இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

டிராயர் உள்ளே ஒரு கவர் – ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

சிறுகதை | வாசகசாலை

அட்டெண்டர் பரசு கையில் கவரை ஆட்டிக்கொண்டு வந்த விதமே, சங்கமேஸ்வரனுக்கு வருவது என்ன என்பது புரிந்து விட்டது. அதோ! அந்த கவரின் உள்ளே, அவரது முப்பத்தைந்து வருட கடும் உழைப்புக்கு மங்களம் பாடும் அறிவிப்பு வந்துகொண்டு இருக்கிறது. கவரைப் பிரிக்கவே வேண்டாம். உள்ளே இருக்கும், வரிகளை அவரால் படிக்காமலேயே ஒப்புவிக்க முடியும்.

உயர்திரு சங்கமேஸ்வரன் அவர்களுக்கு,

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையும், கோவிட் -19 தொற்று கிருமி பிரச்சனைகளும் அதனால் நமது நிறுவனத்தின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டதையும் உணர்வீர்கள். அகில உலக ரீதியாக ஆட்குறைப்புகளும், ஊதியக் குறைப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், நமது நிறுவனத்தை மிகவும் சிரமங்களுக்கிடையே நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை, நிறுவனத்தின் மேலாளராக நீங்கள் நன்கு அறிவீர். தாங்கள் ஐம்பத்தி எட்டு வயதை எட்டி விட்ட நிலையில், உங்களால் நமது அலுவலக பணி மற்றும் ஊதியம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்கிற நிலையில், தங்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தாங்களாக விருப்பத்தின் பெயரில் ஓய்வினை நாடினால், அதற்காக நிறுவனம் தங்களுக்கு மூன்று மாத ஊதியத்தை நல்லெண்ணத்தின் அடிப்படையில் அளிக்கும். தாங்கள் கட்டாய விருப்பத்தின் பெயரில் ஓய்வை நாடா விட்டால், தாங்கள் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதமான சங்கட சூழ்நிலையை நிறுவனத்திற்கு ஏற்படுத்தாமல் தங்கள், கட்டாய ஓய்வின் பெயரில் செல்வது நல்லது என்று பரிந்துரைக்கிறோம். நாளை மாலை ஐந்து மணிக்குள்ளாக தாங்கள் கட்டாய ஓய்வு கோரா விட்டால், தாங்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யபடுவீர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியமானதாகவும், அமைதியாகவும் கழிய வாழ்த்துகள்.

இவண்

ரோஹன் ரவிராஜ்

சி ஈ ஓ

ரோஹன் நன்றாக பழி தீர்த்துக் கொண்டான். ரோஹன் ரவிராஜ், கிஷோர் தாக்கரின் பெயரன் ரஞ்சித் தாக்கரின் நண்பன் என்பது சங்கமேஸ்வரனுக்கு தெரியாமல் போனது. ரோஹனிடம் கோவையில் கிளை அலுவலகம் திறக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்க, அவன் ஆபிஸ் பணத்தை கையாடி, மருதமலை அருகே ஒரு பார்ம் ஹவுஸ் வாங்கி இருப்பதாக சங்கமேஸ்வரனுக்கு தகவல் வர, அதை அப்படியே நிறுவன தலைவர் கிஷோர் தாக்கரின் காதில் போட்டு விட்டிருந்தார், சங்கமேஸ்வரன். அவர் அதனை விசாரித்து அறிக்கையைத் தரும்படி, சங்கமேஸ்வரனிடமே பணிக்க, அவர் போட்டோ ஆதாரங்களுடன், தனது அறிக்கையை சமர்ப்பித்து, ரோஹன் பணம் கையாடியதை நிரூபித்து, அவனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால் —

சரியாக, மேல்நாட்டில் தனது படிப்பை முடித்துக் கொண்டு வந்து இறங்கினான், ரஞ்சித் தக்கர். வந்தவுடனேயே பேரனிடம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை கிஷோர் தாக்கர் ஒப்படைத்துவிட, அவனோ, தனது நண்பன் ரோஹன் ரவிராஜ்க்கு சிஈஓ பதவியையே பரிசளித்தான். எந்த மருதமலையில் ரோஹன் பார்ம் அவுஸ் வாங்கியதாகக் கூறப்பட்டதோ, அந்த பார்ம் ஹவுசில், தனது நண்பன் ரஞ்சித் தாக்கர்க்கு பெரிய விருந்து ஒன்றை நடத்தி, தனது தோழியான பிரபல நடிகையை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். அதற்கு பரிசாகத்தான், ரோஹனுக்கு பெரிய பதவி கிடைத்தது. பதவி ஏற்றுக் கொண்டதும், ஆபிஸ் ஊழியர்களுக்கு இனிப்பும் காரமும் வழங்கினான், ரோஹன்.

