இணைய இதழ்இணைய இதழ் 91கட்டுரைகள்

குடக்கூத்து – நாவல் வாசிப்பனுபவம் – கவிஞர் இரா.மதிபாலா

கட்டுரை | வாசகசாலை

ரு காலகட்டத்தில் மண்ணின் மணம் நிறைந்து வீசிய கிராமப்புறத்து மதிப்புமிகு ‌கலைகள் தற்போதைய காலச்சூழலால் அவற்றின் மீதான தாக்கங்களால் ஏற்பட்டுள்ள நிலையில், கரகாட்டக் கலைஞர்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் கலைஞர்கள் வாழ்வினை கால வரிசையோடு அந்த கலைகளின் மணம், மக்களின் மனநிலைகள் அதன் ஊடே நிலவிய / நிலவும் சாதீய மற்றும் ஆதிக்க சக்திகளின் ஆட்ட நகர்வுகளின் வன்மத்தை நல்ல வீச்சோடும் நுண்மையோடும் சொல்லியிருக்கும் சிறந்த நாவல் இது.

நாவலின் முதல் பக்கத்திலிருந்து முப்பதைந்தாம் பக்கம் வரை ஆட்டத்திற்கு முன்பான ஓத்திகை போல துவங்கி, சுருதிகூட்டி களத்தின் தன்மையை பொழுதின் வசீகரத்தோடு வயதுக்கேற்ப துள்ளும் காமத்தை காதலை கலை ரசனையை மெல்ல மெல்லக் கூட்டி நம்மை ஆட்டக்களத்திற்கு அழைத்துச் செல்லும் உத்தி பாராட்டுக்குரியது.
மேலும், இதனுடாகவே நாவலின் கதாபாத்திரங்கள்,
அவற்றின் குணங்களோடு அழகாகப் பொருந்தும் வகையில் இழையோடி காட்சிகள் நகர்கின்றன.

ஓவ்வொரு கிராமப்புறங்களில் காணக்கிடைக்கும் பாத்திரமாகவும் எல்லோருக்கும் அறிந்தவனாகவும் இருக்கும் ஒரு கதாபாத்திரமான செம்முஞ்சி முதலில் அறிமுகமாகிறான். கூடவே, மக்களிலிருந்து காட்டான், நாட்டுத்துரை ஆகிய பாத்திரங்கள் வாயிலாக அம்மக்களின் உணர்வு நிலைகளை சொல்லிவிடுகிற பாங்கும், நிலத்தின் அந்நில மக்களின் சமூக குறியீடாக அரங்கு அமைந்துள்ள திடலின் பெயரான அம்பேத்கார் திடல் எனக்குறிப்பிடுவது திடத்தன்மையையும் உறுதிப்பாட்டினை சொல்கிறது.

கரகாட்ட கலைஞர்களாக செல்வி, மோகனா, தவில் நாதஸ்வர கலைஞர்களான குணசீலன், கீரனூர் ராம லட்சுமணன், பெயரற்ற பப்பூன் ஆகிய கதாபாத்திங்கள் அறிமுகம் செய்வதோடு நிகழ்வுகள் ஆபாசமாகப் போய்விடாது அதே நேரம் இயற்கையான பெண் உடலின் மீதான சற்றே பசுமைக் கூடிய வர்ணிப்புகள் பொருந்தியே உள்ளன. பெண்களுக்கே பெண் கலைஞர்களின் உடலின் மீதான மோகத்தை பொறாமையை இயல்போடு காட்டியிருப்பதும் , இளைஞர்களின் அந்த நேரத்து அசைவுகள் செய்கைகளை இரகசியமாக நாம் உள்ளுக்குள் ரசிக்கும்படி திடலின் இரவுக்குள் நம்மை அழைத்துவிடுகிற எழுத்து நடை அருமை.

இப்படி மெல்ல நகரத் தொடங்கிய நாவல் குணசீலன் செல்வியின் மீதான அதீத ஈர்ப்பால் காதலால் அவள் பின்னோடி தொடர்ந்து அவளின் ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி உடன் போகும் போது கதை வேகமெடுக்கிறது.

அதன் பின் இயல்பான நடையில் கதைக் காட்சிகளை அழைத்து போகிறது. திரைக்கதைப் போல எடிட் தன்மையுடன் குணசீலன் தாய் வெள்ளத்தாயின் புலம்பலில் குணசீலன் கூடப் பிறந்த அவனின் அக்காக்களின் புகுந்த வீட்டுக் கதைகளை மேலோட்டமாகத் தொட்டு பாத்திரங்களின் இயல்பான குணங்களை அவற்றின் யதார்த்தம் விலகாத பேச்சின் ஊடே உறவுகளிடையான சிக்கல்கள், திருமண ஏற்பாடுகள், அத்தை மகன் நண்பனான மணிகண்டனுக்கும் குணசீலனுக்குமான நட்பு என ஒரு பக்கம் ட்ராக்கில் போகிறது.

