
காலை ஏழு மணி வாக்கில் வீட்டில் யாரும் இன்னும் கண் விழித்திருக்கவில்லை. எனக்குத் தூக்கம் தெளிந்துவிட்டிருந்தது. தலைமாட்டில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வந்து டிவியை உயிர்ப்பித்து, இருபத்திநாலு மணி நேரம் பாடல்கள் ஒளிபரப்பும் சேனல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சத்தத்தைப் பாதியாகக் குறைத்து வைத்துவிட்டு பல்துலக்க நகர்ந்தேன்.
”நிழலாக நீ காணும் கானல் நீர்
நிஜமாக உன் தாகம் தீர்க்காது
நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்
அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது
கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே“
வாழைத்தோப்புகளுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த கார்த்திக்கிற்கு ஸ்வர்ணலதாவின் குரலில் ஏதோ ஒரு மலையாள நடிகை ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, காலையிலேயே சோகப்பாடல் வேண்டாமென அவசரமாய் வேறு சானலுக்கு மாற்றிவிட்டுப் போகையில் ஃபோன் விறுவிறுத்தது.
”பெரிய புள்ள… நல்லாருக்கியாடி.. அம்மாப்பால்லாம் எப்புடியிருக்காவ்வொ… சவுரியமா? ஒரு சேதிடி.. அதான் காலைலங்காட்டியும் போனடிசேன்…“ வடிவு ஆத்தா மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினாள்
”சொல்லுங்கத்தா…நா நல்லாருக்கேன். அப்பா அம்மாலாம் நல்லா இருக்காங்க. என்னா சேதி?” ஒரு மாதிரி எரிச்சலான பதட்டத்துடனேயே கேட்டேன்.
“இஞ்ச.. மணக்குடியில ஒன் கூட்டாளி ஒருத்தன் இருப்பான்ன.. தெக்குத் தெரு ரேடியோ கட வூட்டு பய.. வைரம்.. அவன் சாணிப்பவுடர கரச்சு குடுச்சுப்டாம்ப்பா..தலைஞாயித்துல வெச்சு பாத்துது அப்புறம் நாவப்பட்டிணம் பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போவ சொல்லிட்டாவொ போல…அதான் ஒனக்கு சேதிய சொல்லுவோம்னு”
“சேரித்தா… நா இப்ப மெட்ராஸ்ல வேலைல இருக்கேன். அடுத்த வாரம் ஊருக்கு வரும்போது வந்து பாக்குறேன். இப்ப வேலக்கி போறேன். அப்புறமா போனடிக்கிறேன்” என அவசரமாக அழைப்பைத் துண்டித்தேன்.
வைரம் என்கிற வைரமணி. கல்லூரிப்படிப்பை முடித்து வேலை தேடி மெட்ராஸ் வந்த இந்த இடைவெளியில் அவனைக் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். மனம் மெட்ராஸிலிருந்து நாகைக்கும் மணக்குடிக்குமாய் அலைபாயத்துவங்கியது.
நாகப்பட்டிணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறுவயதில் தெரிந்த ஒரே கிராமம் மணக்குடி மட்டுமே. அப்பாவழிச் சொந்தமான லெச்சு தாத்தா என்கிற லஷ்மிபதி தாத்தாவும், வடிவு ஆத்தாவும் மணக்குடியில் இருந்தார்கள். எனக்கு நினைவு தெரிந்து ஒவ்வொரு பள்ளிக்கால கோடை விடுமுறையின் போதும் அப்பா கட்டாயமாய் ஒரு வாரமாவது மணக்குடியில் தங்கும்படி கொண்டுபோய் விட்டுவிடுவார். அப்படியொரு கோடை விடுமுறையில்தான் வைரம் அறிமுகமானான்.
அவர்கள் வீட்டு ரேடியோ கடையின் மின்னணு பொருட்களை வைத்து எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பான். பனையோலைக் காத்தாடியில் ரேடியோ மோட்டாரை இணைத்து பேட்டரியும் ஸ்விட்ச்சும் வைத்து ஓடவிட்டதுதான் அவனைப் பார்த்து நான் முதன்முதலில் வியந்தது. அன்றிலிருந்து நாங்கள் நண்பர்களானோம். வைரத்துக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. கடையில் கற்றுக்கொண்ட எலக்ட்ரானிக் வேலைகள் தவிர்த்து இன்னும் என்னவெல்லாமோ செய்வான். செய்தித்தாளில் பார்க்கிற விளம்பரங்களை நோட்டுப் புத்தகத்தில் வரைந்து அச்சு அசலாக வாட்டர் கலரில் வண்ணமடிப்பான். ஆடு, மாடுகளோடு பேசுவான். இவன் சொன்னால் அவைகள் கேட்டுக்கொள்ளும். அல்லது எனக்கு அப்படித் தோன்றும்.
