இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

உடனுறைவு – கா. சிவா

சிறுகதை | வாசகசாலை

வெறுமை பெரும் போர்வையென என்மேல் கவிந்தது. மென் துகிலால் ஆனதாக இருந்த அப்போர்வை மெல்ல மெல்ல எடை கூடி எடைமிக்க உலோகத்தால் ஆனதாக மாறி அழுத்தியது. கதறி அழுவதற்கான வேட்கை என்னுள் எழுந்தது. 

  ஆண்டிற்கு ஒரு வாரம் மட்டும் பார்க்கவேண்டிய இரவு வேலை முடித்து காலையில்தான் வீட்டிற்கு வந்தேன். எப்போதும் காலை நடையின்போது ஆவலுடன் நோக்கும் சூரிய உதயம் இன்று உறக்கமில்லா கண்களில் பட்டபோது எரிச்சல் தோன்றியது. வீட்டில் நுழையும் முன் எதேச்சையாக எதிர் வீட்டு காம்பவுன்டிற்குள் சிலபேர் நிற்பது கண்ணில்பட்டபோதும் உடல் இருந்த களைப்பில் மனதிற்குள் செல்லவில்லை. ‘காபி தரவா?’ எனக் கேட்ட சுந்திரியிடம் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு சென்று கட்டிலில் படுத்துவிட்டேன். 

   சுந்தரி தன் இளவயது நினைவுகளை பரவசமாக சொல்லிக் கொண்டிருக்க அதைக் காதில் வாங்கியவாறு ஏரிக்கு நடுவிலிருந்த மரங்களில் அமர்ந்திருந்த பறவைகளை பார்த்தவாறு ஏரிக்கரையில் நடந்து கொண்டிருந்தேன். ஏரி காத்த அய்யனார் கோவிலில் ஒலித்த கொட்டுச் சத்தம் கேட்டு எழுந்த பறவைகளெல்லாம் நீளப் புடவையைப் போல உயரப் பறந்தன. கொட்டுச் சத்தம் வரும் கோவிலின் திசையை நோக்குவதற்காக தன்னிச்சையாக தலையை வேகமாகத் திருப்பியபோது விழிப்பு வந்துவிட்டது. சுவர் கடிகாரம் பதினொரு மணியைக் காட்டியது. இப்போது கொட்டுச் சத்தம் வெளியே கேட்டது. ஆச்சர்யத்துடன் எழுந்து வெளியே வந்தேன். என் முகத்தைக் கண்டவுடனேயே, ‘எதிர் வீட்டு ராமு சார் இறந்துட்டார்’ என்று சுந்தரி கூறினாள். அந்தச் செய்தியை உள்வாங்கவே சில நிமிடங்கள் ஆனது. 

 “ராத்திரி ஒரு மணியப் போல நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாராம். ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டதுக்கு காலையில போகலாம்னு சொல்லிட்டாராம். நாலு மணியப்போல அவரு பையன் பாத்திருக்காப்ல. போயிடுச்சாம்…” அவளாகவே தொடர்ந்து சொன்னாள். 

  அப்படியே நம்பமுடியாமல் அசந்துபோய் நாற்காலியில் அமர்ந்துவிட்டேன். சுந்தரி காபி கொண்டுவந்து தந்தாள். நல்ல மணமுடன் இருந்த காபியை குடித்தபோது களைப்பு லேசாக அகன்றது. மனதில் தோன்றிய அதிர்ச்சியும் சற்று இளகியது. 

   ராமு சாரை முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை எனக் கூறுவது பெரிய வார்த்தை. உண்மையில் அவர் மீது முதலில் தோன்றியது ஒரு அருவெருப்பு என்றும் சொல்லலாம். முன்பு அப்பா வாங்கிப் போட்டிருந்த இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டத் தொடங்கினோம். மொத்தக் காண்ட்ராக்டாக விட்டதால் முதல் நாள் பூசைக்கு வந்த பிறகு எப்போதாவது ஒருமுறைதான் நான் வருவேன். இதற்கு பொறியாளர் மீதான நம்பிக்கையும் ஒரு காரணம். எப்போதாவது வரும்போதும் அவசரமாக வந்து சென்றதால் எதிர் வீட்டைக் கவனிப்பதற்கு அவகாசம் இருந்ததில்லை. 

