இணைய இதழ்இணைய இதழ் 59தொடர்கள்

ரசிகனின் டைரி 2.0; 14 – வருணன்

தொடர் | வாசகசாலை

Mad Max: Fury Road (2015)

Dir: George Miller | 120 min | Netflix | Amazon Prime 

திரைப்படங்களை பார்வையாளர்களாய் நாம் பல்வேறு காரணங்களுக்காகப் பார்க்கிறோம். பெரும்பான்மையாய் கேளிக்கை பிரதான காரணமாய் இருக்கும். அதன் பிறகு கதைகேட்கிற ஆர்வத்தின் மீதான லயிப்பு வரலாம். பிறகு அக்கதையாடல் முன்வைக்கிற கதையின் கரு சார்ந்த பிற விடயங்கள் மீதான ஆர்வம் என பட்டியல் நீளும். இதில் எதன் பொருட்டு நாம் திரைப்படங்களை நுகர்கிறோம் என்பது முழுக்க முழுக்க தனிமனிதராய் அவரவர் தேடலை, அதன் வழியாக பரிணமிக்கிற திரை ரசனை சார்ந்து அமைகிறது. உலகமெங்கும் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கென பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. சிறந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் தருகிற அட்ரினலின் சுரப்பு தருகிற விறுவிறுப்புக்காகவே படங்கள் பார்ப்பவர்கள் பெருவாரியானோர்.

பொதுவாக திரை வரிசைகள் (Film series) ஒரே மையக்கருவைக் கொண்டவையாக இருக்கும். ஆஸ்திரேலிய இயக்குநர் ஜார்ஜ் மில்லர் எழுபதுகளின் இறுதியில் மேட் மேக்ஸ் திரைப்பட வரிசையின் முதல் பாகத்தை எடுத்த போது அதனை உயிர் வாழ்தல் தொடர்பான ஒரு தனிமனித போராட்டத் திரைப்படமாகவே உருவாக்கினார் (survival cinema). படத்தின் மூன்று பாகங்களும் அதே மையத்தினை அடியொற்றியே அமைந்தன. தலைசிறந்த ஆக்‌ஷன் பட வரிசையில் விமர்சனரீதியாகவே தனக்கென தனியிடத்தை 1981 இல் வெளியான படவரிசையில் இரண்டாம் பாகமான Mad Max 2 பெற்றது. மூன்றாம் பாகம் வெளியாகி இருபது வருடங்களுக்குப் பிறகு மில்லராலேயே எழுதி இயக்கப்பட்ட நான்காம் பாகமான Mad Max: Fury Road படமானது முந்தைய படங்களின் அடிநாதத்தைக் கொண்டிருந்த போதிலும், இன்னும் விரிவான தளத்தில் இயங்குகிற ஒரு படைப்பாக மிளிர்வதன் காரணம் அது வெறும் உயிர்வாழ்தல் மற்றும் அது சார்ந்த முனைப்புகள் கொண்டதாக மட்டும் நின்று விடாமல், இன்னும் பல விடயங்களை அது ஆழமாய் தொடமுயல்வது தான். ஒரு வகையில் இப்படம் படைப்பாளியை மீறுகிற திரைப்பிரதியாகவே இருக்கிறது. 

படத்தை எழுதி இயக்கிய மில்லர் படைப்பு குறித்து பகிர்ந்தது இது ஒரு சர்வைவல் சினிமா என்பது தான். நான்காவது பாகத்திற்கும் தான் சொன்ன அதே விளக்கத்தை விட்டு அவர் விலகவில்லை. எனினும் விமர்சன ரீதியாக இப்படத்தின் கதையோட்டத்தில் பிரதானமாக காணமுடிகிற பெண்மைய பார்வைக் கோணம், பலராலும் இதனை ஒரு பெண்ணிய சினிமாவாகவும் பார்க்க வைத்திருக்கிறது. படத்தின் பெண்ணிய கோணம் குறித்து எங்கும் துவங்கத்தில் ஜார்ஜ் மில்லர் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை என்பது தான் சுவாரசியமானது. அதனாலேயே இதனை படைப்பாளியை மீறிய திரைப்பிரதியென சொல்லத் தோன்றுகிறது.