ஒவ்வொரு முறை விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போதும் அப்பாவை நச்சரித்து அவனுக்காகக் கதைப்புத்தகங்கள், வண்ணக் குப்பிகள், ப்ரஷ்ஷுகள் என எதையாவது வாங்கித்தரச் சொல்லிக் கொண்டுபோவேன். பதிலுக்கு என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் படங்கள் வரைந்து தந்தனுப்புவான். அல்லது சின்னதாய் ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் பொருளைத் தருவான். நாங்கள் பதின்பருவத்தில் அடியெடுத்து வைக்கையில் வைரத்தின் சித்தப்பா ரேடியோ கடையை வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையாக மாற்றினார். ஆனாலும் பழைய பாசம் விடாமல் அக்கம் பக்கம் ஊர்களுக்கு ஸ்பீக்கர் வாடகைக்குத் தரும் சோழன் சவுண்ட் சர்வீஸையும் ஆரம்பித்தார்.
சவுண்ட் சர்வீஸுக்கான பொருட்களை வைக்க கடைத்தெருவுக்கு வெளியே பாதி தென்னங்கீற்றும் பாதி ஓடுமாய் வேய்ந்த ஒரு பழைய வீட்டையும் பிடித்திருந்தார் வைரத்தின் சித்தப்பா. உண்மையில் அது வீடெல்லாம் இல்லை ஒற்றை ஜன்னல் கொண்ட ஓர் அறை. அவ்வளவே. வைரம் அந்த அறையைத் தன்னுடைய இடமாக்கிக் கொண்டான். பள்ளி முடிந்து வந்ததும் கடைக்குப் போய்விட்டு நேரே இங்கு வந்துவிடுவான். அந்த அறை முழுக்கவும் பெட்டி ஸ்பீக்கர்கள், பெரிய குழாய் ஸ்பீக்கர்கள், ஆம்ப்ளிஃபையர்கள், பழைய ரேடியோ டேப் ரெக்கார்டர்கள், மைக் செட்டுகள், ஒயர்கள் என அடுக்கிக் கிடக்கும். இன்னொரு பக்கம் ஒரு பெரிய மரப்பெட்டி முழுக்க பழையதும் புதியதுமாய் தமிழ்த்திரைப்படப் பாடல் கேசட்டுகள் குவிந்து கிடக்கும்
நான் மணக்குடி போகும்போதெல்லாம் ஊரைச் சுற்றிவிட்டுப் பாட்டுக்கேட்க அறைக்கு வந்துவிடுவோம். கொட்டாங்குச்சியில் ட்வீட்டர் வைத்து சால்டரிங் செய்து சின்ன ஸ்பீக்கர், மண் பானையில் வைத்து டேப் சுற்றிய வூஃபர் என எல்லாமே வித்தியாச வித்தியாசமாய் எதையாவது செய்து வைத்திருந்தான் வைரம்.”ஆளு..இப்ப ஒரு கேசட்டு போடுறேன்.. கொரலு எப்புடி இருக்கு கேட்டுப்பாரு..” என்றபடி ஒரு கேசட்டை எடுத்துப் போட, நூறு வயலின்கள் இசைக்க மெல்லிய குழலிசை பின்தொடர,”மாலையில் யாரோ மனதோடு பேச…மார்கழி வாடை மெதுவாக வீச..” என பாடல் ஒலிக்கத் துவங்கியது. அடுத்த நான்கரை நிமிடங்களுக்கு ஆளுக்கொரு மூலையில் சுவரில் சாய்ந்தபடி, அவரவர் மனதுக்குப் பிடித்த பெண்ணொருத்தி எங்கோ ஓர் ஊரில் எங்களுக்காகப் பாடிக்கொண்டிருப்பதாக கனவு கண்டபடி அமர்ந்திருந்தோம்.
பாடல் முடிந்ததும் வைரம் டேப்பை நிறுத்திவிட்டு கேட்டான்,”டேய்..ஆளு… இந்தப்பாட்டு வந்து ஒரு நாலஞ்சு வருசம் இருக்கும். ரேடியாவுல கேட்டத டேப்புல கேக்க எப்புடி இருக்கு பாத்தீல்ல..”
