இணைய இதழ்இணைய இதழ் 59தொடர்கள்

பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 2 – கிருபாநந்தினி

தொடர் | வாசகசாலை

நீரின்றி அமையாது உலகு

யற்கை சார்ந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வாக அனைவரும் சொல்வது மழை, மழை, மழை. மழை இல்லையென்றாலும் பிரச்சனை, மழை அதிகமாகப் பெய்தாலும் பிரச்சனை. ஏன் மழை முக்கியத் தேவையாக இருக்கிறது?

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, “மழை இல்லையெனில் ஒழுக்கமே கெட்டுவிடும், நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் நிலைத்து வாழ்ந்திட முடியாது, எந்த செயலும் நடைபெறாது” என்கிறார் திருவள்ளுவர். 

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு 
                                                            – திருக்குறள் 20

அதுபோலவே இவவ்வுலகில் முதன்முதலில் நுண்ணுயிரியான அமீபா தோன்றியது நீரில்தான் என்கிறது பரிணாமம் பற்றிய ஆய்வு. அதன் பிறகு நடந்த பரிணாம வளர்ச்சியினால் உயிரினங்கள் நிலத்தில் வாழ ஆரம்பித்தன. இந்த நீரிலும் உப்பு நீர், நன்னீர் என இரண்டு வகைகள் உள்ளன. 

இந்தப் பூமியில் 79% தண்ணீர்தான் உள்ளது. இதில் 97.50 % கடல் நீர்தான். மீதமுள்ள 2.5% நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு பனிக்கட்டிகளாகவும் உள்ளன. ஆதலால் முதலில் கடல் வாழ் பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கடற்கரைகளில் சென்னை மெரினா போன்ற மணல் பரப்பிய கடற்கரை, கன்னியாகுமாரி போன்ற பாறைகள் அதிகமுள்ள கடற்கரை, மலைகளைக் கொண்ட விசாகபட்டினம் போன்ற கடற்கரை, அந்தமான் தீவுகளில் காணப்படும் சிறு சிறு கற்கள் நிரம்பிய கடற்கரை, குகைகளைக் கொண்ட கடற்கரை எனப் பல வகைகள் உள்ளன.  இங்கு வாழும் பல வகையான உயிரினங்களில் பறவைகளும் உள்ளன. 

Spoonbill

இந்த நிலங்களுக்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு கடற்கரையிலும் வெவ்வேறான உயிரினங்களும் வாழ்கின்றன. சிறு பூச்சிகள், நண்டு, ஆமை, பறவைகள் இப்படிப் பல. இதில் ஒவ்வொரு இனப் பறவைகளும் பல்வேறுபட்ட கடற்கரைகளில் வாழ்கின்றன. அவை கடல் மணலில் உள்ள பூச்சிகளை அதன் அலகால் குத்தி, தோண்டி எடுத்து உண்ணும். இதனாலேயே நீண்ட அலகுடன் காணப்படும். மேலும் மணற்பரப்பில் நடப்பதற்கு ஏதுவாக நீண்ட கால்களையும் கொண்டிருக்கும். பெரும்பாலும் மணலில் வண்ணத்துடன் ஒத்து காணப்படும். இவை அனைத்தும் கடற்கரை ஓரங்களில் வாழும் பறவைகளின் பொதுவான அம்சங்கள். 

அழியும் நிலையில் உள்ள கடல் வாழ் பறவைகளின் பட்டியல்:

S. No. Name of the Species Current Status
1. Spoon-billed Sandpiper Critically Endangered
2. Great Knot Endangered
3. Nordmann’s Greenshank Endangered
4. Eurasian Curlew Near Threatened
5. Bar-tailed Godwit Near Threatened
6. Black-tailed Godwit Near Threatened
7. Red Knot Near Threatened
8. Curlew Sandpiper Near Threatened
9. Red-necked Stint Near Threatened
10. Asian Dowitcher Near Threatened
11. Swinhoe’s Storm-petrel Near Threatened
Asian Dowitcher

மேலே குறிபிட்ட அழியும் நிலையில் உள்ள கடல் வாழ் பறவைகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வலசை வரும் பறவைகள் என்பதால் அவற்றுக்கு தமிழ்ப்பெயர்கள் இல்லை எனலாம். இத்தகைய கடல் வாழ் பறவைகளையும் அதன் வாழ்விடங்களில் ஏற்படுகின்ற சிக்கல்களைப் பற்றியும் அடுத்தடுத்த தொடர்களில் பேசுவோம்.

அதுவரை நமக்கு மிகுந்த பரிட்சயமான நம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள உலகின் இரண்டாவது நீளமான (13 கி.மீ) மெரினா, உலகப் புகழ்ப்பெற்ற திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கன்னியாகுமாரி ஆகிய கடற்கரைகளில் ஒரு கடல் பறவையைக் கூட பார்க்க முடிவதில்லையே ஏன்? காரணத்தை யோசித்துக்கொண்டே இருங்கள்…

(தொடரும்…)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button