ஒரு முழுநீள ஆக்‌ஷன் திரைப்படம், அதுவும் பேரழிவிற்குப் பிந்தைய உலகினை களமாகக் கொள்கிற அறிவியல் புனைவு திரைப்பட (Post-apocalyptic cinema) உள்வகைமையின் கீழ் வருகிற ஒரு படத்தில் பெண்ணியம் பேச முடியும் என்பது உண்மையில் நம்ப இயலாத ஒன்று தான். இந்த படத்திற்குள் போகும் முன் நாம் மேட் மேக்ஸ் திரைப்படங்களின் புனைவுலகை இரத்தினச் சுருக்கமாக பார்த்துவிட்டு நகரலாம். 

போரினாலும், முக்கிய வளங்களுக்கான தட்டுப்பாட்டினாலும் நிகழ்ந்த பேரழிவிற்குப் பிந்தைய ஆஸ்திரேலியாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை பறிகொடுத்த ஒரு காவல் அதிகாரியான மேக்ஸ் ரோக்கடன்ஸ்கி இழப்பிற்கான பழிவாங்கல் படலத்தின் வினையாக தடம்புரண்ட அவரது வாழ்க்கையை நமக்கு முதல் திரைப்படம் காட்டுகிறது. நாகரிகத்தைத் தொலைத்த, வாழ்தல் ஒன்றையே இலட்சியமாகக் கைக்கொள்கிற காட்டுமிராண்டித்தனமான சமூக விலங்குகளாய் மாறிவிட்ட மனிதர்களுக்கு மத்தியில் வேட்டையாடப்படுகிற விலங்காகவும் அவனை நாம் பார்க்கிறோம். தன்னைக் காத்துக் கொள்ள அவன் மேற்கொள்கிற போராட்டமே இக்கதைகளின் அடிநாதமாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்களுமே அவற்றில் இடம்பெற்ற மயிர்க்கூச்செறியவைக்கிற வாகனத் துரத்தல் காட்சிகளுக்காகவே இன்றளவும் பேசப்படுபவையாக இருக்கின்றனவே ஒழிய கதையம்சத்திற்காக அல்ல. ஆனால், முதல் மூன்று பாகங்களை விடவும் அடர்த்தியான கதையம்சத்துடன், திரை வரிசையின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை கொண்ட உள்ளடக்கத்தினால் தனித்து நிற்கிற பிரதியாக மாறுகிறது நான்காவது பாகம்.

போரின் தாண்டவத்தால் உலகமே பாலைநிலமென வறண்ட மணற்குவியலாய் மட்டுமே எஞ்சி மீந்திருக்கிற ஒரு எதிர்காலத்தில், இம்மார்ட்டன் ஜோ என்பவனது தலைமையில் சிட்டடெல் எனும் வளம் மீதமிருக்கிற ஒரு நிலத்தில் எஞ்சியிருக்கிற மாந்தர் கூட்டம் அவனது அடிமைகளாய் இருக்கின்றனர். War Boys என தனக்கென ஒரு படையை உருவாக்கி, அவர்களின் துணையோடு, நீர்வளத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதன் வழியாக மக்களிடையே தன் அதிகாரத்தை செயலாற்றுகிறான் ஜோ. அவனது படையணியினர் ஒவ்வொருவரும் மூளைச்சலவை செய்யப்பட்ட, அவனை கடவுளென பாவிக்கிற, நாயக துதி மந்தையாக இருக்கிறது. ஜோவுக்காக தம்முயிரைத் தருவதென்பதே பெரும்பேறு எனும் அளவிற்கு அவன் அவர்களை மழுங்கடித்திருக்கிறான். முழு மூர்க்கத்திற்கு எடுத்துக்காட்டாக அப்படையின் வீரர்களைச் சொல்ல முடியும். 

