
இந்த இருட்டில் தன்னை எழுப்பி அப்பா எங்கே அழைத்துப் போகிறாரென அவனுக்குத் தெரியவில்லை. கதவருகில் போய் அம்மாவைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். இருவரும் வெளியே வந்து கதவை சும்மா சாத்திவிட்டு நடந்தோம். வழக்கம் போல உடன் வரத் தயாராக இருந்த டைகரை அப்பா விரட்டினார். அது என்னவோ ஏதோவென மருண்டுபோய் ஓடி மீண்டும் வீடு கட்டக் குவித்திருந்த மணலில் படுத்துக் கொண்டது.
அப்பா கையில் வெளிச்சத்துக்கு போனில் எரியும் டார்ச் மட்டுமிருந்தது. அப்பா லுங்கியை ஒருமுறை அவிழ்த்து மீண்டும் இறுக்கிக் கொண்டே நடக்க பின்தொடர்ந்தவன் எங்கே போகிறோமென கேட்க நினைத்தான். மதியத்திலிருந்தே இறுக்கமாக இருந்த அப்பாவின் முகம் ஞாபகம் வர அமைதியாக இருப்பதே உத்தமமென வாயை இறுக்கிக் கொண்டான். அப்பா காட்டுப்பக்கமாகத்தான் நடக்கிறார்.
ஆரியபாளையத்துக்கென தனி இருளெல்லாம் இல்லை. ஆனால், ஆயா வீட்டுக்குப் போகும் போதுதான் சொந்த ஊரின் இருளுக்கென்று ஒரு உருவமிருப்பதை அவன் உணர்ந்தான். ஆயா வீடு ஊருக்குள் இருப்பதால் நிறைய விளக்குகள் ஒப்பனையாக மிளிரும். இங்கே ஊருக்கு சற்றுத் தள்ளியிருக்கும் தன் வீடு ஊரோடைக்கு அருகில் நிற்கிறது. தெற்குப் பக்கம் பரவியிருக்கிற கருவேலங்காடு இருளை இன்னும் அடர்த்தியாக்கி இருப்பதாகத் தோன்றுகிறது. கண்களுக்கு இருட்டைப் பழக்கி டார்ச் லைட்டை முந்திக்கொண்டு நடக்கிற அப்பாவின் பாதங்கள் கருத்த பிசாசின் நகர்வைப் போலத் தோன்றின.
முதலில் அப்பா தன்னை வயக்காட்டுக்கு தண்ணி எடுத்துவிட அழைத்துப் போவதாக ஒருவாறு அனுமானித்திருந்தான். ஆனால், தண்ணி எடுத்துவிடுகிறத் தேவையிருப்பதாகத் தோன்றவில்லை. இன்று அப்பாவின் வீதம். மதியமே வீட்டுச்செலவுக்கென வைத்திருக்கிற மிளகாய் செடிகளுக்குக் காட்டியிருப்பார். பிறகெதற்கு என்றால் முயல் பிடிக்கவாயிருக்கும் எனத் தோன்றியது. முயலும்தான் கடலை போட்டதிலிருந்தே அறுவடை ஆகிற்று. குழம்பிய மனதோடு அப்பாவின் முதுகை வெறித்துக் கொண்டு நடந்தவன் கல் இடறி விழப்போய் எழுந்த அதட்டலில் ஓரடிப் பின்வாங்கி நடந்தான். முன்பு போலவே டார்ச் லைட் அப்பாவை முந்திக் கொண்டுப் போகிறது. அந்த ஒளி அப்பாவின் கால்களுக்கு கீழே நடைக்கேற்ப ஆடிக்கொண்டே நகர்கிறது. ஒளி நகர்கிற இடத்திலெல்லாம் சுதாரிப்பதற்குள் மீண்டும் இருட்டு வந்து உட்கார்ந்து கொள்கிறது. அப்புறம் கல்லிடறாமல் என்ன செய்யும்? அப்பா இப்படித்தான் முரட்டுத்தனமானவர். இன்று மதியம் கூட இப்படியான அதட்டல் சொற்களைத்தான் சித்தப்பாவிடம் பிரயோகித்தார். ஆனால், அவை இன்னும் கொஞ்சம் முற்றியவை.
