
கடல் கிட்டத்தட்ட ஐம்பது அடி அளவுக்கு உள்வாங்கியிருந்தது. கோவிலுக்கு முதுகையும், கடலுக்கு முகத்தையும் காட்டியபடி அமர்ந்திருந்த கற்குவேல், எழுந்து தன் காவி வேட்டியின் மணலை உதறிக் கொண்டான். உள்வாங்கிய கடற்கரையில் பாசிபடிந்த பாறைகள் மணல்திட்டுகளுடன் தெரிந்தது ஒரு நவீன ஓவியம் போன்றிருந்தது. விசேசநாளோ விடுமுறைநாளோ அல்லாத ஒரு கிழமையில் கோவில் கடற்கரைக்கு காலைப்பொழுதுகளில் வருவது எப்போதுமே பிடிக்கும் கற்குவேலுக்கு. கிளிஞ்சல்களைவிட அன்று கோவஞ்சி வகைச் சிப்பிகள் ஏராளம் தென்பட்டன. அவன் கண்கள் அந்த சிறிய வெண்ணிற வட்டக்கோவஞ்சியைத் தேடியது. மற்றவைபோல கூம்புவடிவில் அல்லாது அவை வாய்பிளந்து சிரிக்கிற எமோட்டிகான் பொம்மைகள்போல் தோன்றும்.
அதிகத்தேடுதலுக்கு இடமின்றி ஒரு கோவஞ்சி கிடைத்துவிட்டது. ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்குமிடையில் கோவஞ்சியின் திறப்பு புறங்கைப்பக்கம் தெரியும்படி வைத்து அப்படியே கைவிரல்களை மடக்கினான். உதடுகள் குவித்து அந்தத் திறப்பில், ஒரு ஊது ஊதினான்…. ‘வீ….ய்…’ என சீழ்க்கையொலி எழுந்தது. அந்த ஒலிக்கு அவனது உடல்மொத்தமும் நடுங்கியது. பத்துவருடத்திற்கு முந்தைய அந்த பயங்கரமான இரவில் இதே போன்றதொரு சீழ்க்கையொலியை எழுப்பியபடியே வாக்கிடாக்கி ஒலிக்க ரோந்து வந்த இரவுக் காவலர்களிடம், தான் சரணடைந்த நிகழ்வு அவனது நினைவில் வந்தது. தன் காலடியில் கிடந்த செங்கூம்புச் சங்கு ஒன்றை கோபத்துடன் ஓங்கி ஒரு உதை உதைத்தான். மனிதன் மடியின் உறுப்பு போல பலகீனமானதல்ல போலும் கடல் மடியின் சங்கு, சற்றும் சேதமற்று வழுக்கி நழுவியது. ஆனால், அந்த சம்பவம் நடந்த அன்று இப்படி நிகழவில்லையே. இவன் உதைத்த உதையில் தொடைகளை இறுக்கிக்கொண்டு விழுந்த சின்னைய்யா எழுந்திருக்கவே இல்லை. இன்றும் அதை நினைத்தால் அவன் மனதில் வருவது, ‘செத்ததே செத்தான், இன்னும் நாலு அடி வாங்கிட்டுச் செத்திருக்கலாம், இப்டி ஒரே அடிலயா போய்ச்சேருவான்?’
கல்லூரி முதுகலை முதல்பருவத் தேர்வுக்கட்டணம் கட்ட அப்பாவின் முதலாளியிடம் உதவிகேட்டு நின்றவனிடம் சின்னையா, ‘உதவியெல்லாம் பண்றாப்ல இல்லை… வேணுன்னா தோப்புக்கு ஒரு வாரம் சாயங்காலம் வந்து பம்புசெட்டு போட்டு ஒருமணிநேரம் மடையெல்லாம் மாத்திவிட்டுட்டு ராக்காவலுக்கு அங்கனயே படுத்துட்டுப்போ… தர்றேன்…’ என்றுவிட்டு, மூன்றாம் நாள் இரவே தள்ளாடும் போதையோடு வந்து,
“கற்கு… உங்குரலு இல்ல… உங் குரலு… அப்டியே சிலுக்காட்டம் இருக்குடே… அதக்கேட்டாலே ஜிவ்வுன்னு இருக்கு…” என்றான்.
