
விண்மீனை தேடித்திரிதல்
காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே,
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே.
பாடியவர்: வெள்ளிவீதியார்
குறுந்தொகை 44
திணை: பாலை
செவிலிக்கூற்று பாடல்
அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை, துயரை காணும் அளவே, தலைவியின் மீது காதலும் அவள் பிரிவால் பெருந்துயர் கொள்ளும் ஒருத்தி உண்டு. அது அவளின் செவிலித்தாய். அந்த ‘செவிலித்தாய் மனநிலை’ தமையன் என்ற உறவிற்கும் உண்டு. தமையன் என்ற உறவு தாயாகவும், தந்தையாகவும், தோழனாகவும் உருமாறக்கூடியது. ஒரு பெண் தன் இளையவனின் முன்னால் அதிகார மனநிலையில் நிற்கிறாள் அல்லது அவனை சிறுவனாகவே வைத்துக்கொள்கிறாள். அவளால் மூத்தவனுடன் தான் தோழியாகப் பழக முடிகிறது என்று நினைக்கிறேன். அதே மாதிரி ஒரு ஆணிற்கும் தன் தமக்கையை விட தங்கை அணுக்கமாக இருக்கிறாள். அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறான். அவளைப்பற்றி தனக்குத் தெரியாத எதுவும் இல்லை என்றே நினைக்கிறான். கிட்டதட்ட சங்கப்பாடல்களில் உள்ள செவிலித்தாயின் மனநிலையும் இதுவே. பெற்றவள் அறியாததைக் கூட நானறிவேன் என்ற பெருமிதம் உள்ள மிக மென்மையான உறவு இது.
தலைவி வயதெய்துவது, காதல் கொள்வதைப் புரிந்து கொள்ள ஒரு செவிலித்தாய் சிரமப்படுகிறாள். அவளிடம் ஒரு தத்தளிப்பு இருந்து கொண்டே இருப்பதை சங்கக்கவிதைகளில் காண்கிறோம். செவிலித்தாய் கூற்றை மட்டும் எடுத்து வாசித்தால் அவளின் மனநிலையின் பரிதவிப்பை நம்மால் உணரமுடியும். அவளுக்கு தாய் தந்தையைப்போல தலைவியை இற்செறிக்க மனம் ஒப்பாது. கடும்சுரத்தில் மகளை விடவும் மனம் ஒப்பாது. தலைவி காதல் கொண்டிருக்கிறாள் என்று நம்பவும் முடியாது. அவள் திருமணத்திற்கு தயாரான பெண் என்பதையும் ஏற்கவும் முடியாது. அந்த அன்பில் எழும் ‘பரிதவிப்பு உணர்வு நிலையே’ செவிலிதாய் கூற்று பாடல்களை மனதிற்கு நெருக்கமாக்குகின்றன.
கனிமொழி என்னுடைய முதுநிலை கல்லூரி காலத்து தோழி. எங்கள் இருவருக்கும் விடுதியில் கேரளப்பெண்களுக்கான தளத்தில் தான் அறை கிடைத்தது. வேறுவழியே இல்லாமல் நட்பானவர்கள் நாங்கள். ஏனெனில் எந்த விஷயத்திலும் நாங்கள் ஒத்துப்போனதில்லை. ‘எங்களட பொன்னு கொச்சே…’ என்று கொஞ்சும் அதே பிள்ளைகள், எதாவது தங்களுக்குள் பேச வேண்டும் என்றால் எங்கள் இருவரையும் ‘ப்ளீஸ்..கொறச்சு சமயம் பொறத்து நிக்கனே’ என்று வெளியே துரத்தி கதவை அடைத்துவிடுவார்கள். பகலென்றால் சுற்றிவிட்டு வரலாம். இரவு பன்னிரெண்டு மணிக்கும் ஏதாவது அடிதடி, பேச்சுவார்த்தை நடக்கும். தமிழ்பிள்ளைகளின் அறையை அந்த நேரத்தில் தட்டி கேலிகளால் காதுகளை புண்ணாக்கிக் கொள்வதற்கு பதிலாக பனியோ, காற்றோ எதுவானாலும் நாங்கள் வராண்டாவில் ஒருத்தருக்கொருத்தர் துணை என்று நட்பை வளர்த்தோம்.
இன்றுவரை வாரம் ஒருமுறையாவது வாட்ஸ்ஆப்பில், அலைபேசியில் அவளை அழைத்துப் பேசாவிட்டால் எனக்கு ஒரு நாள் விரயமாகும். ‘எனக்கு கால் பண்றத விட என்ன வேலை உனக்கு?’ [இந்த வரி இன்னும் கடுமையாக இருக்கும்.] என்று அவள் தொடங்கினால் என்னால் பதில் கூற முடிவதில்லை. அவளை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதால் வரும் கோபம் அது. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சில பெண்கள் குடும்பத்தாரால் இரக்கமின்றி தனித்து விடப்படுகிறார்கள். காதல் எத்தனை மாதங்களுக்கு சலிக்காமல் இருக்கும்? அதுவும் குழந்தையின் இடையீடு கூட இல்லாத திருமண வாழ்க்கை கொடுக்கும் வெளிநாடு வாழ் ‘தனிமை நரகம்’ அவள் வாழ்க்கை. அவள் மூன்று அண்ணன்களுடன் பிறந்தவள். இவர்கள் வீட்டில் பெண்பிள்ளைக்காக வரிசையாக மூன்று ஆண்பிள்ளைகள். அப்பா, அண்ணன்களின் அன்பு சூழ வளர்ந்தவள். இளநிலை கல்லூரி படிப்பின் போது அவளின் தந்தை இறந்ததால் அண்ணன்களின் அன்பு மேலும் கூடுதலானது. அவள் ஊர் ஸ்ரீமுஷ்ணம். ஸ்ரீமுஷ்ணம் விஷ்ணுவின் ஊர் அதனால நீ மதுரை மீனாட்சி என்று அடிக்கடி சொல்வேன். மூன்று அண்ணன்களும் வாரவாரம் மாற்றி மாற்றி வந்துவிடுவார்கள். அவளுடன் நானும் அவர்களின் செல்லமாக மாறினேன். அவர்களின் அன்பை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என் நினைவில் ப்ரியம் என்ற சொல் அவர்களுடன் இணைந்து கொள்கிறது.
