இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

உருத்து – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

சிறுகதை | வாசகசாலை

இருளுக்கும் அமைதிக்குமான காதலைக் கரைத்துக் கொண்டிருந்த சுவர்க்கோழியின் ஒப்பாரி அதன் இணைக்குக் கேட்டதோ யில்லையோ, இடிந்துபோயிருந்த தவமணி வீட்டாளுகளுக்கு புத்திக்கு எட்டாமல் காதுகளில் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. பொழுதிருட்ட வேடிக்கைக்கும் விலக்கி விடவும் கூடிய கூட்டமெல்லாம் ஒன்றும் இரண்டுமாய் கலைந்துபோக சாமமிரண்டு கழிந்து மூன்றைத் தொட்டிருந்தது. மிச்சமிருக்கும் உடுப்படிகளெல்லாம் தவமணியின் உருத்துக்கள்தான். ஆக உடைத்துப் பேச வேண்டிய காரியங்களுக்கான பேச்சைத் தொடங்கும் முன்னான மௌனத்தைக் கலைத்தது தவமணி சம்சாரம் பாண்டியம்மாதான்.

“பலவட்ற முண்ட! ஊரே என்வீட்டு வாசல வேடிக்க பாக்க வச்சிட்டாளே… நாளைக்கி ரோடு தெருவுன்னு தலகாட்ட முடியுமா! சிந்துனதுக செதறுனதுக கூட சீன்னு சிரிச்சிறாதுகளா!”

“நம்ம வீட்டப் பாத்து சிரிக்கதுக்கு ஊருக்குள்ள எவன் வீடு ஒழுங்கு! நீ வெசனப்படாம இருத்தா பாண்டிம்மா!”

“அதான! தவமணி வீட்டப் பாத்து எளக்காரம் பண்ண எந்தப் பயலுக்கும் சிறிக்கிக்கும் தெயிரியமிருக்குன்னு நெனைச்சிட்டிருக்க நீயி!”

“ஊரெல்லாம் நாம் பாட இன்னிக்கு எம்பாட்ட ஊர் பாடும்படியாக்கிட்டாளேண்ணே! மூஞ்சில பேசத்துணியாத கழுதைக முன்ன விட்டுப் பின்ன பேசாமளாயிருப்பாக? எப்ப எப்பன்னு இருந்தவுகளுக்கெல்லாம் இது ஒன்னு போதாதா?! விடியவிடிய ஊர்திண்ணையெல்லாம் என்வீட்டுக் கதகேட்டுல்ல குளுந்து கெடக்கும்…”

“போய் சாவுடி! கண்டாரோலி! பொம்பளப் பிள்ளைய வீட்டுல வச்சுப் பராமரிக்கத் துப்பில்லாத கண்டாரோலி! இப்ப வந்து ஒப்பாரியா வச்சுக்கிருக்க? நீயெல்லாம் இருக்கலன்னு யாரழுதா! போய் சாவு!”

“ஏய் சும்மாயிரப்பா தவமணி! நெதானமில்லாமப் பேசிகிட்டு!”

“நான்தான் பொட்டச்சி! எனக்கு ஏலல… ஒன்னுக்கு ரெண்டாம்பளைக மூணு வருசமா உக்காந்து இலவு காத்தாப்ல காத்துட்டிருந்தீகளே… என்ன மிடிஞ்சது ஆம்பளைக்கு! அவ பிடிச்ச பிடியிலதான தேரிழுத்துத் தெருவுல விட்டிருக்கா”

ஆத்திரத்தில் எழுந்து சம்சாரத்தை அடிக்கப்போன தவமணியை ஆளும்பேருமாய் இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்து விட்டு, “அவருதான் ஆம்பள ஆத்தரத்துல பேசுதாருன்னா நீ கொஞ்சம் பொறுத்துத்தான் போயேன்… நீயும் கூடக் கூட பேசணுமா?”

“நீ உக்காருயா தவமணி பொம்பளயக் கைநீட்டிகிட்டு”

“யெத்தா! பாண்டிம்மா… எந்திரிச்சு உள்ள போயி பிள்ள பக்கத்துல உக்காந்து அழு தாயி… அவள அடிக்காம வையாம அழுவணும். பெத்தவுக மேல பாவப்படுதளவுக்கு கண்ணீர் விடணும். இந்தா என் பொண்டாட்டியக் கூட கூட்டிட்டுப் போ.. இதுலலாம் அவ தேறுனவ…”