அடுத்து, பொன்னாத்தா கிழவி, அவள் மகள் ரஞ்சிதம், கிழவியின் உறவுக்காரி பர்வதம், பாகவதர் , ஜமீன்தார் திருமலை, செல்வி என கதாபாத்திரங்கள் இடையே நம்மை விறுவிறுப்பாக பயணிக்க வைக்கிற நாவல் செல்வி -குணசீலன் கல்யாணத்தில் முடிவடைகிறது.

இதில், என்னளவில் நான் கவனித்த சிறப்புகள். இரண்டு தலைமுறைகளின் வாழ் காலங்களில் ஏற்படும் சமூக மாற்றங்கள், மனிதர்கள், கால மாற்றத்தால் நாட்டுப்புறக் கலைகளில் ஏற்பட்டு விடும் இறங்குமுகப் போக்கினை சிறப்பாக சொல்லிவிடுகிறது.

ஓரு கதாபாத்திரத்தின் தொடர்பான முந்தைய தலைமுறை தொடர்புடைய பாத்திரம் குறித்த கதை வரும் போது கதையின் முதலில் சொல்லப்பட்ட பாத்திரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு அடுத்த பாத்திரத்தின் விவரிப்பு தந்துள்ளது. இவருக்கு ‌இது முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை.

ராசம்மா, கருப்பன், மண்டவாடியான், பரமசிவன் , வெள்ளைத்தாயி, நாச்சி போன்ற பத்திரங்களும் மனசில் தங்கி விடுகிறார்கள் .

நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வியல் நிலையின் மீதான ஆதிக்க ஜாதியினரின் பார்வை, அணுமுறை, ஆகியவற்றோடு பிற்படுத்தப்பட்ட இனத்தின் எளிய நிலை, ஆண்கள் எனில் உழைப்பைச் சுரண்டுதல், பெண்கள் எனில் உடல் இச்சைக்குப் பயன்படுத்தி உடல்சுக போகத்தில் திளைத்தல் வழியிலான சுரண்டலின் வகைகள், சில நேர்வுகளில் இனக்கலப்பை ஒழிக்க ஓரிரு கொலைகள் கூட நிகழ்வது என‌ அத்தனையும் பார்க்க முடிகிறது.

நிறைவாக, இந்த நாட்டில் ஆதிக்க சக்தி என்போரின் நுகர்வெறி, சுரண்டல், வன்மம், காலத்திற்கு ஏற்ப அதன் அடிப்படை அம்சம் மாறாது வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதை முத்தாய்ப்பாக நாவல் கூறுகிறது.

கரகாட்டகலையில் சிறப்பான ஒரு பெண்ணும், ஒரு நாதஸ்வர கலைஞனும் இயல்பான நடுத்தர வகுப்பு சமூக இல்வாழ்விற்கு விரும்பி நகர்ந்து பொது சமூகத்தில் கலக்கும் போது எத்தனை வகையான போராட்டங்களை அவர்கள் சந்திக்கிறார்கள் என்பதை போலித்தனம் இல்லாத யதர்த்தமான சூழலோடு கதையைக் கொண்டு சென்றதில் இந்நாவல் வாசகர் மனதை வென்று நிற்கிறது. நூலினை யாப்பு பதிப்பகம் சிறப்புற அமைத்துள்ளது. முகப்பு அட்டையின் ஒவியமும் நிறமும் அருமை.

கவிஞர் எனும் நிலையிலிருந்து நாவலாசிரியர், எழுத்தாளர் எனும் நிலைக்கு எந்தத் தடங்கலும் தடுமாற்றமும் இல்லாது நண்பர் உதயபாலா வந்திருக்கிறார்.

இனியான நாட்களில் இதர கதைக்களங்களிலும், அவருக்கு விருப்பமான இரயில்வே சார்ந்த கட்டுரைகளிலும் கவிதை தளத்திலும் நல்ல படைப்புகளை அவர் தர வேண்டும் . வாழ்த்துகள் உதயபாலா!

நூல் பெயர் : குடக்கூத்து (நாவல்) 
ஆசிரியர் : எஸ்.உதயபாலா 
பதிப்பகம் : யாப்பு வெளியீடு
விலை : ரூ. 160
தொடர்பு எண் : 90805 14506

*********

mbalaseptember@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button