இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

ஊழடி முட்டம் – ஜெனார்த்தன்

சிறுகதை | வாசகசாலை

அவள் கட்டிலில் இருந்து அம்மணமாக குதித்து ஓலமிட்ட படியே அறையை விட்டு ஓடினாள். அடுத்த நாள் இராத்திரிப் பொழுதில் அந்த வீட்டிலிருந்து தப்பித்துப் போய் மெல்போர்ன் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டு தன் கைப்பேசியில் யாழ்ப்பாணத்திலுள்ள சிவானுஜனுக்கு அழைத்து நடந்ததைக் கூறினாள். அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆனால், அந்த சூழ்நிலையில் அவளுக்கு எப்படி உதவுவதென்று அவனுக்குத் தென்படவில்லை.

“சிவா அண்ணா இந்த உயிர் நீங்க போட்ட பிச்சை” – ஒரு வருடத்திற்கு முன் அவள் சொல்லி அழுதது அப்போது அவன் காதுக்குள் அசரீரியாக ஒலித்தது. 

வெண் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியின் வரவேற்பறையினுள் சிவானுஜன் நுழைந்த போது வெளியே ஆஸ்பத்திரி வளாகமெங்கும் இருள் கவிந்து கன்னங் கரேலென்றிருந்தது. முகத்திலறைந்த மருந்து வாசனை கொமட்டல் வருவிப்பதை பொருட்படுத்தாமல் வாசலில் நின்ற தன் வயதையொத்த ஒரு இளந்தாரிப் பொடியனின் உதவியோடு சறோமியை ஆட்டோவிலிருந்து தூக்கி தள்ளுவண்டியிலேற்றும் போது அவள் தேகத்திலிருந்து தொங்கிய கழுத்தும் பல்லுக்கிட்டி கடவாயால் நுரை தள்ளி அது கழுத்து வழியாக வடிந்து அவள் அணிந்திருந்த ஊதா நிற பூக்கள் வரைந்த சீத்தைத் துணிச் சட்டையில் படர்ந்திருக்க, கைகால்கள் சோர்ந்து குளிர்ந்து விறைத்துப் போய்க் கிடந்த தேகம் அவள் உயிரோடு தான் இருக்கிறாளா? என்ற சந்தேகத்தை அவனின் அடி மனதில் தூண்டி விட்டது.

சட்டை விலகி வழுவழுப்பான அவளின் மஞ்சள் தொடைகள் தெரிய அதை தன் கைகளால் இழுத்து விட்டபடி வேகம் கூட்டி தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு யாருமற்று வெறிச்சோடிக் கிடந்த அந்த விறாந்தையை கடந்து இருந்த அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்த போது தான் பின்னிருந்து வந்த அந்தக் குரல் பிடரியில் அறைந்தது.

“ஏய், என்ன உன்ர கொப்பற்ற வீட்ட போற மாதிரி விறுவிறெண்டு உள்ள போறாய்.. இங்க வா பதிய வேணும்”

கண்ணாடி அடைப்பிற்குள் அசந்து தூங்கிக் கொண்டிருந்து திடுக்கிட்டு அரண்ட செவிலிப் பெண்ணின் குரல் அது. 

“அக்கா சரியான அவசரம் அக்கா… ஆளுக்கு மூச்சுப் பேச்சே இல்லையக்கா…”

“ஆளுக்கு மூச்சிருக்கோ? முடிஞ்சுதோ? அது உன்ர பிரச்சனை.கொப்பியில பதியாமல் விட ஏலாது.. சரியோ”

“அக்கா.. அக்கா.. பிலீஸ் அக்கா.. அவள் நல்ல பிள்ளையக்கா… பாவம் அக்கா கொஞ்சம் அவசரப்பட்டிட்டாள்”

“தம்பி, உன்ர கதையெல்லாம் ஆரட்டையும் சொல்லு. இப்ப எனக்கு பேசண்ட்டின்ர பேரச் சொல்லு “

“சறோமி அக்கா”

“விலாசம்?…….. என்ன முழிக்கிறாய்? விலாசம்?”

அவளுடைய வீட்டு விலாசத்தைச் சொன்னான்

“என்ன நடந்தது?”

“அம்மாட மருந்துக் குளுசைகளை குடிச்சிட்டாள் அக்கா”

“ஓ.. நீ அவள காதலிக்கிறன் எண்டு கூட்டிக்கொண்டு திரிஞ்சு சீரளிச்சுப் போட்டு எஸ்கேப் ஆகப் பாத்திருப்ப. அவள் குளிசை குடிக்காமல் கூல்றிங்ஸ்சா குடிப்பாள்?”

“அக்கா, நான் அவளுக்கு ஒண்ட விட்ட அண்ணா முறையக்கா”

“அரைக்கு கீழ முறையொண்டும் இல்ல. உன்ர கண்ணப் பாத்தாலே நீ எப்பிடியான ஆளெண்டு தெரியுது. நான் உன்ன போல அண்ணன், அப்பன், மாமன், சித்தப்பன் எண்டு ஆயிரம் பேர பாத்திட்டன் சரியோ?”