கற்குவேலின் பிரச்சினையே அதுதான், ஆள் வாட்டசாட்டமான வாலிபனாய் வளர்ந்தபோதிலும் குரல்மட்டும் ஆணுக்குரிய கட்டைக்குரலை அடையவில்லை இன்னும்.
“இல்ல சின்னைய்யா… குரல் அப்டி இருந்தாலும், நான் ஆம்பளதா… இது ப்யூபர்ஃபோனியானு ஒரு சின்ன குறைபாடு… வாய்ஸ் தெரபி எடுத்துக்கிட்டாலே சரியாய்ரும், பணமில்லாமதான் ட்ரீட்மெண்ட்க்கே போகாம இருக்கேன்”
“அட…அதுக்கும் சேர்த்து காசு தந்துட்டாப்போச்சு… இப்ப இந்தக் குரலோடயே கொஞ்சம் மோட்டார் ரூமுக்கு வாயேன்… பேசுவோம்…” என்றபடி எச்சில் ஒழுக இழுத்தான்
“சின்னையா விடுங்க என்னிய…” என்றபடி திமிறினான்…
இயலாமையைவிட பெரிய கோபவூக்கி உலகில் இல்லை… கோபத்தின் வலிமை முழுவதையும் காலுக்குக் கொடுத்து, ஓங்கி ஒரு எத்து எத்தினான்… அதோடு முடிந்தது எல்லாமும்.
இருளில் செய்யும் பாவங்கள் பல பகலின் வெட்டவெளிச்சத்தில் நிறம்மாறி விடுகின்றன. மறுநாளே சின்னய்யா மனிதப்புனிதனாகவும், கற்குவேல் குற்றவாளியாகவும் ஊரார் வாய்களில் உலவிக்கொண்டிருந்தனர். காவலர்களிடம் குற்றத்தைத் தானே ஒப்புக்கொண்ட கற்குவேல், அதன் காரணத்தை மட்டும் வெளியில் சொல்லவேயில்லை.
அதன்பிறகு விசாரணைக்கைதியாகி… ஆயுள் தண்டனைக் கைதியாகி… பத்துவருடம் கழிந்தபோதும், கற்குவேல் இயன்றவரைக்கும் யாரிடமும் பேசுவதில்லை. சிறையில் ஆயிரம் சின்னையாக்கள் இருப்பார்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மௌனத்தையே தடுப்புச் சுவராய்க்கொண்டு, முடிந்தவரைக்கும் ஒதுங்கியே இருந்துகொண்டான். தவிர்க்க முடியாத இடங்களில் சைகைமொழியில் பேசினான். அதனால் சிறையில் அவனது பெயர் ‘அப்பிராணி’. கற்குவேல் என்கிற பெயர் மறைந்து அப்பிராணி என்றாலே நிறையபேருக்குத் தெரியும் என்றானது.
அந்த சிறைக்கூடத்தில் அவன் பேசுவது இருவரிடம் மட்டுமே, அதுவும் தனியாய் அழைத்துச்சென்று பேசினால் மட்டுமே பேசுவான். ஒருவர் சிறை முதன்மைக் கண்காணிப்பாளர் விஜயன், இன்னொருவர் அவனுக்கு முன்பே இரட்டை ஆயுள் தண்டனையில் வந்த சேகர்.
“வர்ற செப்டம்பர் பதினஞ்சாம்தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு நம்ம இல்லவாசிகள்ல அஞ்சு பேத்துக்கு ரெமிஷன் ரிலீஸ் கிடைச்சிருக்கு… அதுல நீயும் ஒருத்தன்…” என விஜயன் அவனைக் கூப்பிட்டுச் சொன்னபோது, நம்பமுடியாமையை முகச்சைகையாக்கி விஜயனை கண்விரித்துப் பார்த்தான்.