சிட்டடெலுக்கு வெளியே பரந்து விரிந்து கிடக்கிற பாலைப் பெருவெளியில் உயிர்த்திருத்தல் எனும் ஒற்றைக் குறிக்கோளுடன் சுற்றி அலையும் மேக்ஸ் முதல் காட்சியில் நமக்கு அறிமுகமாகிறான். தன்னால் காப்பாற்ற இயலாத மனிதர்கள் நினைவாக வந்து அவனை இம்சிக்கிற வாழும் நரகத்தில் உழல்கிறான். பின்னணியில் ஒலிக்கிற தொலைக்காட்சி செய்தியாளர்களின் தகவல்கள் வாயிலாக நாமிருக்கும் உலகம் அழிந்துவிட்டதாக அறிகிறோம். ஆங்காங்கே இப்பாழ்வெளியில் சிறுசிறு கூட்டங்களாய் கொஞ்சப்பேர் எஞ்சியிருக்கின்றனர். தனித்தலையும் மேக்ஸ், வார் பாய்ஸ் படையினரிடம் பிடிபடுகிறான். தப்பிக்க முயலுகிற அவனது பிரயத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. அவன் அங்கு இருக்கிற நக்ஸ் எனும் ஒரு வலுவற்ற வீரனுக்கு ரத்தம் தருகிறவனாக மாற்றப்படுகிறான். 

ஜோவின் பிராதன படைத் தளபதி ஃபியூரியோசா எனும் பெண். இவர்களுக்குத் தேவையான எரிபொருளையும், துப்பாக்கி ரவைகளையும் கொணரும் பொருட்டு ஒரு சிறு குழுவோடு ஒரு போர் தளவாட டிரக்கில் (War rig) கிளம்புகிறாள். கிளம்பிய சற்றைக்கெல்லாம் அவள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் அல்லாமல் வேறோர் பாதையில் பயணிப்பதைக் கண்டு, நெருடலுக்குள்ளாகும் ஜோ உடனடியாக தான் காமக் கிழத்திகளாய் வைத்திருக்கும் பெண்கள் நால்வரைக் காணவில்லை என்பதையும் அறிந்து கொள்கிறான். இரண்டினையும் இணைத்து யோசிக்க அவசியமில்லை. தான் தனது தளபதியாலேயே துரோகிக்கப்பட்டது குறித்து வெறிகொள்கிறான். அவன் பல பெண்களை தன் அடிமைகளாக வைத்திருப்பதையும், அவர்கள் மூலம் குழந்தைகள் பெற்று தனது வார் பாய்ஸ் படையணியைப் பெருக்குவதையும் நாம் அறிகிறோம். முழுக்க முழுக்க அதிகார வெறியேறி சுயநலத்தில் ஊறிக்கிடக்கிற அவனது சுயத்தை அது பிரதிபலிக்கிறது. உடனடியாக தப்பித்துப் போகிறவர்களை வேட்டையாடி தன் கிழத்தியரை மீட்கக் கிளம்புகிறான். முழுப்படமும் இவனது துரத்தலும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்கிற யத்தனமும் தான் படமாய் விரிகிறது. 

ஒரு முழுநீள ஆக்‌ஷன் திரைப்படத்தில் அதிலும் துரத்தல் காட்சிகளே மிகப் பிரதானமாக திரைநேரத்தை எடுத்துக் கொள்கிற ஒரு பரபரப்பான படத்தில் பெண்ணிய நோக்கினை நாம் கற்பனை செய்திருக்கக் கூட வாய்ப்புகள் மிகக் குறைவே. படத்தின் முக்கியமான குவிமைய பாத்திரங்கள் மூன்று. முதன்மையாக படைத் தளபதி ஃபியூரியோசா , பிறகு மேக்ஸ், இறுதியாக இம்மார்டன் ஜோ. கதையின் துவக்கத்தில் நமக்கு கதைசொல்லியாக அறிமுகமாகிற மேக்ஸ் தான் நாயகனாய், மையப் பாத்திரமாய் இருக்க வேண்டியவன். முதன் மூன்று பாகங்களிலும் கதைப்பின்னல் அவனை, உயிர்த்திருத்தலுக்கான அவனது போராட்டத்தினை சுற்றியே இருப்பினும், இப்பாகத்தில் அது மாற்றம் பெற்று மையத்திற்கு ஃபியூரியோசா நகர்கிறாள். மேக்ஸ் மீது குவிந்திருந்த ஒளிவட்டம், மிக இயல்பாக கதைப்போக்கில் ஏற்படுகிற முக்கிய மாற்றத்தால், அவள் மீது படர்கிறது. 