(சொண்டுக்குள் ஒரு ஏளனச் சிரிப்பு மெதுவாக மொட்டவிழ்ந்தது)

தன் தாயொத்த வயதில் இருந்து கொண்டு இந்த நிலைமையில் எப்படி இந்தப் பெண்ணால் இப்படியெல்லாம் பேச முடிகிறது? என்கின்ற வருத்தமும்,அவள்மீதான கோவமும் ஒருசேர அவனுள் எழுந்தன.

“வயசு என்ன?”

“இருபத்தொண்டு அக்கா”

“ம். ஐ.சி.யூக்கு கொண்டு போ…”

‘நமக்கெண்டு வந்து சேருங்கள் உசிரெடுக்க’  வாய்க்குள்ளே முணுமுணுக்கத் தொடங்கினாள்.

சறோமியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் போனான். அவனுடைய தலையில் இருந்து இறங்கிய வியர்வை நெற்றியால் வழிந்தது. அவனுடைய இதயத் துடிப்பு வேகமெடுத்துக் கொண்டே இருந்தது. கைகள் பதற்றத்தில் உதறத் தொடங்கின. வாயில் காவலன் கொடுத்த பச்சை மேலாடையை அணிந்து கொண்டு செருப்பைக் கழற்றிவிட்டு துணியால் ஆன காலணியை அணிந்து கொண்டு உள்ளே சென்றான்.

“டாக்டர்…. மருந்துக் குளுசைகளைக் குடிச்சிட்டாள் டாக்டர். ஏதாவது செய்து காப்பாற்றுங்க டாக்டர்” என்று கூறும் போது, “தம்பி, வெளியில போய் நில்லுங்க. டாக்டரை டிஸ்ரப் பண்ண வேணாம்” என்று வந்த குரல் வாயில் காவலருடையதாயிருக்கும் என்று ஊகித்துக் கொண்டான்.

2

அவசர சிகிச்சைப் பிரிவு வாசலின் இருபுறமும் உயர்ந்து நின்ற பெலத்த தூண்கள் பழமையானவையாகவும், பயமூட்டுவதாகவும் இருந்தன. முன்னால் போடப்பட்ட மர இருக்கையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் தலைவிரி கோலமாக இருந்து “என்ரையப்பு என்ரையப்பு” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி நெஞ்சிலடித்து அழுது கொண்டிருந்தாள். அவளோடு ஒரு பதினைந்து வயதுச் சிறுவனும் எதுவுமே பேசாது தலையை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி நடுத்தரவயதுள்ள குள்ளமான கறுவல் மனிதன் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி கண்களை மூடி சுவரோடு சாய்ந்திருந்தான். சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் அரவம் கூட கிலியூட்டுமளவு கெட்டியான அமைதி அந்த இடத்தை ஆட்கொண்டிருந்தது. மணி பத்தாகியிருந்தது. சிவானுஜன் மரக் கதவில் பொருத்தப்பட்ட கண்ணாடியால் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தான். 

வைத்தியருக்கு உதவியாக இருந்த இரண்டு ஆண் செவிலியர்கள் சறோமியை தூக்கி கட்டிலில் கிடத்தி விட்டு வாந்தி வருவிப்பதற்காக அவளின் வயிற்றில் ஏறி மிதிப்பது போல மாறி மாறி கைகளால் ஊன்றி அழுத்தினார்கள். ஆனால், அது பயனளிக்கவில்லை. டாக்டர் அவளுடைய கையை பிடித்து நாடித்துடிப்பை பார்த்துவிட்டு, கண் இமைகளை மேலே தூக்கிப் பார்த்தார். அவளுடைய கருவிழிகள் மேலே சொருகியிருந்தன.

ஒலியெழுப்பிக் கொண்டு வேகமாக வந்த அவசர ஊர்தியொன்றிலிருந்து உடல் முழுவதும் எரிகாயங்களோடு ஒரு பெண்ணை இறக்கினார்கள். ஆடைகள் பொசுங்கி அவளின் நிர்வான உடலோடு அப்பிக் கிடந்தது. தலை முடியும் இமைகளும் கருகியிருக்க விழித்துப் பார்த்தபடி இருந்த அவளின் கண்கள் ஏதோ அகோரியின் கண்களைப் போல திகிலூட்டின.

கண்ணாடிக் கூண்டுக்குள் அரைத் தூக்கத்திலிருந்த செவிலிப் பெண் திடுக்கிட்டு விழித்ததும் சதைப் பிண்டம் போலிருந்த அவளைப் பார்த்து, “எரிஞ்ச சனியன் போய்த் துலையட்டுமெண்டு விடாமல் இங்க கொண்டு வருகுதுகள் எனக்குத் தலையிடிக்கு….” என்று கத்திச் சொன்னாள் .

“என்ரையப்பு என்ரையப்பு” உச்ச ஸ்தாயியை எட்டியது.

அந்தக் குள்ளமான மனிதன் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து எரிந்த பெண்ணின் உடலை அருகே சென்று பார்த்துவிட்டு, கூட வந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.