  தளம் போடுவதற்கான வேலை நடந்தபோதுதான் பொறியாளர் இவரை சுட்டிக் காட்டினார். “எப்பவுமே அவங்க காம்பவுன்டுக்குள்ள நின்னு இங்கேயே பாத்திட்டிருக்கார் சார். ஒன்னும் சொல்ல முடியல. ஆனா, ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு… அதுவும் நாள் முழுக்க நிக்கிறாரு” 

  அப்போதுதான் அவரைப் பார்த்தேன். ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தலைமுடியில் பாதி வெள்ளையாக இருந்தது. கருத்த உருவம். சற்று முரட்டுத்தனமாக காட்டும் விதமான பெரிய மீசை. பனியனும் லுங்கியும் அணிந்திருந்தார். லுங்கி பாதம்வரை இறங்கியிருந்தது. கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். 

 “கருப்புக் கண்ணாடி போட்டிருக்கறதால அப்படித் தோனுது…” என்றேன். 

 “இல்லை சார். இங்கேயேதான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு. அன்னைக்கு ஒரு சித்தாளு தண்ணிக்கிப் போட்டிருந்த பைப்புல கால் சிக்கி தடுமாறிட்டாங்க. ஒடனே அங்கேயிருந்து குரல் வருது. அந்தப் பைப்பு நாலு நாளா ஏன் அங்கேயே கெடக்குதே தள்ளிப் போடக்கூடாதான்னு…”

  அப்போதுதான் அருவெருப்பு தோன்றியது. இது என்ன மாதிரியான குணம். அடுத்த வீட்டில் நடப்பதை உற்றுக் கவனிப்பது. சிறிதளவு மனிதப் பண்பு உடையவனும் இதைச் செய்யமாட்டான். மற்றவர்கள் கவனிக்காதபோது என்ன நடக்கிறது என்பதை ஓர் ஆர்வத்தில் பார்ப்பது வேறு. அப்படியில்லாமல் முழுநாள் வேலையாக அதையே செய்வது அடாத செயல்தான் எனத் தோன்றியது. அவரிடம் ஏன் இங்கேயே பாக்கறீங்க என சத்தம் போடவோ முறைக்கவோ என் இயல்பு இடங்கொடுக்கவில்லை. 

  “புதுசா இப்பதான் இந்த ஏரியாவுக்கு குடிவரப் போறோம். எதிர் வீடு வேற. எந்திரிச்சா அவங்க மொகத்துலதான் முழிக்கனும். கண்டுக்காம வேலையப் பாருங்க…” என்று பொறியாளரிடம் கூறிவிட்டுக் கிளம்பினேன். 

  அடுத்தடுத்த முறை வந்தபோது பொறியாளர் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாவிட்டாலும் நான் எதிர் வீட்டை தயங்கியபடியே பார்ப்பேன். அவர் நின்று கொண்டிருப்பார். முப்பது அடி அகல இடத்தில் நிற்கும் இடம் மாறியிருக்குமே தவிர பார்க்கும் கோணத்தில் மாற்றமிருக்காது. நாம் பார்ப்பதை எதிரிலிருப்பவர் பார்க்கிறாரே என்ற உறுத்தல்கூட இருக்காது. 

  பக்கத்து தெருவில் வசிக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணன் சுதாகரிடம் இதைச் சொன்னேன். அவர் சிரித்தபடி, “யாரு ராமு சாரா. இந்த வீடு கட்றப்ப வேற வீடுகள்லாம் குறுக்குல இல்ல. அவரு வீட்லேர்ந்து நீ சொல்ற மாதிரித்தான் பாத்துக்கிட்டு இருப்பாரு…” என்று சொன்னதை கண்கள் விரியப் பார்த்தேன். 

“எனக்கும் மொதல்ல கோபம் வந்துச்சு. அப்புறம் அவர்கிட்டபோய் பேசினப்பதான் அவரப் பத்தி புரிஞ்சது” 

 நான் அப்படி இரண்டு வீடுகள் மட்டும் இருக்கும் திறந்தவெளியை கற்பனை செய்தபடி குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 

  “ராமு சார் ஆவடி டேங்க் பேக்டரியில டிரைவரா வேலை பாத்தவரு. அங்கேயுள்ள அதிகாரிகளோட எல்லா எடங்களுக்கும் போனவரு. ரிட்டையர்மென்ட்டப்ப வந்த பணத்த வச்சு இந்த வீட்டக் கட்டியிருக்காரு. அவரு பையன் ரமேஷ் எஸ்வி ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கான். அவனுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணம் ஆச்சு. ..” 