நடந்துகொண்டே இடதுபுறமாகத் திரும்பி சித்தப்பா வீட்டைப் பார்த்தான். மரங்களுக்கு நடுவே முற்றத்து விளக்கொளி ஒளிந்து அவனுக்கு விளையாட்டு காட்டுவது போலிருந்தது. சித்தப்பா வீட்டுக்கு கடைசியாகப் போனது எப்போதென யோசித்துப் பார்த்தான். ஞாபகம் வரவில்லை. வரப்புகளுக்கிடையே குருவிக் குட்டானுக்கு வயித்தால போகிறதென சித்தி ஓமத்திராவம் வாங்கி வரச் சொன்னாள். அதை சீனன் கடையில் வாங்கிப்போய் கொடுத்து வந்ததுதான் கடைசி. இல்லையில்லை. அதன் பிறகும் ஒருமுறை குருவிக்குட்டானை தூக்கிக் கொஞ்சப் போனான். குருவிக்குட்டான் சிரித்துக்கொண்டே அவன் மீது தீர்த்தம் தெளித்தது.
‘அய்யய்யே.. புடி சித்தி’ எனக் கத்தியபடியே வெடுக்கென நகர்த்தியதில் பயந்துபோய் ஒண்ணுக்கிருப்பதை நிறுத்திக் கொண்டு சிரிப்பை மறந்து அவனைப் பார்த்தது.
‘அச்சோ.. ஏன்டா இழுத்த? உச்சாவ நிறுத்திக்கிட்டா பாரு..’ என சித்தி வாங்கிக் கொண்டதும் அவனுக்கு பாவமாகப் போய்விட்டது.
அவனுக்கு தம்பிதான் இருக்கிறான். குருவிக்குட்டான்தான் உனக்கு தங்கச்சி என யாரோ சொன்னதிலிருந்து அதன்மீது அவனுக்கு தனிப்பாசம்.
அப்பா ஓடை மீதேறி வடக்குத்திசையில் நடக்காமல் ஓடைக்குள் இறங்கிக் கொண்டு அவனையும் கைப்பிடித்து இழுத்தார். அவனுக்கு குழப்பம் இன்னும் அதிகரித்தது. ‘கரையிலேயேதான் அவ்வளவு பெரிய தடம் இருக்கிறதே..’
அங்கிருந்தே எட்டி சித்தப்பா வீட்டைப் பார்த்தான். விளக்கொளி தெரியவில்லை. திரும்பவும் குருவிக்குட்டானை பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை.அந்த நாள் அரையாண்டு கடைசிப் பரிட்சை என்பதை மீண்டும் நினைவில் நிறுத்திக் கொண்டான். ‘இன்னொரு முறை குருவிக்குட்டானை தூக்க வாய்ப்பு குடு சாமி. அது உச்சா போனா கூட நான் அசையமாட்டேன்’ என எப்போதுமே பெரிதாகக் கண்டுகொள்ளாத தோப்பு காத்தானிடம் வேண்டிக் கொண்டான். கண்கள் லேசாக கலங்கத் தொடங்கின. தோப்புக்காத்தான் காடு கரையைத்தானே காப்பாற்றும். அதற்கு இதெல்லாம் செய்யவா நேரம்? என யோசித்தான். ‘அதெல்லாம் சாமியும் சாமியும் கூட்டாளியாத்தான இருக்கும்.. எந்த சாமி சொந்தக்காரங்கள சேர்த்து வுடனுமோ அந்த சாமி காதுல போட்டுரும்’ என அவனை அவனே சமாதானம் செய்து கொண்டான்.
சித்தி நிறைய தீனி தருவாள். அம்மா ரசம் வைக்கிற நாளில் பூண்டுக் குழம்பு தருவாள். அமாவாசை இரவில் சந்தவம் நெறித்தால் ஒரு தூக்குப்போணியில் போட்டுவந்து தந்துவிட்டுப் போவாள். இவன் அம்மாவிடம் அதுபற்றி ஒருநாள் கேட்டான்.