அவள் ஊரைச் சார்ந்த அவளின் பள்ளித்தோழனை அவள் காதல் திருமணம் செய்து கொண்டாள். முதுநிலைத் தேர்வு முடிந்த நாளன்றே அவள் டெல்லி கிளம்பிச் சென்றுவிட்டாள். அவன் டெல்லி ஜ.ஜ.டி யில் முனைவர் படிப்பு முடிக்கும் தருவாயில் இருந்தான். என்னைப் பற்றி அறிந்தவளாதலால் கிளம்பும் அன்று என்னிடம் எதுவும் கூறவில்லை. ஊருக்குப் போகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றாள். அடுத்த நாள் மதியம் விடுதிக்கு அவளின் மூன்றாவது அண்ணன் வந்திருந்தார். அவர் எங்களை விட மூன்று ஆண்டுகள் மூத்தவர். கோபக்காரர். எனக்கு ‘ஸ்கெட்ச்’ போடப்பட்டிருப்பதை நான் உணரவில்லை. மப்டியில் வந்த காவலர் உறுதியான குரலில் என்னிடம் பேசத்தொடங்கினார். அப்படி பேசினால் என்னிடமிருந்து எதையும் வாங்கமுடியாது. மண்டைக்குள் அனைத்தும் மறந்து போகும். எனக்கு அவர் சொல்லித்தான் அவள் வீட்டிற்குச் செல்லவில்லை என்பதே தெரிந்தது.
சிறிது நேரம் சென்று அண்ணா, “சார், பாப்பாவுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நான் பேசிப்பாக்கிறேன்,” என்றார்.
விடுதியிலிருந்து பிள்ளைகள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். எங்கள் ஊருக்கு ஒரு பேருந்தை விட்டால் அடுத்த பேருந்து கிடைக்க இரண்டு மணி நேரமாவது ஆகும் என்ற அவசரம் வேறு. நான் விழிப்பதைப் பார்த்தவர் என் கைகளை பற்றிக்கொண்டார்.
“ம்மா…கனியைக் காணோம். அதோட சீரியஸ்னெஸ் உனக்கு புரியுதா இல்லையா..?”
“வீட்டுக்குப் போறேன்னு தான் சொன்னா,”
“இன்னும் வரலம்மா…உனக்கு எதாச்சும் தெரியுமா?”
“வித்யா வீட்டுக்கு போயிருப்பா,”
“அங்க போகல..”
“….”
“அவ யாரயாச்சும் லவ் பண்ணினாளா? விவரம் தெரியாம எங்கியாவது மாட்டிக்கிட்டா என்ன பண்றது? யாராச்சும் அவள்ட்ட தப்பா நடந்திருந்தா? எங்கியாச்சும் மாட்டியிருந்தா…நேத்து நைட் வார்டன் வீட்டுக்கு கால் பண்ணி வந்திட்டாளான்னு கேட்ட பிறகுதான் தேட ஆரம்பிச்சோம்..”
“டெல்லி ஐ.ஐ.டியில படிக்கிற உங்க ஊர்க்காரரை லவ் பண்ணினாள்..”- என்று தொடக்கி தெரிந்த அனைத்தையும் சொல்லிவிட்டேன். அவள் ஏன் என்னிடம் டெல்லி செல்வதை சொல்லாமல் சென்றாள் என்பது இப்போது புரிந்திருக்கும்.
அன்று அந்த அண்ணா பேசியதும், அவரின் கலங்கிய கண்களும் உறுதியாக பொய்யானது இல்லை. என் கைகளைப் பற்றியிருந்த அவர் கைகளின் வியர்வையின் ஈரத்தை இன்னும் உணர்கிறேன். தவிப்பின், பிரிவின் ஏமாற்றத்தின் வலி காதலிற்கு மட்டுமல்ல எல்லா வகையான அன்பிற்கும் ஒன்றுதான்.
அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் ‘ எல்லா உறவுகளையும் காதல் என்றே பழைய நூல்கள் சொல்கின்றன. இறைவனுடனான உறவைக்கூட’ என்று எழுதியிருந்தார். அவளின் அண்ணன்களிடம் எத்தனை காதல் திருமணங்களைப்பற்றி காவல் நிலையத்தில் கூறியிருப்பார்கள்? விஷயம் தெரியும் வரை அவர்கள் மூவரும் எங்கெங்கு சுற்றியிருப்பார்கள்? … இந்த செவிலித்தாயின் தேடலின் தவிப்பும், அவர்களின் தவிப்பு ஒன்றுதான்.
கால்கள் நடை தளர்ந்தன
கண்கள்
பார்த்து பார்த்து ஔி இழந்தன,
பெருவெளியின் விண்மீன்கள் போல
இவ்வுலகில் உறுதியாக
இவளும் இவனும் போல
பலர் உள்ளர்.
(தொடரும்…)