இணைய இதழ்இணைய இதழ் 91கட்டுரைகள்

மொழியின் மாயாஜாலம் சிருஷ்டிக்க முயலும் இம்பர் ராஜ்ஜியங்கள் – நந்தாகுமாரன்

கட்டுரை | வாசகசாலை

2024ஆம் ஆண்டு நான் முழுவதும் வாசித்து முடித்த முதல் புத்தகம் ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத் தொகுப்பு. வித்தியாசமான முன்னட்டைப் படத்துடன் நம்மை வரவேற்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. பின்னட்டையில் இந்தத் தொகுப்பு குறித்த ‘ப்ளர்ப்’ ஓரளவு சரியான அவதானிப்புதான் என்பதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் உணரலாம், எனினும் … 

கொண்டலாத்தி

பறவைப் பெயர் கண்டால் சட்டென அதை எனக்கு வாசிக்கத் தோன்றுவதற்குக் காரணம் பறவைகள் மற்றும் பறவை ஒளிப்படம் மீதான என் ஆர்வம்தான். ஆற்றொழுக்க நடை என்பார்களே அப்படித்தான் இருக்கிறது இக்கதையின் மொழி. அப்படியே நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு காட்சியாக விரித்துக் காட்டிக் கொண்டே போகிறது.

யட்சினி எனும் தொன்மத்தையும் கற்பனையையும், அதீதம், அமானுஷ்யம், திகில் மற்றும் மாய எதார்த்தம் ஆகியவற்றுடன் கலந்துகட்டி ஒரு சுவாரஸ்ய அனுபவமாக, அடுத்தது என்ன என ஆர்வம் கொள்ள வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கதை முடிவில் மட்டும் சற்று சொதப்புகிறது.

ஒரு கதையின் வழக்கமான அமைப்பு குறித்தெல்லாம் நான் கவலைப்படுபவனல்ல. ஆரம்பம், முடிவு போன்ற கதை லட்சணங்கள் குறித்தும் எனக்குப் பெரிதாக யோசனையில்லை. அதெல்லாம் ஒரு எழுத்தாளரின் விருப்பம் மற்றும் யுக்தி ரீதியான தேர்வு. ஒரு கதை கதையாகவே இல்லாமல் எதிர்-கதையாகக் கூட இருக்கலாம். ஒரு வாசகனாக எனக்கு அக்கதை கடத்தும் அனுபவம் மற்றும் எழுச்சி, பின் அதற்குண்டான சுவாரஸ்யம் தன் பாதையில் இட்டுச் செல்லும் செயற்கரிய விடயங்கள்தான் பிரதானம். எனக்கு இந்தக் கதை கடைசி இரண்டு பத்திகளுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது.

வசீகரிக்கும் வாசிப்பின்பத்துடன் வழக்கத்திற்கும் மாறான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கதையாகத் தொடங்கித் தொடரும் இது, கடைசியில் ஒரு ‘கிளிஷே’-வான முடிவுடன் அமைகிறது. எனவே, இந்தக் கதையைக் கடைசி இரண்டு பத்திகளுக்கு முன்பே முடித்துவிட்டு, என்னைப் பொறுத்தவரையில் இதை ஒரு நல்ல கதை என்று அழைக்க விரும்புகிறேன்.

சின்னக்கிளி குட்டியப்பன்

ராஜேஷின் கதைகளில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்பது அவற்றின் மொழி நயம். குறிப்பாக அந்த வட்டார வழக்குச் சொல்லாடல்கள். இந்தத் தொகுப்பின் கதைகள் எந்தக் காலத்தில் நடக்கின்றன என்பதற்குக் கதைகளின் உள்ளேயே குறிப்புகள் இருக்கின்றன. இக்கதையின் காலகட்டம் பட்டைச் சாராயமும் வன விலங்கு வேட்டையும் இருந்த காலம் போல. எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு கதை இது.

பாதங்கள்

சுருங்கச் சொல்லக் கூடியதையெல்லாம் கூட அதிகம் எழுதித் தீர்க்கிறாரோ என்று சில சமயம் தோன்றி அதுவே சற்று ஆயாசத்தை வரவழைத்தாலும், சரி அந்த மிகுதியான விவரணைகள் கூட ஒரு வகை யுக்தியாகப் பயன்படலாமோ எனப் புரிந்து கொள்ளலாம் என்பதற்கும் இவரின் கதைகள் வழி வகுத்துக் கொடுக்கின்றனதான்.