மீட்கப் புறப்படுகிற ஜோவின் படையினரோடு நக்ஸும் இணைந்து கொள்ள வேறு வழியின்றி மேக்ஸும் உடன் செல்ல வேண்டியதாகிறது. முதல்கட்ட துரத்தல், தப்பிச் செல்ல முனைகிற பெண்களைப் பிடிக்க நடக்கிற சண்டையாகவும் அதனூடே மேக்ஸ் தனிப்பட்ட வகையில் தப்பிக்க முயலுகிற போராட்டமாகவும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் நக்ஸிடம் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்கிற போதிலும் முழுமையாக அதனைச் செய்திட சாத்தியமற்று உதவியை எதிர்நோக்க வேண்டியதாகிறது. அந்த கட்டத்தில் தான் அப்பாழ்பெருவெளியில் மேக்ஸ், ஃபியூரியோசா ஒரு நிறைமாத கர்ப்பிணி உள்பட சில பெண்களை உடனழைத்து வந்திருப்பதை அறிகிறான். திக்கற்ற அவர்களும் இவனும் உயிர் காத்துக்கொள்ளும் பொருட்டு இணைய வேண்டியதை உணர்கின்றனர். 

மேக்ஸ் இப்பாகத்தைப் பொருத்தவரை இலட்சிய நாயகன் கிடையாது. அவன் தன்வாழ்வைக் காத்துக் கொள்கிற போராட்டத்தில் களமாடுபவன். அவ்வளவே. ஆனால், ஃபியூரியோசாவின் நிஜ முகத்தையும், அவளது பொதுநலம் சார்ந்த நோக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொள்கிறவனாய் அவளது இலட்சியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறான். அதாவது அவள் காண்கிற இலட்சியக் கனவை நனவாக்கும் முயற்சியில் தனது பங்களிப்பை முழுமையாக நல்குகிற வகையில் தானும் இணைந்து கொள்கிறான். ஒரு வகையில் அவனால் காப்பாற்ற இயலாமல் இறந்த ஆத்மாக்களில் அலறலாலும், கூக்குரலாலும் நிரம்பிய மனதை பீடித்திருக்கிற வாதையின்று விடுபட அது ஒரு மார்க்கம்.  தனது ஆசைநாயகிகள் போவதை, ஜோ அவர்கள் மீதான தனது அதிகாரம் கைவிட்டுப் போவதாகவே பார்க்கிறான். அதுவும் தனது அதிநம்பிக்கைக்குப் பாத்திரமான பிராதன தளபதியே அவர்களை முன்னின்று வழிடத்திச் செல்வதை தனது அதிகார பீடத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே எடுத்துக் கொள்கிறான். அப்பார்வையும் சரியே. ஃபியூரியோசா மிக தீர்க்கமாக சிந்தித்து திட்டமிட்டே இதனை அரங்கேற்றுகிறாள். அவருக்கும் மேக்ஸ் பாத்திரத்திக்கும் இடையே பயண வழியில் துண்டு துண்டாக நடக்கிற சிறு சிறு உரையாடல்கள் வழியாகத் தான் பார்வையாளர்களாகிய நாம் ஃபியூரியோசாவின் முன் கதையைத் தெரிந்து கொள்கிறோம். குழந்தையாக இருந்தபோதே தன் வாழிடத்திலிருந்து வேரோடு பிடுங்கபட்டு தான் சிட்டடெல் வந்துவிட்டதையும், அன்றிலிருந்து அங்கிருந்து மீண்டு சிறகுகள் விரித்து தன் வளமான நிலத்திற்கு (அவள் அதனை ‘Green place’ என்றழைக்கிறாள்) திரும்புகிற கனவை ரகசியமாய் அடைகாப்பவள் என்றறிகிறோம். ஆனால், தனிப்பட்ட மீளல் படலமாய் மட்டுமல்லாமல் ஜோவின் இரும்புப்பிடியினின்று இப்பருவப் பெண்களை மீட்டெடுக்கும் தப்பித்தலாக உருக்கொள்கிறது. பெயருக்குப் பொருத்தமாய் மூர்க்கமாய் கனன்று கொண்டேயிருக்கிற ஒரு போராளியாய் இருக்கிறாள் அவள். ஒரு கட்டத்தில் அவளுக்கு ஒரு கைகூட இல்லையென அறிந்து கொள்கிற மேக்ஸ் போலவே நாமும் ஆச்சரியத்தில் ஆழ்கிறோம். 