அழுதபடிக்கே பாண்டியம்மாவும் சண்முகவேல் சம்சாரமும் உள்ளே சென்றதும் ஆரம்பமானது மிச்சமிருந்த ஆண்களின் கலந்தாய்வு. “நடந்தது நடந்துபோச்சு; அடுத்து ஆகுறதப் பேசுறதா, இல்ல, இருக்கது பத்தாதுன்னு புருசன் பொண்டாட்டி நீங்களும் சண்ட போட்டுட்டு இருக்கிறதா? “

“பள்ளியூடம் முடிச்ச லெக்குல காலேஜ் போனுன்னு இருந்த பிள்ளய அண்ணன் மவனுக்குக் கட்டிக் குடுத்தாலே குடுப்பேன்னு இந்த முண்ட பண்ணின அடத்துக்குதான அந்த சாதகம் செத்த பயலுக்குக் குடுத்து, வருசங் கழியுங்குள்ள தாலியறுத்துட்டு வந்து நின்னு வருசம் ஆறாகிருச்சே!”

“சரி.. அவ மட்டும் கனவா கண்டா.. அறிஞ்ச எடம் தெரிஞ்ச எடம்னா பிள்ள கஷ்டம் பாக்காம இருக்குமேன்னுதான குடுத்தா… அவ தல எழுத்து இப்பிடி ஆகிட்டு”

“அப்பத் திரும்பி வந்தவள வீட்ல இருக்குற அவதான கண்காணிக்கனும். எந்நேரம் பாத்தாலும் இவ பாடு அந்த டிவியில தான் ஓடுது. தாலியறுத்து வந்த பிள்ள என்ன செய்யுது, யாருட்டப் பேசுது, எங்க போய்வருதுன்னு கவனிக்கதத் தவித்து என்ன வேல இவளுக்கு.. “

“அப்ப மைனி சொன்னது போல மூணுவருசமா இந்தப் பயலோட பழக்கம் இருந்துருக்கோண்ணே!”

தவமணிக்குப் பதில் சொல்ல கூச்சம் பிடுங்கித் நின்றது. பேச வக்கற்று உட்கார்ந்திருந்தார்.

“அட நம்ம பிள்ளையின்னு இல்லப்பா! ஒரு வருடம் புருசன் வீட்ல இருந்துட்டு வந்தவளுக்கு எங்கிட்டாச்சும் ஒரு துணை தேடத் தோணிரும். குடும்பம், கெவுரதி,மரியாதைனு கருத்தா இருக்க ஒண்ணு ரெண்டு பிள்ளைகதான் இதுல வெலக்கு…”

தவமணிக்கு ஆத்திரம் முட்டிக் கொண்டிருந்தது. ஊர்ப்பஞ்சாயத்துகளிலெல்லாம் தான் பேசியிருந்த அதே வியாக்கியானம்தான்; இன்று தனக்கு இன்னொருவன் பேசும் சூழல் வாய்த்தமைக்கு நொந்து கொண்டார்.

“போனதுதான் போனா! நம்மாளுங்கக் கூடப் போயிருக்கக் கூடாது! சாக்கடையாயிருந்தாலும் சத்தங்காட்டாம அள்ளி வீட்டுக்குள்ள வச்சிருக்கலாம்”

“அந்தப் பயலுக்கும் எவளோ நெஞ்சழுத்தமிருந்தா, கரெட்டா ஆளில்லாத நேரத்துல வீட்டுக்கு வந்து கூட்டிட்டுப் போயிருப்பான்! அவன் ஆம்பளயா இல்ல நாமெல்லாம் ஆம்பளயா”

“ஆம்பளயா இல்லையான்னு ஆம்பளயிருக்கும்போது வந்திருந்தால்ல தெரியும்! அதுவும் கரெட்டா ஆளில்லாத நேரம் வந்திருக்கான்னா, சிக்னல் வீட்டுக்குள்ளருந்துதான போயிருக்கணும்? என்னயா மாமா?” இதைச் சொல்லும்போது சண்முகத்தைப் பார்த்து சிரித்த முருகனின் நக்கல் சிரிப்பை தவமணியும் கவனித்ததில் நொறுங்கிப் போனார்.

“கூட்டிட்டு போனவன் வெளிய எங்கயாது பெயிருந்தாலும் ஆளும் பேருமா தேடி அரவமில்லாம பிள்ளயக் கூட்டியாந்திருக்கலாம்… வெவரமா டேசனுக்குல்ல கூட்டிட்டுப் பெயிட்டான்! அதான் ஜே ஜேன்னு ஊரே கூடிருச்சு”

“ஆனா தவமணி, சொல்லுதேன்னு தப்பா நெனச்சுக்காத! டேசனுல மட்டும் நம்ம பய மணிகண்டன் இல்லன்னா இன்னிக்கு ரவைக்கு பிள்ள நம்ம வீட்டுக்கு இல்ல…”