எழுத்தாளர் ஒரு கவிஞர் என்பதால் கதைகளின் நெடுகிலும் ஆங்காங்கே தென்படும் படிமங்களும் உவமைகளும் ‘பளிச்’-செனப் பிடித்துப் போகின்றன. எளிமையான கதையாக மேலோட்டமாகத் தோன்றினாலும், இக்காலகட்டத்தின் ஒரு போக்கினைப் படம் பிடித்துக் காட்டிய விதத்தில் வலிமையான கதையாக உருமாறுகிறது இது.

இது ‘யூ-ட்யூபர்’-களின் காலம். புகழ் ஈட்டவும், பொருள் ஈட்டவும், தன்னம்பிக்கை கொள்ளவும், பல வழிகளை இவ்வுலகம் தற்போது கொண்டுள்ளது என்றாலும், அவை மூலம் அபத்தம் மற்றும் பிறழ்வு என்பவையும் சமூக அம்சங்களாக மாறியுள்ளன போல, ‘Feet fetishism’ என்பது புதிதல்ல என்றாலும் கூட.

அறல்

‘சஸ்பென்ஸ்’ கதை போலத் துவங்கி, ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ போல வளர்ந்து, சுவாரஸ்யத்தைக் கொடுத்து, ஈர்ப்பு விதி குறித்தெல்லாம் பேசி, எதிர்பார்ப்புகளை எகிறவைத்து, பின் ஏமாற்றி ‘சப்’ என்று முடிகிறது கதை. அறல் என்றால் அறுத்துச் செல்லும் நீர் என்ற ஒரு பொருள் இருக்கிறது. ஒரு வேளை இது ஏதாவது ஒரு புதிய நீதிக் கதையோ என்னவோ.

ரயிலில் பயணிக்கும் பெண்

மீண்டும் மீண்டும் வியக்க வைக்கும் மொழியுடன் துவங்குகிறது இக்கதை. அவ்வப்போது சில சுவாரஸ்யமான ‘மெட்டா-ஃபிசிக்கல்’ கேள்விகளையும் முன்வைக்கிறார் எழுத்தாளர். அகத்தின் அழகை அருமையாகப் படப் பிடித்து ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் முடியும் கதை. ஆனால் ‘டெக்ஸ்ட்’-ஆக இருக்கும் போது மட்டுமே சாத்தியப்படும் இவ்வகை ஆரம்பக் கால சுஜாதா பாணி கதை, படமாக்கப்பட்டால் சுவாரஸ்யம் இருக்காது. மேலும் இவரின் இந்தக் கதையில் வைரமுத்து பாணியும் தெரிகிறது – திகட்டும் அளவு கவிதை பாணி நடை – உவமைகள், உருவகங்கள், படிமங்கள் என. இவ்வகை ஒப்பீடுகளை எழுத்தாளர் விரும்பாமல் போகலாம். ஆனால், வாசிக்கும் போது அப்படித் தோன்றுவதை பதிவு செய்ய வேண்டும் தானே.

சித்திரைப்பூ

‘மீ டூ’ மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைக் களமாகக் கொண்ட இக்கதை சீரான ஓட்டத்தில் பதற்றம் கொள்ளும் படி அமைந்திருக்கிறது. இறுதியில் வழங்கப்படும் ‘poetic justice’ நன்றாகக் கையாளப்பட்டிருக்கிறது.

ஜடேஜாவைக் காதலித்தவள்

அதிகாரம், ஆணவம், சாதி, ஏற்றத் தாழ்வு போன்றவற்றின் குரூர முகத்தைக் கிராமத்துப் பின்னணியில் வைத்துத் தைத்துச் சொல்லும் கதை. இறுதியில் நிகழும் அதிர்ச்சி, துயரத்தையும் சேர்த்தே வரவழைத்துவிடுகிறது.

வடக்கத்தி

ஒரு ‘Coming of age’ கதை போலச் சென்று இறுதியில் ஒரு ‘லெஸ்பியன்’ முத்தக் காட்சியில் முடியும் ஒரு மிகச் சுமாரான கதை. மொழியால் மட்டுமே நம்மைக் கட்டிப் போட்டுப் படிக்க வைக்கத் தூண்டுவது ஒரு கலைதான் எனினும், இக்கதையைப் படித்து முடித்ததும் சலிப்பே மிஞ்சுகிறது என்பதே நிதர்சனம்.