“ஏய்… இந்த மூஞ்சி சைகைலாம் வேற எவன்ட்டயாது வச்சுக்க… எங்கிட்ட வாயத்தொறந்து பேசனுங்கேட்டியா… நான் உன் ஊர்க்காரன்னு மறந்துட்டோ…? சின்னப்பொடியனா இருக்கப்ப ஊர்த்திருவிழாவுல நீ உடுக்கு சத்தத்துக்கு டவுசர் கழண்டதுகூட தெரியாம வெறிப்பிடிச்சு ஆடிட்டிருந்த காமெடி சீனையெல்லாம் பார்த்தவம்ல்லே நானு…”
“ஐயோ சார்… நீங்க வேற… டவுசர் கிவுசர்னு ஆரம்பிக்காதீய”
“ஆங்… அந்த பயம் இருக்கட்டும்…
சிறைக்குற்றப்பதிவேட்டுல நன்னடத்தை அலுவலர் உன்பேர்ல எந்த குற்றமும் இதுவரை பதிவு செய்யல… நீ இருந்த காலகட்டத்துல கைதிகள் கலவரம் ரெண்டுதடவை நடந்தப்பவும் நீ எதுலயும் கலந்துக்கல, ஒருதடவை அரிசிமூட்டை தூக்கற கம்பியால வார்டன் பிரேம்குமார கைதிகள் குத்தித்தூக்கி எறிஞ்சப்ப நிறைய அடிவாங்கி குறுக்கால நுழைஞ்சு அவருக்கு முதலுதவி பண்ணி காப்பாத்துன… ஜெயில்லருந்தே போஸ்ட் க்ராஜுவேஷன் முடிச்சுருக்க, மோர்ஓவர் ஜெயில்லயே ஹேர் ஸ்டைலிங் கோர்ஸ் முடிச்சு இங்கயே இல்லவாசிகளுக்கு முடிவெட்டி அக்கௌண்ட்ல அமௌண்ட் கணிசமா சம்பாதிச்சு வச்சிருக்க… எல்லாத்துக்கும் மேல உன் உறுதியான மௌனம்… ரெமிஷன் ரிலீஸ்னதுமே மொத பேரா உன் பேரதான் எல்லாருமே ரெகமண்ட் பண்ணாங்க…”
“ஆனா, நான் வெளில போய் என்ன செய்வேன் சூப்பரிண்டன்ட் சார்? எங்க வீட்லதான்… …”
“உன் அண்ணன் ஃபோன் நம்பர் வாங்கி வந்துருக்கேன் கற்குவேல்… பேசிப்பாக்குறியா…?”
“வேணாம் சார்… உயிரோட இருக்கவன ஜெயில் கலவரத்துல செத்துப்போயிட்டேன்னு சொல்லி ஃபோட்டோவுக்கு மாலைபோட்டு ஊர் முன்னாடி நடிச்சிட்டு இருக்கவங்ககிட்ட நான் என்னத்த எதிர்பார்க்கமுடியும் விஜயன் சார்? நீங்க நம்ம ஊர்க்காரவுகளா இருக்கந்தட்டி எனக்கு விசயம் எட்டுச்சு… இல்லனா நானும் ஒவ்வொரு தடவையும் என்னடா இது மனு எழுதவோ பாக்கவோ யாருமே வரல்ல… எந்த நல்லது பொல்லாதுமா நம்மூட்ல நடக்கல… பரோலுக்கு ஏன் யாருமே கேக்கலயினு மருகிக்கிட்டே கெடந்திருப்பேன்… அவங்க வாழ்க்கைல நான் செத்துப்போன பின்னாடிதான அண்ணனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணே அமஞ்சிச்சாம்… இனி பேசி கொழப்பம் பண்றது தப்பு, முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் சார்”
அவன் பேசிய விஷயத்துக்கும் விஜயன் கண்களைக் குறுக்கியவாறு புன்னகைப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லாததை உணர்ந்து, “என்னாச்சு சார்?” என்றதற்கு, “அதுவந்து கற்கு… சொன்னா வருத்தப்படுவியோ…?” என்றார் விஜயன்.
“அட… சொல்லுங்கங்றேன்…?”
“இல்ல… எங்க அப்பத்தா ஒரு கத சொல்லும், மெய்யோ பொய்யோ தெரியல… திடீர்னு அது நாபகம் வந்துச்சு… ரொம்பப் பழையகாலத்துல பனைமரத்துல அடிமரத்த மூணடி உயரத்துக்கு விட்டுட்டு வெட்டுவாகளாம், அந்த அடிமரத்துக்குள்ள உள்ளதல்லாம் நோண்டி தூரப்போட்டுட்டா ஒரு தொட்டியாட்டம் ஆகிரும்ல்லா… அதுக்குள்ள நெருப்புல வாட்டுன மான்கறிய தேன் ஊத்தி, மூடி வெப்பாங்களாம்… கறி கெடைக்காத காலத்துல எடுத்து யூஸ் பண்றதுக்காகச்சுட்டி அப்டி ப்ரிசர்வ் பண்ணுவாங்களாம்…”
“என்னாச்சு சார் உங்களுக்கு… என்னென்னவோ பேசறீங்க?”