“ஆமாடா..அப்டியே சத்தமெல்லாம் மணி மணியா கேக்குது.. பாடுனதும் அப்புடி பாடிருக்கு.. அது யாருடா..பேரென்ன?”
“பேரு சொர்ணலதா டா.. வேற நெறைய பாட்டு பாடியிருக்கு .. ஒரு 90 கேசட்டு முழுக்க பதிஞ்சு வெச்சுருக்கேன். சொர்ணம்னா சும்மாவா. பேருக்கேத்தாப்ள தங்கமாட்டம் கொரலு ”
அப்படித்தான் ஸ்வர்ணலதா எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்தார். அதன்பின் எப்போது மணக்குடி போனாலும்,வைரம் அந்த சவுண்ட் சர்வீஸ் கீற்று வீட்டில் ஏதாவது ஒரு ஸ்வர்ணலதா பாடலை திரும்பத்திரும்ப ஒலிக்கவிட்டபடி உட்கார்ந்திருப்பான்.”லேய்… வேற பாட்டு எதாவது போட்றா ஆளு..” என்றால்,”நீ கம்முன்னு கேளு… ” என்றபடி அடுத்த பாட்டை ஓடவிடுவான் .
“ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னைச் சேர்க்கிறேன்..நீ தானே நாள்தோறும்..நான் பாட காரணம்..”
பாடல் ஓடிக்கொண்டிருந்த போதே திடீரென,”லேய் ஆளு.. நான் சொர்ணத்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..என்னா சொல்ற?“ என்றான்.
“எந்த சொர்ணம் டா? யாரு வூடு?” தெரிந்தேதான் கேட்டேன்
”எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்”
பாட்டை நிறுத்திவிட்டு பட்டெனத் திரும்பினான்
“லேய்.ஆளு சொர்ணலதா டா.. இந்தப் பாட்டு பாடுன சொர்ணம்..”
“ ஆங்..பண்ணுவ பண்ணுவ.. ஒப்பாரையும் ஆத்தாவையும் கூப்டுக்க… அவ பாடுற எடத்துக்கு போயி பரிசம் போட்டுத் தட்ட மாத்திட்டு வந்துருவோம்“ என்னால் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் அவனைச் சீண்டினேன்.
“லேய்…சும்மா சொல்லல நெசம்மாதான். இப்ப அடுத்து பாலிடெக்னிக் சேரப்போறேன். அப்புறம் மெட்ராசுக்கு வேலக்கி போயிட்டு அவளப் பாத்து கேட்ரலாம்னு இருக்கேன்”
”லேய்..ஒளராதடா ஆளு. அவங்கலாம் சினிமாக்காரங்க .பெரிய பணக்காரங்களா இருப்பாங்க ஒன்னவிட நாலஞ்சு வயசு மூப்பா இருப்பா. ஊர்ல எப்டி ஒத்துப்பானுவோ? நீ எங்கெயோ கெடக்க. அவ எங்கெயோ கெடக்கா. எப்புடிப் பாத்தாலும் சரியா வராதுடா. உன்னய உள்ளவே உட மாட்டானுவொ” கொஞ்சம் தீவிரமாகவே சொன்னேன்
“வயசாவது காசாவது ஒன்னாவுது. நம்மள புடிச்சா போதாதா. ஏங்க..கல்யாணம் கட்டிக்கங்க. ஒங்கள நல்லா பாத்துப்பேன். கூடவே கெடக்கேன்னு கால்ல உளுந்துடுவேன்” அவனும் விடாமல் பேசினான்
”லேய்.. வைரம்…அவ மலையாளத்துக்காரியாம்டா பேப்பர்ல போட்ருந்தான். ஆளு போட்டோவப் பாத்தியா..சேப்பா இருந்தாலும் பல்லு வேற எடுப்பா இருக்கு..” இன்னும் சீண்டியதும் சுர்ரென கோபப்பட்டான்
”நம்ம மொவரையெல்லாம் வெச்சுகிட்டு பெரத்தியார பேசக்கூடாது கம்னேட்டி… எந்த பாசையா இருந்தா என்ன? எப்புடி இருந்தா என்னடா.. நிறுத்தி நாலு வரி அவ பாடுனாக்க கல்லுக்கு உசுரு வந்துரும்டா. நான்லாம் அதுக்கே காலத்துக்கும் அவ கால்ல உளுந்து கெடப்பேன் . நீ ஓன் வேல மயிரப்பாரு” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தான்
பொறுமையாக அவனைச் சமாதானப்படுத்தி விட்டு ஊர் வந்து சேர்ந்தேன். நான் திருச்சியில் கல்லூரியிலும் அவன் வேதாரண்யத்தில் பாலிடெக்னிக்குமாக சேர்ந்தோம். ஊருக்குப் போவதே குறைந்து போனதால் மணக்குடி பக்கம் போகவே இல்லை. விடுமுறை நாட்களில் அவ்வப்போது விடுதியிலிருந்தோ அல்லது காயின் ஃபோனிலிருந்தோ வைரத்தின் சித்தப்பா கடைக்கு அழைத்துப் பேசுவேன். சம்பிரதாய நல விசாரிப்புகளுக்குப் பின் ஏதாவது ஒரு ஸ்வர்ணலதா பாடிய பாடலைச் சொல்லி , அதைக் கேட்டியா இதைக் கேட்டியா என விசாரிப்பான்.