“புள்ளைக்கு என்னாச்சு?”

“வீட்டில சின்னச் சண்டை. மண்ணெண்ணை ஊத்தி எரிஞ்சிட்டாள்”

“இப்பத்தப் புள்ளைகள் எடுத்ததுக்கும் இப்பிடித்தான். என்ன லவ் பிரச்சனையாக்கும்??” என்று போட்டு வாங்கினான்.

“ஓ அவன் ஏமாத்திப் போட்டான். மண்ணாப் போவான்… நாசமாப் போவான்..” எரிந்த பெண்ணின் தகப்பனாக இருக்க வேண்டும்.

“சரி ஒண்டும் யோசிக்காதீங்க எல்லாம் நான் பாக்கிறன்”

உள்ளே செவியர்களில் ஒருவர் உந்தி (pump) பொருத்தப்பட்ட ஒரு நீளமான குழாயின் ஒரு முனையில் உராய்வு நீக்கியை தடவியபின் சறோமியின் மூக்கினுள் விட்டுத் திணித்துக் கொண்டேயிருந்தார். சிவானுஜனின் கண்கள் இறுக மூடிக்கொண்டன. குழாயை மூக்குத் துவாரங்கள் ஊடாக வயிற்றுக்குள் இறங்கும் வரைக்கும் திணித்து விட்டு மறுமுனையை சிறிய வாளி போன்ற பாத்திரத்தில் பிடித்துக் கொண்டு குழாயின் இடையில் பொருத்தப் பட்டிருந்த உந்தியில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். குழாய் ஊடாக குளுசைக் கரைசல் வெண் திரவமாக வெளியேறிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் வெளியே வந்த டாக்டர் ஒருவர் எரிந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்று சொன்னதும் அவளை ஏற்றிக் கொண்டு வந்தவர்கள் வைத்த கூச்சல் அந்த இரவின் அடர்ந்த அமைதியை குலைத்துப் போட்டது.

சிவானுஜன் பாம்புக் குரலில், “டாக்டர், சறோமிக்கு எப்படியிருக்கு டாக்டர்?”

“தம்பி பேசன்ட்டுக்கு பல்ஸ் எல்லாம் குறைஞ்சிட்டு. நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி செய்து பாக்குறோம். மிச்சம் கடவுள்ட கையில”

“டாக்டர்… டாக்டர்…”

“தம்பி இதில நிக்காமல் போய் இந்தப் புள்ளையின்ட அம்மாவட கிளினிக் கொப்பிய எடுத்துக் கொண்டு வந்தால்தான் பேசண்ட் என்ன குளுசைய குடிச்சிரிக்கிறாங்க எண்டு தெரியும். அதச் செய்யாமல் காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ எண்டால்… சொறி நாங்க ஒண்டும் பண்ண ஏலாது”

செத்துப் போனவளின் உறவினர்கள் ஓலமிட்டார்கள்

“மண்ணாப் போவான்… நாசமா போவான்.. என்ர புள்ளைய கொண்டிட்டான்…”

“என்ரையப்பு என்ரையப்பு…..”

“இதில நிண்டு ஒப்பாரி வைக்க வேணாம் சொல்லிப் போட்டன்”

கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து குரல் வந்தது.

குள்ளமான மனிதன் இறந்த அந்த பெண்ணின் தந்தையின் அருகே சென்றான்.

“சரி, நடந்தது நடந்து போச்சு. நீங்க வீட்டில ஆகவேண்டியத பாருங்க. இங்க எல்லாம் நான் பாக்கிறன்”

மகளை இழந்த மனிதன் அழுது கொண்டு அந்த குள்ளமானவன் யாரென்றும் புரியாது, அவன் பேசுவதும் புரியாது நின்றான்.

“இம்பம் பண்ணுறது, பெட்டி, உடுப்பு எல்லாம் சேர்த்து ஒரு.. ‘ஒண்டுக்குள்ள’ முடிச்சுத் தாரன்” என்று காதுக்குள் முனுமுனுத்தான் குள்ள மனிதன்.

அப்போது தான் அவன் ஒரு அந்தியகால சேவை நிறுவனத்தின் (சவப்பெட்டிக் கடை) முகவர் என்பதே தெரிய வந்தது.

சிவானுஜன் சறோமிக்கு நடந்ததை அவளுடைய வீட்டிற்கு அழைத்துக் கூறியும், அதுவரை யாரும் அவளைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. கடைசியாக ஒருமுறை அழைத்துப் பார்க்கலாமென்று சறோமியின் அப்பாவுக்கு அழைத்தான்

“சித்தப்பா, சறோமிக்கு கொஞ்சம் சீரியஸ். சித்தியட கிளினிக் கொப்பிய கொண்டு உடன வாரீங்களா?”

“தம்பி, அந்த சனியன் துலஞ்சு போகட்டும். வெட்டித் தாட்டுப் போட்டு நான் நிம்மதியா இருப்பன். நான் அங்க வர மாட்டன்” – என்று அழைப்பைத் துண்டித்து விட்டார்.