‘ஏன்மா சித்தி தர்ற மாதிரி நீ எதையும் சித்தி வீட்டுக்கு தர்றதில்ல?’
அம்மா உளுந்து கலைந்து கொண்டே அலட்டலில்லாமல் சொன்னாள்.
‘இல்லையே.. நாமளும்தான் ஏதாவது மிச்சம் ஆகிடுச்சுனா தர்றோம்’
அப்பா ஓடையிலேயே தன் எல்லையைக் கடந்து சித்தப்பா காட்டை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டான். என்னமோ தவறாக நடக்கப்போகிறதென மனது படபடத்தது. அப்பா மத்தியானம் பைசலில் பேசியது ஞாபகம் வந்தது.
‘சூனி வயலு இன்னிக்கு நேத்தில்ல.. எங்கப்பன் சாவும் போதே எனக்குத்தான்னு சொல்லிட்டுதான் போனாரு. நோவாம இவனுக்கு விட்டுட்டுப் போகணுமா?’
‘அப்பன் சொன்னாரு சரி. ஆனா, உன் தம்பிக்காரன் விட்டுத் தர மாட்டேங்குறானே. அதையும் சேர்த்தாதானே சரிசமமா பிரியுதுங்குறான்?’
பெரியாள் மாரிமுத்து சொல்வதையும் அப்பா கேட்டுக் கொள்ளவில்லை. கொஞ்சம் கைகலப்பாகிவிடும் போலத் தெரிந்ததில் பைசல் முடிவேயின்றிக் கலைந்தது. இது மூன்று மாத காலமாகவே பனியாய் புகைந்து கொண்டிருக்கிறது. நாளை காலை பள்ளிக்கு சோறு எடுத்துப் போக வேண்டுமென யோசிக்கையில் கவலையாக இருந்தது. அம்மா பள்ளிக்கு புறப்படுவதற்குள் குழம்பு வைக்கமாட்டாள். சித்தி கொஞ்சம் சுறுசுறு. அதனால் அவளிடம் அனுப்பிவிடுவாள். இவன் சுடுசோற்றை கைகளை ஊதி ஊதி போட்டுக்கொண்டு வரப்பில் ஓடிப்போய் டிபன்பாக்ஸை நீட்டுவான்.
சித்தி அதிலிருக்கும் சோற்றைப் பார்த்ததும் ‘ஏண்டா, சோறு நான் போடமாட்டனா?’ என கோபிப்பாள். தனிக்கிண்ணியில் குழம்பெடுத்துப் போய் ஊற்றிப் பிசைகிற வழக்கமெல்லாம் அவனிடம் இல்லை. சித்தி சுடுசோற்றை தட்டில் மாற்றிவிட்டு பிசைவதற்கு வசதியாக முதலில் அடியில் கொஞ்சம் குழம்பு விடுவாள். அதன் மீது சோற்று அடுக்கு. மீண்டும் சதசதவென ஊறினாற்போல குழம்பைத் தெளித்துவிடுவதைப் பார்க்கவே அழகாயிருக்கும். இனிமேல் அப்படியெல்லாம் சித்தியிடம் போய் குழம்பு வாங்கமுடியாதென மத்தியானச் சண்டையில் புரிந்து கொண்டபோது ஏக்கமாக இருந்தது. குருவிக்குட்டானை இடுப்பில் வைத்துக்கொண்டு சித்தி தொலைவாக பாலமரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் பைசல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். குருவிக்குட்டான் அந்தக் கூட்டத்திலும் இவனை அடையாளம் கண்டு சிரித்தது. கைகளை நீட்டியது. அம்மா இவன் கையைப் பிடித்திழுத்து முறைத்தாள். அவனுக்கு அதற்குமேல் அங்கு நிற்க அழுகையாக வந்தது. வேகமாக வீட்டுக்கு ஓடிப்போனான்.
