
“6 மணிக்கெல்லாம் எல்லோரும் தயாராகிடுங்க.. அப்புறம் அது இல்லை இது இல்லைனு சொல்லிக்கிட்டு ‘லேட்’ பண்ணாதீங்க. நேரத்துக்கு அங்க போய் சேர்ந்தா தான் ‘தோக்கன்’ எண் கிடைக்கும் தெரியும்தானே?’ என அப்பா அம்மாவிடம் காராசாரமாக சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவும், ‘சரிங்க. எல்லாம் சரியா நடக்கும். நீங்க போய் அந்த சாமானையெல்லாம் எடுத்து வைங்க’ என அப்பாவைச் சமாதானப்படுத்தினார்.
வீட்டில் இருக்கறவங்க எல்லோரும் ஏன் பரபரப்பா இருக்காங்கனு எனக்குப் புரியவே இல்லை. இன்னும் சொல்ல போனால் 3 மாதம் கழித்து விடுமுறைக்கு வந்த எனக்குமே என் வீடு அந்நியமாக தெரியுது. கடந்த 1 வருஷமா வீட்டின் நிதி நிலவரம் மோசமான நிலையில் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், இப்போ இருக்கும் இந்த மாற்றம் வேறு. நிதி நிலவரம் மட்டும் அதற்கு காரணம் இல்லைனு என் மனசுக்கு பட்டது. வேறு ஒரு வித்தியாசத்தை வீட்டிலும் வீட்டில் இருப்பவர்களிடமும் காண முடிந்தது.
அப்பாவோட தொழில் எதிர்பார்த்த மாதிரி சரியா போகலை. அம்மாவோட காதுல கையில் கிடந்ததெல்லாம் அடகு வச்சுதான் அப்பா இந்த தொழில ஆரம்பிச்சாரு. சாலை மின்கம்பிகளைச் சரி செய்யுர ‘சப் காண்டெரக்’. அவரோட நண்பரோடு சேர்ந்து பணம் போட்டு ஒரு வழியா தொழில் நடந்துச்சி. கொஞ்ச கொஞ்சமா போட்ட மூதலீடை எடுத்துரலாம்னு அப்பா ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு. அதுக்காக கடுமையா உழைக்கவும் செஞ்சாரு. நள்ளிரவு விடியகாலைனு பார்க்காமா உழைச்சாரு. 2, 3 அந்நிய தொழிலாளிங்களை வேலைக்கு அமர்த்தி சின்ன சின்ன ‘போரேஜேக்’ வேலையா செய்தாரு. கையில காசு தங்குனுச்சி. ஒரு சில கடனைக் கூட திரும்ப கட்ட முடிஞ்சது. நாங்களும் நல்ல காலம் பொறந்துடுச்சினு ஓர் ஒளிக்கீற்றை இரசிக்க ஆரம்பிச்சோம்.
ஆனால், அது ரொம்ப நாளைக்கு இல்லை. கொஞ்ச கொஞ்சமாய் அந்த ஒளி மங்கலாகத் தொடங்கிச்சு. அப்பாவோட அந்த நண்பர் அவரை நம்ப வச்சி ஏம்மாத்திட்டாரு. ‘காண்டெரக்’ பத்திரத்தில் அப்பாக்கு எந்த உரிமையும் இல்லைனும், இலாபத்தில் பங்கும் கிடையாதுனும் சொல்லிட்டாரு. கிடைச்ச இம்மியளவு வெளிச்சம் கூட இல்லாம எங்க வாழ்க்கை மீண்டும் இருண்டு போனது. ஊரைச் சுற்றி கடன் ஒரு பக்கம், அடுத்த வேளை சாப்பாடுக்கு என்ன செய்யறதுனு தெரியாம இன்னொரு பக்கம்னு எங்க குடும்பமே நிலைகுலைந்து போயிருந்தது. மேற்கொண்டு படிக்க முடியாத நிலையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் அக்கா, மூன்றாம் படிவம் படிக்கும் தம்பி, எஸ்டிபிம் முடிச்சிட்டு பல்கலைக்கழகத்தில் முதல் தவணை அடியெடுத்து வைத்திருக்கும் நான் என குடும்ப சுமையை எப்படி சரிக்கட்ட போறோம்னு எல்லோரும் ஒரு வகையில் ஸ்தம்பித்து விட்டிருந்தோம். அக்காவோட சம்பளத்தைக் கொண்டு கடனைக் கட்டுவதா இல்லை நாலு பேரோட வயிற்றுப் பசியைத் தீர்க்கறதானு ஒரு அறப்போராட்டமே எங்க வீட்டில் நடந்து கொண்டிருந்தது. ‘பிதிபிதிஎன்’ கல்வி கடனுதவி மட்டும் இல்லையென்றால் நானும் அந்த போராட்டத்தில் சிக்கியிருப்பேன்.