‘பெத்த புள்ள உயிருக்கு போராடுற நேரத்திலையும் ஒரு மனுசனால இப்பிடியும் பேச முடியுமா?’ என்று நினைக்க அவனுக்கு வேதனை கசிந்தது.

3

சறோமி கல்லூரியில் தன்னோடு ஒன்றாகப் படித்த பையனொருத்தனை காதலிக்கிறாள் என்பது அரசல் புரசலாக அவளின் வீட்டுக்குத் தெரிய வந்தபோதும் கூட அவள்மீது யாரும் வெறுப்பை காறி உமிழவில்லை. ஆனால், அவள் காதலிப்பது கிழவன் காட்டுப் பையன் என்று கேள்விப் பட்டதிலிருந்தே அவளைக் கானும் போதெல்லாம் தகப்பன்காரன் தயாளனுக்கு அவளை வெட்டிப் போடுமளவு ஆத்திரமும் கோவமும் ஏற்படுவதை அவனே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“இந்தத் தோறை அந்த கீழ்சாதிக் கழிசறையோட போனா நான் ஊருக்குள்ள தல காட்ட ஏலுமாடி? இவளுக்கு நீ குடுத்த இடமடி.. நல்ல வளப்பு வளத்து வச்சிருக்கிறாய் வேசை”

என்று தினமும் மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்து ‘பொஞ்சாதி’ அமலிக்கு அவன் கொடுத்த ஆக்கினை எல்லை மீறிப் போனது. அந்தச் சமயம் பார்த்து ஊரிலே பெரிய சம்மாட்டி வீட்டுக்காரர் தங்களுடைய மகனுக்கு சறோமியை கல்யாணம் கேட்க ஆட்களை அனுப்பியிருந்தார்கள்.

செந்தூரன்..அமெரிக்காவில் படித்து அங்கேயே பெரிய டாக்டராக வேலை பார்க்கிறான். பார்க்க அப்படியே நடிகர் அப்பாஸ் போன்ற தோற்றம். ‘பேஸ்புக்கில் சறோமியை பார்த்ததிலிருந்து கட்டினால் இவளைத்தான் கட்டுவேனென்று ஒற்றைக்காலில நிற்கிறானாம். பிள்ளைக்கு ஓமெண்டால் அடுத்தமாதமே டிக்கெட்டை போட்டு மகனை சிறீலங்காவுக்கு கூப்பிட்டு உடனேயே கல்யாணத்தை முடித்து விடுறதுக்கு சம்மாட்டியார் யோசிக்கிறேர்’ வந்தவர்கள் சொன்னார்கள். சீதனம் பாதனம் எதுவுமே எதிர்பார்க்கவில்லை என்பதையும் பத்துத்தரம் அழுத்தமாக கூறிவிட்டுப் போனார்கள்

“நீ அம்மாவை உயிரோட பாக்க வேணும் எண்டால் அந்தப் பொடியன மறந்திட்டு சம்மாட்டியார் மகன் செந்தூரனை கல்யாணம் பண்ண ஓம் எண்டு சொல்லு புள்ள” என்று சறோமியின் காலைப் புடிச்சு ஒப்பாரி வைத்து புலம்பினாள் அமலி. வீட்டிலே சறோமிக்கு மேலே ஒரு தமயனும் இரண்டு தமக்கைமாரும். இவள் கடைசிப் பிள்ளை. இந்தப் பிரச்சினை வெடித்ததில் இருந்து மூத்த தமக்கை உசாவை தவிர இருவரும் அவளோடு முகம் விட்டுப் பேசுவதில்லை. உசாவிற்கும் இப்படித்தான் நான்கு வருடங்களுக்கு முன் வீட்டாலே ஒரு மாப்பிள்ளையை பார்த்து சம்பந்தம் பேசி முடித்தார்கள்.

“உத்தியோக மாப்பிள்ளை…லட்சக் கணக்கில சம்பளம்… சொந்தமா கார் வச்சு ஓடுறார்… கல்யாணம் முடிஞ்ச கையோட உசாவையும் கூட்டிக் கொண்டு பிரான்சுக்கு போயிருவேர்… மூத்த பொடியையும் எடுத்து விடுறண்டு சொன்னவர்.” – அமலி ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தாள்.

பக்கத்து வீட்டு சுமதியக்கா தண்ணியெடுக்கும் போது, “உசாவிண்ட மாப்பிள்ளை கொஞ்சம் கறுவல்” என்று சொன்னதை கூடயிருந்து கேட்ட யாரோ புண்ணியவதி ஒண்டப் பத்தாக்கிச் சொண்டு மூட்டிவிட சட்டையை தூக்கி கட்டிக் கொண்டு றோட்டுக்கு போன அமலி, “பழிப்பு படலைக்க… சிரிப்பு சீலைக்க…” என்று விளித்து, “சுமதியட மாப்பிள்ளைமாரட சாடைக்கு.. ” என்று தொடுத்து அவளின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளையும் தெருவிலே கூறி விற்று விட்டு, உச்சத்தில் ஏதோவொரு கட்டத்தில், “கூந்தல் இருக்கிற சீதேவி அள்ளி முடியிறாளாம்” என்றெல்லாம் அலங்காரம் சொல்லி அமர்முறுகலாகி, “இவளுக்கு என்ர குடும்பம் நல்லா வந்திரும் எண்ட வயித்தெரிச்சல்” என்று நிறைவுக்கு வந்தது அந்தப் பேருரை.