நக்ஸ் எனும் துணைக்கதாப்பாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்ட இன்னொரு பாத்திரம். மூளைச்சலவை செய்யப்பட்டு தவறான நோக்கங்களை முன்னிறுத்திச் செயல்படுகிற ஒரு அமைப்பின் அதிதீவிர விசுவாசி, ஒரு கட்டத்தில் பொய்கள் கிழிந்து சுயநலம் மட்டுமே எஞ்சுகிற உண்மையின் தரிசனத்தைக் காண்கையில், அதனால் அந்த நபர் தன்னளவில் எதிர்கொள்கிற அகச் சிக்கலை, மனப்போராட்டத்தை, பின்னர் ஒரு கட்டத்தில் விரக்தி வடிந்து மனம்மாறி மேலெழும்புவதை இப்பாத்திரம் அற்புதமாக வெளிப்படுத்துகிறது. 

தனது கனவு நிலம் முழுத்தரிசாகப் போன உண்மையை எஞ்சியிருக்கிற ஒரு சிறு மகளிர் குழுவினர் வாயிலாக அறியவருகிற ஃபியூரியோசா முதன்முறையாக உடைகிறாள். அந்த உடைவில் தனது கனவு நொறுங்கியது எனும் வேதனையை மட்டுமல்லாது அக்கனவின் நிழலில் இளைப்பாற உடனழைத்து வந்திருக்கிற இப்பெண்களின் ஆசை நிராசையாகிப் போனதன் வேதனையும் சேர்ந்து கொள்கிறது. அவர்கள் இருக்குமா என்ற உத்தரவாதமில்லாத வேறொரு நன்நிலத்தைத் தேடி பயணம் செல்வதைக் காட்டிலும், வளமும் அதன் வழி எதிர்கால வாழ்வும் உறுதி செய்யப்பட்ட சிட்டடெல் திரும்புதலை மேக்ஸ் முன்மொழிகிறான். தங்களைத் துரத்தி ஜோ தனது படையணியினரோடு பின்தொடர்வதால், சிட்டடெல் இப்போது பாதுகாப்பு அரணின்றி இருக்குமெனவும் அதனைக் கைக்கொள்வது சாத்தியமென்றும் சுட்டிக் காட்டுகிறான். வாழ்வென்பதே தவணை முறையில் சாதல் எனும் போக்கில் சென்றுகொண்டிருக்கையில், இந்த இறுதி அபாயத்தை எதிர்கொள்ளத் துணிகிறார்கள் அவர்கள் யாவரும். வரும் வழியில் ஜோவிடம் மாட்டிக் கொண்டு நிகழும் இறுதிப் போரில் ஃபியூரியோசா, ஜோவைக் கொல்கிறாள். மீண்டும் சிட்டடெல் செல்லும் அவர்கள் ஜோவின் உடலை மக்கள் கூட்டத்தின் முன் வீசிட, அவனைப் பிய்த்தெடுத்து தங்களது ஆற்றாமையையும், அவனில்லாத களிப்பையும் ஒரு கொண்டாட்டமாய் மாற்றுகிறார்கள். தலைவனில்லாத வார் பாய்ஸ் படை கலகலத்துப் போகிறது. மக்கள் ஃபியூரியோசாவை தங்கள் தலைவியாக வரிந்து கொள்கிறார்கள். இதனிடையே பார்வையால் மட்டும் அவளொடு உரையாடி கூட்டத்தில் கலந்து மறைகிறான் மேக்ஸ். இது அவளது வெற்றி. இம்மக்களை அடிமைவாழ்வினின்று மீட்டெடுத்து விடுதலையளித்தது அவள் தான். அதன் முழு அங்கீகாரமும் அவளயே சாரும். இதையே மேக்ஸின் விடைபெறல் உணர்த்துகிறது. 