அப்பா சித்தப்பாவின் காட்டுப் பாகத்திற்கு நேராக வந்து சற்று நேரம் நின்றார். எந்த இடமென அனுமானிக்க அந்த இருட்டில் நிறைய நேரம் பிடித்தது. ‘எங்கப்பா போறம்?’ அவன் பயத்தோடு கேட்டான். அவர் கையிலிருந்த போன் டார்ச்சை அணைத்துவிட்டு அதிகாரமாக ‘மூடிக்கிட்டு வா’ என ஓடையோரத்து கல்கட்டில் காலை வைத்து கரையேறத் தொடங்கினார். லுங்கியை உள்ளுக்கு சுருட்டி வாகாக அமர்ந்துகொண்டு அவனை நோக்கி கைநீட்டினார். அவன் அதே மிரட்சியோடு கைகளை நீட்டி ஏறிக்கொண்டான். சித்தப்பா வீட்டுக்கும் அவர்களுக்குமிடையே ஓங்கி வளர்ந்த சோளவயல். அந்த இருளில் அவர்கள் நிற்பது வெளிச்சமடித்துப் பார்த்தாலும் தெரியாது.
அப்பா கரையோரம் இருந்த ஊனாங்கொடியை அடையாளம் பார்த்தபோதே அவன் புரிந்துகொண்டான். கொடிக்கு நேராக நின்று நூல் பிடித்ததுபோல மேற்காக நகரத் தொடங்கியவரைத் தயங்கியவாறே பின்தொடர்ந்தான்.
கிணற்றில் இன்று அப்பாவின் வீதம் போல நாளை சித்தப்பா வீதம் கணக்குக்கு வந்தது. மேட்டாங்கிணற்றில் நீரில்லாததால் இருவருக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் வைத்தும் பயனில்லை. முதன்முதலில் சண்டை இந்த வீதத்தில்தான் ஆரம்பித்தது. ஒருமுறை இறைத்து வடித்தால் ஊற்றெடுக்காத கிணற்றை வைத்துக் கொண்டு விளைச்சலுக்கு பாய்ச்ச முடியாமல் எதிரெதிராக நின்ற நாள் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றுதான் குருவிக்குட்டானைத் தூக்கிக்கொண்டு சித்தி பிறந்தவீட்டிலிருந்து இங்கு வந்தாள். சித்தப்பா ஆரத்தி எடுக்க ஆள் விட்டனுப்பியபோது பிணக்கு முற்றிய நிலையில் அம்மா போக மறுத்துவிட்டாள். இருந்தாலும் மனசு கேட்காமல் காய்ச்சலென நீட்டிப் படுத்துக்கொண்டு சொல்லியனுப்பினாள். அதன் பிறகுதான் முற்றிலுமாக பேச்சு வார்த்தை நின்றுபோனது.
சித்தப்பா மேட்டாங்கிணற்றின் வறட்சியிலிருந்து தப்ப போர் போடுவதென முடிவெடுத்தார். நாக்கியம்பட்டியிலிருந்து ஒரு ஊத்துக்காரர் வந்து குறித்த இடத்தை இன்னொரு சிங்கிபுரத்துக்கு ஊத்துக்காரர் ஊர்ஜிதம் செய்தார். அன்றிரவெல்லாம் அப்பாவும் அம்மாவும் குசுகுசுவென சித்தப்பாவிடம் பணம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து குழம்பியிருந்தனர். வடக்குக்காட்டு அஞ்சலத்தம்மா சித்தியின் நகைகள் அடகுக்குப் போயிருப்பதையும், சித்தப்பா வேளாண் வங்கியில் லோன் போட்டிருப்பதையும் சொன்னபிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனாலும் கிணற்றில் கொஞ்சநஞ்சம் ஊறுகிற வாரியை அவர் பிடித்துவிடுவாரென நம்பத்தொடங்கி அதன் உச்சத்தில் சோறு தண்ணீர் இறங்காமல் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அவன் சித்தப்பா போர் போட்டு தண்ணீர் கிடைத்தால் அவர்களுடைய மாடு கன்றுகளுக்கு நிச்சயம் தண்ணீர் விடுவாரென உறுதியாக நம்பினான். ஆனால், அதை அப்பாவிடம் சொல்ல பயம். அமைதியாக இருந்துவிட்டான்.
