உச்சம் தொட்ட தீபாவளி மலர்கள்!
மக்களின் மகத்தான ஆதரவு எப்படியிருந்தது என்றால், அந்நாளில் வெளியாகும் திரைப்படங்கள் முதல் மூன்று நாட்கள் காற்றாடிவிட்டு, பின் ‘நன்றாயிருக்கிறது’ என்று மவுத் டாக்கால் பரபரப்பாகி தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகள் ஆவதைப் போல…. ஆரம்பத்தில் முப்பது, ஐம்பது என்று ஓரிரண்டு நாட்கள் வந்த மணியார்டர்கள், தினமும் பரபரப்பான விளம்பரங்கள் வருவதைப் பார்த்ததும் மெல்ல அதிகரித்து, 100, 150 என உயர்ந்து ஒரு கட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மணியார்டர்கள் தினம் வர ஆரம்பித்தன.
தபால் அலுவலகத்தில், ஊழியர்களை வரவழைத்துச் சீறி வெடித்திருக்கிறார் தலைமைத் தபால் அதிகாரி. “ஒரு நாளைக்கு அம்பது மணியார்டர் டெலிவரி பண்ணத்தான் எங்களுக்கு அதிகாரம் இருக்கு. உங்களுக்கு மட்டுமே இத்தனை வந்துச்சுன்னா, மத்ததையெல்லாம் என்ன செய்யறது..? எங்ககிட்ட அத்தனை மேன்பவரும் இல்லை. எங்களால தினம் அம்பதுதான் தர முடியும்..”. அதிர்ந்து போன பத்திரிகை ஆட்கள் பணிந்து பேச, “யாரைக் கேட்டுட்டு விளம்பரம் தந்தீங்க..? நீங்களா ஒண்ணு செஞ்சா நான் பொறுப்பாக முடியாது. ஐயம் ஸாரி” என்று கையை விரித்து விட்டார்.
அவர்கள் அதற்குமேல் ஒன்றும் பேச வழியில்லாமல் அலுவலகத்தில் வந்து தகவல் சொன்னார்கள். ‘என்னடா இது புதுக்குழப்பம்’ என்று தவித்துப் போன மேலிடம் தானே நேரில் சென்று பலவிதமாகப் பேசி, சிலவிதமாக ‘கவனித்து’ இறுதியில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி தினம் குவியும் மணியார்டர் கூப்பன்களை தபால் அலுவலகத்தில் எங்கள் அலுவலகத்திடம் ஒப்படைத்து விடுவார்கள். எங்கள் ஆட்கள் லெட்ஜரில் எண்ட்ரி போட்டு, அவற்றைத் திருப்பி தபால் அலுவலகத்தில் தர, அவர்கள் ஆகவேண்டியதைச் செய்வார்கள்.
இந்த உடன்படிக்கை ஏற்பட்டதும், தீபாவளி மலர் வேலைகளைக் கவனிக்கவென்று மற்றுமோர் புதுப் படை அமைக்கப்பட்டது. செக்ஷன்தோறும் ஓரிருவரைப் பிடித்து வந்து மணியார்டர் செக்ஷன் ஒன்று தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. “எனக்கு ரெண்டு ஆளுங்களைக் குடு. நல்லா வேலை தெரிஞ்சவங்களா இருக்கணும். ரெண்டு மாசம் கழிச்சு தீபாவளி முடிஞ்சப்பறம் திரும்ப உன் செக்ஷனுக்கு நான் அனுப்பினா, முழிச்சுக்கிட்டு நிக்கக் கூடாது. அப்டி யாரைத் தரப் போற..?” என்று எம்.டி., பொறியிடம் கேட்க, பொறி என்னையும் வேறொருவனையும் அந்த செக்ஷனுக்குத் தாரை வார்த்தார்.
அங்கே கல்யாண வீட்டுப் பந்தியைப் போல, வரிசையாக டேபிள்கள் போடப்பட்டு இருவர் இருவராக அமர்ந்திருப்போம். முதல் இருவர் மணியார்டர் கூப்பன்கள் வந்ததும், அவற்றில் சீரியல் நம்பர் போட்டு, அடுத்திருக்கும் செட்டிடம் தள்ளுவார்கள். அவர்கள் அந்த சீரியல் நம்பரை லெட்ஜரில் எழுதி, அதற்குரிய அட்ரஸையும் எண்ட்ரி போடுவார்கள். மூன்றாவது டீமிடம் அந்தக் கூப்பன் போனதும், அவர்கள் தயாராய் அச்சிட்டு வைத்திருக்கும் போஸ்ட் கார்டில், கூப்பனில் இருக்கும் நம்பரைப் போட்டு, அதிலிருக்கும் அட்ரஸை டு அட்ரஸ் ஸ்பேசில் எழுதுவார்கள். ‘அன்புள்ள ——க்கு, உங்கள் பணஅஞ்சல் கிடைத்தது. உங்கள் வரிசை எண் —. மேல் விவரங்களுக்கு செய்தித்தாளைப் பாருங்கள். பரிசு வெல்ல வாழ்த்துகள்’ என்று (நினைவிலிருந்து சொல்கிறேன்) கார்டில் அச்சிடப்பட்டிருக்கும். இவையெல்லாம் முடிந்தபின் இறுதியாக இருக்கும் செட்டின் வேலை, அன்றைய டேட்டின் சீலை அத்தனை மணியார்டர் கூப்பன்களிலும் அழுத்தி, வேலையை முடிப்பது.
