படிந்திருக்கும் பழைய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்தலை இப்பதம் குறிக்கிறது.தமிழில் ‘நனவிடை தோய்தல்’ என்ற அழகான தலைப்பில் எழுத்தாளர் எஸ்.பொ ஒரு தொகுப்பே எழுதியிருக்கிறார்.அதை அடியொற்றி வாசிப்பின் வழியாக விரியும் நினைவுச் சித்திரங்களாக இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
“உலக அதிசயங்களை வேடிக்கை பார்க்க ஓடும் ஒரு சுற்றுலாப் பயணியாக இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை.திண்ணையில் உட்கார்ந்துகொண்டு இந்தக் கோடை வெயிலிலும் கூடுகட்டக் களிமண் உருண்டையைக் கொண்டு வரும் குளவியைக் கவனிப்பது எனக்குத் தீராத ஆச்சர்யம்.” என்கிறார் தஞ்சாவூர் கவிராயர்.உண்மைதான்.இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையுமே அக்குளவி கொண்டு வந்த களிமண் உருண்டைக்கு ஒப்பானவை.வாசகர்களாகிய நாம் அதனைத் தீராத ஆச்சர்யத்தோடு கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயர் அவர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் எமது வாழ்த்துகளும் நன்றிகளும்.
- சிறந்த கவிதை
எந்த அடையாளச் சிக்கலுக்குள்ளும் அடைபட்டுக்கொள்ளாமல் நிலம் சார்ந்த அனுபவங்களின் விஸ்தரிப்பையும் அதேநேரத்தில் சமகால நிகழ்வுகளைப் பகடி செய்து உருவகங்களைக் காட்சிகளாய் விவரிக்கும் லாவக மொழியையும் ஒருங்கே கொண்டு வெளிவந்திருக்கும் கவிஞர் கதிர் பாரதி யின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்’ கவிதைத் தொகுப்பை இவ்வாண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தேர்வு செய்வதில்#வாசகசாலை பெருமகிழ்ச்சியடைகிறது.
வழக்கமாக கவிதைகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகளைக் கூட முற்றிலும் புதியதொரு தளத்தில் புதியதானதொரு கோணத்தில் அனுகும் வாய்ப்பை வாசகனுக்கு வழங்கியதில் வெற்றியடைந்திருக்கிறார் கதிர் பாரதி.
கவிஞர் கதிர் பாரதிக்கும் இத்தொகுப்பை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கும் எமது வாழ்த்துகளும் நன்றிகளும்.
- சிறந்த நாவல
தமிழறிந்த திணைகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத போர்நிலத்து மக்களின் வாழ்வுப்பாடுகளை, அதன் எதார்த்த நிலையில் எவ்வித பக்கச் சார்புமின்றி, புனைவின் ஊடாக மிகச் சிறப்பான முறையில் சித்தரித்திருக்கும் எழுத்தாளர் திரு.குணா கவியழகனின் “அப்பால் ஒரு நிலம்” நாவலை இவ்வாண்டின் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுப்பதில் #வாசகசாலைபெருமகிழ்ச்சி அடைகிறது.
இதன் முன்னுரையில எழுத்தாளர் குணா கவியழகன் இவ்வாறு குறிப்பிடுகிறார், “எங்கெல்லாம் ஒரு தலைமுறை தாண்டியும் போர் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் போர்நிலம் என்ற புதிய வகைமாதிரி உருவாகி விடுகிறது. இதன் வாழ்வும் இயல்பும் மனப்பாங்கும் மற்றதில் இருந்தும் வேறாகிறது”.
உண்மைதான்…அந்த வகையில் ‘போர் இலக்கியம்’ என்ற வகை மாதிரியில் தமிழில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த படைப்பாக ‘அப்பால் ஒரு நிலம்’ காலம் கடந்தும் நிற்கும் என #வாசகசாலை திடமாக நம்புகிறது.
இந்த நூற்றாண்டின் உலக நாகரிகம் கைவிட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வாழ்க்கைப்பாடுகளை, அதீதப் பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் பதிவு செய்த இப்படைப்பிற்கு #வாசகசாலை தலைவணங்குகிறது.
எழுத்தாளர் குணா கவியழகனுக்கும், தமிழினி பதிப்பகத்திற்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்..!
[g-gallery gid=”1379″]