அப்பா ஆயிரம் அடி தாண்டினால்தான் ஊற்று என வருவோர் போவோரிடமெல்லாம் அவநம்பிக்கையோடும் காட்ட முடியாத கோபத்தோடும் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தானும் ஒரு போர் அழுத்திவிடுவதென முடிவு செய்து இரண்டொரு பைனான்ஸ்காரர்களை நடையாய் நடந்து பார்த்தார். வட்டி விவரம் மலைப்பைத் தந்ததில் மௌனமாக அமர்ந்து விட்டார். சித்தப்பா போரோட்டப் போவதைப் பற்றிய அனுமானங்களை தினசரி யாரேனும் காதில் விழும்படி செய்து கொண்டே இருந்தார்கள். மனம் முழுக்க அக்னி சூழ்ந்து வெறுப்பின் சாம்பல் படியத் தொடங்கியிருக்கிற அவ்வீட்டில் அதன் நாற்றத்தை அவன் நன்றாகவே உணர்ந்தான்.
சித்தப்பா அடையாளம் வைத்திருந்த இடத்தில் அவர்கள் நின்றிருந்தார்கள். மஞ்சளும் குங்குமமும் இடப்பட்டிருந்த மொளக்குச்சி அரையடிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
நாக்கியம்பட்டிக்காரர் எண்ணூறு அடிக்கு மேல் ஓட்டியாக வேண்டுமென தீர்மானமாகச் சொல்லியிருந்தார்.
‘ஊரே பாறாங்காடா கிடக்குது. எல்லாப் பக்கமும் ஆயிரம் அடிக்கு கீழ போய்டுச்சு. ஊத்துச் செலவுல ஆரம்பிச்சி கரண்ட் இழுத்து மோட்டார் எறக்கி தண்ணி எடுத்து வுடறதுக்குள்ள அஞ்சு லட்சம் முடிஞ்சிடுது’ என ஊரில் இப்போதெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். இந்த ஊத்துக்காரர் குறித்தால் நிச்சயம் தப்பாதென சாயங்காலம் வந்திருந்த சொந்தக்கார தாத்தா சொன்னதிலிருந்தே அப்பா மந்திரித்து விட்டது போல இருந்ததன் காரணத்தை அவன் யோசித்தபடியிருந்தான்.
‘உன் தம்பியும் ஆயிரம் அடி ஓட்டித்தான் நிறுத்தப்போறானாம். தண்ணி வந்துடுச்சுனா சுத்திலயும் எவனெவன் போர் குழி காயப்போவுதோ…’
யாராவதொருவர் பொழுது போகாமல் தூண்டிவிடுகிற வேலையைச் செய்து விடுகிறார்களென்பது அவனுடைய தேற்றக்கணக்குகள் புரியாமலிருக்க கவலையை விடப் பெரிதாக இருக்கிறது. சித்தப்பா வீட்டில் நடக்கிற ஒவ்வொன்றும் இங்கே உடனடியாகத் தெரிந்துவிடுகிறது. பிசாசு ரூபத்தில் அப்பா இப்போது அடையாளக் குழியில் நிற்கிறார்.
‘பாரு தம்பி. வண்டிய மேற்க பாத்து நிறுத்தணும். கரெக்ட்டா குழி மேல இருக்குற தேங்காய்ல ராடு இறங்குதானு மட்டும் பாத்துக்க. அரை அடி மாறுனாலும் அப்புறம் தண்ணி வரலனா என்னை கோச்சிக்க கூடாது’
அப்பா சுற்றியிருக்கிற மண்ணாங்கட்டிகளைப் பார்த்தார். வெற்று உழவு ஓட்டிப் போட்டிருப்பது தனக்கு சாதகமெனப் பெருமைப்படுகிற முகம் அந்த இருளிலும் கோரமாய் தெரிந்தது. கலப்பைத் தடம் குழையாமல் மொளக்குச்சியை பிடுங்கத் தொடங்கினார்.