”வாக்மேன் இருக்கா? நம்ம கடைல பழசு ஏதும் இருந்தா யார்ட்டயாச்சும் குடுத்தனுப்பவா. கேசட்டோட அனுப்புறேன்.”
“மாப்ள..வைரம்…அதுக்கெல்லாம் நேரமே இல்லடா காலேஜ் நேரம் போவ வாலிபால் ஆடவே சரியா இருக்கு. இங்க பயலுவ கொஞ்ச நேரம் சும்மான்னு உடமாட்றனுவோ” சலித்துக் கொண்டேன்
”சரிடா ஆளு. இஞ்ச வந்தா சொல்லு. பாப்பம்” உரையாடலை முடித்துக் கொள்வோம்.
மனசு நாள் முழுக்க வைரம் பற்றிய நினைவுகளை அசைபோட்டபடியே இருந்தது. ஸ்வர்ணலதாவை நினைக்காமல் வைரத்தை நினைக்கவே முடியாது. கல்லூரி முடித்து நான் வேலை தேடி மெட்ராஸ் வந்ததும், அப்பா அம்மாவையும் கூடவே அழைத்து வந்துவிட்டபடியால் அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. கேசட்டுகள் கொஞ்சமாய் மறைந்து சிடிக்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. செல்ஃபோன்கள் புழக்கமும் கொஞ்சமாய் பரவலானது.
திடீரென ஃபோனில் அழைப்பான். ஏதாவதொரு ஸ்வர்ணலதா பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். ”இந்த குளிருது குளிருது பாட்ட கேட்ருக்கியாடா ஆளு.. எப்புடி பாடிருக்கால்ல? எனக்கு அப்டியே கிர்ருன்னு ஆகிப்போச்சு..”அவன் பேசிகொண்டே போக எனக்கு சலிப்பாக இருக்கும்.
“ஏன்டா ஆளு.. இந்தப்பாட்டுல என்னத்தடா கண்ட…”
“உனக்கு நாஞ்சொல்றது என்னைக்கி புரிஞ்சுருக்கு? நீ போயி பொளப்பப் பாரு போ”
வைரம் பாலிடெக்னிக் முடித்துவிட்டு ஊரில் கடையைப் பார்த்துக் கொண்டு சித்தப்பாவுக்கு உதவியாக இருப்பதாகவும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் துபாய்க்கு எலக்ட்ரிக்கல் வேலைக்குச் செல்லப்போவதாகவும் சொல்லியிருந்தான்.
நாட்கள் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் ஊரும் , மணக்குடியும், வைரமும், ஸ்வர்ணலதாவும் மனதிலிருந்து மறைந்து போனார்கள். சில ஆண்டுகள் கழித்து திடீரென ஒருநாள் காலையில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கையில் காலைச் செய்திகளில் பாடகி ஸ்வர்ணலதா மறைந்த செய்தி ஒலிபரப்பாக, மூளை உடனே வைரத்தை நினைவூட்ட அவனுடைய எண்ணுக்கு அழைத்தேன். எடுக்கவில்லையெனக் கடை எண்ணுக்கு அழைக்கச் சித்தப்பா பேசினார்.
“காலைலேர்ந்து சவுண்ட் சர்வீஸ்லயே கெடக்காம்ப்பா. என்னான்னே சொல்ல மாட்டேங்கிறான். சோறு தண்ணி இல்ல. ஒன்னு இல்ல. அவனா வெளிய வந்தான்னா ஃபோனடிக்க சொல்றேன். நீ எப்பையாச்சும் இந்தப் பக்கம் வந்தா ஊட்டுக்கு வா” சுருக்கமாக முடித்துக்கொண்டார் . அந்த நாள் முழுக்கவும் எனது சிந்தனை அவனைப் பற்றியதாகவே இருந்தது . எவ்வளவு முயன்றாலும் என்னால் உறங்கவே முடியவில்லை.
