அதீதம்
ஏந்த முடிவதில்லை
வழிந்தோடும் அதீதங்களை
கூப்பிய இரு கைக்குள்
ஏந்தியவை தவிர
ஏனைய அனைத்தும் வழிந்தோடும்
அதீதங்களுக்கு அப்பால் உள்ளதுபோல்
உணர்கிறேன் அவ்வப்போது
அதீத அன்பு
அதீத கோபம்
அதீத கருணை
அதீத காதல்
என அநியாய அதீதங்கள்
இவ்வதீத அளவளாவல்களை
விலகி நின்று பார்த்தாலும்
விலக்கி நின்று பார்த்தாலும்
கருணையற்றவன் என்ற பெயரே எச்சம்
கணக்கற்ற அலைகள் கரை வந்தாலும்
கால் நனைக்கத் தேவை ஓரலைதான்.
***
உடன் இருத்தல்
எத்தனை காலம் உடனிருப்பேன் என்று
சத்தியம் செய்யப் போவதில்லை
நாளை நான் இல்லாமல் போகலாம்
நாளை நாம் நாமாக இல்லாமல் போகலாம்
இல்லாமல் போகும் நாளைக்காக
இன்றை இல்லாமல் போகச் செய்யாதே
இன்றின் உடனடித் தேவை
உடனிருத்தல் மட்டுமே.
இன்று இப்போது நாசி நுழைந்து
உயிர்கொடுக்கும் காற்றுபோல் உடனிரு
நாளைய காற்றையும் நாளைய காதலையும்
நாளை பார்த்துக் கொள்ளலாம்.
***
ஓவியம்
கருப்பு வெள்ளையால் ஆன
நேர்த்தியில்லாத ஓவியங்களில்
நேற்றைய காட்சியை வரைந்திருந்தாள்
உண்டு மீந்த மிச்ச எலும்பிற்காக
வாலாட்டி நிற்கும் அவள் வரைந்த நாய்க்கு
மூன்று கால்கள்தான்
எங்கள் வாசலில் காத்திருக்கும் நாய் போலவே…
நேற்று சாப்பிடாமல் துரத்தப்பட்ட அந்த நாய்
இன்று சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த ஓவியத்தில்
அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது
பூட்டப்பட்ட எங்கள் வாசல் முன்.
***
மாற்றம்
அன்று போல் இருப்பதில்லை
வேறென்றைக்கும்
நீர்த்துப்போன கதைகளில்
நீட்டிச் சொல்ல ஒன்றுமில்லை
இடைவிடாத மழை போலாகிறது அன்பு
நசநசவென்று
நேற்றின் நெருக்கங்களை
இன்றின் நெருடல்களாக்க
சிறு நச்சரிப்பு போதும்
அந்தந்த நேரத்து அரவணைப்புகள் போல்
ஆறுதலாவது வேறொன்றுமில்லை.
******