‘மூணுச வட்டி’க்கு கடன் பட்டு, ஊருக்கே சொல்லி பெரிய ஹோட்டலொன்றில் கல்யாணம் நடந்தது.

கொஞ்சநாள் போக..“உசாவட புருசனட்ட காரும் இல்ல.. புடுக்குமில்லயாம். வேலவெட்டிக்கு போகாத வெட்டிப் பயலாம்” என்று ஊருக்குள்ள பேச்சடிபட்டது. ஏழெட்டு மாதங்களுக்கு பிறகு வயிற்றிலே பிள்ளையோடு உசா அம்மா வீட்டிற்கு வந்தாள்.

அறைக்குள் சறோமி தனியாக இருக்கின்ற வேளைகளில் உசா அருகே போயிருந்து கொண்டு, “அம்மா அப்பாட கதையக் கேட்டு உன்ர வாழ்க்கைய அழிக்காத. நீ விரும்பிற வாழ்கைய தேடிப் போ..” என்று சொல்லிய வார்த்தைகளுக்குக்குள்ளே எவ்வளவு வலிகள் புதைந்திருக்கும் என்று சறோமி யோசித்திருந்தால் அவளுக்கு இந்த நிலை வந்திருக்காது.

ஒரு வாரமாகவே காதலித்த பையனின் அழைப்புகளை துண்டித்துக் கொண்டே இருந்தாள். ஆனால், ஒரு பிடி சோறு கூட உண்ணாது தன்னை வருத்திக் கொண்டாள். கண்ணை மூடினால் அவனுடைய முகமே வந்து நின்றது.

(அவளுக்கு என்னவோ ஏதோவென பயந்து ஊருக்குள் மோட்டர் சைக்கிளில் முறுக்கிக் கொண்டு வந்த கிளவன் காட்டுப் பொடியனை மூன்று நான்கு பேரை வைத்து அடித்து கையை உடைத்து அனுப்பி விட்டார்கள்)

“சறோமி கல்யாணத்துக்கு ஓமெண்டு விட்டாள்” என்று சம்மாட்டி வீட்டிற்கு ஆட்களை அனுப்பிச் சொல்லச் சொன்னார்கள்.

பின்நேரப் பொழுது…வீட்டிலே யாருடைய அசமாட்டமும் இல்லை. சறோமி இருந்த அறையின் மேசை மேலே அமலியின் ‘பிறஷர் ’குளுசைச் சரைகள் இருந்தன. செம்பு நிறைய தண்ணீர் இருந்தது.

ஆஸ்பத்திரி மரவாங்கில் சாய்ந்த படி இருந்த சிவானுஜனின் மனத்திரையில் தற்செயலாக அன்றைக்கென்று ஏதோ முக்கியமான அலுவலாக அவளுடைய வீட்டுக்கு போன போது வாயால் நூரை தள்ளியபடி கிடந்த சறோமியின் உருவம் தோன்றியது.

வெளியே வந்த ஆண் செவிலியர் ஒருவர் “தம்பி, பேசண்ட்டுக்கு நினைவு திரும்பீற்று. வாட்டுக்கு மாத்தப் போறோம்” என்றார்.

சற்றுத் தொலைவிலிருந்து “என்ரையப்பு… என்ரையப்பு” என்ற ஓலம் கேட்டுக் கொண்டே இருந்தது.

சிவானுஜன் சாமக்கடையில் தேனீர் குடிப்பதற்காக எழுந்து வெளியே போகும் போது கண்ணாடிக் கூண்டுக்குள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த செவிலிப் பெண்ணை பார்த்து வாய்க்குள்ளே சொன்னான்

‘விசர்ச் சனியன்’

4

சறோமிக்கும் சம்மாட்டி மகன் செந்தூரனுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. அயலில் உள்ள நான்கு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். பெரும் பெரும் வணிகர்களும், சம்மாட்டிகளும், அரசியல்வாதிகளும் என்று பிரமுகர்கள் அணிவகுத்தார்கள். சம்மாட்டி வீட்டுக் கல்யாணம். அதுவும் மாப்பிள்ளை அமெரிக்காவில் படித்த டாக்டர் என்றால் பணத்திற்கா பஞ்சமிருக்கும்? கவனிப்பிற்கு குறையில்லை. ஊர் முழுவதும் கல்யாணக் கதை ஓயவேயில்லை

இன்னும் நான்கு நாட்களால் மாப்பிளை அமெரிக்காவிற்கு புறப்பட்டு விடுவார். அது வரைக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய ஹேட்டலொன்றில் தம்பதிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படுக்கையறையில் ஆட்களைப் புதைக்கும் மெத்தைகளும் அதன் பின்னணியில் தீட்டப்பட்டிருந்த நவீன ஓவியங்களும் அவளை மெய்சிலிர்க்க வைத்தன. ஆடம்பர குளியலறையும், நீச்சல் தடாகங்களும் அவள் இதுவரை கண்டிராத இன்னொரு உலகத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போல இருந்தன.