வைரம் அந்த சவுண்ட் சர்வீஸ் அறையில் அவனுடைய சொர்ணாவுடன் மனதால் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த அறையை அவனாக உருவகித்துக் கொண்டால், அந்த அறைக்கு வெளிச்சமும் காற்றும் அனுமதித்த ஒற்றைச் சாளரம் அவளுடைய பாடல்கள்தான். கண்விழித்தது முதலாய் கண்ணயரும் வரையிலுமாக, விடியல் தொடங்கி இருளும் வரையிலுமாக, அவளுடைய குரலும் அந்தக் குரல் பாடிய பாடல்களின் சொற்களுமாக அந்த அறையைச் சூழ்ந்து நிறைத்துக் கொண்டிருந்தன. அவனைச் சுற்றியிருக்கிற உலகிற்கும் அவனுடைய மெய்மைக்குமான இடைவெளி நிதானமாய் வளர்ந்து கொண்டேயிருந்தது . தன்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிற குரலின் துணுக்குகளால், பாடல்களின் சொற்களால், இசையின் சிதறல்களால் தன்னை மூழ்கடித்துக் கொள்ள ஓர் பெருங்கிணற்றை அவன் கட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது
அவன் தன்னையறியாமல் தொலைந்து கொண்டிருக்கின்றானா அல்லது தெரிந்தே விடைபெற்றுக்கொண்டிருக்கிறானா எனக்கு கொஞ்சமும் புரியவே இல்லை. அவனை அங்கிருந்து மீட்டுவிடும்பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் அவன் எந்த ஒன்றையும் பற்றிக்கொள்ள விரும்பவில்லை. கலங்கிய கண்களுடனும் ஒரு புன்னகையுடனும் அந்தக் குரலில் லயித்தபடியே அவன் அந்த பெருங்கிணற்றினுள் இறங்கிக் கொண்டிருந்தான். சுற்றியிருந்த கூச்சல்களும் சப்தங்களும் ஓசையற்றுப் போயின. அவன் கைகளில் பற்றிக் கொண்டிருக்கிற பாடல்களின் குரலால் மெல்ல அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான். பாடல் மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது
“வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா…
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா…
உந்தன் அன்பு இல்லாது…
எந்தன் ஜீவன் நில்லாது…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…”
தூங்கி எழுகையில் களைப்பாக இருந்தது எனக்கு. இன்னமும் வைரம் பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளை ஸ்வர்ணலதாவுக்காக அழுதுகொண்டிருப்பானோ. இன்னும் மனதில் அதே எண்ணத்துடன்தான் இருக்கிறானா? என்ன பைத்தியக்காரத்தனம் இது. எங்கோ இருக்கிற, வாழ்நாளில் ஒரு முறை கூடப்பார்த்திராத, பார்க்க முடியாத பெண்ணின் மீது அப்படியென்ன காதல்? காதலா இது. சுயத்தை மறந்து, தன்னையே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக் கொண்டு, சுற்றியிருக்கிற உலகம் குறித்தோ மனிதர்கள் குறித்தோ பிரக்ஞை இல்லாமல். பித்துக்குளித்தனம். கிறுக்குத்தனம். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஊரை விட்டு வெளியில் வந்தால்தானே உலகம் புரியும். அங்கேயே உட்கார்ந்து குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்தால் எப்படி உருப்படுவதாம்? வைரத்தின் மீது கோபமாய் வந்தது எனக்கு. அலுவலகம் கிளம்பிச் சென்றதும் எல்லாம் மறந்து போனது. ஓரிரு வாரங்கள் கழித்து வைரம் ஃபோனில் அழைத்திருந்தான்.