அந்த சமயத்தில்தான் அப்பாவுக்கு சண்முகம் என்பவரோடு பழக்கம் ஆனது. அப்பாவின் கஷ்டத்தைக் கேட்டு அவர் சொன்ன ஒட்டுமொத்த தீர்வுதான் இந்த தீடீர் ‘அய்யா சாமி’ வழிபாடு எல்லாம். வந்தவுடனே அய்யா படத்தை வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் பார்த்த போது எனக்கு பெரிதாய் ஏதும் தோணவில்லை. வந்த இரண்டு நாலுல நான் அதிகமாக கேட்ட வார்த்தை ‘அய்யா’ மட்டுமே. வீட்டில் இருப்போரின் வாயிலிருந்து அய்யா பெயர் சொல்லாமல் எந்த விசயமும் பேசப்படவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ‘அய்யா’ சொன்னது நடக்கனும்னா இந்த பூஜையெல்லாம் சரியா செய்யனும். இப்படிதான் செய்யனும்னு நிறைய விதிமுறைகள் வீட்டில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடவுளுக்கும் எனக்கும் பகை ஒன்றுமில்லை. இறை வழிபாடு செய்யக் கூடாதுனு நான் கொடி பிடிக்குற கட்சியும் இல்லை. நம்பிக்கைகள் போதும் எனும் அளவுக்கு எனக்கும் இருக்கவே செய்தது. ஆனா, இது வேற.
எல்லோரிடமும் ஒரு அசைக்க முடியாத புதிய நம்பிக்கையை உணர முடிந்தது. அய்யா சாமியைக் கும்பிட ஆரம்பிச்சப் பிறகுதான் பிரச்சனைகள் ஓரளவுக்கு தீர்ந்ததாக அம்மா சொன்னாங்க. அந்த அய்யா சாமியைப் பார்த்து வந்ததிலிருந்து அப்பாக்கு திரும்பவும் இன்னொரு தொழில் அமையவும் போகுதுனு அழுதுக்கிட்டே அம்மா சொன்ன போது என்னால எதும் கேட்கவோ சொல்லவோ முடியலை. அமைதியா இருந்துட்டேன்.
ஆனா, இந்த அய்யா சாமி பார்க்கும் படலம் மட்டும் எனக்கு சரியாக படவில்லை. அதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கு. அந்த சண்முகம் என்பவர் அன்று நண்பகல் போல எங்க வீட்டுக்கு வந்தாரு. அவர் பேசும் தோரணையிலே அடிக்கடி அவர் இங்க வந்து போறாருனு தெரிந்தது. அன்றைக்கு அவர் கூடவே இன்னொருத்தரும் வந்திருந்தாரு. ஆள் நல்ல வாட்ட சாட்டமா கனத்த கருத்த உடல் வாகுடன் இருந்தார். என் பெற்றோர்களின் உடல் மொழி வழி அந்த ஆள் அவர்களுக்கு பரிச்சையமான ஒருவராகத்தான் தெரிந்தார். ஆனால், வயதில் மூத்தவரான சண்முகத்திற்கு கொடுத்த மரியாதையைவிட கூட வந்த கோபி என்பவருக்கு அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டத்தை நான் உணர்ந்தேன். அம்மாவும் அப்பாவும் தயக்கத்துடனும் பதட்டத்துடனும் கோபியுடன் பேசினர். அவருக்கு மட்டும் வேறு ஒரு டம்ளரில் அம்மா பாலை வழங்கினார். எனக்கு அது வியப்பாக இருந்தது. அவ்வளோ பெரிய ஆளா இந்த கோபி என நான் அறைக் கதவோரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் கோபியின் பார்வை என் மேல் பதிந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு மாதிரி அசொகரியத்தை உணர்ந்தேன். சட்டென அறைக்குள் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் அவர்கள் கிளம்ப முற்பட்ட போது அந்த கோபி சொன்னது என் காதில் விழுந்தது.