சறோமி குளித்துவிட்டுத் தயாரகி படுக்கையறையில் நுழையவும் இரவாகிக் கொண்டு வந்தது. ஒரு பெண்ணிற்கு முதலிரவில் இருக்கும் பதட்டங்களும், எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் அவளிடத்திலும் சற்றும் குறையாது இருந்தன. அதுவரையும் லீவிங் ஏரியாவில் (living area) போடப்பட்டிருந்த சொகுசு இருக்கையொன்றில் மடிக்கணினியோடு ஏதோ அலுவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செந்தூரனுக்கு நண்பர்கள், உறவினர்களிடமிருந்து அடிக்கடி தொலைபேசி அழைப்புகளும் வந்து கொண்டிருந்தன. மடிக்கணினியை அணைத்துவிட்டு எழுந்து அறையை நோக்கி வந்த அவனைக் கண்டதும் அவளுக்கு இனம்புரியாத உணர்வுகள் உள்ளெழுந்து கொண்டிருந்தன. அவன் படுக்கையில் அவளருகே வந்தமர்ந்த போது உமிழ்நீரை விழுங்கிக் கொண்டு வெட்கம் பூசிய முகத்தோடு இருந்தவளை காற்றும் புக முடியாதவாறு கட்டியணைத்துக் கொண்டான். இருவரும் முத்தங்கள் பரிமாறினார்கள். திடீரென அணைப்பை தளர்த்திக் கொண்டவன்

“டார்லிங், எனக்கு சரியான அலுப்பா இருக்குது. காலையிலிருந்து சடங்கு சம்பிரதாயம் எண்டு என்னைப் பாடாப் படுத்திற்ராங்க. நான் தூங்கப் போறேன். நீயும் களைத்துப் போயிருப்பாய். தூங்கு…நாளைக்கு பாத்துக்கலாம்… குட்நைட் டார்லிங்”

என்று கூறிவிட்டு மெத்தைக்குள் புதைந்த போதும் கூட அவள் மனதுக்குள் எழுப்பிய கற்பனைக் கோட்டை அடியோடு தகர்ந்து போகவில்லை. அதிகாலையிலேயே எழுந்திருந்து மேக்கப் செய்ததிலிருந்து புடவையை கட்டிக் கொண்டு ஆயிரம் புகைப்படங்களுக்குச் சிரித்த அலுப்பு அவளுக்கும் இருந்தது. முதலிரவு முத்தங்களோடு முடிந்தது.

அடுத்தடுத்த இரண்டு நாட்களும் படுக்கையில் ‘வேண்டும்’என்கின்ற தருணங்களில் அவன் முதலிரவில் நடந்துகொண்டதைப் போலவே முத்தங்களோடு முடித்துக் கொள்ள, அதிருப்தியடைந்தவள் இணையத்தில் அது பற்றி சல்லடை போட்டுத் தேடினாள். ஒரு வேளை செந்தூரனுக்கு ஆண்மைக் குறைபாடு இருக்கலாம் என்று கூகிள் கூறியது.

அவனிடம் இதைப்பற்றி கேட்கலாமா? கேட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? நான் காமத்திற்காக ஏங்கும் ஒருத்தியென்ற ஒரு பிம்பத்தை அது அவன் மனதில் உருவாக்கி விடாதா? அது என் கடந்த கால ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி விடாதா? என்று ஒரு புறமும், இல்லையில்லை கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு எவ்வளவு முக்கியமென்று ஒரு டாக்டருக்குத் தெரியாதா என்ன? என்று மறுபுறமுமாக மனதில் வாதப் பிரதிவாதங்கள் வலப்பெற்று கடைசியில் அவனிடமே கேட்டுவிடுவதென்ற முடிவோடு அவனை நெருங்கினாள். அவன் உடல் முழுவதும் வியத்தொழுக அறையில் இருந்த உடற்பயிற்சி இயந்திரத்தில் ஏறி நடந்து கொண்டிருந்தான்.

“ஏன் செந்தூ, உங்களுக்கு என்ன ஆச்சு? என்னைப் பிடிக்கலையா? நானும் இந்த மூன்று நாட்களாகவே பார்க்கிறேன். வெறும் முத்தங்களோடு எழும்பி போறீங்கள். என்ன பிரச்சனை?”