“இல்ல… நீ பயன்படுத்தாம இருக்க இருக்க உங்குரலு தேன்ல ஊறவச்ச மான்கறிமாறி அவ்ளோ ஸ்வீட்டாகிருச்சு”
“ஹ.. ஹா… சார்…”
“எங்கிட்டாச்சும் எக்குத்தப்பா ஒதைச்சுறாதலே… நானே பாவம்…” என்றபடி கால்களைக் குறுக்கினான்
“ஐய போங்க சார்… “
“இப்பதான் ஓரளவு உன் அக்கவுண்ட்ல பணமிருக்குல்ல… வெளில போனதும் ட்ரீட்மெண்ட் போயிறவேண்டியதுதான…? “
“பண்ணனும் சார், எனக்கொரு ஹெல்ப் பண்றீங்களா? இதுக்கு நல்ல சிகிச்சை தர்ற இடம் விசாரிச்சு சொல்லனும்… அப்றம்… ரெண்டு செட்டு காவி வேட்டி துண்டு வேணும்… ரிலீஸ்க்கு அப்றம் கொஞ்சநாள் திருச்செந்தூர் கோவில்ல போய் படுத்துக்கிடுதேன்… மனநிம்மதிக்காக… அந்த கடல், அந்தக்காத்து, அந்த விசாலமான மணல்வெளி… சுதந்திரத்த அங்கபோயி மொதல்ல கழிக்கப்போறேன் சார்”
“சரி ஏற்பாடு பண்றேன்…”
கற்குவேலின் தண்டனைக்குறைப்பு விடுதலை பற்றிக் கேள்விப்பட்டதும் சேகர் அழுதுகொண்டே ஆனந்தப்பட்டான்.
“அடே அப்ராணி…! சபாஷ்டே… ட்ரீட்டு வேணுஞ் சொல்லிட்டேன்”
‘என்ன வேணும்’ என்பதுபோல் சைகை செய்தான் கற்குவேல்
“ரிமாண்ட்காரனுககிட்டருந்து இம்புட்டுகாண்டு டோப்பு வாங்கிக்குடு” என்ற சேகரை உள்ளங்கையால் பின்மண்டையில் செல்லமாய் ஒரு தட்டு தட்டினான் கற்குவேல்
“சரி விடு! அச்சுச்சோறும் தொவையலுமா தின்னு நாக்கு மரக்கட்டையாயிட்டு அப்ராணி! கறிக்கொழம்பு ஊத்துற நாள் வாரதுக்குள்ள நாக்கு நாண்டுக்கிடும் போலருக்கு… கேன்ட்டீன்ல ஒரு நூறு கிராம் சில்லிச்சிக்கன் வாங்கித்தரியா?”
கேட்ட சேகரின் முகத்தை மனதுக்குக் கொணர்ந்தபடியே கடலோரத்தில் நடந்தான் கற்குவேல். முகங்கள்..