“மறக்காம வீட்டில் இருக்கிற எல்லோரையும் பூஜைக்கு கூட்டிட்டு வாங்க. எல்லோரும் வரணும். அய்யாவோட உத்தரவும் அதுதான்” என்று சொன்னதுமே என் பெற்றோர்கள் அளவில்லா சந்தோஷத்தில் திளைத்தனர். ஏதோ அந்த கடவுளே நேரில் வந்து அழைத்தது போல.
அந்த பூஜைக்குத்தான் அப்பா காலையிலிருந்தே ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். நிறைய பூஜைப் பொருட்கள், பழங்கள், வெவ்வேறு அளவில் மாலைகள், பூக்கள்னு அப்பா தன் சக்திக்கும் மீறி செலவு செய்து கொண்டிருந்தார். யாரிடமும் இதெல்லாம் வேணாம்; போகமல் இருக்கலாம்னு சொல்ல என்னால் முடியவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையை உடைக்க என்னால் முடியுமானும் தெரிலை. நானும் அவர்களோடு அந்த பூஜைக்கு செல்ல ஆயுத்தமானேன்.
அன்று பூஜை வழக்கம் போல கோவிலில் இல்லையாம். அந்த கோபி என்பவரின் வீட்டிலாம். அவரின் வீட்டு வாசலை வந்தடைந்த பிறகுதான் என் தம்பி கூறினான்.
“வீட்டில் என்ன பூஜை?”
என் கேள்விக்கு யாரும் பதில் கூட சொல்லாமல் அந்த வீட்டின் தோட்டத்திற்கு விரைந்தனர். நானும் கூடவே ஆட்டு மந்தையைப் போல அவர்களுடன் சென்றேன்.
வீட்டு தோட்டத்தில் நான்கடி உயரத்தில் கம்பீரமாக ஓர் அய்யா சிலை இருந்தது. கிட்ட தட்ட ஒரு சின்ன கோவிலைப் போலத்தான் அந்த இடம் இருந்தது. நிறைய பூஜைப் பொருட்களுடன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த சண்முகத்தோடுதான் அப்பாவும் சேர்ந்து பூஜைக்கான வேலைகளைப் பார்த்தார். என் அம்மா அக்கா எல்லோரும் அங்கு உள்ளவர்களுடன் ஏற்கனவே பழகியவர்கள் போல பேசிக் கொண்டே சுருட்டு மாலை கட்டுவது, எலுமிச்சை பழங்களை அடுக்குவதுனு ஏதேதோ செய்தனர். நான் தான் என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதான் இன்றைக்கு பூஜை எங்கள் குடும்பத்திற்காக மட்டும் பிரேத்தியேகமாக செய்யபடுகிறதாகவும், இது மாதிரி யாருக்கும் இப்படியெல்லாம் செய்வது வழக்கம் இல்லைனும் தம்பி சொல்லி அறிந்தேன். அப்பா மேல் கொண்ட பிரியத்தினாலே இதெல்லாம் கோபி பார்த்து பார்த்து செய்வதாக என் தம்பி பெருமையாகச் சொல்லும் போது ஏதோ ஒன்று இடித்தது.
அப்படி இப்படினு 10 மணி வாக்கில் பூஜை தொடங்கியது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு நிசப்தம். சுற்றி ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கெல்லாம் அணைக்கப்பட்டது. அய்யா முன்னுக்கு மட்டும் ஓர் ஒளி விட்டுவைக்கப்பட்டது. சாம்பிராணி வாசமும் சுருட்டு வாசமும் ஒன்றையொன்று முந்திக் கொண்டு நாசியில் கலந்தடைந்த சமயம், அய்யா முன்னிலையில் 7 சூடம் வரிசையாக ஏற்றப்பட்டது.