அவன் பதறிப்போய் அவர் கைகளைப் பற்றினான். ‘அப்பா வேணாம்பா.. அப்பா..’
அவர் அவனுடைய அரற்றலைக் கண்டு கொள்ளாமல் மொளக்குச்சியை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தார்.
‘அப்பா.. எதுக்குப்பா இப்படிலாம் பண்ற? சித்தப்பா பாவம்பா’
அவர் ஆட்டுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தார்.
‘அடங்…….வூட்டுதே… அந்த மயிரான் பாவமா? போ.. அவன் வூட்டுக்கே. என் வூட்டுக்கு சோறு திங்க வராத’
அடிக்க கைகளைக் காற்றில் பாய்ச்சினார். அவன் விலகிக் கொண்டாலும் தடுமாறி ஏறு கட்டியில் கால் வைத்து இடறி விழுந்தான். வெறுப்போடு அவரைப் பார்த்தான். வேட்டை மிருகம் நீண்டகாலப் பசியைத் தீர்த்துக் கொள்வது போன்ற உடல்மொழியைத் தந்தபடி அவர் மொளக்குச்சியைப் பிடுங்க அங்கிருந்தே கரையிலிருந்து ஊனாங்கொடியை அளவு பார்த்தார். அடையாளக்குழிக்கு மேற்கே ஒரு அடித்தள்ளி மொளக்குச்சியை ஊன்றினார். வரப்பில் கிடந்த கல்லை எடுத்துவந்து அதே அளவில் மண்ணுக்குள் இறக்கிவிட்டு டவுசருக்குள் கையை விட்டு காகிதப் பொட்டலத்தைப் பிரித்தார். அதற்குள் இருந்த மஞ்சளையும் குங்குமத்தையும் பழையபடிக்கு மொளக்குச்சியைச் சுற்றித் தடவுவதை அவன் வெறித்தபடிப் பார்த்திருந்தான். இத்தனை முன்னேற்பாட்டோடு செயலில் இறங்குகிற அப்பாவை இதற்கு முன்பு எங்காவது பார்த்திருக்கிறோமா என யோசித்தான்.
அவர் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி, ‘உன்ன கூட கூட்டிக்கிட்டு வந்துருக்கவே கூடாதுடா தாயாளி..’ எனக் காலால் எத்தினார். அவன் எழுந்துகொண்டு சிறுத்த முகத்தோடு அவரைப் பின்தொடர்ந்தான்.
அதிகாலை நான்கு மணிக்கு காட்டில் இரைச்சல் சத்தம் கேட்டது. அவன் அதுவரையுமே தூங்காமல் மலங்க மலங்க விழித்திருந்தான். வண்டி வந்து நின்றதிலிருந்து பூஜை நடக்கிற வரை புளியமரத்தடியிலிருந்து அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் மாட்டுக்கொட்டாயில் கட்டிலைப் போட்டு மோட்டுவளையை வெறித்தபடி தூங்காமல் விழித்திருந்தார். எதையோ சாதித்துவிட்ட பரம திருப்தியொன்று அவர் இரு கைகளையும் தலைக்கு வைத்து மல்லாக்கப் படுத்திருந்த தோரணையில் வெளிப்பட்டது.
ஒவ்வொரு நூறு அடிக்குமான தகவல் அவ்வீட்டிற்கு கடந்து செல்வோர் மூலமாக வந்துவிட்டிருந்தது. நேரம் ஏற ஏற பதட்டம் அதிகரித்திருந்தது. இரு வெவ்வேறான பதட்டங்கள். ‘சித்தப்பா பாவம்’ அவன் வாய்விட்டு முனக பயந்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.