இப்படி வரிசை வரிசையாக நகரும் இயக்கத்தில், ஏதாவதொரு யூனிட் சோம்பலாகவோ, சுணங்கியோ வேலை பார்த்தால் வேலை சீராக நடக்காதில்லையா..? அப்படி நடக்கக் கூடாது என்பதற்காகப் பல நாட்கள் மேலிடமே மேற்பார்வை பார்க்க வரும். சாட்டையாலடித்து குதிரைகளை, மாடுகளைப் பற்றுவது போல வார்த்தைகளால் சொடுக்குவார்கள் – அதற்கும் அதிகத் தேவையிராது- அவர்கள் வந்ததாலேயே வேலை விரைவாக நடக்கும். என்ன ஒன்று… இந்தப் புதிய வேலையால் எங்களோடெல்லாம் சகஜமாகப் பழகினார் எம்டி என்பதும், நாங்கள் ஒவ்வொருவரும் அவர் நினைவில் பதிந்தோம் என்பதும் எங்களுக்குக் கிடைத்த (தீபாவளி) போனஸ்.
மற்ற செக்ஷன்களுக்கு வார விடுமுறை இருக்கும். இந்த செக்ஷனுக்கு அப்படியொன்று கிடையாது. சனிக்கிழமை பாதி வேலை செய்துவிட்டு மறுநாள் மீதியைச் செய்தால் போதும் என்பது ரிலாக்ஸ். ஞாயிறு விடுமுறை வேண்டும் என்றால் சனியன்றே பெண்டிங் இல்லாமல் எல்லா கூப்பன்களையும் முடித்திருக்க வேண்டும் என்பதும் உபரி கண்டிஷன். லீவு தேவைப்படுகையில் பேசி வைத்துக் கொண்டு, எல்லாரும் பேயாய் வேலை பார்த்து முடித்துவிடுவோம். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாக எங்கள் புதுப்பிரிவு ஆனதில் மேற்சொன்ன அனுகூலங்களைத் தவிர கூடுதல் அனுகூலம் ஒன்றும் இருந்தது. தாராளமாய் பிஸ்கெட், டீ, இரவு உணவு எல்லாம் அலுவலகச் செலவில் சப்ளையாகும். ‘என்சாய் ப்ரதர்…’. என்று சிரித்துக் கொள்வோம்.
தீபாவளி மலர் வேலைகள் ஒருவாறாக முடிந்து எங்கள் செக்ஷனுக்குத் திரும்பி வந்தபோது, என்னவோ வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் முடித்துத் தாயகம் திரும்பிய ஒரு ஃபீலிங். செக்ஷனில் டாப்பராக இருப்பதில் ஆபத்து என்று நான் முன்பு சொன்னேனே… அது இதுதான். எப்போது என்ன அவசரத் தேவையென்றாலும் நாம் பலிகொடுக்கப் படுவோம். அடுத்து எப்போது பலியானேன் என்று சொல்வதற்கு முன்னால் தீபாவளி மலர் தொடர்பான சில விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். அந்த ஆண்டு தீபாவளி மலரின் மெகாஹிட் வெற்றியைக் கேள்விப்பட்ட மற்றப் பத்திரிகை நிறுவனங்கள் அடுத்த தீபாவளியிலிருந்து தாங்களும் களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். ஏராளமான ஸ்பான்சர்களைப் பிடித்து, தீபாவளி மலருடன் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் இவையிவை என்று ஆளாளுக்கு அறிவிக்க ஆரம்பித்தார்கள். ஏறத்தாழ ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மளிகை லிஸ்ட்டை விட நீளமான பட்டியலாக அவை ஆண்டுதோறும் பெருகிவர ஆரம்பித்தன. தினகரன், தினபூமி இவையெல்லாம் மிகநிறைய இலவசப் பொருட்களை அறிவித்தார்கள். தினபூமி வழங்கும் இலவசப் பொருட்களை ஒரு பெரிய துணிப் பையில் போட்டுத் தர ஆரம்பித்தார்கள். தொலைக்காட்சியில் இன்றைக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்கிற விளம்பர நிறுவனங்களின் பெயர்களை நான்ஸ்டாப்பாக ஒன்றரை நிமிடம் சொல்கிறார்களே… அதுபோல அன்று தினபூமி தீபாவளி மலருடன் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் என்று டிவியில் விளம்பரம ஆரம்பித்தால், நாம் பக்கத்துக் கடையில் சென்று ஒரு டீ குடித்துவிட்டு வந்து மறுபடி டிவியைப் பார்த்தால், அப்போதுதான் சொல்லி முடித்திருப்பார்கள் பட்டியலை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்தது. ‘போகிற போக்கைப் பார்த்தால் தீபாவளி மலர் இலவசப் பொருட்களுக்கு இணைப்பாகத் தரப்படும் என்று அறிவிப்பாங்க போலருக்கு..’ என்று நாங்கள் கேலி செய்து சிரித்தோம்.