முகங்கள்… எத்தனைவிதமான முகங்கள் சிறைக்குள்… விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் கொண்டுவருகிற புதுச்சட்டைக் காலருக்குள், ஓர மடிப்புக்குள், பழங்களுக்குள் என விதவிதமான முறைகளில் உள்ளே வருகிற கஞ்சாவின் ஒரே ஒரு இழுப்புக்காக ஓடியோடி அவர்களின் துணிகளைத் துவைத்து அவர்கள் சொல்கிற வேலையைச் செய்கிற, உடல்ரீதியான துன்புறுத்தலையும் தாங்கிக்கொள்கிற எத்தனை முகங்கள்… பார்வையாளர்களுக்கான நாளில் வந்து போகிற உறவினர்களையும் குழந்தைகளையும் நினைத்து அன்றிரவு அழுகிற முகங்களைவிட பரிதாபமானவை, வராத உறவினர்களை நினைத்து அழுகிற முகங்கள். உறவினர்கள் முகமே மறந்துபோய்விட்டதென பெருமூச்சோடு அந்த நாளைக் கடப்போரும் உண்டு. குப்பைத்தொட்டியில் எறியப்பட்ட தூக்குவதற்கு யாருமற்ற குழந்தை மாதிரி நிச்சயமற்ற எதிர்காலம் தருகிற விரக்தி, மனவழுத்தம்… அது தருகிற பிறழ்வுநிலை. தன் உடலைச் சமாளிப்பதே மிகக்கொடூரமான தண்டனை, சிறைக்கைதிக்கு. போதை கேட்கிற சிறு மூளை, தழுவ உடல் கேட்கிற இயக்கு நீர்கள், விதவிதமாய் சுவை கேட்கிற நாவின் சுவையரும்புகள், கைகால் விரித்து உருண்டு புரண்டு படுக்க இடம் கேட்கிற தசைநார்கள்…
யோசித்துக்கொண்டே நடந்ததில் எங்கு வந்தோம் என கவனிக்கவில்லையோ? கடல் உள்வாங்குதலை அடிக்கடி பார்த்ததுண்டு அவன், நாழிக்கிணறுக்கு நேர் உள்ள பகுதியிலிருந்து தென்புறமாக அய்யா வைகுண்டர் கோவில் வரை உள்ள கடல் அடிக்கடி உள்வாங்கும். இந்தமுறை வடக்குப் பக்கமாக உள்வாங்கியிருந்தது. தியான மண்டபத்தின் அருகிலுள்ள கற்குவியலை முட்டுகிற அலைகளைத் தாண்டி அந்தப்பக்கம் வள்ளிகுகைக்கு முன்னதான கடற்கரைக்கு இவன் போனதே இல்லை இதுவரை… போய்ப்பார்க்கலாமென நடந்தவன் நடந்துகொண்டே இருந்திருக்கிறான்.
வடதிசையில் உயரமான தேவாலயம் தெரிந்தது… ஆனால், அது கடலோரத்தில் இல்லை, அந்த ஊருக்குள் இருக்கும் போலத்தெரிந்தது. கரையிலிருந்து கடலுக்கு பாலம்போல் தூண்டில் வளைவு தெரிந்தது. இந்த பத்து வருடங்களுக்குள் எவ்வளவு மாற்றம்? ஆக்ரோசமாய் அலைவீசும் அந்தவூரின் கடலை தூண்டில் வளைவிட்டு அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். கடலோரத்திலேயே சிற்சில சிற்றாலயங்கள் ஆங்காங்கு தெரிந்தாலும் சின்னதாய் ஒரு இந்துக் கோவிலும் தெரிந்தது. அதைநோக்கி நகர்ந்தான். இடுப்பில் பிள்ளையோடு நின்றிருந்த அம்மன்… இசக்கியம்மன் மாதிரி இருந்தது. அந்த கோவிலின் திண்ணையிலேயே அமர்ந்துகொண்டான், ஏதோ சின்னதாய் திருவிழாவுக்குரிய அறிகுறிகள் தெரிந்தது. தூரத்திலிருந்து பம்பையும் உடுக்கையும் சத்தம் கேட்டது. ஆட்கள் நடமாட்டம் கணிசமாய் இருந்தது. அவ்வப்போது ஆடுகள் வந்து குறுக்கும்மறுக்கும் நடந்து அவன் அமர்ந்திருப்பது தங்களது இடம் என நிரூபிக்க முயன்றுகொண்டிருந்தன.
சிந்தனை, குரல்சிகிச்சையை நோக்கிச் சென்றது. இரண்டுநாள் கழித்து திருநெல்வேலிபோய் சிகிச்சைக்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என எண்ணிக்கொண்டான். பசித்தது, மடியிலிருந்து பணம் எடுத்து அருகிருந்த பெட்டிக்கடை சென்று, வாழைத்தாரை நோக்கி சுட்டிக்காட்டி பழம் வாங்கி உண்டான்.