“சொல்றா..எப்புடி இருக்க? இன்னனும் சொர்ணத்த நெனச்சு ஒப்பாரி வெச்சுட்டு இருக்கியா?“
அவனுக்கு சுருக்கென்றிருக்க வேண்டும்
“ஹ்ம்ம்.. என்னமோ நெனைக்கிறேன் என்னமோ பண்றேன்.. ஒனக்கென்ன. சும்மா விசாரிப்பமேன்னு ஃபோனடிச்சா என்னையவே போட்டு தாளிச்சுட்டு இருக்க. கம்னேட்டி. அவ எனக்குதான் சொர்ணம் ஒனக்கில்ல”
“கோவிச்சுக்காதடா ஆளு.. எப்ப வேலைக்கு போற? எப்ப கல்யாணம் பண்ற? சொல்லு ”
”கல்யாணமா..இனிமே நான் எங்க போயி யாரத்தேடி கல்யாணம் கட்ட?“ ஒரு மாதிரி விரக்தியாகச் சிரித்தபடி பதில் சொன்னான்
“சாமியாராட்டம் பேசாதடா ஆளு. இஞ்சயாச்சும் கெளம்பி வா. ஊர்லயே கெடக்காம. பாட்டு கேக்குறத நிப்பாட்டு கொஞ்ச நாளக்கி”
”அதெல்லாம் நிப்பாட்ட முடியாது. அவள ஒருவாட்டியாச்சும் நேர்ல பாத்துருக்கலாம். ஒரு லெட்டராச்சும் போட்டுருப்பேன். இப்ப எங்க போயி தேட. பாட்டு கேசட்ல தான் கெடக்கா”
அவன் விசும்புவதுபோலத் தோன்றியது. எனக்கு அவனுடைய அறியாமையை நினைத்து வருந்துவதா அல்லது அவனுக்கு ஆறுதல் சொல்லுவதா எனத் தெரியவில்லை.
”வுடுடா ஆளு. இதெல்லாம் அப்டியே காலப்போக்குல மனசு மாறிடும். நீ போட்டு கொளப்பிக்காத. சித்தப்பாட்ட சொல்லி பொண்ணு தேடுவோம்”
பேச்சை மாற்ற முயன்றேன்
“ஒனக்கு நா சொல்றது புரியாது. நீ ஒன்னும் சொல்ல வேணாம் யார்ட்டயும். நாம் போறேன்”
பேச்சு அப்படியே வழக்கமான விசாரிப்புகளுடன் முடிந்தது. பின்பு நாங்கள் பேசிக்கொள்வது முற்றாக நின்றுபோனது. மணக்குடியிலிருந்து ஆத்தாவோ அத்தையோ ஃபோனில் அழைத்தால் அவனைப் பற்றி விசாரிப்பேன். சுற்றுப்பட்டு ஊர்களில் படித்த பெண்ணாக தேடுவதாகச் சொல்வார்கள். கேட்டுக் கொள்வேன். அதன் பிறகு எங்கெங்கோ பெண் தேடியதாகவும் எல்லாமே ஏதோ ஓர் காரணத்தால் அமையாமல் போனதாக ஆத்தா ஃபோன் பேசும்போது சொல்லியிருந்தார், பின்பு ஓரிரு வருடங்களுக்குப் பிறகு வைரத்தின் சித்தப்பா ஃபோனில் அழைத்து அவன் குறித்து சொன்னார்.
”தம்பி… எப்பயும் போலதான்டா பொண்ணு பாக்க இவனக் கூப்டுட்டு தோப்புத்துறைக்கு போயிருந்தோம். பொண்ணு ஊடு பெரிய வசதி ஒன்னும் இல்ல. அரமனசாதான் ஜாதகம் குடுத்ததா ஜோசியர் சொன்னாரு. இந்தப்பயலும் அரமனசாதான் அங்க வந்தான்; பொண்ணுட்ட ஒரு நிமிசந்தான் பேசிருப்பான். பட்டுன்னு வந்து என் காதுல ,கட்டுனா இந்தப் பொண்ணதான் கட்டிப்பேன்னான். யப்பா பயலுக்கு ஒரு வழியா மனசு வந்துச்சேன்னு சந்தோசப்பட்டா, பொண்ணு ஊட்ல கொஞ்சங்கூட புடி குடுக்க மாட்றானுவோ. இவனும் அந்தப் பொண்ண நெனச்சுட்டே கெடக்கான். நீயாச்சும் பேசிப்பாரு” மனதிலிருந்த அத்தனையையும் மடமடவென கொட்டித் தீர்த்தார்
நான் வைரத்தின் எண்ணுக்கு அழைத்தேன்.. ”ஆளு. எப்பிட்றா இருக்க? பொண்ணு பாக்க போனீங்களாம்ல சித்தப்பா சொன்னாப்ள. என்னா பிரச்சன?”