“ம்ம்ம்ஹும்” என ஓர் அதட்டல் குரல். சலங்கை கட்டிக் கொண்டு, வாயில் சுருட்டுடனும், கையில் வாளுடனும் அந்த சின்ன கோவிலை வலம் வந்து கொண்டிருந்தது அந்த உருவம். மீசையும் தாடியுமாக தலைப்பாகையுடனும் அய்யா போல தோற்றமளித்தது. ஒன்றிரண்டு எலுமிச்சைப் பழங்கள் அறுத்து திசைக்கு ஒன்றாய் வீசி ஏறியப்பட்டது. அங்குள்ளவர்கள் எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். வந்த அனைவரையும் வரிசையில் வரச் சொல்லி சண்முகம் கூறிய போது, என் தம்பிக்கு பின்னால் நானும் நின்று கொண்டேன். எல்லோருக்கும் விபூதி பூசப்பட்டது. அப்போதுதான் அந்த உருவம் கோபியைப் போல் இருப்பதை உணர்ந்தேன். ‘அது கோபியா?’, என்றேன். என் தம்பியும் ‘ஆமாம்’ என உறுதிப்படுத்தினான்.
பிறகு என் அப்பாவையும் அம்மாவையும் மட்டும் தனியே பேச அழைத்தனர். நாங்கள் அந்த வீட்டின் வாசலில் அடுக்கி வைத்திருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம். இரவு உணவு கூட வழங்கப்பட்டது. எனக்கு ஏனோ சாப்பிடத் தோணவே இல்லை. பசியை மீறிய ஓர் உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. என் அக்காவிடம் எப்போ வீட்டுக்கு போகலாம்னு கேட்டேன். கொஞ்ச நேரமாகும்னு சொன்னாள். அடுத்து அவளும் அய்யாவைப் பார்த்து கேட்கப் போவதாகவும் சொன்னாள். எனக்கு ஒன்றுமே புரியலை. ஒரு முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு என் பெற்றோர் என் அக்காவை அழைத்ததாக சண்முகம் வந்து கூப்பிட்டார். உடன் என் தம்பியும் சென்றான். எனக்கு எப்போதான் வீட்டிற்குத் திரும்புவோம் என்றிருந்தது. அங்கு நடக்கும் ஒரு விசயம் கூட எனக்குப் புரியவுமில்லை.. பிடிக்கவுமில்லை.
இன்னும் சில நேரத்திற்கு பிறகு என் குடும்பத்தினர் திரும்ப வந்தனர். என் அப்பா, “அய்யா சாமி உன்னைப் பார்க்கனும் கூப்பிட்டாரு. நீ விடுதியில தங்கி படிக்கிறலே உனக்கு பாதுகாப்புக்கு கயிறு கட்டனுமாம். போய்ட்டு வாமானு” சொன்னார். நான் வேணாம்னு சொல்ல அப்பாவிற்கு கோபம் வந்திடுச்சி. “சீக்கிரம் போய் கட்டிக்கிட்டு வா! அய்யா சாமிக்கு கோபத்தை உண்டாகீடாதே“ என அப்பா கூறியதும் ஏதும் சொல்ல துணிவில்லாமல் பூஜை நடக்கும் இடத்திற்கு சென்றேன்.
நான் வந்து நின்றதும், “என்ன குழந்தாய் எப்படி இருக்க?” என கேட்டுச்சி அந்த அய்யா சாமி. ‘நல்லா இருக்கேன்’ னு சொல்லி முடிப்பதற்குள் விபூதியை என் தலையில் அடித்தார். “வா,, இங்கே வந்து என் முன்னால உட்காருனு” கூறவே நானும் வந்தமர்ந்தேன். ஏதோ தீர்த்தம்னு சொல்லி அந்த அய்யா சாமி குடிக்கச் சொல்ல நானும் நூல் பொம்மை போல அதை வாங்கிக் குடித்தேன். ஒரு மாதிரி கசப்பாக இருந்த அந்த தீர்த்தத்தை எப்படி குடிச்சேனு தெரியலை. நெஞ்சுக் குழியில் எரிச்சலைத் தந்தது.