அட்டெண்டர் பரசு, சங்கமேஸ்வரனின் முன்பாக ஒரு பேப்பரில் இரண்டு சமோசாக்களையும், பிஸ்தா ரோல் ஒன்றையும் வைத்து விட்டுப் போனான். அதைச் சாப்பிட மனமில்லாமல் குப்பைத் தொட்டியில் அந்த பேப்பரோடு தள்ள முற்பட்ட வரின் பார்வை அந்த தாளினை கவனித்து துணுக்குற்றது. இவர் கிஷோர் தக்கருக்கு அனுப்பியிருந்த, ரோஹன் ரவிராஜுக்கு எதிரான விசாரணை அறிக்கைதான் அது. அன்றே சங்கமேஸ்வரனுக்கு புரிந்து போனது, அந்த நிறுவனத்தில், தனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று.

சங்கமேஸ்வரன் முன்பாக கவரை அலட்சியமாக வீசி விட்டு, பரசு நடந்தான். அவனுக்கு கூட உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரிந்திருக்கிறது போலும். ஆயாசத்துடன் தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டார் சங்கமேஸ்வரன்.

இன்றே கட்டாய ஓய்வு பெற்றுக் கொண்டு, செல்வது நல்லது. நாளை ஆபிசில் உள்ளே காலை வைக்க கூட அனுமதிக்க மாட்டார்கள்.

தனது குடும்ப சூழ்நிலையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார், சங்கமேஸ்வரன். ஐந்து வருடங்களுக்கு முன்பாக இம்மாதிரி கட்டாய ஓய்வு அவருக்குத் தந்திருந்தால் கூட கவலைப் பட்டிருக்க மாட்டார். வேறு ஏதாவது சிறிய நிறுவனத்தில் தனது திறமைகளுக்கு ஏற்ற வேலையைத் தேடிக் கொண்டிருப்பார். ஆனால், 58 வயதில் இவரால் வேறு என்ன வேலையைத் தேடிக்கொள்ள முடியும்? குடும்ப சூழ்நிலையும் தற்போது தலைகீழாக மாறியிருந்தது.  அதீத நம்பிக்கை வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பியிருந்த மகன், அங்கேயே ஒரு வெள்ளைக்காரியை மணந்து கொண்டு பெற்றோர்களை தலை மூழ்கி விட்டிருந்தான். மற்றொரு மகன், காதல் தோல்வியை தாளாமல், தாடி வைத்துக்கொண்டு துறவியைப் போல திரிந்து கொண்டிருந்தான். மனைவிக்கு  இரண்டு கால்களும் நடக்க முடியாமல் போய் படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

சிட் பண்டு ஒன்றில் அவர் போட்டு வைத்திருந்த சேமிப்பு பணம் வட்டியை கொடுத்துக் கொண்டிருக்க, அந்த சிட் பண்டு க்கு திடீர் மூடு விழா நடைபெற்று சேமித்து வைத்திருந்த பணமெல்லாம் காணாமல் போனது. இன்னும் இரண்டு வருடங்கள் வேலைக்குப் போய் நிலமையை சமாளிக்கலாம் என்று இருக்க, இப்போது ரோஹன் ரவிராஜ் அவரை வெளியேற்றி விட்டிருந்தான்.

குடும்ப நிலைமையைச் சொல்லி அவனிடம் பேசி வேலையைத் தக்க வைத்துக் கொள்ளலாமா?

அடுத்த வினாடியே அவரது தன்மானம் அவரை தடுத்தது. அதைவிட நாண்டு கொண்டு சாவதே மேல். இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவன், அவரை நடத்திய விதம் கண்ணின் முன் விரிந்தது.

மும்பாய் நிறுவனம் ஒன்றோடு உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பாக ரோஹனின் அறைக்குச் சென்றிருந்தார். அவர் உள்ளே நுழைந்து மௌனமாக நிற்க, அவன் அவரை கண்டு கொள்ளாமல், தனது ஐ போனில் மெசேஜ்களை பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனைக்கும், உள்ளே நுழையும்போதே, ”எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் ரோஹன்” என்று கேட்டு விட்டுதான் உள்ளே நுழைந்திருந்தார். கண்களை உயர்த்தி அவரை நோக்கியவன் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், மீண்டும் தனது ஐ போனைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவர் பாட்டுக்கு நின்று கொண்டே இருந்தார்.