“தெரியல டா.. எனக்கு இவ போதும்னு இருந்தது போயி இவதான் வேணும்னு இருக்கு. பொண்ணூட்ல புடி குடுக்காம, பட்டும் படாம பேசுறானுவோ. பொண்ணு கூடவும் பேச உட மாட்றானுவோ. எரிச்ச மசுறா இருக்கு. ஆனா, இந்தப் பொண்ணுட்ட பேசி அவ சரின்னுட்டா எல்லாமே சரியாயிடும்னு தோணுது… ஒரு மாதிரி கூடி வந்தாப்ள இருக்கும்”
‘கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது…
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட…
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்…
ஆழ்நிலையில் அரங்கேற…
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு…
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு…
காண்பவை யாவும் சொர்க்கமேதான்…”
பின்னால் சத்தமாக பாடல் ஓடிக்கொண்டிருந்தது
”சரி விட்றா. இது இல்லாட்டா என்ன. ஊர்ல வேற பொண்ணா இல்ல. சித்தப்பாட்ட நான் பேசுறேன்.”
“லேய் ஆளு. உனக்கு நான் சொல்றது எப்பவுமே புரிஞ்சதேயில்ல. இனிமேலும் புரியப்போறதில்ல. நீ ஃபோன வெச்சுட்டுப் போயி உன் பொழப்பப் பாரு” பட்டென மொத்தமாகத் துண்டித்துக் கொண்டான்
எனக்கும் அத்தோடு மனசு விட்டுப் போனது. இது நடந்து சரியாக ஆறு மாதம் கழித்து இவன் மருந்து குடித்த செய்தி. பைத்தியக்காரப் பயல் என்ன பண்ணித் தொலைத்தானோ என்றிருந்தது. வெள்ளிக்கிழமைதான்.. முடிந்தால் மாலையில் கிளம்புவோம் என நினைத்தேன். அலுவலகம் முடிந்து வந்து வீட்டில் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினேன். விடியற்காலையில் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்குச் சென்று இறங்குகையில் வைரத்தின் சித்தப்பாவை ஃபோனில் அழைத்தேன். பதிலில்லை. ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் வைரத்தின் எண்ணுக்கே அழைத்தேன். அப்போதும் பதிலில்லை. கொஞ்சம் நேரம் எதுவும் புரியாமல், யோசிக்காமல் மருத்துவமனைக்கு உள்ளேயும் வேளியேயுமாய் நடந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.வெளியே எங்கோ டீக்கடையில் இருந்து பக்திப்பாடல் மங்கலாக ஒலித்துக் கொண்டிருந்தது
”ஐயய்யோ… யப்பாடி என் புள்ள பெய்ட்டாண்டி… எம்புள்ளைய வாரிக் குடுத்துட்டனே..” அலறிக்கொண்டு ஓடிவந்து விழுந்து அழுதாள் வைரத்தின் அம்மா… அவரைத் தாங்கிப் பிடித்தபடி வைரத்தின் அப்பாவும், அவரின் பின்னே ஸ்ட்ரெட்சரில் என் வைரமும். அருகில் சித்தப்பா யாரிடமோ ஃபோனில் பேசியபடி கலங்கிய கண்களுடன் நிற்க, நான் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அம்மாவின் கைகளைப் பிடித்தபடி தரையில் முழங்காலிட்டிருந்தேன். அழவில்லை…! கண் மட்டும் கலங்கியபடியே இருந்தது. பொறுமையாக எனது கைகளை விடுவித்துக் கொண்டு பிணக்கிடங்கின் முன்னே ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த வைரத்தின் அருகே சென்றேன். சில்லிட்ட அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அவன் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். அவன் இல்லையென்கிற உணர்வை மிஞ்சி அவன் இருக்கும்போதே பேசியிருக்கலாமோ என நெஞ்சம் முழுக்க குற்ற உணர்ச்சி மிகுந்திருந்தது. தொடர்ந்து பேசியிருந்தால் ஏதேனும் சொல்லியிருப்பானோ? செய்தி கேட்டவுடன் கிளம்பி வந்திருந்தால் நம்மைப் பார்த்திருப்பானோ? போயிருக்க மாட்டானோ? நெஞ்சை அறுக்கிற ஆயிரம் கேள்விகள்