முழுக்க ஆண்மையக் கதையாடல் ஒன்றினைப் பின்புலமாய்க் கொண்டு இயங்குகிற ஒரு படைப்பில் பெண்ணிய கோணத்தில் நகர்த்துவது என்பது அத்தனை எளிதானதல்ல. முன்சொன்னதைப் போல இது ஒரு வகையில் படைப்பாளியை மீறிய திரைப்பிரதிதான். பொதுவாக நாயக மைய ஆக்‌ஷன் திரைப்படங்களை நாயகி மைய திரைப்படங்களாக மாற்றுகையில், வெறுமனே நாயகனின் இடத்தை நாயகி பதிலி செய்வதோடு நின்றுவிடுவார்கள். உலகெங்கிலும், நாயகி மைய ஆக்‌ஷன் திரைப்படங்கள் இப்படித்தான் உருவாக்கப்படுகின்றன. அதன் சாகச நாயகிகளின் கதாபாத்திரம் இப்படித்தான் எழுதப்படுகிறது. ஆண் செய்கிற அத்தனை சாகசங்களையும் அவள் செய்வதாகவே அதில் அவள் காட்சிப்படுத்தப்படுகிறாள். இது போலித்தனமானது. இப்படத்தில் கூட ஃபியூரியோசா ஒரு ஆண்போல சாகசங்கள் செய்கிறாள். அவனைப் போல தளராத வீரத்தை தானும் வெளிப்படுத்துகிறாள். ஆனால், அதனை ‘ஆண் போல’ அவள் செய்யவில்லை. அவளது வீரம் தன் சுதந்திர வாழ்வு மறுக்கப்பட்டு தன் மீது திணிக்கப்பட்ட வாழ்வின் மீதான பெருங்கோபத்தினின்று அரும்புகிறது. ஒரு பெண்ணாக தான் உட்பட்ட அடக்குமுறைகளால், எதிர்கொண்ட நெருக்கடிகளால் அது புடமிடப்படுகிறது. 

அவள் ஒரு ஆண் போல நடந்து கொண்டு தனக்கான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக பெண்ணாக இருந்தே தனக்கான வீரத்தை முன்னிறுத்தி இயங்குகிறாள். வீரம் என்பது வெறும் ஆண் அடையாளமல்ல அதற்கு இணையான பெண் அடையாளமும் உண்டென்று பறைசாற்றுகிறாள் ஃபியூரியோசா. அவளது கதாபாத்திரத்தின் ஆன்மவலிமையாலேயே மேக்ஸ் பாத்திரம் அதற்கு வழிவிடுவது போல தன்னைச் சுருக்கிக் கொள்வது வெகு இயல்பாக திரைக்கதையின் போக்கில் நிகழ்கிறது. 