இயந்திரத்தை நிறுத்தி விட்டு அவளுடைய கன்னத்தை கிள்ளிக் கொண்டு சொன்னான்

“சறோமி எனக்கு இப்படி நாள், நட்சத்திரம் பார்த்து சாந்தி முகூர்த்தம் செய்வதில் எல்லாம் உடன்பாடு கிடையாது. ஏதோ மாடுகளை சினைக்கு விடுறது போல இந்த நான்கு நாட்களுக்குள் எல்லாத்தையும் முடிச்சுவிட வேண்டுமா? அப்படி நான் உன் உணர்வுகளைத் தூண்டிவிட்டு நாளைக்கு அமெரிக்கா போய்விட்டால் அது உனக்குதான் ஏமாற்றமாயிருக்கும். கொஞ்சம் புரிஞ்சுக்கோ”

அவன் சொன்ன விளக்கம் அவள் மனதுக்கும் சரியென்றுதான் பட்டது. அடுத்தநாள் இரவே செந்தூரன் அமெரிக்காவிற்கு புறப்பட்டுப் போனான்.

5

சில மாதங்கள் கழிந்தன. சறோமியை அமெரிக்காவிற்கு கூப்பிடுவதற்கான வீசா அலுவல்கள் அனைத்தையும் செந்தூரன் விரைந்து முடித்தான். சறோமி எதிர்காலம் பற்றிய பல கனவுகளோடு விமானமேறி அமெரிக்காவிற்குப் பறந்தாள். விமான நிலையத்தில் பூங்கொத்துக்களோடும், அன்பு முத்தங்களோடும் செந்தூரன் அவளை வரவேற்று தன்னுடைய காரிலேற்றிக் கொண்டு மாளிகை போன்ற தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

வீட்டில் இருவரும் மட்டுமே இருந்தார்கள். சறோமி அங்கு சென்ற இரண்டாம் நாளே செந்தூரன் வைத்தியசாலையில் தன்னை இரவுக் கடமைக்கு மாற்றி விட்டார்கள் என்றும், சுழற்சி முறையில் அனைத்து டாக்டர்களும் இப்படி நிர்வாகத்தால் நியமிக்கப்படுவது வளமையென்றும் கூறிவிட்டு இரவுகளில் வேலைக்குப் போகத் தொடங்கினான்.

புதிதாக கல்யாணமானவர்களுக்கு பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடு கிடையாது. அவர்களும் ஆறத்தழுவிக் கொண்டார்கள், முத்தங்கள் பரிமாறினார்கள், கெஞ்சிக் குழைந்தார்கள். படுக்கையில் அவள் ஆடைகளின்றி அவனிடம் சரணாகதியாகின்ற தருணத்தில் திடீரென எழுந்து குளியலறைக்குச் சென்று கதவை சாத்திக் கொள்வதே வழக்கமாகியது. இதுவே அவளின் சலிப்பேறிய நாளாந்தமாக மீண்டு கொண்டிருந்தது.

ஆண்மைக் குறைபாடு, விந்து முந்துதல் என்று ஏதோ ஒரு குறைபாடு அவனுக்கு உண்டு என்ற சந்தேகம் அவளிடம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள் அவளோடு படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் சென்றவன் நீண்ட நேரமாக கரமைதுனம் செய்து கொள்வதை மறைந்திருந்து கண்டதன் பின் சறோமி இன்னும் குழப்பமடைந்தாள்.

ஊரிலிருந்து அவளின் அம்மாவோ சொந்தக்காரர்களோ தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம், “சந்தோஷமா இருக்கிறியா? சந்தோசமான சேதி எப்ப சொல்ல போறாய்?” என்று கேட்கின்ற போது பதில் சொல்ல முடியாது சமாளிப்பாள். இதில் அவளின் நெருங்கிய நண்பர்கள் எடுத்ததும், “புளுப் பூச்சி ஏதும்?” என்று நக்கலாக கேட்டு உயிரெடுத்தார்கள்.

இதைப் பற்றி நண்பர்களோடு பேசுவதற்கும் அவளுக்கு கூச்சமாக இருந்தது. இப்படியொரு சங்கடமான நிலைமையில் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்து கொண்டு தனக்கு நடக்கும் இந்தக் கொடுமையை பொதுவெளியில் விவாதிப்பதற்கும் தீர்வுகளைக் கேட்பதற்கும் கூட இயலாதவளாக இருப்பதை நினைக்கும் போது இந்தப் பிறவியே வெறுத்துப் போனது.

இடையிடையே ‘நான் காதலித்தவனோடு ஓடிப்போயிருந்தால் சந்தோசமாக இருந்திருப்பேனே’ என்ற எண்ணமும், அவனுக்கு தான் செய்த துரோகத்தை நினைக்கையில் தோன்றும் வேதனையும் அவளைப் பாடாய்ப் படுத்தியது.

“உங்களுக்கு சம்மதமென்றால் இருவருமாக ஒரு வைத்தியரிடம் போய் ஆலோசனை கேட்டு, குறைபாடுகள் ஏதும் இருந்தால் சிகிச்சை பெறலாம்” என்று செந்தூரனிடம் கேட்கவும், “நானே ஒரு டாக்டர். நான் இன்னொரு டாக்டரிடம் வாறதா? பைத்தியம் போல பேசாத. உனக்கு இப்ப செக்ஸ்தானா முக்கியம்? போய் வேலையப் பாரு” – என்று அலட்சியமாக கூறி மறுத்து விட்டான்.