கோல்ட்

இத்தொகுப்பின் பல கதைகளில் ஒரு ‘சீன் செட்டிங்’ ஆக வரும் ‘கிரிக்கெட்’ விளையாட்டு இந்தக் கதையில் ஒரு முக்கிய அங்கமாகவே அமைகிறது. நல்ல கதைதான்; ஆனால், அந்த ‘ஹாஸ்ய’ முடிவு ஏதோ ஒட்டாமல் ‘மாமூல்’-ஆக இருப்பது போல் தோன்றுகிறது. தங்கராஜ், மட்டையை, பந்தை நோக்கிச் சுழற்றுவதுடன் முடித்திருந்தால் கூட நேர்த்தியாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

பனிக்காலத்தின் பகல்

‘டைம் லூப்’ கொண்டு அமைக்கப்பட்ட கதை. நல்ல ‘லீட்’ உடன் தொடங்கும் கதை, பரபரப்பாக நகர்கிறது. ஆனால், வழக்கம் போல அந்த முடிவுதான் எந்தப் புதுமையும் இல்லாமல் இருக்கிறது.

கதவுகள்

இதுதான் நிதர்சனம். இதைப் பேசித் தான் ஆக வேண்டும். ஏறக்குறைய எல்லோருமே இப்படித்தான் இன்று இருக்கிறோம். இந்த, ‘முட்டாளின் புதிய பெட்டி’ நம்மை ஒரு தீய பழக்கமாகவே ஆட்கொண்டு நம் ஆயுளைக் குறைக்கிறது என்பதை அறிந்தும், இந்த ‘necessary evil’-ஐ நமக்கு எப்படிக் கையாள்வது எனத் தெரியவில்லை. யாரும் மிகச் சுலபமாகத் தங்களை இந்தக் கதையுடன் ‘identify’ செய்து கொள்ள முடியும். பயணம் தரும் பரவச அனுபவம் அலாதியானது. அதை அப்படியே சொற்களிலிருந்து காட்சிகளாகவே ரூப மாற்றம் செய்து காட்டும் நயம் நன்று. கதையின் நாயகி செய்வதைப் போலவே நாமும் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைக்கும் போதே ஒரு அச்சம் வருகிறது பாருங்கள்.. அதுதான், நம் தளை; அதுதான் இந்தக் கதை முன்வைக்கும் விடுதலை.

இதில் பெண்களின் உலகைப் பேச முயலும் மிகப் பிரயத்தனம் தெரிந்தாலும் அது ஏன் சரியாக அமையவில்லை என்பது குறித்து இவர் சிந்திக்க வேண்டும். ஒரு பெண்ணின் உலகினை தீண்டிப் பார்ப்பது கூட அவ்வளவு எளிதல்ல. கூடு விட்டுக் கூடு பாயும் இழப்பும், இழந்து பெறுவதன் பெரு முனைப்பும் இதில் குறைவு.

மூச்சுத் திணறுமளவு வார்க்கப்பட்டிருக்கும் இந்தக் கதையை முழுவதும் படித்து வெளி வரும் பொழுதுதான் இதன் over writing எப்பேற்பட்ட ஒரு மாபெரும் யுக்தி எனப் புரிகிறது. ஆனால், வழமை போல கதையின் முடிவுதான் ஓர்மை கூடாமல் இருப்பதாகப் படுகிறது.

கழுமரம்

‘கிக்காலொ’-க்கள் குறித்த ஒரு ஆண்வயப் பார்வை இது. பெண் ஏன் ஆணைப் புணர விரும்புகிறாள் என்பது எப்பேர்ப்பட்ட எதிர் கேள்வி, அதற்கு இப்படியா பதிலுரைப்பது. ஆனால், இதில் தென்படும் ‘பைசெக்சுவல்’, ‘ஸ்லேவரி’ மற்றும் ‘சோடோமிசம்’ ஆகியவை அதிகம் எழுதப்படாதவை. இந்தக் தொகுப்பின் மிக அபாரமாக எழுதப்பட்ட ஒரு நல்ல கதை இது.

இப்படியொரு மந்தகாச மொழியைக் கைவசப்படுத்திவிட்டு இவ்வளவு ‘க்ளிஷே’-வான படைப்புகளை ஏன் இவர் தர வேண்டும் என்பதே நாம் இந்தச் சிறுகதைத் தொகுப்பினை நோக்கி முன்வைக்கும் முக்கியக் கேள்வி.

நூல்: அறல்
நூல் வகைமை: சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர்: ராஜேஷ் வைரபாண்டியன்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing 
பக்கங்கள்: 125
விலை: ரூ.150
நூல் பெறத் தொடர்பு கொள்ள: +91 8925061999

********

nundhaa@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button