   “அவர மட்டுந்தான் பாத்திருக்கேன். வீட்டு முன்னாடி ஒருத்தங்க நிக்கிறப்ப எப்படி உள்ளே உத்துப் பாக்கமுடியும்..” 

 “இது ஒன்னோட பழக்கம். அது அவரோட இயல்பு. டிரைவராவே பல வருசம் வேலை பாத்திருக்காரு. அவருக்கென்னவோ எல்லாத்தையும் வேடிக்கை பாக்குறதுல ஒரு ஆர்வம். அவரால வீட்டுக்குள்ள ஒக்காந்து செவத்தப் பாத்துக்கிட்டு இருக்க முடியல. அதான் வெளியில வந்து நிக்கிறாரு. இதுவும் வேலையினால வந்த பழக்கந்தான். ஒக்காந்தே வேலை பாக்குற ஒன்னால அஞ்சு நிமிசத்துக்கு மேல நிக்க முடியாதுல்ல. அது மாதிரித்தான்” 

   அண்ணன் இப்படிக் கூறிய பிறகு மேற்கொண்டு விவாதிக்காமல் கிளம்பினேன். ராமு சார் மேலிருந்த அருவெருப்பு சற்று தணிந்திருந்தது. ஆயினும் அவரிடம் பேசுவதற்கான மனநிலை தோன்றவில்லை. ஆனால், அடுத்தடுத்த முறை வந்தபோது என்னையறியாமலேயே அவரைக் கவனிக்க ஆரம்பித்தேன். 

  வீட்டிற்குள் அமர்ந்திருந்த பெண்ணிற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்ணின் முகம் தெரியாதபோதும் அவர் மனைவியென்றே எனக்குத் தோன்றியது. வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டிய வலது மூலையில் கிணறு இருந்தது. கிணற்றை ஒட்டி இரண்டு வாழைமரங்கள் தழைத்திருந்தன. ஒன்றில் மட்டும் ஒரு பூ தொங்கியது. இடது பக்கம் ஒரு தென்னை மரம் நின்றது. அதன் உச்சி ஒட்ட முடி வெட்டப்பட்ட பள்ளி மாணவனின் தலையைப்போல ஓலைகள் களையப்பட்டு நான்கு ஓலைகளுடன் இருந்தது. பல குலைகளில் செம்மஞ்சள் நிறத்தில் இளங்குரும்பைகளும் பச்சை இளநியுமாக காய்த்திருந்தது. சுற்றுச் சுவருக்குமேல் எட்டிப் பார்ப்பதுபோல ஒரு செம்பருத்திச் செடியும் ஒரு பிச்சிப்பூ செடியும் தலை தூக்கி நின்றன. அவற்றில் பூக்கள் மலர்ந்திருந்தன. அவற்றைக் காணும்போது ஒரு நேர்த்தி தெரிந்தது. செவலை கடுவன் நாயொன்று அவ்வப்போது வெளியே வந்து சுற்றிவிட்டு அவரருகில் சென்று நின்றது. அவர் மனைவி வெளியே வரவேயில்லை. மரம் செடி நாய் போலவே ராமு சாரும் வீட்டிற்கு வெளியேவே நின்றது இப்போது எனக்குள் ஒரு வியப்பாக மாறியது. 

  என் வீட்டின் பணிகள் மிக வேகமாக முடிந்து கொண்டிருந்தன. உத்தேசித்ததற்கும் முன்பாகவே நிறைவடைந்துவிடுமெனத் தோன்றியது. மறுநாள் பொறியாளரும் அதையே கூறினாலும் காரணமாக ராமு சாரைக் குறிப்பிட்டார். இந்த வீட்டு பணி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இன்னொரு வீட்டில் பணிகள் மந்தமாக நடப்பதாகவும் இங்கே மட்டும் விரைவாக நடப்பதாகவும் கூறினார். “ஒருத்தர் எந்நேரமும் கண்காணிச்சுக்கிட்டு இருக்குறப்ப வேலை பாக்குறவங்க சும்மா நிக்கவோ ஒக்காரவோ முடியாதில்ல…” என விளக்கமளித்தபோது அவரது கண்கள் விரிந்திருக்க சொற்களில் ஒரு குழைவு தெரிந்தது. 

  அதன் பிறகு பொறியாளருக்கோ எனக்கோ அவரது பார்வையைப் பற்றி எந்தப்பு காரும் இல்லை. ஆனால், இங்கு குடிவந்த பிறகு என் மனைவிக்கு நாள் முழுக்கவே ஒரு உறுத்தல் இருப்பதாகக் கூறினாள். நான் அவரைப் பற்றி விவரித்தபோதும் அவளுக்கு சமாதானம் ஆகவில்லை. அதற்கும் ஒரு சமயம் வந்தது. 

  நாங்கள் குடிவந்து மூன்று மாதங்களானபோது எங்களின் பக்கத்து வீட்டில் சைக்கிள் திருடு போய்விட்டது. அது, ஞாயிறு பின் மதியம். ஊரே சற்று கிரக்கத்தில் ஆழும் நேரம். சைக்கிள், அவர்களின் பத்தாவது படிக்கும் பெண் பள்ளிக்கு ஓட்டிச்செல்வது. அவர்கள் இங்கு வந்து ஐந்து வருடமாகிவிட்டதாம். ‘இதுவரை சிறுபொருள்கூட களவு போனதில்லையே இப்படி சைக்கிள் போய்விட்டதே…’ என அங்கலாய்த்தார் பக்கத்து வீட்டம்மா. 

 தகவல் கேள்விப்பட்டதுமே எதிர் வீட்டைப் பார்த்தேன். நினைத்தது போலவே ராமு சார் அங்கு இல்லை. என் மனைவிதான் அவர் மருமகளிடம் விசாரித்து வந்தாள். அவரின் நண்பரின் மகன் திருமணத்திற்காக விழுப்புரம் சென்றிருக்கிறாராம். மறுநாள் காலை காப்பி குடிக்கும்போது ராமு சாரிடம் பக்கத்து வீட்டுக்காரம்மா சென்று அங்கலாய்ப்புடன் சொல்வதைக் கண்டேன். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிவதற்காக வீட்டிற்கு வெளியே சென்றேன். விசயத்தைக் கேட்டதுமே ஒருகணம் மேல்நோக்கி பார்த்துவிட்டு, ‘மூணு சக்கர சைக்கிள்ல பழைய பேப்பர் கேட்டு வருவானே அவனோட வேலையாத்தான் இருக்கனும்’ என்று உறுதி தொனிக்கும் குரலில் கூறினார். ‘ஆவடி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்து தெருவுலதான் குடோன் இருக்குது. இவனுங்க சில்லறையா வாங்குற பொருள்கள அங்கதான் கொடுப்பானுக. அங்க போனா அநேகமா இருக்கும்..’ என்று முடித்தார். 

  அந்த அம்மா ஏற்றுக் கொள்வதுபோலவும் நன்றி தெரிவிப்பது போலவும் பொதுவான தலையாட்டலுடன் அவர் வீட்டிற்குச் சென்றார். சிறிது நேரத்திலேயே எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். 

“என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணினேன். பக்கத்துல இருக்குற யாரையாவது கூட்டிக்கிட்டு போலீஸ் ஸ்டேசனுக்குப் போகச் சொன்னாரு..” 

 முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அவர் சொல்லி முடிப்பதற்காக காத்திருந்தேன். 

 “ஒங்க வீட்டம்மாவ என்கூட அனுப்ப முடியுமா? அந்த வீடுகள்ல யாரும் இப்ப வரமுடியாத நெலமை…” என்ற போது அவரின் தடித்த இதழ்கள் துடித்தன. 

 நான் உள்பக்கம் திரும்பிப் பார்த்தேன். பேச்சுக் குரல் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்திருந்த சுந்தரியின் முகத்தில் ஆமோதிப்பு தெரிந்தது.

  ஒரு மணி நேரத்தில் இருவரும் ஆட்டோவிலிருந்து சைக்கிளுடன் இறங்கினார்கள். காவல் நிலையத்திற்குச் சென்று துணை ஆய்வாளரிடம் விசயத்தைக் கூறியதும் அவர் ஏட்டு ஒருவரை இவர்களுடன் அந்த குடோனுக்கு அனுப்பியிருக்கிறார். இவர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்று விசாரித்துவிட்டு வந்தவர் இவர்களை உள்ளே அழைத்திருக்கிறார். குடோனுக்கு பின்பக்கம் நைந்த கோணியால் மூடப்பட்டிருந்த சைக்கிள்களைக் காட்டினார்களாம். அவற்றுள் ஒன்றாக இவர்களது சைக்கிளும் இருந்ததாம். அங்கிருந்த ஒரு பையனிடம் சொல்லி சைக்கிளை எடுத்து வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டு, ‘கம்ளைண்டுலாம் கொடுத்துட்டு அலைய வேண்டாம். அவனை நாங்க வேறுவிதமா கவனிச்சுக்கிறோம். நீங்க போங்க’ன்னு கூறி அனுப்பிவிட்டாராம். 

   அன்றிலிருந்து சுந்தரிக்கு ராமு சார் மேல் மரியாதை ஏற்பட்டது. வார்த்தைகளில் எத்தனை விவரித்தும் புரியாத ஒன்று நேரில் பார்த்ததும் சட்டெனப் புரிந்துவிட்டது. இவள் மட்டுமல்ல அந்தத் தெருவிலிருந்த அத்தனை பெண்களுமே அவர்மேல் கொண்டிருந்த ஒருவித ஒவ்வாமை நீங்கி மதிப்புடன் நடத்தினார்கள். பெண்கள் இப்படி ஒரு உணர்வு எல்லையிலிருந்து ஒரு கணத்தில் இன்னொரு உணர்வு எல்லைக்கு எளிதாக மாறிவிடுகிறார்கள். ஆண்களுக்குதான் அது இயல்வதில்லை. நான் அவரிடம் இன்னும் முழுதாக அணுக்கமாகவில்லை. ஏதோவொன்று தடுத்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு எந்த வீட்டில் என்ன விசேசம் என்றாலும் அவரை அழைக்காமல் நிகழ்வதில்லை. பெண்களின் அழைப்பை ஏற்றுக் கொள்வாரேயன்றி அவர் வரமாட்டார். அவர் வீட்டு பெண்களையே அனுப்பிவைப்பார்.

   இளையவர்களுக்கும் மிக நெருக்கமானவராகிவிட்டார். வாகனங்களின் வரத்து குறைவு என்பதால் பிள்ளைகள் தெருவிலேயே விளையாடினார்கள். இதற்கு முன்பு விளையாட்டின்போது அவர்களுக்கிடையே உரசல்கள் ஏற்படும்போது தீர்க்கப்படாமல் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், இப்போது மூன்றாம் நடுவராக அவரைப் பாவித்து, அவரிடம் கேட்டு, அவர் கூறும் தீர்ப்பை ஏற்றார்கள். நாள் முழுக்க வெவ்வேறு விளையாட்டுக்கு மாறி குதூகலம் நீண்டு கொண்டேயிருந்தது.

   பிள்ளைகள் வெளியே செல்லும்போதும் அவரிடம் சொல்லிவிட்டு செல்வார்கள். ஒரு பிள்ளையைக் காணவில்லையென்றால் மற்ற பிள்ளைகள் அவர்களின் வீட்டிற்குள் நுழையாமல் ராமு சாரிடம் கேட்டறிந்து கொண்டார்கள். 

தண்ணீர் வண்டிக்காரன் எப்போது வந்தான் என்பதையும், காய்கறிக்காரன் எந்தத் திசையில் சென்றான் என்பதையும் பெண்கள் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். குப்பை வண்டிக்காரன் ஏன் வரவில்லை, தடைபட்ட மின்சாரம் எப்போது வரும், சலவைக்காரன் ஏன் ஊருக்குப் போனான் போன்று அவரிடம் கேட்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் அவருக்கு பதில் தெரிந்திருந்தது. அதுவும், அவர் ஒப்புக்காக எதையாவது கூறுவதில்லை. அத்தனையும் துல்லியமானவையாக இருக்கும். ஒருநாள் தாமதமாக இரவு பத்து மணிக்கு நான் வீடு திரும்பும்போதும் சுற்றுச்சுவரை ஒட்டி நின்று கொண்டிருந்த அவரிடம், நான் காலையில் எத்தனை மணிக்கு கிளம்பினேன் என கேட்டுத் தெரிந்து கொள்ளத் தோன்றிய ஆவலை மிகுந்த பிரயத்தனத்துடன் அடக்கிக் கொண்டேன். 

  இப்போது ஏதென்றறியாத பயம் உள்ளத்தை நடுங்கச் செய்தது. புயலுக்கு நடுவே பாதுகாப்பற்று நிற்கும் மரக்கலத்தைப்போல என்னை உணர்ந்தேன். அவர் மேல் பெரிதாக அணுக்கம் கொண்டிருக்கவில்லை என்றே எண்ணியிருந்தேன். அதுவொரு பாவனை என்பது இப்போது புரிந்தது. புதுவீடு கட்டி இங்கு வருவதற்குமுன் அயனாவரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். ஒரே வரிசையில் அருகருகே கட்டப்பட்ட நான்கு வீடுகளில் மூன்றை வாடகைக்கு விட்டுவிட்டு ஒன்றில் வீட்டு உரிமையாளர் தன் குடும்பத்தினருடன் வசித்தார். வீட்டிற்குள்ளிருந்து சற்று உரக்க அழைத்தாலே அடுத்த வீட்டுக்காரருக்கு கேட்கும். அப்படி இருந்தபோதும் வீட்டை விட்டுக் கிளம்பி திரும்ப வரும்வரை மனைவி மற்றும் பிள்ளைகளை எண்ணி மனதில் ஏதென்றறியாத பதட்டம் திறந்தவெளி மைதானத்தில் தூசுகளாக சுழன்று திரியும் காற்றைப்போல நகர்ந்து கொண்டிருக்கும். 

   கடந்த ஓராண்டாக, வீட்டிற்குள்ளேயே துறுதுறுவெனத் திரியும் ஐந்து வயது மகளையும் வீட்டிற்கு வெளியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் மூன்று வயது மகனையும் சுந்தரியிடம் விட்டுவிட்டு கிஞ்சித்தும் கவலையின்றி வெளியூர்களுக்குச் சென்று வந்துள்ளேன். முன்பு ஏற்பட்ட பதட்டம் எப்போது மறைந்ததென்றே அறியவில்லை. இனிமேல் அப்படிச் செல்வது சாத்தியமேயில்லை என்ற யதார்த்தம் முகத்திலறைந்தது. 

  தெருவே அமைதியாக இருந்தது. ராமு சாரின் சொந்தக்காரர்கள் மட்டும் லேசாக அழுது இறுதிக் கடன்களை செய்துவிட்டு கலைந்தார்கள். தெருவாசிகள் ஒருவருக்கொருவர் எதையும் பேசிக்கொள்ளவில்லை. துக்க வீட்டில் தேவையான உதவிகளை மட்டும் செய்துவிட்டு உறவினர்களுக்கு வழிவிட்டு நின்றதோடு சரி. அந்த அமைதி எந்த நொடியிலும் வெடித்துவிடக் கூடிய நீர் நிரம்பிய குளம்போல அசாதாரணமானதாக இருந்தது. ஒரு சிறு கீறல் போன்ற கேவல் போதும் அணை உடைபட்டு பேரோலத்தை எழுப்பிவிட.

  நிலா வெளிச்சம் முற்றத்தில் விழுந்து வீட்டிற்குள்ளும் மென்னொளியாய் படர்ந்திருந்தது. கால் நீட்டி தூணில் சாய்ந்திருந்த அம்மாவின் கன்னங்கள் வழியாக வழிந்த கண்ணீர் அவர் மடியில் படுத்திருந்த என் கன்னத்தில் சொட்டியது. ஒரு கணம் திடுக்கிட்டு விழித்து மறுகணம் உணர்ந்து அப்படியே படுத்திருந்தேன். ஏனென்று தெரியாத அம்மாவின் துயரம் எனக்குள்ளும் பெருந்துயரத்தை உண்டாக்கியது. என் கண்ணிலிருந்தும் கண்ணீர் சுரக்கத் தொடங்கியது. 

  ‘தம்பி தைரியத்தைக் கை விட்டுடாதடா…’ பெரியப்பாவின் குரல் திண்ணையிலிருந்து சன்னமாக ஒலித்தது. அழுகையை அடக்கும் அப்பாவின் செருமல் கேட்டது. 

“ஊர விட்டுப் போறது தோத்துப் போனதா அர்த்தமில்ல. வாழ்றதுக்காகத்தானே போற. அங்க போயித்தான் ஜெயிக்கனும்னு இருக்குன்னு நெனை…” 

   “உங்கள, இந்த ஊர, சாமிகள விட்டுட்டுப் போற மாதிரி ஆயிடுச்சே அதத்தான் தாங்கவே முடியல…” அப்பாவின் குரல் துயரத்தில் நனைந்திருந்து. 

 “நீ தூரமா போறதால எல்லாத்தையும் விட்டுட்டு எழந்துட்டு போறதுன்னு அர்த்தமில்லை. நீ எவ்ளோ தூரம் போனாலும் நானும் சாமியும் ஒங்கூடவேதான் இருப்போம். மனச விட்டுடாத. நாங்க எப்பவுமே நீ நல்லா இருக்கனுங்குற நெனப்போடயே இருப்போம். அதோட வீரியம் காலைச் சூரியனோட வெளிச்சம் மாதிரி ஒனக்கும் ஒங்குடும்பத்துக்கும் ஒரு கதகதப்பா கூடவே இருந்துகிட்டே இருக்கும். கலங்காம போயிட்டு வாங்க…” 

 அப்பாவின் குரல் கேட்காததால் தலையைத் திருப்பி வாசலைப் பார்த்தேன். அப்பாவை தன் தோளில் சாய்த்து அணைத்தபடி வாசல்படியைத் தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்த அம்மா என்னை நிமிர்த்து உட்கார வைத்துவிட்டு எழுந்து சாமியறைக்குச் சென்று திருநீற்று மடலை எடுத்து வந்தார். 

 திருநீற்று மடலை பெரியப்பா கையில் வாங்கிக் கொண்டதும் அம்மாவும் அப்பாவும் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தார்கள். பெரியப்பா உடலும் குலுங்கியது. ‘எங்க போனாலும் தைரியத்தையும் நம்ம அய்யனார் நெனைப்பையும் விட்றாதீங்க..’ என்று கூறியபடி அப்பாவிற்கு பட்டையாக அடித்துவிட்டு அம்மாவிற்கு மோதிர விரலால் பூசிவிட்டார். அம்மா என்னைத் திரும்பிப் பார்த்ததும் வேகமாகச் சென்று நானும் பெரியப்பாவின் காலைத் தொட்டு வணங்கினேன். கால் மிகத் தண்மையுடன் இருந்தது. என் தோளில் கைவைத்து தூக்கி அணைத்துக் கொண்டார். 

‘எதுக்கும் கவலைப்படாத நானும் நம்ம அய்யனாரும் ஒங்ககூடவேதான் இருப்போம்’ என்றபடி மூன்று விரலால் நெற்றியில் பட்டையடித்துவிட்டு வாயிலும் கொஞ்சம் போட்டார். என் கன்னத்தைத் துடைத்துவிட்டு அழுத்தமாய் முத்தமிட்டார். அவரின் உதடு துடித்துக் கொண்டிருந்தது. 

  கரிப்புச் சுவையை நாவில் உணர்ந்து கண் விழித்தேன். ஹாலில் சோபாவில் படுத்திருந்தேன். யோசித்தபடி அப்படியே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது. ரமாவும் எழுப்பவில்லை. சில சமயங்களில் எதுவும் செய்யாமலிருப்பதே அன்பின் சிறந்த வெளிப்பாடாகவும் அமையக்கூடும். 

   இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நிகழ்வு அத்தனை துல்லியத்துடன் நினைவில் இருந்திருப்பதை உணர்ந்தேன். முதல் முறையாக இப்போதுதான் கனவு போன்ற அந்நினைவு மேலெழுந்து வந்துள்ளது. பெரியப்பாவின் காலின் தண்மையை இப்போதும் உணர்ந்தேன். 

  வெளி வாசலருகே சென்று நின்றேன். சூரியனின் இளமஞ்சள் நிற மென்கதிர்கள் எழுந்து வானத்தில் ஒளியாய் பரவியது. பறவைகளை மிளிர வைத்தது. மரங்களில் படர்ந்து இலைகளையும் மலர்களையும் ஒளிர வைத்தது. புல்வெளியை தனலெனக் காட்டியது. என் உடலில் ஊர்ந்து மேனியை சிலிர்க்க வைத்தது. பார்க்க பார்க்க மனம் விரிவடைந்து கொண்டேயிருந்தது. வண்ணத்துப் பூச்சியென மாறி காற்றின் திசையில் பறந்துவிடுவேன் எனத் தோன்றியது. தாங்க முடியாத ஆனந்தத்தில் உள்ளுக்குள் பெரும் விம்மல் எழுந்தது. மனம் வெண்மேகம் போல எடையற்றிருப்பதை உணர்ந்தபோது துளிர்த்த இருதுளி கண்ணீர் கன்னத்தைத் தொட்டுவிட்டு தரையில் சொட்டியது.

sivaangammal2983@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button