”பரிசமும் போடல…பளகவும் இல்ல.. இப்பதானடா புள்ள அந்த பொண்ண பாத்த..அதுக்குள்ள என்னடா அவமேல.. ஊர்ல வேற பொம்பளப் புள்ளயே இல்லயாடா..அப்படி என்னடா அவமேல..” அம்மா கதறிக் கொண்டிருந்தாள்
அருகில் வந்த சித்தப்பாவிடம் கேட்டேன். ”என்னாச்சு சித்தப்பா? எப்புடி? யாரு அந்த பொண்ணு? அந்த தோப்புத்துறையான் ஊட்டு பொண்ணுதானா? இவன்ட்ட பேசி ஏதும் சொன்னானுவளா”
“அடகுக்கட கணேசனோட ரெண்டாவது பொண்ணுதாண்டா தம்பி சொர்ணவல்லியோ என்னமோ பேரு. இவன் அவள முன்னப்பின்ன பாத்தது கூட இல்லடா. அன்னைக்கு பொண்ணு பாக்க போனப்பதாண்டா பாத்தோம். ரெண்டு நிமிசம் பேசிருந்தான்னா அதிகம். அவனுவோ என்னமோ ஜாதவம் சரியில்ல அது இதுன்னு பதில் சொல்லாம இளுத்தடிச்சானுவோ.. இந்தப்பய மனசுல என்னத்த நெனச்சான்னு தெரியல…இஞ்ச பாருடா தம்பி இவன…” சொன்னபடியே அவன் சட்டை காலரைப் பிடித்து விலக்க இடது தோள்பட்டைக்கு கீழே நெஞ்சுக்கு மேலே ‘வைரம் சொர்ணம்’ என பச்சை குத்தியிருந்தது
எனக்கு சட்டென எல்லாமும் புரிந்தது போல் இருந்தது. கட்டுப்படுத்தவே முடியாமல் வெடித்து அழுதேன். ”ஏன்டா ..வைரம்… ஏன் டா.. ஏன் டா இப்புடிப் பண்ண..ஏன்டா ஆளு…” வேறு எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. பேசத் தோன்றவில்லை. அவனிடம் கேட்க வேறு எந்தக்கேள்வியும் இல்லை. ஆனாலும் உள்ளுக்குள்ளே ஆயிரம் கேள்விகள். ஆயிரம் சமாதானங்கள்
என்ன நினைத்திருப்பான்? இவனுடைய சொர்ணத்தை அதே பெயருடைய வேறு பெண்ணிடம் தேடியிருப்பானா? சாயலா? குரலா? அல்லது வெறும் பெயரா? அதே பெயருக்காகவாடா இத்தனை ஏக்கம்? கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். ஊரைவிட்டு வந்திருக்கலாம். திரும்பத் திரும்ப அவளுடைய பாடல்களையே கேட்டு மனதில் அவளையே வறித்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். வேறு யாரையாவது காதலித்திருக்கலாம் . உண்மையில் ஸ்வர்ணலதாவுக்கு ஒரு காதலன் இருந்திருப்பானா? இருந்திருக்கலாம். அல்லது எங்கோ மணக்குடியில் ஒரு பைத்தியக்காரன் அவளை உருகி உருகி நேசித்ததையாவது அவள் அறிந்திருக்கலாம். வைரத்துக்கு அவனுடைய சொர்ணம் கிடைத்திருக்கலாம். அல்லது ஏதாவதொரு சொர்ணத்துக்கு என் வைரம் கிடைத்திருக்கலாம். இனி இந்த உலகில் தனக்கு எந்த நல்லதும் நடக்கப் போவதில்லையென அவன் நம்பாமல் இருந்திருக்கலாம். துபாய்க்கு வேலைக்குப் போயிருக்கலாம். முப்பத்தியேழு வயதில் திடீரென ஸ்வர்ணலதா சாகாமல் இருந்திருக்கலாம்.
எதற்கும் பதில்களோ விளக்கங்களோ இல்லை. நானும் இந்த உலகும் என்ன நினைத்தாலும் , வைரம் சொன்னது போல,” உனக்கு நான் சொல்றது எப்பவுமே புரிஞ்சதேயில்ல. இனிமேலும் புரியப்போறதில்ல”
இனி எனக்கும் அவனுக்கும் எதுவுமில்லை. அவனுடைய உடலுடன் ஊருக்குச் செல்லவோ வழியனுப்பவோ எனக்கு மனமில்லை. யாருடைய கண்ணிலும் படாமல் எந்தப் பேச்சிலும் இல்லாமல் அப்படியே காற்றில் கரைந்து போய்விடலாமெனத் தோன்றியது எனக்கு. வைரத்தை உடற்கூறாய்வுக்காக உள்ளே கொண்டு போனார்கள். நான் விடுவிடுவென மருத்துவமனைக்கு வெளியே வந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினேன். எங்கோ தொலைவிலிருந்து காற்றில் கலந்து வந்து மெதுவாய் கேட்டது ஒரு பாடல்.
“கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்…!
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்!”