அத்தனை தீபாவளி மலர்களும் (நன்றாயிருக்கிறதோ, இல்லை குப்பையோ) இந்த இலவசங்களுக்காகவே அதிகம் விற்பனையாகின. சும்மாவா பின்னே… இலவசங்களுக்கு தமிழ்நாட்டினரைவிட வேறு யார் மயங்குவார்கள்..? அத்தனை களேபரப் போட்டியிலும் இலவசங்களை அறிவிக்காமல் நிமிர்ந்து நின்ற அமுதசுரபி, கலைமகள் போன்ற தீபாவளி மலர்கள் இருக்கத்தான் செய்தன. அவையும் விற்பனையில் குறையின்றி நடந்தன. ஏனெனில் அன்று செல்போன், மீடியா உள்ளிட்டவற்றின் போட்டி இல்லை என்பதால். இந்த விண்ணைத் தொட்ட இலவச விளம்பரங்கள் எல்லாம் கொட்டி முழக்கப்பட்டு அடுத்த இரண்டாண்டுகள் வரையில்தான். மூன்றாவது ஆண்டே, ‘எந்தத் தீபாவளி மலருடனும் இலவசங்கள் அள்ளி வழங்கக் கூடாது’ என்று அரசு தடை உத்தரவே பிறப்பித்தது. ஏற்கனவே கரைகாணாத இலவசங்களின் ஊர்வலம் கவனிக்க வைத்திருந்தாலும், உடனடியாகத் தடைவரக் காரணம், தராசு நிறுவனம் வெளியிட்ட உச்சக்கட்ட அராஜக இலவச அறிவிப்புப் பட்டியல். உள்ளாடை, ஸானிடரி நாப்கின், இரண்டு நாய்க்குட்டிகள் (யெஸ், பெட் அனிமல்ஸ்தான்) என்று கற்பனையும் செய்து பார்க்க இயலாதவற்றை அறிவித்தார்கள். (கொடுத்தார்களா என்பதை எவர் கண்டது..?) ஆக, அந்த உச்சக்கட்ட அராஜகத்தைத் தொட்ட அந்தத் தீபாவளி மலருடன் அரசு அறிவிப்பால் அனைத்தும் கதம், கதம்…
அதனைத் தொடர்ந்த சில ஆண்டுகளிலேயே தினமலர், தினபூமி மற்றும் இன்னபிற இலவசங்களை அள்ளி வழங்கிய தீபாவளி மலர்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. இன்று இவை இல்லை. இலவசங்களை அள்ளி வழங்காத தீபாவளி மலர்கள் இன்றளவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை தீபாவளி மலர்கள் வந்தென்ன..? ஐந்தாறு பக்கம் ஓவியத் தொடர்களாக பல பகுதிகள் வந்த, ஒரு ஜோக்குக்கு ஒருபக்கப் படங்கள் வந்த, சிறுகதைகள் நிறைய, நிறைவாக வெளிவந்த பழைய தீபாவளி மலர்களின் அழகில் ஆயிரத்திலொரு பங்கு இன்றைய மலர்களுக்குக் கிடையாது. சினிமாப் பகுதிகளும், அரசியல், சுற்றுலாக் கட்டுரைகளும், சிறுகதை என்று சாஸ்திரத்துக்கு தலைசுற்ற வைக்கும் இலக்கியமாக ஓரிரண்டும் அடங்கியவையாக வெளிவரும் இன்றைய இதழ்கள், அந்த வாரப்பத்திரிகையின் மூன்று இதழ்களை பைண்டு செய்து படித்தால் வரும் உணர்வைத் தருகின்றனவே ஒழிய, தீபாவளி மலருக்கென்று கிடைத்த ஒரு ஃபீல் இன்றைய மலர்களில் இல்லை என்பது என் அழுத்தமான கருத்து.
சரி, தீபாவளி மலர்கள் போகட்டும். அந்த விஷயத்தைக் கடந்து, என் செக்ஷனில் கிடைத்த அனுபவங்களைத் தொடர்கிறேன். வழக்கமாகச் செல்லும் வேலையில், அடுத்த சுவாரஸ்யமான திருப்பம் எப்போது ஏற்பட்டது என்றால்… அடாடா, போதுமான அளவு கட்டுரை வளர்ந்து விட்டது, நெக்ஸ்ட் சாப்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்று வாசகசாலை எடிட்டர் கையசைக்கிறாரே…. ஸோ… வெய்ட் ப்ளீஸ்….!
(சரக்கு இன்னும் உண்டு…)