‘’நானூறு தாண்டிடுச்சு. இன்னும் ஈர மண்ணே வரல. போட்ட காசுக்கு ஒரு முக்கா இன்ச் தண்ணீ வந்தா கூடப் போதும். கம்ப்ரசர் மோட்டார் வச்சி வீட்டு செலவுக்காச்சும் இழுத்துக்கலாம்னு இப்பயே பொலம்ப ஆரம்பிச்சிட்டான்’
தனக்கு சாதகமான குரல்கள் காதில் கேட்கத் தொடங்க அப்பா முகத்தில் எந்தக் களிப்பையும் வெளிக்காட்டாமல் முகத்தை நடுநிலையாக வைத்தபடி, ‘யாரோ என்னமோ பண்ணிட்டுப் போறாங்கண்ணே.. நம்மளுக்கு என்ன? நாம நம்ம வேலைய பாப்போம்’ எனச் சொன்னபோது முகம் பார்க்க அருவறுப்பாக இருந்தது.
நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அப்பா நிம்மதியாக சாப்பிட்டு முடித்திருந்தார். அவன் அன்று பள்ளிக்குப் போகாதது குறித்தோ காலையிலிருந்து சாப்பிடாதது பற்றியோ எதுவும் விசாரிக்கவில்லை. மாறாக அவனை நிமிர்ந்துப் பார்க்கையில் விஷமக் கொடுக்குகள் அசைகிற நட்டுவாக்காலிகளின் தோற்றம் நிழலாகத் தென்பட்டது. அவருக்கும் அவனுக்கும் மட்டுமே தென்படுகிற தோற்றம்.
‘இதப்பத்தி எவன்கிட்டயாவது சொன்ன.. மவனே இல்லனாலும் மயிராச்சுனு ஒரே ஊனா ஊனி பொடக்காலியில பொதச்சிப்புடுவேன் பாத்துக்க’
நேற்றிரவு திரும்பும்போது அவர் மிரட்டியது ஞாபகம் வந்தது. வீட்டுக்கு கிழக்கே வந்து பார்த்தான். இன்னும் புகையாகத்தான் போய் கொண்டிருந்தது. அதற்கு மேல் நிற்க மனமின்றி உள்ளறைக்குப் போய் பாயிட்டுப் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
பேச்சுக் குரல் கேட்டு கண்விழித்தபோது தூக்க கலக்கத்தை மீறி சொற்கள் காதில் விழுந்தன.
‘அட ஊத்துக்காரனாலயே நம்ப முடியலப்பா. அவன் தொள்ளாயிரம் ஆடி தாண்டுனாதான் தண்ணினு தீர்மானமால்ல சொல்லிட்டுப் போனான்? இங்க என்னடான்னா எழுநூறு அடியிலேயே பிச்சிக்கிட்டு ஊத்துது. பாரு என் சட்டைலாம் நனைஞ்சிப் போச்சு’ என பெரியாள் மாரிமுத்து தன் உடைகளின் ஈரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் பார்த்தான். ஒளியின் பிரவாகம் கண்களில் நிரம்பி இருட்டை விரட்டுகிற தார்மீகக் குதூகலத்தோடு வாசலுக்கு ஓடிப்போய் பார்த்தான். புகை முற்றிலுமாக அடங்கி நீர் காம்பிலிருந்து பக்கவாட்டில் தெறிக்கிற பால் போல சுற்றி நிற்பவர்கள் மீதும் நனைத்துக் கொண்டிருந்தது.
‘ஆச்சரியமான விஷயம் தான்மா. சுத்திலயும் எங்கயும் இந்தக் காய்ச்சல்ல ஆயிரம் அடிக்கே தண்ணி இல்ல. இங்க எழுநூறு அடியில இம்புட்டு தண்ணி வர்றது அதிசயம்தான். பின்ன? ஊத்துக்காரனே சொன்னதுக்கு அப்புறமும் இவ்வளவு மேலயே இம்மாம் பெரிய ஊத்து சிக்குதுனா கண்டிப்பா அது தோப்புக்காத்தான் சாமியோடு வேலதான். இப்படிக் கிடைக்கிறத் தண்ணிலாம் எந்த காலத்துலயும் வத்தாது’ மாரிமுத்து சொல்லிக்கொண்டே போக கறுத்திருந்த அப்பாவின் முகம் என்ன சொல்வதெனத் தெரியாமல் பாறைப் போல் இறுகத் தொடங்கியதை கவனித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அம்மா உள்ளறையில் பாத்திரங்களை உருட்டியபடி ஜாடை பேசத் தொடங்கினாள்.