படத்தின் உருவாக்கத்தில் திரைக்கதைக்கு இணையான இரு முக்கிய தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும். 2010 ஆண்டு ‘தி டூரிஸ்ட்’ படத்தோடு தான் ஓய்வு பெற்றுக் கொள்வதாய் அறிவித்திருந்த ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் ஜான் சீல், இப்படத்திற்காக மீண்டும் காமிராவை கையிலெடுத்தார். ஏறத்தாழ முழுநீளப் படமும் மரண கதியில் துரத்தல் காட்சிகளாகவே இருப்பதால் இதனை திரையில் கொணர்வதற்கான மெனெக்கெடல் மிக மிக அதிகம். இயக்குநர் ஜார்ஜ் மில்லர் படத்தின் எண்பது முதல் தொன்னூறு சதவீதக் காட்சிகள் அசலாகப் படம்பிடிக்கப்பட்டவை எனவும், கிராபிக்ஸ் பயன்பாடு அவற்றை மெருகூட்டவும், வண்ணக்கலவையில் மாற்றங்கள் செய்யவுமே பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது எனவும் சொல்லியிருப்பது இவ்விடத்தில் நினைவுகூறத்தக்கது. பாலைவெளியின் தகிப்பும், துரத்தலின் பரபரப்பும், துரத்தப்படுவதன் பரிதவிப்பும் ஒவ்வொரு சட்டகத்திலும் நமக்கு கடத்தப்படுகிறது. படத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள், அவற்றின் அசுரத்தனமான வேகத்திற்கு காமிராவின் வேகம் ஈடு கொடுப்பதென்பது சாதாரண விடயமல்ல. குறிப்பாக வாகனங்கள் மோதிக்கொள்கிற பல காட்சிகள் மலிவு விலையிலான பல காமிராக்களை இழந்தே படமாக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநராக மில்லருக்கு காட்சிகள் திரையில் கதையின் உள்ளடக்கத்திற்கு நிகரான வேகத்தில் நகர வேண்டும் என்பதே தேர்வாக இருந்தது. எனவே அதிவேகத்தில் நகரும் காட்சிகளை தொடர பார்வையாளர்கள் சிரமப்படுவார்கள் என்பதை யூகித்த மில்லர், ஜான் சீலிடம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நடக்கிற ஆக்‌ஷன் அத்தனையுமே சட்டகத்தின் மையப்பகுதியிலேயே (center of the frame) நிகழும் வண்ணம் படம்பிடிக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார். 

அதிவேகமாய் நகருகிற இக்கதையை சொல்லும் காட்சிகளாய் தான் எதிர்ப்பார்ப்பதை திரையில் கொணர தனது மனைவியும், பிரபல படத்தொகுப்பாளருமான மார்கரெட் செக்ஸெலால் இயலுமென நம்பினார் மில்லர். முந்தைய சில படங்களிலும் இணைந்து பணியாற்றி இருந்த போதிலும் இப்படத்தின் தன்மை ஏனைவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர். ஏறத்தாழ 480 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்திற்கு ஒடுகிற அளவிலான காட்சிகள் தன் முன்னே குவிந்து கிடக்க அவற்றில் இருந்து இரண்டு மணி நேரப் படத்திற்கு தேவையான காட்சிகளை கோர்க்கிற சவாலை மார்கரெட் எதிர்கொண்டார். சுமார் 2700 ஷாட்களாக படம் இறுதி வடிவத்தை எட்டியதாக நாம் அறிகிறோம். படத்தின் அதிவேகத் தன்மையை தக்க வைப்பதும், அதன் பரபரப்பை அப்படியே கடத்துவதும் படத்தின் மிக நேர்த்தியான படத்தொகுப்பு தான். இப்படத்திற்கான பங்களிப்பு தான் இவருக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருதை இவருக்குப் பெற்றுத்தந்தது. 

வெறும் ஒரு சர்வைவல் ஆக்‌ஷன் திரைப்படமாக அதன் பரபரப்பை திரையில் பார்க்கும் நேரத்திற்கு மட்டுமே பார்த்து ஆச்சரியப்பட்டு பின் முற்றிலுமாக மறந்திருக்க வேண்டிய ஒரு திரைப்படம், தனது கதையாடலுக்குள் முற்றிலும் புதிய ஒரு பெண்ணியக் கோணத்தை முன் வைத்தது தான் இப்படத்தை இன்றும் நாம் அவதானிக்கச் செய்கிறது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த ஆக்‌ஷன் படங்களின் வரிசையில் இடம்பெறுகிற அதே வேளையில் மேற்சொன்ன அம்சத்திற்காகவும் இப்படம் நினைவுகூறப்படும் என்பதில் ஐயமில்லை. 

குறிப்பு :படத்தின் ஆங்கிலப்பதிப்பு நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது. படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பு அமேசான் பிரைமிலும் காணக்கிடைக்கிறது. 

(தொடரும்…)

writervarunan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button