“அதான மச்சான்! இவரும் இவரு மகனும் போயி சத்தம் போடுதாக, எங்கக்கா பாண்டியம்மா போயி ஒப்பாரி வச்சு அழுதா… பிள்ள அவன் கையப் பிடிச்ச பிடிய விட மாட்டைக்காளே! ரைட்டர் கேக்கும் போதும் கூட அவன்தான் வேணும்னுட்டா… ஏதோ மணிகண்டன் இருக்கப் போயி பிள்ளய உள்ள கூட்டிட்டுப் போயி அவன வெட்டிருவேன் கொன்னுருவேன், உள்ள தூக்கிப் போட்டு வெளிய வர முடியாமப் பண்ணிருவேன்னு மெரட்டவும், அம்மா அப்பாவ சம்மதத்தோட வாரேன்னு அவன்ட்ட சொல்லி கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு வந்திருக்கா.. இல்லையினா இந்நேரம் அவன் லவுட்டிட்டுப் பெயிருப்பான் பிள்ளய..”

“அந்தளவுக்கு பெருசா எதயோ காட்டி மயக்கிருக்கான் போல மாமா” மீண்டும் முருகனின் நக்கலும் சிரிப்பும், தன்னைப் பழிவாங்கக் கிடைத்த சந்தர்ப்பவாதம் எனத் தவமணிக்கும் புரிந்தது. ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஊருக்கு புதிதாய் வந்திருந்த வாத்தியாருடன் ஓடிப்போன முருகனின் தங்கையை சேலம் தாண்டி கண்டுபிடித்து வாத்தியாரை அடித்துக் குத்துயிரும் குலையுமாய் போட்டுவிட்டு பழனியம்மாளை மட்டும் அழைத்து வருகையில் காரில் வைத்து, “வாத்தியாரு வேறெதுவும் சொல்லிக் குடுத்தாரா பழனி” என வக்கிரமாய் தவமணி கேட்டுவிட்டு சிரித்தது இருவருக்கும் நினைவிலிருந்ததால் இப்படி நாக்கு மேல பல்லப்போட்டும் பேசுகையிலும் வழியில்லாமல் காதில் வாங்கியபடி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார் தவமணி.

“சரி இப்ப ஆகவேண்டியதப் பேசுவோம்”

“ஆகவேண்டியதென்ன ஆக வேண்டியது? நீங்கலாம் கெளம்புங்க, நான் ராவோட ராவா பின்னாடி ஓட்டுச்சாய்ப்புல இந்த அசிங்கத்தக் கயித்துல ஏத்திருதேன்… காலையில கோழி கூப்ட என் பொண்டாட்டி கத்துவா, எல்லாம் வந்தீங்கன்னா ஓட்டப் பிரிச்சு எறக்கி ஈமக்காரியத்தெல்லாம் பண்ணிரலாம்… எழவு எடுக்குங்குள்ளயும் நம்ம பயலுக பத்துப்பேர காலனிக்குள்ள அனுப்பி அந்தப் பயலையும் கண்டந்துண்டமாக்கிப் போட்டுட்டு வரட்டும்…”

“ஏய் தவமணி! கூறில்லாமப் பேசாத… அந்தக் கூதியான் டேசனவிட்டுப் போவும் போது வக்கீல வச்சு எழுதிக் குடுத்த கம்ப்ளைன்ட்ல டேசன்ல இருந்து கூட்டிட்டுப் போற பிள்ளைக்கு எதுவும் ஒன்னுன்னா தவமணியும் பொறுப்புக் கையெழுத்து போடுற அஞ்சு பேரும்தான் காரணம்னு எழுதிக் குடுத்திருக்கான். ஆத்திரத்துக்கு எதயாது பண்ணிட்டு கூட்டத்தோட கூண்டுல ஏத்துறதுக்கா?”

“வேறென்ன செய்யனும்ங்கிறீங்க இப்ப?”

“பிள்ளயக் கொஞ்சங் கொஞ்சமா வழிக்குக் கொண்டாந்து ரெண்டாந்தாரமோ மூணாந்தாரமோ நம்மாளுங்கள்ல ஒருத்தனுக்கு கட்டி வச்சிட்டா அவ பாட்டுக்க அவன் காலுக்குக் கீழ இருந்துட்டுப் போயிருவா! அந்தத் தாயோளி இங்குதான கெடக்கப் போறான்… த்தலக்க நேரங் கெடைக்கையில அறுத்துப் போட்ருவம்”

“நேரங் கெடைக்கையில என்ன கெடைக்கையில? இந்த மாசக்கடைசியில காலனியில சொடலமாடன் கோயில் பொங்க வப்பானுங்கல்ல, அப்போ கூட்டத்தோட கூட்டமாப் போயி வாயில சாராயத்த ஊத்தி கழுத்தத் திருக்கிப் போட்டுட்டு வந்திருவம்…”

“நீ அது வரைக்கும் பிள்ள கையில போனக் குடுக்காத, கடதெருவுக்குன்னு தனியா வெளிய விடாத; அவ பேச்சுத் தொணைக்குக் கூட அவ கூட்டாளிக கிட்ட சேர விட வேணாம். வேணும்னா தெனைக்கும் என் பொண்டாட்டிய தொணைக்கு அனுப்பி வைக்கிறேன்; அவ இதுலல்லாம் கூடுனவ…”

“ஆனா அடிச்சு மெரட்டில்லாம் ஆகுற காரியமில்லப்பா இது, ஒங்க ரெண்டு பேர் மேல பாவப்பட்டுத்தான் அவ இறங்கணும்ங்கறத மனசுல வச்சுக்கோ”

“ஆமா! ஊருக்குள்ள விசாரிக்குறவுகளுக்கு, ‘பிள்ள வாசத் தூத்துக்கிருந்துச்சு, அந்தப் பய வந்து கார்ல தூக்கிப் போட்டு கொண்டு பெயிட்டான்; பொம்பளப் பிள்ள பேரு கெட்டுப் போவுமேன்னு கேசு குடுக்காம விட்டுட்டோம்’னு வார்த்த மாறாம சொல்லி வை”

“காலனியிலயிருந்து தெயிரியமா ஊருக்குள்ள வந்து பொண்ணத் தூக்கிட்டு பெயிருக்கான்னு சொன்னா ஊருக்குள்ளயிருக்குற ஆம்பளைகளத் த்தூனு துப்பிற மாட்டானுக?”

“துப்புறவய்ங்களயும் கூட சேத்துக்கோ! அந்தத் தாயோளி கதைய முடிக்குறதுக்கு இப்பிடித்தான் ஆளத் தெறட்டணும்”

“த்தாலக்க! ஆனா அந்தப் பயல மட்டும் சும்மா விட்டுறவே கூடாது.”

“அதெப்படி விடுவோம் தவமணி… நீ அந்த கவலைய எங்க கிட்ட விட்டுரு..”

“அதான மாமா! நாங்க உருத்தா வந்து நிக்கமுன்னா உம்மேலயிருக்குற அக்கறையிலதான.. நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம். அதுக்காக உனக்கு ஒன்னுன்னா நாங்க சும்மா விட்டிருவோமா?” முருகனின் இந்த வார்த்தைகள் உண்மையாகவே தவமணிக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்திருந்தது.

“எல்லாத்துக்கும் மேல நம்ம சாதியையும் மரியாதையையும் கண்ட கழுதைக வந்து கெடுத்துட்டுப் போக விட்ருவோமா என்ன? கவலப்படாம இருண்ணே”

“ம்ம்… இந்தா இதுல இருக்குறதுல அந்தப்பய மணிகண்டனுக்கு ஒரு ஐயாயிரம் குடுத்துட்டு மிச்சத்த நீங்க செலவுக்கு வையுங்க, மிச்சத்த பெறகு பாப்பம்”

“அட எங்களுக்கு எதுக்குப்பா இதெல்லாம்”

“எல்லாம் வழக்கம்தான! சும்மா உள்ள வை… காலையில பாப்பம்”

“சரி மாமா! எதயும் யோசிக்காம படுத்து நல்லா தூங்கு! நாங்கல்லாம் எதுக்கு இருக்குறோம்”

அரையும் குறையுமாய்த் தூங்கி விடிகையில் பின்பக்க ஓட்டுச் சாய்ப்பின் அருகிலிருந்து பாண்டியம்மாளின் அலறலில் விழித்த போது பக்கத்து வீட்டு ஆசாரி மாரி மேலேறி ஓட்டைப் பிரித்துக் கொண்டிருந்தான். விசயமறிந்து ஓடிவந்த தவமணியின் உருத்துக்களெல்லாம் நெஞ்சைப் பிடித்தபடி உறைந்து போய் நின்றிருந்தனர்.

“டெத் கேசுல தலையிட்டு என் வேலையக் கெடுத்துக்கச் சொல்லுதியா? அந்தப் பய காலனி முழுக்கா படிச்சுக் கருப்புக் கோட்டோட எப்ப எப்பன்னு திரியுதானுக… போன வை.. இன்ஸ்பெக்டர் லைன்ல வாராரு” முருகனிடம் பேசிக் கொண்டிருந்த மணிகண்டன் ஏட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

rajeshrsafety@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button