‘எங்கயோ இடிஇடிக்குது.. எங்கயோ மழை பெய்யுது. அந்த சேத்த இங்க எதுக்கு மாமா இழுத்துட்டு வர்றீங்க? எங்களுக்குத் தெரிஞ்சி என்னாகப் போவுது?’
‘அட அப்படியில்ல கண்ணு. அவனும் பூஜை போடும்போதே அண்ணன கூப்பிடலாமா? அண்ணன் ஏதாச்சும் சொன்னாரா?னு உங்கள பத்தி கேட்டுகிட்டேதான் இருந்தான். இப்பக்கூட தண்ணி வந்ததும் இனிமே தண்ணிக்கு பிரச்சினையில்ல.. ரெண்டு குடும்பமுமே சமாளிச்சுடுவோம்னுதான் சொன்னான். மனஸ்தாபம்லாம் ஒண்ணும் உள்ளுக்குள்ள வச்சிக்காம முதல் தண்ணிய தோப்புக்காத்தானுக்கு அபிஷேகம் பண்ண கூப்பிடுறான். ரெண்டு பேரும் வாங்க..’
மாரிமுத்து வெளியே இருந்தபடியே உரத்த குரலில் சமாதானம் செய்வதைப் பார்க்கையில் அவனுக்கு நெகிழ்வாக இருந்தது. உள்ளுக்குள் அப்பாவும் குற்ற உணர்வு மேலிட கொஞ்சம் குழைந்திருந்தது போல் முகவாட்டம் காண்பித்தது.
‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ண்ணா. தண்ணி வந்தா நல்லா பொழைக்கட்டும்.. நாங்க ஒதுங்கியே நின்னுக்கறோம்’
‘சும்மா முரண்டு பிடிக்காதடா. ரெண்டு பேருக்கும் சேர்ந்து ஒரு தோப்பு காத்தான்தான் நிக்கிறாரு. அவரு மனசு வைக்காமலா எழுநூறு அடியில தண்ணி வரும். அவன பகைச்சிக்கிறதா நினைச்சி சாமிய பகைச்சிக்காம வந்து கும்பிடு. உங்க சண்டைய அப்புறமா வச்சிக்கலாம்’ மாரிமுத்து பிடிவாதமாய் அழைத்ததும் அப்பா அசைவு குடுத்ததில் அவன் மலர்ந்தபடி அவருக்கு முன்பாக குதித்துக் கொண்டு காட்டுக்கு ஓடினான்.
காட்டின் மூலையிலிருந்த வேப்பமரத்தடியில் தோப்புக் காத்தான் நின்றிருந்தார். நெகிழ்வு கமழ்கிற சித்தியின் முகத்தைப் பார்த்தான். அவள் சிரிப்பு பழைய மாதிரியே பளிங்கடித்தது கண்டு அருகில் போய் குருவிக்குட்டானை வாங்கிக் கொண்டான். அது சற்றுநேரம் அவன் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சிரித்தது. சித்தப்பா சித்தியை நெண்டியதும் அவள் ஓடிப்போய், ‘வாங்க மாமா..’ என அழைத்தாள். அம்மாவை, ‘வாக்கா.. இவ்வளவு நாள் நீயும் பேசாமயே இருந்துட்ட’ என கைகளைப் பற்றியதும் அவள் கஷ்டப்பட்டு சிரித்தாள். முதல் தண்ணீரை சாமிக்கு ஊற்றியதும் சுற்றிலும் குளிர்ச்சி பரவியது போலிருந்தது.
‘அப்பா பிடிப்பா.. சாமி கும்பிடணும்’ என நீட்டியதும் அவர் எதுவும் பேசாமல் குருவிக்குட்டானை வாங்கிக் கொண்டதை அம்மா முறைத்துக் கொண்டிருந்தாள்.
இவன் என்றைக்குமில்லாமல் தோப்புக் காத்தானின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சாம்பலை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டதை சுற்றி நின்றவர்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள்.