நீண்ட அமைதிக்கு பிறகு, திடீரென்று கண்களை உயர்த்தி விட்டத்தை பார்த்தான். ”ஏதாவது சொன்னீங்களா.. உள்ளே வந்துட்டு பேசாம நின்னா என்ன அர்த்தம்? ” – காட்டமாக கேட்டான், ரோஹன்.

”நீங்க மெசேஜ் பார்த்துகிட்டு இருக்கீங்க. முடிஞ்சப்புறம் பேசலாம்னு இருக்கேன். நான் பேசப் போறது மிகவும் முக்கியமான விஷயம் !” — சங்கமேஸ்வரன் கூறினார்.

”நானும் முக்கியமான விஷயம்தான் பாத்துகிட்டு இருக்கேன். நான் ஆபிஸ் பணத்தை கையாடி மருதமலைல பார்ம் அவுஸ் வாங்கினேன் இல்லே. களவாடிய அந்த பணத்துல மிச்சம் இருந்தது. என்ன செய்யலாம்னு யோசிச்சேன். பேசாம ஒரு நீச்சல் குளத்தை கட்டலாம் ஒரு யோசனை தோணிச்சு. அது விஷயமாக மெசேஜ் அனுப்பிட்டு இருந்தேன். நீங்க ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க இல்ல… ஒண்ணு செய்யுங்க. அடுத்த வாரம் நான் பிரியா இருந்தா, வந்து பாருங்க. இப்ப நீங்க கிளம்புங்க. போகச்சே, என்னோட அட்டெண்டர் கிட்ட, எனக்கு காபியை எடுத்து வர சொல்லுங்க!” – என்று கூறிவிட்டு மீண்டும் தனது ஐ போனில் மூழ்க, இவர் அவமானப்பட்டு வெளியே வந்திருந்தார். அவனிடம் போய் தனது குடும்ப சிரமங்களை பேசினால், இன்னும் கொண்டாடுவான் .

உடனே தான் கட்டாய ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக மெயில் அனுப்பி விட்டு, பிறகு தனது மேஜை டிராயர்களை திறந்து வேண்டாத ஆவணங்களை கிழித்து எறியத் துவங்கினார். முதல் இரண்டு டிராயர்களையும், சுத்தம் செய்தவரின் பார்வை, அடியில் இருந்த கடைசி டிராயரின் மீது படர்ந்தது. அந்த டிராயரை கடைசியாக எப்போது திறந்தோம் என்பது அவருக்கு நினைவு. இல்லை. அதற்குள்ளே என்ன வைத்திருக்கிறோம் என்பதும் நினைவில்லை. அவர் குனிந்து அந்த டிராயரைத் திறக்க முடியாதபடி அவருக்கு அடிமுதுகு வலி இருந்ததால் கூடுமானவரையில் அதை உபயோகிப்பதை தவிர்த்திருந்தார். இன்று அலுவலகத்தை விட்டுப் போவதற்கு முன்பாக அந்த டிராயரில் என்ன உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு போவது நல்லது. ஏதாவது முக்கியமான ஆவணங்கள் இருந்து, அதை கொண்டு, ரோஹன் நாளைக்கு அவருக்கு குடைசல்களை தரலாம் என்கிற அச்சம் எழ, அந்த டிராயரைத் திறக்க முற்பட்டார். இரண்டு மூன்று முறை, பலமாக இழுத்தும், அந்த டிராயர் திறக்கவில்லை.

அட்டெண்டர் பரசுவை உதவிக்கு அழைத்தார்.

”உங்க டிராயராச்சே சார் ! இழுத்த இழுப்புக்கு அவ்வளவு சுளுவாக வருமா என்ன? உங்களைப் போலவே அதுக்கும் பிடிவாதம் இருக்காதா? இருங்க ரெண்டு தட்டு தட்டினால் தன்னால் தொறக்கும்” என்றவன், சென்று சுத்தியலைக் கொண்டு வந்தான்.

”தட்டப் போறது யாரை என்னயா இல்லை மேஜையையா?” – கிண்டலாகக் கேட்டார், சங்கமேஸ்வரன்.

”இந்த விளையாட்டுக்கு நான் வரலை!” என்றபடி பரசுராமன், மேஜையின் பின்பாக இரண்டு தட்டு தட்ட, டிராயர் இப்போது திறந்தது.

சங்கமேஸ்வரன் உள்ளே ஆவலுடன் நோக்கினார், . நூற்றுக்கணக்கான கவர்கள் உள்ளே குவிக்கப்பட்டிருந்தன. வெள்ளை கவர்கள் எல்லாம் பழுப்பேறி இருந்தன. சங்கமேஸ்வரனுக்கு புரிந்து போனது. சிறிய வயதிலேயே அந்த நிறுவனத்தின் பெரிய பதவியில் அமர்ந்து விட்டிருந்தார், சங்கமேஸ்வரன். எனவே, அவருடைய உறவினர்கள், நண்பர்கள், வாக்கிங் நண்பர்கள், என்று பலர் தங்கள் மகன், மகள், மைத்துனர்களுக்கு அவரது நிறுவனத்தில் வேலை கேட்டு வழங்கியிருந்த விண்ணப்பங்கள். இதுவரை அந்த விண்ணப்பங்களில் ஒன்றைக்கூட அவர் திறந்து வாசித்ததில்லை. பாவம்! எவ்வளவு நம்பிக்கையுடன் அவரிடம் கொடுத்திருப்பார்கள். அவரும் அப்போதே செல்வாக்குடனும், அதிகாரத்துடனும் இருந்தவர்தான். கிஷோர் தக்கர் அவர் சொல்வதைத்தான் வேதவாக்காக கருதினார். இவரால் பலருக்கு வேலை செய்து வைத்திருக்க முடியும். ஆனால்., அப்போது அவர் சுயநலமும், மண்டைக்கனமும் கொண்டிருந்ததால், மற்றவர்களுக்கு வேலை வாங்கித் தரும் எண்ணம் அறவே இல்லை.

வெகு நேரம் அந்த விண்ணப்ப கவர்ளையே பார்த்துக்கொண்டிருந்தார். பாவம்! இவர்கள் எல்லோரும் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்?

அந்த விண்ணப்ப கவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர், ஒரே ஒரு கவரை எடுத்து பிரித்துப் பார்த்தார். ராஜநாராயணன் என்பவன் அவரிடம் வேலை கேட்டு தந்திருந்த விண்ணப்பம் ஒரு பழுப்பு நிற கவரில் இருந்தது. கவரின் மீது எழுதப்பட்டிருந்த ஒரு குறிப்பை அவரது கண்கள் கவனித்தன.

மீனாட்சி மாமியின் மகன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது . அடுத்த கணமே, அவர் சிந்தையில் ஒரு மின்னல். அந்த மீனாட்சி மாமி அவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாள். அம்மாவுக்கு பாரிச வாயு தாக்கி விட்டிருந்ததால், சமையலுக்கு மீனாட்சி மாமியை ஏற்பாடு செய்திருந்தார் அப்பா.

சங்கமேஸ்வரனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ஒரு தீபாவளிக்கு இனிப்புகளை செய்த மீனாட்சி மாமி, அவரிடம் தனது மகனை அறிமுகம் செய்து, வேலைக்கான விண்ணப்பம் கொடுத்தாள்.

”என் பையனோட வாழ்க்கையில நீதாம்பா விளக்கேற்றி வைக்கணும் ‘ என்று கெஞ்ச, வழக்கம் போன்று, அந்த விண்ணப்பத்தையும் அலட்சியமாகத்தான் தூக்கி போட்டிருந்தார்.

ஆனால், மீனாட்சி மாமியின் நல்ல காலம், டெஸ்பாட்ச் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டிருந்த குண்டு ராவ் திடீரென்று காலமாக, அந்த வேலைக்கு உடனடியாக ஆள் தேவைப்பட்டது. சங்கமேஸ்வரன் மீனாட்சி மாமியின் பிள்ளையை உடனடியாக ஆபிசுக்கு வரச் சொன்னார்.

அவன் வந்து நின்ற கோலத்தை பார்த்ததும், திகைத்தார், சங்கமேஸ்வரன்.

”என்னப்பா! இப்படி வந்திருக்க ! பஜனை மடத்துக்கு போற மாதிரி. வேட்டி, சொக்காய், நெற்றியிலே திருநீறு பட்டை, கழுத்தில் கொட்டை. இது வெள்ளைக்காரன் வந்து போகிற நிறுவனம். பாண்ட் போட்டுக்கணும், இங்கிலிஷ் பேசணும்.” என்றார், சங்கமேஸ்வரன்.

ஆனால், அடுத்த நாள், திருநீற்றின் அளவு ஒரு அங்குலம் குறைந்ததே தவிர, மற்றபடி, பளிச்சென்று மூன்று கோடுகளும், நடுவில் துலக்கிய குங்குமப் பொட்டுமாக சிவப்பழமாக காட்சி தந்தான் ராஜநாராயணன்.

”என்னப்பா இது! புரிஞ்சுக்கோ” என்று பல்லைக் கடித்தார் சங்கமேஸ்வரன். ஆனால், டெஸ்பாட்ச் ஆபிஸ் முழுவதும், ஊரில் இருக்கிற அத்தனை இறைவன்களின் படங்களையும் மாட்டி, ஊதுபத்தி சொருகி, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு படத்தையும், கண்களில் ஒற்றிக் கொள்ளும் அவனது செயல் மற்றவர்களுக்கு வேடிக்கையாகப் போக, சங்கமேஸ்வரன் அவனை வரவழைத்து காட்டமாகப் பேசி விட்டார்.

”எனக்கும் பக்தி உண்டு. உன்னை மாதிரி ஷோ பண்ண மாட்டேன். நம்ம சம்பிரதாயங்கள் நம்ம வீட்டோட வச்சுக்கணும். ஆபிஸ்ல வேலைதான் முக்கியம். நீ வேலைய பார்க்காம, திருப்புகழ் படிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறதா புகார் வந்திருக்கு. இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு. நாளையிலிருந்து இப்படி செய்யறதா இருந்தா நீ வேற வேலையைத் தேடிக்கோ!” – சங்கமேஸ்வரன் கூற, சோகமாக தலையசைத்தான், ராஜநாராயணன். மறுநாளில் இருந்து அவன் வேலைக்கு வரவில்லை. நல்லதாகப் போயிற்று என்று குண்டு ராவின் மகனுக்கே அந்த வேலையை போட்டு கொடுத்துவிட்டார்கள். அதன்பிறகு மீனாட்சி மாமியும் சமையல் வேலையை விட்டு நின்று விட்டாள்.

இப்போது மாமியும், ராஜநாராயணனும் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ? மாமி நிச்சயம் இறந்திருப்பாள். ராஜ நாராயணன் என்ன செய்கிறானோ பாவம்! ‘நாளையிலிருந்து நீ வேலைக்கு வராதே!’ என்று இவர் ராஜநாரயணனை சொன்ன பலன், இன்று அவரை ரோஹன் நாளையிலிருந்து நீ வர வேண்டாம் என்று வேலையை விட்டு அனுப்புகிறான் போலும்.

எல்லா விண்ணப்பங்களையும் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தனது கடைசி நாளை அலுவலகத்தில் முடித்துவிட்டு கிளம்பினார். யாருக்கும் சென்று வருகிறேன் என்று கூறவில்லை. பொக்கே ஒன்றை அவரது இருக்கைக்கு அனுப்பினான், ரஞ்சித் தாகூர். அதை திருப்பி அனுப்பி, அவரது தாத்தா கிஷோர் தாக்கரிடம் தந்து விடும்படி கூறிவிட்டு, வீட்டுக்கு திரும்பினார்.

அவர் வேலைக்கு போனால்தான் வீட்டில் பிழைப்பு நடக்கும் என்பதை புரிந்து கொண்டு சங்கமேஸ்வரன் மும்மரமாக வேலை தேடத் தொடங்கினார்.

”திவ்யம் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கம்பெனியில் ஒரு சூப்பர்வைசர் தேவை என்று வாக்கிங் நண்பர் ஒருவர் கூற, குளித்துவிட்டு, தன்னை பற்றிய விவரங்களை சேகரித்துக்கொண்டு ‘திவ்யம்’ ஸ்வீட்ஸ் கம்பெனிக்குச் சென்றார்.

நிறைய பேர் வந்து காத்திருக்க, சங்கமேஸ்வரன் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

”உரிமையாளர் வந்துகிட்டே இருக்கார். கபாலி கோவிலில் இருக்கார். இப்ப வந்துடுவாரு!” – என்று ஒரு பெண் அறிவித்தபடி இருந்தாள். ஹோண்டா சிட்டி கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி கம்பீரமாக நடந்து சென்றார் உரிமையாளர். வெள்ளை வேட்டி, வெள்ளை சொக்காய், கழுத்தில் ருத்ராட்ச மாலை, கை நிறைய மோதிரங்கள், ஸ்வர்ண கங்கணம் என்று தெய்வீகமாக இருந்தார். அவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என்கிற உணர்வது சங்கமேஸ்வரனுக்கு மேலிட்டது.

அவர் அழைக்க, சங்கமேஸ்வரன் உள்ளே சென்றார் . அவர் அறையினுள் நுழைந்ததுமே, அந்த முதலாளி எழுந்து நின்று முகம் மலர, “நமஸ்காரம்” என்றார். அந்த மனிதரை உடனே இனம் கண்டு கொண்டார், சங்கமேஸ்வரன்.

சுருள் சுருளான முடியும், பக்தியில் திளைத்த அந்த கைகளையும் எப்படி மறக்க முடியும்? ‘நாளையில் இருந்து நீ வேலைக்கு வராதே’ — என்று அவர் அன்று சொல்லியிருந்த அதே ராஜநாராயணன்தான் புன்னகையுடன் நின்றிருந்தான்.

“சார் ! நினைவு இருக்கா.! உங்க வீட்டுல வேலை பார்த்துண்டு இருந்தாளே, மீனாட்சி மாமி ! அவரோட பையன் ! நீங்க மட்டும் அந்த வேலையில் இருந்து வெளியே அனுப்பலேனா, இன்னைக்கு நான் கடுமையா உழைச்சு, இந்த ‘திவ்யம்’ ஸ்வீட்ஸ் உரிமையாளராக உட்கார்ந்திருக்க மாட்டேன். உங்க ஆஃபீஸ்ல நிறைய ஊழல் இருக்கு, சுத்தமான பணம் யாருக்கும் சம்பளமாக கிடைக்கிறது இல்லைனு நிறைய பேரு சொன்னாங்க. அதனால்தான் என்னை நீங்க அவசரமா கிளம்ப சொன்னீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். உங்களால்தான் நான் இன்னைக்கு இந்த லெவல் வந்திருக்கேன். உங்க மாமி உடம்பு சுகமில்லை. நீங்க ஜீவனத்துக்கு கஷ்டப்படறீங்க ன்னு தெரியும். நாளையிலிருந்து வேலைக்கு வாங்க. சும்மா நீங்க மேற்பார்வையிடுங்க போதும். உங்களை வருத்திக்க வேண்டாம்.” – ராஜநாராயணன் சொல்ல, துக்கம் நெஞ்சை அடைக்க, வார்த்தைகள் வராமல், கண்கலங்க தடுமாறினார், சங்கமேஸ்வரன்.

கையை மட்டும் கூப்பி விட்டு, கண்ணீரை துடைத்துக் கொண்ட படி அறையின் வாசலை நோக்கி நடக்க, ராஜநாராயணன் குரல் கொடுத்தான். ”சார் ! ஒரு நிமிடம்”

வியப்புடன் திரும்பி பார்த்தால், சங்கமேஸ்வரன்.

”எங்க கம்பெனி ரூல்ஸ் சார்! நெற்றியிலே திருநீறு இல்லே நாமம் இல்லாம வேலை செய்ய கூடாது. உங்களுக்கு சம்மதம் இல்லைன்னா ஒரு கீற்று விபூதி வச்சுக்கங்க போதும். ” – ராஜநாராயணன், கூறினார்.

மறுநாள் காலையில் பட்டையாக அடுக்கு திருநீற்றை இட்டுக்கொண்டு நடுவில் குங்கும பொட்டு இட்டுக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டார், சங்கமேஸ்வரன்.

அவர் அப்படி செல்வதை, படுக்கையில் இருந்த மனைவியும், விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகனும் வியப்புடன் பார்த்தனர்.

சுத்தமான பணத்தை சம்பளமாக வாங்கப் போகிறார். அதைக் கொண்டு ஜீவனம் நடத்தி, அதில், தனது மனைவியின் உடல்நிலையும், சுகமாகி, மகனும், ஏதாவது வேலைக்குச் செல்வான் என்ற புதிய நம்பிக்கையுடன், புதிய அலுவலகம் புறப்பட்டார்.

புதிய மனிதனாகச் செல்கிறேன். எனக்கு புதிய திருப்பங்களை உண்டு செய் இறைவா!” என்று அருகில் இருந்த வெள்ளீஸ்வரர் கோயில் வாயிலில் நின்று கண்கலங்கி கைகூப்ப, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக கோவில் மணி அடித்தது.

tanthehindu@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button