மறுபடி கோவில்வந்து அமர்ந்துகொண்டான். நிறைய சத்தங்கள் நிறைந்திருந்தது, உடுக்கையும் பம்பையும் நெருங்கிவருவதுபோல் தோன்றியது. ஓசை, இசை என எல்லா சத்தங்களையும் அலையின் சத்தம் அதட்டிச்சுருட்டி ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது போல் உணர்ந்தான். அலையின் சத்தம் மிகப்பெரிய சத்தமல்ல, ஆனால், ஆளுமை மிக்க சத்தம். உலகின் எந்த மனிதன் கடல்முன் வந்து நின்றாலும், அவன் உடலை ஏற்கனவே அறிந்த… அவன் வாழ்கிற நிலத்தை ஏற்கனவே அறிந்த நீர்த்துளிகள் நிச்சயம் கடலில் இருக்கும். அலையோசை என்பது யாவரையும் அறிந்த நீர்த்துளிகள் தமக்குள் பேசிக்கொள்ளும் குரல், மௌனத்தின் பேரிரைச்சல். ஒவ்வொரு ஊரின் பாவம் செய்தவர்களையும், பாவம் சுமத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்து சேர்த்த சிறைச்சாலையில் இரைந்துகொண்டிந்த அவனது மௌனத்தைப் போல் உள்ளொன்று வைத்து இரைகிற கடல்.
மிக அருகில் வந்துவிட்டது பம்பையும் உடுக்கையும்.
திடீரென தன் மனதின் குரல் ஆண் குரலா பெண்குரலா என கேள்வி எழுந்தது அவனுக்கு. தன்னைத்தானே மனதுக்குள் அழைத்துப் பார்த்தான்…
“கற்குவேல்…”
‘பெண்குரல்தான்…
அழகான பெண்குரல்…
இதுதான் என் மனதின் குரலா?
இதை நான் ஏன் பிரியவேண்டும்?
இதைப் பிரிந்துவிட்டால் என்னுடன் வளர்ந்தவர்கள் என்னை கற்பனையாய் மரணிக்கச் செய்ததுபோல், நானும் இந்தக் குரலை மரணிக்கச் செய்துவிடுவேனா…
இது என் குரல்…
இதுவே என் குரல்…
பல வருடங்கள் எனக்குள்ளேயே பயணிக்கிற குரல்’ சிந்தனைக்குள் கற்குவேல் ஆழ்ந்து கொண்டிருக்கும்போது, பம்பையும் உடுக்கையும் வாசிப்போரும் அதனுடனே ஆடிக்கொண்டுவருவோரும் கோவிலுக்கு மிக நெருங்கி வந்தனர்…
உடலெல்லாம் அதிர்ந்தது கற்குவேலுக்கு, உடல்மொத்தமும் குரலாகி ‘என்னைக் கொஞ்சம் வெளிவிடேன்’ என்று அலறியது போல் இருந்தது, புருவமத்தியில் விண்விண்ணென நரம்பு தெறித்தது.
“ஏஏஏ…ய்…”
ஆக்ரோசமாய் கத்தினான்…
உடுக்கையின் முன் ஆடத்தொடங்கினான்.
“எல்லாவனும் கேளு… எல்லாவளும் கேளு… இது என்னோட குரலு…” ஆண் உடலிலிருந்து கணீர்கணீரென பெண்குரலில் வந்துவிழுகிற அந்த ஆளுமை மிக்க குரல்கேட்டு கூட்டமே மிரண்டது… ‘ஆத்தா வந்திருக்கா… ஆத்தா வந்திருக்கா…’ எனப் பேசிக்கொண்ட கூட்டத்தை நோக்கி “ஆத்தானு கூப்புடாத… அப்புராணினு கூப்புடு… அடங்கியொடுங்கி வா இந்த அப்புராணிக் குரலு முன்னாடி…! காத்துக்கெட எங்குரலு கேக்க…! வார்த்தைய வரமா வாங்கிக்க…!”
நிறைய வருடங்கள் கழித்து இவ்வளவு சத்தமாய் கத்துவதால் குரல்வளை கிழிந்துவிடுவதுபோல் வலித்தது கற்குவேலுக்கு… குழந்தைப் பருவத்தில் இவ்வளவு கத்தியிருப்பானா… அதே உற்சாகம் வந்ததுபோல் குதித்துக் குதித்து என்னென்னவோ கத்தினான்… கத்திக்கத்தி மயக்கமே வந்தது அவனுக்கு.
மயக்கத்திற்குள் நழுவிப்போகும் வேளையில், “அப்புராணிச்சாமி கொரலு… தெய்வீகக் கொரலு… தவமா தவமிருக்கனும்யா இப்டி ஒரு கொரலு வாய்க்க…” என யாரோ யாரிடமோ கூறுவதுகேட்டது.