சறோமி அவனுக்குத் தெரியாது இரகசியமாக ஒரு உளவியல் மருத்துவரை (physiologist) சந்தித்து விசயத்தைக் கூறினாள்.

“உங்களுடைய கணவன் என்ன வேலை பார்க்கிறார்?”

“அவர் ஒரு டாக்டர்”

“என்ன மாதிரியான டாக்டர்?”

“தெரியாது.”

“அதை முதலில் தெரிந்து கொள்ளுங்க. அப்போ உங்களுடைய பிரச்சனைக்கான காரணம் உங்களுக்குத் தெரியவரலாம்.”

மெட்ரோ ரயிலொன்றில் ஏறி வீட்டிற்கு வந்தாள். அவன் இரவுக் கடமைக்கு போனதும் அவனுடைய அலமாரியில் இருந்த கோப்புகளை எடுத்து ஒவ்வொன்றாக சல்லடை போட்டாள். அதில் இருந்த சான்றிதழ் ஒன்றில் அவன் ஒரு பிணக்கூறியல் வைத்தியர் என்பதை அறிந்து கொண்டாள். பின் இணையத்தில் பிணக்கூறியல் மருத்துவர் செந்தூரன் என்று டைப் செய்து தேடினாள்.

அவன் பிணக்கூறியல் துறையில் அமெரிக்காவின் பிரபலமான மருத்துவர் என்பதை கூகுள் தரவுகளோடு கூறியது.

அப்படியென்றால் அவன் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பிணங்களை கையாள வேண்டியிருக்கும். அவனுடைய வேலை பிணவறையில் பிணங்களை வெட்டிப் பிளந்து கூறுபோட்டு, மரணத்திற்கான காரணங்களை ஆய்வு செய்வது என்பதை அறிந்த தருணம் அதிர்ச்சியாக இருந்தது

சறோமி உடனே அந்த உளவியல் மருத்துவருக்கு அழைத்து தனது கணவன் எப்படிப்பட்ட மருத்துவர் என்பதை தெரிவித்தாள்.

“மெடம், உங்கட கஸ்பண்ட் நாளாந்தம் பல பிணங்களை நிர்வாணப்படுத்தி, அந்த பிரேதங்களை வெட்டிக் கிழித்து பரிசோதனை செய்யுற வேலை பார்ப்பதால, படுக்கையில் உங்களை நிர்வாணமாக பார்க்கிற போதும் பிணங்களை பார்ப்பது போலவே தோன்றலாம். ஆனால், இது மாற்ற முடியாத பிரச்சனையொன்றுமில்லை. எதற்கும் நீங்க அவரோட நெருக்கமாக இருப்பதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி பாருங்கள்” என்றார் டாக்டர்.

அடுத்த நாள் பகல் பொழுது…

அவள் மெல்லிய ஆடையொன்றை உடுத்திக் கொண்டு கட்டிலில் சாய்ந்திருக்க, அவளருகே வந்தவன் என்றும் போல அவளை மெல்ல அணைத்துக் கொண்டான். கொஞ்சல்களும் கெஞ்சல்களுமாக சூடுபிடிக்கத் தொடங்கியது.

உதடுகள் ஒன்றையொன்று உண்ணத் தொடங்கின. ஒவ்வொன்றாக அவளின் ஆடைகளை விலகினான். அவளின் குறு முலைகள் ஒரு இராணுவ வீரனின் மிடுக்கோடு நின்றன. மஞ்சள் தங்கத்தாலான சதை உடல் போன்ற மிருதுவான தேகமெங்கும் நுண்ணிய பூனை உரோமங்கள். கரிய உரோமங்கள் அடர்ந்திருந்த அவளுடைய தளர்ந்த புட்டம் சிறு மேடு போல இருந்தது.

மேலிந்து கீழ்வரை இமைக்காது பார்த்தவன், “சறோமி பிறகு பார்க்கலாம்” என்று கூறி எழுந்து செல்ல முயன்றான்.

அவள் தன் நிர்வாண உடலை நிமிர்தி, அவனின் நிர்வாணத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவனின் மேல் ஏறியிருந்து இயங்குவதற்கு முனைந்த போது அவன் ஒரு காட்டு யானை மான்குட்டியைத் தூக்குவது போல அவளை தன் வலிய கரங்களால் தூக்கி கட்டிலின் மீது போட்டுவிட்டு அவள் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, அருகிலிருந்த மேசையிலிருந்த பழக்கூடையில் ஆப்பிளின் மீது குத்தப்பட்டிருந்த கூரிய கத்தியை எடுத்து ஒரு பிணத்தைப் பார்க்கும் விறைப்பான பார்வையோடு அவளின் தொண்டைக் குழியிலிருந்து அடிவயிறுவரை கிழிப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்தான்.

சறோமி எப்படியோ தன்னுடைய முழுப் பலத்தையும் பிரயோகித்து அவனை கீழே தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து அம்மணமாக குதித்து ஓலமிட்டபடியே அறையை விட்டு ஓடினாள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button