அந்த சமயம் அய்யா சாமி கண்களை மூடிக் கொண்டு பெரு மூச்சு விட்டது.
“அய்யா இது வரைக்கும் யார் கிட்டயும் இப்படி ஒரு கோரிக்கையை வச்சதில்லை. ஆனா, நீ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்க குழந்தை. அதான் நானே இந்த விஷயத்துல களமிறங்கிட்டேன். தெய்வத்தோட சித்தம் ஏதுவோ அதைச் சொல்வதுதான் என் கடமை”. எனக்கு ஒன்றுமே புரியலை. தலை லேசாகச் சுற்றுவது போல இருந்தது.
“இந்த பாலகனோட உடம்புல ஆறு வருஷமா வந்து போய்க்கிட்டு இருக்கேன். நல்ல குணம். கெட்ட பழக்கம்னு ஒன்னுமே இல்லை. அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். உன்னைக் கல்யாணம் செய்ய விருப்புறான். அவனுக்காக உன் கிட்ட உத்தரவு கேட்கதான் அழைச்சேன். உனக்கும் விருப்பம் தானே” என அந்த அய்யா சாமி கேட்டு முடிக்கும் போது எனக்கு உலகமே தலைகீழாய் ஆன மாதிரி இருந்தது. அந்த அய்யா சாமி என்னையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. எனக்கோ வியர்வை கொட்டியது. என் உடம்பெல்லாம் இயங்க முடியாமல் போனது மாதிரி இறுக்கமாயிற்று. வார்த்தைகள் ஏதும் வெளிவரவில்லை.
“பாலகனுக்காக நான் கொஞ்ச நேரம் இந்த உடம்பை விட்டு வெளியாகப் போறேன். அவன் உன் கூட பேச ரொம்ப ஆசைப்படுறானு”, சொல்லி அந்த அய்யா சாமி கண்ணை மூடி பெரு மூச்சு விட்டுச்சி. அடுத்த சில நொடிகளில் மீசையைத் தடவிக்கிட்டே அந்த கோபி என்னைப் பார்த்து சிரித்தான். “என்னைத் தப்பா நினைச்சிக்காதே. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அதான்..” அவன் கைகள் என் தோளைத் தொட நெருங்கும் போது அனிச்சையாக என் கைகள் கழுத்தில் உள்ள ருத்திராட்சத்தைப் பற்றிக் கொண்டது. நான் மெய் சிலிர்த்த அடுத்த கணம் எனக்கு ஒரு மாதிரி நினைவு தட்டியது. ஆனாலும், அவன் என் தோள்களைப் பிடித்து என்னை நெருங்கி வந்திருந்தான். அவனின் பெருத்த மூச்சுக் காற்று, மதுவின் வீச்சு, சுருட்டு வாடை என மொத்தமும் என்னை மூச்சு முட்ட வைத்தது. அவனின் கனத்த உடலின் வேகம் என்னை நிலைக்குலையச் செய்தது. அவனின் வலது கை தோளிலிருந்து கீழே என்னைத் தொட எத்தனிக்கும் போது பூஜைக்கு எலுமிச்சை அறுக்க அங்கு வைத்திருந்த கத்தியால் அவனின் தொடையைக் குத்திக் கிழித்தேன்!
அந்த அய்யா சாமியோ ‘அய்யோ’ எனக் கத்திக் கதறினான். அத்துணைத் துணிவு எனக்கு எங்கிருந்து வந்ததென தெரியலை. ஆனா, செஞ்சிட்டேன். அவ்வளவுதான். நான் கத்தியை எடுத்த இடத்திலே வைத்து விட்டு ஏதும் நடக்காததைப் போல அமர்ந்திருந்தேன். அவனின் அலறல் கேட்டு சண்முகம்தான் முதலில் ஓடி வந்தார். என்ன நடந்தது எனத் தெரியாமல் அவர் குழம்பி போய் இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் அவனோடு சேர்ந்து அவரும் கூச்சலிட்டார். நான் ஒன்றுமே நடக்காதது போல அந்த அய்யா சாமியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து நடந்தேன். சாமி இரத்த அபிசேகத்தில் உறைந்து என்னையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது..